Showing posts with label தற்கொலை. Show all posts
Showing posts with label தற்கொலை. Show all posts

Tuesday, September 27, 2022

முடிவை தேடிக்கொள்ளதீர்கள்


நாம் தினமும்  இறைவனிடம் வேண்டிக்கொள்வது நானும் என்னை சுற்றி உள்ளவர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடும் எந்த துன்பமும் இல்லாமல் வாழவேண்டும் என்பதாகவே இருக்கிறது.

இப்படி அனுதினமும் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்வில் முன்னோக்கி பயணிக்கும் பொழுது... பரிட்சையில் தோல்வியடைந்தால் தற்கொலை , அவமானத்தால் தற்கொலை ,  காதல் தோல்வியால் தற்கொலை, கடன் சுமையால் தற்கொலை , பனிச் சுமையால் தற்கொலை , பொருளாதார நெருக்கடியால் தற்கொலை ,வரதட்சணை கொடுமை , உடல்நலம் பாதிப்பால்  தற்கொலை என்றும்  பலபல தற்கொலை சாவுகள் நம் முன்னே வந்து மனதை கலங்கடிக்கிறது...

  இதெல்லாம் ஒரு புறம் இருக்க இப்போது  உள்ள நவீன காலத்தில் மொபைல் விளையாட்டில் தோல்வியால் தற்கொலை , ரம்மி     விளையாட்டில் பணம் இழந்து தற்கொலை , சமீபத்தில் நாம் அனைவரும் செய்திகளில் பார்த்திருப்போம் குழந்தைகளை மையப்படுத்தி  Blue Whale Challenge", "Momo Challenge  விளையாட்டால்  தற்கொலைக்கு தூண்டப்பட்டு தற்கொலை .. தனக்குப் பிடித்த நடிகர் படம் ஓடாததால் தற்கொலை , பிடித்த விளையாட்டு அணி தோற்று விட்டது அதனால்  தற்கொலை   என்று அதிர்ச்சிகரமான  சில செய்திகள் அடிக்கடி நம் செவிக்குள் நுழைந்து இதயத்தை கலங்கவைத்து விடுகிறது.  

இப்படி ஓடியாடி விளையாடி மகிழும்  சின்னஞ்சிறுவர் முதல் ... மலையையே  தகர்த்து  சாதிக்கும்  இளம் பருவத்தினர் , குடும்பத்தை மேல்நோக்கி நகர்த்தி செல்லும் நடுத்தர வயதினர் என்று மகிழ்ச்சி ததும்பி வாழும் நம்மவர்களிடம்  அவமானம், துரோகம், பணம் இழப்பு, தாங்க முடியாத  உடல்வலி, தோல்வி என்று எத்தனையோ காரணங்கள் உள்  ஊடுருவி நான் இனி வாழக்கூடாது   தற்கொலை செய்யலாம் என்ற  முட்டாள்தனமான முடிவிற்கு வந்துவிடுகின்றனர். 


நன்கு வாழ்ந்து பக்குவப்பட்ட 70 வயதுக்கு மேற்பட்ட  முதிர்ந்த வயதினர்  கூட பிள்ளைகள் எங்களை கைவிட்டு விட்டனர்  வாழ்வு  தனிமைப் படுத்தி விட்டது போன்ற காரணங்களால் தற்கொலைக்கு தூண்டப் படுகின்றனர் . இது போன்ற  முதிர் தற்கொலை கூட இந்த காலக் கட்டத்தில் அதிகரிக்கத் துவங்கி விட்டது .

உலகில், ஒரு வருடத்தில் 8,00,000 தற்கொலைகள் நிகழ்கின்றன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஒவ்வொரு 40 நொடிக்கும் நாம் ஒரு உயிரை தற்கொலையினால் இழக்கின்றோம். தற்கொலை முயற்சிகளோ அதை விட 25 மடங்கு அதிகமாக இருக்கிறது . கடந்த 45 ஆண்டுகளில் தற்கொலை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. 15 முதல் 45 வயது வரை ஏற்படும் உயிரிழப்புகளுக்கு தற்கொலை ஒரு முக்கிய காரணம்.

நம்முடைய தாத்தா பாட்டி எல்லோரும் எத்தனையோ பஞ்சம் , பட்டினி, வறுமை வந்தபோதும் கூட அதை எதிர்த்து நின்று ஜெயிக்கும் மனவலிமையோடு போராடி வென்றிருக்கின்றனர் .
ஆனால், இன்றைய தலைமுறையினர் ஏன் இப்படி சின்ன விஷயங்களைக் கூட தாங்க முடியாத பூஞ்சை மனதோடு இருக்கின்றனர்..?!

  இயற்கையிலேயே நம் ஒவ்வொருவருக்குள்ளிலும் சவால்களை சமாளிக்கும் தன்மை புதைந்து கிடக்கிறது. பின் ஏன் இப்படிப் பட்ட தற்கொலை எண்ணங்கள்...
காரணங்களுள்  ஒன்று , நாம் பிள்ளைகளை வளர்க்கும் முறை சரியில்லை. சிறு தோல்வியைக் கூட தாங்கக்கூடிய மன உறுதி இன்றைய பிள்ளைகளிடம் இருப்பது இல்லை. கூட்டுக் குடும்பம் சிதைந்து தனிக் குடித்தனம் என்றான பின் குழந்தைகள் கைபேசியிலும் கணிணியிலும் மட்டுமே உலகை பார்க்கின்றனர்..  அது தவறு , 
உலகம் என்பது வேறு என எடுத்துக் கூற வயதில் மூத்தோர் இல்லை...

கைபேசியும், கணிணியும் மட்டுமே உலகம் இல்லை . அதன் மூலம் வரும் நண்பர்கள் மட்டுமே  நமக்கு உண்மையான மகிழ்ச்சிகளை கொடுப்பது இல்லை . சமூக வலைத்தளங்களில் பல விஷயங்களை பகிரும் நாம், நம்முடைய துக்கங்களையும், ஏமாற்றங்களையும் பகிர முடிகிறதா என்றால் இல்லை.


நம்மிடையே தற்கொலையை குறித்து சில தவறான புரிதல்கள் நிலவுகிறது.  தற்கொலை எண்ணம் என்பது பல்வேறு சூழலில், எல்லா வயதினருக்கும் ஏற்படக் கூடிய எண்ணமே‚ தற்கொலை முயற்சிகள் முன்னெச்சரிக்கை ஏதுமின்றி நிகழ்ந்து விடுவதில்லை. மன அழுத்தம் மட்டும் 90 சதவீத தற்கொலைகளுக்கு காரணமாகிறது. மது பழக்கத்தினால் தவறான முடிவுகளை தேடுகிறவர்கள் பலர். குடும்பத்தில் நெருங்கிய உறவினர்களை தற்கொலையால் இழந்தால், அவர்களுக்கும் அதே எண்ணம் ஏற்படுவதற்கான மரபணு சார்ந்த ஆபத்து உண்டு. இதைத்தவிர, உளவியல் ரீதியான பிரச்சனைகள் இன்றைய தலைமுறையினருக்கு அதிகம்.  இரவு, பகல் என்று மாறி, மாறி வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் சரியான நேரத்திற்கு, தேவையான அளவு தூங்க முடிவதில்லை. தொடர்ந்து சரியான தூக்கம் இல்லாவிட்டால், மன அழுத்தம் அதிகரித்து, தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவதாக ஆய்வு உறுதி செய்கிறது.

எப்பொழுதும் எதார்த்தமான  எண்ணங்களையே கையாள வேண்டும்  இல்லாவிட்டால் நம்மையும்
அறியாமல் ஏற்படும் மன அழுத்தம், காலப்போக்கில், பலவித உடல் பிரச்னைகளையும், எதிர்மறை எண்ணங்களையும் ஏற்படுத்தும். 

பிரச்னைகள் இல்லாத மனிதர்களே கிடையாது. ஆனால், சில சிக்கல்கள் நம் அன்றாட வாழ்க்கை முறையையே சிதைத்து, `என்னடா வாழ்க்கை இது’ என்ற விரக்தி ஏற்படுத்துகிறது , ஆயிரம் கோடி  கணக்கில் கடன் கட்ட முடியாதவர்கள் எல்லாம் ஓஹோ என்று தானே வாழ்கிறார்கள், கோடி கணக்கில் கொள்ளை அடித்தவர்கள் எல்லாம் அமோக அந்தஸ்தில் தானே ஊர்வலம் வருகிறார்கள்... சாதாரண அற்ப விஷயத்திற்கு எல்லாம் தன்னை மாய்த்துக் கொள்வது தவறு தானே  தற்கொலை எண்ணம் தோன்றும்  போது    தனக்கு நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களிடம்  மனக் குறையைச்  சொல்லிவிட வேண்டும். அல்லது இயற்கை சூழ்ந்த இடங்களுக்கு நமக்கு பிடித்த துணையுடன் சென்று வரவேண்டும்.  அதை விட்டுவிட்டு எதிர்மறை எண்ணங்களை மனதில் சுமந்து கொண்டு இருந்தால்  பேராபத்து நிச்சயம். இந்தப் பிரபஞ்சத்தில் லட்சக்கணக்கான வாய்ப்புகள் கிடக்கிறது , அதையெல்லாம் சிந்தித்து நம்முடைய பிரச்னைகள் எதுவாக இருப்பினும் அதற்கு மாற்றுத் தீர்வுகளை ஆராய வேண்டும் . 

தற்கொலை செய்து கொள்பவர்களிடம் ஏற்படும் மாற்றங்கள் :

பதற்றத்தை உண்டாக்கும் வகையில் ஒரு தற்கொலைச் செய்தியைக் கேள்விப்படும் போது  , அடுத்த இரண்டு வாரங்களில் அதே மாதிரியான சூழலில் 13 சதவிகித தற்கொலைகள் அதிகரிக்கும் என்கிறது முக்கியமான புள்ளி விவரம் ஒன்று. அதாவது இந்த விஷயம் சிலரின் மனதில் எதிர்மறையான எண்ணங்களை உண்டாக்கும். பொதுவாக எந்த ஒரு தற்கொலைச் செய்தியாக இருந்தாலும், அவர்கள் எப்படி இந்தத் துயர முடிவைத் தேடிக்கொண்டனர் என்பதை ஆராய துவங்கி விடுகிறார்கள் .


சரியாக தூங்க மாட்டார்கள் 
சரியாகச் சாப்பிடாமல் இருப்பது அல்லது அதிகம் சாப்பிடுவார்கள் 
எதிலும் ஈடுபாடு இல்லாமல்இருப்பார்கள் .
கடவுளே கதி என்று இருப்பவர்கள்  கடவுள் நம்பிக்கை இழந்து காணப்படுவார்கள் .
வழக்கத்துக்கு மாறாகக் குணநலன்களில் இருப்பார்கள் 
அதிக கோபப்படுவார்கள் .
தனிமையை தேடுவார்கள் 
தடாலடியாக முடிவெடுப்பார்கள் .



தற்கொலை எண்ணம் கொண்டவர்கள்   பிரச்னையை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தி உதவி கேட்கும் பொழுது     அவர்கள் மனம் முழுமையாக நம்பிக்கைக்குரியவராகிய நாம்  , அந்த நபருக்குத் தற்கொலை எண்ணம் ஏன் வந்தது என்பதையும், அவரின் உணர்வுகளையும் முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும்.அவர்கள் தற்கொலை எண்ணம் கொண்டிருப்பதை  அறிய வெளிப்படையாக பேசிவிட வேண்டும் . நாம் தற்கொலைப் பற்றி பேசுவதால் ஒருவர் தற்கொலைக்கு தூண்டப்படுவாரோ என்ற பயம் இருக்க கூடாது . அவருக்கு இருப்பது பணம், பொருள், படிப்பு, உடல், மனம், வேலை என எது சம்பந்தப்பட்ட பிரச்னையாகவும் இருக்கலாம். அந்தச் சிக்கல் லாஜிக் ஆனது அல்லது லாஜிக் இல்லாதது என ஆராய்வதை விட்டு அவரை நாம் முழுமையாகப் புரிந்துகொண்ட உணர்வுடன், `உனக்கு நான் பக்கபலமா இருக்கேன்' என்ற நம்பிக்கையை அவரது மனதில் ஆழமாக விதைக்க வேண்டும். பக்க பலமாக இருக்க வேண்டும்.

பின்னர், சம்பந்தப்பட்ட நபரின் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கான எல்லாவிதமான ஆலோசனைகளையும் எடுத்து கூற வேண்டும்.   . நம்முடைய அணுகுமுறையில்  அவர்கள்  எமோஷனல் ஆகாமல் நம்பிக்கையுடன் முடிவெடுக்கும் தன்மைக்கு மாற்றிவிடலாம் , அதன் பிறகு இயல்புநிலைக்குத் திரும்பி, தற்கொலை எண்ணத்திலிருந்து அவரே விடுபட்டுவிடுவார்கள்  . அதுவும் கை  கொடுக்காத நிலையில்  அதீத மன அழுத்தத்தில் இருக்கும் அவர்களை ,  மனநல ஆலோசகரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் .  அவர்களை நாம் கையாளும் பொழுது அவர்களுக்கு எந்தவித அவமான எண்ணத்தையும் கொண்டு சேர்த்து விட கூடாது.



சட்டத்தின் பார்வையில், தற்கொலை முயற்சி குற்றமாக பார்க்கப்பட்ட காலம் இப்போது இல்லை , அது சிகிச்சை தரப்பட வேண்டிய மனரீதியான சிக்கல் என்றே கருதப்படுகிறது.  தற்கொலை தடுக்கப்படக் கூடிய ஒன்றுதான். நம்பிக்கையும் ஒற்றுமையும் தான்  தற்கொலையின் எண்ணிக்கையையும், தாக்கத்தையும் குறைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை 

அனைவருமே  சாதிக்க பிறந்தவர்கள் ; தற்கொலை செய்துகொள்ள அல்ல
தற்கொலை என்பது சமூகம் செய்யும் கொலை என்பதே என் கருத்து.



தற்கொலைப் பற்றிய விழிப்புணர்வை, நம்  சமூக வட்டத்தில் ஏற்படுத்த வேண்டும்.. 
தற்கொலை தடுக்க  இலவச ஆலோசனை மையம் எல்லா இடத்திலும் இருக்க வேண்டும்.
எந்த நிலையிலிலும் நம்முடைய சொல் ஒருவருடைய மனதை பாதித்து விட கூடாது.

உனக்கு நான் இருக்கிறேன் 
உன் வாழ்க்கை இருட்டல்ல என்று அவர்களுக்கு நம்பிக்கை ஒளி காட்ட வேண்டும்.

~ ஈரநெஞ்சம் மகேந்திரன்

Saturday, December 27, 2014

தற்கொலைக்கு முயன்ற முதியவரை மீட்ட இளைஞர்கள்

ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM" Services .
****************************************************************
( 400 / 26 - 12 - 2014 )
நேற்று 25/12/2014 கோபால் சுமார் 70 வயதிருக்கும் ஒருவர் தன்னுடைய தனிமை நிலை வெறுப்பின் காரணமாக மனம் உடைந்து செய்வதறியாது தான் வசிக்கும் நாமக்கல்லில் இருந்து ஊர் ஊராக சுற்றி இறுதியில் கோவை வந்த அவர் சாலையில் போகும் வாகனங்களின் முன் விழுந்து தற்கொலைக்கு முயற்சி செய்துக் கொண்டிருந்தார் . இதில் ஒரு வாகனத்தில் மோதி காலில் பலத்த காயம் வேறு ஏற்பட்டு காலில் ரத்தம் கொட்டிக் கொண்டிருந்திருக்கிறது . இதையெல்லாம் கோவை தண்டுமாரியம்மன் கோவிலை சுற்றி உள்ளவர்களும் அந்தவழியாக சென்ற போலீசாரும் வேடிக்கை பார்த்தபடி சென்றுக் கொண்டிருந்தனர்.
அந்த வழியாக கோகுல்.A, லலித்ப்ரகாஷ்.U, சசிகுமார்.A ஆகிய மூன்று இளைஞர்கள் திரைப்படம் பார்த்துவிட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் இந்த முதியவர் செய்யும் செயல்களை பார்த்துவிட்டு மனம் பரிதவித்து அவரை மீட்டு சமாதானம் செய்திருக்கிறார்கள் . அவர்களிடம் அம்முதியவர் தனக்கு யாரும் இல்லை என்றும் திருமணம் ஆகவில்லை, வேலைக்கு செல்ல உடல் நலம் ஒத்துவரவில்லை, கையில் பணமும் இல்லை, சாப்பாட்டிற்கு வழி இல்லை, பிச்சை எடுக்கவும் மனம் ஒப்பவில்லை, இதனால் எனக்கு மரணம் தான் தீர்வு என்றுக் கூறி புலம்பி இருக்கிறார்.
இதை கேட்ட அந்த மூன்று இளைஞர்களும் அந்த முதியவருக்கு காலில் ஏற்பட்டிருக்கும் காயத்திற்கு உதவும் நோக்கில் 108 ஆம்புலன்ஸ் அழைத்துள்ளனர். ஆனால் நீண்டநேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வராத நிலையில், அவர்கள் ஈரநெஞ்சம் அறக்கட்டளையுடன் தொடர்பு கொண்டு அம்முதியவருக்கு உதவும் படிக் கேட்டுக் கொண்டார்கள் .
அதனைத் தொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்புடன் இணைந்து தற்கொலைக்கு முயன்ற அந்த பெரியவரை நள்ளிரவில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவருக்கு காலில் ஏற்பட்டிருந்த பலத்த காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின் அவரை தற்காலிகமாக கோவை மாநகராட்சிக் காப்பகத்தில் பாதுகாப்பிற்கு சேர்த்து விட்டு வந்தனர்.
இளைஞர்கள் என்றால் இரவு நேரத்தில் ஊரை சுற்றிக் கொண்டும் நேரம் கழித்தும் வீடு திரும்புவதே வழக்கமாக கொண்டிருப்பர். அது போன்ற இளைஞர்கள் மத்தியில் கோகுல், லலித்பிரகாஷ், சசிகுமார் என்னும் இந்த மூன்று இளைஞர்களின் இந்த முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.
இப்படிப் பட்ட இளைஞர்களை நம்பியே நாளைய இந்தியா காத்துக் கொண்டிருக்கிறது என்று ஈரநெஞ்சம் அறக்கட்டளை அவர்களை உங்கள் சார்பாக அம்மூவரையும் பாராட்டுகிறது.
~ ஈரநெஞ்சம்

Wednesday, September 10, 2014

600 குடும்பங்களைத் தற்கொலையில் இருந்து மீட்டுத்தந்த கோவையைச் சேர்ந்த லதா .

செப்டம்பர் 10  தற்கொலைத் தடுப்பு தினம்:

செப்டம்பர் 10 தற்கொலைத் தடுப்பு தினம்: , "உலகத் தற்கொலை தடுப்பு தினம்" ஆகும். தற்கொலைத் தடுப்பிற்கான சர்வதேச அமைப்பு மற்றும் உலகச் சுகாதார‌ அமைப்பு ஆகியவை இணைந்து இந்த தினத்தை 2003 ஆம் ஆண்டில் இருந்து நினைவுகூர்ந்து வருகிறது. தற்கொலை எண்ணம் தலை தூக்க காரணங்கள் பல சொல்கிறார்கள். பொருளாதாரச் சிக்கல், கடன், அவமானம், குடும்பப் பிரச்னைகள், காதல், படிப்பு, மனரீதியான பிரச்னைகள் என ... உலகம் முழுவதும் 40 நிமிடங்களுக்கு ஒருவர் என்றால் ஒரு நாள் பொழுதில் 3 000 பேர் , ஆண்டுக்கு சராசரி 15 சதவீதம் என தற்கொலை அதிகரித்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் இறப்புக்கான காரணங்களில் தற்கொலை 13 ஆவது இடத்தில் இருக்கிறது.



இந்தச் சமுதாயத்தில் நான் வாழ தகுதியற்றவன் என முடிவுசெய்து தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளும் ஒரு பயங்கரமான கோழைத்தனம் தற்கொலை "எந்த மாவீரனாலும் முடியாது, ஒரு கோழையால் மட்டுமே சாதிக்கப்படும் ஒரு வீரச்செயல் தற்கொலை" இந்தச் செயலை செய்வதால் கின்னஸ் புத்தகத்தில் இடமோ அல்லது விருதுகளோ கிடைக்கப்போவது இல்லை . காலம் முழுவதும் தற்கொலை செய்தவருக்கும், அவர் குடும்பத்தினருக்கும் நிலைக்கப் போவது தீராத அவப்பெயர்தான்.

தற்கொலை செய்து கொள்ளப்போகிறவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும் தற்கொலையால் பெறப்படும் விளைவுகள் என்ன என்று . ஆனால் தற்கொலைக்குப் பின் நமக்குத் தெரியப்போகிறதா என்ன என்ற ஒரு சுயநலம் அதில் இருக்கிறது . தற்கொலை செய்து கொள்வதால் கண நிமிடங்களில் உயிர் போய்விடும். ஆனால், நம்மை நினைத்து, நினைத்து முடங்கிப் போகும் தாய், தந்தை, மனைவி , குழந்தைகள் போன்ற சொந்தங்கள் தினம், தினம் செத்துப் பிழைப்பது பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை.


தற்கொலை செய்து கொள்பவர்களை அவர்களது ஒரு சில செயல்கள் மூலம் நாம் கண்டுபிடித்துவிடலாம் . தற்கொலை செய்துக்கொள்ள ஒருவர் முடிவெடுத்து விட்டார் என்றால் அவருடைய பேச்சில் பல மாறுதல்கள் தெரியும் . தற்கொலை செய்து கொள்ளப் பலநாட்களுக்கு முன்பே முடிவு செய்து விடுவார்கள் . பல துன்பங்கள் இருந்தும் தற்கொலை முடிவுக்குப் பின் சந்தர்ப்பம் கிடைக்கும் வரை வேண்டுமெனவே சிலர் உற்சாகமாக , மகிழ்ச்சியாக இருப்பது போலக் காட்டிக் கொள்வார்கள். இன்னும் சிலர் "இனியும் என்னால் எதுவும் செயல்பட முடியாது " " இனிமேல் எனக்கு யாரும் இல்லை " "அனைத்திற்கும் ஒரு முடிவு காண்கிறேன் " என்றெல்லாம் சொல்லி கொண்டிருப்பார்கள் . இதையும் மீறி அக்கணத்திலேயே தூண்டப்பட்டுத் தற்கொலை செய்து கொள்பவர்கள் மிகக் குறைவு.

தற்கொலை செய்து கொள்வது அவ்வளவு எளிதானதும் இல்லை தற்கொலை செய்துகொள்வதற்கு வாழ்ந்துவிட்டுப் போகலாம் . சில தற்கொலைகள் முயற்சிக்கும் போது ஏற்படும் வலிகள் மிகவும் கொடுமையானதாக இருக்கும் , அது நமக்கு இருக்கும் தற்கொலைக்கான காரணத்தைக் காட்டிலும் வலி மிகுந்ததாக இருக்கும் .

" வாழ நினைத்தால் வாழலாம் , தற்கொலை ஒன்றும் சாதாரணம் அல்ல " 
600 குடும்பங்களைத் தற்கொலையில் இருந்து மீட்டுத்தந்த கோவையைச் சேர்ந்த லதா .




சாவதற்குத் துணிவு இருப்பவர்களுக்குத் துன்பங்களைத் துரத்துவது ஒன்று பெரியதல்ல , தன்னம்பிக்கையும் ஊக்கமும் இருந்தால் பிரச்சினைகளை வென்று வாழ்ந்து விடலாம் என்று சாதித்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த லதா என்ற பெண்மணி. ஒரு கிராம் தங்க நகை தொழில் செய்து வரும் இவர் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களைத் தற்கொலையில் இருந்து மீட்டு இருக்கிறார்.

கடந்த 1998ஆம் ஆண்டுக் கோவையில் நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து பலரும் வேலை இழந்து வாழ்வாதாரம் இழந்து செய்வதறியாது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டனர் . அதே முடிவுக்குத் தன் கணவரும் வந்த போது லதா தன் கணவருக்கு அறிவுரை கூறி தன்னம்பிக்கை ஊட்டி , நம்மாலும் சாதிக்கமுடியும் வாழ்வதற்கு வேறு வழி இல்லாமல் போகாது இந்த உலகில், எனக் கணவருடன் கைகோர்த்து , தன் குடும்பத்தை மட்டுமல்ல வாழ்விழந்து நிற்கும் பிற குடும்பங்களும் தற்கொலை என்ற முடிவுக்கு வந்து விடாமல் தடுப்பதோடு அவர்களுக்கு வாழ்வாதாரத்தையும் தேடிக் கொடுத்திருக்கிறார்.

கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களையும் இணைத்து, அனைத்து பெண்களையும் சேர்த்து அப்போதைய மாவட்ட ஆட்சியர் திரு, முருகானந்தம் அவர்களிடம் சென்று வாழ வழி ஏற்படுத்தித் தரும்படி மனு கொடுத்தார் . அவர்களது மனுவை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் உடனடியாக அவர்கள் அனைவருக்கும் தன்னம்பிக்கை மற்றும் ஊக்கம் கொடுக்கும் பயிற்சியை அளித்ததோடு அனைவருக்கும் சிறுதொழில் பயிற்சிக்கும் ஏற்பாடு செய்து கொடுத்தது இவரது முயற்சியாலேயே !!!

அனைவருக்கும் விருப்பப்பட்ட சிறு தொழிலுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுத் தற்போது அனைவரும் சுயதொழில் மூலம் முன்னேற்றம் கண்டு நல்ல நிலையில் வருமானம் பெற்று வாழ்ந்து வருகின்றனர். அனைவருக்கும் தற்கொலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு அவர்கள் வாழவும் நல்ல வழி ஏற்படுத்தித் தந்த லதா அவர்கள் தன்னம்பிக்கை இருந்தால் சாவையும் வென்று விடலாம் என்பதற்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறார். மேலும் இவர் ஒரு கிராம் தங்க நகை செய்யும் தொழிலை பிறருக்கு கற்றுக்கொடுக்கும் ஆசிரியராகவும் விளங்குகிறார். இப்போதும் அவரைப் பார்ப்பவர்கள் தங்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுத்த தெய்வமாகவே நன்றியுடன் நினைத்து வருகின்றனர். எனவே தற்கொலை என்பது முடிவல்ல "தன்னம்பிக்கை இருந்தால் பிரச்சினைகளை மட்டுமல்ல சாவையும் வென்று சாதிக்கலாம் " புத்துணர்ச்சியுடன் வந்தவர்களுக்கெல்லாம் சாதிக்க வழிகாட்டியாக இருக்கிறார் பல விருதுகளுக்கும் சொந்தக்காரரான  லதா .



" வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் " இந்த லதா போன்றவர்கள் இருந்தால் ஒரு வழி அல்ல , ஆயிரம் வழிகள் உண்டு இப்பூமியில் ...

லதா அவர்களை தொடர்புகொள்ள : 94867 78910

~ஈர நெஞ்சம்

Tuesday, October 04, 2011

தற்கொலை...

பூங்காவரை
வந்த
நீ
ஊஞ்சல் ஆடாமல்
போய்விட்டாய்
அதே
மரத்தில்
தூக்கு போட்டு
தற்கொலை செய்ய
பார்க்கிறது
அந்த
ஊஞ்சல்..♥