Wednesday, November 23, 2022

உயரம் 3 அடி மற்றவர்களுக்காக தேடுவது 6 அடி

 கோயம்புத்தூர்ல கண்ணப்பநகர் அப்படின்னு சொன்னாலே எல்லாருக்கும் தெரிந்த ஒரே  இடம் சுடுகாடு தாங்க , சென்னைக்கு எப்படி  கண்ணம்மாப்பேட்டையோ அதே போல கோவைக்கு  இந்த கண்ணப்பநகருங்க .

முன்ன பின்ன செத்தாதான் சுடுகாடு பத்தி தெரியும்னு   சொல்லுவாங்க, அதனால நாம அங்க போய் பாக்கறதுக்கு வாய்ப்பு அதிகம் கிடைச்சு  இருக்காது. அப்படியே  போய் இருந்தாலும்  நான் இன்னைக்கு சந்திச்ச  இந்த நபரை சந்திக்க வாய்ப்பு இருந்திருக்காது . அப்படியே சந்திச்சு  இருந்தாலும் நம் சூழ்நிலை காரணமாக மனதில் அவ்வளவாக பதிந்து இருக்காது. ஆனா யதேச்சையா இன்னைக்கு  அவரை அந்த மாயானத்தில சந்திக்க வாய்ப்பு கிடைச்சது .


அவரை பார்த்து அண்ணா வணக்கமுங்க உங்களை ரொம்ப நாளா பார்த்துட்டு இருக்கேன் , உங்களோட பேசனும்னு நினைப்பேன் , ஆனா நேரம் கிடைக்கலை இன்னைக்கு தான் நேரம் ஒதுக்கி உங்ககிட்ட பேசனும்னு வந்தேன்   நல்லா இருக்கீங்களா , உங்களை பத்தி சொல்லுங்க உங்களோட இந்த வேலையை பத்தி சொல்லுங்க அப்படின்னு அவர்ட்ட கேட்டேன் , அதற்கு அவர் கொஞ்சம் வெட்கத்துடன் ,...



"என்ன அண்ணா நீங்க ...  நான் எல்லாம் ரொம்ப சாதாரண ஆள் தான் அண்ணா. என் பேர் வீரபத்திரன் பேர்ல தான் அண்ணா வீரம்.. ஆனா நிஜத்துல இங்க ஒன்னும் இல்லை .

என்னோட தாத்தா மிலிட்டரில வேலை பார்த்து ரிட்டயர்டு ஆனதும் இங்க  வேலைக்கு வந்ததா சொல்றாங்க , அவருக்கு பிறகு எங்க அப்பா இந்த வேலை செய்துட்டு வந்தாரு .  நாங்க கூடப்பிறந்தவங்க 6 பேரு நான் நாலாவது  குழந்தையா பிறந்தேன் இப்போ வரைக்கும் குழந்தை உயரத்தில் தான் இருக்கேன் . ஒரு அண்ணன் மன உளைச்சல்ல தற்கொலை செய்துகிட்டாரு. மீதி ரெண்டு அண்ணன் ங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு தனியா போயிட்டாங்க.  அக்காக்கு கல்யாணம் ஆயிடுச்சி ,  என்னுடைய தங்கச்சி தான் எங்க வம்சத்திலேயே அதிக படிப்பு படிச்சு இருக்கா ... (பன்னிரண்டாவது வரை ) மற்ற யாருமே படிக்கலை ... 




கலெக்டருக்கு கூட படிச்சு பரிட்சை எழுதிடலாமுங்க ஆனா நான்  மூணாவது வரைக்கும் படிக்கிறதுக்குள்ள எனக்கு நிறைய பேரு ,   நிறைய பரிட்சை வெச்சுட்டாங்க , அந்த வயசுல எனக்கு என்ன அண்ணா தெரியும் , பள்ளிக்கூடம் போகும் போதெல்லாம்  கூட படிக்கும் பசங்க கூளையன் வந்துட்டான்னும் குட்டையன் வந்துட்டான்னு சொல்றதும், வெட்டியான் பையன் பக்கத்துல உட்காராதீங்கடானு ஒதுக்கி வைக்கிறதும் என்னால தாங்க முடியலைங்க... அப்போவே நிறைய நாள் பள்ளிக்கூடம் போகாம கட் அடிச்சுட்டு ஊர் சுத்தி இருக்கேன், அம்மாவும் அப்பாவும் எவ்வளவோ சமாதானப் படுத்தி படிக்க  அனுப்புவாங்க , அங்க டீச்சருங்களே வெட்டியான் புள்ளைன்னு கூப்பிட்டு மனச காயப்படுத்த ஆரம்பிச்சதும் ஸ்கூல் புத்தகத்துக்கு எல்லாம் கொள்ளி வெச்சுட்டு இனி அந்த பக்கமே போக மாட்டேன்னு முடிவா சொல்லிட்டு ஊர் சுத்த ஆரம்பிச்சேன்.

கொஞ்சம் பெரியவனானதும் , இல்லை இல்லை கொஞ்சம் வயசு அதிகமானதும்  எங்க அப்பா சுடுகாட்டுல அவரோட ஒத்தாசையா வேலை பாத்துட்டு இருக்க சொன்னார்.  ஊர் சுத்தறேன்னு இந்த வேலை செய்ய வெச்சுட்டாங்க . ஆனா அங்கேயும் சவத்தை கொண்டு வரவங்க  டேய் குட்டையா இங்க வாடான்னும் வெட்டியான் இங்க வாடான்னு வார்த்தை கடப்பாரையால் குத்திட்டு இருந்தாங்க ...


வெறுப்பாகி , அப்பா இந்த வேலை எனக்கு வேணாம் ... வேற ஏதாச்சும் வேலைக்கு போறேன்னு சொல்லி ட்டு வேலை தேட போனேன் , யார்கிட்டேயும் நான் மயானத்துல வேலை செய்யறவன்னு சொல்லாம வேலை  கேட்டேன் . ஆனா என்னுடைய உயரத்துக்கு எங்கேயும் யாரும் வேலை கொடுக்கலை , அப்படியே மனசு வந்து ஒரு சிலர் வேலை கொடுத்தாலும்  உயரம் பத்தாததால என்னால வேலை செய்ய முடியல ...

ஒரு கட்டத்துல அப்பா எங்கேயோ காணாம போயிட்டாரு ,  எங்கே தேடியும் கிடைக்கவே இல்லை ,  மயானத்தில் வேலை செய்து கிடைக்கும் வருமானத்துல தான் எங்க குடும்பம் ஓடிட்டு இருந்துச்சு .  இப்போ அவரு இல்லாம போனதால , வேற வழியே இல்லாம  குடும்பத்துக்காக  இந்த வேலை செய்ய ஆரம்பிச்சு இதோட 15 வருஷம் ஆகிடுச்சு மனசும் உடம்பும் நிறைய காயம் பட்டு பட்டு மரத்து போச்சு . எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு பொண்ணு பார்த்தாங்க , ஆனா இந்த வேலை செய்யும் எங்க குடும்பத்துக்கு நல்லது கெட்டதுக்கு கூட பத்திரிகை வைக்க மனசு வராதவங்க எனக்கு எப்படி பொண்ணு கொடுக்க முன் வருவாங்க  . கல்யாணம் எல்லாம் கற்பனை தான்  அதை விடுங்க அண்ணா ...

இன்னைக்கு வரைக்கும் யாருமே என் பெயரை சொல்லி கூப்பிட்டதே இல்லைன்னு  நினைக்கிறேன் ..,  சவத்தை எடுத்து வர்ர சொந்தக்காரங்க சவத்துக்கு குழி போட்ட  கூலியை கூட தூக்கி தான்  போடுவாங்க , நான் ஏன்னு கேட்டா அது தான் முறைனு சொல்லுவாங்க , அதுக்கு பிறகு  வெட்டியான் குட்டையான்னு வேற கூப்பிடுவாங்க  பாருங்க.. அப்பல்லாம் ஊனம் எனக்கா  இல்லை அவங்களுக்கான்னு  மனசுக்குள்ள சிரிச்சுக்குவேன்.  ( ஆனா அவரை பார்க்கும் போது  சிரிக்கிறது மாதிரி எல்லாம் தெரியலைங்க  ) 

எவ்வளவோ பேர் என் மனசை காயப்படுத்தினவங்களுக்கும் கூட நான் சவக்குழி போட்டு  இருக்கேன் , அப்போல்லாம் அவங்க மேல  எனக்கு எந்த கோபமோ காழ்ப்புணர்ச்சியோ வந்ததில்லைங்க .  இப்போ எல்லாம் இந்த தொழிலை நான் தெய்வமா  மதிச்சு செய்துட்டு இருக்கேன் , ஆனா ஒருத்தரும் என்னை மனுசனா கூட மதிக்கிறது இல்லையேன்னு மனசோட ஏதோ ஒரு மூலைல  அழுதிட்டு தான் இருக்குன்னு.."  கண் கலங்கிட்டே சிரிச்சாரு பாருங்க .  எனக்கு இதயத்துல இருந்து அவ்வளவு வலி வந்துருச்சு...

இவரு உயரம் மூன்றடி தான்   ஆனா நமக்கெல்லாம் ஆறடி தேடி கொடுக்குறதே இவர் தாங்க . என்ன தான் , கோட்டையில கொடி  கட்டி பறந்தாலும்   என்னைக்காவது  ஒரு நாள்   இவரிடம் தானே சரணாகதி ஆகப்போறாங்க   ...

அரிச்சந்திரன் இதே மயானத் தொழில் செய்தாலும் அவரை இன்றளவும் கொண்டாடும் இந்த சமுதாயம் தான் இவரைப் போன்றோரை மனதளவில் காயப்படுத்திக் கொண்டிருக்கிறது... என்னைக்கு தான் திருந்த போகிறார்களோ இந்த நடமாடும் சவங்கள் ..!!!


கண்ணீருடன் 

ஈரநெஞ்சம் மகேந்திரன்



Thursday, November 10, 2022

உங்களுக்கு புண்ணியமா இருக்கட்டும் எங்களை அப்படி கூப்பிடாதீங்க

*உங்களுக்கு புண்ணியமா இருக்கட்டும் எங்களை அப்படி கூப்பிடாதீங்க*
~~~~~~~~~~~~~~~~~~~


"ஏன் டா மா நீ இன்னைக்கு ஸ்கூலுக்கு  போகலை ...?"
 "சார் இனிமே நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன் என்னை எல்லோரும் _*வெட்டியான் வீட்டு பிள்ளை*_ன்னு கிண்டல் பண்றாங்க நான் இனி போகமாட்டேங்க" . 

ஆமாங்க இது நான் மிகவும் மதிக்கும் மயானத்தில் பணிபுரியும் என் சகோதரி போன்ற வைரமணியின் பேத்தி தான் அந்த சிறுமி. பள்ளியில் இவங்க குடும்பத்தொழிலை சக மாணவர்கள்  ஏளனமாக பேசியது அந்த பிஞ்சு மனதில் அவ்வளவு காயத்தை உண்டாக்கி உள்ளது. 

_*விபரம் தெரியாத குழந்தைகள் மட்டும் இல்லைங்க விபரம் தெரிந்த படித்த மேதாவிகள் முதல் படிக்காதவர் வரை பலரும் இப்படித்தான் மரியாதை குறைவாக பிறர் மனதை புண் படுத்தி பேசுவதே நாகரிகமாக எண்ணி பெருமைபட்டுக்கொள்கிறார்கள்.*_

நீங்கள் யாரும் கவனித்து இருக்கீங்களா , ஏன் அதில் நீங்கள் கூட ஒருவராக இருந்திருக்கலாம் ,  மயானத்தில்  நாம் மதிக்கும் மாண்பான நம் குல வழக்கப்படி சடங்கு சம்பிரதாயங்கள் செய்கிறோம் ... ஒரு சடங்கு முடிந்ததும் அந்த  தொழிலாளியை  இறந்தவரின் உறவினர்கள்  அழைக்கும்  தோரணை இருக்கிறதே... மனித நேயம் உள்ளவர்கள் கண்டிப்பாக வருந்த கூடும்  . " எங்க டா அந்த வெட்டியானை வர சொல்லு .. எங்க டா போயிட்ட , என்ற உரத்த குரலில் கத்துவதும் , இல்லங்க சாமி இங்கே தானுங்க இருக்கேன் என்று  அந்த  மயான தொழிலாளி  தன் தோளில் இருந்த துண்டை தன் கையில் ஏந்தி கூனி நிற்பதும்  உனக்கு எவ்வளவு கூலி , ஐயா 3000 ங்க   என்று கூற ... இந்தா இவ்வளவு தான் இது போதும் என்று பேரம் பேசுவதற்கு கூட தகுதியற்றவர்களாக எண்ணி ஒன்றுக்கு பாதியாக கூலி கொடுத்து விரட்டிவிடும் நிகழ்வு நடந்து கொண்டு தான் இருக்கிறது.  அந்த கூலி கொடுப்பது கூட எப்படி என்று அனைவருக்கும் தெரியும். ஒரு வேட்டியை தரையில் விரித்து வைத்துக் கொண்டு அதில் அந்த பணத்தை தூக்கி போடுவார்கள் , அந்த மயான தொழிலாளி சற்று தள்ளி இருந்து வேட்டியில் இருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு செல்வார். 

அது சரி வெட்டியானை வெட்டியான்னு கூப்பிடாம எப்படி கூப்பிடுறது ன்னு உங்களுக்கு தோணலாம்... அவரின் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டு பெயர் சொல்லி அழைக்கலாமே... அதனால் அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள் தெரியுமா..!  நீங்கள் அவர்கள் பார்த்த வேலைக்கு தான் கூலி தருகிறீர்கள் , பிச்சை கிடையாது அதை மனதில் வைத்துக் கொண்டு அவர்கள் கையில் பணத்தை கொடுங்கள்... அப்படி பெரியவர்கள் நடந்து கொள்வதைப் பார்த்து சிறியவர்களும் அவர்களை மதிக்க கற்றுக் கொள்வார்கள் ..


மனித உடல்களை எரிப்பதற்கும் , அடக்கம் செய்வதற்கும் மட்டும் நாம் அவர்களை பயன் படுத்திக் கொள்வது இல்லை. எங்காவது இறந்து கிடக்கும் விலங்குகளை அகற்றவும் (மாடு, ஆடு, பூனை, நாய்) சாலை விபத்தால் இறந்த உடல்களை அகற்றவும், இரயிலில் அடிபட்டு இறந்த விலங்குகள் மற்றும் மனித உடல்களை அகற்றவும்  பயன் படுத்திக் கொள்கிறோம் . இதற்கு அவர்களுக்கு அளிக்கப்படுவது 100 லிருந்து 150 ரூபாய் மற்றும் ஒரு குவாட்டர் பாட்டில் சரக்கு அவ்வளவு தான்.

அது மட்டுமின்றி பிணவறைகளில் பிரேத பரிசோதனையில் உதவி செய்யவும் பல நாட்களாகப் பல மாதங்களாக யாராலும் வாங்கப்படாத உடல்களை நல்லடக்கம் செய்ய இன்னும் சில நேரங்களில் இயற்கை சீற்றத்தால் இறந்த உடல்களை எல்லாம் அகற்றவும்  நீரில் மூழ்கி இறந்து போன அழுகி கிடக்கும் சடலம் எடுப்பதும் என  பயன் படுத்திக் கொள்கிறோம் .

ஒரு கேள்வி? ஏன் பல தலைமுறைகளாக தொடர்ந்து ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களே இந்த தொழிலை செய்து கொண்டு வரவேண்டும்? ஒரு மயான தொழிலாளியின் மகன் ஏன் ஒரு மருத்துவராகவோ, மாவட்ட நிர்வாகியாகவோ, ஒரு மந்திரியாகவோ, ஒரு ஆகக் கூடாது. முதலமைச்சராகவோ ஏன் ஆகவில்லை? ஏன் அவர்கள் குடும்பம் சொந்த வீடு, நல்ல உணவு, நல்ல உடை என்ற ஒரு வாழ்க்கையை வாழ இயலவில்லை? கல்வி பெற அவர்களை நாம் அழைக்கும் அந்த பெயர் முட்டுக்கட்டையா?

ஆம் வெட்டியான் என்ற அந்த ஒற்றை வார்த்தையில் தான் அவர்களை ஒதுக்கியும் , ஒடுக்கியும்  முன்னேற விடாமல் மயானத்திற்குள்ளேயே வைத்து இருக்கிறோம் .  இந்த தொழிலுக்கு அவ்வளவு சுலபமாக யாரும் வந்து விட முடியாது , அந்த வேலையை செய்திடவும் முடியாது. இவர்கள் சமுதாயத்தில்  முன்னேறிவிட்டால் என்ன என்ன விபரீதம் நடக்கும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று .


ஒன்று தெரியுமா தாழ்த்தப்பட்ட இனத்தவர்கள் தான் இந்த மயான தொழிலாளர்கள் , ஆனால் இந்த தொழில் செய்வதால் சக தாழ்த்தப்பட்ட இனத்தவர்கள் அதாவது இவர்களுடைய உறவினர்களே  இவர்களிடம் நெருங்குவது இல்லை... எவ்வளவு பெரிய  சாபக்கேடு இது. 

ஒரு குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டால் அவருக்கு கொள்ளி வைப்பதை அவ்வளவு முக்கியத்துவமாக பார்க்கிறோம். ஆனால் கொள்ளி வைத்து முடித்ததும் அனைத்து உறவினரும் அங்கிருந்து சென்று விட்ட பிறகு , இந்த மயான தொழிலாளர் குடும்பத்தில் உள்ள பெண்கள் குழந்தைகள் என யாவரும் பிணத்தை சரியாக பார்த்து பார்த்து எரிப்பது யாருக்கு தெரியும். 

தொடர்ந்து பிணங்களை எரிப்பதால் அவர்களில் பலரும் சுவாச சம்பந்தமான நோய்வாய்ப்படுகிறார்கள்.  25 பிணம் எரிக்கும் தொழிலாளர்களில் ஒருவர் கண்டிப்பாக நுரையீரல் பாதிப்புக்குள்ளாகின்றார். பல காரணங்களுக்காக இறந்து போன உடல்களையும் சில சிதைந்து போன எரிந்து போன உடல்களையும் தகனம் செய்யும் போது இவர்கள் மன ரீதியான பாதிப்புக்குள்ளாவது எத்தனை பேருக்கு தெரியும் .

பிணம் எரிக்கும் தொழில் செய்யும் ஊழியர்களுக்கான பணி நியமனம், மாதச்சம்பளம், மருத்துவப் பரிசோதனை முறைகள், தடுப்பு ஊசிகள், எரிப்பதற்கான தற்காப்பு சாதனங்கள் பெறுவது போன்ற எதற்கும் இவர்களுக்கு வழி தெரியாது.


அரசு தரப்பில் 

அரசு தரப்பில் இவர்களுக்கான நலத்திட்டங்கள் என்று பார்த்தால் மிகவும் விரல்விட்டு எண்ணும் அளவிற்கே உள்ளது. நடைமுறையில் இத்திட்டங்கள் உள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம், திரு.ஸ்டாலின் அவர்கள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த போது சென்னை மாநகராட்சியில் நிரந்தரப் பணியில் இல்லாமல் தற்காலிகப் பணியில் இருந்த 173 பிணம் எரிக்கும் தொழிலாளிகளுக்கு ‘மயான உதவியாளர்கள்’ என்று பணிநியமனக் கடிதம் வழங்கப்பட்டது. மாதச் சம்பளமாக ரூ.5,000 வழங்குமாறும் பணி நியமனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இம்மயான உதவியாளர்களுக்கு சென்னை மாநகராட்சியில் பணிநியமனம் அளித்தது போல கூடிய விரைவில் தமிழகம் முழுவதும் கிராமங்களில் இருக்கும் பிணம் எரிக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்த 173 தொழிலாளர்களின் தற்போதைய நிலை என்ன என்பதுக் குறித்த சரியான விவரமும் தற்போது இல்லை. இதைத் தொடர்ந்து, “மயான பணியாளர்கள்  சங்கம்" என்று ஒரு சங்கம் நிறுவப்பட்டு அதன் முதல் மாநில அளவிலான மாநாடு, 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மதுரையில் நடந்தது . இம்மாநாட்டில், பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. மாத ஊதியம், வெட்டியான் என்ற பெயரை நீக்குவது ,  மயான  தொழில் செய்யும் பெண்களுக்கான பிரசவ கால உதவித்தொகை, மருத்துவக் காப்பீடு, தடுப்பூசிகள் போடுவது, மருத்துவ பரிசோதனைகள், மாற்றுத் தொழில் வழங்குவது போன்றவை.

ஆனால், அதற்குப் பின் அந்த சங்கத்தைப் பற்றியோ கோரிக்கைகள் பற்றியோ தொடர்ந்து செய்திகள் வரவில்லை என்பதே உண்மை. இத்தொழிலாளர்கள் பலருக்கு இச்சங்கத்தைப் பற்றியே தெரியவில்லை. இந்த மாநாடு அப்போது  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலவாரிய அமைச்சராக இருந்த திருமதி.ஏ. தமிழரசி அவர்களின் முன்னிலையில் நடந்தது என்பது கூடுதல் தகவல்.

அரசாங்கத்தில் வேலை பார்க்கும்  தலைமை பதவியில் இருப்பவரில் இருந்து கடை நிலை ஊழியர் வரை அனைவரும் சம்பளம் சார்ந்த மற்றும் சம்பளம் சாராத பல உதவியைப் பெறும் நிலையில், (மயானங்களில்) தலைமுறை தலைமுறையாக பணிபுரியும் ஊழியர்களில் நிலைதான் என்ன?  முதலில் சக மனிதர்கள் இவர்களையும் மனிதர்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறோமா ? 
மயானங்களைப் பராமரிப்பது, மயானங்களை ஏற்படுத்துவது, அரசாங்கம் மற்றும் அரசாங்கங்களின் பணி என்றால் மயான பணியாளர்களை நியமிப்பது அவர்களுக்கான சலுகைகள் வழங்குவதும் அரசாங்கத்தின் பணி தானே.



தலைமுறை தலைமுறையாக இப்பணியைச் செய்யும் தொழிலாளிகளின் இன்றைய தலைமுறையினருக்காக கல்வி உதவி, மாற்றுத் தொழிலுக்கான உதவிகளையும் அரசாங்கம் மனதில் கொள்ள வேண்டும் . பிணம் எரிப்பதைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பவர்களின் மனநிலை பாதித்து குடிப்பழக்கத்திற்குப் பலியாகாமல் இருக்க மனநிலை நிபுணர்களைக் கொண்டு சிறப்பு கலந்தாய்வு கூட வழங்கலாம் என்பது  என்னுடைய   தாழ்மையான வேண்டுகோள்.

ஐந்தறிவு படைத்த யானைகளுக்குப் புத்துணர்வு அளிக்கப் புத்துணர்வு முகாம் நடத்தும் போது, இறந்து போன நமது உறவினரையும் நமது நண்பர்களையும் நமது உற்றார்களையும் சீராக தகனம் செய்யும் நம் மயான தொழிலாள நண்பர்களுக்கான அனைத்து அடிப்படை மற்றும் நிதி வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்துவது நம்மைப்போன்று ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கடமை அல்லவா..! எங்கேயோ உலகத்தின் மூலையில் யாருக்கோ நடக்கும் அநீதி கண்டு சமூக ஊடகங்களில் பொங்கி எழும் இளைஞர்கள் இது போன்ற நம் வாழ்வியலில் கட்டாயம் இருக்க வேண்டிய இவர்களுக்காகவும் கொஞ்சம் நேரம் ஒதுக்கலாமே... இளைஞர்கள் தம் வீட்டில் உள்ள சிறு பிள்ளைகளுக்கு இது போன்றவர்கள் மனதை புண்படுத்தி பேசக்கூடாது என அறிவுறுத்தலாம். இளைஞர்கள் நினைத்தால் கண்டிப்பாக நல்ல மாற்றம் உருவாகும்...

இப்படி எல்லாம் எழுதி விட்டு அந்த மயான தொழிலாளி வைரமணி அவர்களிடம் கொண்டு போய் படித்து காட்டினால் , அந்த வைரமணி என்ன சொன்னாங்க தெரியுமா. 

" இத்தனை ஆண்டு காலம் எந்த மனிதர்களும் எங்க முகம் பார்த்து பேசியது இல்லை . ஊருக்குள்ள என்ன நடக்குதுனே தெரியாது , வரவங்க போறவங்க எல்லாம் எங்களை வெட்டியான் வெட்டியான்னு தான் கூப்பிடறாங்க அதுவே இன்னும் மாத்திக்க தெரியாத இந்த மனுசங்க தானா எங்களுக்கு இவ்வளவு உதவி செய்ய போறாங்க . எங்களை எல்லாம் முன்னேறவே விட மாட்டாங்க சார்  நீங்க ஏனுங்க சார் வெட்டியா இப்படி எழுதிட்டு உங்க நேரத்தை கெடுத்துட்டு இருக்கீங்க ,

( கோவை சங்கனூர் பகுதியில் உள்ளது மையானத்தில் பணிபுரியும் பழனியம்மாள் கூறுவதை கேளுங்க )




முதலில் அந்த வெட்டியான்னு சொல்றதை நிப்பாட்ட சொல்லுங்க சார் . நாங்களும் எங்க குழந்தைகளும் வருங்கால தலைமுறைகளும் நல்லா இருப்போம். உங்களுக்கு புண்ணியமா போகட்டும் "

இனி வெட்டியான்னு கூப்பிடாதிங்க...

~ ஈரநெஞ்சம் மகேந்திரன்

Tuesday, October 11, 2022

நம்ம ஊர் நாசா ஜெயலெட்சுமி பற்றி தெரியுமா

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் 
நம் தமிழ் நாட்டின் பெருமையை நாசா வரை கொண்டு சென்ற பெண் குழந்தையான ஜெயலட்சுமி...


பெண் குழந்தைகளுக்கான உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களுக்கான அதிகாரத்தைப் பெறவும், பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கவும்,  அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கவும் , அவர்களுக்கு நேரும் பிரச்சினைகளைத் தடுக்கவும்   அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில்   ஐக்கிய நாடுகள் சபை  2011-ம் ஆண்டு  தீர்மானத்தை நிறைவேற்றியது , அதன்படி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11-ம் நாள், ‘சர்வதேச பெண் குழந்தைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது.  

பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்பதை மையமாக கொண்டு இந்தநாளில் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த +2 தேர்வெழுதி நல்ல மதிப்பெண்கள் பெற்று கல்லூரி படிப்பை தொடரும் 18 வயதான ஜெயலட்சுமியை ஊக்கப்படுத்துவதற்கான ஒரு பதிவு ஆகும் 

ஆமாம் யார் இந்த ஜெயலட்சுமி ... 
பழுதடைந்த  வீடு,  குடும்பத்தை விட்டு வெளியேறிய பொறுப்பற்ற தந்தை ,  மனநிலை பாதித்த  தாய், தாயையும் கவனித்துக் கொண்டு  தன்னுடைய தம்பியின் கல்வி முதல் பாதுகாப்பு வரை பொறுப்பேற்று பெரும்  குடும்ப சுமை கொண்ட  பின்னணியில் வாழ்ந்து வரும்   மாணவி தான் ஜெயலட்சுமி.

வறுமையான குடும்ப பின்னணி இருந்தபோதும் ,  இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறாள் இச்சிறு பெண் ... 

மிக கடினமான  குடும்பச் சூழலில் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து, சர்வதேசத் தேர்வில் கலந்துகொண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா செல்லக் கடந்த ஆண்டு தேர்வானார் ஜெயலட்சுமி.   நாசா ஜெயலட்சுமி என இப்போது புதுக்கோட்டையே கொண்டாடுகிறது ...

நாசா சென்று வர பலரும் உதவ முன்வந்திருக்கின்றனர் .  ஒரு சமூக அமைப்பு ஜெயலட்சுமி யிடம்  "பாப்பா உனக்கு நாங்க பெருசா ஏதாவது செய்யணும் , என்ன வேணும் கேள் எதுவாக இருந்தாலும் நாங்க உனக்கு செய்கிறோம்" என்று வாக்கு கொடுத்தனர். 

அதற்கு ஜெயலட்சுமி கேட்ட உதவி என்ன தெரியுமா , "ஐயா எனக்கு இப்போதைக்கு நாசா சென்றுவர தேவையான உதவி கிடைத்து இருக்கிறது. ஆனால் எங்கள் ஊரில்  யார் வீட்டிலும் கழிப்பிட வசதி முறையாக இல்லை.  அதனால் எல்லோரும் மிகவும் சிரமப்படுகிறோம். முடிந்தால் எங்கள் ஊருக்குத் தேவையான கழிப்பிட வசதி செய்து கொடுங்கள்" என்று கேட்டு இருக்கிறாள். அந்த அமைப்பினர் அவளது இந்த வேண்டுகோளை எந்த மறுப்பும் தெரிவிக்காமல் ஏற்று, அவள் வசிக்கும் புதுக்கோட்டை அருகே இருக்கும் ஆதனங்கோட்டையில்  126 கழிப்பறைகள் கட்டிக் கொடுத்திருக்கின்றனர்.

இது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுங்களா :

'வறுமையிலும் செம்மை' காத்து, தனக்கென்று எதுவும் கேட்காமல் ஊருக்கான தேவையை கேட்டு பூர்த்தி செய்த அவளது மனித நேய குணத்தை  போற்றும் விதமாக 'கனவு மெய்ப்படும்' என்ற தலைப்பில் மகாராஷ்டிர மாநிலத்தில்  7ஆம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் ஜெயலட்சுமி  இடம்பெற்றிருக்கிறாள் . 

நம் நாசா ஜெயலட்சுமியின் குடும்ப வளர்ச்சிக்கு நம்மாலும் கூட உதவ முடியும்...

ஆமாம் அவளது அன்றாட குடும்பத் தேவைக்காக தினமும் மாலையில் மொத்தமாக முந்திரி பருப்பை வாங்கி சுத்தம் செய்து பாக்கெட்டுகளாக்கி விற்பனை செய்யும்  குடிசை தொழில் செய்து தான் தனது குடும்பத்தை கவனித்து வருகிறாள் சிறுமி ஜெயலட்சுமி .
 அவளது இந்த தொழிலை நாமும் ஊக்கப்படுத்தலாம் .

அதற்கு நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஜெயலட்சுமியின் அலைபேசியின்  +91 70948  16102  இந்த  எண்ணுக்கு அழைத்து நமக்கு தேவையான தரமான முந்திரி பருப்புகளை ஜெயலட்சுமியிடமே வாங்கி கொள்ளலாமே. சுயநலமாய்  யோசிக்காமல் சுயமாக சம்பாதித்து  வாழ்ந்து காட்டணும் என்ற வைராக்கியம் கொண்ட ஜெயலட்சுமிக்கு இது பெரிய உதவியாக இருக்கும் .

முந்திரி பருப்பிற்கு ஆர்டரை பதிவு செய்ய  ஜெயலட்சுமிக்கு கால் செய்யும் பொழுது அவளுக்கு வாழ்த்துச் சொல்ல மறந்துடாதிங்க .

நன்றி 

~ஈரநெஞ்சம் மகேந்திரன்

Sunday, October 09, 2022

தேசிய விளையாட்டு, தேச தந்தை பற்றிய உண்மை தெரியுமா..?

இந்தியாவின் தேசிய விளையாட்டு என்ன?
வடிவேலு படத்தின் மங்குனி அமைச்சர் போல கேள்வி கேட்கிறார்களே என்று நினைத்தேன். ஆனால்  இந்த கேள்விக்கு பதிலை ஆராயும்போது...

எனக்கு அதிர்ச்சி ஆக இருந்தது...
உங்களுக்கும் அதிர்ச்சியாக தான் இருக்கும். இது பற்றி நிறைய தகவல் சொல்கிறேன் .

ஹாக்கி  ( வளைதடிப் பந்தாட்டம் )  தான் இந்தியாவின் தேசிய விளையாட்டு என்பதை நாம் பள்ளிக்கு சென்ற காலத்தில் படித்திருக்கின்றோம் .


பொது அறிவு சம்மந்தப்பட்ட அனைத்து புத்தகத்திலும் இது உள்ளது. போட்டித் தேர்வுகளில் கூட, ஹாக்கி எங்கள் தேசிய விளையாட்டு என்பதே ஏற்றுக்கொள்ளப்பட்ட விடை.

ஆனால் அதெல்லாம் உண்மை இல்லை என்ற  இந்த பதிலை நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும் .

ஆமாம்  எந்தவொரு விளையாட்டையும் இந்திய தேசிய விளையாட்டு என்று அறிவிக்கவில்லை என தகவல் அறியும் உரிமை  சட்டத்தின் கீழ் இந்த கேள்விக்கு முன்னாள் மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் பதிலளித்துள்ளது.

ஹாக்கியை ஒரு தேசிய விளையாட்டு என்று இந்திய அரசு எப்போது அறிவித்தது என்று ஐஸ்வர்யா  என்ற சிறுமி பிரதமர் அலுவலகத்தில் கேட்ட கேள்விக்கு ,  ஆவணங்களில் இதுபோன்ற பதிவு எதுவும் கிடைக்கவில்லை என்று மத்திய இளைஞர் அமைச்சகத்தின்  செயலாளர்  பதிலளித்துள்ளார்.

"ஹாக்கி எங்கள் தேசிய விளையாட்டு என்று அமைச்சகத்தின் எந்தவொரு அதிகாரப்பூர்வ உத்தரவையும் அறிவிப்பையும் நான் காணவில்லை. இது பொதுவான விளையாட்டாக தான் அறியப்படுகிறது," என்று  கூறியுள்ளார்.

இதற்கு முன்பு,  ”தேசத்தந்தை” என காந்தியை அழைக்கலாம் என்று வெளியிடப்பட்ட அரசாணையைத் தனக்கு அளிக்குமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்திருந்தார் ஐஸ்வர்யா.

அதற்கு   அப்போதைய பிரதமர் அலுவலகம், இதுபற்றிக் கருத்து தெரிவிக்கத் தங்களிடம் எந்தத் தகுந்த பதிவுகளும் இல்லை என்று கூறி அந்த மனுவை உள்துறை அமைச்சகத்துக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது. அந்த மனு திரும்பவும் தேசிய ஆணை காப்பகத்துக்கு (National Archives of India) மாற்றப்பட்டது. ஆனால் அங்கும் அதற்கான எந்தப் பதிவுகளும் கிடைக்கவில்லை. ஆகவே காந்திக்கு ”தேசத்தந்தை” என்கிற பட்டம், இந்திய அரசால் வழங்கப்பட்ட தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தது மத்திய அரசு.

அதுமட்டுமில்லாமல் தேசிய ஆணைக்காப்பகத்தின் அப்போதைய உதவி இயக்குனர் காந்தியை மகாத்மா என்று அழைப்பதற்கான ஆவணம் எதுவும் கிடைக்கவில்லை என்று ஐஸ்வர்யாவுக்கு பதில் அளித்திருந்தார்.  

காந்தி தான் தேசத்தந்தை என்பதற்கு ஆவணங்கள் எதுவுமில்லை. அத்தோடு  ,  “ இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 18(1)-ன் படி இந்திய அரசால் யாருக்கும் எந்தவிதமாகவும் பட்டம் அளிக்க முடியாது. கல்வித்துறையைச் சார்ந்தவர்கள் மற்றும் இராணுவத்தினருக்கு மட்டுமே பட்டங்கள் வழங்க முடியும்” என்றும் ஐஸ்வர்யாவுடைய தகவல் அறியும் உரிமை மனுவுக்கு (RTI) மத்திய அரசு பதிலளித்திருக்கிறது. இதனால்  அரசு ஆவணங்களின்படி காந்திக்கு ”தேசத்தந்தை” என்கிற பெயரை இந்திய அரசு வழங்கவில்லை என்பதே உண்மை.

பின் எப்படி தேசத்தந்தை என்கிறோம்...
1944-ம் ஆண்டு சிங்கப்பூர் வானொலியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் மகாத்மா காந்தியைத் தேசத்தந்தை என்று அழைத்ததாக வரலாறு கூறுகிறது. அதுவே, தொடர்ந்து மக்கள் காந்தியைத் தேசத்தந்தை என அழைக்க வித்திட்டது...

உண்மை நிலை இதுதான்...

அந்தமான் செல்லுலார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த சாவர்க்கர், அங்கிருந்து புல் புல் பறவை மீது ஏறி சொந்த ஊருக்கு சென்று மீண்டும் யாருக்கும் தெரியாமல் சிறைக்கு சென்றுவிடுவார் என்று கர்நாடக மாநில 8ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிருப்பதை கண்ட நாம் ,
பாட புத்தகத்தில் எழுதியவரை விட்டுவிட்டு சாவர்க்கர் அவர்களையும் , பாவம்  புல்புல் பறவையை கூட விட்டு வைக்காமல் கிண்டலும் கேலியும் செய்தோம் . ஆனால் தேசிய விளையாட்டு ஹாக்கி என்றும் , தேசத்தந்தை மகாத்மா காந்தி என்றும் தேசத்தில் உள்ள அத்தனை கோடி பாடப்புத்தகங்களிலும் இருப்பதை கோடானுகோடி பேர் படித்து நடைமுறை படுத்தியிருக்கிறோம் .  சரி அதை விடுங்க இப்போ இதைப் பற்றி பேசினால் நான் அரசியல் பேசுறேன்னு சொல்லி சிலர் என்னை தாக்க ஓடிவந்து விடக்கூடும் .


நாம ஹாக்கி விளையாட்டுக்கு வருவோம் :

"இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி" என்ற வதந்தி எப்படி இந்தியா முழுவதும் பரவியது தெரியுமா ..?
1928 முதல் 1956 வரை இந்திய ஹாக்கியின் பொற்காலம் என்று சொல்லலாம் . அந்த காலக்கட்டத்தில் இந்தியா 6 தங்கம் தொடர்ந்து கைப்பற்றியது. அதற்கு மேலாகவும் கூட இருக்கும் .

அதன் கொண்டாட்டத்தில் நம் தேசம் முழுவதும் மூழ்கி இருந்தது. அந்த காலத்தில் ஹாக்கி க்கு இந்திய மக்களிடையே ஏக வரவேற்பு இருந்தது.  அதனால் இந்திய மக்கள் ஹாக்கி தான் தேசிய விளையாட்டு என்று தங்களுக்குள் பரப்பிக்கொண்டுள்ளனர். உண்மை என்னவென்றால்  இந்தியாவுக்கென்று தனியாக தேசிய விளையாட்டு என்ற ஒன்று கிடையாது .

இன்னொன்றும் இங்கே சொல்லிக் கொள்கிறேன்... இந்தியாவிற்கு என்று தனியாக தேசிய மொழியும் கிடையாது.

~ மகேந்திரன்

Tuesday, September 27, 2022

முடிவை தேடிக்கொள்ளதீர்கள்


நாம் தினமும்  இறைவனிடம் வேண்டிக்கொள்வது நானும் என்னை சுற்றி உள்ளவர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடும் எந்த துன்பமும் இல்லாமல் வாழவேண்டும் என்பதாகவே இருக்கிறது.

இப்படி அனுதினமும் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்வில் முன்னோக்கி பயணிக்கும் பொழுது... பரிட்சையில் தோல்வியடைந்தால் தற்கொலை , அவமானத்தால் தற்கொலை ,  காதல் தோல்வியால் தற்கொலை, கடன் சுமையால் தற்கொலை , பனிச் சுமையால் தற்கொலை , பொருளாதார நெருக்கடியால் தற்கொலை ,வரதட்சணை கொடுமை , உடல்நலம் பாதிப்பால்  தற்கொலை என்றும்  பலபல தற்கொலை சாவுகள் நம் முன்னே வந்து மனதை கலங்கடிக்கிறது...

  இதெல்லாம் ஒரு புறம் இருக்க இப்போது  உள்ள நவீன காலத்தில் மொபைல் விளையாட்டில் தோல்வியால் தற்கொலை , ரம்மி     விளையாட்டில் பணம் இழந்து தற்கொலை , சமீபத்தில் நாம் அனைவரும் செய்திகளில் பார்த்திருப்போம் குழந்தைகளை மையப்படுத்தி  Blue Whale Challenge", "Momo Challenge  விளையாட்டால்  தற்கொலைக்கு தூண்டப்பட்டு தற்கொலை .. தனக்குப் பிடித்த நடிகர் படம் ஓடாததால் தற்கொலை , பிடித்த விளையாட்டு அணி தோற்று விட்டது அதனால்  தற்கொலை   என்று அதிர்ச்சிகரமான  சில செய்திகள் அடிக்கடி நம் செவிக்குள் நுழைந்து இதயத்தை கலங்கவைத்து விடுகிறது.  

இப்படி ஓடியாடி விளையாடி மகிழும்  சின்னஞ்சிறுவர் முதல் ... மலையையே  தகர்த்து  சாதிக்கும்  இளம் பருவத்தினர் , குடும்பத்தை மேல்நோக்கி நகர்த்தி செல்லும் நடுத்தர வயதினர் என்று மகிழ்ச்சி ததும்பி வாழும் நம்மவர்களிடம்  அவமானம், துரோகம், பணம் இழப்பு, தாங்க முடியாத  உடல்வலி, தோல்வி என்று எத்தனையோ காரணங்கள் உள்  ஊடுருவி நான் இனி வாழக்கூடாது   தற்கொலை செய்யலாம் என்ற  முட்டாள்தனமான முடிவிற்கு வந்துவிடுகின்றனர். 


நன்கு வாழ்ந்து பக்குவப்பட்ட 70 வயதுக்கு மேற்பட்ட  முதிர்ந்த வயதினர்  கூட பிள்ளைகள் எங்களை கைவிட்டு விட்டனர்  வாழ்வு  தனிமைப் படுத்தி விட்டது போன்ற காரணங்களால் தற்கொலைக்கு தூண்டப் படுகின்றனர் . இது போன்ற  முதிர் தற்கொலை கூட இந்த காலக் கட்டத்தில் அதிகரிக்கத் துவங்கி விட்டது .

உலகில், ஒரு வருடத்தில் 8,00,000 தற்கொலைகள் நிகழ்கின்றன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஒவ்வொரு 40 நொடிக்கும் நாம் ஒரு உயிரை தற்கொலையினால் இழக்கின்றோம். தற்கொலை முயற்சிகளோ அதை விட 25 மடங்கு அதிகமாக இருக்கிறது . கடந்த 45 ஆண்டுகளில் தற்கொலை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. 15 முதல் 45 வயது வரை ஏற்படும் உயிரிழப்புகளுக்கு தற்கொலை ஒரு முக்கிய காரணம்.

நம்முடைய தாத்தா பாட்டி எல்லோரும் எத்தனையோ பஞ்சம் , பட்டினி, வறுமை வந்தபோதும் கூட அதை எதிர்த்து நின்று ஜெயிக்கும் மனவலிமையோடு போராடி வென்றிருக்கின்றனர் .
ஆனால், இன்றைய தலைமுறையினர் ஏன் இப்படி சின்ன விஷயங்களைக் கூட தாங்க முடியாத பூஞ்சை மனதோடு இருக்கின்றனர்..?!

  இயற்கையிலேயே நம் ஒவ்வொருவருக்குள்ளிலும் சவால்களை சமாளிக்கும் தன்மை புதைந்து கிடக்கிறது. பின் ஏன் இப்படிப் பட்ட தற்கொலை எண்ணங்கள்...
காரணங்களுள்  ஒன்று , நாம் பிள்ளைகளை வளர்க்கும் முறை சரியில்லை. சிறு தோல்வியைக் கூட தாங்கக்கூடிய மன உறுதி இன்றைய பிள்ளைகளிடம் இருப்பது இல்லை. கூட்டுக் குடும்பம் சிதைந்து தனிக் குடித்தனம் என்றான பின் குழந்தைகள் கைபேசியிலும் கணிணியிலும் மட்டுமே உலகை பார்க்கின்றனர்..  அது தவறு , 
உலகம் என்பது வேறு என எடுத்துக் கூற வயதில் மூத்தோர் இல்லை...

கைபேசியும், கணிணியும் மட்டுமே உலகம் இல்லை . அதன் மூலம் வரும் நண்பர்கள் மட்டுமே  நமக்கு உண்மையான மகிழ்ச்சிகளை கொடுப்பது இல்லை . சமூக வலைத்தளங்களில் பல விஷயங்களை பகிரும் நாம், நம்முடைய துக்கங்களையும், ஏமாற்றங்களையும் பகிர முடிகிறதா என்றால் இல்லை.


நம்மிடையே தற்கொலையை குறித்து சில தவறான புரிதல்கள் நிலவுகிறது.  தற்கொலை எண்ணம் என்பது பல்வேறு சூழலில், எல்லா வயதினருக்கும் ஏற்படக் கூடிய எண்ணமே‚ தற்கொலை முயற்சிகள் முன்னெச்சரிக்கை ஏதுமின்றி நிகழ்ந்து விடுவதில்லை. மன அழுத்தம் மட்டும் 90 சதவீத தற்கொலைகளுக்கு காரணமாகிறது. மது பழக்கத்தினால் தவறான முடிவுகளை தேடுகிறவர்கள் பலர். குடும்பத்தில் நெருங்கிய உறவினர்களை தற்கொலையால் இழந்தால், அவர்களுக்கும் அதே எண்ணம் ஏற்படுவதற்கான மரபணு சார்ந்த ஆபத்து உண்டு. இதைத்தவிர, உளவியல் ரீதியான பிரச்சனைகள் இன்றைய தலைமுறையினருக்கு அதிகம்.  இரவு, பகல் என்று மாறி, மாறி வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் சரியான நேரத்திற்கு, தேவையான அளவு தூங்க முடிவதில்லை. தொடர்ந்து சரியான தூக்கம் இல்லாவிட்டால், மன அழுத்தம் அதிகரித்து, தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவதாக ஆய்வு உறுதி செய்கிறது.

எப்பொழுதும் எதார்த்தமான  எண்ணங்களையே கையாள வேண்டும்  இல்லாவிட்டால் நம்மையும்
அறியாமல் ஏற்படும் மன அழுத்தம், காலப்போக்கில், பலவித உடல் பிரச்னைகளையும், எதிர்மறை எண்ணங்களையும் ஏற்படுத்தும். 

பிரச்னைகள் இல்லாத மனிதர்களே கிடையாது. ஆனால், சில சிக்கல்கள் நம் அன்றாட வாழ்க்கை முறையையே சிதைத்து, `என்னடா வாழ்க்கை இது’ என்ற விரக்தி ஏற்படுத்துகிறது , ஆயிரம் கோடி  கணக்கில் கடன் கட்ட முடியாதவர்கள் எல்லாம் ஓஹோ என்று தானே வாழ்கிறார்கள், கோடி கணக்கில் கொள்ளை அடித்தவர்கள் எல்லாம் அமோக அந்தஸ்தில் தானே ஊர்வலம் வருகிறார்கள்... சாதாரண அற்ப விஷயத்திற்கு எல்லாம் தன்னை மாய்த்துக் கொள்வது தவறு தானே  தற்கொலை எண்ணம் தோன்றும்  போது    தனக்கு நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களிடம்  மனக் குறையைச்  சொல்லிவிட வேண்டும். அல்லது இயற்கை சூழ்ந்த இடங்களுக்கு நமக்கு பிடித்த துணையுடன் சென்று வரவேண்டும்.  அதை விட்டுவிட்டு எதிர்மறை எண்ணங்களை மனதில் சுமந்து கொண்டு இருந்தால்  பேராபத்து நிச்சயம். இந்தப் பிரபஞ்சத்தில் லட்சக்கணக்கான வாய்ப்புகள் கிடக்கிறது , அதையெல்லாம் சிந்தித்து நம்முடைய பிரச்னைகள் எதுவாக இருப்பினும் அதற்கு மாற்றுத் தீர்வுகளை ஆராய வேண்டும் . 

தற்கொலை செய்து கொள்பவர்களிடம் ஏற்படும் மாற்றங்கள் :

பதற்றத்தை உண்டாக்கும் வகையில் ஒரு தற்கொலைச் செய்தியைக் கேள்விப்படும் போது  , அடுத்த இரண்டு வாரங்களில் அதே மாதிரியான சூழலில் 13 சதவிகித தற்கொலைகள் அதிகரிக்கும் என்கிறது முக்கியமான புள்ளி விவரம் ஒன்று. அதாவது இந்த விஷயம் சிலரின் மனதில் எதிர்மறையான எண்ணங்களை உண்டாக்கும். பொதுவாக எந்த ஒரு தற்கொலைச் செய்தியாக இருந்தாலும், அவர்கள் எப்படி இந்தத் துயர முடிவைத் தேடிக்கொண்டனர் என்பதை ஆராய துவங்கி விடுகிறார்கள் .


சரியாக தூங்க மாட்டார்கள் 
சரியாகச் சாப்பிடாமல் இருப்பது அல்லது அதிகம் சாப்பிடுவார்கள் 
எதிலும் ஈடுபாடு இல்லாமல்இருப்பார்கள் .
கடவுளே கதி என்று இருப்பவர்கள்  கடவுள் நம்பிக்கை இழந்து காணப்படுவார்கள் .
வழக்கத்துக்கு மாறாகக் குணநலன்களில் இருப்பார்கள் 
அதிக கோபப்படுவார்கள் .
தனிமையை தேடுவார்கள் 
தடாலடியாக முடிவெடுப்பார்கள் .



தற்கொலை எண்ணம் கொண்டவர்கள்   பிரச்னையை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தி உதவி கேட்கும் பொழுது     அவர்கள் மனம் முழுமையாக நம்பிக்கைக்குரியவராகிய நாம்  , அந்த நபருக்குத் தற்கொலை எண்ணம் ஏன் வந்தது என்பதையும், அவரின் உணர்வுகளையும் முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும்.அவர்கள் தற்கொலை எண்ணம் கொண்டிருப்பதை  அறிய வெளிப்படையாக பேசிவிட வேண்டும் . நாம் தற்கொலைப் பற்றி பேசுவதால் ஒருவர் தற்கொலைக்கு தூண்டப்படுவாரோ என்ற பயம் இருக்க கூடாது . அவருக்கு இருப்பது பணம், பொருள், படிப்பு, உடல், மனம், வேலை என எது சம்பந்தப்பட்ட பிரச்னையாகவும் இருக்கலாம். அந்தச் சிக்கல் லாஜிக் ஆனது அல்லது லாஜிக் இல்லாதது என ஆராய்வதை விட்டு அவரை நாம் முழுமையாகப் புரிந்துகொண்ட உணர்வுடன், `உனக்கு நான் பக்கபலமா இருக்கேன்' என்ற நம்பிக்கையை அவரது மனதில் ஆழமாக விதைக்க வேண்டும். பக்க பலமாக இருக்க வேண்டும்.

பின்னர், சம்பந்தப்பட்ட நபரின் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கான எல்லாவிதமான ஆலோசனைகளையும் எடுத்து கூற வேண்டும்.   . நம்முடைய அணுகுமுறையில்  அவர்கள்  எமோஷனல் ஆகாமல் நம்பிக்கையுடன் முடிவெடுக்கும் தன்மைக்கு மாற்றிவிடலாம் , அதன் பிறகு இயல்புநிலைக்குத் திரும்பி, தற்கொலை எண்ணத்திலிருந்து அவரே விடுபட்டுவிடுவார்கள்  . அதுவும் கை  கொடுக்காத நிலையில்  அதீத மன அழுத்தத்தில் இருக்கும் அவர்களை ,  மனநல ஆலோசகரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் .  அவர்களை நாம் கையாளும் பொழுது அவர்களுக்கு எந்தவித அவமான எண்ணத்தையும் கொண்டு சேர்த்து விட கூடாது.



சட்டத்தின் பார்வையில், தற்கொலை முயற்சி குற்றமாக பார்க்கப்பட்ட காலம் இப்போது இல்லை , அது சிகிச்சை தரப்பட வேண்டிய மனரீதியான சிக்கல் என்றே கருதப்படுகிறது.  தற்கொலை தடுக்கப்படக் கூடிய ஒன்றுதான். நம்பிக்கையும் ஒற்றுமையும் தான்  தற்கொலையின் எண்ணிக்கையையும், தாக்கத்தையும் குறைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை 

அனைவருமே  சாதிக்க பிறந்தவர்கள் ; தற்கொலை செய்துகொள்ள அல்ல
தற்கொலை என்பது சமூகம் செய்யும் கொலை என்பதே என் கருத்து.



தற்கொலைப் பற்றிய விழிப்புணர்வை, நம்  சமூக வட்டத்தில் ஏற்படுத்த வேண்டும்.. 
தற்கொலை தடுக்க  இலவச ஆலோசனை மையம் எல்லா இடத்திலும் இருக்க வேண்டும்.
எந்த நிலையிலிலும் நம்முடைய சொல் ஒருவருடைய மனதை பாதித்து விட கூடாது.

உனக்கு நான் இருக்கிறேன் 
உன் வாழ்க்கை இருட்டல்ல என்று அவர்களுக்கு நம்பிக்கை ஒளி காட்ட வேண்டும்.

~ ஈரநெஞ்சம் மகேந்திரன்

Saturday, September 24, 2022

இவர்களை தேடி பார்த்து வியாபாரம் பண்ணனும்

நேத்து நைட்டு வீட்டுக்கு திரும்புறப்ப இந்த அம்மா விக்கிறதுக்கு வச்சிருந்த எல்லா காய்கறியுமே நான் வாங்கிட்டேன் வெறும் 200 ரூபாய் தான்...
நான் அந்த பக்கமா போறப்ப காய்கறியவே வெறிச்சுப் பார்த்துக்கிட்டு உட்கார்ந்து இருந்தாங்க அவங்க... ஒருத்தரும் இவங்ககிட்ட வந்து காய் வாங்கல போல... 😒

இந்த 200 ரூபாயில அந்த அம்மாக்கு அப்படி என்ன லாபம் கிடைச்சிடும்..?!




கடைசியா அந்த அம்மா, "பசிக்குது தம்பி, அந்தக் கடையில இந்த காசுல ஒரு டீ வாங்கி குடுத்துட்டு போங்க ப்பா" ன்னு சொல்லி நான் குடுத்த அந்த ரெண்டு நூறு ரூபா நோட்டுல இருந்து ஒரு நோட்ட எடுத்து குடுத்தாங்க...


"ஏனுங்க பாட்டி வேற காசு இல்லையா"ன்னு கேட்டேன்...

" அட போங்க தம்பி ... நீங்க வேற , இந்த காசுக்காக தான் சாயங்காலம் 5 மணியில இருந்து இங்கன தேமேன்னு உட்கார்ந்து இருக்கேன்"னு சொல்லுச்சு பாருங்க...

நெஞ்சு பாரமானாலும், இந்த அம்மா வச்சிருந்த காய் எல்லாத்தையும் மொத்தமா வாங்குனது என்னமோ பெரிய சாதனை  செஞ்சது போல இருந்துச்சி எனக்கு ...

அதே சந்தோஷத்துல காசு வேணாங்க பாட்டின்னு இதை நீங்களே வெச்சுக்கோங்கனு சொல்லிட்டு அந்த பாட்டிக்கு டிபன் வாங்கி கொடுத்துட்டு என்னை அறியாமலேயே எனக்குள்ள ஒரு கம்பீர நடை போட்டுட்டு வந்தேன்.

Sunday, May 29, 2022

இன்று மே-28 உலக பட்டினி தினம் ...

இன்று மே-28 உலக  பட்டினி தினம் ...
இன்று எனக்கு நேர்ந்த  ஒரு அனுபவத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்துக்கொள்ள விருப்பப்படுகிறேன் . இது ஒரு விழிப்புணர்வு  பதிவாகவும் இருக்கும் என்றே நினைக்கிறேன் .

இன்று மாலை 5 மணிக்கு என் பணி முடிந்து வீட்டிற்கு செல்ல  வெளியே வந்ததும் நான் அதிரும் படியான, அருவெறுப்பான ஒரு காட்சியை பார்க்க நேர்ந்தது.

 என் எதிரே இருந்த குப்பை  தொட்டியில் கிடந்த எச்சில் இலையில் இருந்த உணவுகளை ஒருவர்  வழித்து வழித்து எடுத்து அந்த  குப்பை  தொட்டிக்கு   அருகே கீழே அமர்ந்து இருந்த தன் மனைவிக்கு கொடுத்து தானும் அந்த எச்சில் உணவை உண்ணும்   காட்சியை கண்டு என் மனமும் கண்களும் கலங்கியது .

அவர்கள் அந்த உணவை உண்ணும்  அதே நேரத்தில்   தெரு நாய் ஒன்று அந்த குப்பை தொட்டிக்குள் தாவி குதித்து எதையோ  திங்க ஆரம்பித்தது. நாயும் மனிதனும் ஒரே குப்பை தொட்டியில் உணவிற்கு போட்டி போட்டு கொண்டு ...
ஐயோ ..!
என்ன கொடுமை இது..!

அந்தக் காட்சியை கண்டதும் என் கண்களும் , கால்களும், மனமும் அந்த இடத்தை விட்டு நகர வில்லை...
 அடுத்த நொடி  என்னை அறியாமலேயே  வாய் விட்டு  கத்தி விட்டேன் "ஐயா இங்கே வாங்க அங்கே என்ன செய்யறீங்க" என்று . என் குரலைக் கேட்டதும் அந்த வழியில் சென்றவர்கள் எல்லோரும் திரும்பி பார்க்கும்படி ஆகிவிட்டது.  நான் இவரைத்
 தான் கூப்பிடுகிறேன் என்று தெரிந்ததும் அவரவர் அவர்களது போக்கில் செல்ல ஆரம்பித்து விட்டனர் . அந்த நாயும் ஓட்டம் பிடித்துவிட்டது  . 

ஆனால் , குப்பைத் தொட்டியில் உணவை எடுத்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர் மட்டும் திரும்பவே இல்லை. மீண்டும் அவரருகே சென்று "என்ன செய்யறீங்க இங்கே" என்று கேட்டதும் அவர் தன் தலையை கவிழ்த்தி அழ ஆரம்பித்துவிட்டார் . "பசிக்கின்றதா" என்றேன் "ஆமாம் " என்றார் . 
"என்னோடு வரிங்களா உங்களுக்கு சாப்பாடு வாங்கி தரேன்" என்றதும் மௌனமாகவே நின்றார். அவர் முதுகில் லேசாக தட்டி 'வாங்க போகலாம் , வண்டியில் ஏறுங்க" என்றேன். கண்கள் கலங்கியவாறே வண்டியில் ஏறிக்கொண்டார்.

அடுத்த தெருவில் ஒரு அசைவ உணவகம் இருந்தது. உள்ளே நான் செல்ல அவர் உள்ளே வராமல் வெளியவே நின்றார். "அட வாங்க அண்ணே... உள்ள போகலாம்" என்றேன். அவர் கண்கலங்கியவாறே என்னை பின் தொடர்ந்து உள்ளே வந்தார். உள்ளே வந்தவர் தரையில் உட்கார "டேபிளில் உட்காருங்க" என்று நான்  சொன்னேன். அந்த டேபிள் சர்வர் என்னிடம், "அண்ணே அவரை இங்கே உட்கார சொல்லாதீங்க வெளியவே நிற்க சொல்லுங்க . அவர் உடை உடல் எல்லாம் எவ்வளவு அழுக்காக இருக்கு பாருங்க , மற்ற வாடிக்கையாளர்கள் இவரை பார்த்தால் சங்கடப்படுவார்கள்" என்றார். எனக்கு அந்த சர்வர் சொன்னதை கேட்டதும் கோபம் வந்தது . 

அங்கு நடந்ததை பார்த்துக்கொண்டு அதே டேபிளில்  அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மற்றொரு வாடிக்கையாளர்  , அந்த சர்வரிடம், "பரவாயில்லை அவரை சாப்பிட சொல்லுங்க. நான் ஒன்றும் சொல்ல மாட்டேன்"  என்றார். 
ஒருவழியாக அவருக்கு சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தேன். சுட சுட  வந்த பிரியாணியை இலையில்  போட்டு அந்த சர்வர் பரிமாற ஆரம்பித்தார். கண்ணில் கண்ணீர் வழிய துடைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பிக்கும் முன் தயக்கத்துடன் "ஐயா,  என் மனைவியும் பட்டினியா இருக்கா" ... என்றார் . சர்வரிடம் இன்னொரு சிக்கன் பிரியாணி பார்சல் சொல்லி விட்டேன். நீங்க சாப்பிட்டு போகும் போது அவங்களுக்கு எடுத்துட்டுப் போயிடலாம்." என்றேன். அவர் கண்களில் கண்ணீர் நிற்கவே இல்லை. துடைத்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தார். பில் வந்தது ஒரு பிரியாணி 90  இரண்டு பிரியாணிக்கு 180 என்று இருந்தது .

நான் பணம் எடுத்து கொடுக்கும் முன் அருகில் சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்த நபர் "அண்ணா ஒரு பிரியாணிக்கு நான் பணம் கொடுத்துவிடுகிறேன்" என்று 90 ரூபாயை கொடுத்துவிட்டு சென்றார் . நான்  மீதம் 90 ரூபாயை எடுத்து கவுண்டரில் கொடுக்கவும் அந்த உணவகத்தில் உள்ள கேஷியர், "40 ரூபாய் மட்டும் கொடுங்க அண்ணா . அடுத்தவர் பசியை தீர்க்கும் உங்கள் இந்த பணியில் எங்கள் பங்காக மீதியை நாங்கள் கழித்து கொள்கிறோம் " என்றார். 

 ஒருவரது பசியை போக்குவதில் எவ்வளவு சந்தோசம் நிறைந்து இருக்கிறது என்று , அந்த கேஷியர் என் முன்னே மற்றவரிடம் சொல்லும் போது அவர் முகத்தில் 100 வாட்ஸ் பல்ப் எரிந்தது. 

இன்று உலக பட்டினி தினம் இந்த நாளில் நான் முன்னெடுத்த இந்த சிறிய பணியில்  என்னோடு கைகோர்த்து வந்த அவர்களை  கட்டாயம் என்னால் எப்போதும்...  ஏன் உங்களாலும் கூட மறக்க முடியாது. 

இது போன்று நிகழ்வை குறும்படங்களில்  பார்த்து இருக்கின்றேன். ஆனால் அது எல்லாமே நடிகர்கள் நடிப்பில் எடுக்கப்பட்ட காட்சியாக இருக்கும் . ஆனால் என் நிஜ வாழ்வில் நடந்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் கொடுத்திருக்கிறது.

மனிதம் இன்னும் மரித்து விடவில்லை... இது போன்ற சிலரின் வடிவில் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. 

தனியொரு மனிதனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம் ! இது பாரதியின் வரிகள். இதன் அர்த்தம் நமக்கு புரிந்தால் மட்டும் போதாது. நம் அடுத்த தலைமுறைக்கு , அதாவது நம் பிள்ளைகளுக்கு, பேர பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுப்போம்.

நம் திருவள்ளுவர் எழுதிய குறள் ஒன்று உங்கள் பார்வைக்காக இங்கே தருகிறேன்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

அதன் பொருள் :-
பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது. அதுவே, நாம் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்ப நாம் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்.

-ஈரநெஞ்சம் மகேந்திரன்.

Tuesday, March 22, 2022

கொரோனா Vs ஹர்ஷினி

கோவை கணபதியில் சாலையோரம் தள்ளுவண்டியில் பானிபூரி கடை நடத்தும் தபசுராஜ் , கொண்டம்மாள் தம்பதியினர். இந்த தம்பதியினரின் மூத்த மகள் ஹர்ஷினி கோவை ராம்நகர் சபர்பன் மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறாள் . 5 ஆம் வகுப்புவரை படிப்பில் முதல் மாணவியாகத் திகழ்ந்து வந்தாள் . ஆறாம் வகுப்பு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்றபின் பள்ளியில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் கொண்டு கராத்தே , கபடி, மாரத்தான் போன்றப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். அது மட்டும் இல்லாமல் கட்டுரைப் போட்டி பேச்சுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பல பரிசுகளும் குவித்தாள் . விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் மிகுந்ததால் படிப்பில் நாட்டம் குறைந்து மந்த நிலை ஏற்பட்டது. இருந்தாலும் இவருடைய பெற்றோர் மகள் மீது நம்பிக்கை வைத்துப் படிப்பில் ஆர்வம் குறைந்ததைப் பெரிது படுத்திக் கொள்ளவில்லை .


இந்நிலையில் கொரோனா தொற்று 2020  ஆம் ஆண்டுத் துவங்கவே அடுத்த இரண்டு வருடங்கள் முழு அடைப்பு போன்ற காரணங்களால் பள்ளி செல்லாமல் இணையவழிக் கல்வி மட்டுமே இருந்தது. இணையவழிக் கல்வியில் புரிதல் இல்லாத நிலை  ஏற்படவே விளையாட்டுப் பிள்ளையான ஹர்ஷினி பொறுப்பற்று தன் போக்கிலிருந்து வந்திருக்கிறார்.  இவளுக்கு மிகவும் ஆர்வமான விளையாட்டுப் போட்டிகள் எதிலும் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள முடியாத நிலை உருவானதோடு படிப்பும் சரிவர ஏறவில்லை .

ஊரடங்கு உத்தரவு காரணமாக தர்ஷினியின் தந்தையால் பானிப்பூரிக் கடை போட முடியாத நிலை ஏற்படவும் ஏற்கனவே வறுமையிலிருந்த இவர்களுக்கு மேலும் வறுமையும், கடன் சுமையும் ஏற்பட்டு வீட்டு வாடகை கூடக் கொடுக்க முடியாத நிலையில் தவித்தனர். கடன் காரர்களுக்குக் கடன் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையும் சேர்ந்து , வறுமையின் உச்சநிலைக்கு தள்ளப்பட்டு நிலைகுலைந்தது குடும்ப பொருளாதாரம் .

இந்த நிலைப்பாட்டை கவனித்து வந்த ஹர்ஷினி சோர்ந்து இருந்த தனது தந்தையிடம் ,  "கடை திறக்க முடியவில்லை என்றால் நமக்குப் பணம் கிடைக்காதா அப்பா எதனால் இந்த நிலை?", என்று கேட்டாள். தபசு தன் மகளிடம் , "உலகமே கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப் பட்டிருக்கிறது, இதனால் உலகமெங்கும் ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது, கிருமித் தொற்று என்றால் என்ன என்றுகூட அறியாத பாமர மக்கள் ஊரடங்கால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர், வீதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லை , கடைகள் மூடப்பட்டுள்ளது , தினசரி வருவாய் இழந்து தவித்துவருபவர்களில் நம் குடும்பமும் ஒன்று . வீட்டிலேயே முடங்க வேண்டிய நிலையில் சேமித்து வைத்த சிறு துளியும் கரைந்து விட்டது , இந்த இக்கட்டான சூழலிலிருந்து எப்படி மீளப்போகிறோம்னு புரியல. உங்களை எப்படிக் காப்பாற்றப் போகிறேன்னு தெரியல. இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த நிலையோ?!", என்று விளக்கத்தோடு தன் மனக்குமுறலை கொட்டியிருக்கிறார் .

பள்ளி விடுப்பு என்ற ஒரே சந்தோஷத்திலிருந்து வந்த ஹர்ஷினி , தந்தையின் மனக்கவலையை உணருகிறாள். தன் தாய் தந்தையரின் ஆற்றாமை நிலையைக் கவனிக்க ஆரம்பித்து , தன் அறியாமையை உணர துவங்கினாள் .

தன் மாற்றமே தனக்கும் , தனது குடும்பத்தின் உயர்வுக்கும் வழி என உணர்ந்து என்ன செய்யலாம் என்ற முயற்சியில் இறங்கினாள் .

மீதம் இருந்த விடுமுறை நாட்களில் கண்ணில் படும் பழைய தினசரி நாளிதழ்களை எல்லாம் வாசிக்கிறாள் . வாசிப்பை நேசிக்கவும் ஆரம்பிக்கிறாள்.. வாசிப்புப் பழக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுப்படுத்திக் கொள்கிறாள்.. தினசரி ஆங்கிலம் , தமிழ் ஏடுகள் தொடங்கி மாத வாரச் சஞ்சிகைகள் வரை படித்துக் குறிப்பு எடுத்து செய்தி வாசிக்கக் கற்றுக் கொண்டாள் .

இந்த வருடம் 2021- 2022 கொரோனா தொற்று சற்று குறையவே பள்ளிகள் திறந்ததும் புது வித மனநிலையோடு மீண்டும் தனது பள்ளிப் படிப்பைத் துவங்க , புது எழுச்சியுடன் பள்ளிக்கு உற்சாகமாகச்  செல்ல துவங்கினாள் . படிப்பில் ஆர்வம் குறைந்து இருந்த ஹர்ஷினி தற்போது தனது வகுப்பில் முதல் மாணவியாக எல்லாப் பாடங்களில் 80 சதவிகித மதிப்பெண் பெற்று வருகிறாள்.

ஒருமுறை தன் ஆசிரியரிடம் தினமும் நான் என் சக மாணவர்களுக்கு நான் படித்த அன்றாடச் செய்திகளைப் பகிர நினைக்கிறேன் என்று தனது ஆர்வத்தைத் தெரிவிக்கவும், தினமும் காலை பிரேயர் நேரத்தில் செய்திகளை வாசிக்க ஆசிரியரும் அனுமதிக்கிறார்.

ஹர்ஷினி செய்திகளைத் தெள்ளத் தெளிவான உச்சரிப்புடன் வாசிப்பதைக் கண்டு ஆசிரியர்கள் , மாணவர்கள் மிகுந்த ஆச்சரியமும் வியப்பும் பெருமையும் கொண்டு , நமது பள்ளிக்கு இது பெருமை சேர்க்கும்படி உள்ளது என்று பாராட்டி வருகின்றனர்.
அது மட்டும் இல்லாமல் தற்போது பள்ளியில் நடத்தப்படும் பேச்சு போட்டி, கதை கட்டுரைப் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து பரிசுகளையும் பெற்று வருகிறாள். தன்னைத் தானே மேலும் மெருகேற்றி தன் திறமைகளை மிளிரச் செய்து கொண்டு வருகிறாள்


தமிழ் நாட்டின் முன்னணி தினசரி, தினமணி நாளிதழில் பாரதியார் பாடல்கள் போட்டியில் "இரண்டாம் பரிசு" பெற்றாள். தினத்தந்தி நாளிதழில் கொரோனா பற்றிய இவளது கவிதை வெளியானது அவளின் எழுத்துப் பணியை மேலும் சிறக்கச் செய்துள்ளது . தானும் வளர்ந்து தன் சுற்றுச்சூழலையும் சரி செய்ய எண்ணிய ஹர்ஷினி,
தான் சந்திக்கும் பிரச்சினைகளை  தினமலர் நாளிதழுக்கு எழுதிச் சம்மந்தப்பட்டவர்கள் கவனத்திற்குக் கொண்டு சென்று பிரச்சினைகளையும் களைவது குறிப்பிடத் தக்கது.

தற்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இந்த இளம் வயதில் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம் செய்து   தனது பேச்சுத் திறமையை வெளிப்படுத்தியது, அந்த பகுதி  மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுத் தந்தது மட்டும் இல்லாமல் சம்பந்தப் பட்ட வேட்பாளருக்கு கூடுதல் வாக்குகளும் கிடைத்தது .

இதெல்லாம் போக விடியற்காலை எழுந்து தனது தந்தைக்கு உதவியாகக் காய் வெட்டி கொடுப்பதும், மதிய உணவை வித விதமாகச் சமைக்கச்  செய்தும் தனது குடும்பத்தினரை மிகக் குறுகிய காலத்தில் பெரும் நம்பிக்கை அடையச் செய்து உள்ளார்.

இந்தக் கொரோனா நம்மிடையே எவ்வளவோ அழிவுகளை ஏற்படுத்தி உள்ளது என்றாலும், ஹர்ஷினியின் குடும்பத்திலும் ஹர்ஷினியின் மனதிலும்  நம்பிக்கை விளக்கை ஏற்றி உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை...

~ ஈரநெஞ்சம் மகேந்திரன்

Tuesday, March 08, 2022

தமிழினி புலனக்குழு மகளிர்தின சிறப்புப் போட்டி 5 -ன் முடிவுகள்:

நான் மதிப்பும்  மரியாதையும் கொண்டிருக்கும் தமிழினி குழும நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
என்னை மகளிர் தின சிறப்பு போட்டிக்கு நடுவராகத் தேர்வு செய்தமைக்கு நன்றிதனை தெரிவித்துக்கொள்கிறேன்!

நம் மனதைக் கவர்ந்த காட்சிகளை, நம்மோடு சேர்ந்து பயணிக்க வைப்பது நாம்  எடுக்கும் சில  புகந்தைகள்  (போட்டோகிராப்) தான்.  குகைகளில் ஓவியமாகவும், பாறைகளில் சித்திரமாகவும்,  பிறந்த புகைப்படங்கள் இன்று பரிணாம வளர்ச்சி பெற்று தாமி (செல்ஃபி) வரை வளர்ந்து இருக்கிறது.5ம் நூற்றாண்டு தொடங்கி இன்று கை பேசி காலம் வரை நிறைய,  அழகிய, அற்புதமான, ஆச்சரியமூட்டும், விசித்திரமான படங்களை இந்த உலகம் தன் செருகேட்டில் (ஆல்பம் ) சேர்த்து வைத்திருக்கிறது. 

கைக்குள் உலகத்தைக் கைப்பேசி கொண்டுவந்து சேர்க்கிறது. அந்த கைப்பேசி நாம் அனைவரையும் ஒரு சிறந்த புகைப்படக்காரர்களாகவும்  உருவாக்கிக் கொண்டிருக்கிறது  என்பதுக்குச் சான்று நாம் எடுக்கும் படங்கள்.  

சாதாரண மழைத் துளியின் அழகை அசாதாரண அழகாகக் காட்டும் வல்லமை கொண்டது புகைப்படக் கருவிகள். கருவிகளைக் கலைநயம் மிக்க ஒன்றாய் மாற்றும் திறன் கலைஞனுக்கே உண்டு.

நாம் காணும் காட்சிகளுக்கும் மனதுக்கும் எப்படி நெருங்கிய தொடர்பு உண்டோ அது போலத் தான் நாம் பதிவு செய்யும் புகைப்படங்களும். 
சில படங்கள் மனதை லேசாக்கும்,   (இயற்கைக் காட்சிகள்) சில படங்கள் நகைச்சுவையாக இருக்கும், சில படங்கள் முக சுளிப்பைத் தரும், சில கோவத்தைத் தூண்டும்.  இப்படி நம் உணர்வுகள், நாம் காணும் கட்சியைப் பொறுத்து இருக்கிறது. காண்பதை எல்லாம் அழகாகக் காட்டும் அதிசய கண்ணாடியை  கைக்குள் வைத்திருக்கும் நாம், பார்க்கும் காட்சியை நல்ல ரசனையோடும் இருக்கும் நவீன நுட்பத்தைப் பயன் படுத்தி வித்தியாசமாகக் காட்ட முயற்சி செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

குழுவில் பதியயப்பட்ட படங்களைப் பார்க்கும் போது, ஆகா! சிறப்பு! அருமை!  என்று இருந்தது,  சிலவற்றைப் பார்க்கும் போது இன்னும் சிறப்பாக எடுத்து இருக்கலாமோ எனத் தோன்றியது. ஒரே மாதிரி படங்கள், பழைய படங்களைத் தவிர்த்தால்  மேன்மேலும் போட்டியை மெருகேற்றியிருக்கும்.
போட்டிக்கான படங்களில் என் பார்வை கோணத்தில் மதிப்பிட்டுத் தேர்வு செய்திருக்கிறேன். சிறந்தவைகளில்  சிறந்ததைத் தேர்வு செய்வது கடினம்தான் என்றாலும்  சில விஷயங்களைக் கருத்தில் கொண்டு தேர்வு செய்து உள்ளேன்.
ரசிகனே சிறந்த கலைஞன்.

ஒரு எதார்த்தமான நிகழ்வை   மாற்றுக்கோணத்தில் மிக துள்ளியமாக படம் பிடித்து காட்டுவது என்பது ஒரு கலைஞனின் திறமை. அவ்வாறு நான் ரசித்த புகைப்படங்களை உங்கள் முன்  வைக்கிறேன்.



.... 
இதிலிருந்து  பரிசுகளுக்கான படங்கள்  தேர்வு செய்து உள்ளேன் .



முதல் பரிசு:
திருமதி ரஞ்சிதப்ரியா



இரண்டாம் பரிசு (இருவருக்கு)

1. திருமதி. கல்யாணி நாகேஷ்வரன்,

2. திருமதி.ஜெஸிந்தா


மூன்றாம் பரிசு:
திருமதி மரு. தமயந்தி முரளி
.....

சில புகைப்படங்கள் வரலாற்றையே மாற்றி உள்ளது . கோபம் , க்ரோதம் , வன்மம் போன்ற குணங்களை மாற்றக்கூடிய சக்தி புகைப்படங்களுக்கு  உள்ளது. ஆகையால் நாம் எடுக்கும் புகைப்படம் மற்றவர்களை மகிழ்விப்பதோடும், மலர்ச்சிப்பதோடும், மனதோடு பேசும்படியும் இருக்க வேண்டும். மனதை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும்.

இங்கு உள்ள அனைவருமே ஆர்வமிக்கவர்கள் தான் , ஆனால் நீங்கள் உங்கள் எழுத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றிர்களோ அவ்வளவு முக்கியத்துவம் புகைப்படம் எடுப்பதிலும் காட்டினால் கவிஞர்களாகிய நீங்கள் கலைஞர்களாகவும் காட்சியளிப்பீர்கள். 

அதேபோல் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுவது என்பது எந்த பொருளை எங்கிருந்து எடுக்கிறோமோ அதை அங்கேயே வைத்தாலே போதுமானது. கொஞ்சம் ரசனையும் நேரமுமிருந்தால் வீட்டை மிக அழகாக காட்டலாம்.

வீட்டு பராமரிப்பு நேர்த்தியில்...

முதலிடம்:

திருமதி. மரு. சரயு

இரண்டாமிடம்:

திருமதி மரு. புனிதவதி
(விரைவில் சிலிண்டர் டியூபை குழாய் போட்டு மாற்றி அமையுங்கள்)

மூன்றாமிடம்:

திருமதி. உமா திரு
(அடுப்பாங்கரையை  மட்டுமே பதிவிட்டிருந்தாலும் பழமை மாறாமல் அங்கிருக்கும் அம்மியும் ஆடுகல்லும் அருமை!)

தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். நன்றி! 

~ஈரநெஞ்சம் மகேந்திரன்