Saturday, March 09, 2024
காலத்தின் கட்டாயம்
Tuesday, February 20, 2024
நமக்கும் முதுமை உண்டு
*நமக்கும் முதுமை உண்டு*
ஐக்கிய நாடுகள் சபையின் ‘மக்கள் தொகை நிதியம்’ என்ற அமைப்பு, ‘இந்தியா ஏஜிங் ரிப்போர்ட்’ என்ற பெயரில் கணக்கெடுப்பு நடத்தியது. அதில், இந்தியாவில் தற்போது 60 வயதுக்கும் மேற்பட்ட முதியோர்களின் எண்ணிக்கை, 14.9 கோடியாக உள்ளது. இது, மொத்த இந்திய மக்கள் தொகையில், 10.5 சதவீதமாக உள்ளது என, தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவைப் போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள வளரும் நாடுகளில், முதியோர் நலன் என்பது மக்களால் மட்டுமல்ல; அரசாங்கங்களாலும் கூட இரண்டாம் பட்சமாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. குறிப்பிட்ட வயதுக்கு மேல், அவர்களுக்கு மருத்துவக் காப்பீடு, வங்கிக் கடனுதவி உள்ளிட்ட குடிமகன்களுக்கான அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுகின்றன.
முதியோர் நலன் சார்ந்த சட்டங்களோ, திட்டங்களோ அவர்களுக்கு உதவும் வகையில் இல்லை. அவர்களுக்கான சலுகைகளும் கூட பெயரளவிலேயே உள்ளன. சில திட்டங்கள் இருந்தாலும், அவை போதுமானவையாக இல்லை.
தமிழகத்தில் மட்டும் ஏறக்குறைய, 1,500 முதியோர் காப்பகங்கள் இருக்கலாம். இதில் பெரும்பாலானவை பணம் செலுத்தி, பராமரிக்கப் படுபவை ஆக இருக்கின்றன. முதியோர் காப்பகங்களில், லட்சக்கணக்கானோர் தங்களது கடைசிக் காலத்தை வலியுடன் கழிக்கின்றனர்.
காப்பகங்களில் வசிக்கும் முதியவர்கள் அனைவருமே பிள்ளைகளால் வீட்டை விட்டு துரத்தப்பட்டவர்கள் என்று சொல்லி விட முடியாது. வீட்டில் தனக்கான மரியாதை கிடைக்கவில்லை என்பதற்காக கோபித்துக் கொண்டு வெளியேறியவர்கள்; பிள்ளைகளுக்குப் பாரமாக இருக்க வேண்டாம் என்று தாமாகவே வெளியேறியவர்கள்; சில நேரங்களில் சில தவறுகளை செய்து விட்டு, மற்றவர்களை எதிர்கொள்ள தைரியம் இல்லாமல், வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள்; ‘என்னடா வாழ்க்கை’ என வெறுத்து, ஒரு நொடியில் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு வந்தவர்கள் என, பல வகையினர் உள்ளனர்.
அவர்களில் பலரும், ஒரு காலத்தில் நல்ல நிலைமையில் இருந்தவர்கள்; நன்கு படித்தவர்கள்; நல்ல உத்தியோகத்தில் செல்வாக்கோடு வாழ்ந்தவர்கள்.
நரை, திரை, பிணி, மூப்பு, சாக்காடு யாவருக்கும் பொதுவானது என்பதை உணராமல், முதுமையும் தள்ளாமையும் வந்து விட்டது என்பதற்காக, அவர்களை மரியாதைக் குறைவாக நடத்துகிறது இச்சமூகம்.
ஒரு மணி நேரம் சாலையில் நின்று கவனித்தால், ஆதரவற்ற முதியோர் பலரும் நம் கண்ணில் தென்படுவர். வறுமை காரணமாக, தங்கள் வயதையும் மீறி உழைக்கும் முதியவர்கள் சிலரையும் கவனித்திருப்போம்.
சாலையோரம் சிறு கடைகள் நடத்தும் முதியவர்கள் தென்பட்டால், அவர்களிடம் ரெண்டு வார்த்தை பேசிப்பாருங்கள். அதற்காகவே காத்திருந்தது போல தங்கள் மொத்த வாழ்க்கையையும் கொட்டித் தீர்ப்பார்கள்.
ஒவ்வொருவருக்குப் பின்னாலும், ஓராயிரம் சோகக் கதைகள் இருக்கும்.
இளம் வயதில் எல்லாமே அவர்களது கட்டுப்பாட்டில் இருந்திருக்கும். வீட்டையே அவர்கள் தான் கட்டி ஆண்டிருப்பார்கள். அவர்கள் சொல்வதே முடிவு; அவர்கள் வைத்ததே சட்டம் என்று இருந்திருக்கும். அந்த வீட்டுக்காகவும் குடும்பத்துக்காகவும் நிறைய உழைத்திருப்பார்கள். தன்னுடைய சுக துக்கங்களை தியாகம் செய்திருப்பார்கள்.
நாட்கள் செல்லச் செல்ல, வயது முதிர்வு காரணமாக சம்பாதிக்க முடியாமல் போகும்போது, அவர்களால் எந்த வேலையும் செய்ய முடியாமல் போகிறபோது, சாதாரண வேலைகளுக்கு கூட, அடுத்தவர்களை எதிர்பார்க்கும் நிலை வரும்போது, வீட்டில் அவர்களுக்கான முக்கியத்துவம் ரொம்பவே குறைந்து விடுகிறது. அவர்களை பாரமாக, தேவையற்ற சுமையாக பலரும் கருத ஆரம்பித்து விடுகிறார்கள்.
அவர்கள் இயலாதவர்களாகி விட்டார்கள் என்ற ஒரே காரணத்துக்காக, நமக்கு செய்த அனைத்து நன்மைகளையும், நமக்காகப் பட்ட கஷ்டங்களையும் ஒரு நொடியில் துாக்கி எறிந்து விட்டு, முதியோர் இல்லத்தில் சிலர் விட்டு விடுகின்றனர்.
வசதி இல்லாதவர்கள் இலவச காப்பகங்களில் விடுகிறார்கள். சிலர் அவர்களைக் கைவிட்டுத் துரத்தி விடுகிறார்கள். அவர்கள் தெருவில் ஆதரவற்ற நிலையில் அலையும்போது மீட்கப்பட்டு, தொண்டு நிறுவனங்கள் நடத்தும் காப்பகங்களில் சேர்க்கப்படுகிறார்கள்.
வசதி படைத்தோர் தங்களது பெற்றோரை ‘பெய்டு ஹோம்’ என்ற அடிப்படையில், பணம் செலுத்தி தங்க வைக்கக்கூடிய காப்பகங்களில் சேர்த்து விடுகிறார்கள். அதன் மூலம் தங்களுடைய கடமையைச் சிறப்பாக செய்து விட்டதாகவும், அவர்கள் ஏதோ பெரிய மனது பண்ணி செலவு செய்து பார்த்துக் கொள்வதாகவும், பெருமிதம் கொள்கிறார்கள். இதுவுமேப் பெற்றோரைக் கைவிடுதல் தான்.
வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகள் மருத்துவமனைகளில் உயிருக்கு போராடும் பெற்றோரைப் பார்க்கக் கூட வருவதில்லை. அவர்கள் இறந்து விட்டால், உடலை அடக்கம் செய்யாமல், தாங்கள் வரும்வரை பாதுகாக்கச் சொல்கின்றனர்.
இன்னும் சிலரோ என்னால் வர முடியாது; பணம் அனுப்பி விடுகிறேன். நீங்களே அடக்கம் செய்து விடுங்கள் என்று கூறுகின்றனர். தங்கள் பெற்றோருக்கு தாங்கள் செய்ய வேண்டிய இறுதிச் சடங்கு மற்றும் இறுதி மரியாதையைக் கூட செய்ய வராமல் பணத்தைத் தேடி ஓடிக்கொண்டு இருக்கின்றனர்.
காப்பகங்களில் வசிக்கும் முதியோர்களை விட, வீடுகளில்
தனியாக வசிக்கும் முதியோர்களின் நிலை இன்னும் பரிதாபம். தனிமைக் கொடுமையால் தற்கொலை செய்து கொள்வோரும் உண்டு.
சிலர் வீட்டிலேயே இறந்து, யாருக்கும் தெரியாமல், உடலில் இருந்து துர்நாற்றம் வீசிய பிறகே, அக்கம் பக்கத்தினர் மூலம் பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் தெரியவரும் பரிதாபமான சூழல் காணப்படுகிறது.
காப்பகங்களில் இருக்கும் முதியோர்களைப் பார்த்தால், அவர்கள் நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருப்பதாகத் தோன்றும். இன்னும் சொல்லப்போனால் வீட்டில் சில நேரங்களில் சுடு சொற்கள், அவமானங்கள், புறக்கணிப்பைத் தாங்கிக் கொள்வதை விட, இதுவே மேல் என்று அவர்களே கூட நினைக்கக்கூடும்.
இங்கே அவர்களுக்கு பாதுகாப்பான உறைவிடம், உடைகள், நேரத்துக்கு உணவு, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைக்கிறது. தங்கள் வயதை ஒத்த நண்பர்களும் இருக்கிறார்கள். நடப்பது, சாமி கும்பிடுவது, செய்தித்தாள் மற்றும் புத்தகங்கள் படிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது என மகிழ்ச்சியாகவே இருப்பார்கள்.
வெளிப்பார்வைக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், உள்மனதுக்குள் அவர்களுக்கு தங்கள் குடும்பத்தை பிரிந்த கஷ்டம், பிள்ளைகள் பேரப்பிள்ளைகள், தங்கள் உறவினர்களைப் பார்க்க இயலாத ஏக்கம் அதிகமாகவே இருக்கிறது.
முதியோர் இல்லங்களில் எத்தனை வசதிகளை செய்து கொடுத்தாலும், ரத்த உறவுகளுக்கு ஈடாகாது. காப்பக வசதிகளால் மகிழ்ச்சி அடைந்தாலும், அவர்களைக் கைவிட்டவர்களுக்கு சாபமே மிஞ்சும். வயது முதிர்வு மற்றும் தள்ளாமை காரணமாக, அவர்கள் நமக்குத் தேவையில்லை என நினைக்கிறோம். இப்போது தான், அவர்களுக்கு, நாம் தேவை என்பதை நம் வசதிக்காக மறந்து விடுகிறோம்.
முதியோர்கள் நம்மிடம் பணத்தை எதிர்பார்ப்பதில்லை. குறிப்பிட்ட வயதுக்கு மேல் பணம், அவர்களுக்குப் பயன்படாமல் போய் விடும். நம்மிடம் எதிர்பார்ப்பது ஆறுதலான சில வார்த்தைகள். அதைக்கூட கொடுக்க நம்மில் பலருக்கு நேரமோ மனமோ இருப்பதில்லை.
பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் மீது நடத்தும் வன்கொடுமைகள் பற்றி எந்தப் பெற்றோரும் பெரும்பாலும் யாரிடமும் புகார் அளிப்பதில்லை. முதியோர் பாதுகாப்பு சட்டங்கள் இருப்பது தொடர்பான விழிப்புணர்வு இருந்தாலும் கூட தங்கள் பிள்ளைகள் என்ற பாசத்தாலும், அவர்கள் எந்த பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தினாலும் சகித்துக் கொண்டு வாழ்கின்றனர்.
அவ்வாறு உள்ள முதியோர்களைக் கண்டறிந்து அவர்களின் நலன் காக்க அரசாங்கம் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இளம் தலைமுறையினர் தங்கள் பெற்றோரை நல்ல முறையில் கவனித்துக்கொள்ள இது போன்ற நடவடிக்கைகள் ஒரு எச்சரிக்கையாக அமையும்.
வயதாகும்போது உடல் நல பாதிப்போடு மனநல பாதிப்பும் ஏற்படுகிறது. அதை புரிந்துகொண்டு, அவர்களை நடத்த வேண்டும். உணவு, உடை, உறைவிடம் மட்டும் வழங்கினால் போதாது. போதிய மருத்துவ வசதிகள் கிடைப்பதற்கு குடும்பத்தினரும், அரசாங்கமும் முயற்சியெடுக்க வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் நமது அரசாங்கம் கருவுற்றிருக்கும் பெண்கள், சிறு குழந்தைகள், வளர் இளம் பெண்கள் நலன் மற்றும் ஆரோக்கியத்தை கண்காணித்து பேணுவதுபோல், மூத்தக் குடிமக்களையும் கண்காணித்து அவர்களின் நலம் பேண முயற்சி மேற்கொண்டால், பலரும் பலனடைவர்.
முதியோர் நலனுக்கென்று தனியாக ஊழியர்கள் நியமித்து, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் முதியோரை வீட்டிலேயே சந்தித்து, அவர்களது அடிப்படை தேவைகளை நிறைவேற்ற, அரசே ஏற்பாடு செய்ய வேண்டும். வீடு தேடி மருத்துவம் திட்டத்தின் சேவையை முதியோரை சென்றடைகிறதா என்பதை பொது சுகாதாரத்துறை உறுதிப்படுத்த வேண்டும்.
தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இக்காலகட்டத்தில், மருத்துவமனை செல்ல இயலாத முதியோருக்கு, ‘வீடியோ கால்’ போன்ற வசதிகள் மூலமாக கூட மருத்துவர்களின் ஆலோசனை கிடைக்க வழிவகை செய்யலாம்.
பிள்ளைகள் குறைந்தபட்சம் ஒரு நாளில் குறிப்பிட்ட மணி நேரமாவது பெற்றோர்களுடன் நேரம் செலவிட வேண்டும். வெளியூர்களில் வசித்தால் கூட அலைபேசியில் தினம் ஒரு முறையாவது பேசி அவர்களை மகிழ்விக்கலாம்.
நம்மைத் துாக்கிச் சுமந்தவர்களை, சுமையாக நினைத்துத் துாக்கிப் போட்டு விடாமல், கொஞ்சமாவது மன நிறைவுடன் அவர்கள் தங்கள் கடைசிக் காலத்தைக் கழிப்பதற்கு, நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை சிந்தித்து செயல்படுவோம்!
இணையத்தில் வந்த ஒரு கதையில்
ஒரு முதியவர் மட்டும் தன்னந்தனியாக வசிக்கிறார். அக்கம் பக்கத்தினர் கூட அவரது வீட்டிற்கு வருவதில்லை. அவருக்கோ, வெளியே சென்று வரும் அளவுக்கு உடல்நலம் இல்லை. அவரது வீட்டுக்கு தினமும் வந்து செல்லும் ஒரே ஒருவர் பேப்பர் போடும் பையன் மட்டும்தான்.
வழக்கமாக, பேப்பர் போடுவதற்காக கதவோரம் வைத்திருக்கும் பெட்டி இல்லாததால், வீட்டுக்குள் எட்டிப் பார்க்கிறான் அந்தப் பையன். அவனை அழைத்து,
‘இனி, பேப்பரை என் கையிலேயே கொடு. கூடுதலாக பணம் வேண்டுமானாலும் தந்து விடுகிறேன்’ என்கிறார்.
‘பேப்பர் வாங்க வராமல், தனக்கு ஏதாவது நடந்து விட்டால் அக்கம் பக்கத்தில் சொல்லி விடு; என் பிள்ளையை தொடர்பு கொண்டு தெரிவித்து விடு’ எனக்கூறி, தனது வாரிசுகளின் கைப்பேசி எண்ணை, அந்த பையனிடம் தருவதாக அந்த கதை இருக்கும்.
அந்த அளவுக்கு, இரண்டு வார்த்தை பேசக்கூட ஆள் இல்லாமல், பல முதியவர்கள் இன்றைய இயந்திரத்தனமான உலகத்தில் வாழ்கிறார்கள். அவர்களது வலியை உணர, நமக்கும் முதுமை வரவேண்டும்.
ஒரு உண்மை சம்பவத்தை இங்கே பதிவு செய்கிறேன். நகரின் மையத்தில் நட்சத்திர வசதிகளோடு கூடிய ஒரு அப்பார்ட்மெண்ட். லட்சக்கணக்கில் பென்ஷன் வாங்கிக் கொண்டிருந்தாலும், தனியாக வசிக்கும் சூழலில் நிறைய முதியவர்கள் வசிக்கின்றனர்.
தேவையான உதவிகளை செய்து தரும், தனியார் நிறுவன ஊழியர், அவர்களை ஒருங்கிணைத்து ஒரு ‘வாட்ஸ் அப்’ குழு அமைத்திருந்தார். தினமும் ‘குட் மார்னிங்’, ‘குட் நைட்’ என குறுஞ்செய்தி போடும் வழக்கத்தை ஏற்படுத்தி வைத்திருந்தார்.
தினமும் மெசேஜ் போடக்கூடிய ஒரு முதியவர், ஒரு நாள் முழுவதும் எந்த பதிவும் போடவில்லை. சந்தேகப்பட்டு சென்றுபார்த்தபோது, திடீரென கை, கால்கள் இழுத்துக் கொண்டதால், துாக்கி விடக்கூட ஆளின்றி, தரையில் விழுந்து கிடந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ‘வாட்ஸ் அப்’ குழு இல்லாமல் இருந்திருந்தால், என்ன நடந்திருக்கும் என நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
இறுதியாகப் பிள்ளைகளுக்கு ஒரு வேண்டுகோள். கடைசி காலத்தில் உங்கள் பெற்றோரை நேசியுங்கள்; தனியாக தவிக்க விடாதீர்கள். அவர்கள் கால பொக்கிஷம். உரையாடுங்கள்; கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். பெற்றோருடன் உங்களது வாரிசுகளை விளையாட வையுங்கள். அவர்களிடம் கதை கேட்கச் சொல்லுங்கள்; அவர்களுக்கும் வரலாறு தெரியட்டும். நாளை நமக்கும் முதுமை உண்டு என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள்.
~ ஈரநெஞ்சம் மகேந்திரன்
Tuesday, March 10, 2015
தன்னம்பிக்கை இஸ் தி சீக்ரெட் ஆப் மை எனர்ஜி ~ லட்சுமி பாட்டி
" வயசாகிடுச்சு கண்ணு சரியா தெரியலை, சர்க்கரை வியாதி வேற, பசங்களுக்கு பாரமா இருக்கேன் என்னால என்ன பிரயோஜனம் இருக்கு " இப்போது இருக்கும் பெரும்பாலான முதியோர்கள் இப்படித்தான் தங்களது இயலாமையில் புலம்பி வேதனையை கொட்டித் தீர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சில தாத்தா பாட்டிக்கள் பேச ஆரம்பித்து விட்டால், 'அந்தக் காலத்துல எல்லாம் நாங்க' என்று ஆரம்பிக்கும் போதே காதைப் பொத்திக் கொண்டு ஓடிவிடுவார்கள் இளவட்டங்கள் . நாளை 60 வயது தாண்டிவிட்டால் நாமும் இப்படித்தான் புலம்ப ஆரம்பித்து விடுவோம். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏன் என்றால் இன்றைய காலச் சூழல் அப்படி .
ஆனால் கோவையில் சிங்கநல்லூர் அருகே உள்ள உப்பிளிபாலயத்தில் M.லட்சுமி பாட்டி 60 இல்லைங்க இந்த மாதம் முடிந்தால் அவங்களுக்கு வயது 70 இவங்களை பற்றி அப்படி என்ன சுவாரஸ்யம் இருக்கும் என நினைக்குறீங்களா ... 70 வயது என்பது தள்ளாத வயதல்லவா..! ஆனால் அந்த தள்ளாத வயதிலும் தடகள வீராங்கனையாக பதக்கங்களை தள்ளிக்கிட்டு வராங்க..! இவங்க நல்ல சமூக சேவகியும் கூட, அது மட்டும் இல்லைங்க ஊர் மெச்சும் பாசக்காரியும் கூட... அறிமுகம் போதும், இவங்களை பற்றி கொஞ்சம் விரிவா சொல்றேன்..!
மருதாசலம், கன்னியம்மாள் அவர்களுக்கு இரண்டாவது மகளாக பிறந்தவங்க தான் இந்த லட்சுமி. இவங்களுக்கு மூத்தவங்க ஒரு அக்கா இருக்காங்க அவங்க நம்ம லட்சுமி பாட்டி 4 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது திருமணமாகி கணவர் வீட்டுக்கு போய்ட்டாங்க, தம்பி இரண்டு பேர் தங்கை இரண்டு பேர். ஒரு தங்கை கைக்குழந்தையாக இருக்கும் பொழுது அப்பா மருதாச்சலம் காலமாகி குடும்ப பாரம் இவங்க மேல இறங்க படிப்பை 5 ஆம் வகுப்போடு நிறுத்திவிட்டு தனது தாயாரோடு வீட்டு வேலைக்கும், காட்டு வேலைக்கும் சென்று தம்பி தங்கையரை படிக்க வைத்து கரைச்சேர்த்தார். அக்காலத்தில் பெண்களுக்கு திருமணம் 10 வயது 12 வயதினிலே முடித்து விடுவார்கள் அப்படி இருக்க இவங்க குடும்ப சூழலின் காரணமாக திருமணம் தள்ளிப்போவது அறியாது சமூதாயம் இவங்க மேல பல பழிகளை சுமத்தியது. அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தனக்கேற்ற கணவராக சண்முகம் என்ற பொதுநலத்தின் மீது அக்கறைக் கொண்ட ஒரு நல்ல மனிதரை தனது 27 ஆம் வயதில் மணமுடித்தார்.
லட்சுமி பாட்டி சமூதாய சிந்தனை கொண்டவராக இருந்ததால் கணவர் சண்முகம் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார். இதனால் 1973 ஆம் ஆண்டு ஜனநாயக மாதர் சங்கத்தில் சேர்ந்து சமூதாயத் தொண்டாற்ற துவங்கினார். 1989 - 1994 அறிவொளி இயக்கத்தில் இணைத்து கல்விக்காக தம்மை அற்பணித்தார். அதன் பிறகு பொதுமக்களுக்காக, அரசாங்கத்திடம் இருந்து பல உதவிகள் வாங்கித் தருவதற்காக போராடி வந்தார். இதனாலேயே 2002 இல் இவர் இருக்கும் பகுதியான உப்பிளிப்பாலயத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடந்த தேர்தலில் வெற்றிப்பெற்று இயக்குனராக பதவி வகித்தார். பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்த அந்த வங்கி இவரது முயற்சியினால் பொதுமக்களிடையே முதலீடுப் பெற்று நல்ல நிலைமைக்கு உயர்த்தினார். அதோடு மட்டுமல்லாமல் அரசு உதவியுடன் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த கூட்டுறவு வங்கி, சொந்த கட்டிடத்தில் இயங்க காரணமாகினார். அத்துடன் மூன்று கூட்டுறவு அங்காடியும் இவரது முயற்சியால் அப்பகுதிக்கு கொண்டு வந்தார்.
அது மட்டும் இல்லைங்க நல்ல மேடை நாடகக் கலைஞராகவும் இருந்து சும்மா, வாங்கமாட்டோம் வரதட்சணை , வேண்டாம்யா அதே வெள்ளை மாத்திரை , போன்ற நாடகங்களையும் இயற்றி நடித்தும் இருக்கிறார்.
இப்படி 62 வயது வரை மக்களுக்காகவே பரபரப்பாக இருந்தவர். 2008 ஆம் ஆண்டு ஒரு கட்டத்தில் தனது 90 வயதான தாயார் உடல்நலம் குன்றவே இவரது வாழ்க்கை ஓட்டத்தை நிறுத்திக் கொண்டார் தனது தாயாரை கவனிப்பதற்காக. தனது தாயாருக்காக இவர் தான் தலைவராகவும், ஆலோசகராகவும் இருந்துவந்த 5 மண்டலங்களின் 256 சுய உதவிக் குழு உட்பட அனைத்து சமூகப்பணிகளிலும் இருந்து விடைபெற்றுக் கொண்டார். ஐந்து மாதங்கள் தனது தாயாருடனே இருந்து கவனித்து வந்தார். தாயார் காலமாக, அதன் பிறகும் வீட்டில் சிறிது காலம் அமைதியாக இருந்து வந்தார். அதற்கு அடுத்த வருடமாக கணவரையும் தனது மகனையும் பறிக்கொடுத்தார். கவலைகள் சூழ்ந்தாலும் தனிமைத் தன்னை தாக்கிவிடக் கூடாது என்றும் தான் யாருக்கும் பாரமாக இருந்துவிடக் கூடாது என்றும் மீண்டும் வீட்டு வேலைக்கு சென்று சொந்தக்காலில் நின்றார்.
அதன் பிறகு 63 வருடகாலம் தனக்குள் உறங்கிக்கொண்டிருந்த சிங்கத்தை தட்டி எழுப்பியதுப் போல 2008 இல் தமிழ்நாடு மூத்தோர் தடகள அமைப்பில் இணைந்து ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல், தட்டு எறிதல் , குண்டு எறிதல் என அனைத்துப் போட்டிகளிலும் மாநில அளவிலும், தேசிய அளவிலும் கலந்துக்கொண்டு பதக்கங்களை அள்ளி வருகிறார். இதுவரை கோவை, திருச்சி, சென்னை, தூத்துக்குடி என தமிழ் நாட்டில் மட்டும் இல்லாமல் டெல்லி, சண்டிகர், பூனா என வேறு மாநிலங்களுக்கும் சென்று இந்த தள்ளாத வயதினிலும் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். இருப்பது என்னவோ குடிசை வீடு தான், ஆனால் வீடு நிறைய பதக்கங்கள், கோப்பைகள், சான்றிதழ்கள் ஆகியவற்றால் நிரம்பியிருக்கின்றது. பேரன், பேத்திகள் வீட்டிற்கு வந்தால் விளையாடுவதற்கு இவர்கள் வென்று வாங்கிய கோப்பைகளும், பதக்கங்களும் தான் விளையாட்டுப்பொருட்கள்.
அந்தக் கால ஐந்தாம் வகுப்பு படிப்பு என்றால் இந்த காலத்தில் ஐ ஏ எஸ் போல ...
எங்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க என்ற போது,
" திருடாதிங்க, பொய் சொல்லாதிங்க, சின்னசின்ன விஷயத்தை எல்லாம் பெருசு படுத்தி உங்கள் மனதை நீங்களே காயப்படுத்திக்காதிங்க. பணம் பெருசு இல்லை ; மனந்தான் பெருசு, விட்டுக் கொடுத்து வாழுங்க, உழைத்து வாழுங்க, யார் மனதையும் நோகுடித்து வாழ்வதில் இன்பம் இல்லை. மற்றவர்களுக்காக நம்மை அர்பணிப்பதில் தான் இன்பம் இருக்கிறது " என்றார்.
இறுதியாக லட்சுமி பாட்டியிடம் உங்களுடைய இந்த சுறுசுறுப்பிற்கு காரணம் என்ன என்று கேட்ட போது சிரித்துக்கொண்டே...
" தன்னம்பிக்கை இஸ் தி சீக்ரெட் ஆப் மை எனர்ஜி " என்றார்.
~ மகேந்திரன்
Wednesday, October 02, 2013
தளர்ந்த வயதிலும் தளராத நம்பிக்கை ~ மகேந்திரன்
*நம்பிக்கைதான் வாழ்க்கை.
இன்றைய கால கட்டத்தில் காதல் தோல்வி, தேர்வில் தோல்வி, தொழிலில் நஷ்டம், என கொஞ்சமும் அர்த்தமற்ற காரணம் கொண்டு தம் உயிரை மாய்த்துக்கொள்ளும் மூத்த தலை முறை முதல் இளம் தலைமுறை
துன்பங்கள் இருந்தாலும் அதையும் தாண்டி பரந்து விரிந்த ஒரு உலகம் எப்போதும் காத்திருக்கும் எனும் தன்னம்பிக்கை நிறைந்தவர்களுக்கு, அப்படி ஒரு நம்பிக்கையை, உண்மையான பாசத்தை, தாய்மையை, விட்டுக்கொடுத்து வாழும் பண்பை தனது தள்ளாத 90 வயதில் நமக்குகற்று தருகிறார் இந்த தெய்வத்தாய் ரங்கம்மாள் பாட்டி.
“மரத்தை வைத்தவன்தான் தண்ணீரை ஊற்றவேண்டும்” என்பார்கள் இந்த சொல்லிற்கு ஏற்ப மரம்போல இருக்கு 60 வயது குழந்தைக்கு இன்னும் தாயாக அரவணைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் இந்த தாய்.
கோவையில் உள்ள ஒரு சிறிய கிராமம் சோமனூர், அங்கு இவருக்கு ஐந்து மகன்களும் ஒரு மகளும். கணவர் இறந்து நாற்ப்பது வருடம் .தற்போது 90 வயதைத் தாண்டி இன்னும் தாயாக இருக்கும் ரங்கமாள் பாட்டி . இவரை பற்றிதான் சொல்லப்போகிறேன்.
ஒரு குழந்தையை கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வளர்ப்பதற்கே படாத பாடு படும் நிலையில் ஆறு குழந்தைகளையும் தனக்குத் தெரிந்த வெள்ளை அடிக்கும் வேலையில் வரும் சொற்ப வருமானத்தில் அனைவரையும் ஓரளவிற்குப் படிக்கவைத்து நல்ல இடத்தில திருமணங்களையும் முடித்து வைத்து ஒய்வு எடுக்கப்போகும் காலத்தில், தனது கடைசி மகன் சுப்ரமணி இவருக்கு தற்போது 60 வயது. சுப்ரமணி தாத்தாக்கு 50 வயது இருக்கும்போது அவருக்கு ஏற்ப்பட்ட பக்கவாதத்தினால் நடக்க கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் தான் பார்த்துவந்த கட்டிட வேலையும் பார்க்க முடியாமல் போனது. வேலை இல்லை என்றால் வருமானம் எப்படி வரும்? வறுமை கஷ்டம் எல்லாம் தலை தூக்க துவங்கின . இனி இவரோடு இருந்தால் தன் குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிவிடும் என்று தன் இரண்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி விட்டார் சுப்பரமணி தாத்தாவின் மனைவி பாக்கியம்.
அதன் பிறகு பத்துமாதம் வயிற்றில் சுமந்தவள் காடுபோகும்வரை சுமந்துதான் ஆகவேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டது ரங்கம்மாள் பாட்டிக்கு. தாய்க்கு பின் தாரம் என்பார்கள். அந்த தாரமும் விட்டு போன பிறகு தாரத்துக்கு பின் மீண்டும் தாயாகி இருக்கிறார் ரங்கம்மாள் பாட்டி. பத்து மாதம் வயிற்றில் சுமந்தாள். பத்து வயதுவரை இடுப்பில் சுமந்தாள். அதுமட்டும் போதாது என மகனை இப்போது காலம் முழுதும் தோளில் சுமந்து, தன் கரங்களில் அவரது வாழ்க்கையை ஏந்தி காத்து வருகிறார். மிக கஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு மனைவி மற்றும் குழந்தைகளையும் பிரிந்து வாழும் இவருக்கும் இவரை அரவணைத்து வரும் இந்த தாய்க்கும் இவர்களது உறவினர்களும் உதவ முன்வரவில்லை. இதுதான் உலகம். நன்றாக வாழும் வரை சுற்றி நிற்கும் சுற்றம், கஷ்டம் என வரும்போது விட்டு செல்லும் சுற்றம், சுற்றம் மட்டுமின்றி சொந்தமாக வந்த மனைவியும் விட்டு போன பின் ஒரு கட்டத்தில் எந்த வருமானமும் இல்லாமல் பிச்சை எடுக்கும் சூழ்நிலைக்கு இவர்கள் தள்ளப்பட, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மூலமாக இவர்கள் கோவையில் உள்ள ஒரு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். அங்கும் இவர் தனது மகனை தானே கவனித்து பாராமரித்து வருகிறார்.
90 வயதான தாய் 60 வயதான குழந்தை பாசத்தின் உச்சம் இவர்களிடம் நேரில் காணும்போது வாழ்க்கை எவ்வளவு அர்த்தமுடையது என்பது புரியவருகிறது. ஆனாலும் யாருக்காக யார் இவர்கள் உயிர் சுமந்து இருக்கின்றார்கள் என விடையை தேடும் போது . மனிதர்களுக்கு மனித வாழ்வின் அர்த்தத்தை உணரவைக்கும் அவதாரம் என்பது விளங்கவைக்கிறது.
~மகேந்திரன்