Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

Monday, March 15, 2021

இது தான் வாழ்க்கை

 குருவே! என் வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லை என்றான் சீடன் ஒருவன்.




குரு அவனை ஒரு தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு பட்டாம்பூச்சிகள் அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தன. "இதோ இவற்றில் ஒன்றைப் பிடித்து வா"! என்று குரு அவனிடம் சொன்னார். 


அவன் பட்டாம் பூச்சியைத் துரத்தித் துரத்தி ஓடினான். ஆனால், அவனால் ஒன்றையும் பிடிக்க முடியவில்லை.


"பரவாயில்லை வா நாம் இந்தத் தோட்டத்தின் அழகை ரசிக்கலாம்" என்ற குரு, அவனைத் தோட்டத்தின் நடுவில் அழைத்து வந்தார். 


இருவரும் அங்கு அமைதியாக நின்று, தோட்டத்தின் அழகைக் கண்குளிரப் பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் அவர்களைச் சுற்றியும் பட்டாம்பூச்சிகள் பறக்கத் தொடங்கின. 


சற்று நேரத்துக்கு முன்பு அவன் பிடிக்கத் துரத்திய பட்டாம்பூச்சி, இப்போது அவன் கைகளிலே வந்து அமர்ந்தது. 


குரு சிரித்தபடி அவனிடம் சொன்னார்:


"இதுதான் வாழ்க்கை! மகிழ்ச்சியைத் தேடி துரத்துவது அல்ல வாழ்க்கை. நாம் வாழ்க்கையை அமைதியாய் ரசிக்கும்போது மகிழ்ச்சி நம்மிடம் தானே வந்து சேர்ந்து விடும்"!



Sunday, October 18, 2015

மரணவாசல்


வாழ்வெனும் புத்தகத்தில் 
கடைசி பக்கத்தில் கொட்டை எழுத்தில் 
மிகப்பெரியதாக முற்றுப்புள்ளி  
வைத்து அதற்கு  
" மரணம் " 
என்று அர்த்தம் கொடுத்திருக்கிறது.

ஏனோ அத்தருணம் வரும் வரை 
பலருக்கு அது தெரிவதில்லை 

சிலர் படிக்கும் பொழுதே  
அர்த்தங்கள் புரியாமல் 
கடைசிப் பக்கம் புரட்டி  
முற்றுப்புள்ளியை 
தொட்டு விடுகிறார்கள்.

சிலருக்கு புத்தகம் 
80 பக்கம் கொண்ட சிறு புத்தகம் போல 
இருக்கிறது .

சிலருக்கு 
வெற்றுத்தாளில் முற்றுப்புள்ளி மட்டும் 
இருக்கிறது.

சிலருக்கு பள்ளி குழந்தைகள் சுமக்கும் 
பொதி மூட்டை போல 
புத்தகம் இருக்கிறது.

சிலருக்கு யாரோ படிக்கும் புத்தகம் 
கை மாறி யாரோ படித்துக் கொண்டு 
இருக்கிறார்கள் .

சரி அதென்ன முற்றுப்புள்ளி?

முற்றுப் புள்ளி என்பதுதான் 
மரணம் என்று சொன்னேனே.

அது கண்ணில் 
படும் பொழுது உணர்த்தப்படுகிறோம் 
புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த வரிகளை  
எழுத்துப் பிழையாய் படித்த 
தவறுகளை.

வாழ்க்கை பக்கங்களை 
பிழை இல்லாமல் படித்தவர் 
என்றும் முற்றுப்புள்ளி 
அடித்து திருத்தப்பட்டது என்றும் 
யாருக்கும் இல்லை 

வாழ்க்கை பக்கங்களை 
கிழித்து விட்டான் என்று 
எவனுக்கும் 
உடனடியாக முற்றுப்புள்ளியை 
கொடுத்ததும்  இல்லை .

புரியவில்லையா..?

வாழ்க்கையை வென்றவன் என்று சொன்னவரையும்  மரணம் விட்டு வைத்தது இல்லை 

பிறர் வாழ்கையை கொன்றவரையும்  மரணம் விட்டு வைத்தது இல்லை .

நல்லவன் கெட்டவன் 
என எவனையும் 
மன்னித்து விட்டு வைப்பது  இல்லை 
மரணம்.

என்ன ..?
நல்லது செய்தும் பயன் இல்லை 
என்றால் 
மரணம் என்பது என்னவாக இருக்கும்?

ஞானிகளும் மேதைகளும் 
மரணத்தை பற்றி விளக்கினாலும் 
" மரணத்திற்கு  பின்? " 
என்ற கேள்வி கேட்டுக் கொண்டே  
தான் இருக்கிறது மனம் .

மரணம் எவனையும் விட்டு வைக்காது என்றால் 
வாழ்க்கை படித்ததற்கு என்னதான் அர்த்தம் இருக்கும்?

படித்தவனும் தேறவில்லை 
படிக்காதவனும் தேறவில்லை 
தேர்வு மட்டும் உறுதி அதில் தோல்வி மட்டும் முடிவாக..
என்ன இது தேர்ச்சி இல்லாத 
பரீட்சை எழுதியே ஆகவேண்டுமா ?

இல்லை... 
இந்த தேர்வில் 
தேரியவரையும் மரணம் அழைத்து செல்கிறது 
தேராதவரையும் மரணம் அழைத்து செல்கிறது 

அப்படி எங்கே அழைத்து செல்கிறது 
சென்றவனை பார்த்தால் கேட்டுவிடலாம்..
எங்கிருந்து வந்தோம் என்ற கேள்விக்கே இன்னும் பதில் 
தெரியவில்லையே ...

ஒன்று மட்டும் புரிகிறது 
மரணம் என்பது 
ஒரு இடத்திற்கு செல்லும் வாசலாகத்தான் இருக்கும். 
அதற்காகத்தான் இந்த தேர்வு போல...

அந்த வாசலை அனைவரும் கடந்துதான் 
போகவேண்டும் என்பது கட்டளையாக இருக்கிறது... 

இன்னொன்று விளங்குகிறது  

வாழும் நாளில் அர்த்தங்களோடு 
வாழ்ந்தவனுக்கு 
மரணவாசல் தலை வணங்கி வரவேற்று அழைத்து செல்கிறது  .

அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்ந்தவருக்கு 
மரணம் ஒரு தலை குனிவாக இருக்கிறது.

~மகி

Wednesday, August 12, 2015

நேற்றைய சவங்களுடன் நாளைய சவம்



ஒருவன் பிறந்தநாளில் கூடும் கூட்டம்
அவனை பெற்றவரின் அங்கீகாரத்தை சொல்லும்

ஒருவன் இறந்தநாளில் கூடும் கூட்டம்
அவன் வாழ்ந்த வாழ்க்கையை  சொல்லும்

வாழ்க்கை தத்துவம் எல்லோருக்கும் தெரியும்
இருக்கும் பொழுது இல்லாத மரியாதை
இல்லாத பொழுது இருக்கும்

பெற்றது பதினாறாக இருந்தாலும்
அனாதையாக இறந்தவர்க்கு
அடுத்த ஜென்மத்திலாவது
அம்மரியாதை கிடைக்கட்டும்.

வருவதற்கு நாலு கால்
போவதற்கு  எட்டு கால்
இவர்களுக்கு மட்டும் இரண்டு கால்

வாழ்க்கையில் வென்ற சவத்திற்கு
நாளைய சவங்கள்  கூட்டம் வேறு
அதன் அர்த்தம் வேறு

வாழ்க்கையே இல்லாமல் போன சவத்திற்கு
நாளைய சவம் ஒன்னு மட்டுமே வரும்
அதன் அர்த்தம் வேறு

நான் நாளைய சவம் ,
இன்றைய சவத்தை சுமந்து
மயான வீட்டில்
நிரந்தரமாக உறங்க வைத்தாயிற்று,

ஆடிய மனிதன்
ஆடாத தொட்டிலில்
உறங்குகிறான்
ஆறறிவு ஓய்ந்தது
ஆட்டம் அடங்கியது.

முடிந்தது வேலை
திரும்பும் வேளை
சற்று திரும்பிப் பார்க்கிறேன்

அரைஞாண்கயிற்றை கூட விட்டு வைக்காத இடம்
இது

ஆனாலும்
சாதிக்கொரு மேடை
அனாதைக்கு ஒரு மேடை

அம்மணமாய்
இருந்தாலும் இறந்தாலும்
அவனவனுக்கு மதம் தான் முக்கியம்.

வாழும் போதும் பிரிவு
மயானத்திலும் மதங்கள் ரீதியாக  பிரிவு...

சிரித்துக் கொண்டேன்...

சில ஆவிகள் என் நக்கல் சிரிப்பை
அடையாளம் கண்டு கொண்டது...

ஒரு ஆவி
"ஏய் நாளைய பிணமே" என்றது

நான்
"என்ன" என்றேன்
"யார் நீ" என்றேன்

"நேற்றைய முதலாளி " என்றது

"இன்று" என்றேன்

"விற்பனைக்கு  எதுவுமே இல்லை" என்றது.

தொழில் பித்து தலைக்கு ஏறி
மண்டையை போட்டு இருக்கும் போல என நினைத்துக் கொண்டேன்.

இன்னொரு ஆவி
"என்னை ஏன் இறைவன் படைத்தானோ
வாழ்க்கை  சிறையில் அடைந்து வழிதெரியாமல்
பல முறை தோற்று போய் இங்கே வந்தேன்" என்று புலம்பியது.

"வாழத் தெரிந்தவனுக்கு
புள்ளியில் கூட வானம் பார்ப்பான்.
உனக்கு வானமே புள்ளிப் போலத்தான்
அதனால் தான் இந்த புலம்பல்"
என்றேன்.

ஏதோ அரசியல்வாதி ஆவி போல
"இங்கு வந்து இடைதேர்தல் வைத்தால் என்ன ?"
என்றது.

" செத்தாலும் உன் ஆசை அடங்கலையா ? "

ஒரு பெண் ஆவி
" நான் பட்ட பாடு
யாரும் படக்கூடாது சாமி " என்றது.

"இங்கு ஆண்கள் படும் பாடு
நீ ஆணாய் பிறந்து பார்" என்றேன்.

ஒரு அறிவாளி ஆவி
" மரணம் இது என்ன தண்டனையா ? " என்றது.

" இல்லை இது தான் நியாயம் " என்றேன்.

அன்று நான் சுமந்த வந்த குழந்தை சவம்
கண் விழித்துக் கேட்டது

" நான் செய்த பாவமென்ன ?" என்று.

கண் கலங்கிவிட்டது...
யோசிக்க வைத்தது...

" நடமாடும் பிணங்களும்  இங்கு உண்டு
அவைகள் மத்தியில் பிறந்தது தான் " என்றேன்.

" 100 தொடுவதற்கு முன் 90 ல்
இங்கு வந்து விட்டேனே இது தகுமா ? "
என்றது ஒரு கிழம் சவத்தில் இருந்து வெளிவந்த ஆவி.

" உனக்கு பகத் சிங் தெரியுமா " என்றேன் ?

" தெரியும் " என்றது.

" அவர் சவம் ஆகும் போது வயது 21
எவ்வளவு வாழ்ந்தோம் என்பதல்ல
எப்படி வாழ்ந்தோம் என்பதே
வாழ்க்கை "  என்றேன் .

ஒரு ஆவி வந்து " நல்லவர்களெல்லாம் சீக்கிரம்
வந்து விடுகிறார்களே " என்று கேட்டது .

" இருந்திருந்தால் அவர்களும்
கெட்டவர்களாகி இருப்பார்கள் " என்றேன்.

ஏதோ தற்கொலை செய்து  கொண்ட ஆவி போல
நக்கலாக சிரித்துக் கொண்டே என்னை அழைத்து,
"நல்லவேளை நான் தற்கொலை செய்துக் கொண்டேன் "
என்றது

கோழை கூட பேச்சு என்ன
வேண்டி இருக்கிறது  என்று  திரும்பி விட்டேன்...

கோபத்தோடு
ஒரு ஆவி...

"படைத்தவனுக்கு இறப்பு  இல்லையா ?
நமக்கு மட்டும் எதற்கு இறப்பு ?"
என்றது .

சொன்னேன்...

" நமக்கு மட்டும் சாவு இல்லாமல் இருந்திருந்தால் இறைவனையும் இரையாக்கி இருப்போம் "

~மகேந்திரன் 

Wednesday, September 10, 2014

600 குடும்பங்களைத் தற்கொலையில் இருந்து மீட்டுத்தந்த கோவையைச் சேர்ந்த லதா .

செப்டம்பர் 10  தற்கொலைத் தடுப்பு தினம்:

செப்டம்பர் 10 தற்கொலைத் தடுப்பு தினம்: , "உலகத் தற்கொலை தடுப்பு தினம்" ஆகும். தற்கொலைத் தடுப்பிற்கான சர்வதேச அமைப்பு மற்றும் உலகச் சுகாதார‌ அமைப்பு ஆகியவை இணைந்து இந்த தினத்தை 2003 ஆம் ஆண்டில் இருந்து நினைவுகூர்ந்து வருகிறது. தற்கொலை எண்ணம் தலை தூக்க காரணங்கள் பல சொல்கிறார்கள். பொருளாதாரச் சிக்கல், கடன், அவமானம், குடும்பப் பிரச்னைகள், காதல், படிப்பு, மனரீதியான பிரச்னைகள் என ... உலகம் முழுவதும் 40 நிமிடங்களுக்கு ஒருவர் என்றால் ஒரு நாள் பொழுதில் 3 000 பேர் , ஆண்டுக்கு சராசரி 15 சதவீதம் என தற்கொலை அதிகரித்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் இறப்புக்கான காரணங்களில் தற்கொலை 13 ஆவது இடத்தில் இருக்கிறது.



இந்தச் சமுதாயத்தில் நான் வாழ தகுதியற்றவன் என முடிவுசெய்து தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளும் ஒரு பயங்கரமான கோழைத்தனம் தற்கொலை "எந்த மாவீரனாலும் முடியாது, ஒரு கோழையால் மட்டுமே சாதிக்கப்படும் ஒரு வீரச்செயல் தற்கொலை" இந்தச் செயலை செய்வதால் கின்னஸ் புத்தகத்தில் இடமோ அல்லது விருதுகளோ கிடைக்கப்போவது இல்லை . காலம் முழுவதும் தற்கொலை செய்தவருக்கும், அவர் குடும்பத்தினருக்கும் நிலைக்கப் போவது தீராத அவப்பெயர்தான்.

தற்கொலை செய்து கொள்ளப்போகிறவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும் தற்கொலையால் பெறப்படும் விளைவுகள் என்ன என்று . ஆனால் தற்கொலைக்குப் பின் நமக்குத் தெரியப்போகிறதா என்ன என்ற ஒரு சுயநலம் அதில் இருக்கிறது . தற்கொலை செய்து கொள்வதால் கண நிமிடங்களில் உயிர் போய்விடும். ஆனால், நம்மை நினைத்து, நினைத்து முடங்கிப் போகும் தாய், தந்தை, மனைவி , குழந்தைகள் போன்ற சொந்தங்கள் தினம், தினம் செத்துப் பிழைப்பது பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை.


தற்கொலை செய்து கொள்பவர்களை அவர்களது ஒரு சில செயல்கள் மூலம் நாம் கண்டுபிடித்துவிடலாம் . தற்கொலை செய்துக்கொள்ள ஒருவர் முடிவெடுத்து விட்டார் என்றால் அவருடைய பேச்சில் பல மாறுதல்கள் தெரியும் . தற்கொலை செய்து கொள்ளப் பலநாட்களுக்கு முன்பே முடிவு செய்து விடுவார்கள் . பல துன்பங்கள் இருந்தும் தற்கொலை முடிவுக்குப் பின் சந்தர்ப்பம் கிடைக்கும் வரை வேண்டுமெனவே சிலர் உற்சாகமாக , மகிழ்ச்சியாக இருப்பது போலக் காட்டிக் கொள்வார்கள். இன்னும் சிலர் "இனியும் என்னால் எதுவும் செயல்பட முடியாது " " இனிமேல் எனக்கு யாரும் இல்லை " "அனைத்திற்கும் ஒரு முடிவு காண்கிறேன் " என்றெல்லாம் சொல்லி கொண்டிருப்பார்கள் . இதையும் மீறி அக்கணத்திலேயே தூண்டப்பட்டுத் தற்கொலை செய்து கொள்பவர்கள் மிகக் குறைவு.

தற்கொலை செய்து கொள்வது அவ்வளவு எளிதானதும் இல்லை தற்கொலை செய்துகொள்வதற்கு வாழ்ந்துவிட்டுப் போகலாம் . சில தற்கொலைகள் முயற்சிக்கும் போது ஏற்படும் வலிகள் மிகவும் கொடுமையானதாக இருக்கும் , அது நமக்கு இருக்கும் தற்கொலைக்கான காரணத்தைக் காட்டிலும் வலி மிகுந்ததாக இருக்கும் .

" வாழ நினைத்தால் வாழலாம் , தற்கொலை ஒன்றும் சாதாரணம் அல்ல " 
600 குடும்பங்களைத் தற்கொலையில் இருந்து மீட்டுத்தந்த கோவையைச் சேர்ந்த லதா .




சாவதற்குத் துணிவு இருப்பவர்களுக்குத் துன்பங்களைத் துரத்துவது ஒன்று பெரியதல்ல , தன்னம்பிக்கையும் ஊக்கமும் இருந்தால் பிரச்சினைகளை வென்று வாழ்ந்து விடலாம் என்று சாதித்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த லதா என்ற பெண்மணி. ஒரு கிராம் தங்க நகை தொழில் செய்து வரும் இவர் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களைத் தற்கொலையில் இருந்து மீட்டு இருக்கிறார்.

கடந்த 1998ஆம் ஆண்டுக் கோவையில் நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து பலரும் வேலை இழந்து வாழ்வாதாரம் இழந்து செய்வதறியாது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டனர் . அதே முடிவுக்குத் தன் கணவரும் வந்த போது லதா தன் கணவருக்கு அறிவுரை கூறி தன்னம்பிக்கை ஊட்டி , நம்மாலும் சாதிக்கமுடியும் வாழ்வதற்கு வேறு வழி இல்லாமல் போகாது இந்த உலகில், எனக் கணவருடன் கைகோர்த்து , தன் குடும்பத்தை மட்டுமல்ல வாழ்விழந்து நிற்கும் பிற குடும்பங்களும் தற்கொலை என்ற முடிவுக்கு வந்து விடாமல் தடுப்பதோடு அவர்களுக்கு வாழ்வாதாரத்தையும் தேடிக் கொடுத்திருக்கிறார்.

கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களையும் இணைத்து, அனைத்து பெண்களையும் சேர்த்து அப்போதைய மாவட்ட ஆட்சியர் திரு, முருகானந்தம் அவர்களிடம் சென்று வாழ வழி ஏற்படுத்தித் தரும்படி மனு கொடுத்தார் . அவர்களது மனுவை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் உடனடியாக அவர்கள் அனைவருக்கும் தன்னம்பிக்கை மற்றும் ஊக்கம் கொடுக்கும் பயிற்சியை அளித்ததோடு அனைவருக்கும் சிறுதொழில் பயிற்சிக்கும் ஏற்பாடு செய்து கொடுத்தது இவரது முயற்சியாலேயே !!!

அனைவருக்கும் விருப்பப்பட்ட சிறு தொழிலுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுத் தற்போது அனைவரும் சுயதொழில் மூலம் முன்னேற்றம் கண்டு நல்ல நிலையில் வருமானம் பெற்று வாழ்ந்து வருகின்றனர். அனைவருக்கும் தற்கொலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு அவர்கள் வாழவும் நல்ல வழி ஏற்படுத்தித் தந்த லதா அவர்கள் தன்னம்பிக்கை இருந்தால் சாவையும் வென்று விடலாம் என்பதற்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறார். மேலும் இவர் ஒரு கிராம் தங்க நகை செய்யும் தொழிலை பிறருக்கு கற்றுக்கொடுக்கும் ஆசிரியராகவும் விளங்குகிறார். இப்போதும் அவரைப் பார்ப்பவர்கள் தங்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுத்த தெய்வமாகவே நன்றியுடன் நினைத்து வருகின்றனர். எனவே தற்கொலை என்பது முடிவல்ல "தன்னம்பிக்கை இருந்தால் பிரச்சினைகளை மட்டுமல்ல சாவையும் வென்று சாதிக்கலாம் " புத்துணர்ச்சியுடன் வந்தவர்களுக்கெல்லாம் சாதிக்க வழிகாட்டியாக இருக்கிறார் பல விருதுகளுக்கும் சொந்தக்காரரான  லதா .



" வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் " இந்த லதா போன்றவர்கள் இருந்தால் ஒரு வழி அல்ல , ஆயிரம் வழிகள் உண்டு இப்பூமியில் ...

லதா அவர்களை தொடர்புகொள்ள : 94867 78910

~ஈர நெஞ்சம்

Tuesday, June 11, 2013

"வாழ்க்கை என்பதும் உயிர் என்பதும் சாதாரண விஷயம் இல்லைங்க"





உயிருடன் இருக்க வேண்டும் என்றால் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை உணவு உட்கொண்டாக வேண்டிய வினோத நோயால் அவதியுறும்  டிஸ்கி என்னும் இளம் பெண்"


மருத்துவர்களாலேயே கண்டறிய முடியாத விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார், அமெரிக்காவை சேர்ந்த இந்த 21 வயது  டிஸ்கி , இவருடைய தற்போதைய எடை வெறும் 25.4 கிலோகிராம் மட்டுமே . இத்தனைக்கும்  ஒரு நாளில் 60 முறை  உணவு எடை கூடுவதாக இல்லை .
டிஸ்கி இவருக்கு கிரிஸ் என்ற  இளைய சகோதரரும், ,மரினா என்ற சகோதரியும் இருக்காங்க, இவங்க  இருவரும் மற்றவர்களை போல நலமுடன் தான் இருக்காங்க .
டிஸ்கி இவங்க அம்மா  சொல்றாங்க ''மருத்துவர்கள் சொன்னார்கள் இந்த பெண் உயிர்வாழ்வதே மிகபெரும் கேள்விகுறி அப்படியே பிழைத்தாலும் மற்ற குழந்தைகளை போல் நடக்கவோ பேசவோ செய்வாரா என்பது உறுதியாக சொல்ல முடியாது என்றனர்'' என்றார் .
ஆனாலும் அந்த அம்மா  மனம் தளராமல் டிஸ்கி  யை  நம்பிக்கையுடன் பாசத்துடனும் வளர்த்து வந்தாங்க.
டிஸ்கி க்கு குழந்தை பருவத்தில் உடை எடுக்கும் போது விளையாட்டு பொம்மைகளுக்கு உடை தைக்கும் இடத்தில தான்  உடைகளை வந்குவாங்கலாம் என்ன காரணம் என்றால் மற்ற சிறுவர்களுக்கு உண்டான  உடைகள் இவருக்கு பொருந்தாது என்பதாலாம்.
மரணத்தை வென்று வாழும் இந்த டிஸ்கி டாக்டர்களுடைய கணிப்பை எல்லாம் பொய்யாக்கி தற்போது மற்றவர்களை போலவே இயல்பான  வாழ்கை வாழ்ந்து வருகிறார் .
டிஸ்கி  கூறும்போது ''நான் இரண்டுமுறை மரணத்தின் விழும்பில் இருந்து மீண்டு வந்துள்ளேன் ,  தினமும் என் உடல் எடையை அளவிட்டு வருகிறேன் ஒரு பவுண்ட் எடை கூடி இருந்தாலும் எனக்கு ஆச்சரியமே என் எனெர்ஜி குறையாமல் இருக்க ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒரு முறை நொறுக்கு தீனிகள் , ஐஸ் க்ரீம் , கேக் வகைகள் ,என சாப்பிட்டு கொண்டே இருப்பேன் என்னுடைய உடல் தோற்றம் கோரமாக இருந்தாலும் இருக்கும் நோய்  பற்றியும் கவலை படாமல் வீட்டிலேயே முடங்கி இருக்காமல் தன்னம்பிக்கையோடு சாவோடு  போராடி வருகிறேன்  ''என்கிறார் .
மனிதனாகப் பிறந்த இந்த வாழ்க்கை வாழ்வதற்குத்தான். பல இன்னல்கள் வரலாம். பிரச்சினைகளைச் சந்திக்கலாம். தோல்விகள் கிடைக்கலாம் இவற்றை எல்லாம் சந்தித்து, போராடி, இவற்றையும் கடந்து வாழும் போது இதுதான் வாழ்க்கை என்று புரியும். எப்படி நாம் பிறப்பது கடவுள் செயலோ அதுபோல  நமது  வாழ்கையும் கடவுளுடைய செயல்தான் என்பதை டிஸ்கி எல்லோருக்கும் புரிய வைக்கிறார்.

நண்பர்களே   எவ்வளவோ கவலைகள் இருக்கலாம் ,  அல்லது வேதனைகள் இருக்கலாம் . அப்படி  பட்டவர்கள் சிலர் தவறான முடிவுகளை  எடுக்கிறார்கள் அவர்களுக்காங்க  ஒரு  விழிப்புணர்வு
 தேடலை உங்களுக்காக  பதிவிடுகிறேன்
நன்றி .

~மகேந்திரன்

Saturday, March 30, 2013

நான் கண்ட சிந்தனை ~மகேந்திரன்

"வாழ்க்கை ஒரு முறை ஒரு முறையாவது அதை மற்றவர்களுக்காகவும் வாழ்ந்து பாருங்க சில பாவங்கள் கழிவதற்கு அது உதவும்"


"தினசரி நிகழ்வுகளில் நடக்கும் ஒருசில நகைச்சுவைகளை தேடுங்கள் வாழ்க்கையில் சிரிக்க கற்றுக்கொள்ளுங்கள்"
"குறைந்த மன அழுத்தத்தை உங்களால் உணரமுடியும்"


"நீங்கள் குற்றம் செய்யாவிட்டாலும்,
மற்றவர்களின் குற்றங்களை தேடி சுட்டிக்காட்டுவதும் குற்றம்தான்"
 


"துன்பத்தில் இருப்பவனை உடனே போய் பார்.
இன்பத்தில் இருப்பவன் அழைப்பதற்கும் கொஞ்சம் யோசி"


"நீண்ட நாள் வாழவேண்டும் என்று ஆசைப்படுவதை விட
வாழும் நாளில் நல்லவனாய் வாழ ஆசைப்படலாம்"


"சாதிப்பது சாதனை இல்லைங்க எந்த இடத்தில இருந்து சாதிக்கின்றோம் என்பதுதான் சாதனை" 

"உங்களுக்கு ஓய்வு நேரம் நிறைய இருக்கின்றதா:
அந்த உங்களது ஓய்வு நேரத்தை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தாமல் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள், மற்றது எல்லாம் இயற்கையாகவே அது பயனுள்ள நேரமாக மாறிவிடும்"
 


"வாழ்கையில் யாரையும் சார்ந்து இருக்காதே என்னெனில்
உன் நிழல் கூட வெளிச்சம் உள்ள வரைதான் உன்னுடன் துணைக்கு வரும் "
 

Saturday, September 24, 2011

வாழ்க்கையே இல்லை...!

காதலினால்
வாழ்க்கை
இல்லை...
காதல்
இல்லையெனில்
வாழ்க்கையே இல்லை...!

Wednesday, September 21, 2011

வாழ்க்கை ...!

உயிரையும் அடமானம் வைக்கும்
வறுமையே  சாகச  வாழ்க்கை ...!