Tuesday, March 17, 2015

இளம் தூரிகை தேவதை இலட்சியாமதியழகி

" இளம் தூரிகை தேவதை "

S,இலட்சியாமதியழகி

பாண்டிச்சேரியை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். மிக மிக அழகான ஊர். அதிக பெருமைகள் நிறைந்த ஊர். அங்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக ஒரு சின்னஞ்சிறுமியின் திறமையைப் பற்றித் தெரிந்துக்கொள்வோம் .
சரவணக்குமார், ஆதிரை தம்பதியினரின் ஒரே செல்லப் புதல்வி தான் இலட்சியமதியழகி. இப்போது இந்தச் சிறுமிக்கு வயது 13 ஆகிறது , ஆனால் 3 வயதில் இருந்தே இந்த குட்டிப் பெண்ணுடைய அட்டகாசமான திறமைகளுக்கு அளவே இல்லை.



இலட்சியாமதியழகி இந்த பெயருக்கு ஏற்றார்ப் போலவே அழகும் தீட்சண்யமான பார்வையும் கொண்டு இருக்கிறாள். இவளது திறமையும் பற்றி சொல்வதென்றால் நேரம் பற்றாக்குறையாகத்தான் இருக்கும். அவ்வளவு நீளமான பட்டியலைக் கொண்டு இருக்கிறாள். சற்று மூச்சை ஆழமாக விட்டுக் கொள்ளுங்கள். இப்போ படிங்க...

பேச்சாற்றல் :
லிட்டில் ஏஞ்சல் பள்ளியில் நடந்த ஆண்டுவிழாவில் LKG படித்தபோது இவளது பேச்சாற்றலை வெளிப்படுத்தும் விதமாக தனது முதல் மேடை பேச்சை ஆரம்பித்தார். இன்று வரை தனது அபரிமிதமான பேச்சாற்றலால் பல சிறப்பு விருந்தினர்களையும் அசத்தி வருகிறாள்.

விளையாட்டு :
இறகு பந்தில் இவள் வாங்கிய பதக்கங்களும் பரிசுகளும் மிகமிக அதிகம். அதிலும் பள்ளிகளுக்கான தேசிய அளவிலான போட்டிகளில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாண்டிச்சேரியில் இரண்டாம் இடத்தில் இருக்கிறாள் . அதமட்டுமின்றி ஜம்மு,காஷ்மீர், சண்டிகர் ஆகிய இடங்களில் நடைபெற்ற இறகுப் பந்து போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களையும் பரிசுகளையும் குவித்துள்ளார்.

நாட்டியம் :
முறையாக பரதநாட்டியம் கற்று இருக்கிறாள், இவளின் முக பாவமும், அபிநயம் பிடிக்கும் அழகும்.. அடடா ! இவளின் நாட்டிய திறமைக்கு சான்றாக பொதிகை தொலைக்காட்சி இவளது நடன நிகழ்ச்சியை ஒளிபரப்பியது .

சிறப்பு நிகழ்ச்சி :
உள்ளூர் தொலைக்காட்சியில் விழாக்காலங்களில் சிறப்பு நிகழ்ச்சியாக, இவள் மக்களுடன் தொலைபேசியில் நேரடியாக கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்கிறாள்.

தேசப்பற்று :
இது மட்டுமா..! இந்த குட்டிப் பெண்ணுக்கு தேசப்பற்றும் மிக அதிகம்.
சாரணர் இயக்கத்தில் இருக்கும் இலட்சியாமதியழகி இந்தியா பாகிஸ்தான் எல்லைக்கு சென்று அங்கு ஒரு வாரம் நடைபெற்ற " தேசிய ஒருமைப்பாட்டு " முகாமில் கலந்து கொண்டு தன் தேசப்பற்றை நிரூபித்திருக்கிறாள்.

ஓவியம் :
இவளுடைய திறமைகளில் மிக முக்கியமானது ஓவியம் தீட்டுவது. இவளது தந்தை சரவணக்குமார் ஒரு ஓவிய ஆசிரியர் புலிக்குப் பிறந்தது பூனையாகவா இருக்கும். LKG படிக்கும்பொழுது நடந்த ஓவியப் போட்டியில் தானே சுயமாய் சிந்தித்து காபி பொடியில் நீரைக் கலந்து இவள் தீட்டிய அழகான ஓவியம் பலரது பாராட்டுக்களைப் பெற்றது. அதன்பின் ஓவியத்தில் தன் திறமைகளை வெளிக்காட்டத் தொடங்கிய இலட்சியாவின் படைப்புகள் அவளது 10 வது வயதிலேயே தனியாகக் காட்சிப் படுத்தப்பட்டது (exibition) குறிப்பிடத்தக்கது.



படிப்பு :
படிப்பில் முதல் இடமும் இவளுக்கு தான். இவள் LKG முதல் நாள் வகுப்புக்கு சென்றது முதல் தற்போது 8 ஆம் வகுப்பு வரையிலும் பள்ளி நாட்களில் எதற்காகவும் விடுப்பு எடுத்ததே இல்லை.

பாராட்டு :
இலட்சியாமதியழகியை பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் , முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம் முதல் நம்ம ஊர் பாக்கியராஜ் முதல் கொண்டு பாராட்டாத பிரமுகர்களே இல்லை ஒரு விழாவில் பாக்கியராஜ் " பல்கலை அரசி " என்று பட்டமும் கொடுத்து கௌரவப்படுத்தி இருக்கிறார் .

இவ்வளவு திறமைகளுக்கு சொந்தமான அந்த குட்டிதேவதை இலட்சியாமதியழகியிடம் இதெல்லாம் எப்படி டா சாத்தியம் என்றபோது :
" அம்மா அப்பா இருக்காங்க எதைக் கேட்டாலும் செய்து கொடுப்பாங்க . ஆசிரியர்கள் என்னுடைய ஆர்வத்தை முழுமையாக அறிந்து என்னை மேலும் மேலும் ஊக்கப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். ' நல்லது எது நினைத்தாலும் எல்லோரும் நம்ம கூட இருப்பாங்கன்னு ' அம்மா அப்பா சொல்லுவாங்க. என்னுடைய வெற்றிக்குக் காரணம் என்னுடைய ஆர்வமும் எனக்கு ஊக்கம் கொடுக்கும் இவர்களும் தான் ".

இலட்சியாமதியழகியின் தந்தை சரவணக்குமாரும் ஒரு ஓவிய ஆசிரியர். அவரிடம் ' உங்கள் மகளுக்கு ஏதேனும் சிறப்பு பயிற்சி கொடுத்தீர்களா? ' எனக் கேட்ட பொழுது புன்னகையுடன் மறுத்தார்.

" எங்கள் மகள் இலட்சியாமதியழகிக்கு இயற்கையிலேயே ஓவியம் வரையும் திறமை இருப்பதை அறிந்துக் கொண்டேன். அதில் சில திருத்தங்களுக்கான பயிற்சி மட்டுமே கொடுத்தேன். இலட்சியா இடதுகை பழக்கம் கொண்டவள். இடது கையில் வரைய வேண்டாம் என்று மட்டும் ஆரம்பத்தில் கண்டித்து இருக்கிறேன். ஆனாலும் அதுவே அவளுக்கு சிறப்பம்சமாக இருக்கிறது. நான் நடத்தும் ஓவியப்பள்ளியை இப்போது பெரும்பாலும் அவள் தான் கவனித்துக்கொள்கிறாள். அது மட்டுமல்ல பணம் செலுத்த முடியாத ஏழை மாணவமாணவிகளை தனி அக்கறையுடன் கவனித்துக் கற்பிக்கிறாள் " என்று கூறினார்.

இலட்சியாமதியழகியின் அம்மா ஆதிரை இவரைப்பற்றி கூறும் பொழுது "என் மகளுக்கு கடவுள் இயற்கையிலேயே நல்ல திறமைகளை கொடுத்துள்ளார். அவளுடைய ஆர்வத்தை அறிந்துக் கொண்டு நாங்கள் அவளை ஊக்கப்படுத்தினோம் . எங்களுக்கு இவ்வளவு பெருமைகளை அள்ளித்தரும் எங்கள் செல்லமகள் உண்மையிலேயே கடவுள் தந்த வரமே" என்றார் கண்களில் பெருமிதம் பொங்க.. அந்த பெருமிதம் இலக்கியாமதியழகியின் தந்தை முகத்திலும் பிரதிபலித்தது.

இவ்வளவும் சரிதான். உன்னுடைய எதிர்கால இலட்சியம் என்னடா? என்று இலட்சியாமதியழகியிடம் கேட்டதற்கு பளீர் என புன்னகையோடு சொன்னாள் " நான் IAS ஆகப்போறேன் ".. அப்பப்பா... கண்களில் தான் என்னே உறுதி..!!!

இவ்வளவும் சாதித்த இலட்சியாவால் அது மட்டும் முடியாதா என்ன??

நமது வருங்கால கலெக்டரையும் அவரின் பெற்றோரையும் வாழ்த்தாமல் விடலாமா ?

இலட்சியா நிச்சயம் தனது இலட்சியம் எட்டுவாள்..!

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..!

நீங்களும் வாழ்த்துங்கள்..!

~மகேந்திரன்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment