Sunday, June 12, 2016

சிங்கார சென்னை..!!!..???



பெயருக்கு ஏற்ற மாதிரியே அதிகரிக்கும் மேம்பாலங்களும், வித விதமான பூங்காக்களும், தெருவுக்கு ஒரு கல்லூரி; வீதிக்கு ஒரு பள்ளி, உலகத் தரம் வாய்ந்த கண் கவரும் ஷாப்பிங் மால்களும், விண்ணை தொடும் கட்டிடங்களும், பொழுது போக்கு அம்சங்கள் கொண்ட இடங்களும், உலகமே வியக்கும் சினிமா உலகம், உலகத்தின் இரண்டாவது (மெரினா)பெரிய கடற்கரை, பணப் புழக்கம் நிறைந்த பெருநகரத்தில் நிறைந்து வழிகிறது. எலெக்ட்ரிக் ரயில்கள், பறக்கும் ரயில்களுக்கு மத்தியில், இன்னும் விரைவில் தமிழக அரசு அறிவித்துள்ள மோனோ ரயில்களும் சென்னை மாநகரில் வலம்வர இருக்கிறது.



பிரமிக்கவைக்கும் இந்த மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஒரு புறம் இருந்தாலும் வந்தோரை எல்லாம் வாழ வைக்கும் தமிழ் நாட்டின் தலைநகராம் சென்னையில் ஒரு திருஷ்டிப் போல் வசிக்க இருப்பிடம் இன்றி லட்சக்கணக்கான மக்களும் வீதியில் வசிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நொடிக்கு நொடி மாற்றங்கள் கொண்டிருக்கும் சென்னையில் சாலைகளிலும், தெருக்களிலும், நடைபாதைகளிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களின் வாழ்வில் இந்த மாற்றங்கள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை. சொல்லப்போனால் இந்த மாற்றங்களால் அந்த மக்கள் மேலும் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதே உண்மை.

யார் இந்தத் தெருவோரவாசிகள்?
அவர்கள் ஏன் அங்கே வசிக்கிறார்கள்?
அவர்களது தேவைகள் தான் என்ன?
பரபரப்பு நிறைந்த சாலையில், கடந்து செல்லும் பாதையில் நீங்கள் பல முறை சலனமின்றிக் அவர்களை கண்டும் காணாமலும் கடந்து சென்றிருப்பீர்கள். கொஞ்சம் கவனித்து பாருங்கள் பெரும் சாலைச் சந்திப்புகளிலோ, பளபளப்பான மால்களின் அருகிலோ அவர்கள் உங்கள் கண்ணில் பட்டிருக்கும் ஞாபகம் வரும்.
ஆம் அவர்கள் தான் நடைபாதைவாசிகள். நடைபாதைகள் சுருங்கிக்கொண்டிருக்கும் சென்னையில் நடைபாதைகளே வீடுகளாகக் கொண்டிருக்கும் மக்கள்.

இவர்கள் யார் ? ஏன் இங்கெல்லாம் வசிக்கிறார்கள் ?
பலர் இவர்களை பிச்சைக்காரர்கள் என நினைத்ததுண்டு, ஆனால் இவர்கள் பிச்சைக் காரர்கள் அல்ல... தலைமுறை தலைமுறைகளாகத் தெருவோர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பாவி மக்கள் அவர்கள். இவர்கள் கடுமையான உழைப்பாளிகள். பிரம்மாண்டமான சென்னையை உருவாக்கியதில் இவர்கள் பங்கு மிக முக்கியமானது. ஆனால் இவர்களுக்கு இங்கே தங்க இடம் கொடுக்கவில்லை இந்த சென்னை.

ஒவ்வொரு இடங்களிலும் இவர்களது உழைப்பு இல்லாமல் சென்னை பெயர் பெறவில்லை என்பதே உண்மை. தொழிற் சாலைகளில் சுமை ஏற்றி இறக்குதல், கடைகளில் எடுபிடி வேலைகள் செய்தல், வீடுகளில் பாத்திரம் கழுவுதல், சுத்தம் செய்தல், தெருக்களைச் சுத்தம் செய்தல் முதலான பல பணிகளை இவர்கள் செய்கிறார்கள். செருப்புத் தைத்தல், சைக்கிள் பழுது பார்த்தல், குடை, பிளாஸ்டிக் பொருட்களில் ஏற்பட்ட பழுதுகளை நீக்குதல், விலை குறைந்த பொருட்களை நடைபாதைகளிலும் ரயில்களிலும் விற்பனை செய்தல், தெருவோர மற்றும் தள்ளுவண்டி உணவகங்கள் நடத்துதல், ரிக்ஷா ஓட்டுதல், மீன்பாடி வண்டி எனப்படும் பொருட்களை ஏற்றிச்செல்லும் மூன்று சக்கர வாகனம் ஒட்டுதல் போன்ற தொழில்களையும் செய்துவருகிறார்கள். இவர்களில் முக்கால்வாசி பேர் மூன்று நான்கு தலைமுறைகளுக்கு முன் பிழைப்புத் தேடிச் சென்னைக்கு வந்தவர்கள். எல்லோருக்கும் வழி காட்டும் இவர்களுக்கு வசிக்க இடம் தரவில்லை சென்னை.


இவர்களில் சிலரிடம் இவர்களை பற்றி கேட்ட பொழுது :

“இப்டித்தான் நெரிய பேரு வந்து கேட்டுக்கினு போறாங்க, ஆனா எங்களுக்கு ஒரு நல்லதும் நடக்கறதில்ல. ஓட்டு வாங்க வராங்க, வூடு தரேன்னு வாக்குறுதி கொடுக்குற MLA வுக்கு வாக்கை நெறவேத்துறதுக்கு மனசு இல்லை . பொறந்ததுலேர்ந்து தங்கறதுக்கு வூடில்லாம நாங்க இங்கதான் கஷ்டப்பட்டுக்கினு கெடக்கோம். எங்களுக்கு ஒரு வூடு குடுக்க ஒரு அரசாங்கமும் இன்னும் வரலை.”
இவர்களது துயரம் பட்டியல் இட்டால் அது எண்ணிலடங்காதது. உணவு, உறக்கம், கழிப்பிடம், பாதுகாப்பு என மிக முக்கியமான அத்தியாவசிய தேவைகள் இவர்களுக்கு துளி அளவு சதவிகிதம் கூட கிடைத்தது இல்லை.


கழிப்பிடம் :
~~~~~

கழிப்பறை கட்ட அரசாங்கமே மானியம் வழங்கி வரும் சூழலில் வீடே இல்லாத இவர்களுக்கு, கழிப்பறைத் தேவைகள் பெரும் சிரமமாகவே இருக்கிறது. நெடுந்தூரம் நடந்து திறந்திருக்கும் மாநகராட்சி கழிப்பிடங்களை தான் பயன்படுத்த முடியும் அங்கும் சுத்தம் சுகாதாரம் எதுவும் இவர்களுக்கு கவலை இல்லை , கழிப்பிடங்களையே குளியலறைகளாகவும் உபயோகிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அங்கு குளிப்பதிலும் அபாயம் உள்ளது, சில காமுகர்கள் தெரியாமல் வருவது போல் வேண்டுமென்று எட்டி பார்ப்பது இங்குள்ள பெண்கள் பெரும் அவஸ்தைகளுக்கு உள்ளாகின்றனர். அது மட்டும் இல்லாமல் மாநகராட்சி கழிப்பிடங்களை இரவு ஏழு அல்லது எட்டு மணிக்குள் மூடிவிடுவது இவர்களுக்குப் பெரிய பிரச்சினையாக உள்ளது. இரவு நேரங்களில் ஆண்கள் ஒதுக்குப்புறத்தில் சமாளித்துக் கொள்கிறார்கள். ஆனால் பெண்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகிறார்கள்.

இரவு நேரத்தில் சாலையில் உறங்கும் பொழுது பெரும் வீட்டில் வசிக்கும் சில காமுகர்கள் வேண்டுமென்று குடித்து விட்டு பெண்களை உல்லாசத்திற்கு அழைப்பதும், பெண்கள் படுத்திருக்கும் சாலையில் பெண்களுக்கு அருகில் வந்து படுத்துக்கொண்டு சில்மிஷத்தில் ஈடுபடும் இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடிவது இல்லை .


விபத்துகள் :
~~~~~

பல படங்களில் இந்த காட்சியை நாம் கண்டிருப்போம். சாலையோரம் தூங்கிக்கொண்டிருக்கும் மக்கள் மீது லாரி ஏறுவதுபோல, ஆனால் அதை பற்றியும் சாலையில் படுத்திருப்பவர்களைப் பற்றியும் நாம் என்றாவது சிந்தித்து இருக்கிறோமா? சென்னையில் இது போன்ற விபத்துகள் பல இடங்களில் அவ்வப்போது நடக்கின்றன. காவல் நிலையங்களில் இதற்கான வழக்குகள் ஏராளமாக தேங்கி இருக்கிறது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான நீதி கிடைப்பதும் இல்லை.


மழைக்காலத்தில் :
~~~~~

மழைக்காலங்களில் இவர்களின் பிரச்சினைகள் சொல்ல முடிவதில்லை . சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு மட்டும் அல்ல ஒவ்வொரு வெள்ள காலங்களிலும் பெருமளவிற்கு உயிர்களை பறிக்கொடுக்கின்றனர்.
படுப்பதற்கு இடம் இல்லாமல் ஒவ்வொரு மேம்பாலங்கள் , பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என சென்று இரவு முழுவதும் குழந்தைகளுடன் நின்றபடியே அவதிப்படுகிறார்கள். சிறிய இடம் கிடைத்தால் போதும் குழந்தைகளை ஒன்றின் மேல் ஒன்று படுக்க வைத்து உறங்க செய்வதைப் பார்க்கும் பொழுது வேதனை நெஞ்சை அடைக்கிறது. இதில் ரயில் நிலையங்களில் உள்ள அதிகாரிகளும் போலீஸ்காரர்களும் பார்த்தால் அடித்து துரத்திவிடுவார்கள் .


படிப்பு :
~~~~~

பெரும்பாலுமான பெற்றோர்களுக்கு தங்களைப் போன்று பிள்ளைகளும் அவர்களது சந்ததிகளும் கஷ்டங்களை அனுபவிக்கக் கூடாது என்ற எண்ணம் உள்ளதால் தங்களது குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற ஏக்கம் அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கும் படிப்பதில் ஆர்வம் அதிகம் இருக்கிறது. இதனால் அருகில் உள்ள அரசு, மாநகராட்சி பள்ளிகளில் சேர்த்து விடுகின்றார்கள்.
ஆனால் ரோட்டில் அமர்ந்து படிப்பதில் பெரும் பிரச்சினைகள் இருக்கிறது. அதையும் தாண்டி பத்தாம் வகுப்பிற்கு வந்ததும் ஜாதி சான்றிதழ் தேவைப்படுகிறது. வீட்டிற்கே வழி இல்லை ஜாதி சான்றிதழுக்கு எங்கே போக என்று படிப்பிற்கு முற்றுப் புள்ளி வைக்கிறார்கள். இப்படித்தான் பல மொட்டுக்கள் கல்வி சோலையில் மலர்வதற்கு முன்பே கருகி விடுகின்றன என்பது நிதர்சனம்.

இந்த கட்டுரையில் இவர்களை பற்றி நான் எழுதியது மிக மிகக் குறைவுதான் ஆனால் இவர்களது துயரம் சுதந்திர காலத்திற்கு முன்பிருந்தே இருக்கின்றது என்றால் நீங்கள் கொஞ்சம் உங்கள் மனதோடு சிந்தித்து பாருங்கள்.
இதெல்லாம் இவர்கள் சுதந்திர காலத்தில் இருந்தே அனுபவிக்கற கொடுமை. வீடு கிடைக்கும் நாள் தான் இவர்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும் நாள்.


வழக்கு :
~~~~~

இவர்களுக்கு முழுமையான முகவரி இல்லாததினால் பல முடிக்கப்படாத வழக்குகள் இவர்களின் மீது சுமற்றப்பட்டு சூழ்நிலை கைதிகளாகவும் உள்ளார்கள். ஆனால் இவர்களது குறைக்கேட்க எந்த சீமானும் இதுவரை செவி கொடுத்தது இல்லை. இதனால் அளவற்ற இழப்பு மற்றும் சூழ்நிலை கைதிகளாகி இவர்களே சமூக விரோதிகளாக மாறும் கொடுமையும் ஏற்படுகிறது. உயிர், உடைமை, மானம், கற்பு என எதற்குமே பாதுகாப்பு இல்லாத இந்த அவலநிலையில் வாழும் இந்த மக்கள் நிலை என்று மேன்மை அடையுமோ அன்று தான் அது உண்மையான ஜனநாயகமாக இருக்கும்.

இதை விட பெரும் சமூகக் கொடுமை என்னவென்றால் சாலையோரம் வசிக்கும் இவர்களைப் பற்றிய முழு கணக்கெடுப்பு இதுவரை எடுத்து முடிக்கப்படவில்லை. இந்த அப்பாவி மக்களிடம் உடல் உறுப்பு திருடும் அவலமும் நடந்தேறிவருகிறது. இவர்களது குழந்தைகள் ஏராளமானோர் காணாமல் போனது உண்டு, அதைப் பற்றியும் வழக்குகள் பதிவானது இல்லை. நம் நாட்டில் முகவரி உள்ளவர்கள் மட்டும் தான் இந்திய பிரஜை என்ற வகுக்கப்படாத சட்டம் உள்ளது போலும்.


*** இவர்களை பற்றி கூறி இவர்களுக்கு ஒரு விடிவு காலம் கிடைக்க நாமும் சிறு துரும்பாக இருக்க வேண்டும் என்று நண்பர்கள் பலரிடம் கூறியதில் .
பலர் கருத்துக்கள் கூறினார்கள் அதில் சில :

* இவர்களை நாம் திருத்தி வீட்டு நடுவில் வைக்க முடியாதுங்க ரோட்டை தேடித்தான் போவார்கள் இவர்கள் இப்படித்தான்.

* இவர்களில் பலருக்கு பாலியல் தொழில் உள்ளது. அதனால் சாலையே இவர்களுக்கு போதிய இடமாக இருக்கிறது.

* இவர்களுக்கு வீடு இருக்குங்க ஆனா அதை வாடகைக்கு கொடுத்து விட்டு ரோட்டுல வந்து உட்கார்ந்துக் கொள்வார்கள்.

* இவர்களில் சிலருக்கு அரசாங்கத்தால் வீடுகள் ஒதுக்கப்பட்டும் உள்ளது. ஆனால் சென்னையை விட்டு ஒதுக்குப் புறமாக கொடுக்கப்பட்டு இருப்பதால், இவர்கள் வாழ்வாதாரத்தைத் தேடி தினமும் சென்னைக்கு வர வேண்டிய சூழ்நிலையில் இருப்பதால் கிடைக்கும் கூலியில் பாதிக்கும் மேல் பயணத்திற்கே செலவாகி விடுகிறது.

* உங்களுக்கு எதுக்கு இந்த வேலை.

* இவங்க ரோட்டில் இருக்கும் போது அவசர எடுபிடி வேலைக்கு ஆட்களை தேடி அலைய வேண்டியது இல்லைங்க.

* பரிதாபமானவர்கள் இவர்களுக்கு ஏதாவது நல்லது நடந்தாக வேண்டும்.

* இவர்கள் சாலையில் இருப்பதால் விபத்துகள் அதிகரிக்கிறது.

* அரசு இவர்கள் மீது அலட்சியம் காட்டி வருகிறது.
இலவசமாக கிடைக்கும் எந்த அரசு சலுகையும் இவர்களுக்கு கிடைப்பதில்லை. காரணம் முழுமையான முகவரி இல்லாததால் அடையாள ஆவணங்கள் பெற முடிவதில்லை.

* இவர்களுக்கென்று போராட யாரும் இதுவரை இல்லை. இவர்களுக்குள்ளாகவே அமைப்புகளை நிறுவி இவர்கள் இவர்களது மேம்பாட்டிற்காக போராடுகிறார்கள்.

ஆனால் தீர்வுகள் தான் இல்லை.

எங்களுடைய இந்த பதிவின் நோக்கம் எல்லாம் இதுதான் "ஒரு தாய் மக்கள்", "ஒன்றே குலம்", "ஒரே ரத்தம்" என்பதெல்லாம் பலருக்கு வார்த்தை வழியிலும், எழுத்து வழியிலும் மட்டுமே உள்ளது.

அரசாங்கம் இவர்களுக்கு என்று தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, தொலைநோக்குப் பார்வை கொண்டு இவர்களுக்கு கூடு கட்டிக் கொடுத்தால் மட்டும் போதாது. மீண்டும் இவர்கள் சாலைக்கு குடி வராமல் தடுக்க வேண்டும்.

மக்களுக்காக வாழ்பவர்களே; மக்களோடு வாழ்பவர்களே; இவர்களோடும் ஒரு நாள் வாழ்ந்து பாருங்கள்..! இவர்கள் துயரம் புரியும்.

பல உயிர்களை பறிகொடுத்தாலும் நம்பிக்கையை பறிகொடுக்காமல் வாழும் இவர்களை ஏமாற்றி வாழும் தரமற்ற குணத்தோடு நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் ?

~மகேந்திரன் பழனிசாமி