Thursday, October 26, 2023

ஒரு நேர்மையான அரசன்

_*ஒரு நேர்மையான அரசன்*_
ஒரு உயர்ந்த மலை. அந்த உயரத்தில் இருந்து ஆர்ப்பாட்டமா கொட்டுகிற ஒரு நீர்வீழ்ச்சி. ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு வந்ததுக்கு அப்புறம் அந்த அருவி இரண்டு ஆறுகளா பிரியும். ஒன்னு மலைக்கு இந்த பக்கமாவும் இன்னொன்னு மலைக்கு அந்த பக்கமாவும் பாயும். மலையின் இரு புறமும் இரண்டு வெவ்வேறு நாடுகள் இருந்தன. ஒன்றின் பெயர் வல நாடு மற்றொன்றின் பெயர் இட நாடு என்று வைத்துக்கொள்வோம். 

இரண்டு நாடுகளுக்கும் எப்போதும் சண்டை நடந்து கொண்டே இருக்கும். அந்த மலையின் வளங்கள் யாருக்கு சொந்தம் என்பது குறித்து தொடர்ந்து பிரச்சினையாகவே இருந்து வந்தது.

பலமுறை முயற்சித்தும் வலநாட்டு மன்னனால் ஒருமுறை கூட இட நாட்டு மன்னனை போரில் தோற்கடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் ஒற்றர்கள் மூலம் ஒரு வாலிபன் மன்னரை தனியாக சந்திக்க விரும்புவதாக ஒரு செய்தி வந்தது.அரசனும் அவனைத் தனிமையில் சந்தித்தார்.

அப்போது அந்த வாலிபன் நான் பக்கத்தில் உள்ள இடநாட்டு மன்னனின் மெய்க் காப்பாளர்களில் ஒருவன். எங்கள் நாட்டின் போர்ப்படைத் தளபதி ஒருவர் சமீபத்தில் இறந்த பிறகு, தகுதி அடிப்படையில் எனக்குத் தான் அந்தத் தளபதி பதவி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எங்கள் மன்னர் தன்னுடைய மருமகனுக்கு அந்தப் பதவியைக் கொடுத்து விட்டார்.

இதனால் அவரை சும்மா விடக்கூடாது என்ற ஆத்திரத்தில் இருக்கிறேன். நீங்கள் இதுவரை அவரை வெல்ல எவ்வளவோ முறை முயற்சித்தும் முடியாமல் போயிற்று. 

 நாளை எங்கள் மன்னர் மாறுவேடத்தில் உங்கள் நாட்டின் பக்கமுள்ள காட்டின் நடுவே இருக்கும் ஆலயத்திற்கு பூஜை செய்ய வருகிறார். 

நீங்களும் மாறுவேடமிட்டு சில வீரர்களோடு வந்தால் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவரைக் கொல்லவோ கைது செய்யவோ முடியும். 
என்று கூறினான்.

மன்னரும் சரி என்று கூறி அவனை அனுப்பி விட்டார். அவன் சொன்னது போலவே இடநாட்டு மன்னன் வருவதற்கு முன்பே அவனுக்காகப் பக்கத்தில் இருந்த ஒரு குகையில் சில வீரர்களோடு காத்திருந்தார்.

பூஜையின் போது இடநாட்டு மன்னனோடு, துரோகியாக மாறி செய்தி சொன்ன மெய்க் காப்பாளனும் உடனிருந்தான். தன்னுடைய திட்டம் பலிக்கப் போகிறது என்ற கற்பனையுடன் குள்ளநரியைப் போலக் காந்திருந்தான். 

இடநாட்டு மன்னன் பூஜையை முடிக்கும் வரை காத்திருந்து அவர் முன்னே போய் நின்றான் வலநாட்டு மன்னர். ஆனால் அந்த மெய்க்காப்பாளன் கூறியது போல மாறுவேடம் எதுவும் போடாமல் போய் நின்றார். 

திடீரென்று அவரை அங்கே பார்த்தவுடன் இட நாட்டு மன்னனுக்கு பலத்த அதிர்ச்சி.
குறைந்த வீரர்கள் மட்டுமே இருக்கிறார்களே? முன்னெச்சரிக்கை இல்லாமல் வந்து விட்டோமோ என்று யோசிக்கும் போது,

வல நாட்டு மன்னன் பயப்பட வேண்டாம். நாங்கள் உங்களை எதுவும் செய்ய மாட்டோம்.

இன்று நீங்கள் எங்கள் பகுதிக்கு வந்திருக்கிறீர்கள். எங்களுடைய விருந்தாளி. நீங்கள் இங்கே வரப்போவதாக உங்களுடைய நாட்டைச் சேர்ந்த துரோகி ஒருவனால் முன்கூட்டியே தகவல் கிடைத்தது.

உங்களுடன் நேருக்கு நேர் நின்று போரிட்டு வெல்வது தான் எனக்கு பெருமையேத் தவிர சூழ்ச்சி செய்து சிறைப் பிடிப்பது மன்னனுக்கு அழகல்ல. 

மேலும் நீங்கள் என்னைப் போன்ற எதிரிகளிடம் கவனமாக இருப்பதை விட உங்கள் கூடவே இருக்கும் துரோகிகளிடம் தான் அதிகக் கவனமாக இருக்க வேண்டும், என்று கூறினார்.

இதைக் கேட்டதும் அந்த மெய்க் காப்பாளனுக்கு நடுக்கம் எடுத்து விட்டது. போச்சு இன்று நாம் செத்தோம் என்று மனதுக்குள் நினைத்தான்.

விஷயத்தை கேட்டதும் யார் அந்த துரோகி என்று தன் வாளை எடுத்தார் இட நாட்டு மன்னர். 
ஒருவரைக் காட்டிக் கொடுப்பதைப் போன்ற படுபாதகம் எதுவும் இல்லை. அந்தத் தவறை நான் செய்ய மாட்டேன் என்று மறுத்துவிட்டார் வல நாட்டு மன்னர்.

வல நாட்டு மன்னரின் பெருந்தன்மையான செயலைக் கண்டு நெகிழ்ந்து போனார் இட நாட்டு மன்னர். முந்தைய போர்களில் தான் செய்த தவறுகளுக்காகவும் மன்னிப்பு கேட்டார். அதன் பிறகு இரண்டு நாடுகளும் நட்பு நாடுகளாகவே தொடர்ந்தன. மலையின் வளங்களை சரிசமமாக பங்கிட்டுக் கொள்வதோடு மலையையும் இரு நாடுகளும் சேர்ந்து பாதுகாப்பதாக உறுதி எடுத்துக் கொண்டன.

 _*Magi Channel*_

Sunday, October 01, 2023

நாங்க வளர்க்கிற நாய் போல தாங்க இந்த தெரு நாய்களும்

*நாங்க வளர்க்கிற நாய் போல தாங்க இந்த தெரு நாய்களும்*
நாம் தினமும் ஒரு குறிப்பிட்ட பாதையில் தான் அன்றாட அலுவல்களை கவனிக்க வாகனங்களில் விரைந்து கொண்டிருக்கிறோம் . நம்முடைய ஆயிரம் பிரச்சனைகளுக்கும் மன அழுத்தங்களுக்கும் மத்தியில் நம்மைச் சுற்றி நடக்கும் எந்த விஷயங்களும் நம் கண்ணில் படுவதில்லை. அப்படியே கண்ணில் பட்டாலும் மனதில் பதிவதில்லை. 

இன்று மதியம் நல்ல வெயில் நேரத்தில் கோவை ஆர் எஸ் புரம் பொன்னுரங்கம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது நான் கண்ட ஒரு காட்சியில் ஒரு கணம் என்னுடைய பிரச்சினைகளையே நான் மறந்துவிட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு வீட்டின் காம்பவுண்ட் முன்புறம் உள்ள கேட்டை நோக்கி மணி அடித்து செல்லும் பள்ளி பிள்ளைகள் போல வரிசையாக பத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் சென்று கொண்டிருந்தன. அங்கே வரிசையாக தட்டில் சாப்பாடு வைக்கப்பட்டிருந்தது. உணவு இடைவேளைக்கு செல்லும் மாணவர்களைப் போல பவ்யமாக ஒவ்வொன்றும் தட்டில் தனக்கு வைக்கப்பட்ட அசைவை உணவை அழகாக சாப்பிட ஆரம்பித்தன. 

சக மனிதர்கள் பசியால் துடிக்கும் போது கூட கண்டுகொள்ளாமல் செல்லும் மனிதர்களுக்கு மத்தியில் தெரு நாய்களின் பசியைப் போக்கும் அந்த வீட்டின் உரிமையாளர் நல்லமுத்து என்பவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

அவர் தனது வீட்டில் வளர்த்து வரும் நாய்க்கு உணவு வைக்கும் போதெல்லாம் தெருநாய்கள் ஏக்கத்தோடு பார்க்கும் , அதை பார்த்துவிட்டு எங்கள் மனசு கேட்காமல் தெருவில் உள்ள மற்ற நாய்களுக்கும் சேர்த்து சாப்பாடு வைக்க ஆரம்பித்ததாக கூறுகிறார்.

தன்னுடைய வீட்டில் வளர்க்கும் நாய்க்கு வைக்கும் அதே உணவைத்தான் தெருவில் உள்ள நாய்களுக்கும் கொடுக்கிறார். தெரு நாய்கள் தானே என்று எந்த அலட்சியமும் காட்டாமல் நாய்களுக்கு என்று பிரத்தியேகமாக சமைக்கப்பட்ட உணவை ஒவ்வொரு நாய்க்கும் தனித்தனியாக தட்டில் வைத்து கொடுக்கிறார்.  

15 வருடங்களுக்கும் மேலாக தெரு நாய்களுக்கும் உணவு பரிமாறி வருகிறார். இதனால் இங்கு உணவு கிடைப்பதை அறிந்து வேறு ஏரியா நாய்களும் ஏராளம் வர ஆரம்பித்து விட்டனவாம். 
இந்த நாய்கள் யாரையும் கடிக்காது. அவைகளால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை... இன்னும் சொல்லப்போனால் இந்தப் பகுதிக்கு பாதுகாப்பாகத்தான் இருக்கின்றன என்று கூறினார். 

பெருநகரங்களில் அதிவேக வாழ்க்கை சூழலில் தெருநாய்களை கவனிக்க யாருக்கும் நேரமில்லை. மீதம் ஆகும் உணவுகளை கூட யாரும் அவைகளுக்கு போடுவதில்லை. நெகிழிப்பைகளில் அடைத்து வீசி விடுகிறோம். இந்த நாய்கள் உணவுக்கு என்ன செய்யும் என்று 
நினைத்தே அவைகளுக்கு தினமும் உணவு அளிப்பதாக கூறுகிறார். பேசுவதற்கு எளிதாக இருந்தாலும் ஒரு நாளைப் போல தினமும் தவறாமல் சமைத்து உணவு அளிப்பதும் சமைத்த பாத்திரங்கள் தட்டுகள் இவற்றை சுத்தம் செய்வதும் மிகவும் சிரமமான விஷயம். மேலும் அவற்றிற்கு ஏதேனும் உடல்நிலை சரியில்லை என்றாலும் கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளிப்பதாகவும் கூறி நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். எனினும் நல்லமுத்து இதைப் பெரிய சாதனையாகவோ சேவையாகவோ சொல்லி விளம்பரம் தேடாமல் ஏதோ என்னால முடிஞ்சது அதுங்களுக்கு பசியாற்றுகிறேன் என்று எதார்த்தமாக சொல்கிறார்.

தண்ணீரைக் கூட வியாபாரம் செய்யும் மனிதர்களுக்கு மத்தியில் இவரைப் போன்ற மனிதர்களால் தான் வாயில்லா ஜீவன்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
இனியாவது நாமும்
தேவைக்கு அதிகமாய் மீந்து இருக்கும் உணவுகளையாவது கெட்டுப் போவதற்கு முன்பே நம் தெருக்களில் இருக்கும் நாய் பூனை போன்ற விலங்குகளுக்கு கொடுக்கலாமே. _இந்தப் பூமி மனிதர் வாழ்வதற்கு மட்டுமானதல்ல.. வாழ்தலும் எவ்வுயிர்க்கும் பொதுவன்றோ?

~ ஈரநெஞ்சம்

Saturday, June 24, 2023

இறுதி மரியாதை

பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு மனிதன் எத்தனை ஆயிரம் மனக்கோட்டைகளைக் கட்டினாலும் தன்னுடைய மரணம் கௌரவமாக இருக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு மனிதனின் இறுதி விருப்பமாக இருக்கும். உலகில் பிறந்து வாழ்ந்து இறக்கும் எல்லா மனிதர்களுக்கும் இறுதி மரியாதையை பெற்றுத் தருவது இறுதிச் சடங்கு செய்யும் தொழிலாளர்கள் தான்.



உடலில் இருந்து உயிர் பிரிந்தால் அந்த உடலை அடக்கமோ தகனமோ செய்யும் வரையிலான இறுதிச் சடங்குகள் செய்யும் நடைமுறை உலகம் முழுவதுமே இருக்கிறது. அந்தந்த பகுதி கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், பண்பாடு இவற்றைப் பொறுத்து சடங்குகளும் சம்பிரதாயங்களும் மட்டுமே தான் வேறுபடும். 

உயிருடன் இருக்கும் வரை தான் பணம், பட்டம், பதவி, பேர் புகழ், செல்வாக்கு எல்லாமே. இறந்த பிறகு எல்லோருக்கும் ஒரே பெயர் தான்...பிணம்.

என்ன தான் ஒட்டி உறவாடிய சொந்தங்களாக இருந்தாலும் உயிர் போன பிறகு பெற்ற பிள்ளையாக இருந்தாலும் தொட்டு தூக்கி எல்லாம் செய்வதற்கு ஒரு வித அச்சமும் தயக்கமும் ஒரு அருவருப்பும் மனத்தடையும் வந்து விடுகிறது.
இறந்த பிறகு அந்த உடலைச் சுத்தப்படுத்தி, சவரம் செய்து, குளிப்பாட்டி அதற்கு அலங்காரங்கள் செய்து, உடை அணிவித்து, மாலை மரியாதையோடு கிடத்துவதற்கு இறுதிச் சடங்கு செய்யும் தொழிலாளர்களைத் தவிர யாரும் முன் வருவதில்லை.

ஏனெனில் அதற்கான மனோதிடம் நம்மிடம் இருப்பதில்லை. அதோடு நீண்ட நாட்கள் படுக்கையில் கிடந்தவர்கள், நோய்வாய்ப்பட்டு இறந்தவர்கள், தொற்று நோய்களால் இறந்தவர்கள், விபத்தில் .உருக்குலைந்த உடல்கள், துர்நாற்றம், புண்கள், அதிலிருந்து வடியும் நீர், சீழ் என்று எந்த அருவெருப்பும் பார்க்காமல், ஆண் பெண் பேதமில்லாமல் அந்த உடலைத் தொட்டு தூக்கி அத்தனை சடங்குகளையும் செய்பவர்கள் இவர்கள் தான். 
       
பிச்சைக்காரர்கள், பாலியல் தொழிலாளர்கள், மயான தொழிலாளர்கள், பிணவறை ஊழியர்கள் இவர்களைப் பற்றிக்கூட வரலாற்றின் பக்கங்களில் சில பதிவுசெய்துள்ளன.

ஆனால் இறப்பு நிகழ்ந்தால் மட்டுமே தேடப்படும் இந்த தொழிலாளர்களைப் பற்றி யாருமே பேசுவதில்லை.

ஒருவர் இறந்து விட்டார் என்று தெரிந்தவுடன் உற்றார் உறவினர்களுக்கு தகவல் சொல்லுவதற்கு முன்பே இவர்களைத் தான் தேடுவார்கள். இறந்தவர்களின் உடல் எந்த நிலையில் இருந்தாலும் சுத்தம் செய்து அலங்கரித்து தேவையான கட்டுகள் இட்டு இறுதி அஞ்சலிக்கு பார்வையாக வைப்பதோடு மட்டும் இவர்களின் பணி முடிவடைந்து விடுவதில்லை. 

தேங்காய் உடைத்தல், எண்ணெய் சீயக்காய் வைத்தல், தண்ணீர் கொண்டு வருதல் குளிப்பாட்டுதல், கோடி போடுதல் நெய்ப் பந்தம் பிடித்தல், பாடை மாற்றுதல், கொள்ளி வைத்தல் அல்லது குழிக்குள் இறக்குதல் என்று அனைத்து விஷயங்களையும் முன் நின்று செய்வது இவர்கள்தான்..
இன்றைய நாகரிக உலகில் நம்முடைய பாரம்பரிய முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்வது பற்றி நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.
என்னதான் சாஸ்திர சம்பிரதாயங்கள் எல்லாம் நன்கு தெரிந்தவர்களாக இருந்தாலும் கூட தன்னுடைய குடும்பத்தில் ஒரு இறப்பு நிகழும் போது நமக்கு கையும் ஓடாது காலும் ஓடாது.. அப்போது நமது குடும்பத்தில் நீத்தாருக்கு எந்தக் குறையும் இல்லாமல் எல்லாவற்றையும் நம்முடைய ஸ்தானத்திலிருந்து எடுத்துக்கட்டி செய்பவர்கள் அவர்கள்தான்.

அடக்கத்திற்கு பிறகும் கூட பால் தெளித்தல், எரித்த இடத்தில் அஸ்தி எடுப்பது முதல் ஈமச்சடங்கு மற்றும் பதினாறாம் நாள் காரியங்கள் செய்வது வரை எல்லாவற்றிலும் இவர்களுக்கு பங்கு உண்டு.

நமது சமூகக் கட்டமைப்பில் துப்புரவு தொழில், சவரத்தொழில், சலவைத்தொழில், மருத்துவ தொழில் இவற்றில் ஈடுபட்ட சமூகத்தினர் யாரும் செய்ய முன்வராத போது தாமாக முன்வந்து இறுதிச் சடங்கு சம்பிரதாயங்களை செய்து வந்தனர். அவர்கள் வழியில் வந்த வாரிசுகள் விரும்பியோ விரும்பாமலோ இந்த தொழிலை செய்யப் பணிக்கப் பட்டார்கள்.

என்ன தான் இவர்கள் செய்வது உன்னதமான பணியாக இருந்தாலும் சமூகம் இவர்களை தீட்டாகத் தான் ஒதுக்கி வைத்திருக்கிறது. இவர்களுக்கு கிடைக்கும் கூலியும் சொற்பமானதாகவே இருக்கிறது. 

துக்க வீட்டில் மற்றவர்கள் இழிவாக கருதக்கூடிய சடங்குகளை செய்பவர்கள் என்பதால் மற்ற சுப காரியங்கள் கோவில் விசேஷங்களில் இவர்களை தீட்டாகவே இந்த சமூகம் ஒதுக்கி வைக்கிறது. இதுபோன்ற தொழிலை செய்பவர்கள் என்றால் அவர்களுக்கு பெண் கொடுப்பதற்கு கூட தயங்கும் நிலை தான் இருக்கிறது.. இறப்பு இல்லாத நாட்களில் வேறு வேலைகளுக்கு சென்று பிழைப்பதிலும் பல்வேறு நடைமுறை சிக்கல்களை இவர்கள் சந்திக்கின்றனர்.

எனினும் இறுதிச் சடங்குகளை செய்யும் தொழிலாளர்கள் இன்றைக்கும் சமூகத்தால் விலக்கி வைக்கப்பட்ட விளிம்பு நிலை மனிதர்களாகவே இருக்கிறார்கள்.

அடக்கம் முடிந்தவுடன்
இவர்களை யாரும் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. அதை விடக் கொடுமை என்னவென்றால் அவர்களுக்கு கொடுக்கும் சொற்பக்கூலிக்கும் பேரம் பேசுவது தான்.

நாடாளும் மன்னனாக இருந்தாலும் கோடிகளுக்கு அதிபதியாக இருந்தாலும், எவ்வளவு செல்வாக்கு மரியாதை இருந்திருந்தாலும் இறந்த பிறகு அவர்களுக்கு இறுதி மரியாதை செய்வது சில நூறு ரூபாய் கூலிக்கு போராடும் இந்த இறுதிச் சடங்கு செய்யும் தொழிலாளர்கள் தான்.

எத்தனையோ பேர் தன் மரணத்திற்கும் பிறகும் கூட யோசித்து ஈமச்சடங்கு , காரியம் செய்யவும் கல்லறையோ, சமாதியோ கட்டுவதற்கும் கூட முன் கூட்டியே பணம் எடுத்து வைக்கிறார்கள். 
இனி அவ்வாறு செய்யும்போது நமக்கான இறுதி மரியாதையைப் பெற்றுத் தரும் ஈமச்சடங்கு தொழிலாளர்களையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

ஒருவன் தன் வாழ்நாளில் எத்தனை கோடி சொத்துக்களை சேர்த்து வைத்து எல்லோருக்கும் வாரி வழங்கியிருந்தாலும், எத்தனையோ தான தர்மங்கள், புண்ணியங்கள் செய்திருந்தாலும் அத்துணைப் புண்ணியத்திற்கான மரியாதையும் இறுதிச் சடங்குகளை
செய்யும் இந்த எளிய தொழிலாளர்களுக்கு தான் செல்கிறது.

ஆனாலும் நம் சமூக அமைப்பில் அவர்களுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அரசாங்கம் இவர்களுக்கென்று ஏதாவது சலுகைகள் வழங்குகிறதா என்று தெரியவில்லை... அப்படி இல்லாதிருந்தால் இவர்களும் வாக்களிக்கும் குடிமகன் தான் என்பதை கருத்தில் கொண்டு இவர்களுக்கான சலுகைகள் வழங்கினால் நன்றாக இருக்கும்.
நாமும் சகமனிதனாக
இவர்களையும் மனிதர்களாக மதிக்க பழகுவோம்..!

~ஈரநெஞ்சம்

Thursday, June 15, 2023

ஆயிரம் தாஜ்மஹாலுக்கு சமம்

பிரேக் அப்புக்கு ஒரு பார்ட்டி... விவாகரத்துக்கும் கூட போட்டோ ஷுட் என்று இருக்கும் இந்தக் காலத்திலும்... தம்பதிகள் ஒருவரை ஒருவர் கொலை செய்யும் அளவிற்கு மனதில் குரோதம் வளர்த்துக் கொண்டிருக்கும் இந்த கலியுகத்திலும் அத்திப்பூத்தார் போல் ஆங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்க்கைத் துணையை உயிராய் நேசிக்கும் ஒரு சிலரை காண முடிவது ஆறுதலான விஷயம் தான்...


கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுப்பிரமணியம் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்த அவரது மனைவி சரோஜினியின் சமாதியில் தினம் தோறும் காலை மாலை இருவேளையும் விளக்கேற்றி, ஊதுபத்தி சூடம் கொளுத்தி வணங்குவதை பார்த்து ஆச்சரியப்பட்டு அவரிடம் பேச்சு கொடுத்தோம்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு அவரது மனைவி இறந்த பிறகு மகனுடன் வசித்து வரும் இவர் மனைவி மீது கொண்ட காதலால் மட்டும் இதை செய்யவில்லை என்றும் ..., 
உயிருடன் இருக்கும் போது மனைவி தன் மீது உயிராய் இருந்தார் என்றும் தனக்கு ஏதாவது ஒன்று என்றால் துடித்துவிடுவார் என்றும் கூறினார். தனக்கு ஹார்ட் அட்டாக் வந்தபோது மனைவி தன்னை மிகவும் அக்கறையுடன் கவனமாக பார்த்துக் கொண்டதாகவும் கூறினார்.
தன் மனைவி சரோஜினி தன் மீது வைத்திருந்த காதல், பாசம், அக்கறை ஆகியவற்றுக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக நாள்தோறும் தவறாமல் தன் மனைவியின் சமாதியை விளக்கேற்றி வணங்குவதாக தெரிவித்தார். தினமும் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டாலும் கூட கண்டிப்பாக வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை இங்கு வருவதாகவும் கூறினார்.

இன்னமும் கூட தன் மனைவி தன்னுடனேயே இருப்பதாக உணர்ந்து வாழ்வதாக வார்த்தையிலே அம்புட்டு காதலை வைத்து நெகிழ்ந்து போகிறார் சுப்ரமணி...

வெறுமனே காரையும் சுண்ணாம்பும் பூசிய இந்த சமாதி ஆயிரம் தாஜ்மஹால்களுக்கு சமம் இல்லைங்களா..!!!

~ ஈரநெஞ்சம் மகேந்திரன்

Sunday, March 12, 2023

அட்சய பாத்திரம் இல்லா அன்னபூரணிகள்



பசி என்பது எவ்வுயிர்க்கும் பொதுவான ஒரு உணர்வு தான். ஆனால் பணமில்லாத போது ஏற்படும் பசி அவமானமாகி விடுகிறது.  

எத்தனை கோடி பணமிருந்தாலும் அதைப் பசிக்கு  உண்ண முடியாது என்பதை அவ்வப்போது பேரிடர் காலங்களில் பெரும் பணக்காரர்களையும் பசிக்கு கையேந்த வைத்து அவர்கள் ஆணவத்தை தலையில் கொட்டி சுட்டிக்காட்ட தவறுவதில்லை இயற்கை.

உண்டியலில் காணிக்கை செலுத்துவதை விட பசியோடு இருப்பவருக்கு உணவு அளிப்பதே
கடவுளுக்கு மகிழ்ச்சியானது என்று கூறிய வள்ளலாரின் வழி நின்று ஆன்மீகப் பணியோடு பசிப்பிணி போக்கும் அறப்பணியையும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வரும் புதுக்கோட்டையில் வசிக்கும் பேரிளம் பெண்கள் இருவர் தற்கால மணிமேகலைகளாக
வாழ்ந்து வருகின்றனர்.

புதுக்கோட்டையில் எல்லைப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி பணியாளராக பணிபுரிந்து வரும் கம்மங்காட்டைச் சேர்ந்த பெரியநாயகி (வயது 56) தனது பதினெட்டாவது வயதில் வள்ளலாரே தன் கனவில் தோன்றி தன்னை ஆட்கொண்டதாக கூறுகிறார். திருமணமே செய்து கொள்ளாமல்  சிறு வயதில் இருந்தே புதுக்கோட்டை பல்லவன் குளக்கரையில் அமைந்துள்ள வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்திலேயே தங்கி ஆன்மீகச் சேவை செய்து வருகிறார். கடவுள் பக்தியில் சிறந்து விளங்கும் இவர் மேடைகளில் பரவசமூட்டும் பக்தி பாடல்களையும் பாடி வருகிறார். இவர் தனது கம்பீரக் குரலில் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை என்று பாடும் போது கல் மனமும் கரைந்து விடும்.


இவரைப் போலவே திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள கணக்கம்பட்டியைச் சேர்ந்த முத்துலட்சுமி(வயது 62) என்பவரும் இறைத் தேடல் காரணமாக திருமண பந்தத்தை மறுத்து துறவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இறைவனுக்கும் இரப்போருக்கும் தொண்டு செய்வதையே குறிக்கோளாக வைத்திருந்த குடும்பத்தில் அவரது தாயார் மற்றும் சகோதரனின் மறைவுக்குப் பிறகு புதுக்கோட்டைக்கு வந்து வள்ளலார் மடத்திலேயே தங்கி விட்ட முத்துலட்சுமி அம்மாள் முழு நேர பணியாக உணவு தயாரித்து வழங்கும் சேவையை செய்து வருகிறார். 

வள்ளலார் மடத்தில் அவ்வப்போது விசேஷ தினங்களில் மட்டும் செய்யப்பட்டு வந்த அன்னதான சேவை, இவர்கள் இருவரின் ஆத்மார்த்த அர்ப்பணிப்பை பார்த்து அரிசி, பருப்பு மற்றும் பணமாகவும் நன்கொடை சற்றே அதிகரிக்கவும் அன்னதானத்தை விரிவுபடுத்தி ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கும் மேலாக தினந்தோறும் உணவு சமைத்து வழங்கி  வருகின்றனர்.


எட்டுக்கு பத்து என்ற அளவில் இருக்கும் ஒற்றை அறையில் வசிக்கும் இருவரின் நாளும் அதிகாலை 3 மணிக்கே தொடங்கி விடுகிறது. உதவிக்கு என்று ஆட்கள் யாரும் இல்லாமலேயே இருவரும் இணைந்து நொய்யரிசி, பாசிப்பருப்பு, சீரகம் வெந்தயம் சேர்த்து கஞ்சி காய்ச்சி காலை   6 மணி முதல் 8 மணி வரை வழங்குவதோடு அன்னலட்சுமிகளாக அறுசுவை உணவையும் காலை 9 மணிக்குள் தயார் செய்து விடுகின்றனர். உணவு சமைப்பதற்கு தேவையான பொருட்கள் காய்கறிகள் வாங்குவது முதல் சமைப்பது சுத்தம் செய்வது என்று அனைத்து பணிகளையும் அவர்கள் இருவருமே செய்கின்றனர்.  முன்பெல்லாம் 12 மணி வாக்கில் தயார் செய்யப்பட்ட மதிய உணவு கோவிட் பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு 9 மணிக்குள்ளாகவே செய்யப் படுகிறது. எத்தனையோ ஏழை எளியோர் நோயாளிகள் முதியோர்கள் இங்கே வந்து சாப்பிடுவதும் உண்டு பாத்திரத்தில் வாங்கி செல்பவர்களும் உண்டு.
 கோவிட் பெருந்தொற்று காலத்திலும் கூட உணவு தயாரித்து வழங்கும் சேவையை ஒரு நாள் கூட விடாமல் செய்து வந்துள்ளனர். இன்னும் சொல்லப்போனால் ஊரடங்கு அதைத் தொடர்ந்த வேலையின்மை, கடையடைப்பு போன்ற காரணங்களினால் இங்கு உணவு தேடி வருவோரின் எண்ணிக்கை வழக்கத்தை விட பெருந் தொற்று காலத்தில் அதிகமாகவே இருந்துள்ளது. உலகமே கோவிட் தொற்றுக்கு பயந்து வீடுகளுக்குள் சிறைப் பட்டு கிடந்தபோதும் இவர்கள் இருவரும் துணிச்சலுடன் உணவு தயாரித்து வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. 
உணவு தயாரித்து வழங்கும் பணிக்கு என்று எந்த  ஊதியமோ பிரதிபலனோ எதிர்பார்க்காமல் இதை ஒரு சேவையாக நினைத்தே இருவரும் செய்து வருகின்றனர்.
உதவும் மனப்பான்மை கொண்ட தன்னார்வலர்கள் தானமாக வழங்கும் பணம், மளிகை பொருட்கள், காய்கறிகள் இவற்றை வைத்தே தினம் தோறும் அன்னதானம் வழங்கப்படுகிறது.. ஒவ்வொரு நாளும் 200க்கும் மேற்பட்ட ஏழை எளியவர்கள் ஆதரவற்றவர்கள் இங்கு வந்து பசியாறி செல்கின்றனர்.

ஏதோ பிறந்தோம் ஏனோ தானோ என்று வாழ்ந்தோம் என்றில்லாமல் இந்தப் பிறவி எடுத்ததற்கு பலனாக இச்சேவையை செய்து வருவதாக இருவரும் ஒருமித்த குரலில் கூறுகின்றனர். தங்களின் கடைசி மூச்சு வரை வறியோரின் பசியை வயிறாரப் போக்கும் புனிதப் பணியை செய்ய வேண்டும் என்பதே தங்களின் லட்சியம் என்றும் கூறுகின்றனர். 


பசியோடு இருக்கும் ஒருவருக்கு உணவு கொடுப்பது உயிர் கொடுப்பதற்கு சமம். அன்னதானம் செய்வதற்கு ஆயிரம் பேர் ஆயிரமாயிரம் பொன் பொருள் கொடுத்தாலும் அதை சாப்பிடும் அன்னமாக மாற்றும்  கைகளின் உழைப்பு பெரும்பாலும் பகட்டான மனிதர்களின் விளம்பர வெளிச்சத்தில் காணாமல் போய்விடுகிறது.

உணர்வுகளைக் நெறிப்படுத்த இயலாமல் மிருகங்களாய் வாழும் எத்தனையோ மனிதர்க்கு நடுவே பருவ வயதிலேயே தவ வாழ்வு வாழ்ந்து உணவு தயாரிக்கும் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு உணவு சமைத்து பரிமாறுகின்ற வாழும் பெண் சித்தர்களாகிய இவர்களின் போற்றுதலுக்குரிய பணியை மகளிர் தினத்தில் பாராட்டுவதில் பெரு மகிழ்வு கொள்கிறோம்...

~ ஈரநெஞ்சம் மகேந்திரன்

Monday, January 23, 2023

குழந்தைகள் நட்ட மரக்கன்றுகள்

கோவை விநாயகபுரம் கிரிமலை நகரில் இன்று (22/01/23) தங்கள் நகரை பசுமைநகராக மாற்றும் முயற்சியின் முதல் படியாக பெற்றோர்களும் குழந்தைகளும் இன்றைய விடுமுறை நாளை அழகாகப் பயன்படுத்தி உள்ளனர்...
மரம் வளர்ப்பது தொடர்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு  நம் முன்னாள் குடியரசு தலைவர் மற்றும் மாணவர்களின் நாயகன் APJ அப்துல் கலாம் அவர்கள் கூறிய உறுதிமொழி:
     நான் என் வீட்டிலோ, காட்டிலோ, பள்ளிக்கூடத்திலோ, வேலை இடத்திலோ 10 மரங்களை நட்டு, அதைப் பாதுகாப்பேன். நான் என் குழந்தைகளை மரம் நட்டு வளர்க்க ஊக்குவிப்பேன், என்று அவர் கடைப்பிடிக்க சொல்லிய உறுதிமொழியை இந்த பெற்றோர்களும் குழந்தைகளும் செயல்படுத்தி உள்ளனர்.
அழிந்து வரும் இயற்கையைப் பாதுகாக்கவும், மரங்களின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு புரியவைக்கவும் அவர்களை தங்கள் பகுதியில் பராமரிப்பற்ற நிலையில் இருந்த பூங்காவில் மரம் நட ஊக்கப்படுத்திய பெற்றோர்க்கு வாழ்த்துகள்..
நிகழ்வில் கலந்து கொண்ட மழலைச் செல்வங்கள் புதிதாக நடப்பட்ட மரக் குழந்தைகளுக்கு தங்கள் பெயரைச் சூட்டி மகிழ்ந்ததோடு தண்ணீர் ஊற்றி எந்நாளும் பராமரிப்போம் என்று உறுதியளித்தனர்.
எங்களை எங்கள் அப்பா அம்மா பார்த்துக் கொள்வது போல மரங்களை நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்று குழந்தைகள் கூறுகையில் கலாம் கண்ட கனவு இந்தியா கண்ணில் ஒளிர்ந்தது.

~ ஈரநெஞ்சம் மகேந்திரன்

Friday, January 06, 2023

தொல்காப்பிய இரட்டை சிறுமியர்

தொல்காப்பியத்தின் நூல். மொழி மரபினை ஒப்பிவித்து சாதனை படைக்கும் 5 வயது இரட்டையர்கள் .

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கோவையை சேர்ந்த செந்தில் குமார் உமாராணி தம்பதியர்களுக்கு பிறந்த மகிமா, மகிதா என்ற 5 வயது இரட்டையர்கள். இருவருமே வீட்டில்  படு சுட்டி, தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள  தி அத்யாயனா இண்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி UKG படித்து வருகின்றனர்  படிப்பிலும் சளைத்தவர்கள் இல்லை.
செந்தில் குமார் உமாராணி இருவருக்கும் தமிழ் மீது பற்று அதிகம். செந்தில் குமார் தினமும் காலையும் மாலையும் தெய்வ வழிபாடு போன்று   தொல்காப்பியம் படிப்பது வழக்கம், 

செந்தில் குமார் தொல்காப்பியம்  வாய்விட்டு படிப்பதை  மகிமா, மகிதா இருவரும் தவழும் வயது முதல் கவனித்து வருவது உண்டு. 3 வயதாகும் போதே மழலை மொழியில் இருவரும் தொல்காப்பியம் ஒப்பிக்க ஆரம்பித்து விட்டனர், 

நான்கு வயதில் பள்ளியில் சேர்த்ததும் பள்ளியில் தொல்காப்பியத்தை சரளமாக ஒப்பிப்பதை கண்ட ஆசிரியர்கள் அனைவரும் மிகவும் ஆச்சர்யப்பட்டனர்.

தமிழ் மொழிக்கு மிகவும் முக்கியமானது இலக்கணம் . இலக்கணத்தை தமிழ் மொழியில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று அருளியவர் தொல்காப்பியர் . இவர் எழுதிய தொல்காப்பியமே மிகவும் பழங்காலத்தில் தோன்றிய இலக்கண தொகுப்பாகும். நமது  பண்டைய இலக்கணங்களை புரிந்து கொள்வதற்கு நமக்கு உறுதுணையாய் உதவுவது தொல்காப்பிய நூலே ஆகும். 

காப்பியத்தில் உள்ள எழுத்து அதிகாரம், சொல் அதிகாரம்,  பொருள் அதிகாரம்,  ஆகியவற்றை நன்றாக கற்கும் பொழுது, எந்த கல்வி பயின்றாலும் தமிழ் மொழியில் சிறந்து விளங்குவார்கள் . என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .

மகிமா, மகிதா குழந்தைகள் இரண்டு வயது முதலே தொல்காப்பியத்தின்  எழுத்து அதிகாரம், சொல் அதிகாரம், பொருள் அதொகாரம் போன்ற தொகுப்புகளை கொண்டவற்றில் எழுத்து அதிகாரத்தில் உள்ள முதலில், நூல் மரபு மற்றும் மொழி மரபினை கற்றுக் கொண்டுள்ளனர். 

இப்பொது நூல் மரபு, மொழி மரபு , பிறப்பியல் , மூன்றும் கற்றுணர்ந்து பிழையின்றி ஒப்பிக்கின்றனர். மற்றும் தற்பொழுது  புணரியல் கற்று வருகின்றனர். 

உலகில் முதலில் தோன்றிய மொழி தமிழ் மொழி.  ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு  (அ ) நாகரிக மாற்றத்தின் காரணமாக  நம் தமிழ் மொழி  சிதைந்து விடுமோ  என்ற அச்சம் நிலவும் இக்காலகட்டத்தில்  தொல்காப்பியத்தை  தெள்ளத்தெளிவாக ஒப்புவிக்கும் இந்த தமிழ் மழலை குழந்தைகளை பார்க்கும் பொழுது தமிழ் மொழி என்றும் நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

தற்பொழுது மகிமா, மகிதா இரட்டையர்கள் பல தமிழ் வழி கூட்டங்களில் கலந்து கொண்டும்  வருகின்றனர். தமிழ் ஆர்வலர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகின்றனர்.


மகிமா, மகிதா இரட்டையரின் தமிழ் வளர்ப்பை கண்டு ஈரநெஞ்சம் அறக்கட்டளை அவர்களுக்கு இன்று பரிசு வழங்கி மகிழ்வித்தது. 

தமிழ் வாழ்க !!!

~ஈரநெஞ்சம் அறக்கட்டளை
https://www.facebook.com/eeranenjam.organization