Wednesday, September 07, 2016

ஒரு மலரின் வாழ்க்கை ஒருநாள் தான் என்றாலும் மணம் வீசி மகிழ்விக்கிறது

ஒரு மலரின் பயணம்  :
~~~~~~~~~~~~~~~~
ஒரு மலரின் வாழ்க்கை ஒருநாள் தான் என்றாலும் மணம் வீசி மகிழ்விக்கிறது .
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


இறக்கும் நேரம் தெரிந்து விட்டால்
வாழும் காலம் முழுவதும்
நரகம் ஆகிவிடும் ...
அதனால்தான் இறக்கும் நேரத்தை
இறைவன் மறைத்து வைத்தான்.

பிறக்கும் அனைத்து உயிர்களுக்கும் மரணம் என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று தான் . ஆனால் அந்த மரணம் எந்த ரூபத்தில் எப்போது வரும் என்று யார் அறிவார் ?

ஆனால் இங்கே ஒரு தேவதை தான் ஜனிக்கும் முன்பே இறக்கும் தேதியை குறித்து வைத்துக் கொண்டு ஜனித்தவள். ஆயினும் தான்
வாழும் நாட்களில் கலைக்காக தன்னை அர்பணித்துக் கொண்டு தான் வாழும் ஒவ்வொரு நாளினையும் கொண்டாடிக்கொண்டு இருக்கிறாள் .

கடலூர் மாவட்டம், சாவடி பகுதியை சேர்ந்த தம்பதியர் அமிர்தராஜ், ஜீவா. இவர்களது ஒரே மகள் ஏ.ஜே. ஏஞ்சலின் செரில், வயது 15. தந்தை அமிர்தராஜ் தனியார் ஊழியர். தாய் ஜீவா தனியார் பள்ளி ஆசிரியை.  இவர்கள் தங்கள் முதல் பெண்  குழந்தையை  ‘பெயர்’ தெரியாத ஒரு கொடூர நோயால் ஒரு வயதிலேயே பறிகொடுத்தார்கள் . அந்த குழந்தையின் இறப்பில் மருத்துவர்கள்  கொடுத்த மற்றொரு அதிர்ச்சியூட்டும் தகவல் , அடுத்ததும் பெண் குழந்தையே  பிறந்தால் இதே நோய் தாக்கும் என்பது தான் .

அமிர்தராஜ்  ஜீவா தம்பதியர்கள் மருத்துவர்கள் அறிவுறுத்தியதை மனதில் கொண்டு பயத்துடனே வாழ்ந்து வந்தார்கள் .  10 வருடம்  கழித்து  ஜீவா கருவுற்று 90 நாட்கள் கழித்து ஒரு பரிசோதனையில் கரு பெண் குழந்தை என்றும் அவளுக்கும் இதே கொடிய நோய் இருப்பதும்  மருத்துவர்கள் உறுதி படுத்தினர். மேலும் ஆறுதலாக  மருத்துவர்கள்  தற்போது தமிழகத்தில் வேலூரில் உள்ள CMC மருத்துவமனையிலும், சென்னை ராமசந்திரா மருத்துவமனையிலும் மட்டுமே  மருத்துவர்களும் சிகிச்சையும்  உள்ளது என்றனர். மேலும் இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் மருந்து மாத்திரை எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்  . இடையில் நிறுத்தக் கூடாது. அதுவும் உயிர் பிழைக்க  அல்ல மரண தேதியை தள்ளி போட மட்டுமே  என்றனர்.   குழந்தையின் மீது உள்ள ஆசையிலும் கடவுள் மீது உள்ள நம்பிக்கையிலும் கருக்கலைப்பு செய்யாமல் குழந்தை பெற்றனர்.

  இந்த நோயில், நான்கு வகை உள்ளது. ( இதிலும் அரிய வகை பாதிப்புதான் ஏஞ்சலின் செரிலுக்கு உள்ளது )  . இந்த நோய் இருந்தால், ரத்தத்தில் உள்ள உப்பு தன்மை சிறுநீரில் வெளியேறி விடும். சிறுநீரில் வெளியேறாமல் இருக்கவே, மாத்திரை சாப்பிட்டு வரவேண்டும். உடலில் ரத்தத்திலுள்ள வெள்ளை அணுவும் குறைவாக இருக்கும். மாத்திரை நிறுத்தி  விட்டால் ரத்தத்திலுள்ள வெள்ளை அணு குறைவாக இருக்கும் காரணத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்  , அதனால் வெளியிலிருந்து தாக்கும் நோய் பாதிப்பும் அதிகமாக இருக்கும். ஒரு கட்டத்தில், நீர்த்தன்மை முழுமையாக போய், வாந்தி பேதி ஏற்பட்டு  உயிழப்பு ஏற்படும் .  இந்த நோய் வந்து விட்டால் பூரண குணமடைய முடியாது மரணத்தை தள்ளி போடமட்டுமே தற்பொழுதுள்ள   சிகிச்சையில் முடியும்.

அமிர்தராஜ் மற்றும்  ஜீவா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டதால் அவர்களது பெற்றோர் வீட்டில் ஆதரவு இல்லை . மேலும்  போதிய வசதி படைத்தவர்கள் இல்லை என்றாலும் இருவரும் ஏஞ்சலின் செரில் பிறந்தநாள் முதல் தங்களது உழைப்பில்  பெரும் தொகையை தனது குழந்தைக்காக செலவிட்டு கவனித்து வருகிறார்கள் . அவளுக்கென்று எது விருப்பமோ அதில் இவர்களும் கவனத்தை செலுத்தி அவளுக்கு விருப்பமானது அனைத்தும் செய்து கொடுத்து வருகின்றனர்.

தற்பொழுது ஏஞ்சலின் செரில் வயது 15  ,  அவள் விருப்பப்படி பரத நாட்டியம், மேற்கத்திய நடனம், கிராமிய நடனம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, சிலம்பம் என கலைகள் பலவும் கற்றுக் கொண்டு பல மேடைகளை அலங்கரித்து வருகிறாள் .

கடலூர் செயிண்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி பள்ளியில் 11ம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறாள். படிப்பில் எப்போதுமே முதல் மாணவி தான். 

 

சமீபத்தில் IAS சகாயம் அவர்கள் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில்  ஏஞ்சலின் செரிலுடைய நடன நிகழ்ச்சி நடைபெற்றது . அதைப் பார்த்து சகாயம் அவர்கள் ஏஞ்சலின் செரில் பற்றியும் அவளது நடனத்தைப் பற்றியும் புகழ்ந்து இனி வரப்போகும் காலங்களில் எங்களது குழுவின் நிகழ்ச்சிகள் யாவிற்கும் ஏஞ்சலின் செரிலின் நடனம் கண்டிப்பாக இருக்கும் என்று  கூறியதும் ஏஞ்சலின் செரில் பெரும் உற்சாகம் அடைந்துள்ளாள்.

அது மட்டும் இல்லாமல் வைகை நண்பர்கள் உதவியால் மலேசியாவில் உள்ள தமிழ்  கலை சங்கம்  ஒன்றில்   ஏஞ்சலின் செரில் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடும் செய்து வருகிறது.

 

இந்தியாவில் டெல்லி மும்பை போன்ற நகரங்களில்  நடந்த கலை நிகழ்ச்சிகளுக்கு  இவளது நடனம்  சிறப்பு அந்தஸ்த்தை கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை .

எல்லாவற்றுக்கும் மேலாக கடலூரில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து அசத்தி வருகிறாள்.

 

மருத்துவ ரீதியான பல கஷ்டங்கள் தனக்கிருந்தும்  மரணத்தின் தேதி தெரிந்தும் அவற்றையெல்லாம் வென்று எப்போதும் சிரித்த முகத்துடனும் மற்றவர்களை உற்சாகமூட்டும்  வார்த்தை ஜாலங்களை கொண்டும்  கலகலவென சுற்றித்திரியும் இந்த தேவதையிடம் நாம்  கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம்.

ஏஞ்சலின் கூறும் போது, 
" வாழ்க்கை இவ்வளவுதான் தெரியும். நானும் வாழ்ந்து என்  கலையால் மற்றவர்களையும் மகிழ்வித்து பார்க்கலாம். நடனம் என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும் .  டாக்டர்கள் என்னை யோகா கத்துக்க  சொன்னாங்க , அதில்  எனக்கு அவ்வளவா ஆர்வம் இல்லை . நடனம் கத்துக்க  ஆசைப்பட்டேன் , அம்மா அப்பா அதற்கு முறையான குருக்களை கொண்டு எனக்கு கற்றுக் கொடுக்க ஏற்பாடும் செய்து கொடுத்தார்கள் . இப்போ நிறைய மேடைகளில் என்னுடைய நடன நிகழ்ச்சி நடந்து வருகிறது. என்னுடைய நடனத்தை பார்த்து என்னை பிறர் உற்சாகப்படுத்துவது  எனக்கும் என் பெற்றோருக்கும் மேலும் சந்தோஷத்தைக் கொடுக்கிறது . நான் இருக்கும் வரைக்கும் அவங்களை கண் கலங்காம பார்த்துக் கொள்ளணும் என்று ஆசை படறேன் . என்னுடைய மருத்துவ செலவிற்கே ஏகப்பட்ட கடன் வாங்கி இருக்காங்க அது கொஞ்சம் வருத்தமாக இருக்கு . நான் அழும் போதும் வலியால் துடிக்கும் போதும் என்னுடைய அம்மா அப்பா வருத்தப்படுவதை பார்ப்பது தான் என் மற்ற வலிகளை விட பெரும்  வலியாக  இருக்கும் . என்னுடைய வளர்ச்சியில்  மட்டுமே அவங்க பெரும் சந்தோஷப்படறாங்க . 

எனக்கு  என் வாழ்நாளில் ஒருமுறையாவது ராகவா லாரன்ஸ் மாஸ்டர் கூட சேர்ந்து டான்ஸ் பண்ணனும்னு ஒரு ஆசை இருக்கு . என் ஆசையை பற்றி அவருக்கு மெயில் கூட அனுப்பியிருக்கேன் .

( ""Ragava Lawrence uncle,
    நான் "ஏஞ்சல்" கடலூரில் இருந்து, கனவு காணுங்கள் என்ற கலாம் அவர்கள் கூறியதை போல் நான் கனவு காண்கிறேன் உங்களுடன் நடனமாட......
          Uncle நான் பரதம், கதக், கோலாட்டம், கும்மி, கிராமிய நடனம்,கரகம்,கோகாலி, பொய்க்கால் குதிரை,ஒயிலாட்டம் மற்றும் சிலம்பம் ஆடுவேன்.......
    உங்களுக்கு western பிடிககும் என்பதால் இப்போது அந்த வகுப்பிற்கும் போகிறேன் please uncle என் ஆசை கனவு எல்லாம் நீங்க தான்.
          என்னை பார்பீர்களா????"" ) 

இது தான் என்னுடைய மெயில்

 அவரிடம் போய் சேர்ந்ததான்னு தெரியல. இப்போது என்னைப் பற்றிய இந்த கட்டுரை மூலமாவது தெரிந்துக் கொண்டு என் ஆசையை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன். "

ஏஞ்சலினின் அம்மா ஜீவா கூறும் போது , " எங்களுக்கு எல்லாமே அவள் தாங்க . இவள் எப்போது கண் மூடுவாள் என்பது தெரியாது . ஆனால் அது வெகு தொலைவில் இல்லை என்பதை நினைச்சா ரொம்பவே கஷ்டமா இருக்கு .  அவளுடைய சந்தோஷம் தான் எங்களுக்கு இப்போதிருக்கும் ஒரே ஆறுதல் . அவள் இவ்வளவு சிறப்பு வாய்ந்தவளா வருவாள் என்று நினைத்தும் கூட பார்க்கவில்லை. சில மருத்துவர்கள் இவள் இன்னும் உயிரோடு இருப்பதே ஆச்சர்யமாக இருக்கிறது என்பார்கள் . எல்லாம் கடவுளின் ஆசிர்வாதம்.  எங்களுக்கு நிறைய கடன் இருக்கிறது மாதத்திற்கு இவளுடைய மருத்துவ செலவே 10,000 தாண்டும் போதிய வருமானம் இல்லை என்றாலும் இவளுக்காக நாங்கள் இன்னும் எவ்வளவோ செய்யலாம். தமிழக அரசிடமும பிற தன்னார்வலர்களிடமிருந்தும்   இவளுக்கு என்று தனி சலுகைகளை எதிர்பார்க்கிறோம் .  அது  இவளுடைய கலை வளர்ச்சிக்கும் மன மகிழ்ச்சிக்கும் இன்னும் கொஞ்சம் ஊக்கமாக இருக்கும்  என்பது திண்ணம் " .

இந்த சின்னஞ்சிறு பெண் வாங்கியிருக்கும் பட்டங்களில் சில :-
நாட்டிய பேரொளி
நாட்டிய தேவதை 
நடன மயில்
நாட்டிய சுடர்மணி
பெஸ்ட் சைல்ட்
கிராமத்து மயில்
வளர் இளம் மணி
Inline image 1
இந்த தேவதையை நீங்களும் ஊக்கப்படுத்த எண்ணினால் தொடர்பு கொள்ளுங்கள் 9092142475 ஜீவா ( நாட்டிய தேவதை ஏ.ஜே. ஏஞ்சலின் செரில் அவருடைய தாயார் )

~ஈரநெஞ்சம்