Sunday, January 27, 2013

தினமலரில் என்னை பற்றி ~நன்றி தினமலர்

இரக்கமுள்ள மனசுக்கு இன்னொரு பெயர் மகேந்திரன் > முன்பெல்லாம் தெருவோரங்களில் குப்பைகள்தான் கிடக்கும். ஆனால் இப்போதோ பிறந்த குழந்தைகளும், நடமாட முடியாத வயதானவர்களும் கூட குப்பை கூளங்கள் நடுவே மக்கியபடி கிடக்கின்றனர்.

கிடக்கின்றனர் என்பது கொஞ்சம் மரியாதையான வார்ததை, உண்மையில் வீசியெறியப்படுகின்றனர்.

பொதுமக்களைப் பொறுத்தவரை , வீசியெறியப்பட்ட முதியவர்கள் ரத்தகாயமின்றி இருந்தால் ஒரு விநாடி நின்று பார்த்து, "ஐயோ பாவம் ' என சொல்லி செல்வார்கள், அதே வயதானவர்கள் அருவறுப்பான தோற்றத்துடனோ, ரத்த காயத்துடனோ, ஆடைகள் களைந்த நிலையிலோ, நோய் தாக்கிய நிலையிலோ இருந்தால், திரும்பி கூட பார்க்காமல் வேகவேகமாக நடப்பார்கள். அந்த முதியவர்கள் மனநோயாளியாக இருந்துவிட்டால் போதும், எதிர்திசையில் ஒட்டமெடுப்பார்கள். அவர்களைச் சொல்லியும் குறையில்லை அம்மா, மனைவி, குழந்தைகளிடம் கூட பேச நேரமில்லாத அவசர யுகத்தில் வசிக்கின்றனர்.

பொருள் தேடும் உலகில் உயிர்கள் மீதான பாசமும், நேசமும் அவ்வளவுதான்.

ஆனால் எல்லோரும் அப்படியில்லை, ஒரு சிலருக்குள் இன்னமும் மனிதத்தன்மை மரித்து போய்விடாமல்தான் இருக்கிறது,அவர்களில் ஒருவர்தான் கோவை காந்திபுரத்தைச் சேர்ந்த முப்பத்தைந்து வயதாகும் மகி என்கின்ற மகேந்திரன்
கடந்த 2009ம்ஆண்டில் இவரது சகோதரி ஒருவர் திடீரென உடல்நலம் குன்றி ரோட்டில் விழுந்து கிடந்த போது, பலரும் வேடிக்கை பார்த்தார்களே தவிர ஏன் என்று கேட்டு ஒருவரும் உதவி செய்யவரவில்லை.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு அதனால் பாதிக்கப்பட்ட மகேந்திரன் அன்று முதல் ரோட்டில் யார் ஒதுங்கிக்கிடந்தாலும், உடனே என்ன ஏது என்று கேட்டு அவர்களை உரிய உறவினர்களிடமோ, காப்பகத்திலோ, ஆஸ்பத்திரியிலோ சேர்த்து வருகிறார்.
வீதியோரம் கிடப்பவரை பார்த்ததும் முதலில் அவருக்கு நல்ல உணவு கொடுத்து தெம்பு ஏற்படுத்துவார், பின் ஆணாக இருந்தால் முடிவெட்டி, முகச்சவரம் செய்வார், நன்றாக குளிக்க வைத்து, புது உடைவாங்கிக்கொடுத்து விடுவார், பார்ப்பவர்கள், "கொஞ்ச நேரத்திற்கு முன் ரோட்டில் கிடந்த ஆளா இது!' என்று ஆச்சசரியப்படும் அளவிற்கு ஆளை மாற்றிவிடுவார் .

அதன் பிறகு அவர்கள் அருகில் அமர்ந்து விசாரிப்பார், முடிந்தவரை அவர்களை, அவர்களது உறவினருடன் சேர்த்து விடுவார், முடியாத போது காப்பகங்களிலும், சிகிச்சை தேவை எனில் ஆஸ்பத்திரியிலும் சேர்த்துவிடுவார்.
காப்பகத்தில் சேர்த்தாலும் சரி, ஆஸ்பத்திரியில் சேர்த்தாலும் சரி , சேர்த்ததோடு தனது கடமை முடிந்ததாக கருதாமல், அவ்வப்போது போய் பார்த்து ஒரு உறவினராக, நண்பனாக நடந்து கொள்வார்.

பதினெட்டு வருடங்களுக்கு முன் காணாமல் போன மகனை நினைத்து அழுதவர்கள் முன் இந்தாருங்கள் உங்கள் பிள்ளை என்று நிறுத்தி, அந்த குடும்பத்தின் நீண்ட கால வேதனை கண்ணீரை, ஆனந்த கண்ணீராக மாற்றியுள்ளார். மன நோயாளிகள் பலர் இவரது அன்பால் மன நோய் நீங்கிப்பெற்று தற்போது திருமணம் முடிந்து நல்லபடியாக இருக்கின்றனர், தெருவோரம் கேட்பாரற்று கிடந்த பாட்டிகளும், தாத்தாக்களும் இப்போது காப்பகத்தில் உற்சாகமாக வலம் வருகின்றனர்.
ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் இறந்துபோய் "அநாதை பிணங்கள்' என முத்திரை குத்தப்படுபவர்களின் உடல்களை, "நானே அவரது உறவினர் என்று தானே வலியப் பெற்று' அவர்களது உடலை மாலை மரியாதையுடன் நல்லடக்கம் செய்தும் வருகிறார்.

தீபாவளி பொங்கல் என்றால் உறவினர்களை அழைப்பது போல அரவாணிகள், உடல் ஊனமுற்றவர்ககள், முதியவர்களை அழைத்து விருந்து கொடுத்து அவர்களை மகிழ்விப்பதன் மூலம் குடும்பத்துடன் தானும் மகிழ்ந்து வருகிறார்.
ஈர நெஞ்சம் என்ற அமைப்பை ஏற்படுத்தி இத்தகைய தொண்டாற்றிவரும் மகேந்திரனின் இந்த பணிக்கு பெரும் பலமாக இருந்து உதவுபவர்கள் பாலசந்திரன், பரிமளா வகீசன், தபசுராஜ், சுரேஷ் கணபதி, கணேஷ் குமார், மணிமேகலை, வசந்திரா, மோகனசுந்தரம், செண்பகம், பழநியப்பன் ஆகிய நண்பர்களும், இவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நம்பி தோள்கொடுக்கும் அன்னை தெரசா காப்பகம், பிரபஞ்ச அமைதி சேவாலயம், சாய்பாபா முதியோர் இல்லம், அன்பாலயம், சாய் முதியோர் இல்லம், கருணாலயம் ஆகிய காப்பகங்களும்தான்.

இவரால் நலமடைந்து பலனடைந்தவர்களின் பட்டியல் மிக நீளமானது. இப்போது கோவை வீதியில் யாரேனும் விழுந்து கிடந்தால், "கூப்பிடு மகேந்திரனை' என்று சொல்லுமளவிற்கு பிரபலமடைந்துவிட்டார்.
ஒரு வார்த்தை மகேந்திரனை வெறுமனே கூப்பிட்டு வாழ்த்தினால் கூட போதும், இன்னும் ஆயிரம் பேரை காப்பாற்றும் தெம்பும், திராணியும் அவருக்கு கிடைத்துவிடும், மகேந்திரனை வாழ்த்த விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள; 9843344991, 9600400120

தினமலரில் 

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=634850
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

4 comments:

Tamil Indian said...

Good work bro.

R.Puratchimani said...

வாழ்த்துக்கள்....உங்கள் நற்செயல் மென்மேலும் தொடரட்டும்

சிவக்குமார் said...

உங்கள் மீது பெரிய மதிப்பு கொண்டேன். தினமலர் கூட உங்களால் பெருமையடைந்தது. நான் சிறுமையடைந்தேன்.

நீங்கள் பல்லாண்டு வாழ்க.

sakthi said...

வாழ்த்துக்கும் ,புகழுக்கும் அப்பாற்பட்ட பல சிறந்த அரிய செயல்கள் சும்மா சிம்பிளா முடிப்பவர் தான் நண்பர் மகேந்திரன் .
பழகுவதில் குழந்தையை விட இனிமையானவர் .எனக்கு பிடித்ததே அவரின் கள்ளமற்ற சிரிப்பு தான் .
வாழ்த்துக்கள் மகி சார் ,
இப்படிப்பட்ட நல் உள்ளம் கொண்ட மனிதரை உலகிற்கு காட்டும் தினமலர் நாளிதழுக்கு மிக்க நன்றி

Post a Comment