Monday, November 23, 2015

தசை சிதைவு நோய் பற்றி அறிந்துக் கொள்ளுங்கள் 

விஞ்ஞான வளர்ச்சி என்பது மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது ஆகும். மனித இனத்தின் ஆக்க சக்தியாக விஞ்ஞானம் விளங்குகிறது. ஆனாலும் சில நேரங்களில், இல்லை இல்லை பல நேரங்களில் இது மனித இனத்தை அழிக்கவும் செய்கிறது.
அப்படி விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் மனித இனத்தை சூறையாடிக் கொண்டிருக்கும் பல துன்பங்களில் ஒன்றுதான் தசைசிதைவு நோய் [Muscular Dystrophy]. அதிகம் பேருக்கு அறிமுகம் இல்லாத நோயாக இருந்தாலும், இது நாளைய மனித இனத்தையே அழிக்கக் கூடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் மட்டுமே, பிறக்கும் 3,000 குழந்தைகளில் ஒரு குழந்தையை இந்த நோய் தாக்குவதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இந்த நோய்... எய்ட்ஸ், புற்றுநோய் போலவே மரணத்தை மட்டுமே தீர்வாக கொண்டிருக்கும் மற்றும் ஒரு கொடிய நோய் ஆகும். எய்ட்ஸ், புற்றுநோய் போன்றவை மனிதனின் தீய பழக்கங்களினால் தொற்றும். ஆனால் தசை சிதைவு நோய் எந்த பாவமும் அறியாத கருவில் உள்ள குழந்தை முதல் நடுத்தர வயது வரை அனைவரையும் தாக்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு மருந்து இல்லை என்பதே மருத்துவர்களின் தீர்வு.

மருத்துவர்கள் ஆரம்பத்தில்...
தசை சிதைவு நோய் முக்கிய பிரிவில் 9 வகை என்றார்கள். தற்போது 60 வகையில் கொண்ட ஒரே தொகுப்பாகும் என்கிறார்கள் :
உலக நாடுகளின் பல வருட உழைப்பில், அதிக பொருள் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வில் தசை சிதைவு நோய்க்கு மூலக்காரணம் மரபணு என்பது கண்டறியப்பட்டுள்ளது . 1973 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போருக்கு பிறகே இந்த நோய் அடையாளம் காணப்பட்டது. பெரும்பாலும் குழந்தைகளையே அதிகமாக தாக்கும் இந்த நோய். அதிலும் ஆண் குழந்தைகளையே அதிகம் தாக்குகிறது. இது எந்த விதமான முன் எச்சரிக்கையும் இன்றி தாக்குகிறது.
ரத்த சம்மந்தத்தில் திருமணம் முடிப்பதால் 3 சதவிகிதம் பேருக்கு தோன்றுகிறது என்பதை கண்டறிந்துள்ளனர். இதை திருமணத்திற்கு முன்பே ஆணும் பெண்ணும் மரபணு சோதனையின் மூலம் கண்டறிய முடியும் என்கிறார்கள். மேலும் முழுமையாக பதில் அளிக்க முடியாத நிலையில் மருத்துவர்கள் கூறுவது தசைகட்டுபாட்டிற்கு தேவையான ஒரு புரதத்திற்கு அடிப்படையான ஒரு மரபணு குறைப்பாடே இந்நோய்க்கு காரணம் என்கிறார்கள் . அடிப்படையான தசை புரத குறைபாட்டால் தசை நார்களின் சக்தி குறைகிறது. மேலும் இவை தசையை இறுகும் தன்மைக்கு கொண்டு செல்கிறது. இறுகிய தசைகளால் மனித எலும்பு மண்டலம் பாதிப்பதோடு மட்டும் அல்லாது மனித உடலின் அடிப்படை கட்டுமானத்தை பாதிக்கிறது என்கிறார்கள்.
தற்போது வந்த ஒரு ஆய்வின் படி உணவுப்பொருட்களில் கலக்கப்படும் ரசாயனப் பொருட்கள், ரசாயனம் நிறைந்த வீரியம் மிக்க உரங்கள் ஆகியவை உணவில் நச்சுத் தன்மை ஏற்படுத்தி உணவுப் பொருட்களில் உள்ள சத்து முற்றிலுமாக அழிக்கப்படுகிறது, இந்த உணவை உண்பதால் போதிய சத்து இல்லாத நிலையில் குழந்தைகளுக்கு தசை சிதைவு ஏற்படுகிறது. பொதுமக்களும் உணவுப் பொருட்களில் உள்ள ஆரோக்கியத்தை பார்க்காமல் அது பார்வைக்கு அழகாக இருந்தால் மட்டுமே வாங்குகின்றனர். அதனால் தற்பொழுது சந்தைகளில் இவ்வகையிலான பாலீஷ் செய்த தானியங்களும், பளபளப்புக்காக மெழுகு பூசப்பட்ட பழங்களும் மட்டுமே அதிக அளவில் விற்கப்பட்டு வருகிறது .

இந்நோயின் அறிகுறிகள் :
மனித உடல் இரு வேறு வகையான தசைகளைக் கொண்டது.
ஒன்று தன்னிச்சையாக இயங்கும் தசைகள்... 
எ.கா:- நுரையீரல்,இதயம் போன்றவை.
மற்றொன்று நாம் அசைக்க நினைக்கும் போது அசையும் தசைகள்... எ.கா:- கை , கால்கள் போன்றவை .

தசை சிதைவு நோய் நாம் அசைக்க நினைக்கும் போது அசையும்தசைகளையே முதலில் பாதிக்கிறது. இதன் விளைவாக நோய் தாக்கப்பட்ட குழந்தை அடிக்கடி கீழே விழுதல், அமர்ந்த நிலையிலிருந்து எழ சிரமப்படுதல் , படி ஏற இயலாமை போன்ற அறிகுறிகள் தென்படும் நாளடைவில் தன்னிச்சையாக இயங்கும்தசைகளையும் இது பாதிக்கிறது. இதனால் நடக்க முடியாமல் ஆகிவிடும். பின்னர் சக்கர நாற்காலிக்கு தள்ளிவிடும். அதை தொடர்ந்து படுத்த படுக்கையாக்கி விடுகிறது. தன்னிச்சையாக இயங்கும் தசைகளைத் தாக்கி இயங்காமல் செய்வதால் மரணத்தை தழுவ வைக்கிறது.

இந்தியாவில் உள்ள மருத்துவர்கள் முதல் கொண்டு பொதுமக்கள் வரையில் இந்த நோயைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை. இந்திய அரசும் மக்களிடமும் இதற்கான போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது. நோயின் ஆரம்பத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்க முயற்சி செய்தாலும் குழந்தை நன்றாக இருப்பதாகவோ அல்லது போலியோ தாக்கு என்றோ சொல்லி மருத்துவர்கள் சமாளித்து விடுகிறார்கள். என்ன நோய் இது, எப்படி வந்தது என்று கண்டுபிடிக்க முடிவதில்லை. தசை சிதைவு தான் என்ற உண்மை உணரும்போது உடல் முற்றிலுமாக சுருங்கி எந்த இயக்கமும் இயலாமல் மரணத்தை நெருங்கி கொண்டிருக்கிறது அந்த உயிர்.

அது மட்டும் இல்லாமல் ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தையை தாக்கும் இந்த நோய் அந்த குழந்தை இறந்த பிறகும் அடுத்தடுத்து பிறக்கும் குழந்தைகளையும் தாக்கிக் கொல்லும் என்பது ஜீரணிக்க முடியாத பயங்கர வேதனையான உண்மையாகும்.

ஆறுதல் :
இந்த நோயில் இருந்து காப்பாற்றவே முடியாது என்றாலும் சிறிது காலத்திற்கு மட்டும் மரணத்தை தள்ளிப்போட முடியும் . தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் மரணத்தை சற்று தள்ளிப்போட வாய்ப்பு இருப்பதாக சிறப்பு மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர். நெப்போலியன் அவர்களுடைய குழந்தை இந்த நோயால் பாதிக்கப்பட்டது. அவரும் உலகநாடுகளில் உள்ள அனைத்து மருத்துவ மனைகள் , சிறப்பு மருத்துவர்கள் என எல்லோரையும் சந்தித்து விட்டு முடிவாக அவர் சொந்த செலவில் திருநெல்வேலியில் உலகின் தசை சிதைவுநோய்க்கான தனிப்பட்ட Jeevan Foundation என்னும் அமைப்பின் மூலம் [Mayopathy Institute of Muscular Dystrophy & Research Center] அமைத்து அங்கே இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடற்பயிற்சி அளித்து வருகிறார்கள். 

சேலத்தில் இந்நோயால் பாதிக்கப்பட்ட வானவன்மாதேவி, இயல்இசைவல்லபி இரண்டு சகோதரிகள் ஆதவ் அறக்கட்டளை என்ற பெயரில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக சிறப்பு பயிற்சியும் மருத்துவமும் செய்து வருகிறார்கள்.

இது மட்டுமே இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் சற்று ஆறுதலாக இருக்கிறது.
இந்த நோயால் பாதித்தவர்களை பார்க்கும் பொழுது வேதனை ஒருபுறம் இருக்க எத்தனையோ எதிர்கால கனவுகளுடன் திருமணம் முடித்து பத்து மாதம் சுமந்து குழந்தைகளை பெற்றெடுத்து இமைக்குள் விழிப்போல பார்த்து பார்த்து வளர்க்கும் அன்னைக்கும், இரவு பகலாக தோளில் சுமக்கும் தந்தைக்கும் தங்கள் குழந்தைக்கு இப்படி ஒரு நோய் வந்தது மட்டும் இல்லாமல் அடுத்தடுத்த குழந்தைகளுக்கும் இதே நிலைதான் என்றால் அவர்களது வேதனையை எழுத்தாலும் ஏன் வார்த்தையாலும் உரைக்க முடியவில்லை. தன் குழந்தைகளை எப்படியோ காப்பாற்றிட வேண்டும் என்ற நோக்கில் நடக்க முடியாத அந்த குழந்தைகளை இரவுபகலாக இடுப்பில் சுமக்கும் இளம் தாய்மார்கள் சுமைதாங்கும் கடவுள்கள்.

~மகேந்திரன்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

vimal said...

இந்த பதிவை படித்ததோடு கண்களில் ஈரம் கசிய வைத்து விட்டது இந்த தசை சிதைவு நோய் தாக்கிய குழந்தை என் அண்ணனின் மகளுக்கு பிறந்த குழந்தைக்கும் தாக்கியுள்ளது நீங்கள் குறிப்பிட்டது போலவே உறவு முறைக்குள் திருமணம் செய்ததும் ஒரு காரணமே " தன் குழந்தைகளை எப்படியோ காப்பாற்றிட வேண்டும் என்ற நோக்கில் நடக்க முடியாத அந்த குழந்தைகளை இரவுபகலாக இடுப்பில் சுமக்கும் இளம் தாய்மார்கள் சுமைதாங்கும் கடவுள்கள்." உண்மைதான் .

Post a Comment