Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Thursday, March 25, 2021

இரண்டு இட்லி... சிந்தனை

ரெண்டு இட்லி!!

இரக்க குண பெண்மணி ஒருத்தி
தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் சுவர் மேல் வைப்பாள்...

அவ்வழி திரியும் ஒரு கூனல் முதுகு கிழவன் அதை எடுத்துக் கொண்டு
ஏதோ முனங்கிக் கொண்டே போவான்
இது அன்றாட வழக்கமாயிற்று

ஒரு நாள் மதில் அருகிலேயே நின்று
கிழவன் என்ன முனங்குகிறான் என்று செவிமடுத்து கேட்டாள்

அவன் முனகியது இதுதான்
நீ செஞ்ச பாவம் உன்கிட்டேயே இருக்கும்
நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும்

தினந்தோறும் இதையே சொல்லிக் கொண்டு போனான்
தினமும் இட்லி வைக்கிறேன் எடுத்துட்டு போறான்;
நீ மவராசி நல்லா இருக்கணும் என்று
கையெடுத்துக் கும்பிட்டு கை கால்ல விழவில்லைனாலும்
"இட்லி நல்லா இருக்கு என்று பாராட்டவில்லை என்றாலும்
 ரொம்ப நன்றி தாயே என்று சொல்லக் கூடவாத் தோணல 
ஏதோ,... "செஞ்ச பாவம் உன்கிட்டேயே இருக்கும்
செஞ்ச புண்ணியம் உனக்கே திரும்பும் என்று
தினம் தினம் உளறிட்டுப் போறானே'
என்று எண்ணி எண்ணி புலம்பினாள் அவள்.

'இவன் என்ன பித்தனா, இல்ல, சித்தனா, பரதேசி பய' என்று திட்டினாள்
'நன்றி கெட்ட கூனனை' நினைத்து
மன உளைச்சலுக்கு ஆளானாள்
நாளடைவில் அவளது கோபம் தலைக்கேறி
கொலை வெறியாக மாறியது
ஒருநாள் இட்லி மேல் விஷம் கலந்து செத்து தொலையட்டும் என
மதில் மேல் வைக்கப் போனாள்....

மனம் ஏனோ கலங்கியது
கை நடுங்கியது அவன் அப்படி இருந்தாலும் சே...நாம் ஏன் இப்படியாகணும் என்று
அந்த விஷம் கலந்த இட்லியை சாக்கடையில் எறிந்து விட்டு
வேறு நல்ல இட்லியை மதில் மேல் வைத்து விட்டு மனம் அமைதியானாள்.

வழக்கம் போல் கூனக் கிழவன் வந்தான்
இட்லியை எடுத்துக் கொண்டு
வழக்கம்போல
நீ செஞ்ச பாவம் உன்கிட்டேயே இருக்கும் 
நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும்
என்று சொல்லிக் கொண்டே சென்றான்!
அவனை அப்படியே அறையலாம் போலிருந்தது அந்த பெண்மணிக்கு

அன்று மதியம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தாள்
வாசலில் வாலிபன் ஒருவன்
கசங்கிய உடையோடு தள்ளாடிய படி நின்றிருந்தான்

வேலையோடுதான் திரும்புவேன் என்று சொல்லி விட்டு ஒரு மாதம் முன்பு வேலை தேடி வீட்டை விட்டு சென்ற அவளது ஒரே மகன்தான் அவன்!.

"அம்மா, வீட்டுக்கு திரும்பி வரும் போது
என் பர்ஸ் காணாம போச்சு கையில காசு இல்ல
தெரிஞ்சவங்க யாரும் கண்ணுல படல
மணிக் கணக்கில நடந்து வந்துட்டே இருந்தேன்
நல்ல வெய்யில் அகோரப் பசி வேறு
மயங்கி விழுந்துட்டேன்
கண் முழிச்சு பாத்தப்போ...
யாரோ ஒரு கூனமுதுகு கிழவன்
என்னை தூக்கி உட்கார வச்சு
ரெண்டு இட்லி கொடுத்து சாப்பிடச் சொன்னார்

இட்லி சாப்பிட்ட பிறகுதான் எனக்கு உயிரே வந்தது
இதைக் கேட்டதும் பேயறைந்தது போல் அதிர்ச்சி அடைந்தாள்

'விஷம் கலந்த இட்லியை கூனனுக்கு கொடுத்திருந்தால்...
அது என் மகனுக்கே எமனாக ஆகியிருக்குமே ஆண்டவா
என்று நினைத்து தாய் உள்ளம் பதைபதைத்தது கண்கள் பனித்தன..

"நீ செஞ்ச பாவம் உன்கிட்டேயே இருக்கும்
நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் "
...கூனன் முனகலின் பொருள் இப்போது நன்கு புரிந்தது!
உண்மைதான் ...

எல்லாருக்கும் எல்லாம் புரிவதில்லை...

புரியும் வேளையில் வாழ யாரும் இருப்பதும் இல்லை....

செய்த தர்மம் என்றும் நம்மை ஏதாவது ஒரு ரூபத்தில் காக்கும்

ஏதேனும் ஒரு தர்மம் செய்யும் சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்

வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே.

Tuesday, March 23, 2021

மன சாட்சி... சிறுகதை





ஒருமுறை, கென்ய ஓட்ட பந்தய வீரர் எபெல் முடய், எல்லை குறியை அடைய சில மீட்டர் தூரம் தான் இருந்தது. 

ஆனால் குறியீடுகளை பார்த்து குழம்பி போய் இலக்கை அடைந்து விட்டதாக நினைத்து நின்று விட்டார்.

பின்னால் வந்த ஸ்பெயின் நாட்டின் ஐவன் பெர்னான்டஸ் இதை சுதாரித்து கொண்டு எபெலை தொடர்ந்து ஓட சொல்லி சத்தமிட்டார். எபெலுக்கு ஸ்பானிய மொழி தெரியாததால் இவர் சொன்னது புரியவில்லை.

இதை புரிந்து கொண்ட ஐவன் பெர்னான்டஸ், முடய்'யை இலக்குக்கு நேராய் உந்தி தள்ளினார்.

ஏன் இப்படி செய்தீர்கள் என்று பத்திரிக்கையாளர்கள் ஐவனிடம் கேட்டபோது, 

"என்றாவது ஒரு நாள் நாம் ஒருவரை ஒருவர் வெற்றிக்கு நேராய் உந்தி தள்ளுகிற ஒரு சமுதாயமாக மாறுவோம் என்பது தான் என கனவு" என்றார்...

ஏன் அந்த கென்னியரை வெல்ல விட்டீர்கள் என்று பத்திரிகையாளர் மறுபடியும் கேட்ட போது, "நான் அவரை வெற்றிபெற விடவில்லை, அவரே வெற்றிக்கு அருகில் வந்து விட்டார். இந்த பந்தயம் அவருடையது" என்றார்....

நீங்கள் வென்றிருக்கலாம் என்று பத்திரிகையாளர் மறுபடியும் கேட்ட போது, 

அந்த வெற்றியின் சிறப்பு என்னவாக இருக்கும்? 

இந்த பதக்கத்திற்கு என்ன மரியாதை இருக்கும்?

என் தாய் ..எனது குடும்பம் என்ன நினைப்பார்கள்?

நற்பண்புகள் ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லப்படுகிறது. 

நாம் நம் குழந்தைகளுக்கு எப்படி பட்ட பண்புகளை கற்று கொடுக்கிறோம்?
எந்த அளவுக்கு மற்றவர்களை நற்பண்புகளால் ஈர்க்கிறோம்? நம்மில் பலரும் மற்றவர்களின் பலவீனத்தில் உதவி செய்வதை விட அதை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறோம். 

சுயநலமாய் இருப்பதை விட்டு,ஒருவரை ஒருவர் வெற்றிக்கு நேராய் உந்தி தள்ளுவோம். நாம் எல்லாருமே வெற்றிக்கு தகுதி ஆனவர்கள்... 

என்று கூறி முடித்தார்.

 *நீதி:* *மனசாட்சியே இறைவனின் ஆட்சி..* *மனசாட்சியை கொல்லும்போதே/கேட்காமல் சுயநலமாய் செயல்படும்போதே இறைவன் அங்கிருந்து நீங்கிவிடுகிறார்.* *வெறுமனே தெய்வத்தை வணங்குவது மட்டும் பயனில்லை.*

Sunday, March 21, 2021

இனி உன்னை செல்லமான்னு கூப்பிட மாட்டேன் டி மா...

*இனி உன்னை செல்லமான்னு கூப்பிட மாட்டேன் டி மா...*

"செல்லம்மா...செல்லம்மா"  என்று அழைத்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான் அவன்.

"வந்துட்டிங்களா ..இங்க தான் இருக்கேன் நீங்க செல்லம்மா, செல்லம்மான்னு கூப்பிட்டு   என்  பேரே எனக்கு மறந்து போயிடுச்சு ...யாரு என்  பேர சொல்லிக் கூப்பிட்டாலும்  திரும்பி பாக்கறதே இல்ல யாரையோ கூப்பிடறாங்கன்னு கண்டுக்காம விட்டுடறேன்   "  என்றாள் அவள்.

"சரி டி மா  இனி உன்ன உன்  பேர சொல்லியே  கூப்பிடறேன் சரியா " என்கிறான் அவன்.

"வேணா வேணா    செல்லம்மான்னே கூப்பிடுங்க ... நீங்க செல்லமா கூப்பிடுற 'செல்லம்மா' ங்குற  பேர் நீங்க கூப்பிட்டு கூப்பிட்டு  என் ரத்தத்தில கலந்துடுச்சு தெரியுமா??... செல்லம்மான்னு நீங்க கூப்பிடுறப்போ அதுல உங்க  காதல் அப்படி வழிஞ்சு  வருது "  என்கிறாள் அவனை ஒரு கையால் வளைத்து மறு கையால் அவன் சட்டை பொத்தானை அவிழ்த்தபடி..  

"சரிடி செல்லம்மா"  என  அவன் அவளை இன்னும் இறுக்கமாக அணைத்து  முத்தமிட்டான்.

காதல் பொங்கி வழியும் தம்பதி அவர்கள் .. 

அவன் பணிக்கு செல்லும் நாட்களில், மதிய நேரத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் "சாப்பிட்டியா" என்று கேட்டுக் கொள்வார்கள். தான் சாப்பிடும் நேரத்தில்  அவளும் சாப்பிட வேண்டும் என்று அவனும், பணிகளுக்கு இடையே  புகைப்படம் எடுத்து அனுப்புவதும் . ஒவ்வொரு மணி நேரத்திற்கு பல குறுஞ்செய்திகளோடு   அத்தனை காதலையும் எண்ணங்களையும் பிரியங்களையும் பறிமாறிக் கொள்வார்கள். 

வேலை நேரங்களில் ஒரு முறையாவது அவனிடமிருந்து தொலைபேசி அழைப்பு அல்லது குறுஞ்செய்தி எதிர்பார்ப்பாள். இல்லை எனில் கோபம் தான். சண்டை தான் . 

"என்னை பத்தி  உங்களுக்கு நெனப்பே இருக்காதா " என அவனிடம் அவள் 
"இருக்கு டி  செல்லம்மா என் வேல அப்படி... புரிஞ்சுக்கோடி மா " என அவனும் .
"வேலையோடு இருக்க வேண்டியது தானே பின்ன என்ன ஏன் காதலிச்சிங்க  கல்யாணம் செஞ்சீங்க " என்று காதல் வாக்குவாதம் அவ்வப்போது சுவாரஸ்யத்தை கொடுக்கும்.

அப்படி ஒரு சிறிய இடைவெளியை கூட தாங்க முடியாத காதல் அவன் மேல் அவளுக்கு.

அவள் அவனிடம் தினமும் எதிர்பார்ப்பது  ஒரு முழம் பூ மட்டுமே.  

"இன்னிக்கி பூ வாங்கினிங்களா" வீட்டிற்கு வந்ததும் கேட்பாள்.
"ஆமா டி செல்லம்மா இந்தா" என்று அவன் தந்ததும் அதை வாங்கி தலையில் வைத்து அழகு பார்ப்பாள், தன்னவன்  வாங்கித் தந்தது என்ற மகிழ்ச்சியுடன். மறுநாள் வாடிய பூவை கூட தூக்கிப்
 போட மனம் வராது அவளுக்கு.

ஒரு சில நாளில் , "இல்ல டி  நேரமில்ல செல்லம்மா" என்று அவன் சொன்னால், அவனின் நிலை  தெரிந்தே கோபத்தை தொடர்வாள் காதல் நிறைந்த அவனது சமாதானத்தை எதிர்பார்த்தபடி.

ஒரு நாள் அவளது தோழி ஒருத்தி அவளிடம் , "நான் ஒரு புத்தகம் படிச்சேன். புதுமைப்பித்தன் சிறு கதைகள். அதுல "செல்லம்மாள்" ங்குற தலைப்புல ஒரு கதை  படிச்சேன். நல்லா இருக்கு  வாங்கி படி." என்றாள்.


வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அவனது தேவைகளை நிறைவேற்றி பின் அந்த புத்தகத்தை பற்றி சொல்கிறாள். " என் friendu  ஒருத்தி சொன்னா .. அவ ஒரு புக்  படிச்சாளாம் ... புதுமைப்பித்தன் சிறு கதைகளில்  என்  பெயர்    ( செல்லம்மா ) தலைப்பு கொண்ட ஒரு கதையாம் ரொம்ப நல்லா இருக்காம்.. வாங்கி தரிங்களா" என்கிறாள். 

"என்ன உன் பேர்ல  கதையா... என் செல்லம்மா பேர்ல கதையா.... நம்ம கதை போல காதல் கதையா.. நம்ம கதை போல காதல் நிறைந்தது இதுவரை இல்லை இனிமேலும் வராது டா" என்கிறான் அவன்.
"விளையாடாதிங்க வாங்கி தாங்க" என்று அவள் கொஞ்ச...
"என் செல்லம்மா பெயர் என்றால் விடுவேனா" என  அவளை இழுத்து முத்தமிட்டு அந்த புத்தகத்தை வாங்க செல்கிறான் அவன்.

கடைக்கு சென்று புத்தகத்தை கையில் வாங்கிய அவன்,  செல்லம்மாவுக்கு முன் நாம படித்து பார்த்து விடலாம் என படிக்கிறான். ஆவலோடு படிக்க தொடங்கிய அவன் முகம் படிக்க படிக்க வாடத் தொடங்குகிறது. கண்கள் கலங்கி அவனை அறியாமல் கண்ணீர் வழிகிறது. புத்தகத்தை வீட்டிற்கு எடுத்து செல்லாமல் தூக்கி எறிந்து விட்டு வருகிறான். 

வீட்டுக்கு வந்த அவனிடம்,"புக் எங்க" என்கிறாள்.
"இல்ல  நா வாங்கல " என்கிறான்
"ஏன் வாங்கல"  என வழக்கம் போல அவளுக்கு கோபம்,  சண்டை.
"வாங்கலைன்னா  விடு" என அவனும் கோபமாக பதிலளிக்க..
"ஆசைப் பட்டு ஒன்னு கேட்டேன் அத கூட வாங்கி கொடுக்க முடியாதா ? நம்ம காதலப் போல தான  இருக்கும் அந்த புக்குல , உங்களுக்கு என் மேல காதலே இல்லையா போங்க நான் கொடுத்து வெச்சது அவ்ளோ தான் " என்று சண்டைபோட்டபடியாக தனியாக போய் படுத்துக் கொண்டாள்  .

சற்று நேரத்தில் அவன் அவள் அருகே வந்து பார்க்கிறான் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்து இருந்தாள் .


அவன் உறங்கும் அவள் நெற்றியில் முத்தமிட்டு விட்டு பேசத் துவங்கினான் ( உறக்கத்தில் அவளுக்கு இவன் பேசுவது தெரியாது )

"அடியே  என் பேரழகி அந்த கதையில , நம்மளப் போல காதல் நிறைந்த தம்பதி பத்தி தான் இருந்துச்சு , . கல்யாணம் ஆன பின்னால தனிக்குடித்தனம்.. காதல்..  வேலை என அழகாக கதை செல்ல... திடீர்னு அந்த செல்லம்மாளுக்கு நோய் வந்து ... செலவு செய்ய பணம் இல்லாம கஷ்டப்பட்டு.. . கடைசியில அவ  செத்தே போறாள்" . 


"அதப் படிச்ச எனக்கு  கண்ணுல தண்ணி தண்ணியா அழுகை தான் டி வந்துச்சு . கதை தான்னாலும்  செல்லம்மாள் செத்துடுறாங்குற விஷயத்த என்னால தாங்கிக்க முடியல . என்னை பொறுத்தவரை செல்லம்மான்னா நீ மட்டும் தான், உன் ஒரு நொடி பிரிவும் என்னால தாங்கிக்க முடியாது   நான் வருத்தப்படறத  உன்னாலும் தாங்க முடியாது என்பது எனக்கு தெரியும். எல்லா பெண்களும் தன் கணவன் தன்னை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் கடைசிவரை அவன் துணை இருக்கணும்னு தான் நினைப்பாங்க.  ஆண்களும் அப்படித்தான்.  தன் மனைவி தன்னால் எந்த வேதனையும் படக்கூடாதுன்னு நினைப்பாங்க. அவள்  பிரிவை எந்த கணவனாலும் தாங்க முடியாது. உன்ன நான் இனி  இன்னும்  நல்லா பார்த்துக்குவேன் டி  செல்லம்மா...

இல்லை, *இனி உன்னை செல்லமான்னு கூப்பிட மாட்டேன் டி மா...* ". 

எனக் கூறி மீண்டும் அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.

~மகி

Friday, March 19, 2021

நாம் ஏன் கோபத்தில் சத்தம் போடனும்...கோபம் வந்தா என்ன செய்வோம்?

*நாம் ஏன் கோபத்தில் சத்தம் போடனும்...கோபம் வந்தா என்ன செய்வோம்?*
யார் மேல நமக்கு கோபமோ, அவங்க கிட்ட சத்தம் போட்டு சண்டை பிடிப்போம்!! இல்லையென்றால் பேசாம அமைதியா இருந்துடுவோம்! ஆனா, எப்பவாவது யோசிச்சிருக்கோமா? யார் மேல நமக்கு கோபம் வந்தாலும் அவர்கள் நமக்கு மிக அருகில் தானே இருக்காங்க!

எதுக்கு ஊருக்கே கேட்கிற மாதிரி சத்தம் போடனும்? மெதுவா சொல்ல வேண்டியதை சொன்னாலே அவங்களுக்கு கேட்குமே! நானும் யோசிச்சதில்லைங்க!

ஆனா இந்த கதையைப் படித்தபிறகு??????

ஒரு துறவி கங்கையில் குளித்து விட்டுக் கரையேறும் சமயம், அவ்விடத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், சத்தம் போட்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்த துறவி, தன் சீடர்களிடம் திரும்பி சிரித்துக் கொண்டே கேட்கிறார்?

ஏன் மனிதர்கள் கோபத்தில் இருக்கும் போது ஒருவரை ஒருவர் பார்த்து சத்தம் போட்டு சண்டை பிடிக்கிறார்கள்? சீடர்கள் சில நிமிடங்கள் சிந்திக்கிறார்கள்…..பின்னர்..

சீடர்களில் ஒருவர்: கோபத்தில் நாம் அமைதியை இழக்கிறோம்! அதனால் சத்தமிடுகிறோம்!

துறவி: ஆனால், உனக்கு மிக சமீபத்தில் இருக்கும் நபரிடம், ஏன் சத்தமிடுகிறாய்? அவர்கள் உன்னருகில் தானே நிற்கிறார்கள்! நீ சொல்ல வேண்டியதை அவர்களுக்கு மட்டும் கேட்கும் விதமாக எடுத்துறைக்கலாமே!

ஒவ்வொரு சீடரும் ஒரு காரணம் சொல்கிறார்……

ஆனால், எந்த காரணத்திலும் அடுத்தவர்களுக்கு உடன்பாடில்லை! கடைசியாக துறவி பதில் கூறுகிறார்…..

எப்பொழுது இரு மனிதர்கள், ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்கிறார்களோ, அப்பொழுது அவர்களின் மனது இரண்டும் வெகு தொலைவுக்குச் சென்று விடுகிறது! எனவே தூரத்தில் இருக்கும் மனதுக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே, சத்தமிடுகிறார்கள்!

மனது எவ்வளவு தூரம் விலகி இருக்கிறதோ, அவ்வளவு தூரம் இவர்கள் தங்கள் ஆற்றலை உபயோகித்து சத்தம் போட வேண்டியிருக்கும்! அப்பொழுது தானே தங்கள் கருத்து வெகு தொலைவில் இருக்கும் மனதைச் சென்றடையும்!

ஆனால் இதுவே, இரு மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பாக இருக்கும்போது என்ன நடக்கிறது?

அவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் சத்தமிடுவதில்லை! அமைதியாகவும், அன்பான முறையிலும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவார்கள்! காரணம் அவர்களின் மனது இரண்டும் வெகு சமீபத்திலே இருக்கும்! மனதிற்கு இடையேயான தூரம், மிகக் குறைவாக இருக்கும் அல்லது மனதிரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தே இருக்கும்!

துறவி தொடர்ந்து கூறுகிறார்…

இதைவிடவும் அதிகமாக ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும்போது என்ன நடக்கும்?

அவர்கள் ஒருவருக்கொருவர் சத்தமாக பேச தேவையிருக்காது! அவர்களின் மனதுகள் இரண்டும் கிசு கிசுப்பாக பேசுவதில் இருந்தே, அவர்களின் கருத்துகள் பரிமாறப்படும்! இன்னும் இன்னும் அன்பு அதிகமாகும் போது வார்த்தையே தேவைப்படாது! அவர்கள் கண்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும் போதே, மனதின் எண்ணங்கள் வெளிப்பட்டு விடும்!

துறவி கடைசியாக சீடர்களைப் பார்த்து கூறுகிறார், அதனால் நீங்கள் ஒருவருடன் ஒருவர் வாதிடும் போது,

*”உங்கள் மனதுகள் இரண்டும் தொலைவாகப் போய் விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்!*

*மனதின் தொலைவை அதிகப்படுத்தும் வார்த்தைகளை உபயோகப்படுத்தாதீர்கள்!”*

*அப்படி செய்யாமல் போனால், “ஒரு நாள் உங்கள் மனங்களிரண்டின் தூரம் கொஞ்ஞம் கொஞ்ஞமாக அதிகமாகி, கடைசியில் ஒன்று சேரும் பாதையே அடைக்கப்பட்டு விடும் நிலை வந்து விடும்!”.*

Thursday, March 18, 2021

மாணவர்கள்

*தினம் ஒரு குட்டிக்கதை* .



ஒரு ஆசிரியர் பாடவேளையின் இறுதியில் மாணவிகளை உற்சாகமூட்டுவதற்காக ஒரு சிறிய பரீட்சையை நடத்தினார்.

அதில் வெற்றி பெறும் மாணவிக்கு புதியதொரு காலணி(செருப்பு) வழங்கப்படும் என்றும் கூறினார்.அனைத்து மாணவிகளும் மிகுந்த சந்தோஷத்துடன் பரீட்சையை எழுதினர். 

இறுதியில் அவர்களது விடைகளை பரிசீலித்துப் பார்க்கும் பொழுது அவர்கள் அனைவரது விடைகளும் சரியாக இருந்தது.
ஆசிரியை யாருக்கு பரிசினை வழங்குவது என்று சிந்தித்து விட்டு, குலுக்கல் முறையில் இப்பரிசு கொடுக்கப்படும். எல்லோரும் ஒரு துண்டு தாளில் அவரவர்  பெயரை எழுதி  ஒரு பெட்டியில் போடுமாறு கூறினார்.

அனைவரும் எழுதிப் போடவே ஆசிரியை அப்பெட்டியைக் குலுக்கி அதில் ஒரு சீட்டை  எடுத்தார். அதில் தமிழ்ச்செல்வி என்ற மாணவியின் பெயர் காணப்படவே அம்மாணவிக்கு அப்பரிசு வழங்கப்பட்டது.

அம்மாணவி தான் அவ்வகுப்பில் மிகவும்  ஏழ்மையான  மாணவி. பல காலமாகவே தேய்ந்து போயிருந்த காலணிகளை அணிந்து வந்த இம்மாணவிக்கோ எல்லையில்லா மகிழ்ச்சி.

பின்னர் அவ்வாசிரியை சந்தோஷத்துடன் வீட்டுக்கு வர  ஆசிரியை நடந்த சம்பவத்தை கணவரிடம் கண்ணீருடன் கூறினார். கணவனும் சந்தோஷப்பட்டார்.

எனினும் அவ்வாசிரியை வழக்கத்துக்கு மாறாக தொடர்ந்தும் கண்ணீர் வடிக்கவே கணவர் மீண்டும் காரணம் கேட்க  " நான் வீட்டுக்கு வந்து அப்பெட்டியிலுள்ள அனைத்து  காகிதங்களை பிரித்துப் பார்த்தேன். அதில் அனைத்து மாணவிகளும் தங்களது பெயர்களை எழுதாமல் வகுப்பில் ஏழை  மாணவியாகிய "தமிழ்ச்செல்வி" இன் பெயரையே எழுதியிருந்தனர்." என்று பதிலளித்தார்.

 *நீதி* 

*"தன்னை விட பிறரை முற்படுத்தும் பிள்ளைகளாக, சுயநலமற்றவர்களாக தமது பிள்ளைகளை வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்"*