Tuesday, March 10, 2015

தன்னம்பிக்கை இஸ் தி சீக்ரெட் ஆப் மை எனர்ஜி ~ லட்சுமி பாட்டி



" வயசாகிடுச்சு கண்ணு சரியா தெரியலை, சர்க்கரை வியாதி வேற, பசங்களுக்கு பாரமா இருக்கேன் என்னால என்ன பிரயோஜனம் இருக்கு " இப்போது இருக்கும் பெரும்பாலான முதியோர்கள் இப்படித்தான் தங்களது இயலாமையில் புலம்பி வேதனையை கொட்டித் தீர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சில தாத்தா பாட்டிக்கள் பேச ஆரம்பித்து விட்டால், 'அந்தக் காலத்துல எல்லாம் நாங்க' என்று ஆரம்பிக்கும் போதே காதைப் பொத்திக் கொண்டு ஓடிவிடுவார்கள் இளவட்டங்கள் . நாளை 60 வயது தாண்டிவிட்டால் நாமும் இப்படித்தான் புலம்ப ஆரம்பித்து விடுவோம். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏன் என்றால் இன்றைய காலச் சூழல் அப்படி .

ஆனால் கோவையில் சிங்கநல்லூர் அருகே உள்ள உப்பிளிபாலயத்தில் M.லட்சுமி பாட்டி 60 இல்லைங்க இந்த மாதம் முடிந்தால் அவங்களுக்கு வயது 70 இவங்களை பற்றி அப்படி என்ன சுவாரஸ்யம் இருக்கும் என நினைக்குறீங்களா ... 70 வயது என்பது தள்ளாத வயதல்லவா..! ஆனால் அந்த தள்ளாத வயதிலும் தடகள வீராங்கனையாக பதக்கங்களை தள்ளிக்கிட்டு வராங்க..! இவங்க நல்ல சமூக சேவகியும் கூட, அது மட்டும் இல்லைங்க ஊர் மெச்சும் பாசக்காரியும் கூட... அறிமுகம் போதும், இவங்களை பற்றி கொஞ்சம் விரிவா சொல்றேன்..!

மருதாசலம், கன்னியம்மாள் அவர்களுக்கு இரண்டாவது மகளாக பிறந்தவங்க தான் இந்த லட்சுமி. இவங்களுக்கு மூத்தவங்க ஒரு அக்கா இருக்காங்க அவங்க நம்ம லட்சுமி பாட்டி 4 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது திருமணமாகி கணவர் வீட்டுக்கு போய்ட்டாங்க, தம்பி இரண்டு பேர் தங்கை இரண்டு பேர். ஒரு தங்கை கைக்குழந்தையாக இருக்கும் பொழுது அப்பா மருதாச்சலம் காலமாகி குடும்ப பாரம் இவங்க மேல இறங்க படிப்பை 5 ஆம் வகுப்போடு நிறுத்திவிட்டு தனது தாயாரோடு வீட்டு வேலைக்கும், காட்டு வேலைக்கும் சென்று தம்பி தங்கையரை படிக்க வைத்து  கரைச்சேர்த்தார். அக்காலத்தில் பெண்களுக்கு திருமணம் 10 வயது 12 வயதினிலே முடித்து விடுவார்கள் அப்படி இருக்க இவங்க குடும்ப சூழலின் காரணமாக திருமணம் தள்ளிப்போவது அறியாது சமூதாயம் இவங்க மேல பல பழிகளை சுமத்தியது. அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தனக்கேற்ற கணவராக  சண்முகம் என்ற பொதுநலத்தின் மீது அக்கறைக் கொண்ட ஒரு நல்ல மனிதரை தனது 27 ஆம் வயதில் மணமுடித்தார்.

லட்சுமி பாட்டி சமூதாய சிந்தனை கொண்டவராக இருந்ததால் கணவர்  சண்முகம் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார். இதனால் 1973 ஆம் ஆண்டு ஜனநாயக மாதர் சங்கத்தில் சேர்ந்து சமூதாயத் தொண்டாற்ற துவங்கினார். 1989 - 1994 அறிவொளி இயக்கத்தில் இணைத்து கல்விக்காக தம்மை அற்பணித்தார். அதன் பிறகு பொதுமக்களுக்காக, அரசாங்கத்திடம் இருந்து பல உதவிகள் வாங்கித் தருவதற்காக போராடி வந்தார். இதனாலேயே 2002 இல் இவர் இருக்கும் பகுதியான உப்பிளிப்பாலயத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடந்த தேர்தலில் வெற்றிப்பெற்று இயக்குனராக பதவி வகித்தார். பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்த அந்த வங்கி இவரது முயற்சியினால் பொதுமக்களிடையே முதலீடுப் பெற்று நல்ல நிலைமைக்கு உயர்த்தினார். அதோடு மட்டுமல்லாமல் அரசு உதவியுடன் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த கூட்டுறவு வங்கி,  சொந்த கட்டிடத்தில் இயங்க காரணமாகினார். அத்துடன் மூன்று கூட்டுறவு அங்காடியும் இவரது முயற்சியால் அப்பகுதிக்கு கொண்டு வந்தார்.

அது மட்டும் இல்லைங்க நல்ல மேடை நாடகக் கலைஞராகவும் இருந்து சும்மா, வாங்கமாட்டோம் வரதட்சணை , வேண்டாம்யா அதே வெள்ளை மாத்திரை , போன்ற நாடகங்களையும் இயற்றி நடித்தும் இருக்கிறார்.

இப்படி 62 வயது வரை மக்களுக்காகவே பரபரப்பாக இருந்தவர். 2008 ஆம் ஆண்டு ஒரு கட்டத்தில் தனது 90 வயதான தாயார் உடல்நலம் குன்றவே இவரது வாழ்க்கை ஓட்டத்தை நிறுத்திக் கொண்டார் தனது தாயாரை கவனிப்பதற்காக. தனது தாயாருக்காக இவர் தான் தலைவராகவும், ஆலோசகராகவும் இருந்துவந்த 5 மண்டலங்களின் 256 சுய உதவிக் குழு உட்பட அனைத்து சமூகப்பணிகளிலும் இருந்து விடைபெற்றுக் கொண்டார். ஐந்து மாதங்கள் தனது தாயாருடனே இருந்து கவனித்து வந்தார். தாயார் காலமாக, அதன் பிறகும் வீட்டில் சிறிது காலம் அமைதியாக இருந்து வந்தார். அதற்கு அடுத்த வருடமாக கணவரையும் தனது மகனையும் பறிக்கொடுத்தார். கவலைகள் சூழ்ந்தாலும் தனிமைத் தன்னை தாக்கிவிடக் கூடாது என்றும் தான் யாருக்கும் பாரமாக இருந்துவிடக் கூடாது என்றும் மீண்டும் வீட்டு வேலைக்கு சென்று சொந்தக்காலில் நின்றார்.

அதன் பிறகு 63 வருடகாலம் தனக்குள் உறங்கிக்கொண்டிருந்த சிங்கத்தை தட்டி எழுப்பியதுப் போல 2008 இல் தமிழ்நாடு மூத்தோர் தடகள அமைப்பில் இணைந்து ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல், தட்டு எறிதல் , குண்டு எறிதல் என அனைத்துப் போட்டிகளிலும் மாநில அளவிலும், தேசிய அளவிலும் கலந்துக்கொண்டு  பதக்கங்களை அள்ளி வருகிறார். இதுவரை கோவை, திருச்சி, சென்னை, தூத்துக்குடி என தமிழ் நாட்டில் மட்டும் இல்லாமல் டெல்லி, சண்டிகர், பூனா என வேறு மாநிலங்களுக்கும் சென்று இந்த தள்ளாத வயதினிலும் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். இருப்பது என்னவோ குடிசை வீடு தான், ஆனால் வீடு நிறைய பதக்கங்கள், கோப்பைகள், சான்றிதழ்கள் ஆகியவற்றால்  நிரம்பியிருக்கின்றது. பேரன், பேத்திகள் வீட்டிற்கு வந்தால் விளையாடுவதற்கு இவர்கள் வென்று வாங்கிய கோப்பைகளும், பதக்கங்களும் தான் விளையாட்டுப்பொருட்கள்.

அந்தக் கால ஐந்தாம் வகுப்பு படிப்பு என்றால் இந்த காலத்தில் ஐ ஏ எஸ் போல ...

எங்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க என்ற போது,
 " திருடாதிங்க, பொய் சொல்லாதிங்க, சின்னசின்ன விஷயத்தை எல்லாம் பெருசு படுத்தி உங்கள் மனதை நீங்களே காயப்படுத்திக்காதிங்க. பணம் பெருசு இல்லை ; மனந்தான் பெருசு, விட்டுக் கொடுத்து வாழுங்க, உழைத்து வாழுங்க, யார் மனதையும் நோகுடித்து வாழ்வதில் இன்பம் இல்லை. மற்றவர்களுக்காக நம்மை அர்பணிப்பதில் தான் இன்பம் இருக்கிறது " என்றார்.

இறுதியாக லட்சுமி பாட்டியிடம் உங்களுடைய இந்த சுறுசுறுப்பிற்கு காரணம் என்ன என்று கேட்ட போது சிரித்துக்கொண்டே...

" தன்னம்பிக்கை இஸ் தி சீக்ரெட் ஆப் மை எனர்ஜி " என்றார்.

~ மகேந்திரன்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment