*இனி உன்னை செல்லமான்னு கூப்பிட மாட்டேன் டி மா...*
"செல்லம்மா...செல்லம்மா" என்று அழைத்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான் அவன்.
"வந்துட்டிங்களா ..இங்க தான் இருக்கேன் நீங்க செல்லம்மா, செல்லம்மான்னு கூப்பிட்டு என் பேரே எனக்கு மறந்து போயிடுச்சு ...யாரு என் பேர சொல்லிக் கூப்பிட்டாலும் திரும்பி பாக்கறதே இல்ல யாரையோ கூப்பிடறாங்கன்னு கண்டுக்காம விட்டுடறேன் " என்றாள் அவள்.
"சரி டி மா இனி உன்ன உன் பேர சொல்லியே கூப்பிடறேன் சரியா " என்கிறான் அவன்.
"வேணா வேணா செல்லம்மான்னே கூப்பிடுங்க ... நீங்க செல்லமா கூப்பிடுற 'செல்லம்மா' ங்குற பேர் நீங்க கூப்பிட்டு கூப்பிட்டு என் ரத்தத்தில கலந்துடுச்சு தெரியுமா??... செல்லம்மான்னு நீங்க கூப்பிடுறப்போ அதுல உங்க காதல் அப்படி வழிஞ்சு வருது " என்கிறாள் அவனை ஒரு கையால் வளைத்து மறு கையால் அவன் சட்டை பொத்தானை அவிழ்த்தபடி..
"சரிடி செல்லம்மா" என அவன் அவளை இன்னும் இறுக்கமாக அணைத்து முத்தமிட்டான்.
காதல் பொங்கி வழியும் தம்பதி அவர்கள் ..
அவன் பணிக்கு செல்லும் நாட்களில், மதிய நேரத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் "சாப்பிட்டியா" என்று கேட்டுக் கொள்வார்கள். தான் சாப்பிடும் நேரத்தில் அவளும் சாப்பிட வேண்டும் என்று அவனும், பணிகளுக்கு இடையே புகைப்படம் எடுத்து அனுப்புவதும் . ஒவ்வொரு மணி நேரத்திற்கு பல குறுஞ்செய்திகளோடு அத்தனை காதலையும் எண்ணங்களையும் பிரியங்களையும் பறிமாறிக் கொள்வார்கள்.
வேலை நேரங்களில் ஒரு முறையாவது அவனிடமிருந்து தொலைபேசி அழைப்பு அல்லது குறுஞ்செய்தி எதிர்பார்ப்பாள். இல்லை எனில் கோபம் தான். சண்டை தான் .
"என்னை பத்தி உங்களுக்கு நெனப்பே இருக்காதா " என அவனிடம் அவள்
"இருக்கு டி செல்லம்மா என் வேல அப்படி... புரிஞ்சுக்கோடி மா " என அவனும் .
"வேலையோடு இருக்க வேண்டியது தானே பின்ன என்ன ஏன் காதலிச்சிங்க கல்யாணம் செஞ்சீங்க " என்று காதல் வாக்குவாதம் அவ்வப்போது சுவாரஸ்யத்தை கொடுக்கும்.
அப்படி ஒரு சிறிய இடைவெளியை கூட தாங்க முடியாத காதல் அவன் மேல் அவளுக்கு.
அவள் அவனிடம் தினமும் எதிர்பார்ப்பது ஒரு முழம் பூ மட்டுமே.
"இன்னிக்கி பூ வாங்கினிங்களா" வீட்டிற்கு வந்ததும் கேட்பாள்.
"ஆமா டி செல்லம்மா இந்தா" என்று அவன் தந்ததும் அதை வாங்கி தலையில் வைத்து அழகு பார்ப்பாள், தன்னவன் வாங்கித் தந்தது என்ற மகிழ்ச்சியுடன். மறுநாள் வாடிய பூவை கூட தூக்கிப்
போட மனம் வராது அவளுக்கு.
ஒரு சில நாளில் , "இல்ல டி நேரமில்ல செல்லம்மா" என்று அவன் சொன்னால், அவனின் நிலை தெரிந்தே கோபத்தை தொடர்வாள் காதல் நிறைந்த அவனது சமாதானத்தை எதிர்பார்த்தபடி.
ஒரு நாள் அவளது தோழி ஒருத்தி அவளிடம் , "நான் ஒரு புத்தகம் படிச்சேன். புதுமைப்பித்தன் சிறு கதைகள். அதுல "செல்லம்மாள்" ங்குற தலைப்புல ஒரு கதை படிச்சேன். நல்லா இருக்கு வாங்கி படி." என்றாள்.
வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அவனது தேவைகளை நிறைவேற்றி பின் அந்த புத்தகத்தை பற்றி சொல்கிறாள். " என் friendu ஒருத்தி சொன்னா .. அவ ஒரு புக் படிச்சாளாம் ... புதுமைப்பித்தன் சிறு கதைகளில் என் பெயர் ( செல்லம்மா ) தலைப்பு கொண்ட ஒரு கதையாம் ரொம்ப நல்லா இருக்காம்.. வாங்கி தரிங்களா" என்கிறாள்.
"என்ன உன் பேர்ல கதையா... என் செல்லம்மா பேர்ல கதையா.... நம்ம கதை போல காதல் கதையா.. நம்ம கதை போல காதல் நிறைந்தது இதுவரை இல்லை இனிமேலும் வராது டா" என்கிறான் அவன்.
"விளையாடாதிங்க வாங்கி தாங்க" என்று அவள் கொஞ்ச...
"என் செல்லம்மா பெயர் என்றால் விடுவேனா" என அவளை இழுத்து முத்தமிட்டு அந்த புத்தகத்தை வாங்க செல்கிறான் அவன்.
கடைக்கு சென்று புத்தகத்தை கையில் வாங்கிய அவன், செல்லம்மாவுக்கு முன் நாம படித்து பார்த்து விடலாம் என படிக்கிறான். ஆவலோடு படிக்க தொடங்கிய அவன் முகம் படிக்க படிக்க வாடத் தொடங்குகிறது. கண்கள் கலங்கி அவனை அறியாமல் கண்ணீர் வழிகிறது. புத்தகத்தை வீட்டிற்கு எடுத்து செல்லாமல் தூக்கி எறிந்து விட்டு வருகிறான்.
வீட்டுக்கு வந்த அவனிடம்,"புக் எங்க" என்கிறாள்.
"இல்ல நா வாங்கல " என்கிறான்
"ஏன் வாங்கல" என வழக்கம் போல அவளுக்கு கோபம், சண்டை.
"வாங்கலைன்னா விடு" என அவனும் கோபமாக பதிலளிக்க..
"ஆசைப் பட்டு ஒன்னு கேட்டேன் அத கூட வாங்கி கொடுக்க முடியாதா ? நம்ம காதலப் போல தான இருக்கும் அந்த புக்குல , உங்களுக்கு என் மேல காதலே இல்லையா போங்க நான் கொடுத்து வெச்சது அவ்ளோ தான் " என்று சண்டைபோட்டபடியாக தனியாக போய் படுத்துக் கொண்டாள் .
சற்று நேரத்தில் அவன் அவள் அருகே வந்து பார்க்கிறான் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்து இருந்தாள் .
அவன் உறங்கும் அவள் நெற்றியில் முத்தமிட்டு விட்டு பேசத் துவங்கினான் ( உறக்கத்தில் அவளுக்கு இவன் பேசுவது தெரியாது )
"அடியே என் பேரழகி அந்த கதையில , நம்மளப் போல காதல் நிறைந்த தம்பதி பத்தி தான் இருந்துச்சு , . கல்யாணம் ஆன பின்னால தனிக்குடித்தனம்.. காதல்.. வேலை என அழகாக கதை செல்ல... திடீர்னு அந்த செல்லம்மாளுக்கு நோய் வந்து ... செலவு செய்ய பணம் இல்லாம கஷ்டப்பட்டு.. . கடைசியில அவ செத்தே போறாள்" .
"அதப் படிச்ச எனக்கு கண்ணுல தண்ணி தண்ணியா அழுகை தான் டி வந்துச்சு . கதை தான்னாலும் செல்லம்மாள் செத்துடுறாங்குற விஷயத்த என்னால தாங்கிக்க முடியல . என்னை பொறுத்தவரை செல்லம்மான்னா நீ மட்டும் தான், உன் ஒரு நொடி பிரிவும் என்னால தாங்கிக்க முடியாது நான் வருத்தப்படறத உன்னாலும் தாங்க முடியாது என்பது எனக்கு தெரியும். எல்லா பெண்களும் தன் கணவன் தன்னை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் கடைசிவரை அவன் துணை இருக்கணும்னு தான் நினைப்பாங்க. ஆண்களும் அப்படித்தான். தன் மனைவி தன்னால் எந்த வேதனையும் படக்கூடாதுன்னு நினைப்பாங்க. அவள் பிரிவை எந்த கணவனாலும் தாங்க முடியாது. உன்ன நான் இனி இன்னும் நல்லா பார்த்துக்குவேன் டி செல்லம்மா...
இல்லை, *இனி உன்னை செல்லமான்னு கூப்பிட மாட்டேன் டி மா...* ".
எனக் கூறி மீண்டும் அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.
~மகி
Tweet | ||||
No comments:
Post a Comment