Sunday, March 22, 2015

சாதனை பெண்களுக்கு சுதேசி "சக்தி சாதனா" விருது~மகேந்திரன்

இந்த மாதம் பெண்கள் மாதம் ஆமாம் மார்ச் 8 உலக மகளிர் தினம் இந்த தினத்தை கொண்டாடும் வகையில் உலகெங்கிலும் பல நிறுவனங்கள் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்திக்கொண்டு வருகின்றன. இதில் ஒரு நிகழ்வாக உலகெங்கிலும் மாதம் இருமுறை வெளிவரும் " சுதேசி " பத்திரிக்கை கோவையில் சாதனை பெண்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. அதில்

 கீதாராணி (பிராணிகள் பாதுகாப்பு ஆர்வலர்) http://eerammagi.blogspot.in/2015/03/blog-post.html 
 
 

 

 லட்சுமி பாட்டி (முதியோர் தடகள வீராங்கனை) http://eerammagi.blogspot.in/2015/03/blog-post_10.html இவர்களுக்கு சுதேசி "சக்தி சாதனா" விருது 2015 

 

 

மற்றும் செல்வி. இலட்சியாமதியழகி (ஓவியர்) http://eerammagi.blogspot.in/2015/03/blog-post_17.html 

 

 

 அவர்களுக்கு "யுவ சக்தி சாதனா" விருது 2015 எழுத்தாளர் திரு ராஜேஷ்குமார் அவர்களால் வழங்கி கௌரவித்தார்கள் .

இந்த மூவரையும் நான் நேரில் சந்தித்து அவர்களை எனது கட்டுரை வாயிலாக அறிமுகப்படுத்தியதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். விருது வழங்கி கௌரவித்த சுதேசி பத்திரிக்கைக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிதனையும் தெரிவித்துக் கொள்கிறேன் .

~மகேந்திரன் 


கால் இழந்த 5 வயது சிறுமிக்கு உதவி ~ஈரநெஞ்சம்

ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM" Services
*********************************************************************
(434/ 21-03-2015)
தஞ்சாவூரைச் சேர்ந்த மெஷராஜ் கனி என்ற பெண்ணின் மகள் ஆப்ரின் 5 வயது சிறுமி இரண்டு வருடங்களுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் தன்னுடைய வலது கால் எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டு கால் அகற்றப்பட்டது.
கால் இழந்த துக்கம் முடிவதற்குள் அவளின் தந்தை அப்துல் ஹக்கீம் அவர்களை நிராதரவாய் விட்டுவிட்டு எங்கோ தலைமறைவாகி விட . யாரும் ஆதரவற்ற நிலையில் இருந்த அவர்கள் ஈரநெஞ்சம் அறக்கட்டளை தொடர்பு கொண்டனர். அவர்களின் நிலைமையை கண்ட ஈரநெஞ்சம் அறக்கட்டளை அச்சிறுமிக்கு இலவசமாக செயற்கை கால் பொருத்த முன்வந்து.இன்று 21/032015 அச்சிறுமிக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டது.
அதுமட்டுமல்லாது சிறுமி வளர வளர செய்கை காலின் அளவு மாறும். அப்படி புதிதாக பொருத்தப்படும் அத்தனை செயற்கை கால்களின் செலவும் ஈரநெஞ்சம் அறக்கட்டளையே பொறுப்பு ஏற்றுக் கொண்டது எனபதனை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
~ஈரநெஞ்சம்

Tuesday, March 17, 2015

இளம் தூரிகை தேவதை இலட்சியாமதியழகி

" இளம் தூரிகை தேவதை "

S,இலட்சியாமதியழகி

பாண்டிச்சேரியை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். மிக மிக அழகான ஊர். அதிக பெருமைகள் நிறைந்த ஊர். அங்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக ஒரு சின்னஞ்சிறுமியின் திறமையைப் பற்றித் தெரிந்துக்கொள்வோம் .
சரவணக்குமார், ஆதிரை தம்பதியினரின் ஒரே செல்லப் புதல்வி தான் இலட்சியமதியழகி. இப்போது இந்தச் சிறுமிக்கு வயது 13 ஆகிறது , ஆனால் 3 வயதில் இருந்தே இந்த குட்டிப் பெண்ணுடைய அட்டகாசமான திறமைகளுக்கு அளவே இல்லை.



இலட்சியாமதியழகி இந்த பெயருக்கு ஏற்றார்ப் போலவே அழகும் தீட்சண்யமான பார்வையும் கொண்டு இருக்கிறாள். இவளது திறமையும் பற்றி சொல்வதென்றால் நேரம் பற்றாக்குறையாகத்தான் இருக்கும். அவ்வளவு நீளமான பட்டியலைக் கொண்டு இருக்கிறாள். சற்று மூச்சை ஆழமாக விட்டுக் கொள்ளுங்கள். இப்போ படிங்க...

பேச்சாற்றல் :
லிட்டில் ஏஞ்சல் பள்ளியில் நடந்த ஆண்டுவிழாவில் LKG படித்தபோது இவளது பேச்சாற்றலை வெளிப்படுத்தும் விதமாக தனது முதல் மேடை பேச்சை ஆரம்பித்தார். இன்று வரை தனது அபரிமிதமான பேச்சாற்றலால் பல சிறப்பு விருந்தினர்களையும் அசத்தி வருகிறாள்.

விளையாட்டு :
இறகு பந்தில் இவள் வாங்கிய பதக்கங்களும் பரிசுகளும் மிகமிக அதிகம். அதிலும் பள்ளிகளுக்கான தேசிய அளவிலான போட்டிகளில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாண்டிச்சேரியில் இரண்டாம் இடத்தில் இருக்கிறாள் . அதமட்டுமின்றி ஜம்மு,காஷ்மீர், சண்டிகர் ஆகிய இடங்களில் நடைபெற்ற இறகுப் பந்து போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களையும் பரிசுகளையும் குவித்துள்ளார்.

நாட்டியம் :
முறையாக பரதநாட்டியம் கற்று இருக்கிறாள், இவளின் முக பாவமும், அபிநயம் பிடிக்கும் அழகும்.. அடடா ! இவளின் நாட்டிய திறமைக்கு சான்றாக பொதிகை தொலைக்காட்சி இவளது நடன நிகழ்ச்சியை ஒளிபரப்பியது .

சிறப்பு நிகழ்ச்சி :
உள்ளூர் தொலைக்காட்சியில் விழாக்காலங்களில் சிறப்பு நிகழ்ச்சியாக, இவள் மக்களுடன் தொலைபேசியில் நேரடியாக கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்கிறாள்.

தேசப்பற்று :
இது மட்டுமா..! இந்த குட்டிப் பெண்ணுக்கு தேசப்பற்றும் மிக அதிகம்.
சாரணர் இயக்கத்தில் இருக்கும் இலட்சியாமதியழகி இந்தியா பாகிஸ்தான் எல்லைக்கு சென்று அங்கு ஒரு வாரம் நடைபெற்ற " தேசிய ஒருமைப்பாட்டு " முகாமில் கலந்து கொண்டு தன் தேசப்பற்றை நிரூபித்திருக்கிறாள்.

ஓவியம் :
இவளுடைய திறமைகளில் மிக முக்கியமானது ஓவியம் தீட்டுவது. இவளது தந்தை சரவணக்குமார் ஒரு ஓவிய ஆசிரியர் புலிக்குப் பிறந்தது பூனையாகவா இருக்கும். LKG படிக்கும்பொழுது நடந்த ஓவியப் போட்டியில் தானே சுயமாய் சிந்தித்து காபி பொடியில் நீரைக் கலந்து இவள் தீட்டிய அழகான ஓவியம் பலரது பாராட்டுக்களைப் பெற்றது. அதன்பின் ஓவியத்தில் தன் திறமைகளை வெளிக்காட்டத் தொடங்கிய இலட்சியாவின் படைப்புகள் அவளது 10 வது வயதிலேயே தனியாகக் காட்சிப் படுத்தப்பட்டது (exibition) குறிப்பிடத்தக்கது.



படிப்பு :
படிப்பில் முதல் இடமும் இவளுக்கு தான். இவள் LKG முதல் நாள் வகுப்புக்கு சென்றது முதல் தற்போது 8 ஆம் வகுப்பு வரையிலும் பள்ளி நாட்களில் எதற்காகவும் விடுப்பு எடுத்ததே இல்லை.

பாராட்டு :
இலட்சியாமதியழகியை பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் , முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம் முதல் நம்ம ஊர் பாக்கியராஜ் முதல் கொண்டு பாராட்டாத பிரமுகர்களே இல்லை ஒரு விழாவில் பாக்கியராஜ் " பல்கலை அரசி " என்று பட்டமும் கொடுத்து கௌரவப்படுத்தி இருக்கிறார் .

இவ்வளவு திறமைகளுக்கு சொந்தமான அந்த குட்டிதேவதை இலட்சியாமதியழகியிடம் இதெல்லாம் எப்படி டா சாத்தியம் என்றபோது :
" அம்மா அப்பா இருக்காங்க எதைக் கேட்டாலும் செய்து கொடுப்பாங்க . ஆசிரியர்கள் என்னுடைய ஆர்வத்தை முழுமையாக அறிந்து என்னை மேலும் மேலும் ஊக்கப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். ' நல்லது எது நினைத்தாலும் எல்லோரும் நம்ம கூட இருப்பாங்கன்னு ' அம்மா அப்பா சொல்லுவாங்க. என்னுடைய வெற்றிக்குக் காரணம் என்னுடைய ஆர்வமும் எனக்கு ஊக்கம் கொடுக்கும் இவர்களும் தான் ".

இலட்சியாமதியழகியின் தந்தை சரவணக்குமாரும் ஒரு ஓவிய ஆசிரியர். அவரிடம் ' உங்கள் மகளுக்கு ஏதேனும் சிறப்பு பயிற்சி கொடுத்தீர்களா? ' எனக் கேட்ட பொழுது புன்னகையுடன் மறுத்தார்.

" எங்கள் மகள் இலட்சியாமதியழகிக்கு இயற்கையிலேயே ஓவியம் வரையும் திறமை இருப்பதை அறிந்துக் கொண்டேன். அதில் சில திருத்தங்களுக்கான பயிற்சி மட்டுமே கொடுத்தேன். இலட்சியா இடதுகை பழக்கம் கொண்டவள். இடது கையில் வரைய வேண்டாம் என்று மட்டும் ஆரம்பத்தில் கண்டித்து இருக்கிறேன். ஆனாலும் அதுவே அவளுக்கு சிறப்பம்சமாக இருக்கிறது. நான் நடத்தும் ஓவியப்பள்ளியை இப்போது பெரும்பாலும் அவள் தான் கவனித்துக்கொள்கிறாள். அது மட்டுமல்ல பணம் செலுத்த முடியாத ஏழை மாணவமாணவிகளை தனி அக்கறையுடன் கவனித்துக் கற்பிக்கிறாள் " என்று கூறினார்.

இலட்சியாமதியழகியின் அம்மா ஆதிரை இவரைப்பற்றி கூறும் பொழுது "என் மகளுக்கு கடவுள் இயற்கையிலேயே நல்ல திறமைகளை கொடுத்துள்ளார். அவளுடைய ஆர்வத்தை அறிந்துக் கொண்டு நாங்கள் அவளை ஊக்கப்படுத்தினோம் . எங்களுக்கு இவ்வளவு பெருமைகளை அள்ளித்தரும் எங்கள் செல்லமகள் உண்மையிலேயே கடவுள் தந்த வரமே" என்றார் கண்களில் பெருமிதம் பொங்க.. அந்த பெருமிதம் இலக்கியாமதியழகியின் தந்தை முகத்திலும் பிரதிபலித்தது.

இவ்வளவும் சரிதான். உன்னுடைய எதிர்கால இலட்சியம் என்னடா? என்று இலட்சியாமதியழகியிடம் கேட்டதற்கு பளீர் என புன்னகையோடு சொன்னாள் " நான் IAS ஆகப்போறேன் ".. அப்பப்பா... கண்களில் தான் என்னே உறுதி..!!!

இவ்வளவும் சாதித்த இலட்சியாவால் அது மட்டும் முடியாதா என்ன??

நமது வருங்கால கலெக்டரையும் அவரின் பெற்றோரையும் வாழ்த்தாமல் விடலாமா ?

இலட்சியா நிச்சயம் தனது இலட்சியம் எட்டுவாள்..!

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..!

நீங்களும் வாழ்த்துங்கள்..!

~மகேந்திரன்

Tuesday, March 10, 2015

தன்னம்பிக்கை இஸ் தி சீக்ரெட் ஆப் மை எனர்ஜி ~ லட்சுமி பாட்டி



" வயசாகிடுச்சு கண்ணு சரியா தெரியலை, சர்க்கரை வியாதி வேற, பசங்களுக்கு பாரமா இருக்கேன் என்னால என்ன பிரயோஜனம் இருக்கு " இப்போது இருக்கும் பெரும்பாலான முதியோர்கள் இப்படித்தான் தங்களது இயலாமையில் புலம்பி வேதனையை கொட்டித் தீர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சில தாத்தா பாட்டிக்கள் பேச ஆரம்பித்து விட்டால், 'அந்தக் காலத்துல எல்லாம் நாங்க' என்று ஆரம்பிக்கும் போதே காதைப் பொத்திக் கொண்டு ஓடிவிடுவார்கள் இளவட்டங்கள் . நாளை 60 வயது தாண்டிவிட்டால் நாமும் இப்படித்தான் புலம்ப ஆரம்பித்து விடுவோம். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏன் என்றால் இன்றைய காலச் சூழல் அப்படி .

ஆனால் கோவையில் சிங்கநல்லூர் அருகே உள்ள உப்பிளிபாலயத்தில் M.லட்சுமி பாட்டி 60 இல்லைங்க இந்த மாதம் முடிந்தால் அவங்களுக்கு வயது 70 இவங்களை பற்றி அப்படி என்ன சுவாரஸ்யம் இருக்கும் என நினைக்குறீங்களா ... 70 வயது என்பது தள்ளாத வயதல்லவா..! ஆனால் அந்த தள்ளாத வயதிலும் தடகள வீராங்கனையாக பதக்கங்களை தள்ளிக்கிட்டு வராங்க..! இவங்க நல்ல சமூக சேவகியும் கூட, அது மட்டும் இல்லைங்க ஊர் மெச்சும் பாசக்காரியும் கூட... அறிமுகம் போதும், இவங்களை பற்றி கொஞ்சம் விரிவா சொல்றேன்..!

மருதாசலம், கன்னியம்மாள் அவர்களுக்கு இரண்டாவது மகளாக பிறந்தவங்க தான் இந்த லட்சுமி. இவங்களுக்கு மூத்தவங்க ஒரு அக்கா இருக்காங்க அவங்க நம்ம லட்சுமி பாட்டி 4 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது திருமணமாகி கணவர் வீட்டுக்கு போய்ட்டாங்க, தம்பி இரண்டு பேர் தங்கை இரண்டு பேர். ஒரு தங்கை கைக்குழந்தையாக இருக்கும் பொழுது அப்பா மருதாச்சலம் காலமாகி குடும்ப பாரம் இவங்க மேல இறங்க படிப்பை 5 ஆம் வகுப்போடு நிறுத்திவிட்டு தனது தாயாரோடு வீட்டு வேலைக்கும், காட்டு வேலைக்கும் சென்று தம்பி தங்கையரை படிக்க வைத்து  கரைச்சேர்த்தார். அக்காலத்தில் பெண்களுக்கு திருமணம் 10 வயது 12 வயதினிலே முடித்து விடுவார்கள் அப்படி இருக்க இவங்க குடும்ப சூழலின் காரணமாக திருமணம் தள்ளிப்போவது அறியாது சமூதாயம் இவங்க மேல பல பழிகளை சுமத்தியது. அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தனக்கேற்ற கணவராக  சண்முகம் என்ற பொதுநலத்தின் மீது அக்கறைக் கொண்ட ஒரு நல்ல மனிதரை தனது 27 ஆம் வயதில் மணமுடித்தார்.

லட்சுமி பாட்டி சமூதாய சிந்தனை கொண்டவராக இருந்ததால் கணவர்  சண்முகம் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார். இதனால் 1973 ஆம் ஆண்டு ஜனநாயக மாதர் சங்கத்தில் சேர்ந்து சமூதாயத் தொண்டாற்ற துவங்கினார். 1989 - 1994 அறிவொளி இயக்கத்தில் இணைத்து கல்விக்காக தம்மை அற்பணித்தார். அதன் பிறகு பொதுமக்களுக்காக, அரசாங்கத்திடம் இருந்து பல உதவிகள் வாங்கித் தருவதற்காக போராடி வந்தார். இதனாலேயே 2002 இல் இவர் இருக்கும் பகுதியான உப்பிளிப்பாலயத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடந்த தேர்தலில் வெற்றிப்பெற்று இயக்குனராக பதவி வகித்தார். பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்த அந்த வங்கி இவரது முயற்சியினால் பொதுமக்களிடையே முதலீடுப் பெற்று நல்ல நிலைமைக்கு உயர்த்தினார். அதோடு மட்டுமல்லாமல் அரசு உதவியுடன் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த கூட்டுறவு வங்கி,  சொந்த கட்டிடத்தில் இயங்க காரணமாகினார். அத்துடன் மூன்று கூட்டுறவு அங்காடியும் இவரது முயற்சியால் அப்பகுதிக்கு கொண்டு வந்தார்.

அது மட்டும் இல்லைங்க நல்ல மேடை நாடகக் கலைஞராகவும் இருந்து சும்மா, வாங்கமாட்டோம் வரதட்சணை , வேண்டாம்யா அதே வெள்ளை மாத்திரை , போன்ற நாடகங்களையும் இயற்றி நடித்தும் இருக்கிறார்.

இப்படி 62 வயது வரை மக்களுக்காகவே பரபரப்பாக இருந்தவர். 2008 ஆம் ஆண்டு ஒரு கட்டத்தில் தனது 90 வயதான தாயார் உடல்நலம் குன்றவே இவரது வாழ்க்கை ஓட்டத்தை நிறுத்திக் கொண்டார் தனது தாயாரை கவனிப்பதற்காக. தனது தாயாருக்காக இவர் தான் தலைவராகவும், ஆலோசகராகவும் இருந்துவந்த 5 மண்டலங்களின் 256 சுய உதவிக் குழு உட்பட அனைத்து சமூகப்பணிகளிலும் இருந்து விடைபெற்றுக் கொண்டார். ஐந்து மாதங்கள் தனது தாயாருடனே இருந்து கவனித்து வந்தார். தாயார் காலமாக, அதன் பிறகும் வீட்டில் சிறிது காலம் அமைதியாக இருந்து வந்தார். அதற்கு அடுத்த வருடமாக கணவரையும் தனது மகனையும் பறிக்கொடுத்தார். கவலைகள் சூழ்ந்தாலும் தனிமைத் தன்னை தாக்கிவிடக் கூடாது என்றும் தான் யாருக்கும் பாரமாக இருந்துவிடக் கூடாது என்றும் மீண்டும் வீட்டு வேலைக்கு சென்று சொந்தக்காலில் நின்றார்.

அதன் பிறகு 63 வருடகாலம் தனக்குள் உறங்கிக்கொண்டிருந்த சிங்கத்தை தட்டி எழுப்பியதுப் போல 2008 இல் தமிழ்நாடு மூத்தோர் தடகள அமைப்பில் இணைந்து ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல், தட்டு எறிதல் , குண்டு எறிதல் என அனைத்துப் போட்டிகளிலும் மாநில அளவிலும், தேசிய அளவிலும் கலந்துக்கொண்டு  பதக்கங்களை அள்ளி வருகிறார். இதுவரை கோவை, திருச்சி, சென்னை, தூத்துக்குடி என தமிழ் நாட்டில் மட்டும் இல்லாமல் டெல்லி, சண்டிகர், பூனா என வேறு மாநிலங்களுக்கும் சென்று இந்த தள்ளாத வயதினிலும் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். இருப்பது என்னவோ குடிசை வீடு தான், ஆனால் வீடு நிறைய பதக்கங்கள், கோப்பைகள், சான்றிதழ்கள் ஆகியவற்றால்  நிரம்பியிருக்கின்றது. பேரன், பேத்திகள் வீட்டிற்கு வந்தால் விளையாடுவதற்கு இவர்கள் வென்று வாங்கிய கோப்பைகளும், பதக்கங்களும் தான் விளையாட்டுப்பொருட்கள்.

அந்தக் கால ஐந்தாம் வகுப்பு படிப்பு என்றால் இந்த காலத்தில் ஐ ஏ எஸ் போல ...

எங்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க என்ற போது,
 " திருடாதிங்க, பொய் சொல்லாதிங்க, சின்னசின்ன விஷயத்தை எல்லாம் பெருசு படுத்தி உங்கள் மனதை நீங்களே காயப்படுத்திக்காதிங்க. பணம் பெருசு இல்லை ; மனந்தான் பெருசு, விட்டுக் கொடுத்து வாழுங்க, உழைத்து வாழுங்க, யார் மனதையும் நோகுடித்து வாழ்வதில் இன்பம் இல்லை. மற்றவர்களுக்காக நம்மை அர்பணிப்பதில் தான் இன்பம் இருக்கிறது " என்றார்.

இறுதியாக லட்சுமி பாட்டியிடம் உங்களுடைய இந்த சுறுசுறுப்பிற்கு காரணம் என்ன என்று கேட்ட போது சிரித்துக்கொண்டே...

" தன்னம்பிக்கை இஸ் தி சீக்ரெட் ஆப் மை எனர்ஜி " என்றார்.

~ மகேந்திரன்

Sunday, March 08, 2015

கீதா ராணி இவர் இருநூறு வாயில்லா குழந்தைகளின் தாய்

" எதற்கும் ஒரு எல்லை உண்டு ;
ஆனால் அன்பிற்கு இல்லை எல்லை ".



நம் ஊர்  சாலையில் அன்றாடம் சொறி பிடித்த நாய்களையும், ஊளையிட்டுக்கொண்டுச் சுற்றித் திரியும் நாய்களையும் கடக்காமல் நாம் ஒரு இடத்திற்கு செல்ல முடியவே முடியாது. சில சமயம் பலர் அந்த நாய்களை கல்லெடுத்து அடிப்பதையும் கூட நாம் பார்த்திருப்போம். அப்படிப் பார்க்கும் போது நம்மால் பரிதாபம் மட்டுமே படமுடிகிறது. ப்ளூகிராஸ் அமைப்புகள் என்று நாம் அதிகம் கேள்விப்பட்டு இருக்கிறோம், ஆனால் அதன் செயல்பாடுகளை நாம் என்றாவது நேரில் பார்த்திருப்போமா? அல்லது அந்த அமைப்பின் தொலை பேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளத்தான் முயன்றிருக்கின்றோமா...?

ஆனால் கோவையின் அருகேயுள்ள  காரமடை அருகே பெரியமத்தம்பாளையத்தில் கீதா ராணி 58  என்னும் பெண்மணி (தனியார் அமைப்பு) சாலையோரம் சுற்றித்திரியும் 200 க்கும் மேற்பட்ட நாய்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவருடைய குழந்தையை போலவே பாவித்து பராமரித்து வருகிறார் . இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு அவர்களின் சிறப்பு சந்திப்பு பேட்டி உங்கள் பார்வைக்கு.

தாய் தந்தையின் அன்பு காணாது வளர்ந்தவர் தான் கீதா ராணி. திருமண வாழ்விலும் தனது பொறுப்பில்லாத கணவரால் ஏமாற்றங்களுக்கும், பல அவமானங்களுக்கும் உள்ளானவர். எப்படியாவது தனது குழந்தைகளை ஆளாக்கி திருமணம் முடித்தாக வேண்டும் என்ற மிகப்பெரிய கடமையை ஏற்று செவ்வனே நிறைவேற்றிய பின், ' மனிதர்கள் என்றாலே இப்படித்தான் ' என்று வாயில்லா ஜீவன்களுக்காக தனது வாழ்க்கையை அர்பணித்து கடந்த பத்து வருடங்களாக 'ஸ்னேகாலயா' என்ற பிராணிகள் காப்பகத்தை நடத்தி வருகிறார் .

 

இங்கே நேரில் சென்று பார்த்தபோது மனிதர்கள் தான் பலர் ஆதரவை தொலைத்துவிட்டு காப்பகங்களில் அன்புக்கு ஏங்குகிறார்கள் என்று நினைத்தால் .  இங்கு உள்ள எண்ணற்ற வாயில்லா ஜீவன்களும் அதே அன்புக்குத்தான் ஏங்குகின்றது என்பதை கண்கூடாக காண முடிகிறது. 'ஸ்னேகாலயா' நிறுவனர் அன்பின் கடவுளாக திகழும் கீதா ராணி அவர்கள் கூறும் பொழுது, " மனிதர்களைப் போல தாங்க இந்த குழந்தைகளும் முழுக்க முழுக்க அன்புக்கு அடிமையாகி விடுவாங்க. இந்த குழந்தைகளுக்கு நல்லாவே தெரியும்ங்க நல்லவர்கள் யார் உள்ளத்தில் கள்ளம் கொண்டவர்கள் யார் என்று... பாருங்க நீங்க இங்க இருக்கீங்க எல்லா குழந்தைகளும் உங்களை வரவேற்கதான் சத்தம் போடறாங்க யாரும் கடிக்க மாட்டாங்க.

பலரது வீட்டில் இந்த குழந்தைகள் செல்லமாக வளர்ந்தவை தாங்க கொஞ்சம் நோய் வாய்ப்பட்டு விட்டால் எங்களிடம் கொடுத்து விடுவார்கள். அல்லது சாலையில் விட்டுவிடுவார்கள். சாலையில் விட்ட குழந்தைகள் தனது எஜமானை விட்டு பிரிய மனம் இல்லாமல் அவர்களைத் தேடிப்போவாங்க ஆனால் அந்த எஜமானர்கள் எப்படியோ எங்களது முகவரியை தேடி இவைகளை அழைத்துப் போகச் சொல்லுவாங்க. நாங்க மறுக்க மாட்டோம் சரி என்று நேரில் சென்று வாயில்லா குழந்தையை அன்போடு அழைத்து வந்து அவைகளுக்கு வைத்தியம் செய்து பராமரிப்போம்.




நான் அழகுக் கலை பயின்றுள்ளேன். என்னுடைய மகளுக்கும் அதை கற்றுக்கொடுத்து ஒரு அழகு நிலையம் வைத்துக் கொடுத்துள்ளேன். அதில் வரும் சம்பாத்தியத்தில் பாதியை இந்த குழந்தைகளுக்காக கொடுத்துவிடுவாள். அவளைப் போலவே, என் மருமகளும் அழகு கலை நிபுணராக இருப்பதால் அழகு நிலையம் வைத்திருக்கிறாள். அவளும் உதவி செய்கிறாள். அது மட்டும் இல்லாமல் எங்களைப் பற்றித் தெரிந்தவர்கள் அவ்வப்போது நிதி உதவி கொடுக்கிறார்கள் அதனால் இந்த 200 குழந்தைகளுக்கும் வைத்தியம், உணவு, பராமரிப்பு இடம் எல்லாமே முழுமையாக கிடைக்கிறது. என்னுடைய இலட்சியம் எல்லாம் கோவையில் ப்ளுகிராஸ் இல்லைங்குற குறை இல்லாமல் அதை முழுமையாக நடத்தவேண்டும். வாயில்லா ஜீவன்களை வதைக்காமல் தவிக்க விடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் " என்று கூறினார்.

மேலும் அவர் கூறும் பொழுது, " கோவையைச் சுற்றி உள்ள எந்த இடத்திலாவது  இப்படி வாயில்லா குழந்தைகள் தவிப்பதை பார்த்தால் 8870207443 என்ற என்னுடைய அலைபேசியில் அழைத்து தகவலை தெரிவித்தால் நாங்கள் எங்களது பணியாளருடன் நேரில் வந்து குழந்தைகளை அழைத்து செல்கிறோம் " என்றார்.



கீதா ராணி அவர்களிடம் நாம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்கிருக்கும் நாய்களை அவர்கள் அன்போடு எங்கள் குழந்தைகள் குழந்தைகள் என்று அழைப்பதை பார்க்கும் பொழுது . அந்த வாயில்லா ஜீவன்களை எந்நாளும் நாய் என்று கூற மனம் வரவில்லைங்க.

இன்று மகளிர் தினம் இப்படிப்பட்ட அன்பின் சொரூபமான பெண்களை நாம் போற்றாமல் இருக்க முடியுமா..?
கீதா ராணி அம்மாவுக்கு மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..!!!
உங்களால் எல்லா பெண்களும் பெருமையடைகிறார்கள்..!

~ மகேந்திரன்