கோவில் வாசல்களிலும் , கோவில் குளங்களிலும் நாம் காணாமல் இருந்திருக்க முடியாது . ஒருவகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது கோரமான முகங்களை காட்ட மறுத்தபடி துணிகளால் முகத்தை மூடிக்கொண்டு அழுக்கு உடை துர்நாற்றம் வீசியபடி கையில் உள்ள காயங்களுக்கு கட்டுகள் போட்டபடி கை கால் விரல்கள் முடங்கியபடியும் , ஓரத்தில் அமர்ந்து வயிற்றுப்பசிக்கு கஞ்சிக்கு ஏங்கிய படி பரிதாபமாக அமர்ந்திருப்பார்கள். அவர்கள் யாரும் உண்மையில் பிச்சை எடுக்க வேண்டும் என்ற நோக்கில் இங்கு வந்தவர்கள் இல்லை. கோவை மருதமலை அடிவாரம் இங்கு ஒரு பகுதியில் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேரை காண முடிந்தது. மருதமலை செல்லும் பொழுதெல்லாம் அவர்கள் இருக்கும் இடத்திற்கு நேரடியாக சென்று அவர்களை பற்றிய விபரங்களை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று நீண்டநாளாக ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. இன்று அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
ஒருவர் தொழு நோயால் பாதிக்கப்பட்டவராக நடக்க முடியாத நிலையில் அவர் கால் பாதங்கள் முற்றிலும் இழக்கப்பட்ட நிலையில் அதை மறைக்க கால் உறை அணிந்துக் கொண்டு அதற்குரிய காலணிகள் அணிந்து கையில் ஊன்றுகோலுடன் மெதுவாக நடந்து வந்தார் . அவரிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்து , அவர்களை பற்றியும் . இந்த பகுதியை பற்றியும் கேட்டேன் . அவர் மோகன் வயது 63, சொந்த ஊர் கும்பகோணம், அவருக்கு 17 வயதில் இந்த நோயின் அறிகுறிகள் தென்பட்டது. இந்த நோய்க்கு போதிய மருத்துவ வசதிகளும், அதற்கான விழிப்புணர்வும் இல்லாத காலம் ( அப்போது மட்டும் இல்லை இப்போதும் கூடத்தான் ). இதனால் சரிவர மருத்துவம் பார்க்க முடியவில்லை. இந்த நோய் கண்டறியப்பட்டு ஒரு வருடத்தில் எதேச்சையாக அடுத்தடுத்து அம்மாவும் அப்பாவும் காலமானதால் உறவினரின் பாதுகாப்பில் இருந்ததாகவும் இந்நோயின் வீரியத்தால் கை விரல்கள், கால் விரல்கள் முடங்குவதை பார்த்து தொழு நோய் என்று கூறி உறவினர்கள், நண்பர்கள் என அனைவராலும் ஒதுக்கப்பட்டதாகவும் கூறினார். மேலும் கூறும் பொழுது, நான் மட்டும் இல்லை இந்த நோயால் பாதிக்கப்பட்ட அனைவரின் கதையும் இப்படித்தான் இருக்கிறது . யாருக்கு எந்த நோய் வந்தாலும் அவர்களை சேர்ந்தவர்கள் அவர்களை எப்படியாவது குணப்படுத்தி விட வேண்டும் என்று நினைப்பார்கள். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட அவர்களின் மறுவாழ்வுக்கு குரல் கொடுக்கும் உள்ளங்கள் உள்ளது. புற்று நோய் வந்தாலும் பாசம் காட்டி உயிரைக் கொடுத்து காப்பாற்ற போராடும் சொந்தங்கள் வருகிறது . ஆனால் தொழு நோய் வந்துவிட்டால் பாராட்டி சீராட்டி பாலூட்டி வளர்த்த பெற்றோர்களாக இருந்தாலும் சரி, கண்ணுக்கு கண்ணாக வளர்த்த பிள்ளையாகட்டும் சரி , உற்றார் , உறவினர் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் சரி பெரும்பாலும் ஒதுக்கி விடுகிறார்கள். எங்களுக்கு யாரும் வேலை கொடுக்க மாட்டார்கள். இந்த நோய் இருப்பதை மறைத்து வேலை தேடி வேலைக்கு சென்றாலும் இந்த நோயைக் காரணம் காட்டி வெளியேற்றப் படுகிறோம் . இருக்கின்ற காசை வைத்து சொந்தமாக தொழில் செய்ய ஒரு பெட்டிக்கடை வைத்தாலும் அப்போதும் இந்த " குட்டம் பட்ட கடைக்காரனிடம் பொருள் வாங்கினால் நமக்கும் நோய் ஒட்டிக் கொள்ளும் " என்று புறக்கணிப்பார்கள்.
பசி பசி, இதனால் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம், ஊர் ஊராக திரிகிறோம், கோவில் வாசல் குளங்கள் என அலைந்து கை ஏந்துகிறோம் .இந்நோயின் காரணமாக முகம் சிதைந்து தோல், நரம்புகளும் பாதிக்கப்பட்டும் அகோரமான தோற்றம் கொண்டிருப்பதால் பிச்சை போட கூட யாரும் முன் வருவதில்லை. இதனால் கோவில் வாசல் , திருமண மண்டபம், ஹோட்டல் இங்கு மீதியாகி தூக்கிப் போடும் எச்சில் உணவுகளை தேடி தின்று வயிற்றை நிரப்பும் நிலைக்கும் வருகிறோம். இந்த நிலையில் தான் தொழுநோயாளிகள் எல்லோரும் ஒன்றிணைந்து ஒவ்வொரு பகுதியிலும் கூட்டாக பொது மக்களின் பார்வை படாத இடங்களில் வாழ்கின்றோம் . அது போன்ற ஒரு பகுதியான இந்த மருதமலைக்கு நானும் வந்தடைந்தேன். இங்கு ஏராளமானோர் என்னை போலவே தொழுநோய் கொண்டவர்கள் பிச்சை எடுத்து வந்தார்கள் அவர்களோடு ஒன்றாய் இணைந்தேன். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலுக்காக அவர்களின் குடும்பத்தோடு வந்தவர்களும் இருக்கிறார்கள. இங்கு சுமார் 100 குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள் . இங்கு அவ்வப்போது சில தொண்டு நிறுவனங்கள் நேரில் வந்து எங்களுக்கு தேவையான துணி , உணவு கொடுத்து உதவுகின்றனர்.
இங்கு உள்ள தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனை, சிகிச்சை என முறையான மருந்துகள் உட்கொண்டு தற்பொழுது தொழுநோய் முற்றிலும் குணமடைந்து உள்ளோம் . ஆனால் இந்த நோயின் தாக்கத்தால் விரல்கள் இழந்ததை திரும்ப பெற முடியாது. இதனால் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் என்பதை இந்த அடையாளம் காட்டிக் கொடுத்துவிடுகிறது. நோய் குணமடைந்தாலும் முடங்கிய உறுப்புகளை பார்க்கும் பொழுது உறவினராக இருந்தாலும் கூட எங்களை மனதார ஏற்றுக் கொள்ள முன் வருவதில்லை . அதனாலேயே நிரந்தரமாக இங்கேயே தங்கி இருக்கிறோம் . மேலும் அவரிடம் குடும்பம் என்று சொல்கிறீர்கள், அதெப்படி? அப்படியானால் இது தொற்று வியாதி இல்லையா ? என்றேன். ஆமாம் என்று என்னை ஒரு வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். அங்கு பெற்றோர்கள் இருவருக்கும் தொழுநோய் பாதிப்பு இருந்துள்ளது , ஆனால் அவர்களது குழந்தைக்கு அந்நோய் பாதிப்பு இல்லை . அந்த குழந்தைகளுக்கு உணவை ஊட்டி விடுகிறார்கள் குழந்தையை கொஞ்சுகிறார்கள். பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு திருமணமும் முடிந்து குழந்தைகளும் உள்ளதை காண முடிந்தது.
தவறாக நினைக்க வேண்டாம், ஊரே ஒதுக்கி வைத்துவிட்டார்கள், இப்படி இருக்க திருமணம் எப்படி முடிவாகிறது? என்றேன் , நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில் இருப்பவர்களோடுதான் நாங்கள் சம்மந்தம் பேசி முடிவு செய்கிறோம். அது போலத்தான் இங்கு இவ்வளவு குடும்பங்கள் உருவாகி உள்ளது என்றார்.
சரி, இங்குள்ளவர்களின் வாழ்வாதாரம் பற்றி சொல்லுங்க என்றேன் ? எங்கள் குழந்தைகள் எல்லாம் மேற்படிப்பு முடித்து வேலைக்கு செல்கிறார்கள், அவர்கள் ஈட்டிவரும் பொருளில் நாங்கள் வாழ்கிறோம். அவர்கள் படிக்கும் காலத்தில் நாங்கள் குழந்தைகளுக்கு தெரியாமல் பிச்சை எடுத்துதான் அவர்களை படிக்க வைத்தோம் . இறுதியாக இந்த நிலையில் நீங்கள் என்ன எதிபார்கின்றீர்கள் என்ற போது. பொதுமக்கள் மத்தியில் தொழுநோய் குறித்து அதன் விழிப்புணர்வை அதிகரிக்க வழி செய்ய வேண்டும். இந்நோயால் பாதிப்புக்குள்ளாகி அவதிப்படுவோர்க்கு நல்லமுறையில் மருத்துவம் செய்துக் கொடுக்க வேண்டும் . தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் சமுதாயத்தில் மரியாதையுடன் வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். இந்நோயால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ள படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பிலும், படிப்பிலும் முன்னுரிமை வழங்க வேண்டும். எங்கள் பகுதியில் நாங்கள் இருக்கும் வீட்டிற்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். உலக தொழுநோய் தினம் ஜனவரி 30இல் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்த தினத்திலும், இந்நோயால் பாதிக்கப்பட்டோரிடையே ஒருங்கிணைப்புக்கு புனிதமான அணுகுமுறையை உறுதி செய்யவும் வலியுறுத்தப்பட வேண்டும். ஆமாம் நண்பர்களே இவர்களை நான் நேரில் சந்தித்தபிறகு இவர்களை பற்றியும் இவர்கள் படும் வேதனையை பற்றியும் உளமார நானும் உணர்ந்தேன். மனதுக்குள் ஏதோ எல்லோரும் இவர்களுக்கு துரோகம் செய்து விட்டது போல உறுத்தல் . எய்ட்ஸ் நோயாளிகளைக் கூட இல்லத்தில் வைத்து பராமரித்து வரும் அளவிற்கு விழிப்புணர்வும், சகிப்புத் தன்மையும், மன பக்குவமும் கொண்ட நாம் , தொழு நோய்க்கு உள்ளானவர்களை தீண்டத்தகாதவர்களாகக் கருதி, வீட்டை விட்டு வெறுத்து ஒதுக்கி, தனிமைப் படுத்தி அவர்கள் மனதில் ஆறாத ரணத்தை உண்டாக்கி விடும் தனி மனிதன் உட்பட , இந்த சமுதாயத்தை நினைக்கும் போது நெஞ்சம் கனக்கிறது. மத்திய, மாநில அரசுகள் தொழுநோயாளிகளுக்கென்று இன்னும் அதிக அக்கறைக் கொள்ள வேண்டும் . ஒரு சில தொண்டு நிறுவனங்கள் தொழு நோயாளிகளின் விசயத்தில் ஓரளவு அக்கறையோடு செயல்பட்டு வருவது ஆறுதலை அளிக்கிறது என்றாலும், மக்களின் மனதில் தொழுநோய் பற்றிய அச்சமும், அருவெறுப்பும் இன்று வரை இருந்து கொண்டுதான் இருக்கிறது. மக்களின் பார்வையில் சாபக் கேடாகவும், சமூகப் பிரச்சனையாகவும் உருவெடுத்து இருக்கின்ற தொழு நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும். அதற்கு சீரான மருத்துவமும், ஆறுதலும், மனிதநேயமும் வேண்டும் . இவர்களை ஒதுக்க வேண்டிய அவசியமும் இல்லை. தற்போது இருக்கும் மருத்துவ உலகில் இந்த நோயை முற்றிலுமாக குணப்படுத்த முடியும். அதற்கு இவர்களுக்கு எந்த வகையில் நம்மால் விழிப்புணர்வுடன் உதவ முடியுமோ அதற்கு நாம் முன்வர வேண்டும். நான் முடிவு செய்து விட்டேன் வரும் இந்த பொங்கல் திருநாளில் இவர்களோடு கொண்டாடுவது என்ற முடிவிற்கும் வந்து விட்டேன்.
நீங்கள் எப்படி ? ~ஈரநெஞ்சம் மகேந்திரன். நீங்களும் இவர்களுக்கு உதவ நினைத்தால் தொடர்புகொள்ளுங்கள் : A.Ganesan. Amarjothi Leprosy Nivaranan Sangh +91 98 42 597525
விஞ்ஞான வளர்ச்சி என்பது மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது ஆகும். மனித இனத்தின் ஆக்க சக்தியாக விஞ்ஞானம் விளங்குகிறது. ஆனாலும் சில நேரங்களில், இல்லை இல்லை பல நேரங்களில் இது மனித இனத்தை அழிக்கவும் செய்கிறது.
அப்படி விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் மனித இனத்தை சூறையாடிக் கொண்டிருக்கும் பல துன்பங்களில் ஒன்றுதான் தசைசிதைவு நோய் [Muscular Dystrophy]. அதிகம் பேருக்கு அறிமுகம் இல்லாத நோயாக இருந்தாலும், இது நாளைய மனித இனத்தையே அழிக்கக் கூடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் மட்டுமே, பிறக்கும் 3,000 குழந்தைகளில் ஒரு குழந்தையை இந்த நோய் தாக்குவதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இந்த நோய்... எய்ட்ஸ், புற்றுநோய் போலவே மரணத்தை மட்டுமே தீர்வாக கொண்டிருக்கும் மற்றும் ஒரு கொடிய நோய் ஆகும். எய்ட்ஸ், புற்றுநோய் போன்றவை மனிதனின் தீய பழக்கங்களினால் தொற்றும். ஆனால் தசைசிதைவு நோய் எந்த பாவமும் அறியாத கருவில் உள்ள குழந்தை முதல் நடுத்தர வயது வரை அனைவரையும் தாக்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு மருந்து இல்லை என்பதே மருத்துவர்களின் தீர்வு.
மருத்துவர்கள் ஆரம்பத்தில்...
தசைசிதைவு நோய் முக்கிய பிரிவில் 9 வகை என்றார்கள். தற்போது 60 வகையில் கொண்ட ஒரே தொகுப்பாகும் என்கிறார்கள் :
உலக நாடுகளின் பல வருட உழைப்பில், அதிக பொருள் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வில் தசைசிதைவு நோய்க்கு மூலக்காரணம் மரபணு என்பது கண்டறியப்பட்டுள்ளது . 1973 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போருக்கு பிறகே இந்த நோய் அடையாளம் காணப்பட்டது. பெரும்பாலும் குழந்தைகளையே அதிகமாக தாக்கும் இந்த நோய். அதிலும் ஆண் குழந்தைகளையே அதிகம் தாக்குகிறது. இது எந்த விதமான முன் எச்சரிக்கையும் இன்றி தாக்குகிறது.
ரத்த சம்மந்தத்தில் திருமணம் முடிப்பதால் 3 சதவிகிதம் பேருக்கு தோன்றுகிறது என்பதை கண்டறிந்துள்ளனர். இதை திருமணத்திற்கு முன்பே ஆணும் பெண்ணும் மரபணு சோதனையின் மூலம் கண்டறிய முடியும் என்கிறார்கள். மேலும் முழுமையாக பதில் அளிக்க முடியாத நிலையில் மருத்துவர்கள் கூறுவது தசைகட்டுபாட்டிற்கு தேவையான ஒரு புரதத்திற்கு அடிப்படையான ஒரு மரபணு குறைப்பாடே இந்நோய்க்கு காரணம் என்கிறார்கள் . அடிப்படையான தசை புரத குறைபாட்டால் தசை நார்களின் சக்தி குறைகிறது. மேலும் இவை தசையை இறுகும் தன்மைக்கு கொண்டு செல்கிறது. இறுகிய தசைகளால் மனித எலும்பு மண்டலம் பாதிப்பதோடு மட்டும் அல்லாது மனித உடலின் அடிப்படை கட்டுமானத்தை பாதிக்கிறது என்கிறார்கள்.
தற்போது வந்த ஒரு ஆய்வின் படி உணவுப்பொருட்களில் கலக்கப்படும் ரசாயனப் பொருட்கள், ரசாயனம் நிறைந்த வீரியம் மிக்க உரங்கள் ஆகியவை உணவில் நச்சுத் தன்மை ஏற்படுத்தி உணவுப் பொருட்களில் உள்ள சத்து முற்றிலுமாக அழிக்கப்படுகிறது, இந்த உணவை உண்பதால் போதிய சத்து இல்லாத நிலையில் குழந்தைகளுக்கு தசைசிதைவு ஏற்படுகிறது. பொதுமக்களும் உணவுப் பொருட்களில் உள்ள ஆரோக்கியத்தை பார்க்காமல் அது பார்வைக்கு அழகாக இருந்தால் மட்டுமே வாங்குகின்றனர். அதனால் தற்பொழுது சந்தைகளில் இவ்வகையிலான பாலீஷ் செய்த தானியங்களும், பளபளப்புக்காக மெழுகு பூசப்பட்ட பழங்களும் மட்டுமே அதிக அளவில் விற்கப்பட்டு வருகிறது .
இந்நோயின் அறிகுறிகள் :
மனித உடல் இரு வேறு வகையான தசைகளைக் கொண்டது.
ஒன்று தன்னிச்சையாக இயங்கும் தசைகள்...
எ.கா:- நுரையீரல்,இதயம் போன்றவை.
மற்றொன்று நாம் அசைக்க நினைக்கும் போது அசையும் தசைகள்... எ.கா:- கை , கால்கள் போன்றவை .
தசைசிதைவு நோய் நாம் அசைக்க நினைக்கும் போது அசையும்தசைகளையே முதலில் பாதிக்கிறது. இதன் விளைவாக நோய் தாக்கப்பட்ட குழந்தை அடிக்கடி கீழே விழுதல், அமர்ந்த நிலையிலிருந்து எழ சிரமப்படுதல் , படி ஏற இயலாமை போன்ற அறிகுறிகள் தென்படும் நாளடைவில் தன்னிச்சையாக இயங்கும்தசைகளையும் இது பாதிக்கிறது. இதனால் நடக்க முடியாமல் ஆகிவிடும். பின்னர் சக்கர நாற்காலிக்கு தள்ளிவிடும். அதை தொடர்ந்து படுத்த படுக்கையாக்கி விடுகிறது. தன்னிச்சையாக இயங்கும் தசைகளைத் தாக்கி இயங்காமல் செய்வதால் மரணத்தை தழுவ வைக்கிறது.
இந்தியாவில் உள்ள மருத்துவர்கள் முதல் கொண்டு பொதுமக்கள் வரையில் இந்த நோயைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை. இந்திய அரசும் மக்களிடமும் இதற்கான போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது. நோயின் ஆரம்பத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்க முயற்சி செய்தாலும் குழந்தை நன்றாக இருப்பதாகவோ அல்லது போலியோ தாக்கு என்றோ சொல்லி மருத்துவர்கள் சமாளித்து விடுகிறார்கள். என்ன நோய் இது, எப்படி வந்தது என்று கண்டுபிடிக்க முடிவதில்லை. தசைசிதைவு தான் என்ற உண்மை உணரும்போது உடல் முற்றிலுமாக சுருங்கி எந்த இயக்கமும் இயலாமல் மரணத்தை நெருங்கி கொண்டிருக்கிறது அந்த உயிர்.
அது மட்டும் இல்லாமல் ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தையை தாக்கும் இந்த நோய் அந்த குழந்தை இறந்த பிறகும் அடுத்தடுத்து பிறக்கும் குழந்தைகளையும் தாக்கிக் கொல்லும் என்பது ஜீரணிக்க முடியாத பயங்கர வேதனையான உண்மையாகும்.
ஆறுதல் :
இந்த நோயில் இருந்து காப்பாற்றவே முடியாது என்றாலும் சிறிது காலத்திற்கு மட்டும் மரணத்தை தள்ளிப்போட முடியும் . தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் மரணத்தை சற்று தள்ளிப்போட வாய்ப்பு இருப்பதாக சிறப்பு மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர். நெப்போலியன் அவர்களுடைய குழந்தை இந்த நோயால் பாதிக்கப்பட்டது. அவரும் உலகநாடுகளில் உள்ள அனைத்து மருத்துவ மனைகள் , சிறப்பு மருத்துவர்கள் என எல்லோரையும் சந்தித்து விட்டு முடிவாக அவர் சொந்த செலவில் திருநெல்வேலியில் உலகின் தசைசிதைவுநோய்க்கான தனிப்பட்ட Jeevan Foundation என்னும் அமைப்பின் மூலம் [Mayopathy Institute of Muscular Dystrophy & Research Center] அமைத்து அங்கே இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடற்பயிற்சி அளித்து வருகிறார்கள்.
சேலத்தில் இந்நோயால் பாதிக்கப்பட்ட வானவன்மாதேவி, இயல்இசைவல்லபி இரண்டு சகோதரிகள் ஆதவ் அறக்கட்டளை என்ற பெயரில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக சிறப்பு பயிற்சியும் மருத்துவமும் செய்து வருகிறார்கள்.
இது மட்டுமே இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் சற்று ஆறுதலாக இருக்கிறது.
இந்த நோயால் பாதித்தவர்களை பார்க்கும் பொழுது வேதனை ஒருபுறம் இருக்க எத்தனையோ எதிர்கால கனவுகளுடன் திருமணம் முடித்து பத்து மாதம் சுமந்து குழந்தைகளை பெற்றெடுத்து இமைக்குள் விழிப்போல பார்த்து பார்த்து வளர்க்கும் அன்னைக்கும், இரவு பகலாக தோளில் சுமக்கும் தந்தைக்கும் தங்கள் குழந்தைக்கு இப்படி ஒரு நோய் வந்தது மட்டும் இல்லாமல் அடுத்தடுத்த குழந்தைகளுக்கும் இதே நிலைதான் என்றால் அவர்களது வேதனையை எழுத்தாலும் ஏன் வார்த்தையாலும் உரைக்க முடியவில்லை. தன் குழந்தைகளை எப்படியோ காப்பாற்றிட வேண்டும் என்ற நோக்கில் நடக்க முடியாத அந்த குழந்தைகளை இரவுபகலாக இடுப்பில் சுமக்கும் இளம் தாய்மார்கள் சுமைதாங்கும் கடவுள்கள்.
திருப்பத்தூரை சேர்ந்த 39 வயதான கலைசெழியன் என்ற ஆட்டோ ஓட்டுனர் சர்க்கரை நோயின் காரணமாக கடந்த ஜனவரி 2015 ல் தனது இரு கால்களையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவரது மனைவி பிரிந்து விடவே தனது இரண்டு குழந்தைகளுடன் தன பெற்றோருடன் வசித்து வந்தார். வறுமை மற்றும் வயது காரணமாக அவரது பெற்றோராலும் கவனித்து கொள்ள முடியா சூழ்நிலை ஏற்பட்டது. எனவே அவர் தனக்கு உதவுமாறு ஈரநெஞ்சம் அறக்கட்டளையை தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டார்.
அவருக்கு செயற்கை கால்கள் பொருத்தியும் நடக்க இயலாது என்ற காரணத்தால் அவருக்கு வேறுவகையில் உதவி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படது. அதன்படி அவருக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தி தரும் வகையில் ஈரநெஞ்சம் அறக்கட்டளை மூலம் மளிகைக்கடை வைத்து தர முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று 28-10-2015 திருப்பத்தூரில் அவருடைய இருப்பிடத்திற்கு அருகிலேயே கடை மற்றும் மூலதனம் உதவி வழங்கப்பட்டது. மற்றும் அவரது குழந்தைகளுக்கு தீபாவளி பண்டிகைக்காக புத்தாடைகளும் வழங்கப்பட்டது.
ஒருவருக்கு தாமாக முன்வந்து செய்யும் உதவி என்பது தவமின்றி கிடைக்கும் வரம் போன்றது. அந்த வகையில் கலைசெழியனின் நிலை பற்றி அறிந்ததும் இவருக்கு உதவிட ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்கு உறுதுணையாக நிதி உதவி செய்ய முன்வந்த திரு. வெங்கடேஷ், திரு. சிவா மற்றும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பில் உரித்தாக்குகிறோம். இவர்களில் உதவிக்கு வெறும் நன்றி மட்டும் ஈடாகாது. கலைசெழியன் அவர்களின் மகிழ்வில் ஈரநெஞ்சம் அறக்கட்டளை பங்கு கொள்கிறது இதற்கு முழு காரணமும் உதவி செய்த இந்த நண்பர்களையே சேரும்.
Mr. Kalaichezhiyan, age 39 was an Auto driver. Due to Dialysis he was lost his both legs in last January, 2015. So his wife left him. He was living with his parents with two children. Due to poor and old age, they unable to taking care of them. He has no source or survive. So, he requested Eeranenjam trust to help for his life.
As per the requisition, Eeranenjam trust decided to help him. But helping artificial legs was failure to him. So Eeranenjam decided to arrange a provisional shop to economy source. As per the same today 28-10-2015 a provision near by his home was arranged and investment of provisional things also sponsored. And new dresses were sponsored to his children for Diwali.
We have express our express our heartiest thanks to Mr. Venkatesh & Mr. Siva and friends who were helped Eeranenjam trust to arrange this shop for Mr. Kalaichezhiyan. When they know about him, they voluntarily sponsor fund to help him. Its really appreciable and we wish them once again.
வாழ்வெனும் புத்தகத்தில் கடைசி பக்கத்தில் கொட்டை எழுத்தில் மிகப்பெரியதாக முற்றுப்புள்ளி வைத்து அதற்கு " மரணம் " என்று அர்த்தம் கொடுத்திருக்கிறது. ஏனோ அத்தருணம் வரும் வரை பலருக்கு அது தெரிவதில்லை சிலர் படிக்கும் பொழுதே அர்த்தங்கள் புரியாமல் கடைசிப் பக்கம் புரட்டி முற்றுப்புள்ளியை தொட்டு விடுகிறார்கள். சிலருக்கு புத்தகம் 80 பக்கம் கொண்ட சிறு புத்தகம் போல இருக்கிறது . சிலருக்கு வெற்றுத்தாளில் முற்றுப்புள்ளி மட்டும் இருக்கிறது. சிலருக்கு பள்ளி குழந்தைகள் சுமக்கும் பொதி மூட்டை போல புத்தகம் இருக்கிறது. சிலருக்கு யாரோ படிக்கும் புத்தகம் கை மாறி யாரோ படித்துக் கொண்டு இருக்கிறார்கள் . சரி அதென்ன முற்றுப்புள்ளி? முற்றுப் புள்ளி என்பதுதான் மரணம் என்று சொன்னேனே. அது கண்ணில் படும் பொழுது உணர்த்தப்படுகிறோம் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த வரிகளை எழுத்துப் பிழையாய் படித்த தவறுகளை. வாழ்க்கை பக்கங்களை பிழை இல்லாமல் படித்தவர் என்றும் முற்றுப்புள்ளி அடித்து திருத்தப்பட்டது என்றும் யாருக்கும் இல்லை வாழ்க்கை பக்கங்களை கிழித்து விட்டான் என்று எவனுக்கும் உடனடியாக முற்றுப்புள்ளியை கொடுத்ததும் இல்லை . புரியவில்லையா..? வாழ்க்கையை வென்றவன் என்று சொன்னவரையும் மரணம் விட்டு வைத்தது இல்லை பிறர் வாழ்கையை கொன்றவரையும் மரணம் விட்டு வைத்தது இல்லை . நல்லவன் கெட்டவன் என எவனையும் மன்னித்து விட்டு வைப்பது இல்லை மரணம். என்ன ..? நல்லது செய்தும் பயன் இல்லை என்றால் மரணம் என்பது என்னவாக இருக்கும்? ஞானிகளும் மேதைகளும் மரணத்தை பற்றி விளக்கினாலும் " மரணத்திற்கு பின்? " என்ற கேள்வி கேட்டுக் கொண்டே தான் இருக்கிறது மனம் . மரணம் எவனையும் விட்டு வைக்காது என்றால் வாழ்க்கை படித்ததற்கு என்னதான் அர்த்தம் இருக்கும்? படித்தவனும் தேறவில்லை படிக்காதவனும் தேறவில்லை தேர்வு மட்டும் உறுதி அதில் தோல்வி மட்டும் முடிவாக.. என்ன இது தேர்ச்சி இல்லாத பரீட்சை எழுதியே ஆகவேண்டுமா ? இல்லை... இந்த தேர்வில் தேரியவரையும் மரணம் அழைத்து செல்கிறது தேராதவரையும் மரணம் அழைத்து செல்கிறது அப்படி எங்கே அழைத்து செல்கிறது சென்றவனை பார்த்தால் கேட்டுவிடலாம்.. எங்கிருந்து வந்தோம் என்ற கேள்விக்கே இன்னும் பதில் தெரியவில்லையே ... ஒன்று மட்டும் புரிகிறது மரணம் என்பது ஒரு இடத்திற்கு செல்லும் வாசலாகத்தான் இருக்கும். அதற்காகத்தான் இந்த தேர்வு போல... அந்த வாசலை அனைவரும் கடந்துதான் போகவேண்டும் என்பது கட்டளையாக இருக்கிறது... இன்னொன்று விளங்குகிறது வாழும் நாளில் அர்த்தங்களோடு வாழ்ந்தவனுக்கு மரணவாசல் தலை வணங்கி வரவேற்று அழைத்து செல்கிறது . அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்ந்தவருக்கு மரணம் ஒரு தலை குனிவாக இருக்கிறது. ~மகி
நம் பாரம்பரிய நடனங்களை ஆடி அசத்தும் அனுஷா..!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சாதிப்பதற்கு வசதியோ வயதோ ஒரு தடையாக இருப்பதில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் கோவை தீத்திபாளையத்தில் உள்ள ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஆனந்தன், ஜெயந்தி தம்பதியர்களின் மகளான 15 வயது சிறுமி அனுஷா பவித்ரா ஸ்ரீ. இவர் ஒரு அரசு பள்ளி மாணவியாக படிப்பில் முதல் மற்றும் இரண்டாவது இடங்களில் , அப்பள்ளியின் கதாநாயகியாக உலாவருவதோடு நமது தமிழ் கலாச்சார கலைகளை தன் கைவசப்படுத்தி வைத்திருக்கிறார்.
பரதம், அம்மன் நடனம், கரகாட்டம், பறை போன்றவை நம் பாரம்பரிய கலைகள் தான் என்றாலும், நடுத்தர மக்கள் எல்லாம் இந்த கலைகளை ரசிப்பதோடு மட்டும் தான் இருக்க முடியும் கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. அப்படியே கற்றுக்கொள்ள விரும்பினாலும் இந்த கலைகளை கற்றுத்தரும் ஆசிரியர்களும் மிகவும் குறைவு. இதனாலேயே தற்போது இந்த பாரம்பரிய கலைகள் முற்றிலும் அழிந்துவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். ஆண்டவனின் வரபிரசாதமாக அனுஷா எந்த குருவிடமும் பயிலாமல் இயல்பாகவே நாட்டுப்புற நடனம் போன்ற அனைத்து கலைகளிலும் கை தேர்ந்து விளங்கினார் என்றால் மிகையாகாது.
அனுஷா 6 வயது முதல் தொலைக்காட்சி மற்றும் சினிமாக்களில் வரும் நடனக்காட்சிகளை மட்டுமே கவனித்து அந்த வயது முதலே பள்ளிகளிலும் , விழாக்காலங்களில் தெருக்களிலும் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதோடு மட்டுமல்லாமல் தவறாமல் ஒவ்வொரு முறையும் முதல் பரிசை வென்று வந்துள்ளார். இதனை தொடர்ந்த கவனித்த பலரும் அவருக்கு முறையாக பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யும்படி அனுஷ்யாவின் பெற்றோருக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். அதை தொடர்ந்து அவரது ஆர்வத்தை உணர்ந்த பெற்றோர் அவருக்கு முறையாக அனைத்து கலைகளிலும் பயிற்சி அளித்துள்ளனர்.
சரஸ்வதி நாட்டிய பள்ளியில் முரளி என்ற ஆசிரியரிடம் முறையாக நடனம் கற்றுக்கொண்டுள்ளார். பள்ளி நடன நிகழ்ச்சிகளிலும் இவர் முதல் இடத்தை பிடித்து வருகிறார். தொடர்ந்து 5 வருடங்களாக மாவட்ட அளவிலான கிராமிய கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு முதல் இடத்தை மட்டுமே பிடித்து வருகிறார். இதில் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால் இவரது குடும்பத்தில் இதற்கு முன் யாருமே இது போன்ற நடன கலை பழகியவர் இல்லை.
கரகாட்டத்தின் முக்கிய அம்சமாக திகழ்வது சாகசத்தோடு கூடிய நடனம் தான். அதாவது ஆணி, கத்தி ஆகியவற்றின் மேல் நடனம் புரிவது, கண்ணாடி குவளை மற்றும் ஒற்றை தம்ளரின் மேல் நின்று நடனம் ஆடுதல் இப்படி. இதில் எல்லாவற்றிலும் கைதேர்ந்த அனுஷ்யா தொடர்ந்து 45 நிமிடம் விடாமல் கரகாட்டம் ஆடிக்கொண்டே இறுதியில் தரையில் இருக்கும் குண்டூசியை விழி இமையில் எடுத்து காட்டி பார்ப்பவர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துவிடுவார் .
அனுஷா நடனத்தில் சாதித்தது மட்டுமல்லாமல் அன்னை கலைக்கூடம் மூலம் நடிப்பும் கற்று வருகிறார். மேடை பல கண்டு தனது திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். இவரது திறமை கண்டு பலரும் இவருக்கு ஊக்கமும் உதவியும் வழங்கி வருகின்றனர்.
உதவியாக வந்த நிதியைக் கொண்டு இவரது தாய் ஜெயந்தி அன்னை கலைக்கூடம் மூலம் அனுஷாவை வைத்து “அரசுப்பள்ளி” என்ற குறும்படம் ஒன்றை தயாரித்தார். இந்த குறும்படம் கோவையில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளிலும் உள்ள மாணவர்களுக்கு இலவசமாக காட்டப்பட்டுள்ளது. நல்ல வரவேற்பைப் பெற்ற "அரசுப்பள்ளி" குறும்படம் பார்த்த இயக்குனர் பேரரசு தனது அடுத்த படத்தில் இவருக்கு கண்டிப்பாக வாய்ப்பு அளிப்பதாக கூறியிருக்கிறார்.
இவர் கலைஞர் டிவியின் “ஓடி விளையாடு பாப்பா” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றிருக்கிறார். மேலும் கேரளாவின் “மலர்விழி மனோரமா” டிவி யின் 1+1=3 மற்றும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றிருக்கிறார். இதுவரை இவர் எதிலும் இரண்டாவது பரிசைகூட வென்றதில்லை, எல்லாவற்றிலுமே முதல் பரிசு மட்டுமே தான்.
பொருளாதாரத்தில் சொல்லும்படியான வசதி இல்லாத போதும் இவரது ஆர்வத்தை கண்டு இவரது பெற்றோர் தங்களால் முடிந்தவரை இவருக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர்.
இவர் தாய் ஜெயந்தி, “என் மகளுக்கு இயற்கையாகவே இப்படி ஒரு திறமை அமைந்திருப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த சாதனைகளோடு அவள் படிப்பிலும் கெட்டிக்காரியாக இருந்து வருகிறாள்” என்று பெருமிதத்துடன் கூறினார்.
" கலையையும் வளர்க்கணும் கலைஞர்களையும் ஊக்கப்படுத்தணும் " மேல் நாட்டு மோகத்தில் நம் கலாச்சாரத்திற்கு சற்றும் ஒத்துவராத நடனங்களை மக்கள் மத்தியில் முகம் சுளிக்கும்படி ஆடுபவர்கள் தான் இக்காலத்தில் அதிகம். அனுஷா, அவரது பெற்றோர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் நம்நாட்டின் கலாசாரத்தை பறைசாற்றும் இது போன்ற கலைகளை அரசாங்கம் மட்டுமல்லாமல் மக்களும் ஊக்கப்படுத்தவேண்டும் என்பதே. இதற்காக நாம் பெரியதாக எதுவும் செய்யவேண்டியது இல்லைங்க நம்முடைய வீட்டில் நடக்கும் சுபகாரியங்களுக்கும் , கல்லூரி மற்றும் பள்ளி கலை விழாக்களிலும் இது போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்தாலே போதும். அவ்விழாக்களில் அனுஷா போன்ற இளம் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கலாமே..!
ஒரே முறை முதலீடு ..! ஆண்டு முழுதும் பெருகும் லாபம் ..!
மின்சாரம், எரிவாயு , குடிநீர் என தனக்குதானே திட்டமிட்டு
'தன்னிறைவு பெற்ற மனிதர்' ஸ்ரீதர் .
``````````````````````````````````````````````````````````````````````````````````````
தற்போது இருக்கும் சூழ்நிலையில் ஒரு சராசரியான குடும்பத்தில் தண்ணீர், மின்சாரம், எரிபொருள் போன்றவற்றின் சிக்கனம் மற்றும் சேமிப்பு என்பது தவிர்க்க முடியாத நிலையில் இருந்து வருகிறது. எரிபொருள் மின்சாரம் போன்றவற்றை சிக்கனமாக பயன்படுத்துமாறு எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அது முழுமையாக மக்களிடையே சென்றடைவது இல்லை. அது மட்டும் இல்லாமல் அத்தியாவசிய தேவையாக இருப்பதால் இவற்றின் பயன்பாட்டைக் குறைப்பதற்கான வாய்ப்புகளே இல்லாமலும் இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் அவ்வப்போது அவற்றின் விலை ஏற்றத்தின் காரணமாகவும் நாம் தவித்து வருகிறோம் .
இத்தகைய சூழ்நிலையில் அனைவருக்கு வரம் போல ஒரு திட்டத்தை செயல்படுத்தி அதில் வெற்றியும் கண்டு வருகிறார் கோவையை சேர்ந்த திரு.ஸ்ரீதர்.
வீட்டு உணவு பொருட்களின் கழிவுகளை மட்டுமே கொண்டு எரிபொருட்களை தயாரித்து பயன்படுத்தி வருகிறார். சூரிய சத்தியை பயன்படுத்தி வீட்டிற்கு தேவையான மின்சாரத்தை பெற்றுக் கொள்கிறார். மழை நீரை முறையாக சேமித்து பல மாதங்களுக்கு குடிநீராகவும் பயன் படுத்திக் கொள்கிறார் . மாதம் முழுவதுமாக இதற்காக ஆகும் செலவு வெறும் 200 ரூபாய் மட்டுமே என்கிறார் இந்த இந்திய குடிமகன்.
பொருளாதார சிக்கனம் மற்றும் நாட்டின் மேம்பாட்டில் அக்கறையோடு எரிபொருள் , மின்சாரம் போன்றவற்றை இவர் வீட்டில் இருந்தபடியே வீட்டிலேயே உற்பத்தி செய்து அதன் மூலம் பெரும் பயன் பெற்று வரும் ஸ்ரீதர் . அது மட்டும் அல்லாமல் அவற்றை பற்றிய விழிப்புணர்வை கல்லூரி மாணவர்கள் உட்பட அனைவருக்கும் கொடுத்துவருகிறார். இதை அறிந்து நேரடியாக நாமும் அவர் வீட்டிற்கு சென்று அவரிடம் விளக்கம் கேட்டபோது அவர் எம்மிடம் கூறியது அப்படியே உங்கள் பார்வைக்கு ...
1. வணக்கம் சார் சூரிய சக்தியால் மின்சாரம் உற்பத்தி செய்து பயன் படுத்த வேண்டும் என்று எப்படி உங்களுக்கு தோன்றியது , அதை பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க சார் ?
கடந்த ஆறேழு வருடத்திற்கு முன்பு தமிழ் நாட்டில் மின்சார பற்றாக்குறை ஏற்பட்டு அனைவரும் அவதிப்பட்டு வந்தது யாராலும் மறக்க முடியாது. UPS பொருத்திப் பார்த்தோம் ஆனாலும் அதில் சேமிப்பதற்கும் கூட போதிய மின்சாரம் கிடைக்காமல் தட்டுப்பாடாக இருந்தது. அது மட்டும் இல்லாமல் அவ்வப்பொழுது மின்சார கட்டணம் உயர்ந்து வருவதும் பெரும் மன உளைச்சலாக இருந்து வந்தது. இந்த நிலையில் தான் நண்பர்களின் ஆலோசனை படி சோலார் சிஸ்டம் மூலம் வீட்டிலேயே மின்சாரம் தயாரித்துக் கொள்ளலாம் என்பது பற்றி தெரியவந்தது . முதலீடு அதிகமாக இருந்தாலும் இப்பொழுது அதன் பயன் உணர முடிகிறது. இப்பொழுது அதன் முதலீடு மிகவும் குறைந்து விட்டது . எந்த நேரமும் மின்சாரம் வீட்டில் உபயோகிக்க முடிகிறது , அது மட்டும் இல்லாமல் இப்பொழுது வீட்டின் தேவைக்கு போக மீதமுள்ள மின்சாரத்தை மின்வாரியத்திற்கு கொடுத்து அதன் மூலம் ஒரு தொகையும் பெற்றுக் கொள்கிறோம்.
2. சூப்பர் சார் , மழை நீரை எப்படி சேகரிக்கிறீங்க ? பின் அதை எப்படி பயன் பயன்படுத்தறீங்க அதை பற்றி சொல்லுங்களேன் ?
'நீரின்றி அமையாது உலகு' என்ற கூற்று முற்றிலும் உண்மையானது. மழையின் அளவு மிகவும் குறைந்து கொண்டு வருவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தானேங்க , குடி நீர் தட்டுப்பாடு என்பது நான் சொல்லியா தெரிய வேண்டும் . எங்க வீட்டு தரை மட்டத்தில் 15000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டியும், வீட்டின் மாடியில் அதே அளவு கொள்ளளவு கொண்ட மேல் நிலை தொட்டியும் வைத்து இருக்கின்றோம்,
மழை வரும் பொழுது ஒரு துளியும் வெளியேறி விடாமல், அப்படியே ஒரு இடத்திற்கு குழாய் மூலம் கொண்டுவந்து கூழாங்கற்கள், செங்கற்கள், கருங்கற்கள் (ஜல்லிக்கற்கள்), மரக் கரித்துண்டுகள், பாக்குஜல்லி, ஆற்று மணல், கல் உப்பு போன்றவற்றை கொண்டிருக்கும் ஒரு தொட்டியில் அந்த நீரை செலுத்தி மெல்லிய துணி கொண்டு வடிகட்டி கீழ் தொட்டியிலும் , மேல் தொட்டியிலும் சேமித்து வைத்துகொள்கிறேன். பின்பு அதை குளிப்பதற்கும் , துணி துவைப்பதர்க்கும் பயன்படுத்திக் கொள்கிறேன் . அது மட்டும் அல்ல அதையே குடிப்பதற்கும் கூட பயன் படுத்திக் கொள்கிறேன்.
என்ன சார் யோசிக்கிறிங்க குழப்பமா இருக்கா . கண்தெரியாத தொலைவில் காட்டுக்குள் இருக்கும் நீர் அணையில் எவ்வளவோ மிருகங்கள் இறந்து விழுந்து அழுகிப்போய் கிடக்கிறது , துருப்பிடித்த குழாயில் தான் அந்த நீரும் வருகிறது. அதை கழுவவே முடியாத ராட்சச தொட்டியில் நிரப்பி அதைதான் நம் வீட்டிற்கு குடி நீர் பயன்பாட்டுக்காக வருகிறது . இப்போ சொல்லுங்க நாம் மழை நீரை சேமிப்பது எந்தவிதத்தில் குறை சொல்ல முடியும். நாங்கள் இப்பொழுது குடிக்கும் நீர் கூட கடந்த மூன்று மாதத்திற்கு முன் வந்த மழை நீர்தான். ஒரு விஷயம் சொல்லறேங்க நம் வீட்டிற்கு வரும் குடிநீர் நாம் பயன்படுத்தாமல் இருந்தாலும் ஒரு நாளைக்கு 3.50 ரூபாய் கட்டிக் கொண்டுதான் இருக்கின்றோம் , அதுபோக நாம் குடிப்பதற்கு உண்டான கட்டணம் தனி , இது எத்தனை பேருக்கு தெரியும் . ஆனால் நான் என் எல்லா தேவைக்கும் மழை நீரை பயன் படுத்திக் கொண்டு , அந்த மினிமம் கட்டணம் மட்டும் தான் கட்டிக் கொண்டு இருக்கின்றேன்.
நீங்க ஒன்னு கூட நினைக்கலாம் இந்த நீரை குடிப்பதற்காக பயன் படுத்துவதால் உடல்நல கேடு இருக்குமோ என்று. எங்கள் வீட்டில் நாங்கள் மூன்று பேர் சளி தொந்தரவு என்பது கூட இது நாள் வரை வந்தது இல்லை.
3. அருமை சார் நீங்க பயன்படுத்தும் எரிவாயு பற்றி சொல்லுங்க ?
வீட்டில் வீணாகும் உணவு கழிவுப் பொருட்களை பயன்படுத்தி மிகக் குறைந்த செலவில் எரிவாயு தயாரித்து பயன்படுத்த முடியும்ங்க நூடுல்ஸ், உருளை கிழங்கு , வெங்காயத் தோள் பழைய சாதம் மற்றும் கெட்டுப்போன பேக்கரி உணவு பொருட்கள் இது போதும் நம் வீட்டிற்கு தேவையான எரிவாயு எளிதில் தயாரித்துக் கொள்ளலாம் , இந்த மூலபொருட்கள் எல்லாம் விலையில்லா பொருட்கள்தானே எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும் என் வீட்டில் இப்போதைக்கு எட்டு வருடத்திற்கு தேவையான எரிவாயுவிற்கு தேவையான மூலப்பொருட்கள் சேமித்து வைத்து இருக்கிறேன். இதனால் சுற்றுப்புற சூழல் எந்தவிதத்திலும் பாதிப்பதும் இல்லை ; எரிவாயு தட்டுப்பாடு என்பதே இல்லை. அதுபோக கல்லூரி மாணவர்கள் வேதியியல் துறைக்கு தேவையான எரிவாயும் இலவசமாக என்னிடம் இருந்து பெற்றுக் கொள்கிறார்கள்.
4. வாழ்த்துக்கள் சார் , உங்களது இந்த அரிய முயற்சியின் மூலமும் இதன் வெற்றியின் மூலமும் நீங்கள் பொதுமக்களுக்கும் அரசாங்கத்திற்கும் என்ன விழிப்புணர்வு அளிக்க விரும்புகிறீர்கள்?
இப்போது நான் செய்து வருவதை முழுமையாக அரசாங்கமும் செய்து வருமானால் தொடர்ந்து நீர்வளம், எரிபொருள் மற்றும் மின்சாரம் போன்றவற்றில் நம் நாடு தன்னிறைவு அடைவதோடு பிற நாடுகளுக்கும் கொடுக்க முடியும் . . எரிபொருட்கள் மற்றும் மின்சாரத்தை சிக்கனம் செய்ய எவ்வளவுதான் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் மிக அதிகமான தேவைகளின் காரணமாக சிக்கனம் என்பது சாத்தியமில்லாத ஒரு சூழ்நிலையில் குறைந்த செலவில் இவற்றை உற்பத்தி செய்வது தான் புத்திசாலித்தனமும் கூட , எரிபொருட்களுக்கு அரசாங்கம் மானியம் வழங்கி வருகிறது. இது போன்ற இயற்கை முறைகளை கையாளும்போது மானியத் தொகை செலவிலேயே நமது மொத்த தேவைகளையும் அதற்கு மேலும் அடைந்து விட முடியும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார் தன்னிறைவு மனிதர் திரு.ஸ்ரீதர்.
பெரும் முயற்சிக்கு பின் லட்சுமியின் உறவினர்கள் கோவைக்கு அழைத்து வரப்பட்டது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கடந்த 30/05/2015 அன்று கோவை ரயில் நிலையத்தில் பார்வை இல்லாத 15 வயது மதிக்கத்தக்க லட்சுமி என்ற பெண் அழுதுக் கொண்டு ரயில் நிலையத்தில் தடுமாறிக்கொண்டு இருப்பதைகண்டு கோவை ரயில் நிலைய காவலர்கள் மீட்டு அவளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் படி கோவை மாநகராட்சி காப்பகத்தில் அனுமதித்தனர்.
இதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அறக்கட்டளை லட்சுமியிடம் விசாரித்து அவளுடைய உறவினர் கர்னாடக மாநிலத்தில் யாத்கிர் என்ற ஊரில் இருப்பதை அறிந்து அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியை மேற்கொண்டது.
அதன் பயனாக லட்சுமியின் தந்தை மஞ்சுநாத் மற்றும் உறவினர்கள் தொடர்பு கிடைத்தது . அவர்களிடம் லட்சுமியை பற்றி விபரம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு படிப்பறிவும் போதிய வருமானமும் இல்லாததால் அவர்களால் கோவை வரை வருவதற்கு முடியாமல் இருந்து வந்தது. அதுமட்டும் இல்லாமல் தொடர்ந்து இவர்களிடம் தொடர்புகொள்ள மொழி பிரச்சினை இருந்துக் கொண்டே இருந்தது. இதனால் லட்சுமி அவளது உறவினர்களுடன் இணைவதில் தாமதமாகிக் கொண்டிருந்தது.
இதனால் லட்சுமிக்கு தாய் தந்தையுடன் இணையவேண்டும் என்று ஏக்கம் அதிகமாகி காப்பகத்தில் சரிவர உறங்காமல் உணவும் உண்ணாமல் அழுதுக் கொண்டே இருப்பது மனதையும் கலங்க வைத்துக் கொண்டிருந்தது.
இந்த இக்கட்டான நிலையில் பட்டுக் கோட்டையில் மிகவும் பிரபலமான ராஜா க்ரூப்ஸ் நிறுவனரும் முகநூல் நண்பருமான சிதம்பரம்
அவர்கள் ஈரநெஞ்சம் அறக்கட்டளையுடன் தொடர்புகொண்டு லட்சுமியின் நிலையை பற்றி விபரம் கேட்டு அவளுக்காக நாங்களும் உங்களோடு சேர்த்து அவளது உறவினரை அழைத்துவர முயற்சி எடுக்கின்றோம் என்று கேட்டுக் கொண்டு அதன்டடி . ஈரநெஞ்சம் அறக்கட்டளை மற்றும் பட்டுக் கோட்டை ராஜா க்ரூஸ் இணைத்து கர்னாடக மாநிலம் யாதிர் ஊரில் உள்ள லட்சுமியின் உறவினர்களை அழைத்துவரும் முயற்சியை மேற்கொண்டது.
இதில் ராஜா க்ரூப்ஸ் பணியாளர் விக்னேஷ் அவர்கள் 05/06/2015 அன்று நேரடியாக யாத்கிர் சென்று லட்சுமியின் தந்தை மஞ்சுநாத் மற்றும் அவளது மாமா நாகப்பாவை அழைத்துக் கொண்டு நேற்று 08/06/2015 கோவைக்கு அழைத்து வந்தார்.
காப்பகத்தில் இருக்கும் லட்சுமி அவர்களைக் கண்டதும் கட்டித்தழுவியா அந்த பாசம் நிறைந்த காட்சி காண கண்கோடி வேண்டும்.
இந்த அத்தனை வெற்றியும் லட்சுமிக்காக பெரும் சிரமமும் முயற்சியும் எடுத்துக் கொண்ட பட்டுக் கோட்டை சேர்ந்த ராஜாக்ரூப்ஸ் பணியாளர் விக்னேஷ்
அவருக்கே சேரும்.
லட்சுமியின் மாமா நாகப்பா கூறும்பொழுது :
நாங்கள் மிகவும் வருமையானவர்கள் ஊசி பாசி விற்று பிழைப்பவர்கள் , லட்சுமி என்றால் எங்களுக்கு மிகவும் பிடிக்கும் செல்லப்பிள்ளை. எப்படி இங்கு வந்தால் என்று தெரியவில்லை எங்களால் முடிந்தவரை எங்கெல்லாமோ தேடினோம் கிடைக்கவில்லை இனியும் கிடைப்பாள என்ற நம்பிக்கை குறைந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன் ஈரநெஞ்சம் அரக்கட்டளையிடம் இருந்து லட்சுமியை பற்றியும் அவள் கோவையில் இருப்பதை பற்றியும் தகவல் வந்தது. எங்களுக்கு கோவை எங்கு இருக்கிறது என்றே தெரியாது எப்படி அவளை மீட்பது என்றும் தெரியாது இருந்தது. இந்த நிலையில் விக்னேஷ் என்பவர் கடவுளைப்போல இங்கு வந்து எங்களை அழைத்துக்கொண்டு லட்சுமியிடம் சேர்த்தார். அவருக்கும் இங்குள்ள அனைவருக்கும் நாங்கள் எந்த வழியில் நன்றியை தெரிவிப்பது என்று தெரியவில்லை என்று கூறினார்.
மேலும் .வழி தடுமாறி கோவையில் தஞ்சமான பார்வை இல்லாத லட்சுமிக்கு கண் பார்வை சிகிச்சை மேற்கொள்வதற்கு பட்டுக் கோட்டை ராஜா க்ரூப்ஸ் உதவுவதாகவும் கூறியது தமிழ் நாட்டில் தடுமாறி வந்தவர்களுக்கு தமிழ் மக்கள் எவ்வளவு தூரம் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
அதோடு காப்பகத்தில் இருப்பவர்கள் மற்றும் ஈரநெஞ்சம் அறக்கட்டளை லட்சுமிக்கு தேவையான உடைகளும் மற்ற பொருட்களும் வழங்கி அவளது சொந்த ஊருக்கு சந்தோசமாக வழியனுப்ப உள்ளார்கள் இன்று கோவை PSG மருத்துவமனையில் லட்சுமியின் கண்களுக்கு முதல்கட்ட பரிசோதனை முடித்துக் கொண்டு இன்று 09/06/2015 இரவு ரயிலில் சொந்த ஊரான யாத்கிர் செல்கிறார்கள்.
ஈரநெஞ்சம் அறக்கட்டளை லட்சுமியின் சார்பாக பட்டுக் கோட்டை ராஜா க்ரூப்ஸ் நிறுவனத்திற்கும் . அதன் பணியாளர் விக்னேஷ் அவர்களுக்கும் . கோவை மாநகராட்சி காப்பகதிர்க்கும் மற்றும் லட்சுமியின் உறவு கிடைப்பதற்காக முயற்சி எடுத்துக் கொண்ட நண்பர்களுக்கும் நன்றியோடு வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் வெளியாகும் " தென்றல் " மாத இதழில் என்னுடைய சமூக சேவையை பற்றி நேர்காணல் பேட்டி பிரசுரம் ஆனது . அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு என்னுடைய பதிகள் எழுத்து வடிவிலும் ஒலி வடிவிலும் இங்கு பதிவிட்டு இருக்கிறேன் . மேலும்
A Monthly Magazine for Tamils living in North America
( ஒளி ஒலியில் காண )
1) சமூக சேவையின் மீது ஆர்வம் வந்தது எப்போது, எப்படி?
எனக்கு சமூக சேவையின் மீது ஆர்வம் வருவதற்கு என்னுடைய குடும்ப சூழல்தான் முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது. நான் சிறுவனாக இருந்த போது, ஒரு சமயம் என் அம்மா எனது அக்காவை (சற்று மனநலம் பாதித்தவர்) அழைத்துக்கொண்டு கோவிலுக்குச் சென்று திரும்பும் வேளையில், அக்கா தவறி சாக்கடையில் விழுந்துவிட்டார். அம்மாவிற்கு பெரும் பதட்டம், பதட்டத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்த பகுதியில் இருந்தவர்கள் எல்லாம் சுற்றி நின்று வேடிக்கைதான் பார்த்தார்களே தவிர உதவிக்கு யாரும் வருவதாக தெரியவில்லை. உதவிக்கு ஆள் இல்லாமல் அம்மா தவித்த தவிப்பிற்கு அளவே இல்லை. அந்தவேளையில் அந்த வழியே வந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் அக்காவைத் தூக்கி விட்டு, அருகில் சென்று தண்ணீர் வாங்கி வந்து அக்கா மேல் இருக்கும் சகதிகளை கழுவி சுத்தம் செய்து , அவருடைய ஆட்டோவிலேயே அம்மாவையும் அக்காவையும் அழைத்துக் கொண்டு வீடுவரை வந்து விட்டுவிட்டு சென்றார். அப்போது அம்மா இருந்த பதட்டத்தில் அந்த ஓட்டுனர் யார் ? பெயர் என்ன ? என்று எதுவும் விசாரிக்க தோன்றாமல் இருந்துவிட்டார். அந்நாள் வரைக்கும் மனிதர்களில் இப்படியும் இருப்பார்களா என்றெல்லாம் எங்களுக்கு தெரியாது. அந்த நிகழ்வைப்பற்றி எங்கள் வீட்டில் பல வருடங்கள் வரை பேசிக்கொண்டும், அந்த ஓட்டுனருக்கு நன்றி சொல்லிக்கொண்டும் இருந்தார்கள் .
அது என்னுடைய மனதில் ஆழமாக பதிந்தது, முன்பின் அறியாதவர்கள் நமக்கு செய்யும் ஒரு சிறு உதவி கூட எவ்வளவு முக்கியமானது என்று விவரம் புரியும் வயதில் நன்கு விளங்கியது. அதுவே சாலையோரம் இருக்கும் ஆதரவற்றவர்களின் நிலையை மாற்றி அவர்களுக்கு எப்படியும் பாதுகாப்பு தேடிக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு உத்வேகத்தைக் கொடுக்க ஆரம்பித்தது.
2) இதுவரை எத்தனை பேரை மீட்டு காப்பகத்தில் சேர்த்திருப்பீர்கள்? எத்தனை பேரை அவர்கள் குடும்பத்துடன் சேர்த்திருப்பீர்கள்?
சாலையோரம் பிச்சை எடுக்கக் கூட முடியாதநிலையில் இருப்பவர்கள் மனநிலை பாதித்தவர்கள் என இந்த பத்துவருடத்தில் சுமார் 700 பேருக்கும் மேலாக காப்பகத்தில் இடம் கேட்டு சேர்த்திருக்கிறேன் . அதில் கடந்த 3 வருடங்களில் மட்டும் சுமார் 200 பேர் வரை அவரவர் குடும்பத்துடன் இணைத்து வைத்திருக்கிறேன்.
பெரும்பாலானோர் ஞாபக மறதியால் தான் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் . வடமாநிலங்களில் இருந்து தமிழ் நாட்டிற்கு வேலைத் தேடி வருபவர்கள் ரயிலில் இரண்டு மூன்று நாட்கள் பயணம் செய்து வரவேண்டியது இருக்கும் . பொதுவாக யாராக இருந்தாலும் இரண்டு இரவுகள் கண்விழித்து உறங்காமல் இருந்தாலே மனக்குழப்பம் அடைத்து ஞாபகமறதி ஏற்பட்டு மனநிலை பாதிப்புக்குள்ளாவார்கள் . இப்படி இருக்க அவர்கள் வரும் ரயிலில் ரிசர்வேசன் செய்து வரமாட்டார்கள் கூட்ட நெரிசலில் இரண்டு மூன்று நாட்கள் உறங்காமல் வெயில் , மழை என தட்பவெட்பம் மாறுதல் மற்றும் சரிவர உணவு இல்லாமல் குடும்ப சூழ்நிலை என அவர்கள் மனதை நிலைகுலைய வைத்து இங்கு வந்து இறங்கும் போது மனநிலை பாதித்த நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் .
இப்படிப்பட்டவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. பார்ப்பதற்கு நல்ல நிலையில் தெரிவார்கள் . இதனால் இவர்கள் செய்யும் செயலால் அவர்களுக்கு பொது மக்களால் பெரும் ஆபத்தும் நிகழ்கிறது . குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டு காவல், கைது, அடி என மேலும் அவர்கள் துன்பம் அனுபவித்தபிறகே அவர்கள் மனநலம் பாதித்தவர்கள் என்பது தெரியவரும். அப்படிப்பட்டவர்களை உடனடியாக மருத்துவ சிகிச்சை அல்லது நன்கு தூங்கினாலே சற்று தெளிவடைவார்கள் . அதன் பிறகு அவர்களை நாம் கையாள்வது கொஞ்சம் எளியது இதைதான் நான் செய்கிறேன் . இப்படிப்பட்டவர்களை சுமார் 100 பேர் வரை உறவினர்களை கண்டுபிடித்து அவர்களோடு சேர்த்து வைத்து இருக்கிறேன்.
3) இவர்களை மீட்கச் செல்லும்போது நீங்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் என்ன, அவற்றை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?
பெரியதாக சிக்கல் என்று எதுவும் இருந்தது இல்லை. மனநிலை பாதிக்கப்பட்டவர்களை அணுகும் போது அவர்கள் ஓட ஆரம்பிப்பார்கள் அவர்களை துரத்தக் கூடாது அதேநேரம் ஓட ஆரம்பிக்கிறார்கள் என தெரியும் பொழுது நம்முடைய அணுகுமுறையை மாற்றவேண்டும்.
ஆதரவே இல்லாதவர்களுக்குத்தான் நான் அடக்கலம் தேடிவருகிறேன் . ஆனால் என்னிடமே பலர் தன்னுடைய அம்மாவை , அழைத்துச் செல்லுங்கள் அப்பாவை அழைத்துச் செல்லுங்கள் உங்களுக்கு தேவையான பணம் தருகிறேன் என்பார்கள் அதை எல்லாம் என்னால் சிறிதும் ஜீரணிக்க முடியாது அதனால் தவிர்த்துவிடுகிறேன் .
சாலையில் இருப்பவர்கள் உடலில் காயங்களோடு பராமரிக்க தெரியாமல் பலநாள் விட்டு விடுவார்கள். இதனால் அந்த காயங்கள் அழுகி புழுக்கள் வைத்து பெரும் துர்நாற்றம் வீசும். அப்படிப் பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் அழைத்தால் அவர்கள் கூட சிலசமயம் உதவிக்கு வர மாட்டார்கள் . பெரும் போராட்டத்திற்கு பிறகு அவர்களை அழைத்துக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றால் அங்கு உள்ள மருத்துவர்களும் சரிவர சிகிச்சை அளிக்க வரமாட்டார்கள். புழுக்களை சுத்தம் செய்து அழைத்து வாருங்கள் என்பார்கள் . அதன் பிறகு காயத்தில் இருக்கும் புழுக்களை சுத்தம் செய்து பிறகே அழைத்துபோக வேண்டி இருக்கும் .
சில சமயம் பணம் பற்றாக்குறை ஏற்படும் நெருங்கிய நண்பர்கள் யாரும் உதவுவார்கள் . பொதுவான சிக்கல் என்று பார்த்தால் காப்பகங்களில் பயனாளர்கள் அதிகம் இருந்தால் புதியவர்களுக்கு உடனடியாக இடம் கிடைக்காது. கோவையில் மாநகராட்சி ஆதரவற்றோர் தங்கும் விடுதி நான்கு இருக்கிறது . ஆனால் அதில் ஒன்று தான் இயங்கி வருகிறது . மீதம் மூன்று விடுதிகள் பூட்டிய நிலையில் இருக்கிறது . அது இயங்கும் பட்சத்தில் இப்படி தவிப்போருக்கு இடம் பற்றாக்குறை இல்லாமல் அடைக்கலம் கொடுக்க சவுகரியமாக இருக்கும்.
4) இந்தச் சேவையில் மறக்க முடியாத நபர் அல்லது சம்பவம் என்று எதைச் சொல்வீர்கள்?
நிறைய பேர் இருக்காங்க . அதில் ஷேக் சலீம் 15 என்ற சிறுவன் ஒருவன் , இவனைப் பற்றி கண்டிப்பாக சொல்லியாக வேண்டும் . ஈரோடு பயணிகள் ரெயிலில் இவனை மீட்டு 10 நாள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு ஒரிசாவில் இருக்கும் இவனது பெற்றோரை கண்டுபிடித்து அவர்களை வரவைத்து அவர்களிடம் ஒப்படைத்தது என்னால் மறக்க முடியாத சம்பவம்.
ஒரு ரயில்வே காவலர் என்னிடம் " ரயிலில் ஒரு வட மாநில சிறுவன் உடல் முழுவதும் காயங்கள், தலையில் பலத்த காயம் அதில் புழுக்களுடன் துர்நாற்றம் வீசுகிறது . பயணிகளுக்கு பெரும் இடையூறாகவும் இருக்கிறான் , அவனுக்கு உதவுங்கள் . நான் வரும் வழியில் பலரிடம் பல ஊர்களிலும் உதவி கேட்டுவிட்டேன் யாரும் முன் வரவில்லை. சிலர் இவனை பார்த்துவிட்டு பயந்து சென்று விட்டார்கள் . இப்போது உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம் " என்றார் .
அந்தச் சிறுவனை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்து அறுவை சிகிச்சை முதற்கொண்டு செய்து கவனித்து வந்தேன் . இப்படி பட்ட என்னுடைய பணிக்கு சில திருநங்கைகளும் அவ்வப்போது உதவிக்கு வருவார்கள் . எனக்கு வடமொழி தெரியாததால் அவர்கள் மூலமாக இவனிடம் விசாரித்ததில் அவனது பெயர் ஷேக் சலீம். ஒரிஸ்ஸாவில் உள்ள கட்டாக் என்ற பகுதியை சேர்ந்தவன், அவன் தந்தை சதுஜின் பெயிண்டராக இருக்கிறார், தாய் கெத்தாம் பீபீ . இவன் அவர்களுக்கு இரண்டாவது பையன், அங்குள்ள ஒரு பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கிறான் போன்ற தகவல்களை மட்டும் சொன்னான். ஐந்து மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறான். அவன் ஒரிஸ்ஸா மாநிலம் என்றும் வீட்டில் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டான். பிறகு எங்கே செல்வது என்று தெரியாமல் ஏதோ ஒரு ரயிலில் ஏறி பயணித்துள்ளான். எங்கெங்கோ சென்ற அவனுக்கு எத்தனையோ பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கிறது. அவன் ஓடும் ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்து பலத்த காயம் ஏற்பட்டதாம் .
ஒரு புறம் இவனுக்கு சிகிச்சை நடந்துவரும்வேளையில் மருத்துவமனையில் இவனது சேட்டை தாங்காமல் இவனை அழைத்து செல்லுங்கள் இவன் மருத்துவ சிகிச்சைக்கு சரிவர உதவ மறுக்கிறான் . எப்போதும் அவன் அவனது பெற்றோர் நினைப்பிலேயே இருப்பதால் அவர்களை தேடி ஓடிவிடுவான் போல இருக்கிறது முடிந்தால் அவனது உறவினரை அழைத்துவாருங்கள் என்று அறிவுறுத்தினர் .
இதனை தொடர்ந்து இவன் கொடுத்த தகவலை மட்டும் வைத்துக் கொண்டு இவனது உறவினரை தேடும் முயற்சியாக இவனது புகைப்படத்தை முகநூல் மற்றும் இணையதளங்களில் வெளியிட்டு தேடிவந்தோம் . ஒரிஸா, கட்டாக் பகுதி காவல் நிலையத்தின் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கண்டறியப்பட்டு அவனது புகைப்படங்கள் அங்கே அனுப்பட்டது . மேலும் அவனது குடும்பத்தினரை தேடும் முயற்சி மேற்கொண்டேன் . அப்போதுதான் அந்த காவல் நிலைய காவல் துறை அதிகாரி திரு. அஸ்வின் அவர்கள் மூலம் அவனது பெற்றோர் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் தங்கள் மகன் காணாமல் போனதாக புகார் அளித்துள்ளது தெரிய வந்தது. அவனது புகைப்படத்தை கண்டு அவர்கள் அது தங்கள் மகன் தான் என்பதையும் உறுதி செய்துள்ளனர். தங்கள் மகன் பலத்த காயங்களுடன் இருந்ததை பார்த்து கதறி அழுதுள்ளனர். பின்னர் அவர்கள் உடனடியாக ரயில் மூலம் கோவை வர அங்குள்ள காவல்துறையினர் ஏற்பாடு செய்தனர். ஏற்கனவே ஷேக் சலீம் மருத்துவமனைக்கு வந்து 5 நாட்கள் ஆகிவிட்டது இன்னும் அவனது பெற்றோர்கள் இங்குவந்து சேர 4 நாட்கள் ஆகும் . அதுவரை அவனுடனே நானும் , என்னுடன் சேர்ந்து சில நண்பர்களும் திருநங்கைகளும் பொழுதை களித்தோம் . அவனது பெற்றோர் கோவை வந்ததும் ரயில் நிலையத்தில் இருந்து சிறுவன் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு தங்கள் மகனை கண்ட அவர்கள் அவனது காயம்பட்ட நிலை கண்டு வருந்தி கண்ணீர் சிந்திய போதும் , தங்கள் மகனை திரும்ப பெற்று விட்ட நிம்மதியில் ஆனந்த கண்ணீரும் வடித்தனர். மருத்துவமனையில் இருந்த அனைவரும் கூடி அவர்களை தேற்றினார்கள்.
அது மட்டும் இல்லை மரண படுக்கையில் இருந்த ஆதரவற்ற சிறுவனை மீட்டு அவனுக்கு மருத்துவ சிகிச்சை அளித்ததோடு மட்டும் இல்லாமல் உடனிருந்து பார்த்துக் கொண்டதற்கும் , அவனது பெற்றோரை கண்டு பிடித்து அவர்களுடன் சேர்த்து வைத்ததற்கும் அந்த மருத்துவமனையில் எனக்கு ஏராளமான பாராட்டுக்களோடு , கேக் வெட்டி எனக்கும் அவனுக்கும் ஊட்டி விட்டனர். http://eerammagi.blogspot.in/2013/09/blog-post_23.html
அடுத்தநாளில் ஷேக் சலீம் அழைத்துக் கொண்டு அவனது பெற்றோர்கள் ஊர் சென்றனர் . அவனுடன் கழித்த அந்த பத்து நாள் எவ்வளவு நாளானாலும் மறக்க முடியாது.
5) இறந்தவர்களை நீங்கள் நல்லடக்கமும் செய்து விடுகிறீர்கள் அல்லவா?
ஆமாம் சாலையில் ஆதரவற்றவர்களாக இருப்பவர்களை அழைத்துச் செல்லும் போதே அவர்கள் எனது உறவினர்களாக பாவித்துதான் அழைத்து செல்வேன். அதே போல் மருத்துவமனையில் சேர்க்கும் போதும் அப்படித்தான் சிகிச்சை பலனின்றி அவர்கள் இறக்கும் பட்சத்தில் அனாதையாக விட்டுவிட்டு வர மனம் ஒப்புக்கொள்வது இல்லை . அதனாலேயே இறந்தவர்களையும் நானே நல்லடக்கம் செய்து வருகிறேன் . ஆரம்ப காலகட்டத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் பொறுப்பை வேறு ஒரு அமைப்பினரிடம் கொடுத்து வந்தேன். அறக்கட்டளை துவக்கிய பிறகு என்னோடு பலர் கைகோர்த்து வருகின்றனர். அதில் ஒருவர் வைரமணி இவர் மயான தொழிலாளி ஆதரவற்று இறப்பவர்களை அடக்கம் செய்ய இவர் பெரிதும் உதவியாக இருந்து வருகிறார் .
6) மறக்க முடியாத பாராட்டு என்று எதைச் சொல்வீர்கள்....?
என்னை பொறுத்தவரை என்னுடைய மகிழ்ச்சியைக் காட்டிலும் மற்றவர்களின் மகிழ்ச்சியில் தான் நாம் மகிழ்ச்சிக் கொள்கிறேன் . சாகர் என்பவர் நேபாளத்தில் இருந்து தமிழகத்தில் வேலை பார்க்க வந்தவர் . இவருக்கு திருமணம் ஆகி குழந்தையும் உள்ளது . இந்நிலையில் தமிழகத்தில் கோவையில் மனநிலை பாதித்த நிலையில் இரண்டு வருடமாக இருந்தார் . ஒரு நிலையில் அவர் பூரண குணம் அடைந்து , தனக்கு மனைவி, மக்கள், தாய், தந்தை, சகோதரர் என உறவுகள் இருந்தும் , சாகர் இந்தியர் இல்லாத காரணத்தினாலும், நேபாளி என்ற தக்க ஆவணம் இல்லாததாலும், மனநோய் பாதிக்கப்பட்டு இருந்தமையாலும் இவரை விடுவிக்க முடியாத நிலை காப்பக நிர்வாகத்திற்கு இருந்தது.
இவர் சொன்ன முகவரியும் அடையாளமும் கண்டுபிடிப்பதற்கு பெரும் சவாலாக இருந்தது . பெரும் முயற்சிக்கு பிறகு அவரது சகோதரரின் தொடர்பு கிடைத்தது உடனடியாக அவரை கோவைக்கு வரவழைத்து அவருடன் சாகரை அவரது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்தேன். இதில் ஒரு சிக்கலான விஷயம் என்ன என்றால் சாகர் காணவில்லை என்பதால் அவர் இறந்திருக்க கூடும் என்று சாகரின் மனைவிக்கு வேறு திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் தான் எங்கள் முயற்சி வெற்றி பெற்று சாகர் அவரது சொந்தங்களுடன் இணைந்தார் .
சாகர் கிடைத்த மகிழ்ச்சியில் நேபாளத்தில் இருந்து சாகரின் மனைவி , தாய் தந்தை என உற்றார் உறவினர் எனக்கு தொடர்புகொண்டு கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்துக் கொள்ளும்பொழுது அது புரியாத பாஷையாக இருந்தபோதும் அதில் இருந்த அவர்களின் மகிழ்ச்சியை என்னால் நன்கு உணர முடிந்தது. http://eerammagi.blogspot.in/2013_06_01_archive.html
இந்த மகிழ்ச்சி எனக்கு எந்த ஒரு விருதுக்கும் இணையாகாதே.
7) உங்கள் குடும்பம் பற்றி, அவர்கள் உங்களது பணிகளுக்கு உறுதுணையாக உள்ளார்களா?
ஆரம்பத்தில் என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் விருப்பம் இல்லாமல் தான் இருந்தது . காலப்போக்கில் இந்த பணியின் உன்னதத்தையும் மற்றவர்கள் அடையும் பலனையும் உணர்ந்து கொண்டனர். அம்மா அப்பா மட்டும் தான் கொஞ்சம் வருத்தப்படுவார்கள் . எப்போதும் சமூகப்பணியே முழு மூச்சாக இருந்து விட்டால் உன் குடும்பத்தை யார் காப்பாற்றுவார்கள் . தொழிலை கவனிக்க வேண்டிய காலத்தில் இப்படி சமூகம் என்று பார்த்துக் கொண்டு இருக்கிறாயே என்பார்கள் . என்ன இருந்தாலும் பெற்றவர்கள் என்றால் கொஞ்சம் அக்கறை அதிகமாகத்தானே இருக்கும். அதே நேரத்தில் ஆதரவற்றவர்களின் நலன் மேம்படுவதை பார்க்கும் பொழுதும் , மற்றவர்கள் என்னுடைய செயல்களை பெருமையோடு சொல்லும் பொழுதும் அம்மா அப்பா அடையும் மகிழ்ச்சிக்கு அளவு இல்லை.
8) உங்கள் இத்தகைய பணிகளுக்கு சக மனிதர்கள் மற்றும் சமூகத்தின் வரவேற்பு எப்படி உள்ளது?
உடல் முழுதும் அழுக்கு, தலை முடி ஜடை விழுந்து இருக்கும் அதிக துர்நாற்றம் வீசிய படி இருப்பார்கள். அவர்களை நான் பொறுமையாக நெருங்கி அவர்களுக்கு முடிதிருத்தம் செய்து , குளிக்க வைத்து , மாற்று உடை உடுத்தி அதன் பிறகு அழைத்துவர வேண்டும். இப்படி நான் செய்யும் பொழுது கவனிக்கும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் . என்னைப்பார்த்து பொதுமக்கள் பலர் தங்களது வீட்டில் உள்ள பெரியோர்களையும் நல்லபடியாக பார்த்துக் கொள்கின்றார்கள் என என்னிடமே சிலர் சொல்லி இருக்கிறார்கள் . இப்போது சில ஊர்களில் என்னை சிலர் பின்பற்ற துவங்கி இருக்கிறார்கள் . அது மட்டும் இல்லாமல் ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்காக ஆடிட்டர், கணக்காளர், மயான தொழிலாளி என பலரும் தங்களை முடிந்தவரை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.
9) ஈர நெஞ்சம் அறக்கட்டளை பற்றிச் சொல்லுங்கள்...
அறக்கட்டளை ஆரம்பிப்பதில் எல்லாம் எனக்கு அதிக விருப்பம் இல்லை. என்னுடைய பணிகளை அவ்வப்போது முகநூலில் பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக பதிவிட்டு வந்தேன். அதைப் பார்த்து முக நூல் நண்பர்கள் பலர் என்னை தொடர்புகொண்டு கண்டிப்பாக உங்கள் பணி அறக்கட்டளையின் கீழ் நடத்தியாக வேண்டும் உங்களது பணி அவ்வளவு சாதாரணமானது இல்லை என்று பலவாறாக அறிவுரைகள் கூற அவர்களின் அன்புக்கட்டளை மீறமுடியாமல் , 23/04/2012 அன்று அறக்கட்டளையாக அரசு பதிவு செய்து, அன்று முதல் முறையான கணக்குகள் சமர்ப்பித்து வருகிறோம் . வருமானவரி விலக்கான 80/G சான்றும் பெறப்பட்டு உள்ளது. இந்த அறக்கட்டளையில் சென்னையை சேர்ந்த சுரேஷ் , கடலூரை சேர்ந்த பரிமளா , கோவையில் தபசு , மற்றும் நான் நிர்வாகியாக இருக்கிறோம். ஆதரவற்றவர்களே இருக்கக் கூடாது என்பதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் இந்த அறக்கட்டளை .
தாய் தந்தை இழந்த குழந்தைகள் 10 குழந்தைகளை தத்தெடுத்து காப்பகத்தில் சேர்த்து கல்வி முதல் கொண்டு அனைத்தும் ஈரநெஞ்சம் பராமரித்துவருகிறது.
ஆதரவற்ற பெண்கள் இரண்டு பேருக்கு திருமணம் செய்து வைதுருக்கிறது ஈரநெஞ்சம் .
கோவை RS.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி இரவு தாங்கும் மையத்தில் மனநலம் பாதித்தவர்கள் பலரை பாதுகாத்து வந்தனர். அந்த மையத்தில் மனநலம் பாதித்தவர்கள் பாதுகாக்க அனுமதி இல்லை என்ற காரணத்தினால் அவர்களுக்கு மாற்று இடம் எங்கும் கிடைக்க வில்லை. அவர்களை ஈரநெஞ்சம் அறக்கட்டளை பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமத்தித்து சிகிச்சைக்கு வழி செய்தது. இதனால் பலரும் குணமாகி அவர்களுடைய உறவினருடன் இணைந்தனர்.
இதனை தொடர்ந்து கோவையில் RS.புரத்தில், 15/A மேற்கு ஆரோக்கியசாமி சாலையில் மாநகராட்சி முதியோர் காப்பகம் ஒன்று ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரித்து வருகிறது இதில் ஆதரவற்ற முதியவர்கள் 50 பேரை பாதுகாத்து பராமரித்து வருகிறது.
10) இதற்கான நிதி ஆதாரங்களை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?
வருமானவரி விலக்கான 80/G சான்றும் பெற்று உள்ளோம். ஆனாலும் இதுவரை நிதி கொடுங்கள் என்று யாரிடமும் கேட்டது இல்லை. நெருங்கிய நண்பர்களிடம் மற்றும் இந்த பணியின் உன்னதத்தை உணர்ந்தவர்கள் தாமாக முன் வந்து நிதி அளிப்பவர்களிடம் மட்டும் வாங்கிக் கொள்கிறோம் . வருவது குறைவுதான் ஆனால் செலவு அதிகம். இதனால் கையில் இருப்பதை போட்டு பணி செய்து வருகிறேன்.
11) நீங்கள் பெற்ற விருதுகள், அங்கீகாரங்கள்...
பல வருடம் தான் யார் என்றே தெரியாமல் வீதியில் கிடப்போரை மீட்டு அவர்கள் குணமடைந்து பிறகு அவர்களுடைய உறவினர்களை தேடி கண்டுபிடித்து அழைத்து வரும் சொந்தங்களோடு இணையும் போது அவர்கள் அடையும் நிம்மதியும் மகிழ்ச்சியுமே மிகப்பெரிய விருதாக நினைக்கிறேன். இருந்தும் பல அமைப்புகள் என்னை மேடையில் கவுரவப்படுத்தி இருக்கிறார்கள். அங்கிகாரம் என்பது அரசாங்க அளவில் இருந்து எதுவும் இல்லை என்றாலும் பலரும் மனதார வாய் நிறைய வாழ்த்துவதில் நான் பிறந்த பலனை அடைந்த திருப்தி அடைகிறேன்.
12) உங்களைப் பற்றிய பொதுவான விவரங்கள்.. (படிப்பு, கல்வி, குடும்பம், தொழில், பிற ஆர்வங்கள், பொழுதுபோக்குகள் பற்றி...)
கோவையில் மோட்டார் உதிரிபாகம் தயாரிக்கும் சிறுதொழில் தான் எனக்கு . போதிய வருமானம் என்பது அவ்வப்போது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு மட்டும் இருக்கும். படிப்பில் அதிக ஆர்வம இருந்திருந்தால் ஒருவேளை பட்டப்படிப்பெல்லாம் முடித்து பெரிய நிறுவனம் அமைத்திருப்பேன். நல்லவேளை பள்ளிப்படிப்பை மட்டும் முடித்ததால் சமூக சேவை செய்ய நேரம் அமைந்துவிட்டது. அப்பா பழனிசாமி பயம் கலந்த மரியாதை , அம்மா காளியம்மாள் என்ன ஒரு பிரச்சனை என்றாலும் அம்மாவிடம்தான் கொட்டி தீர்ப்பேன். மூன்று அக்கா , ஒரு அண்ணன் , எல்லோருக்கும் திருமணம் முடிந்து இரண்டாவது அக்காவை தவிர எல்லோரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள் . மனைவி கலைச்செல்வி, மகள் சம்விதா. இவர்களின் அனுமதி இல்லாமல் என்னால் என்ன செய்து விட முடியும் சொல்லுங்க பார்கலாம் . ஞாயிற்று கிழமைகளில் இவர்களுகேன்று பொழுதை கழிக்கவில்லை என்றால் எனக்கு மனம் நிலையாக இருக்காது . குடும்பத்தையும் கவனிக்கவேண்டும் அப்போதுதான் வாழ்க்கை இனியதாக இருக்கும்.
எழுத்துப்பணியில் எனக்கு ஆர்வம் அதிகம். பல பத்திரிக்கைகளில் என்னைப் பற்றி சிலர் எழுதி உலகமே என்னைப் பற்றி அறிந்ததுபோல , நான் கண்ட சில சிறந்த மனிதர்களைப் பற்றி அவ்வப்போது கட்டுரை எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்புவேன், அதுவும் பிரசுரம் ஆகும். அப்படி வெளியுலகிற்கு அறிமுகம் ஆனவர்களுக்கு விருதுகளும் கிடைத்துள்ளது. அதுவும் கூட என்னை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
பிற விவரங்கள் ஏதேனும் குறிப்பிட வேண்டுமென்றால் அது பற்றி....
என்னுடைய முகவரி:
P.மகேந்திரன்
10/G2 தாரணி நகர் , 8 வது வீதி
கணபதிபுதூர்
கோயம்புத்தூர் 641006
ஆதரவற்றவர்களே இல்லாத உலகம் வேண்டும் .
நல்லதோர் இயற்கை சூழலில் மருத்துவமனையோடு கூடிய ஆதரவற்றவர்களுக்கான ஒரு தனி இடம் அமைக்க வேண்டும் . இப்படி காப்பகங்கள் உருவாக்குவது தவறு என்றாலும் சூழ்நிலையின் காரணமாக தனிமையில் தத்தளிப்பவர்களுக்கு சொந்தங்கள் கிடைக்க வழி வகை செய்யுமே என்ற எண்ணம் தான் ..!