Monday, January 18, 2016

கபடிக்கு ஒரு மின்னல் வீராங்கனை


!!! தர்ஷினி மாற்று மாற்றுதிறனாளி அல்ல மின்னல் வேக வீராங்கனை !!!
மனதில் திடமிருந்தால் மலைகள் கூட தடைகள் செய்யாது என்பதை நிரூபிக்கு வகையில் தன் குறைகளை கடந்து சாதித்திருக்கிறாள் 15 வயது சிறுமி தர்ஷினி .
கோவை சுந்தராபுரம் பகுதியில் கூலி வேலை செய்து வரும் திரு.பாலகிருஷ்ணன், திருமதி.ஜெயந்தி தம்பதியினரின் மூன்றாவது மகள் தர்ஷினி . பிறவி முதலே காது கேட்கும் திறனும் பேசும் திறனும் இல்லாதவர் , இருந்தும் யோகா மற்றும் நடனம் பயிற்சி பெற்ற தர்ஷினியின் சிறப்பு அம்சம் ஒரு கபடி வீராங்கனை. தனிப்பட்ட முறையிலும் குழுவாகவும் எண்ணற்ற போட்டிகளில் வெற்றிக் கோப்பைகளை வென்றுள்ளார்.

  
ஆறாம் வகுப்பு படிக்கும் போது விஸ்வநாதன் கபடி பயிற்சியாளரிடம் கபடி விளையாட்டில் பயிற்சி மாணவியாக சேர்ந்த தர்ஷினி அப்போதே கல்லூரி அளவிலான போட்டிகளில் கலந்துக் கொள்ளும் அளவிற்கு விளங்கினாள் .
பயிற்சியாளர் விஸ்வநாதன் கூறும் பொழுது கபடி விளையாட்டுக்கு கிடைத்த மின்னல் வேக வீராங்கனை தான் தர்ஷினி . இவள் என்னிடம் வரும் பொழுது தர்ஷினி ஆறாம் வகுப்பு மாணவி, பெற்றோர்கள் இவளுக்கு காது கேட்காது பேசமுடியாது . இவள் தொலைகாட்சியில் கபடி விளையாடுவதை கண்டு அதில் ஆர்வம் இருப்பதை தெரிவித்தாள். இவளுக்கு கபடிக் கற்றுக் கொடுங்கள் என்று முறையிட்டனர்.
மாணவியாக சேர்த்துக் கொண்ட ஆரம்பத்தில் இவளுக்கு பயிற்சி கொடுப்பது கடினமாக இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் ஆரம்பத்திலேயே இவள் ஒரு ஆண் விளையாட்டு வீரரை போல ஆறாம் வகுப்பு படிக்கும் இந்த சின்ன குழந்தையிடம் வேகம் இருப்பதை கண்டேன். ஆனால் கபடி விளையாட்டில் கபடி என்ற வார்த்தை உச்சரிப்பது மிகவும் அவசியம் அதுவும் மூச்சு விடாமல் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் . இவளால் பேசமுடியாதே என்று வருத்தப்பட்டவேளையில் தொடர்ந்து இரண்டு மாதம் தானாக முயற்சி செய்து கபடி என்ற வார்த்தை மட்டும் உச்சரிக்க கற்றுக் கொண்டு களத்தில் இறங்க தகுதிப் பெற்றாள்.
அதனை தொடர்ந்து முறையான பயிற்சியின் மூலம் பல உள்ளூர் போட்டிகளில் கலந்து சாதனைபடைத்து வருகிறாள் . தர்ஷினியின் பெற்றோர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் , அவர்களுக்கு இவளது திறமை பற்றியும் கபடி போட்டிகளைப் பற்றியும் பெரும் அளவில் அறியாதவர்கள் , இவள் குவித்து வரும் வெற்றிக் கோப்பைகளை கண்டு ஆச்சரியமும் சந்தோசமும் அடைவார்கள் , ஆனால் வெளியூர் போட்டிகள் வரும் போது இவளை அனுப்ப தயக்கம் காட்டுவார்கள் . அப்போதெல்லாம் அவர்கள் காலில் விழாத குறையாக கெஞ்சிக் கேட்டு சம்மதம் வாங்கி அழைத்துப் போவோம்.
இவள் களத்தில் இறங்கும் போதே இந்த பெண்தானா இப்படி என்று ஆச்சர்யம் படும் அளவில் இவளது வேகம் இருக்கும் . இவளது ஆட்ட வேகத்தைக் காண தனி ரசிகர்கள் ஏராளம் உள்ளனர் .
காது கேட்கும் கருவி ஒன்று இவளுக்கு இருந்தால் இவளது திறமை முழு அளவில் வெளிப்படுத்தி விடலாம் , பொதுவாகவே நம்மூரில் கிரிக்கெட் விளையாட்டிற்கு இருக்கும் ஒரு முக்கியத்துவம் மற்றப்போட்டிகளுக்கு இருக்காது , அப்படிப் பட்ட போட்டிகளில் ஒரு மாற்றுத் திறனாளியான ஒரு இளம் பெண் சாதித்தாள் என்ன சாதிக்காவிட்டால் என்ற எண்ணம் தான் இருக்கும் போல . பலரிடமும் இவளுக்கு காது கேட்கும் கருவிக்கு உதவி கேட்டு இதனால்வரை யாரும் முன் வரவில்லை .இவளது திறமை கண்டு அரசும் கூட எந்த முக்கியத்துவமும் இவளுக்கு கொடுத்தது இல்லை .
தர்ஷினியின் அம்மா ஜெயந்தி கூறும் பொழுது " எங்கள் வீடு நிறைய இவள் வென்று வாங்கி வந்த கோப்பைகளும் மெடல்களும் தான் நிறைந்து இருக்கிறது. எல்லோரும் சொல்கிறார்கள் உங்கள் பெண் மிகவும் அருமையாக விளையாடி வருகிறாள் .எல்லோர் பெற்றோர்களுக்கும் இருக்கும் தயக்கம் தான் எங்களுக்கும் ,இவளுக்கு இருக்கும் குறைகளால் இவளை வெளி மாநிலங்களுக்கு அனுப்ப கொஞ்சம் பயமாக இருக்கும் . சில வருடங்களுக்கு முன் செஞ்சிலுவை சங்கத்தில் இருந்து தர்ஷினியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கேட்டவர்களிடம் அப்போது அனுப்ப மறுத்து விட்டோம் . அதன் பிறகுதான் போகப்போக இவளது உண்மையான திறமை பற்றி தெரிய வந்தது . அதன் பிறகு இவள் பெற்ற பல வெற்றிகளின் போதும் அவளது திறமையை கண்டு வியந்த பலரும் அவளுக்கு உதவுவதாக சொல்வார்கள். ஆனாலும் செய்தவர்கள் யாரும் இல்லை. அவரது பயிற்சியாளர் மட்டுமே போட்டிகளுக்கு செல்லும்போது அழைத்து செல்ல உதவுவார்.
தற்போது கோவை CCM அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் தர்ஷினி படிப்பிலும் சோடை போகவில்லை. படித்துக் கொண்டே கபடியிலும் வெற்றி பெற இவரது தனிப்பட்ட ஆர்வமே காரணமாக இருந்துள்ளது. இப்போதும் சில நேரங்களில் இப்படிப்பட்ட பெண்ணை வெளியே அனுப்ப ஏதும் ஆபத்து நேர்ந்து விடுமோ என்று பயம் கொண்டாலும் . தங்கள் பெண்ணின் திறமை ஓரிடத்தில் முடங்கி விடக்கூடாது என்றும், இவளது ஆர்வத்தையும் திறனையும் ஊக்குவிக்க வேண்டும் என்றும் தர்ஷினிக்கு அனைத்து வகையிலும் ஆதரவு தந்து உறுதுணையாக இருந்து அவள் முன்னேற்றத்திற்கு வழிவகை தேடி வருகின்றனர்.
இப்படி பட்ட ஒரு மின்னல் வேக வீராங்கனை தர்ஷினிக்கு ஈரநெஞ்சம் அறக்கட்டளை இந்த பொங்கல் தினத்தில் காது கேட்கும் கருவி வழங்கியதில் பெருமை அடைகிறது .


முடிந்தால் நீங்களும் இந்திய அணிக்கு ஒரு மின்னல் வீராங்கனை தர்ஷினி கிடைக்க ஒரு துரும்பாக இருக்கலாமே .
மேலும் விபரம் பெற உதவி செய்ய தர்ஷினியின் பயிற்சியாளர் விஸ்வநாதன் 9842264193 . பெற்றோர் பாலகிருஷ்ணன் ஜெயந்தி 9629370528 .
~ஈரநெஞ்சம் அறக்கட்டளை
www.facebook.com/eeranenjam/
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment