Wednesday, October 02, 2013

தளர்ந்த வயதிலும் தளராத நம்பிக்கை ~ மகேந்திரன்





*நம்பிக்கைதான் வாழ்க்கை. 
இன்றைய கால கட்டத்தில் காதல் தோல்வி, தேர்வில் தோல்வி, தொழிலில் நஷ்டம், என கொஞ்சமும் அர்த்தமற்ற காரணம் கொண்டு தம் உயிரை மாய்த்துக்கொள்ளும் மூத்த தலை முறை முதல் இளம் தலைமுறை


யினர் வரை நாம் அன்றாடம் பார்த்திருப்போம். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாத நிலையில் வீட்டை விட்டு சென்றவர்களோ ஏராளம். இப்படி பட்டவர்களுக்கு எல்லாம் ஏதோ ஒருவிதத்தில் விடுதலை என்று வைத்துக்கொள்வோம், ஆனால் இவர்களை நம்பி இருப்பவர்களின் நிலை. (?).... போராடி வெற்றி பெறுவதுதான் வாழ்க்கை.

துன்பங்கள் இருந்தாலும் அதையும் தாண்டி பரந்து விரிந்த ஒரு உலகம் எப்போதும் காத்திருக்கும் எனும் தன்னம்பிக்கை நிறைந்தவர்களுக்கு, அப்படி ஒரு நம்பிக்கையை, உண்மையான பாசத்தை, தாய்மையை, விட்டுக்கொடுத்து வாழும் பண்பை தனது தள்ளாத 90 வயதில் நமக்குகற்று தருகிறார் இந்த தெய்வத்தாய் ரங்கம்மாள் பாட்டி.

“மரத்தை வைத்தவன்தான் தண்ணீரை ஊற்றவேண்டும்” என்பார்கள் இந்த சொல்லிற்கு ஏற்ப மரம்போல இருக்கு 60 வயது குழந்தைக்கு இன்னும் தாயாக அரவணைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் இந்த தாய்.

கோவையில் உள்ள ஒரு சிறிய கிராமம் சோமனூர், அங்கு இவருக்கு ஐந்து மகன்களும் ஒரு மகளும். கணவர் இறந்து நாற்ப்பது வருடம் .தற்போது 90 வயதைத் தாண்டி இன்னும் தாயாக இருக்கும் ரங்கமாள் பாட்டி . இவரை பற்றிதான் சொல்லப்போகிறேன்.

ஒரு குழந்தையை கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வளர்ப்பதற்கே படாத பாடு படும் நிலையில் ஆறு குழந்தைகளையும் தனக்குத் தெரிந்த வெள்ளை அடிக்கும் வேலையில் வரும் சொற்ப வருமானத்தில் அனைவரையும் ஓரளவிற்குப் படிக்கவைத்து நல்ல இடத்தில திருமணங்களையும் முடித்து வைத்து ஒய்வு எடுக்கப்போகும் காலத்தில், தனது கடைசி மகன் சுப்ரமணி இவருக்கு தற்போது 60 வயது. சுப்ரமணி தாத்தாக்கு 50 வயது இருக்கும்போது அவருக்கு ஏற்ப்பட்ட பக்கவாதத்தினால் நடக்க கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் தான் பார்த்துவந்த கட்டிட வேலையும் பார்க்க முடியாமல் போனது. வேலை இல்லை என்றால் வருமானம் எப்படி வரும்? வறுமை கஷ்டம் எல்லாம் தலை தூக்க துவங்கின . இனி இவரோடு இருந்தால் தன் குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிவிடும் என்று தன் இரண்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி விட்டார் சுப்பரமணி தாத்தாவின் மனைவி பாக்கியம்.

அதன் பிறகு பத்துமாதம் வயிற்றில் சுமந்தவள் காடுபோகும்வரை சுமந்துதான் ஆகவேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டது ரங்கம்மாள் பாட்டிக்கு. தாய்க்கு பின் தாரம் என்பார்கள். அந்த தாரமும் விட்டு போன பிறகு தாரத்துக்கு பின் மீண்டும் தாயாகி இருக்கிறார் ரங்கம்மாள் பாட்டி. பத்து மாதம் வயிற்றில் சுமந்தாள். பத்து வயதுவரை இடுப்பில் சுமந்தாள். அதுமட்டும் போதாது என மகனை இப்போது காலம் முழுதும் தோளில் சுமந்து, தன் கரங்களில் அவரது வாழ்க்கையை ஏந்தி காத்து வருகிறார். மிக கஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு மனைவி மற்றும் குழந்தைகளையும் பிரிந்து வாழும் இவருக்கும் இவரை அரவணைத்து வரும் இந்த தாய்க்கும் இவர்களது உறவினர்களும் உதவ முன்வரவில்லை. இதுதான் உலகம். நன்றாக வாழும் வரை சுற்றி நிற்கும் சுற்றம், கஷ்டம் என வரும்போது விட்டு செல்லும் சுற்றம், சுற்றம் மட்டுமின்றி சொந்தமாக வந்த மனைவியும் விட்டு போன பின் ஒரு கட்டத்தில் எந்த வருமானமும் இல்லாமல் பிச்சை எடுக்கும் சூழ்நிலைக்கு இவர்கள் தள்ளப்பட, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மூலமாக இவர்கள் கோவையில் உள்ள ஒரு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். அங்கும் இவர் தனது மகனை தானே கவனித்து பாராமரித்து வருகிறார்.

90 வயதான தாய் 60 வயதான குழந்தை பாசத்தின் உச்சம் இவர்களிடம் நேரில் காணும்போது வாழ்க்கை எவ்வளவு அர்த்தமுடையது என்பது புரியவருகிறது. ஆனாலும் யாருக்காக யார் இவர்கள் உயிர் சுமந்து இருக்கின்றார்கள் என விடையை தேடும் போது . மனிதர்களுக்கு மனித வாழ்வின் அர்த்தத்தை உணரவைக்கும் அவதாரம் என்பது விளங்கவைக்கிறது.

~மகேந்திரன்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

2 comments:

Anonymous said...

இந்திய வாழ்வின் வேர் என்பது இந்த சமூகப் பிணைப்பிலும், தன்னலமற்ற பாசத்திலும், எளிமையான வாழ்க்கையிலும் தான் உள்ளது. இத்தகைய ஒரு தாய், இவ் வயதில் உள்ள மகனை அரவணைக்கும் செய்தி நெஞ்சை நெகிழ வைப்பதோடு, நாம் அனைவரும் இன்று பொருளியல் சார்ந்த பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில் வாழ்வின் எதார்த்த அழகியலையும், அன்பு, விட்டுக் கொடுப்பு, அரவணைப்பு, நெருக்கம் போன்ற உன்னத மனித பண்புகளை இழந்து நிற்கின்றோம் என்பது வேதனை தருகின்றது. :) இவ் பாட்டி அன்னைக்கும் அவர் தம் மகனுக்கும் தன்னார்வ தொண்டு உதவிகள் கிடைக்கச் செய்ய பெற வேண்டும் என விழைகின்றேன்.

Anonymous said...

இந்திய வாழ்வின் வேர் என்பது இந்த சமூகப் பிணைப்பிலும், தன்னலமற்ற பாசத்திலும், எளிமையான வாழ்க்கையிலும் தான் உள்ளது. இத்தகைய ஒரு தாய், இவ் வயதில் உள்ள மகனை அரவணைக்கும் செய்தி நெஞ்சை நெகிழ வைப்பதோடு, நாம் அனைவரும் இன்று பொருளியல் சார்ந்த பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில் வாழ்வின் எதார்த்த அழகியலையும், அன்பு, விட்டுக் கொடுப்பு, அரவணைப்பு, நெருக்கம் போன்ற உன்னத மனித பண்புகளை இழந்து நிற்கின்றோம் என்பது வேதனை தருகின்றது. :) இவ் பாட்டி அன்னைக்கும் அவர் தம் மகனுக்கும் தன்னார்வ தொண்டு உதவிகள் கிடைக்கச் செய்ய பெற வேண்டும் என விழைகின்றேன்.

Post a Comment