Sunday, September 14, 2014

மழையால் ஒதுங்கிய கவிதை... மகி




வீட்டைச் சுற்றிலும் தண்ணீர்
இவர்கள் தொண்டைக் குழி மட்டிலும்
பாலைவனம்...

வாண்டுகள் வலை போட்டுத்தேடுகின்றனர்
மீன் தொட்டியையும், தொட்டிக்குள் இருந்த
மீனையும்...

குட்டிகளுக்கு விளையாட வீட்டுக்குள்ளேயே ஆறு
இறங்கி விளையாட கரை எங்கே...

மீனவர்கள் வீட்டை தேடியே
ஆறும் மீனும்...

படித்தது போதும் கொஞ்சநாள்
மழை பாடம் படிக்க,
வேடிக்கை பார்க்க, படிப்பு வாசம் படாத
தாத்தா பாட்டியெல்லாம் குடும்பத்துடன்
பேரன் படிக்கும் பள்ளி மாடியில்...

அண்ணாந்து நட்சத்திரம் ரசிக்கும்
கவிஞன் இன்று
ஹெலிகாப்டர் உணவுக்காக
அண்ணாந்து பார்க்கிறான்...

இந்துமா சமுத்திர கடலைவிட
காஷ்மீர்க்கு மழை கொடுத்த
வெள்ளம் பெரியது,

தென்னகத்தில் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் போல
இங்கே மழை நீரை குடிநீராக மாற்ற முடியுமா...

கழிவு நீர் கலந்த மழை நீர் வீட்டுக்குள்ளேயே
முட்டிக்கு மேல் நிற்க
எங்கு சிறுநீர் கழித்தால் என்ன டா குரல்...

கட்டி இருக்கும் உடை முதல் கொண்டு மழை
துவைத்துக் கொடுத்துவிட்டது
காயப்போட மின்னல் கொடி மட்டும் தான் மிச்சம்...

ஆங்காங்கே வைக்கோல் கன்றை மட்டும் விட்டு வைத்துவிட்டு
பசுவெல்லாம் மழை கொன்றது...

நீரில் சமாதியான கர்ப்பிணி வயிற்றில் மட்டும் தண்ணீர் இல்லை,
அவளை சுற்றிலும் தண்ணீர்...

சுடுகாடு தேடி மிதந்துவரும் பிணங்கள்
மனிதனுக்காக குழி வெட்டும் இடமெல்லாம்
மழை நீர் ஆக்கிரமிப்பு
மழை கொன்ற மனித உடலை புதைக்க
வெட்டியானும் இல்லை வெட்ட இடமும் இல்லை...

மழை போதாது என்று
தண்ணீரில் தெரியும் மேகத்தை பார்த்து
கண்களிலும் கண்ணீரின் மழை...

மூழ்கிக்கிடக்கும் தண்ணீர் லாரிகள்...
நீரில் மிதக்கும் பிளாஸ்டிக் குடங்கள்

மார்வாடி மழையால் மரித்துப் போனது அறியாது மார்வாடிக்
கடைக்கு மிதந்துவரும் பித்தளைக் குடங்கள்...

தபால் பெட்டிக்குள் தண்ணீர்
பட்டுவாடா நடப்பது எப்போது...
யாரோ எழுதிய கடிதம்
யாருக்கோ கொண்டு சேர்க்கும் மழை...

ஏற்கனவே கடனில் மூழ்கிப்போன வீடுகள்
இன்று மீண்டும் வெள்ளத்தில் மூழ்குகிறது...

கூடு கட்டின மரம் இருந்த இடம்
தெரியாமல் பறவைகள்
அல்லல்...

இதுதான் விதி என்பதா
தாமரை பூவிற்கு தண்ணீரிலேயே மரணம்..

பூந்தோட்டம் இருந்த இடம் காணோம்
பட்டாம் பூச்சிகள் கண்ணிலும் மழை...

நெல்வயலுக்குள் புகுந்ததால்
ஜோசியக் கிளி கூட
அவர்களோடு பட்டினிதான்...

மனிதன் பொதுக் கூட்டத்திற்கு தேதிக் குறிப்பிட்ட
அதே தேதியில் மழை வெள்ளம் நடத்தும்
இரங்கல் கூட்டம்...

கொஞ்சம் அதிகம் வேண்டிவிட்டார்கள் போல
கொட்டுகிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது
கோவிலுக்குள் இருக்கும் கடவுளுக்கும்
ஒதுங்க இடம் கிடைக்காமல் தவிக்கிறது...

மழைக் காட்சியை படம் பிடிக்க வைத்திருந்த கேமராக்களையும்
நீர் ஒப்பனை செய்ய , மின்னல் வந்து படம் பிடிக்கிறது...

தேர்தல் சமயத்தில் குடைசின்னம் கொண்ட கட்சிகளுக்கு
எதிர்க் கட்சிக்காரனே செய்யும் ஓசி பிரச்சாரம்...

ஒரு உண்மை உறுதியானது
" தண்ணீர் பந்தலுக்குள்ளும் தண்ணீர்...

மழைநீர் சேகரிப்புத் திட்டம்
உடைத்தெறிந்தது இந்த மழை வெள்ளம்...

என்ன தேவையோ தெரியவில்லை
சாலை மறியல் செய்யும் மழை...

மழை என்னும் ஒரே ஒரு திருடன் ஒரே நேரத்தில்
அனைத்து வீடுகளுக்குள்ளும் புகுந்து
உயிர் முதல் அனைத்தையும் களவாடி விட்டான்
தண்டிக்க ராணுவத்தால் கூட முடியாது...

மழை மிச்சம் வைத்த உயிர்களை
நிவாரண நெரிசல் சவ வேட்டையாடுகிறது...


~ மகி

Wednesday, September 10, 2014

600 குடும்பங்களைத் தற்கொலையில் இருந்து மீட்டுத்தந்த கோவையைச் சேர்ந்த லதா .

செப்டம்பர் 10  தற்கொலைத் தடுப்பு தினம்:

செப்டம்பர் 10 தற்கொலைத் தடுப்பு தினம்: , "உலகத் தற்கொலை தடுப்பு தினம்" ஆகும். தற்கொலைத் தடுப்பிற்கான சர்வதேச அமைப்பு மற்றும் உலகச் சுகாதார‌ அமைப்பு ஆகியவை இணைந்து இந்த தினத்தை 2003 ஆம் ஆண்டில் இருந்து நினைவுகூர்ந்து வருகிறது. தற்கொலை எண்ணம் தலை தூக்க காரணங்கள் பல சொல்கிறார்கள். பொருளாதாரச் சிக்கல், கடன், அவமானம், குடும்பப் பிரச்னைகள், காதல், படிப்பு, மனரீதியான பிரச்னைகள் என ... உலகம் முழுவதும் 40 நிமிடங்களுக்கு ஒருவர் என்றால் ஒரு நாள் பொழுதில் 3 000 பேர் , ஆண்டுக்கு சராசரி 15 சதவீதம் என தற்கொலை அதிகரித்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் இறப்புக்கான காரணங்களில் தற்கொலை 13 ஆவது இடத்தில் இருக்கிறது.



இந்தச் சமுதாயத்தில் நான் வாழ தகுதியற்றவன் என முடிவுசெய்து தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளும் ஒரு பயங்கரமான கோழைத்தனம் தற்கொலை "எந்த மாவீரனாலும் முடியாது, ஒரு கோழையால் மட்டுமே சாதிக்கப்படும் ஒரு வீரச்செயல் தற்கொலை" இந்தச் செயலை செய்வதால் கின்னஸ் புத்தகத்தில் இடமோ அல்லது விருதுகளோ கிடைக்கப்போவது இல்லை . காலம் முழுவதும் தற்கொலை செய்தவருக்கும், அவர் குடும்பத்தினருக்கும் நிலைக்கப் போவது தீராத அவப்பெயர்தான்.

தற்கொலை செய்து கொள்ளப்போகிறவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும் தற்கொலையால் பெறப்படும் விளைவுகள் என்ன என்று . ஆனால் தற்கொலைக்குப் பின் நமக்குத் தெரியப்போகிறதா என்ன என்ற ஒரு சுயநலம் அதில் இருக்கிறது . தற்கொலை செய்து கொள்வதால் கண நிமிடங்களில் உயிர் போய்விடும். ஆனால், நம்மை நினைத்து, நினைத்து முடங்கிப் போகும் தாய், தந்தை, மனைவி , குழந்தைகள் போன்ற சொந்தங்கள் தினம், தினம் செத்துப் பிழைப்பது பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை.


தற்கொலை செய்து கொள்பவர்களை அவர்களது ஒரு சில செயல்கள் மூலம் நாம் கண்டுபிடித்துவிடலாம் . தற்கொலை செய்துக்கொள்ள ஒருவர் முடிவெடுத்து விட்டார் என்றால் அவருடைய பேச்சில் பல மாறுதல்கள் தெரியும் . தற்கொலை செய்து கொள்ளப் பலநாட்களுக்கு முன்பே முடிவு செய்து விடுவார்கள் . பல துன்பங்கள் இருந்தும் தற்கொலை முடிவுக்குப் பின் சந்தர்ப்பம் கிடைக்கும் வரை வேண்டுமெனவே சிலர் உற்சாகமாக , மகிழ்ச்சியாக இருப்பது போலக் காட்டிக் கொள்வார்கள். இன்னும் சிலர் "இனியும் என்னால் எதுவும் செயல்பட முடியாது " " இனிமேல் எனக்கு யாரும் இல்லை " "அனைத்திற்கும் ஒரு முடிவு காண்கிறேன் " என்றெல்லாம் சொல்லி கொண்டிருப்பார்கள் . இதையும் மீறி அக்கணத்திலேயே தூண்டப்பட்டுத் தற்கொலை செய்து கொள்பவர்கள் மிகக் குறைவு.

தற்கொலை செய்து கொள்வது அவ்வளவு எளிதானதும் இல்லை தற்கொலை செய்துகொள்வதற்கு வாழ்ந்துவிட்டுப் போகலாம் . சில தற்கொலைகள் முயற்சிக்கும் போது ஏற்படும் வலிகள் மிகவும் கொடுமையானதாக இருக்கும் , அது நமக்கு இருக்கும் தற்கொலைக்கான காரணத்தைக் காட்டிலும் வலி மிகுந்ததாக இருக்கும் .

" வாழ நினைத்தால் வாழலாம் , தற்கொலை ஒன்றும் சாதாரணம் அல்ல " 
600 குடும்பங்களைத் தற்கொலையில் இருந்து மீட்டுத்தந்த கோவையைச் சேர்ந்த லதா .




சாவதற்குத் துணிவு இருப்பவர்களுக்குத் துன்பங்களைத் துரத்துவது ஒன்று பெரியதல்ல , தன்னம்பிக்கையும் ஊக்கமும் இருந்தால் பிரச்சினைகளை வென்று வாழ்ந்து விடலாம் என்று சாதித்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த லதா என்ற பெண்மணி. ஒரு கிராம் தங்க நகை தொழில் செய்து வரும் இவர் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களைத் தற்கொலையில் இருந்து மீட்டு இருக்கிறார்.

கடந்த 1998ஆம் ஆண்டுக் கோவையில் நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து பலரும் வேலை இழந்து வாழ்வாதாரம் இழந்து செய்வதறியாது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டனர் . அதே முடிவுக்குத் தன் கணவரும் வந்த போது லதா தன் கணவருக்கு அறிவுரை கூறி தன்னம்பிக்கை ஊட்டி , நம்மாலும் சாதிக்கமுடியும் வாழ்வதற்கு வேறு வழி இல்லாமல் போகாது இந்த உலகில், எனக் கணவருடன் கைகோர்த்து , தன் குடும்பத்தை மட்டுமல்ல வாழ்விழந்து நிற்கும் பிற குடும்பங்களும் தற்கொலை என்ற முடிவுக்கு வந்து விடாமல் தடுப்பதோடு அவர்களுக்கு வாழ்வாதாரத்தையும் தேடிக் கொடுத்திருக்கிறார்.

கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களையும் இணைத்து, அனைத்து பெண்களையும் சேர்த்து அப்போதைய மாவட்ட ஆட்சியர் திரு, முருகானந்தம் அவர்களிடம் சென்று வாழ வழி ஏற்படுத்தித் தரும்படி மனு கொடுத்தார் . அவர்களது மனுவை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் உடனடியாக அவர்கள் அனைவருக்கும் தன்னம்பிக்கை மற்றும் ஊக்கம் கொடுக்கும் பயிற்சியை அளித்ததோடு அனைவருக்கும் சிறுதொழில் பயிற்சிக்கும் ஏற்பாடு செய்து கொடுத்தது இவரது முயற்சியாலேயே !!!

அனைவருக்கும் விருப்பப்பட்ட சிறு தொழிலுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுத் தற்போது அனைவரும் சுயதொழில் மூலம் முன்னேற்றம் கண்டு நல்ல நிலையில் வருமானம் பெற்று வாழ்ந்து வருகின்றனர். அனைவருக்கும் தற்கொலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு அவர்கள் வாழவும் நல்ல வழி ஏற்படுத்தித் தந்த லதா அவர்கள் தன்னம்பிக்கை இருந்தால் சாவையும் வென்று விடலாம் என்பதற்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறார். மேலும் இவர் ஒரு கிராம் தங்க நகை செய்யும் தொழிலை பிறருக்கு கற்றுக்கொடுக்கும் ஆசிரியராகவும் விளங்குகிறார். இப்போதும் அவரைப் பார்ப்பவர்கள் தங்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுத்த தெய்வமாகவே நன்றியுடன் நினைத்து வருகின்றனர். எனவே தற்கொலை என்பது முடிவல்ல "தன்னம்பிக்கை இருந்தால் பிரச்சினைகளை மட்டுமல்ல சாவையும் வென்று சாதிக்கலாம் " புத்துணர்ச்சியுடன் வந்தவர்களுக்கெல்லாம் சாதிக்க வழிகாட்டியாக இருக்கிறார் பல விருதுகளுக்கும் சொந்தக்காரரான  லதா .



" வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் " இந்த லதா போன்றவர்கள் இருந்தால் ஒரு வழி அல்ல , ஆயிரம் வழிகள் உண்டு இப்பூமியில் ...

லதா அவர்களை தொடர்புகொள்ள : 94867 78910

~ஈர நெஞ்சம்