Wednesday, August 12, 2015

நேற்றைய சவங்களுடன் நாளைய சவம்



ஒருவன் பிறந்தநாளில் கூடும் கூட்டம்
அவனை பெற்றவரின் அங்கீகாரத்தை சொல்லும்

ஒருவன் இறந்தநாளில் கூடும் கூட்டம்
அவன் வாழ்ந்த வாழ்க்கையை  சொல்லும்

வாழ்க்கை தத்துவம் எல்லோருக்கும் தெரியும்
இருக்கும் பொழுது இல்லாத மரியாதை
இல்லாத பொழுது இருக்கும்

பெற்றது பதினாறாக இருந்தாலும்
அனாதையாக இறந்தவர்க்கு
அடுத்த ஜென்மத்திலாவது
அம்மரியாதை கிடைக்கட்டும்.

வருவதற்கு நாலு கால்
போவதற்கு  எட்டு கால்
இவர்களுக்கு மட்டும் இரண்டு கால்

வாழ்க்கையில் வென்ற சவத்திற்கு
நாளைய சவங்கள்  கூட்டம் வேறு
அதன் அர்த்தம் வேறு

வாழ்க்கையே இல்லாமல் போன சவத்திற்கு
நாளைய சவம் ஒன்னு மட்டுமே வரும்
அதன் அர்த்தம் வேறு

நான் நாளைய சவம் ,
இன்றைய சவத்தை சுமந்து
மயான வீட்டில்
நிரந்தரமாக உறங்க வைத்தாயிற்று,

ஆடிய மனிதன்
ஆடாத தொட்டிலில்
உறங்குகிறான்
ஆறறிவு ஓய்ந்தது
ஆட்டம் அடங்கியது.

முடிந்தது வேலை
திரும்பும் வேளை
சற்று திரும்பிப் பார்க்கிறேன்

அரைஞாண்கயிற்றை கூட விட்டு வைக்காத இடம்
இது

ஆனாலும்
சாதிக்கொரு மேடை
அனாதைக்கு ஒரு மேடை

அம்மணமாய்
இருந்தாலும் இறந்தாலும்
அவனவனுக்கு மதம் தான் முக்கியம்.

வாழும் போதும் பிரிவு
மயானத்திலும் மதங்கள் ரீதியாக  பிரிவு...

சிரித்துக் கொண்டேன்...

சில ஆவிகள் என் நக்கல் சிரிப்பை
அடையாளம் கண்டு கொண்டது...

ஒரு ஆவி
"ஏய் நாளைய பிணமே" என்றது

நான்
"என்ன" என்றேன்
"யார் நீ" என்றேன்

"நேற்றைய முதலாளி " என்றது

"இன்று" என்றேன்

"விற்பனைக்கு  எதுவுமே இல்லை" என்றது.

தொழில் பித்து தலைக்கு ஏறி
மண்டையை போட்டு இருக்கும் போல என நினைத்துக் கொண்டேன்.

இன்னொரு ஆவி
"என்னை ஏன் இறைவன் படைத்தானோ
வாழ்க்கை  சிறையில் அடைந்து வழிதெரியாமல்
பல முறை தோற்று போய் இங்கே வந்தேன்" என்று புலம்பியது.

"வாழத் தெரிந்தவனுக்கு
புள்ளியில் கூட வானம் பார்ப்பான்.
உனக்கு வானமே புள்ளிப் போலத்தான்
அதனால் தான் இந்த புலம்பல்"
என்றேன்.

ஏதோ அரசியல்வாதி ஆவி போல
"இங்கு வந்து இடைதேர்தல் வைத்தால் என்ன ?"
என்றது.

" செத்தாலும் உன் ஆசை அடங்கலையா ? "

ஒரு பெண் ஆவி
" நான் பட்ட பாடு
யாரும் படக்கூடாது சாமி " என்றது.

"இங்கு ஆண்கள் படும் பாடு
நீ ஆணாய் பிறந்து பார்" என்றேன்.

ஒரு அறிவாளி ஆவி
" மரணம் இது என்ன தண்டனையா ? " என்றது.

" இல்லை இது தான் நியாயம் " என்றேன்.

அன்று நான் சுமந்த வந்த குழந்தை சவம்
கண் விழித்துக் கேட்டது

" நான் செய்த பாவமென்ன ?" என்று.

கண் கலங்கிவிட்டது...
யோசிக்க வைத்தது...

" நடமாடும் பிணங்களும்  இங்கு உண்டு
அவைகள் மத்தியில் பிறந்தது தான் " என்றேன்.

" 100 தொடுவதற்கு முன் 90 ல்
இங்கு வந்து விட்டேனே இது தகுமா ? "
என்றது ஒரு கிழம் சவத்தில் இருந்து வெளிவந்த ஆவி.

" உனக்கு பகத் சிங் தெரியுமா " என்றேன் ?

" தெரியும் " என்றது.

" அவர் சவம் ஆகும் போது வயது 21
எவ்வளவு வாழ்ந்தோம் என்பதல்ல
எப்படி வாழ்ந்தோம் என்பதே
வாழ்க்கை "  என்றேன் .

ஒரு ஆவி வந்து " நல்லவர்களெல்லாம் சீக்கிரம்
வந்து விடுகிறார்களே " என்று கேட்டது .

" இருந்திருந்தால் அவர்களும்
கெட்டவர்களாகி இருப்பார்கள் " என்றேன்.

ஏதோ தற்கொலை செய்து  கொண்ட ஆவி போல
நக்கலாக சிரித்துக் கொண்டே என்னை அழைத்து,
"நல்லவேளை நான் தற்கொலை செய்துக் கொண்டேன் "
என்றது

கோழை கூட பேச்சு என்ன
வேண்டி இருக்கிறது  என்று  திரும்பி விட்டேன்...

கோபத்தோடு
ஒரு ஆவி...

"படைத்தவனுக்கு இறப்பு  இல்லையா ?
நமக்கு மட்டும் எதற்கு இறப்பு ?"
என்றது .

சொன்னேன்...

" நமக்கு மட்டும் சாவு இல்லாமல் இருந்திருந்தால் இறைவனையும் இரையாக்கி இருப்போம் "

~மகேந்திரன்