Showing posts with label ஈரநெஞ்சம். Show all posts
Showing posts with label ஈரநெஞ்சம். Show all posts

Saturday, August 02, 2025

*வாரிசுச் சான்று* காலங்களைக் கடந்து வந்த உறவுப் பாலம்

*வாரிசுச் சான்று* காலங்களைக் கடந்து வந்த உறவுப் பாலம்



“வாரிசுச் சான்றிதழ்... சிலருக்கு அது வெறும் அரசாங்க ஆவணம் தான். ஆனால் அறிவழகனுக்கு அது – தந்தையிடமிருந்து கிடைத்த இறுதி ஆசீர்வாதம்!”

கந்தசாமி தன் வாழ்நாள் முழுவதும் ஒரு உழவனாய், வியர்வைத் துளிகளை நிலத்தில் சிந்தி, கடினமாக உழைத்து ஒரு பைசாவைக் கூட வீணாக்காமல் பாடுபட்டு சேர்த்த சொத்துகளைப் பிள்ளைகளுக்கு நியாயமாக பிரித்துக் கொடுத்திருந்தார்.

அவருக்கு ஐந்து பிள்ளைகள் – மூன்று மகள்கள், இரண்டு மகன்கள். தன் உழைப்பால் வந்த செல்வத்தைப் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து பிரச்சனை இல்லாமல் பிரித்துக்கொள்ள வேண்டும்; தனது காலத்துக்கு பின் சண்டை சச்சரவுகள் வரக்கூடாது என்பதில் உறுதியுடன் இருந்தார். ஆனால், விதி வலியது. அவரது இரண்டாவது மகள் எதிர்பாராத விதமாக முன்னரே இவ்வுலகைவிட்டு மறைந்தார்.

கந்தசாமியின் மறைவுக்குப் பின், எஞ்சியிருந்த இரண்டு மகள்களும், மூத்த மகனும்,
"அப்பா நமக்கு தரவேண்டிய சொத்துக்களை ஏற்கனவே பிரித்துக் கொடுத்து விட்டார். இனி அப்பா பெயரில் இருந்து நமக்கு எதுவும் வர வேண்டியது இல்லை. வாரிசுச் சான்றிதழ் என்பது வெறும் காகிதம்; அதற்கான தேவையும் இல்லை; அலைந்து திரிந்து வாங்க வேண்டிய அவசியமும் இல்லை என்று கூறி ஒதுங்கிக்கொண்டனர்.

அவர்களின் பார்வையில், பாகப்பிரிவினை முடிந்த பிறகு, ஒரு புதிய ஆவணம் பெறுவது அவசியமற்ற ஒன்றாக தோன்றியது. ஒருவேளை, தங்கள் தந்தையின் பெயரில் வங்கியில் நிறைய பணமோ வேறு எதுவும் சொத்துகளோ இருந்திருந்தால், இந்தச் சான்று வாங்க ஆர்வம் காட்டி இருப்பார்களோ என்னவோ? சொத்துக்கள் அவரவர் பெயரில் வந்துவிட்டாலும் கூட என்றேனும் ஒரு நாள் இந்த சான்று தேவைப்படலாம் என்பதும் அவர்களுக்கு புரியவில்லை.

ஆனால், இளைய மகன் அறிவழகனின் மனசு அத்தனை சீக்கிரம் ஒப்பவில்லை. அவனுக்கு அந்தச் சான்றிதழ் வெறும் காகிதம் அல்ல, ஒரு குடும்பத்தின் வரலாறு ஒரு தலைமுறையின் அடையாளம் 

 கந்தசாமி என்ற மனிதனின் வேர்களும் விழுதுகளும் இவர்கள்தான் என்று உலகுக்கு காட்டக்கூடிய அதிகாரப்பூர்வமான ஆவணம் என்பதை உணர்ந்து எப்படியாவது தன் தந்தைக்கு வாரிசு சான்றை வாங்கி விட வேண்டும் என்று அறிவழகன் உள்ளம் உருகினான்.

 தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரது பெயரும் இடம்பெறும் அந்தச் சான்று தான் தன் அப்பா கொடுத்ததிலேயே மிகப்பெரிய சொத்து என்று நம்பினான். 

வாரிசுச் சான்றிதழ் பெறுவது அறிவழகனுக்கு ஒரு தவம் போலவே இருந்தது. அறிவழகனின் எந்த முயற்சிக்கும் மற்ற மூன்று பிள்ளைகளும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை 
 உடன்பிறந்தவர்கள் தங்கள் அடையாள அட்டைகளை வழங்க மறுத்தனர். அவர்களுக்கு அதன் உண்மைத் தேவை புரியவில்லை.
"ஒற்றுமை இல்லை – ஆதாரங்கள் இல்லை – ஆதரவும் இல்லை" என்று அவர்கள் கைகழுவினாலும், அறிவழகனின் முயற்சி ஓயவில்லை.

தந்தையின் மீதான அன்பு, இந்தச் சான்றிதழைப் பெற்றே தீர வேண்டும் என்ற வைராக்கியமாக அவன் நெஞ்சில் வேரூன்றியது.

அண்ணன், அக்காக்களுக்குத் தெரியாமல், கண்ணீரும் வியர்வையுமாய் பல இடங்களுக்கு அலைந்தான். ஒரு துப்பறிவாளனைப் போல, வீட்டின் மூலை முடுக்குகளில் எப்போதோ எதற்காகவோ விட்டுச்சென்ற அவர்களின் அடையாள அட்டைகளின் நகல்களைத் தேடிப் பிடித்தான்.

இந்தத் தேடலின் போது 
தந்தையுடனும், குடும்பத்தினருடனும் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படங்கள், பள்ளிக் காலச் சான்றிதழ்கள், தந்தையின் கையெழுத்துகள் பதிந்த பழைய கடிதங்கள் என ஒவ்வொரு துகளையும் தேடித் திரட்டினான்.

ஜெராக்ஸ் நகல்கள் கூட அவனுக்குத் தந்தையின் நினைவுகளாய், உறவுகளின் சுவாசமாய் தோன்றின. ஒவ்வொரு தாளிலும் தன் குடும்பத்தின் உயிர் துடிப்பதை உணர்ந்தான்.

கிடைத்த ஆவணங்களை முறையாகத் தயார் செய்து, நம்பிக்கையுடன் வருவாய்த்துறை அலுவலர்களை பார்க்கச் சென்றான் அங்கே இருந்த அதிகாரி அறிவழகன் சமர்ப்பித்த ஆவணங்களைத் தீவிரமாக ஆராய்ந்தார்.

இவை எல்லாமே நகல்களாக இருக்கிறதே? அசல் ஆவணங்கள் இல்லையா? அரசு விதிகளின் படி அசல் ஆவணங்கள் அவசியம் என்று விண்ணப்பிக்கும் இடத்தில் ஆரம்பித்து உயர் அதிகாரி வரை திருப்பி அனுப்பினர். 

ஏன் உங்களுடன் பிறந்தவர்கள் அசல் ஆவணங்களை தர மறுக்கிறார்கள், உங்களுக்குள் ஏதாவது சொத்து பிரச்சனையா, நீங்கள் சொல்லும் வாரிசு விவரங்கள் உண்மைதானா என்று அறிவழகனை சந்தேக கண்ணோட்டத்தோடு பார்த்தார்கள்.

அறிவழகன் கண்களில் நீர் அரும்பியது.

> “ஐயா… இந்த வாரிசு சான்றிதழில்,
எங்கள் அப்பாவின் முகம், மனம், விருப்பங்கள் — எல்லாம் நான்கே வரிகளில் தெரிகிறது.
 தன்னுடைய பிள்ளைகள் நால்வரும் ஒற்றுமையோடு இருக்கணும் என்பதே அவருடைய ஒரே ஆசையாக இருந்தது.
ஆனால்... காலம் அவருடைய ஆசையை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து விட்டது.


 இந்த சான்றிதழில் 
அவருடைய எல்லா பிள்ளைகளின் பெயர்களும் ஒரு வரிசையில், ஒரே ஆவணத்தில் இருக்கும் போது, தன்னுடைய பிள்ளைகள் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற அவருடைய ஆசை இங்கேயாவது நிறைவேறட்டும் என்று அரசு அலுவலர்களிடம் மன்றாடினான். என் தந்தையின் வாரிசு பற்றி நான் அளித்த விவரங்கள் அனைத்தும் உண்மை, எங்கு வேண்டுமானாலும் விசாரித்துக் கொள்ளலாம் என்று உறுதிப்பட தெரிவித்தான்.

இந்த விண்ணப்பத்தில் நான் குறிப்பிட்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் உண்மையே இதில் ஏதேனும் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் அதற்கு முழு பொறுப்பையும் நான் ஏற்கிறேன், மேலும் இந்த அரசு ஆவணத்தை தவறான முறையில் பயன்படுத்த மாட்டேன் என்று உறுதிமொழி எழுதிக் கொடுத்த பிறகே அவனது மனுவை ஏற்றுக் கொண்டார்கள்.

 பொதுவாக சொத்துக்கள் பணம் இவற்றை பெறுவதற்காகத்தான் வாரிசு சான்று வாங்க பலரும் வருவார்கள். என் அப்பாவின் நினைவாக இந்த வாரிசு சான்றை ஒப்புதல் அளியுங்கள் என்று அறிவழகன் பரிதாபமாக கேட்டபோது அறிவழகனின் மனநிலையை அந்த விசாரணை அதிகாரி புரிந்து கொண்டார்.

அந்த உணர்வை மனதில் ஏற்றி, தயக்கமின்றி வாரிசுச் சான்றிதழ் வழங்க ஒப்பமிட்டார்கள்.

 வருவாய்த் துறையின் அனைத்து படிநிலைகளையும் கடந்து ஒரு வழியாக வாரிசு சான்று அறிவழகன் கைக்கு வந்து சேர்ந்தது. 

அதில், இறந்த அக்காவின் பெயரும், தன் தந்தை சிறுபிள்ளையாக இருக்கும் போது 70 வருடங்களுக்கு முன் மறைந்துபோன தாத்தா-பாட்டியின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.

அவர்களின் பெயரைக் கூட இன்று நினைத்துப் பார்க்க யாரும் இல்லாத சூழலில், அந்தச் சான்றிதழில் அவர்களின் பெயர்கள் மிளிர்வது அறிவழகனை மெய்சிலிர்க்க வைத்தது.

 மேலும் அந்தச் சான்று அறிவழகன் குடும்ப வரலாற்றின் சின்னமாக, உறவுகளின் பாலமாக மாறியது.

தனியே நின்று போராடி, தனது குடும்பத்தின் அடையாளத்தை கையில் கொண்டுவந்த அறிவழகன், அந்தச் சான்றிதழை வாழ்நாள் முழுக்க தந்தையின் ஆசீர்வாத சுடராக ஏந்திக்கொண்டான்

 அது வெறும் சான்றிதழ் அல்ல — காலங்களைக் கடந்து வந்த உறவுப் பாலம்!

~ மகேந்திரன்

Friday, May 23, 2025

சொல்லின் நாகரிகம் — “பிராமணர்” Vs “பார்ப்பனர்”

> சொல்லின் நாகரிகம் — “பிராமணர்” Vs “பார்ப்பனர்”


மொழி என்பது வெறும் வார்த்தைகளின் தொகுப்பல்ல; அது ஒரு சமூகத்தின் எண்ணங்கள், உணர்வுகள், நாகரிகம் மற்றும் பண்பாட்டின் பிரதிபலிப்பாகும். ஒரே சொல், வேறுபட்ட சூழல்களில் வேறுபட்ட உணர்வுகளைத் தூண்டக்கூடும். சில சொற்கள் மரியாதைக்குரியவையாக இருக்கலாம்; சில நேரங்களில் அதே சொல் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்து எள்ளலாக ஏற்கப்படும்.

"பிராமணர்" மற்றும் "பார்ப்பனர்" என்ற இரு சொற்களின் பயன்பாடு இதற்குச் சிறந்த உதாரணம்.
இந்த இரு சொற்களின் உண்மை உருவும், சமூக மனநிலையுடன் ஏற்படும் தாக்கங்களும், எது நாகரிகம் எனும் கேள்விக்கான நுட்பமான பதிலும் பற்றிய ஒரு சுருக்கமான சிந்தனையை இந்தக் கட்டுரைச் சொல்லுகிறது.


> சொல்லின் நாகரிகம் — சொல்லின் மரியாதையும் மனநிலையும்

மொழியில் ஒரு சொல் துல்லியமான பொருளைக் கொடுப்பது முக்கியம் தான். ஆனால் அதே சமயம் அந்தச் சொல்லின் பாவனை எப்படி இருக்கிறது என்பதும் நாகரிகத்தின் ஒரு அளவுகோல். "பிராமணர்" மற்றும் "பார்ப்பனர்" என்ற சொற்கள் இதற்குப் பதிலளிக்கின்றன.

பிராமணர் – மரியாதைக்குரிய மரபுச் சொல்

சமஸ்கிருதத்தின் “ப்ரஹ்மன்” என்பதிலிருந்து வந்த "பிராமணர்" என்பது வேதங்களில் தேர்ந்தவர்கள், யாக யஜ்ஞங்களில் ஈடுபடுவோர் என மரபாகப் போற்றப்பட்ட ஒரு சமூகத்தைக் குறிக்கும் சொல். தமிழ் வரலாற்றுச் சான்றுகளில், கல்வி உரைகளில் இது மரியாதைசொல்லாகவே பயன்படுத்தப்படுகிறது.

பார்ப்பனர் – நாட்டுப்புற வழக்குச் சொல்

“பார்ப்பனர்” என்பது பார்ப்பான் என்ற சொல்லின் பன்மை. இது தமிழகத்தில் பேசுமொழியில் வழக்கமாக இருந்தாலும், பல இடங்களில் நக்கலோடு, இழிவுடன் பயன்படுவதும் உண்டு. குறிப்பாக சமூகநீதியை பேசும் சூழலில், இது எள்ளல் கொண்ட வார்த்தையாகவும் தோன்றும்.

> தமிழைத் தமிழால் கொச்சையாக்கக் கூடாது

"பார்ப்பனர்" என்பது தமிழ்ச் சொல் என்றும் இல்லை என்றும் இரு வேறு கருத்துக்கள் நிலவுகிறது. பார்ப்பனர் என்ற வார்த்தை இலக்கியங்களில் கூட பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு வரலாற்று அடிப்படையும் உண்டு. ஆனால், இன்று சிலர் அந்தச் சொல்லை  இழிவாகப் பயன்படுத்தும் சூழல் நிலவி வருகிறது 

> இதை விட வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், தமிழில் உள்ள சொற்களை நாமே கொச்சையாக்கும் நிலைக்கு நாம் வந்துவிட்டோம் என்பதே! 

ஒரு மொழி அதன் சொற்கள் மூலமாகவே உயர்கிறது. அந்த சொற்கள் தான் அந்த மொழியின் நாகரிகத்தையும், நம்மைச் சமூகத்தின் முன் எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் என்பதையும் தீர்மானிக்கின்றன. ஒரு மொழியில் உள்ள சொற்கள் மரியாதையுடன் பயன்படுத்தப்பட வேண்டும்; தவறான பாவனைகள் அந்த மொழியின் மதிப்பையும் குலைக்கும். 

 வேண்டுமென்றால் தமிழ் சொல்லான அந்தணர்கள் என்ற வார்த்தையை கூட பயன்படுத்திக் கொள்ளலாமே.

> பிராமணர் என்பதும், பார்ப்பனர் என்பதும், சொற்கள் மட்டுமே. ஆனால் அவற்றைச் சொல்லும் வாயும், சொல்லப்படும் சூழலும் தான் உண்மையான நாகரிகத்தைக் குறிக்கின்றன. துல்லியத்துடன் மரியாதை கலந்த வார்த்தைப் பயன்பாடே நம் தமிழ் மரபிற்கும் சமூக ஒற்றுமைக்கும் வழிகாட்டும்.

~ ஈரநெஞ்சம் மகேந்திரன் 

Thursday, April 17, 2025

ஒரு உருக்கமான கோரிக்கை... மயான தொழிலாளர்கள்

வாழ்வைப் போலவே நம் இறப்பும் மரியாதையாக இருக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புவார்கள். 

இறுதி மரியாதைக்கு பின்னும் ஒரு வாழ்வின் முடிவை மரியாதையாக முடிக்கும் தோழர்கள் தான் மயானத்தொழிலாளர்கள்.

மயானம் மட்டுமல்ல மரியாதையும் தேவை – மயானப் பணியாளர்களுக்கான குரல்............
ஈரநெஞ்சம் அறக்கட்டளை

இன்றைய சமூகத்தில் மாற்றத்திற்கான ஆரம்பம், மனங்களிலிருந்து உருவாகிறது. வார்த்தைகளும் அதன் பிரதிபலிப்பாக அமைந்துள்ளன. முன்னேற்றம் என்றால் தொழிலில் மட்டும் அல்ல; பொருளாதாரத்தில் மட்டுமல்ல. இறுதிநிலை  பணியாளர்களாக இருந்தாலும் அவர்களையும் மனித நேயத்தோடு கண்ணோக்கி அவர்களும் மனிதர்கள் தான் என்று உணர்வதில்  தான் மனித குலத்தின்  உண்மையான வளர்ச்சி இருக்கிறது.

தற்போதும் பலர் மயானங்களில் பணியாற்றும் நபர்களை "வெட்டியான்" என்றே அழைக்கின்றனர். இந்தச் சொல்லின் பின்னணியில் பாழ்மையாகவே படும் ஒரு வரலாறு இருக்கலாம். ஆனால் இன்று இந்தச் சொல், அந்த தொழிலின் பெருமையை காட்டாமல், ஒரு தரப்பினரை ஒதுக்கி வைக்கும் வசைச்சொல்லாகவே 
பரவலாக நடைமுறையில் உள்ளது. மயான தொழிலாளர்கள் எவ்வளவுதான் அறிமுகமானவர்களாக இருந்தாலும் அவர்களது பெயர் தெரிந்திருந்தாலும் கூட வெட்டியான் என்றே அழைக்கிறார்கள். குறைந்தபட்ச மரியாதையும் மனித நேயமும் இல்லாமல் தான் அவர்களை நடத்துகிறார்கள் என்று மயானத் தொழிலாளர்கள் பலரும் வேதனை தெரிவிக்கின்றனர்.

நாம் மற்ற சமூக பிரிவுகளை மரியாதையுடன் "துப்புரவுப் பணியாளர்", "மாற்றுத்திறனாளி", "திருநங்கை" என அழைக்க ஆரம்பித்திருக்கிறோம். பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை கூட "பாலியல் தொழிலாளர்கள்" என்று தான் கூறுகிறோம். அதேபோல் இடுகாட்டில் இறுதி அடக்கம் செய்வதன் மூலம்  சமூகத் தூய்மை பணியில் தங்களது கடின உழைப்பைத் தரும் மயானப் பணியாளர்களும் அந்த மரியாதைக்கு தகுதியானவர்கள் தான்.

ஒரு உயிரின் பயணத்தின் கடைசி கட்டத்தைக் கையாண்டு, மரியாதையுடன் பூமிக்குள் புனிதமாக இணைத்திடும் பணியில் இவர்களின் பங்கு தீர்க்கமாயுள்ளது.

மரணம் தான் நிஜம். அந்த நிஜத்திற்குத் துணையாக இருப்பவர்கள், நம் வாழ்க்கையிலும் முக்கியமானவர்கள். இவர்களின் பணியை எத்தனை பேரால் செய்ய முடியுமென்று யோசித்தீர்களா? எத்தனை பேரால் அந்த மனஉறுதி, கட்டுப்பாடு, கருணை, பொறுமை கொண்டு இந்தப் பணியை செய்ய முடியும்?

எனவே தான் ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பில், நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம் –
"வெட்டியான்" எனும் பழமை வாய்ந்த ஆனால் இன்றைய சூழலில் தவறாக பயன்படுத்தப்படக் கூடிய  சொல்லை நீக்கி "மயானப் பணியாளர்" அல்லது மயான உதவியாளர்கள் என்ற மரியாதைமிக்க சொல்லை நாம் அனைவரும் பயன்படுத்த வேண்டும்.

இந்தப் பெயர் மாற்றம் என்பது ஒரு தொடக்கம் மட்டும்தான். சமூக மாற்றத்தின் வித்து சிறிய விதையாக இருந்தாலும் நாளை பெரும் விருட்சமாக மலரும் என்பதில் ஐயமில்லை.

வார்த்தையை மாற்றினால் 
மரியாதையும் மாறும்  
மயானத் தொழிலாளர்களின் 
வாழ்வும் மாறும். 

-ஈரநெஞ்சம் அறக்கட்டளை 

Tuesday, August 20, 2024

நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் உடல் உறுப்பு தானங்கள்

*உடல் உறுப்பு தானமும்? மரியாதையும்?* 
இந்தியாவிலேயே தமிழகம் தான் உடல் உறுப்பு தானத்தில் முதலிடத்தில் இருக்கிறது என்பது நம் அனைவருக்குமே தெரியும்.

 இதுவரை 1817 நபர்களின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு 10827 உடல் உறுப்பு தானங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

தமிழக மக்களுக்கு உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகமாகவே இருக்கிறது. 

எதிர்பாராத விதமாக விபத்துகளில் மூளை சாவு அடைந்தவர்கள் இனி பழைய நிலைக்கு திரும்பவோ உயிர் பிழைக்கவோ வாய்ப்பில்லை என மருத்துவர் குழு அறிவித்த பிறகு  குடும்பத்தினரின் சம்மதத்துடன் மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் தானமாக 
பெறப்படுகிறது.

உடலில் உயிர் இருக்கும் போதே குடும்பத்தினர் சம்மதத்துடன் இதயம், சிறுநீரகம், கல்லீரல்,  கணையம், கண் உள்ளிட்ட உடல் பாகங்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு அதன் பிறகு முறையாக பிரேத பரிசோதனை செய்து சம்பந்தப்பட்ட நபரின் உடலானது அவரது குடும்பத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.
ஒருவரது உடல் உறுப்புகள் 20 நபர்களை வாழ வைக்கும்.

 இத்தகைய நேர்வில் 
 விபத்தில் அடிபட்டவர் சுயநினைவே இல்லாமல் இருக்கிறார் என்பதால் அவரது சம்மதம் இங்கே கணக்கில் கொள்ளப்படுவது இல்லை.

மேலும் அவர் பிழைப்பதற்கோ பழைய நிலைக்கு வருவதற்கோ 0.1% வாய்ப்பு இருந்தால் கூட அதைப் பற்றி சிந்திக்கும் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை.

 ஒருவேளை அவர் கோமா நிலையில் இருந்தால் கூட செயற்கை சுவாசம் உள்ளிட்ட மருத்துவ உதவிகளோடு அவர் உயிரோடு இருந்தால் போதும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்ல முடியாத அடித்தட்டு மக்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

 இவ்வாறான சூழ்நிலைகளில் மூளைச் சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் அவர் உயிருடன் இருக்கும் போதே அகற்றப்படுவது ஒரு வகையில் கருணைக் கொலை தான்.

அவரைத்தான் காப்பாற்ற முடியவில்லை. அவரது உடல் உறுப்புகளாவது இன்னொருவருக்கு பயன்படட்டுமே என்ற நல்ல எண்ணத்தில் குடும்ப உறுப்பினர்கள் உடல் உறுப்பு தானத்திற்கு சம்மதிக்கின்றனர்.

உடல் உறுப்பு தானம் செய்ய முன் வருபவர்களில் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களே அதிக அளவில் இருக்கிறார்கள்.

 உடல் உறுப்பு தானம் செய்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் என்று குறிப்பிட்ட தொகை எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்றாலும் அவர்களின் குடும்பசூழலைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் சில லட்சங்கள் நிவாரணத் தொகையாக அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இறக்கும் போதும் எத்தனையோ பேரின் வாழ்வுக்கு வழிகாட்டிப் போகும் இந்த மரணங்களுக்கு வழங்கக்கூடிய  இழப்பீட்டுத் தொகையானது மிகவும் குறைவாகவே இருக்கிறது.

வெடி விபத்து, கலவரம் போன்ற அசம்பாவித சம்பவங்களின் போது 5 லட்சம் வரையிலும் இயற்கை சீற்றங்களினால் இறக்கும் போது ரூபாய் 4 லட்சம், இவ்வளவு ஏன் கள்ளச்சாராயம் மரணங்களின் போது கூட ரூபாய் 10 லட்சம் என்று நிதி உதவி வழங்கப்படும் போது உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ஒப்பீட்டளவில் மிகவும் குறைவே.

 தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகளை தேவைப்படும் நபர்களுக்கு பொருத்த மேற்கொள்ளப்படும் மருத்துவ அறுவை சிகிச்சை செலவுகளே
இந்த இழப்பீட்டுத் தொகையை விட பல மடங்கு அதிகம். 

இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கு வழங்கக்கூடிய தொகையை நிவாரணத் தொகை என்றோ உதவி என்றோ சொல்லக்கூடாது. 

ஒரு நாட்டின் ராணுவ வீரன் எப்படி தன்னையே நாட்டுக்காக அர்ப்பணிக்கிறானோஅது போன்ற ஒரு வீர மரணத்தை கௌரவப்படுத்தும் விதமாக இதைக் கௌரவ தொகை என்று அறிவித்து கௌரவமான ஒரு தொகையை கொடுத்து அவர்களின் குடும்பத்தின் நல்வாழ்வுக்கு அரசு உதவ வேண்டும்.

இதன் மூலம் இன்னும் அதிக அளவில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்ச்சி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

மூளைச் சாவு அடைந்ததால் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கும் நபர்களின் இறுதிச் சடங்கில் அரசு சார்பில் மரியாதை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. 
மூளைச் சாவடைந்த நபரின் குடும்பத்தினர் அந்தக் கடினமான சூழ்நிலையிலும் தங்களது நெருங்கிய உறவுகளின் உடல் உறுப்புகளை மற்றவர்களுக்கு தானமாகக்  கொடுக்க முன் வருபவர்களுக்கு அந்த முடிவை கெளரவப்படுத்தும் விதமாக அரசு மரியாதை செய்வது ஒரு நல்ல தொடக்கம்.

 ஆரம்பக் கட்டத்தில்  மாவட்ட ஆட்சியர்களே நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

இந்த நடைமுறை நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மாவட்ட ஆட்சியருக்கு பதிலாக அவருக்கு அடுத்தடுத்த படிநிலையில் இருக்கும் அலுவலர்களை அனுப்ப ஆரம்பித்தால் கொஞ்சம் கொஞ்சமாக இறந்தவருக்கு கிடைக்கக்கூடிய அரசு மரியாதை தொய்வடைந்து விடும். 

ஒரு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் அனைவருமே  நேரில் சென்று அஞ்சலி செலுத்துவதே உண்மையான அரசு மரியாதையாக இருக்கும்.

அந்த நபரின் உயிர் தியாகத்துக்கும் அந்த குடும்பத்தின் தியாகத்துக்கும் அப்போதுதான் உரிய மரியாதை கிடைக்கும்.

 முன்பெல்லாம் உடல் உறுப்பு தானம் குறித்த செய்திகள் பத்திரிகைகளில் முக்கியத்துவம் கொடுத்து தலைப்புச் செய்தியாக ஊடகங்களில் காணொளியாக வந்தது போய் இப்போதெல்லாம் சிறிய  பெட்டிச் செய்தியாக மாறி வருகிறது.

 தங்கள் குடும்பத்திற்கு அச்சாணியாக விளங்கிய முக்கிய குடும்ப உறுப்பினர்கள் அகால மரணம் அடைந்த போதும் சேவை உள்ளத்தோடு உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வரும் குடும்பத்திற்கு முறையான கௌரவம் வழங்கப்பட வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

~ஈரநெஞ்சம்

Saturday, March 09, 2024

காலத்தின் கட்டாயம்

காலத்தின் கட்டாயம் .


வயது கூடக் கூட 
நம் பெற்றோரும் குழந்தைகளாகி விடுவார்கள்.

முதுமையும் இனியொரு 
குழந்தைப்பருவமே 

சொன்னது மறக்கும். சொன்னதையே திரும்பச்சொல்ல வைக்கும்.

நிறையப் பேச வைக்கும்.
பேசாமல் அடம் பிடிக்கவும் வைக்கும்.

உணவின் மீது அதீத பிரியம் வெறுப்பு இரண்டும் வரும்.

நோய் கூடும்.
நோய் கூடியதை போல
காட்டத்தோன்றும்.

நோய் வந்ததை மறைக்க
கூடத்தோன்றும்.

கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் முதிர்ந்த குழந்தைகளை.

உங்களை வளர்த்தோரை நீங்கள் வளர்க்க இது ஒரு வாய்ப்பாக எண்ணுங்கள்.

அவர்களுடன் பழங்கதைகள் பேசுங்கள். 
பிடித்தவற்றைத் தேடிச் செய்யுங்கள். 
வாங்கிக் கொடுங்கள்.

நானிருக்கிறேன் என்று பாதுகாப்பை உணர செய்யுங்கள். 

எக்காரணம் கொண்டும் யாரிடத்திலும் அவர்களை விட்டுக் கொடுக்காதீர்கள்.

எங்கும் விட்டு விடாதீர்கள்.

எது எப்படியோ தாய் தகப்பன் வழியே நாம் வந்தோம்.
அந்த நன்றி மறவாமை வேண்டும்.

பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் முதிர்ந்த குழந்தைகளை.

காலங்கடந்த பச்சாதாபத்திலும், புகைப்படத்திற்கு விருந்து படைத்து கண்ணீர் விடுவதில் எந்தப் பயனுமில்லை.

இந்த வரிகள் என்னைப் பெற்ற தாய் தந்தை உட்பட அனைத்து தாய் தந்தை  மனம் குளிர அவர்களின் 
பாதங்களில்
சமர்ப்பிக்கப்படுகிறது.

~ ஈரநெஞ்சம்

Tuesday, February 20, 2024

நமக்கும் முதுமை உண்டு

*நமக்கும் முதுமை உண்டு*


ஐக்கிய நாடுகள் சபையின் ‘மக்கள் தொகை நிதியம்’ என்ற அமைப்பு, ‘இந்தியா ஏஜிங் ரிப்போர்ட்’ என்ற பெயரில் கணக்கெடுப்பு நடத்தியது. அதில், இந்தியாவில் தற்போது 60 வயதுக்கும் மேற்பட்ட முதியோர்களின் எண்ணிக்கை, 14.9 கோடியாக உள்ளது. இது, மொத்த இந்திய மக்கள் தொகையில், 10.5 சதவீதமாக உள்ளது என, தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


இந்தியாவைப் போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள வளரும் நாடுகளில், முதியோர் நலன் என்பது மக்களால் மட்டுமல்ல; அரசாங்கங்களாலும் கூட இரண்டாம் பட்சமாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. குறிப்பிட்ட வயதுக்கு மேல், அவர்களுக்கு மருத்துவக் காப்பீடு, வங்கிக் கடனுதவி உள்ளிட்ட குடிமகன்களுக்கான  அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுகின்றன.

முதியோர் நலன் சார்ந்த சட்டங்களோ, திட்டங்களோ அவர்களுக்கு உதவும் வகையில் இல்லை. அவர்களுக்கான சலுகைகளும் கூட பெயரளவிலேயே உள்ளன. சில திட்டங்கள் இருந்தாலும், அவை போதுமானவையாக இல்லை.


தமிழகத்தில் மட்டும் ஏறக்குறைய, 1,500 முதியோர் காப்பகங்கள் இருக்கலாம். இதில் பெரும்பாலானவை பணம் செலுத்தி, பராமரிக்கப் படுபவை ஆக  இருக்கின்றன. முதியோர் காப்பகங்களில், லட்சக்கணக்கானோர் தங்களது கடைசிக் காலத்தை வலியுடன் கழிக்கின்றனர்.


காப்பகங்களில் வசிக்கும் முதியவர்கள் அனைவருமே பிள்ளைகளால் வீட்டை விட்டு துரத்தப்பட்டவர்கள் என்று சொல்லி விட முடியாது. வீட்டில் தனக்கான மரியாதை கிடைக்கவில்லை என்பதற்காக கோபித்துக் கொண்டு வெளியேறியவர்கள்; பிள்ளைகளுக்குப் பாரமாக இருக்க வேண்டாம் என்று தாமாகவே வெளியேறியவர்கள்; சில நேரங்களில் சில தவறுகளை செய்து விட்டு, மற்றவர்களை எதிர்கொள்ள தைரியம் இல்லாமல், வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள்; ‘என்னடா வாழ்க்கை’ என வெறுத்து, ஒரு நொடியில் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு வந்தவர்கள் என, பல வகையினர் உள்ளனர்.


அவர்களில் பலரும், ஒரு காலத்தில் நல்ல நிலைமையில் இருந்தவர்கள்; நன்கு படித்தவர்கள்; நல்ல உத்தியோகத்தில் செல்வாக்கோடு வாழ்ந்தவர்கள்.


நரை, திரை, பிணி, மூப்பு, சாக்காடு யாவருக்கும் பொதுவானது என்பதை உணராமல், முதுமையும் தள்ளாமையும் வந்து விட்டது என்பதற்காக, அவர்களை மரியாதைக் குறைவாக நடத்துகிறது இச்சமூகம்.


ஒரு மணி நேரம் சாலையில் நின்று கவனித்தால், ஆதரவற்ற முதியோர் பலரும் நம் கண்ணில் தென்படுவர். வறுமை காரணமாக, தங்கள் வயதையும் மீறி உழைக்கும் முதியவர்கள் சிலரையும் கவனித்திருப்போம்.


சாலையோரம் சிறு கடைகள் நடத்தும் முதியவர்கள் தென்பட்டால், அவர்களிடம் ரெண்டு வார்த்தை பேசிப்பாருங்கள். அதற்காகவே காத்திருந்தது போல தங்கள் மொத்த வாழ்க்கையையும் கொட்டித் தீர்ப்பார்கள்.


ஒவ்வொருவருக்குப் பின்னாலும், ஓராயிரம் சோகக் கதைகள் இருக்கும்.


இளம் வயதில் எல்லாமே அவர்களது கட்டுப்பாட்டில் இருந்திருக்கும். வீட்டையே அவர்கள் தான் கட்டி ஆண்டிருப்பார்கள். அவர்கள் சொல்வதே முடிவு; அவர்கள் வைத்ததே சட்டம் என்று இருந்திருக்கும். அந்த வீட்டுக்காகவும் குடும்பத்துக்காகவும் நிறைய உழைத்திருப்பார்கள். தன்னுடைய சுக துக்கங்களை தியாகம் செய்திருப்பார்கள்.


நாட்கள் செல்லச் செல்ல, வயது முதிர்வு காரணமாக சம்பாதிக்க முடியாமல் போகும்போது, அவர்களால் எந்த வேலையும் செய்ய முடியாமல் போகிறபோது, சாதாரண வேலைகளுக்கு கூட, அடுத்தவர்களை எதிர்பார்க்கும் நிலை வரும்போது, வீட்டில் அவர்களுக்கான முக்கியத்துவம் ரொம்பவே குறைந்து விடுகிறது. அவர்களை பாரமாக, தேவையற்ற சுமையாக பலரும் கருத ஆரம்பித்து விடுகிறார்கள்.

அவர்கள் இயலாதவர்களாகி விட்டார்கள் என்ற ஒரே காரணத்துக்காக, நமக்கு செய்த அனைத்து நன்மைகளையும், நமக்காகப் பட்ட கஷ்டங்களையும் ஒரு நொடியில் துாக்கி எறிந்து விட்டு, முதியோர் இல்லத்தில் சிலர் விட்டு விடுகின்றனர்.


வசதி இல்லாதவர்கள் இலவச காப்பகங்களில்  விடுகிறார்கள். சிலர் அவர்களைக் கைவிட்டுத் துரத்தி விடுகிறார்கள். அவர்கள் தெருவில் ஆதரவற்ற நிலையில் அலையும்போது மீட்கப்பட்டு, தொண்டு நிறுவனங்கள்  நடத்தும் காப்பகங்களில் சேர்க்கப்படுகிறார்கள்.


வசதி படைத்தோர் தங்களது பெற்றோரை ‘பெய்டு ஹோம்’ என்ற அடிப்படையில், பணம் செலுத்தி தங்க வைக்கக்கூடிய காப்பகங்களில் சேர்த்து விடுகிறார்கள். அதன் மூலம் தங்களுடைய கடமையைச் சிறப்பாக செய்து விட்டதாகவும், அவர்கள் ஏதோ பெரிய மனது பண்ணி செலவு செய்து பார்த்துக் கொள்வதாகவும், பெருமிதம் கொள்கிறார்கள். இதுவுமேப் பெற்றோரைக் கைவிடுதல் தான்.


வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகள் மருத்துவமனைகளில் உயிருக்கு போராடும் பெற்றோரைப் பார்க்கக் கூட வருவதில்லை. அவர்கள் இறந்து விட்டால், உடலை அடக்கம் செய்யாமல், தாங்கள் வரும்வரை பாதுகாக்கச் சொல்கின்றனர்.
இன்னும் சிலரோ என்னால் வர முடியாது; பணம் அனுப்பி விடுகிறேன். நீங்களே அடக்கம் செய்து விடுங்கள் என்று கூறுகின்றனர். தங்கள் பெற்றோருக்கு தாங்கள் செய்ய வேண்டிய இறுதிச் சடங்கு மற்றும் இறுதி மரியாதையைக் கூட செய்ய வராமல் பணத்தைத் தேடி ஓடிக்கொண்டு இருக்கின்றனர்.


காப்பகங்களில் வசிக்கும் முதியோர்களை விட, வீடுகளில்
தனியாக வசிக்கும் முதியோர்களின் நிலை இன்னும் பரிதாபம். தனிமைக் கொடுமையால் தற்கொலை செய்து கொள்வோரும் உண்டு.

சிலர் வீட்டிலேயே இறந்து, யாருக்கும் தெரியாமல், உடலில் இருந்து துர்நாற்றம் வீசிய பிறகே, அக்கம் பக்கத்தினர் மூலம் பிள்ளைகளுக்கும்  உறவினர்களுக்கும் தெரியவரும் பரிதாபமான சூழல் காணப்படுகிறது.

காப்பகங்களில் இருக்கும் முதியோர்களைப் பார்த்தால், அவர்கள் நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருப்பதாகத் தோன்றும். இன்னும் சொல்லப்போனால் வீட்டில் சில நேரங்களில் சுடு சொற்கள், அவமானங்கள், புறக்கணிப்பைத் தாங்கிக் கொள்வதை விட, இதுவே மேல் என்று அவர்களே கூட நினைக்கக்கூடும்.


இங்கே அவர்களுக்கு பாதுகாப்பான உறைவிடம், உடைகள், நேரத்துக்கு உணவு, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைக்கிறது. தங்கள் வயதை ஒத்த நண்பர்களும் இருக்கிறார்கள். நடப்பது, சாமி கும்பிடுவது, செய்தித்தாள் மற்றும் புத்தகங்கள் படிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது என மகிழ்ச்சியாகவே  இருப்பார்கள்.

வெளிப்பார்வைக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், உள்மனதுக்குள் அவர்களுக்கு தங்கள் குடும்பத்தை பிரிந்த கஷ்டம், பிள்ளைகள் பேரப்பிள்ளைகள், தங்கள் உறவினர்களைப் பார்க்க இயலாத ஏக்கம் அதிகமாகவே இருக்கிறது.

முதியோர் இல்லங்களில் எத்தனை வசதிகளை செய்து கொடுத்தாலும், ரத்த உறவுகளுக்கு ஈடாகாது. காப்பக வசதிகளால் மகிழ்ச்சி அடைந்தாலும், அவர்களைக் கைவிட்டவர்களுக்கு சாபமே மிஞ்சும். வயது முதிர்வு மற்றும் தள்ளாமை காரணமாக, அவர்கள் நமக்குத் தேவையில்லை என நினைக்கிறோம். இப்போது தான், அவர்களுக்கு, நாம் தேவை என்பதை நம் வசதிக்காக மறந்து விடுகிறோம்.


முதியோர்கள் நம்மிடம் பணத்தை எதிர்பார்ப்பதில்லை. குறிப்பிட்ட வயதுக்கு மேல் பணம், அவர்களுக்குப் பயன்படாமல் போய் விடும். நம்மிடம் எதிர்பார்ப்பது ஆறுதலான சில வார்த்தைகள். அதைக்கூட கொடுக்க நம்மில் பலருக்கு நேரமோ மனமோ இருப்பதில்லை.

பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் மீது நடத்தும் வன்கொடுமைகள் பற்றி எந்தப் பெற்றோரும் பெரும்பாலும் யாரிடமும் புகார் அளிப்பதில்லை. முதியோர் பாதுகாப்பு சட்டங்கள் இருப்பது தொடர்பான விழிப்புணர்வு இருந்தாலும் கூட தங்கள் பிள்ளைகள் என்ற பாசத்தாலும், அவர்கள் எந்த பிரச்சனையும் வந்து விடக்கூடாது  என்ற எண்ணத்தினாலும் சகித்துக் கொண்டு வாழ்கின்றனர்.
அவ்வாறு உள்ள முதியோர்களைக் கண்டறிந்து அவர்களின் நலன் காக்க அரசாங்கம் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இளம் தலைமுறையினர் தங்கள் பெற்றோரை நல்ல முறையில் கவனித்துக்கொள்ள இது போன்ற நடவடிக்கைகள் ஒரு எச்சரிக்கையாக அமையும்.

வயதாகும்போது உடல் நல பாதிப்போடு மனநல பாதிப்பும் ஏற்படுகிறது. அதை புரிந்துகொண்டு, அவர்களை நடத்த வேண்டும். உணவு, உடை, உறைவிடம் மட்டும் வழங்கினால் போதாது. போதிய மருத்துவ வசதிகள் கிடைப்பதற்கு குடும்பத்தினரும், அரசாங்கமும் முயற்சியெடுக்க வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் நமது அரசாங்கம் கருவுற்றிருக்கும் பெண்கள், சிறு குழந்தைகள், வளர் இளம் பெண்கள் நலன் மற்றும் ஆரோக்கியத்தை கண்காணித்து பேணுவதுபோல், மூத்தக் குடிமக்களையும் கண்காணித்து  அவர்களின் நலம் பேண முயற்சி மேற்கொண்டால், பலரும் பலனடைவர்.


முதியோர் நலனுக்கென்று தனியாக ஊழியர்கள் நியமித்து, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் முதியோரை வீட்டிலேயே சந்தித்து, அவர்களது அடிப்படை  தேவைகளை நிறைவேற்ற, அரசே ஏற்பாடு செய்ய வேண்டும். வீடு தேடி மருத்துவம் திட்டத்தின் சேவையை முதியோரை சென்றடைகிறதா என்பதை பொது சுகாதாரத்துறை உறுதிப்படுத்த வேண்டும்.

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இக்காலகட்டத்தில், மருத்துவமனை செல்ல இயலாத முதியோருக்கு, ‘வீடியோ கால்’ போன்ற வசதிகள் மூலமாக கூட மருத்துவர்களின் ஆலோசனை கிடைக்க வழிவகை செய்யலாம்.

பிள்ளைகள் குறைந்தபட்சம் ஒரு நாளில் குறிப்பிட்ட மணி நேரமாவது பெற்றோர்களுடன் நேரம் செலவிட வேண்டும். வெளியூர்களில் வசித்தால் கூட அலைபேசியில் தினம் ஒரு முறையாவது பேசி அவர்களை மகிழ்விக்கலாம்.


நம்மைத் துாக்கிச் சுமந்தவர்களை, சுமையாக நினைத்துத் துாக்கிப் போட்டு விடாமல், கொஞ்சமாவது மன நிறைவுடன் அவர்கள் தங்கள் கடைசிக் காலத்தைக் கழிப்பதற்கு, நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை சிந்தித்து செயல்படுவோம்!

இணையத்தில் வந்த ஒரு கதையில்
ஒரு முதியவர் மட்டும் தன்னந்தனியாக வசிக்கிறார். அக்கம் பக்கத்தினர் கூட அவரது வீட்டிற்கு வருவதில்லை. அவருக்கோ, வெளியே சென்று வரும் அளவுக்கு உடல்நலம் இல்லை. அவரது வீட்டுக்கு தினமும் வந்து செல்லும் ஒரே ஒருவர்  பேப்பர் போடும் பையன் மட்டும்தான்.

வழக்கமாக, பேப்பர் போடுவதற்காக கதவோரம் வைத்திருக்கும் பெட்டி இல்லாததால், வீட்டுக்குள் எட்டிப் பார்க்கிறான் அந்தப் பையன். அவனை அழைத்து,
‘இனி, பேப்பரை என் கையிலேயே கொடு. கூடுதலாக பணம் வேண்டுமானாலும் தந்து விடுகிறேன்’ என்கிறார்.

‘பேப்பர் வாங்க வராமல், தனக்கு ஏதாவது நடந்து விட்டால் அக்கம் பக்கத்தில் சொல்லி விடு; என் பிள்ளையை தொடர்பு கொண்டு தெரிவித்து விடு’ எனக்கூறி, தனது வாரிசுகளின் கைப்பேசி எண்ணை, அந்த பையனிடம் தருவதாக அந்த கதை இருக்கும்.

அந்த அளவுக்கு, இரண்டு வார்த்தை பேசக்கூட ஆள் இல்லாமல், பல முதியவர்கள் இன்றைய இயந்திரத்தனமான உலகத்தில் வாழ்கிறார்கள். அவர்களது வலியை உணர, நமக்கும் முதுமை வரவேண்டும்.

ஒரு உண்மை சம்பவத்தை இங்கே பதிவு செய்கிறேன். நகரின் மையத்தில் நட்சத்திர வசதிகளோடு கூடிய ஒரு அப்பார்ட்மெண்ட். லட்சக்கணக்கில் பென்ஷன் வாங்கிக் கொண்டிருந்தாலும், தனியாக வசிக்கும் சூழலில் நிறைய முதியவர்கள் வசிக்கின்றனர்.

தேவையான உதவிகளை செய்து தரும், தனியார் நிறுவன ஊழியர், அவர்களை ஒருங்கிணைத்து ஒரு ‘வாட்ஸ் அப்’ குழு அமைத்திருந்தார். தினமும் ‘குட் மார்னிங்’, ‘குட் நைட்’ என குறுஞ்செய்தி போடும் வழக்கத்தை ஏற்படுத்தி வைத்திருந்தார்.

தினமும் மெசேஜ் போடக்கூடிய ஒரு முதியவர், ஒரு நாள் முழுவதும் எந்த பதிவும் போடவில்லை. சந்தேகப்பட்டு சென்றுபார்த்தபோது, திடீரென கை, கால்கள் இழுத்துக் கொண்டதால், துாக்கி விடக்கூட ஆளின்றி, தரையில் விழுந்து கிடந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ‘வாட்ஸ் அப்’ குழு இல்லாமல் இருந்திருந்தால், என்ன நடந்திருக்கும் என நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.


இறுதியாகப் பிள்ளைகளுக்கு ஒரு வேண்டுகோள். கடைசி காலத்தில் உங்கள் பெற்றோரை நேசியுங்கள்; தனியாக தவிக்க விடாதீர்கள். அவர்கள் கால பொக்கிஷம். உரையாடுங்கள்; கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். பெற்றோருடன் உங்களது வாரிசுகளை விளையாட வையுங்கள். அவர்களிடம் கதை கேட்கச் சொல்லுங்கள்; அவர்களுக்கும் வரலாறு தெரியட்டும். நாளை நமக்கும் முதுமை உண்டு என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள்.

~ ஈரநெஞ்சம் மகேந்திரன்

Thursday, February 15, 2024

வாட்ஸ் அப் குழுவின்மூலம் மலர்ந்த மனிதம்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இருப்பினும் உடல் உறுப்பு செயலிழப்பினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இன்னும் அதிகமாக உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய நிலையே உள்ளது.

விபத்து காரணமாகவோ உடல்நலக்குறைவு காரணமாகவோ மூளைச்சாவு அடையும் நிலை ஏற்பட்டால் மண்ணுக்கோ நெருப்புக்கோ  இரையாகும் உடல் உறுப்புகள் யாருக்கேனும் பயன்படட்டும் என்ற எண்ணம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது.

ஆனால் உடல் உறுப்பு தானம் என்றால் என்ன? அதை செய்வது எப்படி? அதற்கு பதிவு செய்வதற்கான வழிமுறைகள் என்ன என்பது பற்றி தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாமல் இருந்தது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்ற நிலையும் பதிவு செய்யும் முறைகள்  சிக்கலாகவும் இருந்தது.

இந்நிலையில் தமிழக அரசின் உடல் உறுப்பு தானம் தொடர்பான *transtan. tngov. in* இணையதளத்தில் எளிதாகப் பதிவு செய்ய முடியும் என்ற வழிமுறை தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தீயணைப்புத் துறையில் பணியாற்றும் இளம் செல்வன் என்பவர் உடல் உறுப்பு தானத்திற்கு இணையவழியில் பதிவு செய்திருந்ததை அறிந்து ஈரநெஞ்சம் அறக்கட்டளை நிறுவனர் திரு.மகேந்திரன் அவர்கள் ஏற்கனவே உடல் தானத்திற்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் பதிவு செய்திருந்த போதிலும் தற்போது உடல் உறுப்பு தானத்திற்கு இணைய வழியில் பதிவு செய்து  அதற்குரிய அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து மற்றவர்களை ஊக்குவிப்பதற்காகவும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் *ஈரம் செய்திகள்* வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டார். அதைத் தொடர்ந்து   கடந்த இரு தினங்களில் மட்டுமே பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏறக்குறைய *30க்கும்* மேற்பட்ட நபர்கள் தாமாக முன்வந்து உடல் உறுப்பு தானத்திற்கு தமிழக அரசின் அதிகாரபூர்வ  இணையதளத்தில்  பதிவு செய்து அதற்குரிய அடையாள அட்டை பெற்றுள்ளனர்.

இது மிகவும் போற்றுதலுக்குரிய விஷயம். ஒரு விளக்கின் சுடரில் இருந்து ஆயிரம் விளக்குகள் சுடர் பெற்று ஒளிர்வது போல விளம்பர நோக்கத்தோடு அல்லாமல் நமது செய்திகள் குழுவில் வெளியிடப்பட்ட உடல் உறுப்பு தானம் பற்றிய ஒரு விழிப்புணர்வு பதிவு பல பேரை சென்றடைந்து உள்ளது.

தன்னுடைய மரணத்திற்கு பிறகும் கூட மற்ற உயிர்களை வாழ வைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்த தன்னார்வலர்கள் அனைவருமே வாழும் கடவுள்கள் தான். அவர்களது செயல் 
போற்றுதலுக்கும் வணக்கத்துக்கும் உரியது.

இத்துடன் உடல் உறுப்பு தானம் செய்வதற்குப் பதிவு செய்தவர்களின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.

இளம் செல்வன், திருப்பூர்.
மகேந்திரன்,கோவை 
பாரதி, கோவை
ஈடித் ரேனா, புதுகை 
நித்யா, விருதுநகர்
ராஜேந்திரன், விருதுநகர்
நடராஜன், சிவகாசி
சம்விதா, கோவை
தேவராஜ், கோவை
செந்தில், கோவை
அமுதா, ராசிபுரம் 
பிரேம், விருதுநகர்
அன்புச்செல்வன்,உதகை 
முருகேசன்,உதகை
அனிதா, சென்னை
மணிவேல், சென்னை
ஆரோகியசாமி,புதுகை 
இன்ப தமிழ், புதுகை
உதயாராஜ், ராசிபுரம்
நீலகண்டன், சேலம்
கண்ணன், கோவை
புஷ்பா, பொள்ளாச்சி 
முனியப்பன், பழனி
கிஷோர், ஈரோடு 
முத்துசாமி, அவிநாசி 
வனிதா, கோவை 
ஜெயராஜ், கோவை
அன்னக்கொடி, திருச்சி
முருகானந்தம், திருச்சி 
நல்லதம்பி, திருச்சி
ஈஸ்வரன்,குன்னூர்
சந்திரன், விருதுநகர்

~ஈரநெஞ்சம் அறக்கட்டளை

Sunday, October 01, 2023

நாங்க வளர்க்கிற நாய் போல தாங்க இந்த தெரு நாய்களும்

*நாங்க வளர்க்கிற நாய் போல தாங்க இந்த தெரு நாய்களும்*
நாம் தினமும் ஒரு குறிப்பிட்ட பாதையில் தான் அன்றாட அலுவல்களை கவனிக்க வாகனங்களில் விரைந்து கொண்டிருக்கிறோம் . நம்முடைய ஆயிரம் பிரச்சனைகளுக்கும் மன அழுத்தங்களுக்கும் மத்தியில் நம்மைச் சுற்றி நடக்கும் எந்த விஷயங்களும் நம் கண்ணில் படுவதில்லை. அப்படியே கண்ணில் பட்டாலும் மனதில் பதிவதில்லை. 

இன்று மதியம் நல்ல வெயில் நேரத்தில் கோவை ஆர் எஸ் புரம் பொன்னுரங்கம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது நான் கண்ட ஒரு காட்சியில் ஒரு கணம் என்னுடைய பிரச்சினைகளையே நான் மறந்துவிட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு வீட்டின் காம்பவுண்ட் முன்புறம் உள்ள கேட்டை நோக்கி மணி அடித்து செல்லும் பள்ளி பிள்ளைகள் போல வரிசையாக பத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் சென்று கொண்டிருந்தன. அங்கே வரிசையாக தட்டில் சாப்பாடு வைக்கப்பட்டிருந்தது. உணவு இடைவேளைக்கு செல்லும் மாணவர்களைப் போல பவ்யமாக ஒவ்வொன்றும் தட்டில் தனக்கு வைக்கப்பட்ட அசைவை உணவை அழகாக சாப்பிட ஆரம்பித்தன. 

சக மனிதர்கள் பசியால் துடிக்கும் போது கூட கண்டுகொள்ளாமல் செல்லும் மனிதர்களுக்கு மத்தியில் தெரு நாய்களின் பசியைப் போக்கும் அந்த வீட்டின் உரிமையாளர் நல்லமுத்து என்பவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

அவர் தனது வீட்டில் வளர்த்து வரும் நாய்க்கு உணவு வைக்கும் போதெல்லாம் தெருநாய்கள் ஏக்கத்தோடு பார்க்கும் , அதை பார்த்துவிட்டு எங்கள் மனசு கேட்காமல் தெருவில் உள்ள மற்ற நாய்களுக்கும் சேர்த்து சாப்பாடு வைக்க ஆரம்பித்ததாக கூறுகிறார்.

தன்னுடைய வீட்டில் வளர்க்கும் நாய்க்கு வைக்கும் அதே உணவைத்தான் தெருவில் உள்ள நாய்களுக்கும் கொடுக்கிறார். தெரு நாய்கள் தானே என்று எந்த அலட்சியமும் காட்டாமல் நாய்களுக்கு என்று பிரத்தியேகமாக சமைக்கப்பட்ட உணவை ஒவ்வொரு நாய்க்கும் தனித்தனியாக தட்டில் வைத்து கொடுக்கிறார்.  

15 வருடங்களுக்கும் மேலாக தெரு நாய்களுக்கும் உணவு பரிமாறி வருகிறார். இதனால் இங்கு உணவு கிடைப்பதை அறிந்து வேறு ஏரியா நாய்களும் ஏராளம் வர ஆரம்பித்து விட்டனவாம். 
இந்த நாய்கள் யாரையும் கடிக்காது. அவைகளால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை... இன்னும் சொல்லப்போனால் இந்தப் பகுதிக்கு பாதுகாப்பாகத்தான் இருக்கின்றன என்று கூறினார். 

பெருநகரங்களில் அதிவேக வாழ்க்கை சூழலில் தெருநாய்களை கவனிக்க யாருக்கும் நேரமில்லை. மீதம் ஆகும் உணவுகளை கூட யாரும் அவைகளுக்கு போடுவதில்லை. நெகிழிப்பைகளில் அடைத்து வீசி விடுகிறோம். இந்த நாய்கள் உணவுக்கு என்ன செய்யும் என்று 
நினைத்தே அவைகளுக்கு தினமும் உணவு அளிப்பதாக கூறுகிறார். பேசுவதற்கு எளிதாக இருந்தாலும் ஒரு நாளைப் போல தினமும் தவறாமல் சமைத்து உணவு அளிப்பதும் சமைத்த பாத்திரங்கள் தட்டுகள் இவற்றை சுத்தம் செய்வதும் மிகவும் சிரமமான விஷயம். மேலும் அவற்றிற்கு ஏதேனும் உடல்நிலை சரியில்லை என்றாலும் கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளிப்பதாகவும் கூறி நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். எனினும் நல்லமுத்து இதைப் பெரிய சாதனையாகவோ சேவையாகவோ சொல்லி விளம்பரம் தேடாமல் ஏதோ என்னால முடிஞ்சது அதுங்களுக்கு பசியாற்றுகிறேன் என்று எதார்த்தமாக சொல்கிறார்.

தண்ணீரைக் கூட வியாபாரம் செய்யும் மனிதர்களுக்கு மத்தியில் இவரைப் போன்ற மனிதர்களால் தான் வாயில்லா ஜீவன்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
இனியாவது நாமும்
தேவைக்கு அதிகமாய் மீந்து இருக்கும் உணவுகளையாவது கெட்டுப் போவதற்கு முன்பே நம் தெருக்களில் இருக்கும் நாய் பூனை போன்ற விலங்குகளுக்கு கொடுக்கலாமே. _இந்தப் பூமி மனிதர் வாழ்வதற்கு மட்டுமானதல்ல.. வாழ்தலும் எவ்வுயிர்க்கும் பொதுவன்றோ?

~ ஈரநெஞ்சம்

Saturday, June 24, 2023

இறுதி மரியாதை

பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு மனிதன் எத்தனை ஆயிரம் மனக்கோட்டைகளைக் கட்டினாலும் தன்னுடைய மரணம் கௌரவமாக இருக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு மனிதனின் இறுதி விருப்பமாக இருக்கும். உலகில் பிறந்து வாழ்ந்து இறக்கும் எல்லா மனிதர்களுக்கும் இறுதி மரியாதையை பெற்றுத் தருவது இறுதிச் சடங்கு செய்யும் தொழிலாளர்கள் தான்.



உடலில் இருந்து உயிர் பிரிந்தால் அந்த உடலை அடக்கமோ தகனமோ செய்யும் வரையிலான இறுதிச் சடங்குகள் செய்யும் நடைமுறை உலகம் முழுவதுமே இருக்கிறது. அந்தந்த பகுதி கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், பண்பாடு இவற்றைப் பொறுத்து சடங்குகளும் சம்பிரதாயங்களும் மட்டுமே தான் வேறுபடும். 

உயிருடன் இருக்கும் வரை தான் பணம், பட்டம், பதவி, பேர் புகழ், செல்வாக்கு எல்லாமே. இறந்த பிறகு எல்லோருக்கும் ஒரே பெயர் தான்...பிணம்.

என்ன தான் ஒட்டி உறவாடிய சொந்தங்களாக இருந்தாலும் உயிர் போன பிறகு பெற்ற பிள்ளையாக இருந்தாலும் தொட்டு தூக்கி எல்லாம் செய்வதற்கு ஒரு வித அச்சமும் தயக்கமும் ஒரு அருவருப்பும் மனத்தடையும் வந்து விடுகிறது.
இறந்த பிறகு அந்த உடலைச் சுத்தப்படுத்தி, சவரம் செய்து, குளிப்பாட்டி அதற்கு அலங்காரங்கள் செய்து, உடை அணிவித்து, மாலை மரியாதையோடு கிடத்துவதற்கு இறுதிச் சடங்கு செய்யும் தொழிலாளர்களைத் தவிர யாரும் முன் வருவதில்லை.

ஏனெனில் அதற்கான மனோதிடம் நம்மிடம் இருப்பதில்லை. அதோடு நீண்ட நாட்கள் படுக்கையில் கிடந்தவர்கள், நோய்வாய்ப்பட்டு இறந்தவர்கள், தொற்று நோய்களால் இறந்தவர்கள், விபத்தில் .உருக்குலைந்த உடல்கள், துர்நாற்றம், புண்கள், அதிலிருந்து வடியும் நீர், சீழ் என்று எந்த அருவெருப்பும் பார்க்காமல், ஆண் பெண் பேதமில்லாமல் அந்த உடலைத் தொட்டு தூக்கி அத்தனை சடங்குகளையும் செய்பவர்கள் இவர்கள் தான். 
       
பிச்சைக்காரர்கள், பாலியல் தொழிலாளர்கள், மயான தொழிலாளர்கள், பிணவறை ஊழியர்கள் இவர்களைப் பற்றிக்கூட வரலாற்றின் பக்கங்களில் சில பதிவுசெய்துள்ளன.

ஆனால் இறப்பு நிகழ்ந்தால் மட்டுமே தேடப்படும் இந்த தொழிலாளர்களைப் பற்றி யாருமே பேசுவதில்லை.

ஒருவர் இறந்து விட்டார் என்று தெரிந்தவுடன் உற்றார் உறவினர்களுக்கு தகவல் சொல்லுவதற்கு முன்பே இவர்களைத் தான் தேடுவார்கள். இறந்தவர்களின் உடல் எந்த நிலையில் இருந்தாலும் சுத்தம் செய்து அலங்கரித்து தேவையான கட்டுகள் இட்டு இறுதி அஞ்சலிக்கு பார்வையாக வைப்பதோடு மட்டும் இவர்களின் பணி முடிவடைந்து விடுவதில்லை. 

தேங்காய் உடைத்தல், எண்ணெய் சீயக்காய் வைத்தல், தண்ணீர் கொண்டு வருதல் குளிப்பாட்டுதல், கோடி போடுதல் நெய்ப் பந்தம் பிடித்தல், பாடை மாற்றுதல், கொள்ளி வைத்தல் அல்லது குழிக்குள் இறக்குதல் என்று அனைத்து விஷயங்களையும் முன் நின்று செய்வது இவர்கள்தான்..
இன்றைய நாகரிக உலகில் நம்முடைய பாரம்பரிய முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்வது பற்றி நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.
என்னதான் சாஸ்திர சம்பிரதாயங்கள் எல்லாம் நன்கு தெரிந்தவர்களாக இருந்தாலும் கூட தன்னுடைய குடும்பத்தில் ஒரு இறப்பு நிகழும் போது நமக்கு கையும் ஓடாது காலும் ஓடாது.. அப்போது நமது குடும்பத்தில் நீத்தாருக்கு எந்தக் குறையும் இல்லாமல் எல்லாவற்றையும் நம்முடைய ஸ்தானத்திலிருந்து எடுத்துக்கட்டி செய்பவர்கள் அவர்கள்தான்.

அடக்கத்திற்கு பிறகும் கூட பால் தெளித்தல், எரித்த இடத்தில் அஸ்தி எடுப்பது முதல் ஈமச்சடங்கு மற்றும் பதினாறாம் நாள் காரியங்கள் செய்வது வரை எல்லாவற்றிலும் இவர்களுக்கு பங்கு உண்டு.

நமது சமூகக் கட்டமைப்பில் துப்புரவு தொழில், சவரத்தொழில், சலவைத்தொழில், மருத்துவ தொழில் இவற்றில் ஈடுபட்ட சமூகத்தினர் யாரும் செய்ய முன்வராத போது தாமாக முன்வந்து இறுதிச் சடங்கு சம்பிரதாயங்களை செய்து வந்தனர். அவர்கள் வழியில் வந்த வாரிசுகள் விரும்பியோ விரும்பாமலோ இந்த தொழிலை செய்யப் பணிக்கப் பட்டார்கள்.

என்ன தான் இவர்கள் செய்வது உன்னதமான பணியாக இருந்தாலும் சமூகம் இவர்களை தீட்டாகத் தான் ஒதுக்கி வைத்திருக்கிறது. இவர்களுக்கு கிடைக்கும் கூலியும் சொற்பமானதாகவே இருக்கிறது. 

துக்க வீட்டில் மற்றவர்கள் இழிவாக கருதக்கூடிய சடங்குகளை செய்பவர்கள் என்பதால் மற்ற சுப காரியங்கள் கோவில் விசேஷங்களில் இவர்களை தீட்டாகவே இந்த சமூகம் ஒதுக்கி வைக்கிறது. இதுபோன்ற தொழிலை செய்பவர்கள் என்றால் அவர்களுக்கு பெண் கொடுப்பதற்கு கூட தயங்கும் நிலை தான் இருக்கிறது.. இறப்பு இல்லாத நாட்களில் வேறு வேலைகளுக்கு சென்று பிழைப்பதிலும் பல்வேறு நடைமுறை சிக்கல்களை இவர்கள் சந்திக்கின்றனர்.

எனினும் இறுதிச் சடங்குகளை செய்யும் தொழிலாளர்கள் இன்றைக்கும் சமூகத்தால் விலக்கி வைக்கப்பட்ட விளிம்பு நிலை மனிதர்களாகவே இருக்கிறார்கள்.

அடக்கம் முடிந்தவுடன்
இவர்களை யாரும் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. அதை விடக் கொடுமை என்னவென்றால் அவர்களுக்கு கொடுக்கும் சொற்பக்கூலிக்கும் பேரம் பேசுவது தான்.

நாடாளும் மன்னனாக இருந்தாலும் கோடிகளுக்கு அதிபதியாக இருந்தாலும், எவ்வளவு செல்வாக்கு மரியாதை இருந்திருந்தாலும் இறந்த பிறகு அவர்களுக்கு இறுதி மரியாதை செய்வது சில நூறு ரூபாய் கூலிக்கு போராடும் இந்த இறுதிச் சடங்கு செய்யும் தொழிலாளர்கள் தான்.

எத்தனையோ பேர் தன் மரணத்திற்கும் பிறகும் கூட யோசித்து ஈமச்சடங்கு , காரியம் செய்யவும் கல்லறையோ, சமாதியோ கட்டுவதற்கும் கூட முன் கூட்டியே பணம் எடுத்து வைக்கிறார்கள். 
இனி அவ்வாறு செய்யும்போது நமக்கான இறுதி மரியாதையைப் பெற்றுத் தரும் ஈமச்சடங்கு தொழிலாளர்களையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

ஒருவன் தன் வாழ்நாளில் எத்தனை கோடி சொத்துக்களை சேர்த்து வைத்து எல்லோருக்கும் வாரி வழங்கியிருந்தாலும், எத்தனையோ தான தர்மங்கள், புண்ணியங்கள் செய்திருந்தாலும் அத்துணைப் புண்ணியத்திற்கான மரியாதையும் இறுதிச் சடங்குகளை
செய்யும் இந்த எளிய தொழிலாளர்களுக்கு தான் செல்கிறது.

ஆனாலும் நம் சமூக அமைப்பில் அவர்களுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அரசாங்கம் இவர்களுக்கென்று ஏதாவது சலுகைகள் வழங்குகிறதா என்று தெரியவில்லை... அப்படி இல்லாதிருந்தால் இவர்களும் வாக்களிக்கும் குடிமகன் தான் என்பதை கருத்தில் கொண்டு இவர்களுக்கான சலுகைகள் வழங்கினால் நன்றாக இருக்கும்.
நாமும் சகமனிதனாக
இவர்களையும் மனிதர்களாக மதிக்க பழகுவோம்..!

~ஈரநெஞ்சம்

Sunday, March 12, 2023

அட்சய பாத்திரம் இல்லா அன்னபூரணிகள்



பசி என்பது எவ்வுயிர்க்கும் பொதுவான ஒரு உணர்வு தான். ஆனால் பணமில்லாத போது ஏற்படும் பசி அவமானமாகி விடுகிறது.  

எத்தனை கோடி பணமிருந்தாலும் அதைப் பசிக்கு  உண்ண முடியாது என்பதை அவ்வப்போது பேரிடர் காலங்களில் பெரும் பணக்காரர்களையும் பசிக்கு கையேந்த வைத்து அவர்கள் ஆணவத்தை தலையில் கொட்டி சுட்டிக்காட்ட தவறுவதில்லை இயற்கை.

உண்டியலில் காணிக்கை செலுத்துவதை விட பசியோடு இருப்பவருக்கு உணவு அளிப்பதே
கடவுளுக்கு மகிழ்ச்சியானது என்று கூறிய வள்ளலாரின் வழி நின்று ஆன்மீகப் பணியோடு பசிப்பிணி போக்கும் அறப்பணியையும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வரும் புதுக்கோட்டையில் வசிக்கும் பேரிளம் பெண்கள் இருவர் தற்கால மணிமேகலைகளாக
வாழ்ந்து வருகின்றனர்.

புதுக்கோட்டையில் எல்லைப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி பணியாளராக பணிபுரிந்து வரும் கம்மங்காட்டைச் சேர்ந்த பெரியநாயகி (வயது 56) தனது பதினெட்டாவது வயதில் வள்ளலாரே தன் கனவில் தோன்றி தன்னை ஆட்கொண்டதாக கூறுகிறார். திருமணமே செய்து கொள்ளாமல்  சிறு வயதில் இருந்தே புதுக்கோட்டை பல்லவன் குளக்கரையில் அமைந்துள்ள வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்திலேயே தங்கி ஆன்மீகச் சேவை செய்து வருகிறார். கடவுள் பக்தியில் சிறந்து விளங்கும் இவர் மேடைகளில் பரவசமூட்டும் பக்தி பாடல்களையும் பாடி வருகிறார். இவர் தனது கம்பீரக் குரலில் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை என்று பாடும் போது கல் மனமும் கரைந்து விடும்.


இவரைப் போலவே திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள கணக்கம்பட்டியைச் சேர்ந்த முத்துலட்சுமி(வயது 62) என்பவரும் இறைத் தேடல் காரணமாக திருமண பந்தத்தை மறுத்து துறவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இறைவனுக்கும் இரப்போருக்கும் தொண்டு செய்வதையே குறிக்கோளாக வைத்திருந்த குடும்பத்தில் அவரது தாயார் மற்றும் சகோதரனின் மறைவுக்குப் பிறகு புதுக்கோட்டைக்கு வந்து வள்ளலார் மடத்திலேயே தங்கி விட்ட முத்துலட்சுமி அம்மாள் முழு நேர பணியாக உணவு தயாரித்து வழங்கும் சேவையை செய்து வருகிறார். 

வள்ளலார் மடத்தில் அவ்வப்போது விசேஷ தினங்களில் மட்டும் செய்யப்பட்டு வந்த அன்னதான சேவை, இவர்கள் இருவரின் ஆத்மார்த்த அர்ப்பணிப்பை பார்த்து அரிசி, பருப்பு மற்றும் பணமாகவும் நன்கொடை சற்றே அதிகரிக்கவும் அன்னதானத்தை விரிவுபடுத்தி ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கும் மேலாக தினந்தோறும் உணவு சமைத்து வழங்கி  வருகின்றனர்.


எட்டுக்கு பத்து என்ற அளவில் இருக்கும் ஒற்றை அறையில் வசிக்கும் இருவரின் நாளும் அதிகாலை 3 மணிக்கே தொடங்கி விடுகிறது. உதவிக்கு என்று ஆட்கள் யாரும் இல்லாமலேயே இருவரும் இணைந்து நொய்யரிசி, பாசிப்பருப்பு, சீரகம் வெந்தயம் சேர்த்து கஞ்சி காய்ச்சி காலை   6 மணி முதல் 8 மணி வரை வழங்குவதோடு அன்னலட்சுமிகளாக அறுசுவை உணவையும் காலை 9 மணிக்குள் தயார் செய்து விடுகின்றனர். உணவு சமைப்பதற்கு தேவையான பொருட்கள் காய்கறிகள் வாங்குவது முதல் சமைப்பது சுத்தம் செய்வது என்று அனைத்து பணிகளையும் அவர்கள் இருவருமே செய்கின்றனர்.  முன்பெல்லாம் 12 மணி வாக்கில் தயார் செய்யப்பட்ட மதிய உணவு கோவிட் பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு 9 மணிக்குள்ளாகவே செய்யப் படுகிறது. எத்தனையோ ஏழை எளியோர் நோயாளிகள் முதியோர்கள் இங்கே வந்து சாப்பிடுவதும் உண்டு பாத்திரத்தில் வாங்கி செல்பவர்களும் உண்டு.
 கோவிட் பெருந்தொற்று காலத்திலும் கூட உணவு தயாரித்து வழங்கும் சேவையை ஒரு நாள் கூட விடாமல் செய்து வந்துள்ளனர். இன்னும் சொல்லப்போனால் ஊரடங்கு அதைத் தொடர்ந்த வேலையின்மை, கடையடைப்பு போன்ற காரணங்களினால் இங்கு உணவு தேடி வருவோரின் எண்ணிக்கை வழக்கத்தை விட பெருந் தொற்று காலத்தில் அதிகமாகவே இருந்துள்ளது. உலகமே கோவிட் தொற்றுக்கு பயந்து வீடுகளுக்குள் சிறைப் பட்டு கிடந்தபோதும் இவர்கள் இருவரும் துணிச்சலுடன் உணவு தயாரித்து வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. 
உணவு தயாரித்து வழங்கும் பணிக்கு என்று எந்த  ஊதியமோ பிரதிபலனோ எதிர்பார்க்காமல் இதை ஒரு சேவையாக நினைத்தே இருவரும் செய்து வருகின்றனர்.
உதவும் மனப்பான்மை கொண்ட தன்னார்வலர்கள் தானமாக வழங்கும் பணம், மளிகை பொருட்கள், காய்கறிகள் இவற்றை வைத்தே தினம் தோறும் அன்னதானம் வழங்கப்படுகிறது.. ஒவ்வொரு நாளும் 200க்கும் மேற்பட்ட ஏழை எளியவர்கள் ஆதரவற்றவர்கள் இங்கு வந்து பசியாறி செல்கின்றனர்.

ஏதோ பிறந்தோம் ஏனோ தானோ என்று வாழ்ந்தோம் என்றில்லாமல் இந்தப் பிறவி எடுத்ததற்கு பலனாக இச்சேவையை செய்து வருவதாக இருவரும் ஒருமித்த குரலில் கூறுகின்றனர். தங்களின் கடைசி மூச்சு வரை வறியோரின் பசியை வயிறாரப் போக்கும் புனிதப் பணியை செய்ய வேண்டும் என்பதே தங்களின் லட்சியம் என்றும் கூறுகின்றனர். 


பசியோடு இருக்கும் ஒருவருக்கு உணவு கொடுப்பது உயிர் கொடுப்பதற்கு சமம். அன்னதானம் செய்வதற்கு ஆயிரம் பேர் ஆயிரமாயிரம் பொன் பொருள் கொடுத்தாலும் அதை சாப்பிடும் அன்னமாக மாற்றும்  கைகளின் உழைப்பு பெரும்பாலும் பகட்டான மனிதர்களின் விளம்பர வெளிச்சத்தில் காணாமல் போய்விடுகிறது.

உணர்வுகளைக் நெறிப்படுத்த இயலாமல் மிருகங்களாய் வாழும் எத்தனையோ மனிதர்க்கு நடுவே பருவ வயதிலேயே தவ வாழ்வு வாழ்ந்து உணவு தயாரிக்கும் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு உணவு சமைத்து பரிமாறுகின்ற வாழும் பெண் சித்தர்களாகிய இவர்களின் போற்றுதலுக்குரிய பணியை மகளிர் தினத்தில் பாராட்டுவதில் பெரு மகிழ்வு கொள்கிறோம்...

~ ஈரநெஞ்சம் மகேந்திரன்

Monday, January 23, 2023

குழந்தைகள் நட்ட மரக்கன்றுகள்

கோவை விநாயகபுரம் கிரிமலை நகரில் இன்று (22/01/23) தங்கள் நகரை பசுமைநகராக மாற்றும் முயற்சியின் முதல் படியாக பெற்றோர்களும் குழந்தைகளும் இன்றைய விடுமுறை நாளை அழகாகப் பயன்படுத்தி உள்ளனர்...
மரம் வளர்ப்பது தொடர்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு  நம் முன்னாள் குடியரசு தலைவர் மற்றும் மாணவர்களின் நாயகன் APJ அப்துல் கலாம் அவர்கள் கூறிய உறுதிமொழி:
     நான் என் வீட்டிலோ, காட்டிலோ, பள்ளிக்கூடத்திலோ, வேலை இடத்திலோ 10 மரங்களை நட்டு, அதைப் பாதுகாப்பேன். நான் என் குழந்தைகளை மரம் நட்டு வளர்க்க ஊக்குவிப்பேன், என்று அவர் கடைப்பிடிக்க சொல்லிய உறுதிமொழியை இந்த பெற்றோர்களும் குழந்தைகளும் செயல்படுத்தி உள்ளனர்.
அழிந்து வரும் இயற்கையைப் பாதுகாக்கவும், மரங்களின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு புரியவைக்கவும் அவர்களை தங்கள் பகுதியில் பராமரிப்பற்ற நிலையில் இருந்த பூங்காவில் மரம் நட ஊக்கப்படுத்திய பெற்றோர்க்கு வாழ்த்துகள்..
நிகழ்வில் கலந்து கொண்ட மழலைச் செல்வங்கள் புதிதாக நடப்பட்ட மரக் குழந்தைகளுக்கு தங்கள் பெயரைச் சூட்டி மகிழ்ந்ததோடு தண்ணீர் ஊற்றி எந்நாளும் பராமரிப்போம் என்று உறுதியளித்தனர்.
எங்களை எங்கள் அப்பா அம்மா பார்த்துக் கொள்வது போல மரங்களை நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்று குழந்தைகள் கூறுகையில் கலாம் கண்ட கனவு இந்தியா கண்ணில் ஒளிர்ந்தது.

~ ஈரநெஞ்சம் மகேந்திரன்

Wednesday, November 23, 2022

உயரம் 3 அடி மற்றவர்களுக்காக தேடுவது 6 அடி

 கோயம்புத்தூர்ல கண்ணப்பநகர் அப்படின்னு சொன்னாலே எல்லாருக்கும் தெரிந்த ஒரே  இடம் சுடுகாடு தாங்க , சென்னைக்கு எப்படி  கண்ணம்மாப்பேட்டையோ அதே போல கோவைக்கு  இந்த கண்ணப்பநகருங்க .

முன்ன பின்ன செத்தாதான் சுடுகாடு பத்தி தெரியும்னு   சொல்லுவாங்க, அதனால நாம அங்க போய் பாக்கறதுக்கு வாய்ப்பு அதிகம் கிடைச்சு  இருக்காது. அப்படியே  போய் இருந்தாலும்  நான் இன்னைக்கு சந்திச்ச  இந்த நபரை சந்திக்க வாய்ப்பு இருந்திருக்காது . அப்படியே சந்திச்சு  இருந்தாலும் நம் சூழ்நிலை காரணமாக மனதில் அவ்வளவாக பதிந்து இருக்காது. ஆனா யதேச்சையா இன்னைக்கு  அவரை அந்த மாயானத்தில சந்திக்க வாய்ப்பு கிடைச்சது .


அவரை பார்த்து அண்ணா வணக்கமுங்க உங்களை ரொம்ப நாளா பார்த்துட்டு இருக்கேன் , உங்களோட பேசனும்னு நினைப்பேன் , ஆனா நேரம் கிடைக்கலை இன்னைக்கு தான் நேரம் ஒதுக்கி உங்ககிட்ட பேசனும்னு வந்தேன்   நல்லா இருக்கீங்களா , உங்களை பத்தி சொல்லுங்க உங்களோட இந்த வேலையை பத்தி சொல்லுங்க அப்படின்னு அவர்ட்ட கேட்டேன் , அதற்கு அவர் கொஞ்சம் வெட்கத்துடன் ,...



"என்ன அண்ணா நீங்க ...  நான் எல்லாம் ரொம்ப சாதாரண ஆள் தான் அண்ணா. என் பேர் வீரபத்திரன் பேர்ல தான் அண்ணா வீரம்.. ஆனா நிஜத்துல இங்க ஒன்னும் இல்லை .

என்னோட தாத்தா மிலிட்டரில வேலை பார்த்து ரிட்டயர்டு ஆனதும் இங்க  வேலைக்கு வந்ததா சொல்றாங்க , அவருக்கு பிறகு எங்க அப்பா இந்த வேலை செய்துட்டு வந்தாரு .  நாங்க கூடப்பிறந்தவங்க 6 பேரு நான் நாலாவது  குழந்தையா பிறந்தேன் இப்போ வரைக்கும் குழந்தை உயரத்தில் தான் இருக்கேன் . ஒரு அண்ணன் மன உளைச்சல்ல தற்கொலை செய்துகிட்டாரு. மீதி ரெண்டு அண்ணன் ங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு தனியா போயிட்டாங்க.  அக்காக்கு கல்யாணம் ஆயிடுச்சி ,  என்னுடைய தங்கச்சி தான் எங்க வம்சத்திலேயே அதிக படிப்பு படிச்சு இருக்கா ... (பன்னிரண்டாவது வரை ) மற்ற யாருமே படிக்கலை ... 




கலெக்டருக்கு கூட படிச்சு பரிட்சை எழுதிடலாமுங்க ஆனா நான்  மூணாவது வரைக்கும் படிக்கிறதுக்குள்ள எனக்கு நிறைய பேரு ,   நிறைய பரிட்சை வெச்சுட்டாங்க , அந்த வயசுல எனக்கு என்ன அண்ணா தெரியும் , பள்ளிக்கூடம் போகும் போதெல்லாம்  கூட படிக்கும் பசங்க கூளையன் வந்துட்டான்னும் குட்டையன் வந்துட்டான்னு சொல்றதும், வெட்டியான் பையன் பக்கத்துல உட்காராதீங்கடானு ஒதுக்கி வைக்கிறதும் என்னால தாங்க முடியலைங்க... அப்போவே நிறைய நாள் பள்ளிக்கூடம் போகாம கட் அடிச்சுட்டு ஊர் சுத்தி இருக்கேன், அம்மாவும் அப்பாவும் எவ்வளவோ சமாதானப் படுத்தி படிக்க  அனுப்புவாங்க , அங்க டீச்சருங்களே வெட்டியான் புள்ளைன்னு கூப்பிட்டு மனச காயப்படுத்த ஆரம்பிச்சதும் ஸ்கூல் புத்தகத்துக்கு எல்லாம் கொள்ளி வெச்சுட்டு இனி அந்த பக்கமே போக மாட்டேன்னு முடிவா சொல்லிட்டு ஊர் சுத்த ஆரம்பிச்சேன்.

கொஞ்சம் பெரியவனானதும் , இல்லை இல்லை கொஞ்சம் வயசு அதிகமானதும்  எங்க அப்பா சுடுகாட்டுல அவரோட ஒத்தாசையா வேலை பாத்துட்டு இருக்க சொன்னார்.  ஊர் சுத்தறேன்னு இந்த வேலை செய்ய வெச்சுட்டாங்க . ஆனா அங்கேயும் சவத்தை கொண்டு வரவங்க  டேய் குட்டையா இங்க வாடான்னும் வெட்டியான் இங்க வாடான்னு வார்த்தை கடப்பாரையால் குத்திட்டு இருந்தாங்க ...


வெறுப்பாகி , அப்பா இந்த வேலை எனக்கு வேணாம் ... வேற ஏதாச்சும் வேலைக்கு போறேன்னு சொல்லி ட்டு வேலை தேட போனேன் , யார்கிட்டேயும் நான் மயானத்துல வேலை செய்யறவன்னு சொல்லாம வேலை  கேட்டேன் . ஆனா என்னுடைய உயரத்துக்கு எங்கேயும் யாரும் வேலை கொடுக்கலை , அப்படியே மனசு வந்து ஒரு சிலர் வேலை கொடுத்தாலும்  உயரம் பத்தாததால என்னால வேலை செய்ய முடியல ...

ஒரு கட்டத்துல அப்பா எங்கேயோ காணாம போயிட்டாரு ,  எங்கே தேடியும் கிடைக்கவே இல்லை ,  மயானத்தில் வேலை செய்து கிடைக்கும் வருமானத்துல தான் எங்க குடும்பம் ஓடிட்டு இருந்துச்சு .  இப்போ அவரு இல்லாம போனதால , வேற வழியே இல்லாம  குடும்பத்துக்காக  இந்த வேலை செய்ய ஆரம்பிச்சு இதோட 15 வருஷம் ஆகிடுச்சு மனசும் உடம்பும் நிறைய காயம் பட்டு பட்டு மரத்து போச்சு . எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு பொண்ணு பார்த்தாங்க , ஆனா இந்த வேலை செய்யும் எங்க குடும்பத்துக்கு நல்லது கெட்டதுக்கு கூட பத்திரிகை வைக்க மனசு வராதவங்க எனக்கு எப்படி பொண்ணு கொடுக்க முன் வருவாங்க  . கல்யாணம் எல்லாம் கற்பனை தான்  அதை விடுங்க அண்ணா ...

இன்னைக்கு வரைக்கும் யாருமே என் பெயரை சொல்லி கூப்பிட்டதே இல்லைன்னு  நினைக்கிறேன் ..,  சவத்தை எடுத்து வர்ர சொந்தக்காரங்க சவத்துக்கு குழி போட்ட  கூலியை கூட தூக்கி தான்  போடுவாங்க , நான் ஏன்னு கேட்டா அது தான் முறைனு சொல்லுவாங்க , அதுக்கு பிறகு  வெட்டியான் குட்டையான்னு வேற கூப்பிடுவாங்க  பாருங்க.. அப்பல்லாம் ஊனம் எனக்கா  இல்லை அவங்களுக்கான்னு  மனசுக்குள்ள சிரிச்சுக்குவேன்.  ( ஆனா அவரை பார்க்கும் போது  சிரிக்கிறது மாதிரி எல்லாம் தெரியலைங்க  ) 

எவ்வளவோ பேர் என் மனசை காயப்படுத்தினவங்களுக்கும் கூட நான் சவக்குழி போட்டு  இருக்கேன் , அப்போல்லாம் அவங்க மேல  எனக்கு எந்த கோபமோ காழ்ப்புணர்ச்சியோ வந்ததில்லைங்க .  இப்போ எல்லாம் இந்த தொழிலை நான் தெய்வமா  மதிச்சு செய்துட்டு இருக்கேன் , ஆனா ஒருத்தரும் என்னை மனுசனா கூட மதிக்கிறது இல்லையேன்னு மனசோட ஏதோ ஒரு மூலைல  அழுதிட்டு தான் இருக்குன்னு.."  கண் கலங்கிட்டே சிரிச்சாரு பாருங்க .  எனக்கு இதயத்துல இருந்து அவ்வளவு வலி வந்துருச்சு...

இவரு உயரம் மூன்றடி தான்   ஆனா நமக்கெல்லாம் ஆறடி தேடி கொடுக்குறதே இவர் தாங்க . என்ன தான் , கோட்டையில கொடி  கட்டி பறந்தாலும்   என்னைக்காவது  ஒரு நாள்   இவரிடம் தானே சரணாகதி ஆகப்போறாங்க   ...

அரிச்சந்திரன் இதே மயானத் தொழில் செய்தாலும் அவரை இன்றளவும் கொண்டாடும் இந்த சமுதாயம் தான் இவரைப் போன்றோரை மனதளவில் காயப்படுத்திக் கொண்டிருக்கிறது... என்னைக்கு தான் திருந்த போகிறார்களோ இந்த நடமாடும் சவங்கள் ..!!!


கண்ணீருடன் 

ஈரநெஞ்சம் மகேந்திரன்



Tuesday, October 11, 2022

நம்ம ஊர் நாசா ஜெயலெட்சுமி பற்றி தெரியுமா

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் 
நம் தமிழ் நாட்டின் பெருமையை நாசா வரை கொண்டு சென்ற பெண் குழந்தையான ஜெயலட்சுமி...


பெண் குழந்தைகளுக்கான உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களுக்கான அதிகாரத்தைப் பெறவும், பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கவும்,  அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கவும் , அவர்களுக்கு நேரும் பிரச்சினைகளைத் தடுக்கவும்   அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில்   ஐக்கிய நாடுகள் சபை  2011-ம் ஆண்டு  தீர்மானத்தை நிறைவேற்றியது , அதன்படி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11-ம் நாள், ‘சர்வதேச பெண் குழந்தைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது.  

பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்பதை மையமாக கொண்டு இந்தநாளில் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த +2 தேர்வெழுதி நல்ல மதிப்பெண்கள் பெற்று கல்லூரி படிப்பை தொடரும் 18 வயதான ஜெயலட்சுமியை ஊக்கப்படுத்துவதற்கான ஒரு பதிவு ஆகும் 

ஆமாம் யார் இந்த ஜெயலட்சுமி ... 
பழுதடைந்த  வீடு,  குடும்பத்தை விட்டு வெளியேறிய பொறுப்பற்ற தந்தை ,  மனநிலை பாதித்த  தாய், தாயையும் கவனித்துக் கொண்டு  தன்னுடைய தம்பியின் கல்வி முதல் பாதுகாப்பு வரை பொறுப்பேற்று பெரும்  குடும்ப சுமை கொண்ட  பின்னணியில் வாழ்ந்து வரும்   மாணவி தான் ஜெயலட்சுமி.

வறுமையான குடும்ப பின்னணி இருந்தபோதும் ,  இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறாள் இச்சிறு பெண் ... 

மிக கடினமான  குடும்பச் சூழலில் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து, சர்வதேசத் தேர்வில் கலந்துகொண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா செல்லக் கடந்த ஆண்டு தேர்வானார் ஜெயலட்சுமி.   நாசா ஜெயலட்சுமி என இப்போது புதுக்கோட்டையே கொண்டாடுகிறது ...

நாசா சென்று வர பலரும் உதவ முன்வந்திருக்கின்றனர் .  ஒரு சமூக அமைப்பு ஜெயலட்சுமி யிடம்  "பாப்பா உனக்கு நாங்க பெருசா ஏதாவது செய்யணும் , என்ன வேணும் கேள் எதுவாக இருந்தாலும் நாங்க உனக்கு செய்கிறோம்" என்று வாக்கு கொடுத்தனர். 

அதற்கு ஜெயலட்சுமி கேட்ட உதவி என்ன தெரியுமா , "ஐயா எனக்கு இப்போதைக்கு நாசா சென்றுவர தேவையான உதவி கிடைத்து இருக்கிறது. ஆனால் எங்கள் ஊரில்  யார் வீட்டிலும் கழிப்பிட வசதி முறையாக இல்லை.  அதனால் எல்லோரும் மிகவும் சிரமப்படுகிறோம். முடிந்தால் எங்கள் ஊருக்குத் தேவையான கழிப்பிட வசதி செய்து கொடுங்கள்" என்று கேட்டு இருக்கிறாள். அந்த அமைப்பினர் அவளது இந்த வேண்டுகோளை எந்த மறுப்பும் தெரிவிக்காமல் ஏற்று, அவள் வசிக்கும் புதுக்கோட்டை அருகே இருக்கும் ஆதனங்கோட்டையில்  126 கழிப்பறைகள் கட்டிக் கொடுத்திருக்கின்றனர்.

இது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுங்களா :

'வறுமையிலும் செம்மை' காத்து, தனக்கென்று எதுவும் கேட்காமல் ஊருக்கான தேவையை கேட்டு பூர்த்தி செய்த அவளது மனித நேய குணத்தை  போற்றும் விதமாக 'கனவு மெய்ப்படும்' என்ற தலைப்பில் மகாராஷ்டிர மாநிலத்தில்  7ஆம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் ஜெயலட்சுமி  இடம்பெற்றிருக்கிறாள் . 

நம் நாசா ஜெயலட்சுமியின் குடும்ப வளர்ச்சிக்கு நம்மாலும் கூட உதவ முடியும்...

ஆமாம் அவளது அன்றாட குடும்பத் தேவைக்காக தினமும் மாலையில் மொத்தமாக முந்திரி பருப்பை வாங்கி சுத்தம் செய்து பாக்கெட்டுகளாக்கி விற்பனை செய்யும்  குடிசை தொழில் செய்து தான் தனது குடும்பத்தை கவனித்து வருகிறாள் சிறுமி ஜெயலட்சுமி .
 அவளது இந்த தொழிலை நாமும் ஊக்கப்படுத்தலாம் .

அதற்கு நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஜெயலட்சுமியின் அலைபேசியின்  +91 70948  16102  இந்த  எண்ணுக்கு அழைத்து நமக்கு தேவையான தரமான முந்திரி பருப்புகளை ஜெயலட்சுமியிடமே வாங்கி கொள்ளலாமே. சுயநலமாய்  யோசிக்காமல் சுயமாக சம்பாதித்து  வாழ்ந்து காட்டணும் என்ற வைராக்கியம் கொண்ட ஜெயலட்சுமிக்கு இது பெரிய உதவியாக இருக்கும் .

முந்திரி பருப்பிற்கு ஆர்டரை பதிவு செய்ய  ஜெயலட்சுமிக்கு கால் செய்யும் பொழுது அவளுக்கு வாழ்த்துச் சொல்ல மறந்துடாதிங்க .

நன்றி 

~ஈரநெஞ்சம் மகேந்திரன்