Showing posts with label நாய். Show all posts
Showing posts with label நாய். Show all posts

Sunday, October 01, 2023

நாங்க வளர்க்கிற நாய் போல தாங்க இந்த தெரு நாய்களும்

*நாங்க வளர்க்கிற நாய் போல தாங்க இந்த தெரு நாய்களும்*
நாம் தினமும் ஒரு குறிப்பிட்ட பாதையில் தான் அன்றாட அலுவல்களை கவனிக்க வாகனங்களில் விரைந்து கொண்டிருக்கிறோம் . நம்முடைய ஆயிரம் பிரச்சனைகளுக்கும் மன அழுத்தங்களுக்கும் மத்தியில் நம்மைச் சுற்றி நடக்கும் எந்த விஷயங்களும் நம் கண்ணில் படுவதில்லை. அப்படியே கண்ணில் பட்டாலும் மனதில் பதிவதில்லை. 

இன்று மதியம் நல்ல வெயில் நேரத்தில் கோவை ஆர் எஸ் புரம் பொன்னுரங்கம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது நான் கண்ட ஒரு காட்சியில் ஒரு கணம் என்னுடைய பிரச்சினைகளையே நான் மறந்துவிட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு வீட்டின் காம்பவுண்ட் முன்புறம் உள்ள கேட்டை நோக்கி மணி அடித்து செல்லும் பள்ளி பிள்ளைகள் போல வரிசையாக பத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் சென்று கொண்டிருந்தன. அங்கே வரிசையாக தட்டில் சாப்பாடு வைக்கப்பட்டிருந்தது. உணவு இடைவேளைக்கு செல்லும் மாணவர்களைப் போல பவ்யமாக ஒவ்வொன்றும் தட்டில் தனக்கு வைக்கப்பட்ட அசைவை உணவை அழகாக சாப்பிட ஆரம்பித்தன. 

சக மனிதர்கள் பசியால் துடிக்கும் போது கூட கண்டுகொள்ளாமல் செல்லும் மனிதர்களுக்கு மத்தியில் தெரு நாய்களின் பசியைப் போக்கும் அந்த வீட்டின் உரிமையாளர் நல்லமுத்து என்பவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

அவர் தனது வீட்டில் வளர்த்து வரும் நாய்க்கு உணவு வைக்கும் போதெல்லாம் தெருநாய்கள் ஏக்கத்தோடு பார்க்கும் , அதை பார்த்துவிட்டு எங்கள் மனசு கேட்காமல் தெருவில் உள்ள மற்ற நாய்களுக்கும் சேர்த்து சாப்பாடு வைக்க ஆரம்பித்ததாக கூறுகிறார்.

தன்னுடைய வீட்டில் வளர்க்கும் நாய்க்கு வைக்கும் அதே உணவைத்தான் தெருவில் உள்ள நாய்களுக்கும் கொடுக்கிறார். தெரு நாய்கள் தானே என்று எந்த அலட்சியமும் காட்டாமல் நாய்களுக்கு என்று பிரத்தியேகமாக சமைக்கப்பட்ட உணவை ஒவ்வொரு நாய்க்கும் தனித்தனியாக தட்டில் வைத்து கொடுக்கிறார்.  

15 வருடங்களுக்கும் மேலாக தெரு நாய்களுக்கும் உணவு பரிமாறி வருகிறார். இதனால் இங்கு உணவு கிடைப்பதை அறிந்து வேறு ஏரியா நாய்களும் ஏராளம் வர ஆரம்பித்து விட்டனவாம். 
இந்த நாய்கள் யாரையும் கடிக்காது. அவைகளால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை... இன்னும் சொல்லப்போனால் இந்தப் பகுதிக்கு பாதுகாப்பாகத்தான் இருக்கின்றன என்று கூறினார். 

பெருநகரங்களில் அதிவேக வாழ்க்கை சூழலில் தெருநாய்களை கவனிக்க யாருக்கும் நேரமில்லை. மீதம் ஆகும் உணவுகளை கூட யாரும் அவைகளுக்கு போடுவதில்லை. நெகிழிப்பைகளில் அடைத்து வீசி விடுகிறோம். இந்த நாய்கள் உணவுக்கு என்ன செய்யும் என்று 
நினைத்தே அவைகளுக்கு தினமும் உணவு அளிப்பதாக கூறுகிறார். பேசுவதற்கு எளிதாக இருந்தாலும் ஒரு நாளைப் போல தினமும் தவறாமல் சமைத்து உணவு அளிப்பதும் சமைத்த பாத்திரங்கள் தட்டுகள் இவற்றை சுத்தம் செய்வதும் மிகவும் சிரமமான விஷயம். மேலும் அவற்றிற்கு ஏதேனும் உடல்நிலை சரியில்லை என்றாலும் கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளிப்பதாகவும் கூறி நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். எனினும் நல்லமுத்து இதைப் பெரிய சாதனையாகவோ சேவையாகவோ சொல்லி விளம்பரம் தேடாமல் ஏதோ என்னால முடிஞ்சது அதுங்களுக்கு பசியாற்றுகிறேன் என்று எதார்த்தமாக சொல்கிறார்.

தண்ணீரைக் கூட வியாபாரம் செய்யும் மனிதர்களுக்கு மத்தியில் இவரைப் போன்ற மனிதர்களால் தான் வாயில்லா ஜீவன்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
இனியாவது நாமும்
தேவைக்கு அதிகமாய் மீந்து இருக்கும் உணவுகளையாவது கெட்டுப் போவதற்கு முன்பே நம் தெருக்களில் இருக்கும் நாய் பூனை போன்ற விலங்குகளுக்கு கொடுக்கலாமே. _இந்தப் பூமி மனிதர் வாழ்வதற்கு மட்டுமானதல்ல.. வாழ்தலும் எவ்வுயிர்க்கும் பொதுவன்றோ?

~ ஈரநெஞ்சம்

Sunday, March 08, 2015

கீதா ராணி இவர் இருநூறு வாயில்லா குழந்தைகளின் தாய்

" எதற்கும் ஒரு எல்லை உண்டு ;
ஆனால் அன்பிற்கு இல்லை எல்லை ".



நம் ஊர்  சாலையில் அன்றாடம் சொறி பிடித்த நாய்களையும், ஊளையிட்டுக்கொண்டுச் சுற்றித் திரியும் நாய்களையும் கடக்காமல் நாம் ஒரு இடத்திற்கு செல்ல முடியவே முடியாது. சில சமயம் பலர் அந்த நாய்களை கல்லெடுத்து அடிப்பதையும் கூட நாம் பார்த்திருப்போம். அப்படிப் பார்க்கும் போது நம்மால் பரிதாபம் மட்டுமே படமுடிகிறது. ப்ளூகிராஸ் அமைப்புகள் என்று நாம் அதிகம் கேள்விப்பட்டு இருக்கிறோம், ஆனால் அதன் செயல்பாடுகளை நாம் என்றாவது நேரில் பார்த்திருப்போமா? அல்லது அந்த அமைப்பின் தொலை பேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளத்தான் முயன்றிருக்கின்றோமா...?

ஆனால் கோவையின் அருகேயுள்ள  காரமடை அருகே பெரியமத்தம்பாளையத்தில் கீதா ராணி 58  என்னும் பெண்மணி (தனியார் அமைப்பு) சாலையோரம் சுற்றித்திரியும் 200 க்கும் மேற்பட்ட நாய்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவருடைய குழந்தையை போலவே பாவித்து பராமரித்து வருகிறார் . இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு அவர்களின் சிறப்பு சந்திப்பு பேட்டி உங்கள் பார்வைக்கு.

தாய் தந்தையின் அன்பு காணாது வளர்ந்தவர் தான் கீதா ராணி. திருமண வாழ்விலும் தனது பொறுப்பில்லாத கணவரால் ஏமாற்றங்களுக்கும், பல அவமானங்களுக்கும் உள்ளானவர். எப்படியாவது தனது குழந்தைகளை ஆளாக்கி திருமணம் முடித்தாக வேண்டும் என்ற மிகப்பெரிய கடமையை ஏற்று செவ்வனே நிறைவேற்றிய பின், ' மனிதர்கள் என்றாலே இப்படித்தான் ' என்று வாயில்லா ஜீவன்களுக்காக தனது வாழ்க்கையை அர்பணித்து கடந்த பத்து வருடங்களாக 'ஸ்னேகாலயா' என்ற பிராணிகள் காப்பகத்தை நடத்தி வருகிறார் .

 

இங்கே நேரில் சென்று பார்த்தபோது மனிதர்கள் தான் பலர் ஆதரவை தொலைத்துவிட்டு காப்பகங்களில் அன்புக்கு ஏங்குகிறார்கள் என்று நினைத்தால் .  இங்கு உள்ள எண்ணற்ற வாயில்லா ஜீவன்களும் அதே அன்புக்குத்தான் ஏங்குகின்றது என்பதை கண்கூடாக காண முடிகிறது. 'ஸ்னேகாலயா' நிறுவனர் அன்பின் கடவுளாக திகழும் கீதா ராணி அவர்கள் கூறும் பொழுது, " மனிதர்களைப் போல தாங்க இந்த குழந்தைகளும் முழுக்க முழுக்க அன்புக்கு அடிமையாகி விடுவாங்க. இந்த குழந்தைகளுக்கு நல்லாவே தெரியும்ங்க நல்லவர்கள் யார் உள்ளத்தில் கள்ளம் கொண்டவர்கள் யார் என்று... பாருங்க நீங்க இங்க இருக்கீங்க எல்லா குழந்தைகளும் உங்களை வரவேற்கதான் சத்தம் போடறாங்க யாரும் கடிக்க மாட்டாங்க.

பலரது வீட்டில் இந்த குழந்தைகள் செல்லமாக வளர்ந்தவை தாங்க கொஞ்சம் நோய் வாய்ப்பட்டு விட்டால் எங்களிடம் கொடுத்து விடுவார்கள். அல்லது சாலையில் விட்டுவிடுவார்கள். சாலையில் விட்ட குழந்தைகள் தனது எஜமானை விட்டு பிரிய மனம் இல்லாமல் அவர்களைத் தேடிப்போவாங்க ஆனால் அந்த எஜமானர்கள் எப்படியோ எங்களது முகவரியை தேடி இவைகளை அழைத்துப் போகச் சொல்லுவாங்க. நாங்க மறுக்க மாட்டோம் சரி என்று நேரில் சென்று வாயில்லா குழந்தையை அன்போடு அழைத்து வந்து அவைகளுக்கு வைத்தியம் செய்து பராமரிப்போம்.




நான் அழகுக் கலை பயின்றுள்ளேன். என்னுடைய மகளுக்கும் அதை கற்றுக்கொடுத்து ஒரு அழகு நிலையம் வைத்துக் கொடுத்துள்ளேன். அதில் வரும் சம்பாத்தியத்தில் பாதியை இந்த குழந்தைகளுக்காக கொடுத்துவிடுவாள். அவளைப் போலவே, என் மருமகளும் அழகு கலை நிபுணராக இருப்பதால் அழகு நிலையம் வைத்திருக்கிறாள். அவளும் உதவி செய்கிறாள். அது மட்டும் இல்லாமல் எங்களைப் பற்றித் தெரிந்தவர்கள் அவ்வப்போது நிதி உதவி கொடுக்கிறார்கள் அதனால் இந்த 200 குழந்தைகளுக்கும் வைத்தியம், உணவு, பராமரிப்பு இடம் எல்லாமே முழுமையாக கிடைக்கிறது. என்னுடைய இலட்சியம் எல்லாம் கோவையில் ப்ளுகிராஸ் இல்லைங்குற குறை இல்லாமல் அதை முழுமையாக நடத்தவேண்டும். வாயில்லா ஜீவன்களை வதைக்காமல் தவிக்க விடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் " என்று கூறினார்.

மேலும் அவர் கூறும் பொழுது, " கோவையைச் சுற்றி உள்ள எந்த இடத்திலாவது  இப்படி வாயில்லா குழந்தைகள் தவிப்பதை பார்த்தால் 8870207443 என்ற என்னுடைய அலைபேசியில் அழைத்து தகவலை தெரிவித்தால் நாங்கள் எங்களது பணியாளருடன் நேரில் வந்து குழந்தைகளை அழைத்து செல்கிறோம் " என்றார்.



கீதா ராணி அவர்களிடம் நாம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்கிருக்கும் நாய்களை அவர்கள் அன்போடு எங்கள் குழந்தைகள் குழந்தைகள் என்று அழைப்பதை பார்க்கும் பொழுது . அந்த வாயில்லா ஜீவன்களை எந்நாளும் நாய் என்று கூற மனம் வரவில்லைங்க.

இன்று மகளிர் தினம் இப்படிப்பட்ட அன்பின் சொரூபமான பெண்களை நாம் போற்றாமல் இருக்க முடியுமா..?
கீதா ராணி அம்மாவுக்கு மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..!!!
உங்களால் எல்லா பெண்களும் பெருமையடைகிறார்கள்..!

~ மகேந்திரன்




Sunday, August 11, 2013

"பிறந்தாலும் மாடிவீட்டு நாயா பிறக்கணும்"





இப்போது எல்லாம் வளர்ப்பு நாய்களுக்கு அதிநவீன குடும்ப கட்டுப்பாடு மற்றும் பிரசவ காலம் தாமதனானால் நாய்களுக்கு சிசேரியன் பிரசவம் செய்யும் அளவிற்கு நம்ம நாடும் வளர்ந்து விட்டதுங்க .
இந்த நாய் பாருங்களேன் எதோ பக்கெட்டை அறுத்து கழுத்துல மாட்டி விட்டு பாக்க பரிதாபமாவும் இருக்கேன்னு அந்த நாய் வளர்ப்பவர் வீட்டுல போய் ஏனுங்க இப்படி மாடி இருகிங்கனு கேட்டேன் அதுக்கு அவங்க விளக்கம் கொடுத்தாங்க.

வளர்ப்பு நாய்களுக்கு மட்டும்தான் உண்ணி என்னும் ( பூச்சி) தோன்றுகிறதாம், தெருவில் இருக்கும் நாய்களிடம் உண்ணிகள் தோன்றுவது இல்லையாம் . அது ஏனுங்க என கேட்டால் ரொம்ப சுத்தமா வைத்து கொள்வதனால் உண்ணிகள் வருகின்றதாம் , உண்ணி உடலில் ஓட்டும் அப்போது அந்த பூசிகளை விரட்ட முற்படும் போது தனது உடலை கடித்துக் கொள்ளுமாம் .அதற்காகவும் நாய்களுக்கு பிரசவ காலங்க தள்ளி போனால் அல்லது நல்ல நேரங்களில் பிரசவிக்க வேண்டு என்று நேரம் காலம் பார்த்து மருத்துவ மனைகளுக்கு கொண்டு சென்று சிசேரியனும் செய்து குட்டி நாய்களை பெற்று எடுக்கின்றனர்கலாம்.

அதன் பிறகு உடலில் அறுவை சிகிச்சை செய்த இடத்தில தையல் போடுவார்கள் தையல் போட்ட இடம் புண் ஆறும் வரை அரிப்பு ஏற்ப்படும் அப்போது நாய்கள் தனது நாக்கிநாளோ அல்லது பல்லாலோ கடிக்கும் அதனால் காயம் இன்னும் அதிகமாகும் இதனை தவிர்க்க மருத்துவர்கள் அறிவுரைப்படி அந்த நாய்களுக்கு புண் ஆறும் வரை மூன்று அல்லது நான்கு நாட்கள் மட்டும் இப்படி ஒரு பக்கிட்டை மாட்டி விடுவார்களாம் . ஹ ஹ ஹ அது பக்கிட் இல்லைங்க "நெக் காலர்" சொல்லறாங்க . மருத்துவரிடமும் , வளர்ப்பு பிராணிகளுக்கு தேவையான பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்குமாம். கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனைப்படியே இதனை பயன் படுத்தவேண்டும் என்றும் கூறினார்.

எப்படி இருக்கு பாருங்க நாய்களின் வாழ்வு .

~மகேந்திரன்.