Wednesday, December 30, 2015

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தீண்டத்தகாதவர்கள் அல்லகோவில் வாசல்களிலும் , கோவில் குளங்களிலும் நாம் காணாமல் இருந்திருக்க முடியாது . ஒருவகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது கோரமான முகங்களை காட்ட மறுத்தபடி துணிகளால் முகத்தை மூடிக்கொண்டு அழுக்கு உடை துர்நாற்றம் வீசியபடி கையில் உள்ள காயங்களுக்கு கட்டுகள் போட்டபடி கை கால் விரல்கள் முடங்கியபடியும் , ஓரத்தில் அமர்ந்து வயிற்றுப்பசிக்கு கஞ்சிக்கு ஏங்கிய படி பரிதாபமாக அமர்ந்திருப்பார்கள். அவர்கள் யாரும் உண்மையில் பிச்சை எடுக்க வேண்டும் என்ற நோக்கில் இங்கு வந்தவர்கள் இல்லை.

கோவை மருதமலை அடிவாரம் இங்கு ஒரு பகுதியில் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேரை காண முடிந்தது. மருதமலை செல்லும் பொழுதெல்லாம் அவர்கள் இருக்கும் இடத்திற்கு நேரடியாக சென்று அவர்களை பற்றிய விபரங்களை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று நீண்டநாளாக ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. இன்று அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
ஒருவர் தொழு நோயால் பாதிக்கப்பட்டவராக நடக்க முடியாத நிலையில் அவர் கால் பாதங்கள் முற்றிலும் இழக்கப்பட்ட நிலையில் அதை மறைக்க கால் உறை அணிந்துக் கொண்டு அதற்குரிய காலணிகள் அணிந்து கையில் ஊன்றுகோலுடன் மெதுவாக நடந்து வந்தார் .

அவரிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்து ,  அவர்களை பற்றியும் . இந்த பகுதியை பற்றியும் கேட்டேன் .

அவர் மோகன் வயது 63, சொந்த ஊர் கும்பகோணம், அவருக்கு 17 வயதில் இந்த நோயின் அறிகுறிகள் தென்பட்டது. இந்த நோய்க்கு போதிய மருத்துவ வசதிகளும், அதற்கான விழிப்புணர்வும் இல்லாத காலம் ( அப்போது மட்டும் இல்லை இப்போதும் கூடத்தான் ). இதனால் சரிவர  மருத்துவம் பார்க்க முடியவில்லை. இந்த நோய் கண்டறியப்பட்டு ஒரு வருடத்தில் எதேச்சையாக அடுத்தடுத்து அம்மாவும் அப்பாவும் காலமானதால் உறவினரின் பாதுகாப்பில் இருந்ததாகவும் இந்நோயின் வீரியத்தால் கை விரல்கள், கால் விரல்கள் முடங்குவதை பார்த்து தொழு நோய் என்று கூறி உறவினர்கள், நண்பர்கள் என அனைவராலும் ஒதுக்கப்பட்டதாகவும் கூறினார்.

மேலும் கூறும் பொழுது, நான்  மட்டும் இல்லை இந்த நோயால் பாதிக்கப்பட்ட அனைவரின் கதையும் இப்படித்தான் இருக்கிறது .

யாருக்கு எந்த நோய் வந்தாலும் அவர்களை சேர்ந்தவர்கள் அவர்களை எப்படியாவது குணப்படுத்தி விட வேண்டும் என்று நினைப்பார்கள். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட அவர்களின் மறுவாழ்வுக்கு குரல் கொடுக்கும் உள்ளங்கள் உள்ளது. புற்று நோய் வந்தாலும் பாசம் காட்டி உயிரைக் கொடுத்து காப்பாற்ற போராடும் சொந்தங்கள் வருகிறது . ஆனால் தொழு  நோய் வந்துவிட்டால் பாராட்டி சீராட்டி பாலூட்டி வளர்த்த பெற்றோர்களாக இருந்தாலும் சரி, கண்ணுக்கு கண்ணாக வளர்த்த பிள்ளையாகட்டும் சரி , உற்றார் , உறவினர் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் சரி பெரும்பாலும் ஒதுக்கி விடுகிறார்கள்.

எங்களுக்கு யாரும் வேலை கொடுக்க மாட்டார்கள். இந்த நோய் இருப்பதை மறைத்து வேலை தேடி வேலைக்கு சென்றாலும் இந்த நோயைக் காரணம் காட்டி வெளியேற்றப் படுகிறோம் .

இருக்கின்ற காசை வைத்து சொந்தமாக தொழில் செய்ய ஒரு பெட்டிக்கடை வைத்தாலும் அப்போதும் இந்த " குட்டம் பட்ட கடைக்காரனிடம் பொருள் வாங்கினால் நமக்கும் நோய் ஒட்டிக் கொள்ளும் " என்று புறக்கணிப்பார்கள்.பசி பசி, இதனால் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம், ஊர் ஊராக திரிகிறோம், கோவில் வாசல் குளங்கள் என அலைந்து கை ஏந்துகிறோம் .இந்நோயின் காரணமாக முகம் சிதைந்து தோல், நரம்புகளும் பாதிக்கப்பட்டும் அகோரமான தோற்றம் கொண்டிருப்பதால் பிச்சை போட கூட யாரும் முன் வருவதில்லை. இதனால் கோவில் வாசல் , திருமண மண்டபம், ஹோட்டல் இங்கு மீதியாகி தூக்கிப் போடும் எச்சில் உணவுகளை தேடி தின்று வயிற்றை நிரப்பும் நிலைக்கும் வருகிறோம்.

இந்த நிலையில் தான் தொழுநோயாளிகள் எல்லோரும் ஒன்றிணைந்து ஒவ்வொரு பகுதியிலும் கூட்டாக பொது மக்களின்  பார்வை படாத இடங்களில் வாழ்கின்றோம் . அது போன்ற ஒரு பகுதியான இந்த மருதமலைக்கு நானும் வந்தடைந்தேன். இங்கு ஏராளமானோர் என்னை போலவே தொழுநோய் கொண்டவர்கள் பிச்சை எடுத்து வந்தார்கள் அவர்களோடு ஒன்றாய் இணைந்தேன். இந்த நோயால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு  ஆறுதலுக்காக அவர்களின்  குடும்பத்தோடு வந்தவர்களும் இருக்கிறார்கள. இங்கு சுமார் 100 குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள் . இங்கு அவ்வப்போது சில தொண்டு நிறுவனங்கள் நேரில் வந்து எங்களுக்கு தேவையான துணி , உணவு கொடுத்து உதவுகின்றனர்.

இங்கு உள்ள தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனை, சிகிச்சை என முறையான மருந்துகள் உட்கொண்டு தற்பொழுது தொழுநோய் முற்றிலும் குணமடைந்து உள்ளோம் . ஆனால் இந்த நோயின் தாக்கத்தால்  விரல்கள் இழந்ததை  திரும்ப பெற முடியாது. இதனால் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் என்பதை இந்த அடையாளம் காட்டிக் கொடுத்துவிடுகிறது. நோய் குணமடைந்தாலும் முடங்கிய உறுப்புகளை பார்க்கும் பொழுது உறவினராக இருந்தாலும் கூட எங்களை மனதார ஏற்றுக் கொள்ள முன் வருவதில்லை . அதனாலேயே நிரந்தரமாக இங்கேயே தங்கி இருக்கிறோம் .

மேலும் அவரிடம் குடும்பம் என்று சொல்கிறீர்கள், அதெப்படி? அப்படியானால் இது தொற்று வியாதி இல்லையா ? என்றேன்.

ஆமாம் என்று என்னை ஒரு வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். அங்கு பெற்றோர்கள் இருவருக்கும் தொழுநோய் பாதிப்பு இருந்துள்ளது , ஆனால் அவர்களது குழந்தைக்கு அந்நோய் பாதிப்பு இல்லை . அந்த குழந்தைகளுக்கு உணவை ஊட்டி விடுகிறார்கள் குழந்தையை கொஞ்சுகிறார்கள். பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு திருமணமும் முடிந்து குழந்தைகளும் உள்ளதை காண முடிந்தது.
தவறாக நினைக்க வேண்டாம், ஊரே ஒதுக்கி வைத்துவிட்டார்கள், இப்படி இருக்க திருமணம் எப்படி முடிவாகிறது? என்றேன் ,
நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில் இருப்பவர்களோடுதான் நாங்கள் சம்மந்தம் பேசி முடிவு செய்கிறோம். அது போலத்தான் இங்கு இவ்வளவு குடும்பங்கள் உருவாகி உள்ளது என்றார்.
சரி, இங்குள்ளவர்களின் வாழ்வாதாரம் பற்றி சொல்லுங்க என்றேன் ?

எங்கள் குழந்தைகள் எல்லாம் மேற்படிப்பு முடித்து வேலைக்கு செல்கிறார்கள், அவர்கள் ஈட்டிவரும் பொருளில் நாங்கள் வாழ்கிறோம். அவர்கள் படிக்கும் காலத்தில் நாங்கள் குழந்தைகளுக்கு தெரியாமல் பிச்சை எடுத்துதான் அவர்களை படிக்க வைத்தோம் .

இறுதியாக இந்த நிலையில் நீங்கள் என்ன எதிபார்கின்றீர்கள் என்ற போது.

பொதுமக்கள் மத்தியில் தொழுநோய் குறித்து அதன் விழிப்புணர்வை அதிகரிக்க வழி செய்ய வேண்டும். இந்நோயால் பாதிப்புக்குள்ளாகி அவதிப்படுவோர்க்கு நல்லமுறையில் மருத்துவம் செய்துக் கொடுக்க வேண்டும் . தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் சமுதாயத்தில் மரியாதையுடன் வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். இந்நோயால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ள படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பிலும், படிப்பிலும் முன்னுரிமை வழங்க வேண்டும். எங்கள் பகுதியில் நாங்கள் இருக்கும் வீட்டிற்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். உலக தொழுநோய் தினம் ஜனவரி 30இல் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்த தினத்திலும், இந்நோயால் பாதிக்கப்பட்டோரிடையே ஒருங்கிணைப்புக்கு புனிதமான அணுகுமுறையை உறுதி செய்யவும் வலியுறுத்தப்பட வேண்டும்.

ஆமாம் நண்பர்களே இவர்களை நான் நேரில் சந்தித்தபிறகு இவர்களை பற்றியும் இவர்கள் படும் வேதனையை பற்றியும் உளமார நானும் உணர்ந்தேன்.

மனதுக்குள்  ஏதோ எல்லோரும் இவர்களுக்கு துரோகம் செய்து விட்டது போல உறுத்தல் .

எய்ட்ஸ் நோயாளிகளைக் கூட இல்லத்தில் வைத்து பராமரித்து வரும் அளவிற்கு விழிப்புணர்வும், சகிப்புத் தன்மையும், மன பக்குவமும் கொண்ட நாம்  , தொழு நோய்க்கு உள்ளானவர்களை தீண்டத்தகாதவர்களாகக் கருதி, வீட்டை விட்டு வெறுத்து ஒதுக்கி, தனிமைப் படுத்தி  அவர்கள் மனதில் ஆறாத ரணத்தை உண்டாக்கி விடும்  தனி மனிதன் உட்பட , இந்த சமுதாயத்தை  நினைக்கும் போது நெஞ்சம் கனக்கிறது.

 மத்திய, மாநில அரசுகள் தொழுநோயாளிகளுக்கென்று இன்னும் அதிக  அக்கறைக் கொள்ள வேண்டும் . ஒரு சில தொண்டு நிறுவனங்கள் தொழு நோயாளிகளின் விசயத்தில் ஓரளவு அக்கறையோடு செயல்பட்டு வருவது ஆறுதலை அளிக்கிறது என்றாலும்,  மக்களின் மனதில் தொழுநோய் பற்றிய அச்சமும், அருவெறுப்பும் இன்று வரை இருந்து கொண்டுதான் இருக்கிறது. மக்களின் பார்வையில் சாபக் கேடாகவும், சமூகப் பிரச்சனையாகவும் உருவெடுத்து இருக்கின்ற தொழு நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும். அதற்கு சீரான மருத்துவமும், ஆறுதலும், மனிதநேயமும் வேண்டும் .

இவர்களை ஒதுக்க வேண்டிய அவசியமும் இல்லை. தற்போது இருக்கும் மருத்துவ உலகில் இந்த நோயை முற்றிலுமாக குணப்படுத்த முடியும். அதற்கு இவர்களுக்கு எந்த வகையில் நம்மால் விழிப்புணர்வுடன் உதவ முடியுமோ அதற்கு நாம் முன்வர வேண்டும்.

நான் முடிவு செய்து விட்டேன் வரும் இந்த பொங்கல் திருநாளில் இவர்களோடு கொண்டாடுவது என்ற முடிவிற்கும் வந்து விட்டேன்.
நீங்கள் எப்படி ?

~ஈரநெஞ்சம் மகேந்திரன்.

நீங்களும் இவர்களுக்கு  உதவ நினைத்தால் 
தொடர்புகொள்ளுங்கள் : 

A.Ganesan.
Amarjothi Leprosy Nivaranan Sangh
+91 98 42 597525
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment