!!! தர்ஷினி மாற்று மாற்றுதிறனாளி அல்ல மின்னல் வேக வீராங்கனை !!!
மனதில் திடமிருந்தால் மலைகள் கூட தடைகள் செய்யாது என்பதை நிரூபிக்கு வகையில் தன் குறைகளை கடந்து சாதித்திருக்கிறாள் 15 வயது சிறுமி தர்ஷினி .
கோவை சுந்தராபுரம் பகுதியில் கூலி வேலை செய்து வரும் திரு.பாலகிருஷ்ணன், திருமதி.ஜெயந்தி தம்பதியினரின் மூன்றாவது மகள் தர்ஷினி . பிறவி முதலே காது கேட்கும் திறனும் பேசும் திறனும் இல்லாதவர் , இருந்தும் யோகா மற்றும் நடனம் பயிற்சி பெற்ற தர்ஷினியின் சிறப்பு அம்சம் ஒரு கபடி வீராங்கனை. தனிப்பட்ட முறையிலும் குழுவாகவும் எண்ணற்ற போட்டிகளில் வெற்றிக் கோப்பைகளை வென்றுள்ளார்.
ஆறாம் வகுப்பு படிக்கும் போது விஸ்வநாதன் கபடி பயிற்சியாளரிடம் கபடி விளையாட்டில் பயிற்சி மாணவியாக சேர்ந்த தர்ஷினி அப்போதே கல்லூரி அளவிலான போட்டிகளில் கலந்துக் கொள்ளும் அளவிற்கு விளங்கினாள் .
பயிற்சியாளர் விஸ்வநாதன் கூறும் பொழுது கபடி விளையாட்டுக்கு கிடைத்த மின்னல் வேக வீராங்கனை தான் தர்ஷினி . இவள் என்னிடம் வரும் பொழுது தர்ஷினி ஆறாம் வகுப்பு மாணவி, பெற்றோர்கள் இவளுக்கு காது கேட்காது பேசமுடியாது . இவள் தொலைகாட்சியில் கபடி விளையாடுவதை கண்டு அதில் ஆர்வம் இருப்பதை தெரிவித்தாள். இவளுக்கு கபடிக் கற்றுக் கொடுங்கள் என்று முறையிட்டனர்.
மாணவியாக சேர்த்துக் கொண்ட ஆரம்பத்தில் இவளுக்கு பயிற்சி கொடுப்பது கடினமாக இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் ஆரம்பத்திலேயே இவள் ஒரு ஆண் விளையாட்டு வீரரை போல ஆறாம் வகுப்பு படிக்கும் இந்த சின்ன குழந்தையிடம் வேகம் இருப்பதை கண்டேன். ஆனால் கபடி விளையாட்டில் கபடி என்ற வார்த்தை உச்சரிப்பது மிகவும் அவசியம் அதுவும் மூச்சு விடாமல் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் . இவளால் பேசமுடியாதே என்று வருத்தப்பட்டவேளையில் தொடர்ந்து இரண்டு மாதம் தானாக முயற்சி செய்து கபடி என்ற வார்த்தை மட்டும் உச்சரிக்க கற்றுக் கொண்டு களத்தில் இறங்க தகுதிப் பெற்றாள்.
அதனை தொடர்ந்து முறையான பயிற்சியின் மூலம் பல உள்ளூர் போட்டிகளில் கலந்து சாதனைபடைத்து வருகிறாள் . தர்ஷினியின் பெற்றோர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் , அவர்களுக்கு இவளது திறமை பற்றியும் கபடி போட்டிகளைப் பற்றியும் பெரும் அளவில் அறியாதவர்கள் , இவள் குவித்து வரும் வெற்றிக் கோப்பைகளை கண்டு ஆச்சரியமும் சந்தோசமும் அடைவார்கள் , ஆனால் வெளியூர் போட்டிகள் வரும் போது இவளை அனுப்ப தயக்கம் காட்டுவார்கள் . அப்போதெல்லாம் அவர்கள் காலில் விழாத குறையாக கெஞ்சிக் கேட்டு சம்மதம் வாங்கி அழைத்துப் போவோம்.
இவள் களத்தில் இறங்கும் போதே இந்த பெண்தானா இப்படி என்று ஆச்சர்யம் படும் அளவில் இவளது வேகம் இருக்கும் . இவளது ஆட்ட வேகத்தைக் காண தனி ரசிகர்கள் ஏராளம் உள்ளனர் .
காது கேட்கும் கருவி ஒன்று இவளுக்கு இருந்தால் இவளது திறமை முழு அளவில் வெளிப்படுத்தி விடலாம் , பொதுவாகவே நம்மூரில் கிரிக்கெட் விளையாட்டிற்கு இருக்கும் ஒரு முக்கியத்துவம் மற்றப்போட்டிகளுக்கு இருக்காது , அப்படிப் பட்ட போட்டிகளில் ஒரு மாற்றுத் திறனாளியான ஒரு இளம் பெண் சாதித்தாள் என்ன சாதிக்காவிட்டால் என்ற எண்ணம் தான் இருக்கும் போல . பலரிடமும் இவளுக்கு காது கேட்கும் கருவிக்கு உதவி கேட்டு இதனால்வரை யாரும் முன் வரவில்லை .இவளது திறமை கண்டு அரசும் கூட எந்த முக்கியத்துவமும் இவளுக்கு கொடுத்தது இல்லை .
தர்ஷினியின் அம்மா ஜெயந்தி கூறும் பொழுது " எங்கள் வீடு நிறைய இவள் வென்று வாங்கி வந்த கோப்பைகளும் மெடல்களும் தான் நிறைந்து இருக்கிறது. எல்லோரும் சொல்கிறார்கள் உங்கள் பெண் மிகவும் அருமையாக விளையாடி வருகிறாள் .எல்லோர் பெற்றோர்களுக்கும் இருக்கும் தயக்கம் தான் எங்களுக்கும் ,இவளுக்கு இருக்கும் குறைகளால் இவளை வெளி மாநிலங்களுக்கு அனுப்ப கொஞ்சம் பயமாக இருக்கும் . சில வருடங்களுக்கு முன் செஞ்சிலுவை சங்கத்தில் இருந்து தர்ஷினியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கேட்டவர்களிடம் அப்போது அனுப்ப மறுத்து விட்டோம் . அதன் பிறகுதான் போகப்போக இவளது உண்மையான திறமை பற்றி தெரிய வந்தது . அதன் பிறகு இவள் பெற்ற பல வெற்றிகளின் போதும் அவளது திறமையை கண்டு வியந்த பலரும் அவளுக்கு உதவுவதாக சொல்வார்கள். ஆனாலும் செய்தவர்கள் யாரும் இல்லை. அவரது பயிற்சியாளர் மட்டுமே போட்டிகளுக்கு செல்லும்போது அழைத்து செல்ல உதவுவார்.
தற்போது கோவை CCM அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் தர்ஷினி படிப்பிலும் சோடை போகவில்லை. படித்துக் கொண்டே கபடியிலும் வெற்றி பெற இவரது தனிப்பட்ட ஆர்வமே காரணமாக இருந்துள்ளது. இப்போதும் சில நேரங்களில் இப்படிப்பட்ட பெண்ணை வெளியே அனுப்ப ஏதும் ஆபத்து நேர்ந்து விடுமோ என்று பயம் கொண்டாலும் . தங்கள் பெண்ணின் திறமை ஓரிடத்தில் முடங்கி விடக்கூடாது என்றும், இவளது ஆர்வத்தையும் திறனையும் ஊக்குவிக்க வேண்டும் என்றும் தர்ஷினிக்கு அனைத்து வகையிலும் ஆதரவு தந்து உறுதுணையாக இருந்து அவள் முன்னேற்றத்திற்கு வழிவகை தேடி வருகின்றனர்.
இப்படி பட்ட ஒரு மின்னல் வேக வீராங்கனை தர்ஷினிக்கு ஈரநெஞ்சம் அறக்கட்டளை இந்த பொங்கல் தினத்தில் காது கேட்கும் கருவி வழங்கியதில் பெருமை அடைகிறது .
அமெரிக்காவில் வெளியாகும் " தென்றல் " மாத இதழில் என்னுடைய சமூக சேவையை பற்றி நேர்காணல் பேட்டி பிரசுரம் ஆனது . அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு என்னுடைய பதிகள் எழுத்து வடிவிலும் ஒலி வடிவிலும் இங்கு பதிவிட்டு இருக்கிறேன் . மேலும்
A Monthly Magazine for Tamils living in North America
( ஒளி ஒலியில் காண )
1) சமூக சேவையின் மீது ஆர்வம் வந்தது எப்போது, எப்படி?
எனக்கு சமூக சேவையின் மீது ஆர்வம் வருவதற்கு என்னுடைய குடும்ப சூழல்தான் முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது. நான் சிறுவனாக இருந்த போது, ஒரு சமயம் என் அம்மா எனது அக்காவை (சற்று மனநலம் பாதித்தவர்) அழைத்துக்கொண்டு கோவிலுக்குச் சென்று திரும்பும் வேளையில், அக்கா தவறி சாக்கடையில் விழுந்துவிட்டார். அம்மாவிற்கு பெரும் பதட்டம், பதட்டத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்த பகுதியில் இருந்தவர்கள் எல்லாம் சுற்றி நின்று வேடிக்கைதான் பார்த்தார்களே தவிர உதவிக்கு யாரும் வருவதாக தெரியவில்லை. உதவிக்கு ஆள் இல்லாமல் அம்மா தவித்த தவிப்பிற்கு அளவே இல்லை. அந்தவேளையில் அந்த வழியே வந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் அக்காவைத் தூக்கி விட்டு, அருகில் சென்று தண்ணீர் வாங்கி வந்து அக்கா மேல் இருக்கும் சகதிகளை கழுவி சுத்தம் செய்து , அவருடைய ஆட்டோவிலேயே அம்மாவையும் அக்காவையும் அழைத்துக் கொண்டு வீடுவரை வந்து விட்டுவிட்டு சென்றார். அப்போது அம்மா இருந்த பதட்டத்தில் அந்த ஓட்டுனர் யார் ? பெயர் என்ன ? என்று எதுவும் விசாரிக்க தோன்றாமல் இருந்துவிட்டார். அந்நாள் வரைக்கும் மனிதர்களில் இப்படியும் இருப்பார்களா என்றெல்லாம் எங்களுக்கு தெரியாது. அந்த நிகழ்வைப்பற்றி எங்கள் வீட்டில் பல வருடங்கள் வரை பேசிக்கொண்டும், அந்த ஓட்டுனருக்கு நன்றி சொல்லிக்கொண்டும் இருந்தார்கள் .
அது என்னுடைய மனதில் ஆழமாக பதிந்தது, முன்பின் அறியாதவர்கள் நமக்கு செய்யும் ஒரு சிறு உதவி கூட எவ்வளவு முக்கியமானது என்று விவரம் புரியும் வயதில் நன்கு விளங்கியது. அதுவே சாலையோரம் இருக்கும் ஆதரவற்றவர்களின் நிலையை மாற்றி அவர்களுக்கு எப்படியும் பாதுகாப்பு தேடிக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு உத்வேகத்தைக் கொடுக்க ஆரம்பித்தது.
2) இதுவரை எத்தனை பேரை மீட்டு காப்பகத்தில் சேர்த்திருப்பீர்கள்? எத்தனை பேரை அவர்கள் குடும்பத்துடன் சேர்த்திருப்பீர்கள்?
சாலையோரம் பிச்சை எடுக்கக் கூட முடியாதநிலையில் இருப்பவர்கள் மனநிலை பாதித்தவர்கள் என இந்த பத்துவருடத்தில் சுமார் 700 பேருக்கும் மேலாக காப்பகத்தில் இடம் கேட்டு சேர்த்திருக்கிறேன் . அதில் கடந்த 3 வருடங்களில் மட்டும் சுமார் 200 பேர் வரை அவரவர் குடும்பத்துடன் இணைத்து வைத்திருக்கிறேன்.
பெரும்பாலானோர் ஞாபக மறதியால் தான் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் . வடமாநிலங்களில் இருந்து தமிழ் நாட்டிற்கு வேலைத் தேடி வருபவர்கள் ரயிலில் இரண்டு மூன்று நாட்கள் பயணம் செய்து வரவேண்டியது இருக்கும் . பொதுவாக யாராக இருந்தாலும் இரண்டு இரவுகள் கண்விழித்து உறங்காமல் இருந்தாலே மனக்குழப்பம் அடைத்து ஞாபகமறதி ஏற்பட்டு மனநிலை பாதிப்புக்குள்ளாவார்கள் . இப்படி இருக்க அவர்கள் வரும் ரயிலில் ரிசர்வேசன் செய்து வரமாட்டார்கள் கூட்ட நெரிசலில் இரண்டு மூன்று நாட்கள் உறங்காமல் வெயில் , மழை என தட்பவெட்பம் மாறுதல் மற்றும் சரிவர உணவு இல்லாமல் குடும்ப சூழ்நிலை என அவர்கள் மனதை நிலைகுலைய வைத்து இங்கு வந்து இறங்கும் போது மனநிலை பாதித்த நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் .
இப்படிப்பட்டவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. பார்ப்பதற்கு நல்ல நிலையில் தெரிவார்கள் . இதனால் இவர்கள் செய்யும் செயலால் அவர்களுக்கு பொது மக்களால் பெரும் ஆபத்தும் நிகழ்கிறது . குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டு காவல், கைது, அடி என மேலும் அவர்கள் துன்பம் அனுபவித்தபிறகே அவர்கள் மனநலம் பாதித்தவர்கள் என்பது தெரியவரும். அப்படிப்பட்டவர்களை உடனடியாக மருத்துவ சிகிச்சை அல்லது நன்கு தூங்கினாலே சற்று தெளிவடைவார்கள் . அதன் பிறகு அவர்களை நாம் கையாள்வது கொஞ்சம் எளியது இதைதான் நான் செய்கிறேன் . இப்படிப்பட்டவர்களை சுமார் 100 பேர் வரை உறவினர்களை கண்டுபிடித்து அவர்களோடு சேர்த்து வைத்து இருக்கிறேன்.
3) இவர்களை மீட்கச் செல்லும்போது நீங்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் என்ன, அவற்றை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?
பெரியதாக சிக்கல் என்று எதுவும் இருந்தது இல்லை. மனநிலை பாதிக்கப்பட்டவர்களை அணுகும் போது அவர்கள் ஓட ஆரம்பிப்பார்கள் அவர்களை துரத்தக் கூடாது அதேநேரம் ஓட ஆரம்பிக்கிறார்கள் என தெரியும் பொழுது நம்முடைய அணுகுமுறையை மாற்றவேண்டும்.
ஆதரவே இல்லாதவர்களுக்குத்தான் நான் அடக்கலம் தேடிவருகிறேன் . ஆனால் என்னிடமே பலர் தன்னுடைய அம்மாவை , அழைத்துச் செல்லுங்கள் அப்பாவை அழைத்துச் செல்லுங்கள் உங்களுக்கு தேவையான பணம் தருகிறேன் என்பார்கள் அதை எல்லாம் என்னால் சிறிதும் ஜீரணிக்க முடியாது அதனால் தவிர்த்துவிடுகிறேன் .
சாலையில் இருப்பவர்கள் உடலில் காயங்களோடு பராமரிக்க தெரியாமல் பலநாள் விட்டு விடுவார்கள். இதனால் அந்த காயங்கள் அழுகி புழுக்கள் வைத்து பெரும் துர்நாற்றம் வீசும். அப்படிப் பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் அழைத்தால் அவர்கள் கூட சிலசமயம் உதவிக்கு வர மாட்டார்கள் . பெரும் போராட்டத்திற்கு பிறகு அவர்களை அழைத்துக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றால் அங்கு உள்ள மருத்துவர்களும் சரிவர சிகிச்சை அளிக்க வரமாட்டார்கள். புழுக்களை சுத்தம் செய்து அழைத்து வாருங்கள் என்பார்கள் . அதன் பிறகு காயத்தில் இருக்கும் புழுக்களை சுத்தம் செய்து பிறகே அழைத்துபோக வேண்டி இருக்கும் .
சில சமயம் பணம் பற்றாக்குறை ஏற்படும் நெருங்கிய நண்பர்கள் யாரும் உதவுவார்கள் . பொதுவான சிக்கல் என்று பார்த்தால் காப்பகங்களில் பயனாளர்கள் அதிகம் இருந்தால் புதியவர்களுக்கு உடனடியாக இடம் கிடைக்காது. கோவையில் மாநகராட்சி ஆதரவற்றோர் தங்கும் விடுதி நான்கு இருக்கிறது . ஆனால் அதில் ஒன்று தான் இயங்கி வருகிறது . மீதம் மூன்று விடுதிகள் பூட்டிய நிலையில் இருக்கிறது . அது இயங்கும் பட்சத்தில் இப்படி தவிப்போருக்கு இடம் பற்றாக்குறை இல்லாமல் அடைக்கலம் கொடுக்க சவுகரியமாக இருக்கும்.
4) இந்தச் சேவையில் மறக்க முடியாத நபர் அல்லது சம்பவம் என்று எதைச் சொல்வீர்கள்?
நிறைய பேர் இருக்காங்க . அதில் ஷேக் சலீம் 15 என்ற சிறுவன் ஒருவன் , இவனைப் பற்றி கண்டிப்பாக சொல்லியாக வேண்டும் . ஈரோடு பயணிகள் ரெயிலில் இவனை மீட்டு 10 நாள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு ஒரிசாவில் இருக்கும் இவனது பெற்றோரை கண்டுபிடித்து அவர்களை வரவைத்து அவர்களிடம் ஒப்படைத்தது என்னால் மறக்க முடியாத சம்பவம்.
ஒரு ரயில்வே காவலர் என்னிடம் " ரயிலில் ஒரு வட மாநில சிறுவன் உடல் முழுவதும் காயங்கள், தலையில் பலத்த காயம் அதில் புழுக்களுடன் துர்நாற்றம் வீசுகிறது . பயணிகளுக்கு பெரும் இடையூறாகவும் இருக்கிறான் , அவனுக்கு உதவுங்கள் . நான் வரும் வழியில் பலரிடம் பல ஊர்களிலும் உதவி கேட்டுவிட்டேன் யாரும் முன் வரவில்லை. சிலர் இவனை பார்த்துவிட்டு பயந்து சென்று விட்டார்கள் . இப்போது உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம் " என்றார் .
அந்தச் சிறுவனை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்து அறுவை சிகிச்சை முதற்கொண்டு செய்து கவனித்து வந்தேன் . இப்படி பட்ட என்னுடைய பணிக்கு சில திருநங்கைகளும் அவ்வப்போது உதவிக்கு வருவார்கள் . எனக்கு வடமொழி தெரியாததால் அவர்கள் மூலமாக இவனிடம் விசாரித்ததில் அவனது பெயர் ஷேக் சலீம். ஒரிஸ்ஸாவில் உள்ள கட்டாக் என்ற பகுதியை சேர்ந்தவன், அவன் தந்தை சதுஜின் பெயிண்டராக இருக்கிறார், தாய் கெத்தாம் பீபீ . இவன் அவர்களுக்கு இரண்டாவது பையன், அங்குள்ள ஒரு பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கிறான் போன்ற தகவல்களை மட்டும் சொன்னான். ஐந்து மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறான். அவன் ஒரிஸ்ஸா மாநிலம் என்றும் வீட்டில் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டான். பிறகு எங்கே செல்வது என்று தெரியாமல் ஏதோ ஒரு ரயிலில் ஏறி பயணித்துள்ளான். எங்கெங்கோ சென்ற அவனுக்கு எத்தனையோ பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கிறது. அவன் ஓடும் ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்து பலத்த காயம் ஏற்பட்டதாம் .
ஒரு புறம் இவனுக்கு சிகிச்சை நடந்துவரும்வேளையில் மருத்துவமனையில் இவனது சேட்டை தாங்காமல் இவனை அழைத்து செல்லுங்கள் இவன் மருத்துவ சிகிச்சைக்கு சரிவர உதவ மறுக்கிறான் . எப்போதும் அவன் அவனது பெற்றோர் நினைப்பிலேயே இருப்பதால் அவர்களை தேடி ஓடிவிடுவான் போல இருக்கிறது முடிந்தால் அவனது உறவினரை அழைத்துவாருங்கள் என்று அறிவுறுத்தினர் .
இதனை தொடர்ந்து இவன் கொடுத்த தகவலை மட்டும் வைத்துக் கொண்டு இவனது உறவினரை தேடும் முயற்சியாக இவனது புகைப்படத்தை முகநூல் மற்றும் இணையதளங்களில் வெளியிட்டு தேடிவந்தோம் . ஒரிஸா, கட்டாக் பகுதி காவல் நிலையத்தின் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கண்டறியப்பட்டு அவனது புகைப்படங்கள் அங்கே அனுப்பட்டது . மேலும் அவனது குடும்பத்தினரை தேடும் முயற்சி மேற்கொண்டேன் . அப்போதுதான் அந்த காவல் நிலைய காவல் துறை அதிகாரி திரு. அஸ்வின் அவர்கள் மூலம் அவனது பெற்றோர் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் தங்கள் மகன் காணாமல் போனதாக புகார் அளித்துள்ளது தெரிய வந்தது. அவனது புகைப்படத்தை கண்டு அவர்கள் அது தங்கள் மகன் தான் என்பதையும் உறுதி செய்துள்ளனர். தங்கள் மகன் பலத்த காயங்களுடன் இருந்ததை பார்த்து கதறி அழுதுள்ளனர். பின்னர் அவர்கள் உடனடியாக ரயில் மூலம் கோவை வர அங்குள்ள காவல்துறையினர் ஏற்பாடு செய்தனர். ஏற்கனவே ஷேக் சலீம் மருத்துவமனைக்கு வந்து 5 நாட்கள் ஆகிவிட்டது இன்னும் அவனது பெற்றோர்கள் இங்குவந்து சேர 4 நாட்கள் ஆகும் . அதுவரை அவனுடனே நானும் , என்னுடன் சேர்ந்து சில நண்பர்களும் திருநங்கைகளும் பொழுதை களித்தோம் . அவனது பெற்றோர் கோவை வந்ததும் ரயில் நிலையத்தில் இருந்து சிறுவன் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு தங்கள் மகனை கண்ட அவர்கள் அவனது காயம்பட்ட நிலை கண்டு வருந்தி கண்ணீர் சிந்திய போதும் , தங்கள் மகனை திரும்ப பெற்று விட்ட நிம்மதியில் ஆனந்த கண்ணீரும் வடித்தனர். மருத்துவமனையில் இருந்த அனைவரும் கூடி அவர்களை தேற்றினார்கள்.
அது மட்டும் இல்லை மரண படுக்கையில் இருந்த ஆதரவற்ற சிறுவனை மீட்டு அவனுக்கு மருத்துவ சிகிச்சை அளித்ததோடு மட்டும் இல்லாமல் உடனிருந்து பார்த்துக் கொண்டதற்கும் , அவனது பெற்றோரை கண்டு பிடித்து அவர்களுடன் சேர்த்து வைத்ததற்கும் அந்த மருத்துவமனையில் எனக்கு ஏராளமான பாராட்டுக்களோடு , கேக் வெட்டி எனக்கும் அவனுக்கும் ஊட்டி விட்டனர். http://eerammagi.blogspot.in/2013/09/blog-post_23.html
அடுத்தநாளில் ஷேக் சலீம் அழைத்துக் கொண்டு அவனது பெற்றோர்கள் ஊர் சென்றனர் . அவனுடன் கழித்த அந்த பத்து நாள் எவ்வளவு நாளானாலும் மறக்க முடியாது.
5) இறந்தவர்களை நீங்கள் நல்லடக்கமும் செய்து விடுகிறீர்கள் அல்லவா?
ஆமாம் சாலையில் ஆதரவற்றவர்களாக இருப்பவர்களை அழைத்துச் செல்லும் போதே அவர்கள் எனது உறவினர்களாக பாவித்துதான் அழைத்து செல்வேன். அதே போல் மருத்துவமனையில் சேர்க்கும் போதும் அப்படித்தான் சிகிச்சை பலனின்றி அவர்கள் இறக்கும் பட்சத்தில் அனாதையாக விட்டுவிட்டு வர மனம் ஒப்புக்கொள்வது இல்லை . அதனாலேயே இறந்தவர்களையும் நானே நல்லடக்கம் செய்து வருகிறேன் . ஆரம்ப காலகட்டத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் பொறுப்பை வேறு ஒரு அமைப்பினரிடம் கொடுத்து வந்தேன். அறக்கட்டளை துவக்கிய பிறகு என்னோடு பலர் கைகோர்த்து வருகின்றனர். அதில் ஒருவர் வைரமணி இவர் மயான தொழிலாளி ஆதரவற்று இறப்பவர்களை அடக்கம் செய்ய இவர் பெரிதும் உதவியாக இருந்து வருகிறார் .
6) மறக்க முடியாத பாராட்டு என்று எதைச் சொல்வீர்கள்....?
என்னை பொறுத்தவரை என்னுடைய மகிழ்ச்சியைக் காட்டிலும் மற்றவர்களின் மகிழ்ச்சியில் தான் நாம் மகிழ்ச்சிக் கொள்கிறேன் . சாகர் என்பவர் நேபாளத்தில் இருந்து தமிழகத்தில் வேலை பார்க்க வந்தவர் . இவருக்கு திருமணம் ஆகி குழந்தையும் உள்ளது . இந்நிலையில் தமிழகத்தில் கோவையில் மனநிலை பாதித்த நிலையில் இரண்டு வருடமாக இருந்தார் . ஒரு நிலையில் அவர் பூரண குணம் அடைந்து , தனக்கு மனைவி, மக்கள், தாய், தந்தை, சகோதரர் என உறவுகள் இருந்தும் , சாகர் இந்தியர் இல்லாத காரணத்தினாலும், நேபாளி என்ற தக்க ஆவணம் இல்லாததாலும், மனநோய் பாதிக்கப்பட்டு இருந்தமையாலும் இவரை விடுவிக்க முடியாத நிலை காப்பக நிர்வாகத்திற்கு இருந்தது.
இவர் சொன்ன முகவரியும் அடையாளமும் கண்டுபிடிப்பதற்கு பெரும் சவாலாக இருந்தது . பெரும் முயற்சிக்கு பிறகு அவரது சகோதரரின் தொடர்பு கிடைத்தது உடனடியாக அவரை கோவைக்கு வரவழைத்து அவருடன் சாகரை அவரது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்தேன். இதில் ஒரு சிக்கலான விஷயம் என்ன என்றால் சாகர் காணவில்லை என்பதால் அவர் இறந்திருக்க கூடும் என்று சாகரின் மனைவிக்கு வேறு திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் தான் எங்கள் முயற்சி வெற்றி பெற்று சாகர் அவரது சொந்தங்களுடன் இணைந்தார் .
சாகர் கிடைத்த மகிழ்ச்சியில் நேபாளத்தில் இருந்து சாகரின் மனைவி , தாய் தந்தை என உற்றார் உறவினர் எனக்கு தொடர்புகொண்டு கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்துக் கொள்ளும்பொழுது அது புரியாத பாஷையாக இருந்தபோதும் அதில் இருந்த அவர்களின் மகிழ்ச்சியை என்னால் நன்கு உணர முடிந்தது. http://eerammagi.blogspot.in/2013_06_01_archive.html
இந்த மகிழ்ச்சி எனக்கு எந்த ஒரு விருதுக்கும் இணையாகாதே.
7) உங்கள் குடும்பம் பற்றி, அவர்கள் உங்களது பணிகளுக்கு உறுதுணையாக உள்ளார்களா?
ஆரம்பத்தில் என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் விருப்பம் இல்லாமல் தான் இருந்தது . காலப்போக்கில் இந்த பணியின் உன்னதத்தையும் மற்றவர்கள் அடையும் பலனையும் உணர்ந்து கொண்டனர். அம்மா அப்பா மட்டும் தான் கொஞ்சம் வருத்தப்படுவார்கள் . எப்போதும் சமூகப்பணியே முழு மூச்சாக இருந்து விட்டால் உன் குடும்பத்தை யார் காப்பாற்றுவார்கள் . தொழிலை கவனிக்க வேண்டிய காலத்தில் இப்படி சமூகம் என்று பார்த்துக் கொண்டு இருக்கிறாயே என்பார்கள் . என்ன இருந்தாலும் பெற்றவர்கள் என்றால் கொஞ்சம் அக்கறை அதிகமாகத்தானே இருக்கும். அதே நேரத்தில் ஆதரவற்றவர்களின் நலன் மேம்படுவதை பார்க்கும் பொழுதும் , மற்றவர்கள் என்னுடைய செயல்களை பெருமையோடு சொல்லும் பொழுதும் அம்மா அப்பா அடையும் மகிழ்ச்சிக்கு அளவு இல்லை.
8) உங்கள் இத்தகைய பணிகளுக்கு சக மனிதர்கள் மற்றும் சமூகத்தின் வரவேற்பு எப்படி உள்ளது?
உடல் முழுதும் அழுக்கு, தலை முடி ஜடை விழுந்து இருக்கும் அதிக துர்நாற்றம் வீசிய படி இருப்பார்கள். அவர்களை நான் பொறுமையாக நெருங்கி அவர்களுக்கு முடிதிருத்தம் செய்து , குளிக்க வைத்து , மாற்று உடை உடுத்தி அதன் பிறகு அழைத்துவர வேண்டும். இப்படி நான் செய்யும் பொழுது கவனிக்கும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் . என்னைப்பார்த்து பொதுமக்கள் பலர் தங்களது வீட்டில் உள்ள பெரியோர்களையும் நல்லபடியாக பார்த்துக் கொள்கின்றார்கள் என என்னிடமே சிலர் சொல்லி இருக்கிறார்கள் . இப்போது சில ஊர்களில் என்னை சிலர் பின்பற்ற துவங்கி இருக்கிறார்கள் . அது மட்டும் இல்லாமல் ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்காக ஆடிட்டர், கணக்காளர், மயான தொழிலாளி என பலரும் தங்களை முடிந்தவரை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.
9) ஈர நெஞ்சம் அறக்கட்டளை பற்றிச் சொல்லுங்கள்...
அறக்கட்டளை ஆரம்பிப்பதில் எல்லாம் எனக்கு அதிக விருப்பம் இல்லை. என்னுடைய பணிகளை அவ்வப்போது முகநூலில் பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக பதிவிட்டு வந்தேன். அதைப் பார்த்து முக நூல் நண்பர்கள் பலர் என்னை தொடர்புகொண்டு கண்டிப்பாக உங்கள் பணி அறக்கட்டளையின் கீழ் நடத்தியாக வேண்டும் உங்களது பணி அவ்வளவு சாதாரணமானது இல்லை என்று பலவாறாக அறிவுரைகள் கூற அவர்களின் அன்புக்கட்டளை மீறமுடியாமல் , 23/04/2012 அன்று அறக்கட்டளையாக அரசு பதிவு செய்து, அன்று முதல் முறையான கணக்குகள் சமர்ப்பித்து வருகிறோம் . வருமானவரி விலக்கான 80/G சான்றும் பெறப்பட்டு உள்ளது. இந்த அறக்கட்டளையில் சென்னையை சேர்ந்த சுரேஷ் , கடலூரை சேர்ந்த பரிமளா , கோவையில் தபசு , மற்றும் நான் நிர்வாகியாக இருக்கிறோம். ஆதரவற்றவர்களே இருக்கக் கூடாது என்பதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் இந்த அறக்கட்டளை .
தாய் தந்தை இழந்த குழந்தைகள் 10 குழந்தைகளை தத்தெடுத்து காப்பகத்தில் சேர்த்து கல்வி முதல் கொண்டு அனைத்தும் ஈரநெஞ்சம் பராமரித்துவருகிறது.
ஆதரவற்ற பெண்கள் இரண்டு பேருக்கு திருமணம் செய்து வைதுருக்கிறது ஈரநெஞ்சம் .
கோவை RS.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி இரவு தாங்கும் மையத்தில் மனநலம் பாதித்தவர்கள் பலரை பாதுகாத்து வந்தனர். அந்த மையத்தில் மனநலம் பாதித்தவர்கள் பாதுகாக்க அனுமதி இல்லை என்ற காரணத்தினால் அவர்களுக்கு மாற்று இடம் எங்கும் கிடைக்க வில்லை. அவர்களை ஈரநெஞ்சம் அறக்கட்டளை பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமத்தித்து சிகிச்சைக்கு வழி செய்தது. இதனால் பலரும் குணமாகி அவர்களுடைய உறவினருடன் இணைந்தனர்.
இதனை தொடர்ந்து கோவையில் RS.புரத்தில், 15/A மேற்கு ஆரோக்கியசாமி சாலையில் மாநகராட்சி முதியோர் காப்பகம் ஒன்று ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரித்து வருகிறது இதில் ஆதரவற்ற முதியவர்கள் 50 பேரை பாதுகாத்து பராமரித்து வருகிறது.
10) இதற்கான நிதி ஆதாரங்களை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?
வருமானவரி விலக்கான 80/G சான்றும் பெற்று உள்ளோம். ஆனாலும் இதுவரை நிதி கொடுங்கள் என்று யாரிடமும் கேட்டது இல்லை. நெருங்கிய நண்பர்களிடம் மற்றும் இந்த பணியின் உன்னதத்தை உணர்ந்தவர்கள் தாமாக முன் வந்து நிதி அளிப்பவர்களிடம் மட்டும் வாங்கிக் கொள்கிறோம் . வருவது குறைவுதான் ஆனால் செலவு அதிகம். இதனால் கையில் இருப்பதை போட்டு பணி செய்து வருகிறேன்.
11) நீங்கள் பெற்ற விருதுகள், அங்கீகாரங்கள்...
பல வருடம் தான் யார் என்றே தெரியாமல் வீதியில் கிடப்போரை மீட்டு அவர்கள் குணமடைந்து பிறகு அவர்களுடைய உறவினர்களை தேடி கண்டுபிடித்து அழைத்து வரும் சொந்தங்களோடு இணையும் போது அவர்கள் அடையும் நிம்மதியும் மகிழ்ச்சியுமே மிகப்பெரிய விருதாக நினைக்கிறேன். இருந்தும் பல அமைப்புகள் என்னை மேடையில் கவுரவப்படுத்தி இருக்கிறார்கள். அங்கிகாரம் என்பது அரசாங்க அளவில் இருந்து எதுவும் இல்லை என்றாலும் பலரும் மனதார வாய் நிறைய வாழ்த்துவதில் நான் பிறந்த பலனை அடைந்த திருப்தி அடைகிறேன்.
12) உங்களைப் பற்றிய பொதுவான விவரங்கள்.. (படிப்பு, கல்வி, குடும்பம், தொழில், பிற ஆர்வங்கள், பொழுதுபோக்குகள் பற்றி...)
கோவையில் மோட்டார் உதிரிபாகம் தயாரிக்கும் சிறுதொழில் தான் எனக்கு . போதிய வருமானம் என்பது அவ்வப்போது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு மட்டும் இருக்கும். படிப்பில் அதிக ஆர்வம இருந்திருந்தால் ஒருவேளை பட்டப்படிப்பெல்லாம் முடித்து பெரிய நிறுவனம் அமைத்திருப்பேன். நல்லவேளை பள்ளிப்படிப்பை மட்டும் முடித்ததால் சமூக சேவை செய்ய நேரம் அமைந்துவிட்டது. அப்பா பழனிசாமி பயம் கலந்த மரியாதை , அம்மா காளியம்மாள் என்ன ஒரு பிரச்சனை என்றாலும் அம்மாவிடம்தான் கொட்டி தீர்ப்பேன். மூன்று அக்கா , ஒரு அண்ணன் , எல்லோருக்கும் திருமணம் முடிந்து இரண்டாவது அக்காவை தவிர எல்லோரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள் . மனைவி கலைச்செல்வி, மகள் சம்விதா. இவர்களின் அனுமதி இல்லாமல் என்னால் என்ன செய்து விட முடியும் சொல்லுங்க பார்கலாம் . ஞாயிற்று கிழமைகளில் இவர்களுகேன்று பொழுதை கழிக்கவில்லை என்றால் எனக்கு மனம் நிலையாக இருக்காது . குடும்பத்தையும் கவனிக்கவேண்டும் அப்போதுதான் வாழ்க்கை இனியதாக இருக்கும்.
எழுத்துப்பணியில் எனக்கு ஆர்வம் அதிகம். பல பத்திரிக்கைகளில் என்னைப் பற்றி சிலர் எழுதி உலகமே என்னைப் பற்றி அறிந்ததுபோல , நான் கண்ட சில சிறந்த மனிதர்களைப் பற்றி அவ்வப்போது கட்டுரை எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்புவேன், அதுவும் பிரசுரம் ஆகும். அப்படி வெளியுலகிற்கு அறிமுகம் ஆனவர்களுக்கு விருதுகளும் கிடைத்துள்ளது. அதுவும் கூட என்னை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
பிற விவரங்கள் ஏதேனும் குறிப்பிட வேண்டுமென்றால் அது பற்றி....
என்னுடைய முகவரி:
P.மகேந்திரன்
10/G2 தாரணி நகர் , 8 வது வீதி
கணபதிபுதூர்
கோயம்புத்தூர் 641006
ஆதரவற்றவர்களே இல்லாத உலகம் வேண்டும் .
நல்லதோர் இயற்கை சூழலில் மருத்துவமனையோடு கூடிய ஆதரவற்றவர்களுக்கான ஒரு தனி இடம் அமைக்க வேண்டும் . இப்படி காப்பகங்கள் உருவாக்குவது தவறு என்றாலும் சூழ்நிலையின் காரணமாக தனிமையில் தத்தளிப்பவர்களுக்கு சொந்தங்கள் கிடைக்க வழி வகை செய்யுமே என்ற எண்ணம் தான் ..!
எங்களுக்கும் காலம் வரும் !!!
காலம் வந்தால் வாழ்வு வரும் !!!
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழவைப்போமே !!!
கோவை 10-05-2015
உடலில் எந்த குறையும் இல்லாதவர்களே வாழ்வதற்கு பிறரைச் சார்ந்து இருக்கும் நிலையில் இரண்டு கால்களும் செயல்படாத நிலையிலும் சுயமாக சம்பாதித்து வாழ வேண்டும் என்ற மன உறுதியுடன் வாழ்ந்து வருபவர் ஏசுராஜ். இவரைப் பற்றி தொடர்ந்து ஈரநெஞ்சம் அறக்கட்டளை முகநூலில் எழுதி வருகிறது. இவர் இரண்டு கால்களும் செயல்படாத நிலையில் சாலையோரமாக முடி திருத்தும் பணி செய்து வருகிறார். நல்ல வீடும் கடையும் கூட இல்லாத நிலையில் இவர் இந்த வேலையை செய்து வந்ததோடு ஆதரவற்ற ஒரு பெண்ணுக்கு ஆதரவளித்து , மனநலம் சரி இல்லாத அவரது மகனுக்கும் தந்தையாக அவர்களையும் பேணி பாதுகாத்து வருகிறார். இந்த நிலையில் ஈரநெஞ்சம் அறக்கட்டளை இவரைக் கண்டு கோவை மாநகராட்சி காப்பகத்தில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு முடி திருத்தும் பணியை அளித்தது. தொடர்ந்து அதையும் செவ்வனே செய்து வந்தார் ஏசுராஜ். மேலும் ஈரநெஞ்சம் அறக்கட்டளை மூலம் இவரை பற்றி அறிந்து தினமலர் நாளிதழில் இவரை பற்றிய கட்டுரை வெளி வந்தது.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1238727
இவரை பற்றி அறிந்து, கோபிசெட்டிபாளையம் பாரதி வித்யாலயா பள்ளியின் நிறுவனர் திரு. வேலுமணி அவர்கள் ஏசுராஜ் அவர்களுக்கு கடை வைத்து கொடுப்பதற்கும் மற்றும் தேவையான மூலப்பொருட்களுக்கும் தேவையான நிதி உதவி அளிக்க முன்வந்தார். செய்தியை படித்த உடனே ஈரநெஞ்சம் அறக்கட்டளை அறங்காவலர் திரு. மகேந்திரன் அவர்களை தொடர்பு கொண்டு தகவல்களை கேட்டறிந்த திரு. வேலுமணி அவர்கள் உடனடியாக அவருக்கு நிதியுதவியாக ரூபாய் 50000 ஐ அளிக்குமாறு ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்கு வங்கி மூலம் நன்கொடையாக அளித்தார்.
அதைத் தொடர்ந்து ஈரநெஞ்சம் அறக்கட்டளையின் முயற்சியின் மூலம் இன்று 10-05-2015 ஏசுராஜ் க்கு கோவை , சாய்பாபா கோவில் பகுதியில் பெரியார் நகரில் புதிதாக கடை வைத்து கொடுக்கப்பட்டது. கடைக்கு தேவையான பொருட்களும் வழங்கப்பட்டது. சொக்கம்புதூர் மயானத்தில் மயானத் தொழிலாளியாக இருக்கும் ஈரநெஞ்சம் அமைப்பின் உறுப்பினர் திருமதி. வைரமணி அவர்கள் குத்து விளக்கு ஏற்றி வைத்து கடை திறப்பு விழாவை துவக்கினார். மேலும் ஈரநெஞ்சம் அறங்காவலர் திரு. மகேந்திரன் அவர்களின் தந்தை திரு. பழனிச்சாமி அவர்கள் தலைமையேற்று வாழ்த்தினார். திரு. வேலுமணி அவர்கள் அளித்த நன்கொடையில் கடைக்கு தேவையான பொருட்கள் போக மீதித் தொகை திரு. ஏசுராஜ் அவர்களுடன் நிதியுதவியாகவும் வழங்கப்பட்டது.
கோபிசெட்டிபாளையம் பாரதி வித்யாலயா பள்ளியின் நிறுவனர் திரு. வேலுமணி அவர்கள் கூறும்போது, தான் இன்று ஒரு கல்வி நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்த போதும் ஒரு காலத்தில் தானும் இதுபோல சாலையோரமாக தான் தன் வாழ்க்கையை துவக்கியதாகவும் , தன்னை போல உழைப்புக்கு முக்கியத்துவம் தரும் சக மனிதருக்கு தானும் உதவ வேண்டும் என்று எண்ணி உதவியதாகவும் தெரிவித்தார். மேலும் ஈரநெஞ்சம் அமைப்பின் பணிகள் மேலும் வளர்ந்து சிறக்கவும் இது போல இன்னும் பலர் பயன் பெறவேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.
தனக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தி கொடுத்து உதவிய கோபிசெட்டிபாளையம் பாரதி வித்யாலயா பள்ளியின் நிறுவனர் திரு. வேலுமணி அவர்களுக்கும் அதற்கு உறுதுணையாக இருந்த ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்கும், தினமலர் நாளிதழுக்கும் திரு. ஏசுராஜ் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
மேலும் கடை திறப்பு விழாவிற்காக அழைக்கப்பட்டிருந்த “ கிரேஸ் ஹேப்பி ஹோம் “ ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் ஏசுராஜ் அவர்கள் வழங்கினார்.
செப்டம்பர் 10 தற்கொலைத் தடுப்பு தினம்: , "உலகத் தற்கொலை தடுப்பு தினம்" ஆகும். தற்கொலைத் தடுப்பிற்கான சர்வதேச அமைப்பு மற்றும் உலகச் சுகாதார அமைப்பு ஆகியவை இணைந்து இந்த தினத்தை 2003 ஆம் ஆண்டில் இருந்து நினைவுகூர்ந்து வருகிறது. தற்கொலை எண்ணம் தலை தூக்க காரணங்கள் பல சொல்கிறார்கள். பொருளாதாரச் சிக்கல், கடன், அவமானம், குடும்பப் பிரச்னைகள், காதல், படிப்பு, மனரீதியான பிரச்னைகள் என ... உலகம் முழுவதும் 40 நிமிடங்களுக்கு ஒருவர் என்றால் ஒரு நாள் பொழுதில் 3 000 பேர் , ஆண்டுக்கு சராசரி 15 சதவீதம் என தற்கொலை அதிகரித்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் இறப்புக்கான காரணங்களில் தற்கொலை 13 ஆவது இடத்தில் இருக்கிறது.
இந்தச் சமுதாயத்தில் நான் வாழ தகுதியற்றவன் என முடிவுசெய்து தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளும் ஒரு பயங்கரமான கோழைத்தனம் தற்கொலை "எந்த மாவீரனாலும் முடியாது, ஒரு கோழையால் மட்டுமே சாதிக்கப்படும் ஒரு வீரச்செயல் தற்கொலை" இந்தச் செயலை செய்வதால் கின்னஸ் புத்தகத்தில் இடமோ அல்லது விருதுகளோ கிடைக்கப்போவது இல்லை . காலம் முழுவதும் தற்கொலை செய்தவருக்கும், அவர் குடும்பத்தினருக்கும் நிலைக்கப் போவது தீராத அவப்பெயர்தான்.
தற்கொலை செய்து கொள்ளப்போகிறவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும் தற்கொலையால் பெறப்படும் விளைவுகள் என்ன என்று . ஆனால் தற்கொலைக்குப் பின் நமக்குத் தெரியப்போகிறதா என்ன என்ற ஒரு சுயநலம் அதில் இருக்கிறது . தற்கொலை செய்து கொள்வதால் கண நிமிடங்களில் உயிர் போய்விடும். ஆனால், நம்மை நினைத்து, நினைத்து முடங்கிப் போகும் தாய், தந்தை, மனைவி , குழந்தைகள் போன்ற சொந்தங்கள் தினம், தினம் செத்துப் பிழைப்பது பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை.
தற்கொலை செய்து கொள்பவர்களை அவர்களது ஒரு சில செயல்கள் மூலம் நாம் கண்டுபிடித்துவிடலாம் . தற்கொலை செய்துக்கொள்ள ஒருவர் முடிவெடுத்து விட்டார் என்றால் அவருடைய பேச்சில் பல மாறுதல்கள் தெரியும் . தற்கொலை செய்து கொள்ளப் பலநாட்களுக்கு முன்பே முடிவு செய்து விடுவார்கள் . பல துன்பங்கள் இருந்தும் தற்கொலை முடிவுக்குப் பின் சந்தர்ப்பம் கிடைக்கும் வரை வேண்டுமெனவே சிலர் உற்சாகமாக , மகிழ்ச்சியாக இருப்பது போலக் காட்டிக் கொள்வார்கள். இன்னும் சிலர் "இனியும் என்னால் எதுவும் செயல்பட முடியாது " " இனிமேல் எனக்கு யாரும் இல்லை " "அனைத்திற்கும் ஒரு முடிவு காண்கிறேன் " என்றெல்லாம் சொல்லி கொண்டிருப்பார்கள் . இதையும் மீறி அக்கணத்திலேயே தூண்டப்பட்டுத் தற்கொலை செய்து கொள்பவர்கள் மிகக் குறைவு.
தற்கொலை செய்து கொள்வது அவ்வளவு எளிதானதும் இல்லை தற்கொலை செய்துகொள்வதற்கு வாழ்ந்துவிட்டுப் போகலாம் . சில தற்கொலைகள் முயற்சிக்கும் போது ஏற்படும் வலிகள் மிகவும் கொடுமையானதாக இருக்கும் , அது நமக்கு இருக்கும் தற்கொலைக்கான காரணத்தைக் காட்டிலும் வலி மிகுந்ததாக இருக்கும் .
" வாழ நினைத்தால் வாழலாம் , தற்கொலை ஒன்றும் சாதாரணம் அல்ல "
600 குடும்பங்களைத் தற்கொலையில் இருந்து மீட்டுத்தந்த கோவையைச் சேர்ந்த லதா .
சாவதற்குத் துணிவு இருப்பவர்களுக்குத் துன்பங்களைத் துரத்துவது ஒன்று பெரியதல்ல , தன்னம்பிக்கையும் ஊக்கமும் இருந்தால் பிரச்சினைகளை வென்று வாழ்ந்து விடலாம் என்று சாதித்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த லதா என்ற பெண்மணி. ஒரு கிராம் தங்க நகை தொழில் செய்து வரும் இவர் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களைத் தற்கொலையில் இருந்து மீட்டு இருக்கிறார்.
கடந்த 1998ஆம் ஆண்டுக் கோவையில் நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து பலரும் வேலை இழந்து வாழ்வாதாரம் இழந்து செய்வதறியாது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டனர் . அதே முடிவுக்குத் தன் கணவரும் வந்த போது லதா தன் கணவருக்கு அறிவுரை கூறி தன்னம்பிக்கை ஊட்டி , நம்மாலும் சாதிக்கமுடியும் வாழ்வதற்கு வேறு வழி இல்லாமல் போகாது இந்த உலகில், எனக் கணவருடன் கைகோர்த்து , தன் குடும்பத்தை மட்டுமல்ல வாழ்விழந்து நிற்கும் பிற குடும்பங்களும் தற்கொலை என்ற முடிவுக்கு வந்து விடாமல் தடுப்பதோடு அவர்களுக்கு வாழ்வாதாரத்தையும் தேடிக் கொடுத்திருக்கிறார்.
கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களையும் இணைத்து, அனைத்து பெண்களையும் சேர்த்து அப்போதைய மாவட்ட ஆட்சியர் திரு, முருகானந்தம் அவர்களிடம் சென்று வாழ வழி ஏற்படுத்தித் தரும்படி மனு கொடுத்தார் . அவர்களது மனுவை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் உடனடியாக அவர்கள் அனைவருக்கும் தன்னம்பிக்கை மற்றும் ஊக்கம் கொடுக்கும் பயிற்சியை அளித்ததோடு அனைவருக்கும் சிறுதொழில் பயிற்சிக்கும் ஏற்பாடு செய்து கொடுத்தது இவரது முயற்சியாலேயே !!!
அனைவருக்கும் விருப்பப்பட்ட சிறு தொழிலுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுத் தற்போது அனைவரும் சுயதொழில் மூலம் முன்னேற்றம் கண்டு நல்ல நிலையில் வருமானம் பெற்று வாழ்ந்து வருகின்றனர். அனைவருக்கும் தற்கொலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு அவர்கள் வாழவும் நல்ல வழி ஏற்படுத்தித் தந்த லதா அவர்கள் தன்னம்பிக்கை இருந்தால் சாவையும் வென்று விடலாம் என்பதற்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறார். மேலும் இவர் ஒரு கிராம் தங்க நகை செய்யும் தொழிலை பிறருக்கு கற்றுக்கொடுக்கும் ஆசிரியராகவும் விளங்குகிறார். இப்போதும் அவரைப் பார்ப்பவர்கள் தங்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுத்த தெய்வமாகவே நன்றியுடன் நினைத்து வருகின்றனர். எனவே தற்கொலை என்பது முடிவல்ல "தன்னம்பிக்கை இருந்தால் பிரச்சினைகளை மட்டுமல்ல சாவையும் வென்று சாதிக்கலாம் " புத்துணர்ச்சியுடன் வந்தவர்களுக்கெல்லாம் சாதிக்க வழிகாட்டியாக இருக்கிறார் பல விருதுகளுக்கும் சொந்தக்காரரான லதா .
" வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் " இந்த லதா போன்றவர்கள் இருந்தால் ஒரு வழி அல்ல , ஆயிரம் வழிகள் உண்டு இப்பூமியில் ...
" மனவலிமை இருந்தால் ஊனம் வெல்லலாம் " ரமேஷ் அதற்கு ஒரு உதாரணம் :
"ஊனம் ஊனம் ஊனம் இங்க ஊனம் யாருங்கோ உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறை இல்லே உள்ளம் ஊனப்பட்டா உடம்பிருந்தும் பயனில்லே ரெண்டு காலு உள்ளவனோ கெடுக்குறான் சிலர் ஒத்த காலில் நல்ல வழி நடக்குறான்"
மனவலிமை இருந்தால் எந்த ஊனமாக இருந்தாலும் அதை வென்று விடலாம்
கோவையில் திரு. ரமேஷ், 33 வயது வெங்கடாசலம், பழனியம்மாள் தம்பதியினரின் இரண்டு மகளுக்கு அடுத்து மூன்றாவதாக பிறந்த செல்ல மகன் இந்த ரமேஷ் பிறக்கும்போதே இவரது காலில் குறைபாடு இருந்தது ஆனால் ரமேஷின் பெற்றோர்கள் அதனை பொருட்படுத்தாமல் ரமேஷை மிக செல்லமாக வளர்த்தார்கள் . ரமேஷ் காலில் நான்கு முழங்கால்கள் இருக்கும். இதனால் அவரால் நடக்கவோ மற்றவர்களை போல இயங்கவோ முடியாது. இந்த வேதனை அவருக்கு இருக்க கூடாது என்பதற்காகவே அவரை செல்லமாக வளர்த்தார்கள்.
பள்ளி செல்லும் பருவம் அடைத்தார் , ஆனால் இவரது குறைபாடு காரணமாக பள்ளி நிர்வாகம் இவரை பள்ளியில் சகமாணவர்களுடன் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டது. அப்படியே செர்க்கவேண்டுமனால் ரமேஷ் ஒரு ஆதரவற்றவர் என்று சொன்னால் சேர்த்துக்கொள்கிறோம் என்றார்களாம் , அதற்கு ரமேஷின் பெற்றோர் என் மகன் அனாதை இல்லை நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்று ரமேஷின் அக்கா இருவரும் கணிதம் மற்றும் பொது பாடங்கள் கற்று கொடுத்திருக்கிறார்கள்.
மகிழ்ச்சியான குடும்பம் சொந்த வீடும் வசதியோடும் அன்போடும் வளர்ந்தவர் வாழ்க்கையில் முதல் சோதனையை தந்தது. திடீரென அப்பாவும் அம்மாவும் இறக்க .தந்தை விட்டு வைத்த கடனை வீட்டை விற்று அந்த கடனை அடைத்து மீதி இருக்கும் பணத்தில் தன் சகோதரிகளுக்கு திருமணம் நடத்தினார் . அதுபோக தன் எதிர்காலத்திற்கு கையில் சொற்ப பணமும் வைத்திருந்தார் .
அதன் பிறகோ இவரது சகோதரிகள் வீட்டில் சிலநாள் தங்கி இருக்கவே சகோதரிகளின் உறவினர்கள் இவரது ஊனத்தை பார்த்து அருவருப்பு பட்டு ரமேஷை வீட்டை விட்டு வெளியே போக சொல்லிவிட்டனர். ரமேஷ் வைத்திருந்த சொற்ப பணத்தை நிரந்தர வைப்பு நிதியாக வங்கியில் போட்டிருப்பதை அறிந்து அந்த பணத்தை உறவினர்கள் கேட்டு வற்புறுத்தியும் உள்ளார்கள் . அனால் அதை தர மறுத்துவிட்டு வீட்டில் இருந்து வெளியேறி கடந்த சில வருடத்திற்கு முன் ஈரநெஞ்சம் கொண்டவர்களின் துணையோடு இவர் ஒரு காப்பகத்தில் சேர்ந்து வாழ்கையை கழித்துவருகிறார். .
ஆனால் அங்கு தான் ஒரு அனாதைபோலவும் ஊனமுற்றவர் போலவும் பாவிப்பது அவருக்கு பிடிக்கவில்லை தனக்கு கால் குறைபாடாக இருக்கும் போதும் தன் வாழ்வை தன் சொந்தக் காலில் நின்று தான் வாழவேண்டும் என்ற வைராக்கியத்தோடு நண்பர்களின் சிறு உதவியோடு ஒரு காலணி விற்பனை கடையை துவக்கி நல்லமுறையில் நடத்திவருகிறார் . கடந்த ஒருவருடமாக கடைக்கு வாடகை , உணவு, கவுண்டம்பாளையத்தில் இருக்கும் காப்பகத்தில் இருந்து சாய்பாபா காலனி யில் உள்ள அவரது கடைக்கு சென்று வருவதற்கு என மாதம் 8000 வரை அவரது கடையில் இருந்து வரும் லாபத்தில் சரிகட்டி வருகிறார் மீதம் சேமிப்பு என்று எதுவும் இல்லாத நிலை உள்ளது.
ஊனம் ஒரு பெரியதென்று வாழ்க்கையை இழந்தவர்கள் பலர் உண்டு. ஆனால் அதை துச்சமென தூக்கியெறிந்து ஓட ஆரம்பித்து இருக்கும் ரமேஷ் வாழ்வில் பல வெற்றிகள் காணவேண்டும் .
தற்போது மிகுந்த உற்சாகத்தில் காணப்படும் ரமேஷ் கண்களில் தனது காலணி கடையில் முதலீடு பற்றாக்குறை இருப்பது தெளிவாக தெரிகிறது.
யார் யாரையோ வங்கிகளும் பல முதலீட்டாளர்களும் ஓடி ஓடி கடன் கொடுத்தது ஊக்கப்படுத்துகிறார்கள். அனால் இவர்களை போன்ற பலரை மட்டும் தாமாகவே முன்னுக்கு வரட்டும் என ஏன் விட்டு விடுகிறார்கள்..?
ஈர நெஞ்சம்- சேவைகள்" (38 /2012 - 11 .07 .2012 யின்
தொடர்ச்சி) ******கடந்த இரண்டு நாட்களாக திருமதி. கண்ணம்மாள் அவர்கள்,
கோவையில் உள்ள அன்னை தெரேசா காப்பகத்தில் நல்லமுறையில் பராமரிக்கப்பட்டு
வந்தார்கள். அவரை தொடர்ந்து கவனிக்கப்பட்டு வந்த பொழுது தெரியவந்தது
என்னவென்றால், அவர் எதையோ பறிகொடுத்து இருப்பது போல இருந்தார்கள். (திருமதி
கண்ணம்மாள் பற்றிய தகவல் கொடுக்கப்பட்டு இருந்தது அனைவருக்கும் தெரிந்ததே
). இதற்கிடையில், 12/07/12 மதியம் "ஈர நெஞ்சம்" அமைப்பின் மூலமாக திருமதி.
கண்ணம்மாள் அவர்களின் நிலைமை பரிதாபமாக இருப்பதை அறிந்து அன்னை தெரேசா
காப்பகத்தின் நிர்வாகத்தின் அனுமதியுடன் அவர்களை வாடகை காரின் மூலமாக
அழைத்துக்கொண்டு சின்னதடாகம் சென்று பார்க்கலாம். இவரது உறவினர்கள் பற்றிய
தகவல் கிடைக்குமா என்று முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மதியம் மூன்று மணிக்கு
மேற்கொள்ளப்பட்ட உறவினர் தேடும் பணி இரவு எட்டு மணிக்கு தடாகம் பகுதியில்
ஒவ்வொரு வீடாக ஒவ்வொருவரையும் அணுகி புகைப்படத்தையும் அவரையும் காட்டி இவரை
தெரிகிறதா? இவரது உறவினர்கள் இந்த பகுதியில் இருக்கின்றார்களா என்பதை
கேட்டுக்கொண்டு இருக்க ஒரு பழம் வியாபாரம் செய்யும் ஒருவர் இவரை தெரியும்
அவரது வீட்டுக்கு எங்களையும், அவரையும் அழைத்துக்கொண்டு சென்றார். "ஈர
நெஞ்சம்" எடுத்த முயற்ச்சி வெற்றியை நோக்கி சென்றதை மகிழ்தோம். வீட்டை
காட்டியதும் அதுவரை மௌனமாக இருந்த அவர், ஒரு பெண்மணி வீட்டில் இருந்து
வருவதை கண்டதும் பாதி முகம் மலர்தது. அந்த பெண்மணி திருமதி. கண்ணம்மாள்
அவர்களின் மகள் சாந்தாமணி. சாந்தாமணி அவர்கள் "அம்மா எங்கம்மா போன மூணு
நாளா என அழுது கொண்டே ஓடி வந்து அவரை அழைத்து வீட்டினுள் சென்றார். அவரின்,
அப்போதுதான் மனதார மகிழ்ச்சியில் புன்னகைத்ததை பார்க்க முடிந்தது. " ஈர
நெஞ்சம்" அமைப்பிடம் திருமதி. கண்ணம்மாள் அவர்களின் உறவினர்கள் இவரை காணமல்
போனதை பற்றி கூறும் பொது, அவர் எப்படி போனார் என்று தெரியவில்லை நாங்கள்
மூன்று நாட்களாக தேடி வருகிறோம் காவல் நிலையத்திற்கு தகவல் நாளை காலை
கொடுக்க முடிவு செய்து இருந்தோம். எல்லா இடமும் குறிப்பாக அரசு மருத்துவமனை
, மற்றும் கோவையில் உள்ள முக்கியமான இடங்கள் என அனைத்து இடங்களிலும்
தேடிவிட்டோம். இவர் கோவையில் உள்ள சரவணம்பட்டிக்கு இங்கு இருந்து சுமார் 25
கிலோமீட்டர் தூரம் இருக்கும் அவளவு தூரம் எப்படி சென்று இருப்பார் என
தெரியவில்லை. இவரை, (திருமதி. கண்ணம்மாள்) கண்டு பிடித்து எங்களிடம்
குடுத்த " ஈர நெஞ்சம்" அமைப்பிற்கு மனமார்ந்த நன்றியை
தெரிவித்துக்கொண்டார்கள். திருமதி.கண்ணம்மாள் அவர்களின் மருமகன், திரு.
ஆறுமுகம், மகள். சாந்தாமணி, பேத்தி. சிலோக்ஷனா, பேத்தியின் கணவர்
திரு.சுப்பிரமணி, திருமதி. கண்ணம்மாள் கிடைத்த மகிழ்ச்சியில் அந்த இருக்க
அந்த மகிழ்ச்சிக்கு காரணம் "ஈர நெஞ்சம்" என்ற மகிழ்ச்சியில் ஈரநெஞ்சம்
அமைப்பு திருமதி. கண்ணம்மாள் அவர்களின் குடும்பத்தை விட்டு விடை பெற்றது.
எங்களது சேவையை காவல் துறையும் பாராட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் பெற்ற சந்தோசத்தை இந்த கானொளியில் காணலாம்.
“EERA
NENJAM – Services (38/2012 – 11.07.2012 continuation) Though, Mrs
Kannammal was well taken care by Teresa Home, Coimbatore for the past
two days, it seems she was upset like homesick. By looking into her
situation, we, “EERA NENJAM” and our volunteers have decided to take her
into Thadagam area, Coimbatore through a private taxi with a permission
from Tereasa Home authorities. We have started the journey at 3.00 p.m.
We have almost knocked all the doors at Thadagam, Coimbatore area and
asked the peoples about Mrs Kannammal by showing her and her photo. It
was continued till 8.00 p.m. Fortunately, a shop-keeper (selling
bananas) told us that he knew her and took us to her house. We were
happy that the journey would be going to be ended soon in a pleasant
manner. Mrs. Kannammal was starting smiling at a woman, who came out of
that house. She was none other than Mrs. Santhaamani, daughter of Mrs
Kannammal. She cried over her and took her into the house. They were in
tears for the past three days on the whereabouts of Mrs Kannammal. When
we asked, her daughter told us that they would not know how she left
their house three days before. It seems they were searching for the past
three days especially at places like Government hospital and important
places and about to give police complaint. They were surprised to note
that how she would have gone to a place which is about 25 km from her
house. They thanked our organization. The peoples who joined in the
joyous moments were her son-in law Mr Arumugam, daughter Mrs Santhamani,
grand-daughter Sulochana and her husband Mr Subramani. The police have
also applauded our work. The video in which they expressed their
feelings and how they appreciated our work is available in the following
video link.