Showing posts with label விழிப்புணர்வு. Show all posts
Showing posts with label விழிப்புணர்வு. Show all posts

Sunday, October 12, 2014

கைப்பொருள் இழந்து கலையை வாழவைக்கும் மாமனிதன்..அண்ணாமலை

நம் எண்ணங்களில் தோன்றும் பல கற்பனைகளை எழுத்து வடிவமாகவோ , அல்லது சித்திர வடிவமாகவோ படைக்கும் பொழுது அதை பார்ப்பவர்கள் மனதை கவர்ந்து அவர்களின் மனதில் எளிதாக பதியும் . அது மட்டுமில்லாமல் காலங்காலமாக அது அழியாமல் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை . இதன் காரணமாகவே கல் தோன்றிய காலமுதலாக சிலைகள், சுவர் ஓவியங்கள் , குகை ஓவியங்கள் , கல் வெட்டுகள் , ஓலை சுவடி ஓவியங்கள் மற்றும் பல படைப்புகள் படைக்கப்பட்டு இன்றளவும் நம் மனதை கவர்ந்துக் கொண்டிருக்கிறது . ஆனால் இக்காலக்கட்டத்தில் அப்படி பல கலைகளை உருவாக்கும் கலைஞர்கள் பலரும் , கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களுக்காக மக்கள் முன் படைக்க முன்வருவது இல்லை . அவர்கள் படிக்கும் கலைகளை , வியாபார நோக்கத்துடன் விற்று பல அரிய கலைஞர்கள் வியாபாரிகளாகவே மாறி விட்டனர் என்றே சொல்லலாம் .
இப்படிப் பட்டவர்களின் மத்தியில் கோவையைச் சேர்ந்த ஜெகநாதன் என்கின்ற  அண்ணாமலை என்பவர் தனது கலைத்திறன் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் , கோவையை சுற்றி பல அரிய சிற்பங்களையும் , சுவர் ஓவியங்களையும் மக்கள் மத்தியில் படைத்து வருகிறார் .

 

கோவையை அழகு படுத்தும் வகையிலும் மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும் வகையிலும் , இவர் கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் வடிவமைத்துள்ள உலக அதிசயமாக உள்ள ஹவா மஹால். பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் , செங்கோட்டை போன்றவை மிகவும் தத்ரூபமாக காட்சி அளிக்கின்றது . இந்த படைப்புகளுக்கு மக்கள் மத்தியிலும் பலமான வரவேற்பு கிடைத்துள்ளது.

 


முன்னாள் பிரதமர் திறந்துவைத்த கோவை கொடிசியாவில் உள்ள ஸ்க்கான் கோவிலின் முகப்பு அலங்காரம் இவரை ஒரு சிறந்த சிற்ப கலைஞராக காட்டி உள்ளது . இது மட்டும் இல்லாமல் திருப்பூர் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பொழுது முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் திறக்கப்பட்ட திருப்பூர் நினைவுத்தூண் , கிணத்துக் கடவு பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அண்ணா சிலை காந்திப்பூங்காவில் அமைந்துள்ள காந்தி சிலை என கோவையை சுற்றி பல கலை வேலைப்பாடுகள் அண்ணாமலையால் உருவாக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் கட்டிட சிறப்புக் கலைஞராக வலம் வந்தவர் அண்ணாமலை . கோவையில் பல கட்டிடங்களுக்கு முகப்பு அலங்காரம் வடிக்கும் கலைஞராக இவரையே தேர்வு செய்து வருகின்றனர் . அது மட்டும் இல்லாமல். தான் கற்ற கலையை பள்ளி மாணவர்களுக்கும் பயன் பெரும் வகையில் சிறு சிறு கற்களை கொண்டு சிற்பம் செய்யும் கலைகளையும் கற்றுக் கொடுத்து வருகிறார்.
இந்த பணியெல்லாம் தனது குடும்பம் நடத்துவதற்கு என எடுத்துக் கொண்டாலும் , இவர் தற்போது துவங்கி செய்துவரும் கலை வேலைப்பாடு தனது வருமானத்திற்கும் மிஞ்சிய பொருட்செலவில் மக்களுக்கு விழிப்புணர்வை கொடுக்கும் வகையில் கோவையைச் சுற்றி உள்ள சுவர்களில் சிற்பம் வடித்து வருகிறேன் என்று கூறுகிறார் . மேலும் அதை பற்றி அவரிடம் கேட்ட பொழுது.


" நான் இந்த கலைப்பணியை கடந்த 20 வருடத்திற்கு மேலாக செய்து வருகிறேன் . பல சவால்களுக்கு இடையே தான் , நான் ஒரு நல்ல கலைஞன் என்று பெயர் வாங்கினேன் . குறிப்பாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் அமைக்கும் பொழுது கோவை மாநகராட்சி சார்பாக 150 பொறியாளர்களுக்கு மேல் தேர்வு செய்யப்பட்டு , யாரும் சரிவர அந்த கோபுரத்தை சாய்த்து அமைக்க முடியாமல் நிராகரித்த பிறகு வெறும் 6 ஆம் வகுப்புவரை மட்டுமே படித்த நான் மிக நேர்த்தியாக 16 அடியில் பைசா கோபுரம் 1.5 அடி சாய்வாக அமைத்து கட்டியது எனக்கு மிகவும் சவாலாக அமைந்து இருந்தது . காந்தி பூங்காவில் வைத்திருக்கும் காந்தி சிலையின் கண்கள் உயிருள்ள மனிதக் கண்களைப் போன்றே அமைக்கப்பட்டதாகும் . ஸ்கான் கோயிலின் முகப்பு வடிவம் அமைக்க எனக்கு அழைப்பு வந்த பொழுது நானும் எனது குடும்பத்தாரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை " என்றும் கூறினார் .
மேலும் அவர் கூறும் பொழுது பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாத விஷயங்களான போக்குவரத்து நெறிமுறைகள் , மழைநீர் சேகரிப்பு , எரிபொருள் சிக்கனம் , மின்சார சிக்கனம் , தூய்மை , பிறருக்கு உதவும் மனம் , போதை பழக்க வழக்கங்களின் தீமைகள் போன்ற பல்வேறு விஷயங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளக்கமாக தத்ரூபமாக சாலைகளின் ஓரமாக இருக்கும் சுவர்களில் சுவர் சிற்பங்கள் உருவாக்கி வருவதாக கூறினார் ,
இந்த சுவர் சிற்பங்களுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாகவும் கூறினார் . ஒரு சுவற்றில் சுவர் சிற்பம் உருவாக்க குறைந்தது 5 நாட்கள் வரை ஆகும் . அதற்கான செலவு 15 ஆயிரம் ரூபாய் வரையிலும் ஆகிறது என்றும் , இதுவரைக்கும் 5 இடங்களில் உருவாக்கி விட்டதாகவும் பொது மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற நல்ல எண்ணத்தின் காரணமாக தனது மனைவி இந்திராணி அவர்களின் விருப்பப்படி அவரது நகைகளை அடமானம் வைத்து அதில் வந்த பணத்தை கொண்டு இந்த சுவர் சிற்பம் உருவாக்கி வருவதாகவும் கூறிய பொழுது , எங்கள் மனம் சற்று கனத்தது.






மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது மட்டுமல்லாமல் , லிம்கா உலக சாதனை மற்றும் கின்னஸ் சாதனையே தனது வாழ்வின் லட்சியமாக கொண்டு கலைத்துறையில் தன்னை அர்பணித்து வரும் அண்ணாமலை மக்களிடம் இருந்து எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்று தான் . சாலையோரமாக யாராவது நீண்ட சுவர் தந்து உதவினால் , அவர்கள் அவரது சாதனை கலைப் பயணத்திற்கு ஏணிப்படியாக இருப்பார்களே !!!

அண்ணாமலை அவர்களை தொடர்புகொள்ள ~92452 80844 / 90035 38492 / 0422 2499191

~மகேந்திரன்

Sunday, June 08, 2014

அந்தியூரின் அதிவேக விழிப்புணர்வு நாயகன்

எத்தனையோ சாதனைகளை பற்றி கேள்விப்பட்டிருப்போம் . தங்கள் லட்சியங்களுக்காக எத்தனையோ கஷ்டப்பட்டவர்களை பார்த்திருப்போம். " இளம் கன்று பயமறியாது " என்பதற்கு ஏற்ப தன் உயிரை பணயம் வைத்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த துணிந்திருக்கும் இந்த இளைஞரை நாம் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.

"இந்தியாவின் சாதனை நாயகன் பதினெட்டு வயது துளசிமணி", அந்தியூர் தவுட்டுபாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை சுப்பிரமணி, ஆட்டோ டிரைவராக இருக்கிறார். தாய் அன்னபூரணி மற்றும் இவரது தங்கை எட்டாவது படிக்கிறார். இந்தியாவின் சாதனை நாயகன் துளசிமணி கோவை கற்பகம் கல்லூரியில் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படித்துக் கொண்டு இருக்கிறார். சிறுவயது முதலே இவருடன் நெருங்கிய நட்புடன் இருந்த அவரது நண்பர் நந்தகுமார், இருவரும் நன்றாக பைக் ஓட்டுபவர்கள். ஒரு முறை பைக் பயணத்தின் போது ஏற்பட்ட சாலை விபத்தில் நந்தகுமார் வண்டி ஓட்டி போகும்போது தலைக்கவசம் (ஹெல்மட்) அணியாமல் சென்றதால் உயிரிழந்தார். தன் கண் முன்னர் நடந்த இந்த விபத்தில் உயிர் நண்பன் பலியானதை கண்டு மனம் உடைந்த துளசிமணி இனி யாருக்கும் இந்த நிலை நேராமல் இருக்க மக்களுக்கு விழிப்புணர்வு கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்தார்.

இருசக்கர பயணத்தின் போது கண்டிப்பாக ஹெல்மட் அணியவேண்டும்,
சாலை விதிகளை மதிக்க வேண்டும்,
மரம் நட வேண்டும்,
பாலிதீன் பொருட்களை ஒழிக்க வேண்டும்,
இளைஞர்களிடம் சமூக சேவை விழிப்புணர்வு கொண்டுவரவேண்டும்.

போன்ற கருத்துக்களை மக்கள் மனதில் பதிய வைக்க விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார் . கடந்த வருடம் 2013 டிசம்பர் 21தேதி சனிக்கிழமை அன்று காலை 5:20க்கு பொள்ளாச்சியில் கிளம்பி தாராபுரம், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமாரி அங்கிருந்து கிளம்பி திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர் மீண்டும் திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக வந்து காலை 5:10க்கு கன்னியாகுமரி வந்தடைந்தார். அதுமட்டுமின்றி இந்த பயணத்தின் போது அவர் தனது லட்சியங்களான ஹெல்மட் அணியவேண்டும், சாலை விதிகளை மதிக்க வேண்டும், மரம் நட வேண்டும், பாலிதீன் பொருட்களை ஒழிக்க வேண்டும், இளம் மாணவர்களிடையே சமூக சேவை மனப்பான்மையை உருவாக்க வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை சுமார் 3800 பொது மக்களுக்கு வழங்கி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டார்.

அமெரிக்க நிறுவனமான "அயர்ட் அசோசியேசன்" அறிவித்திருக்கும் 24 மணிநேரத்தில் ஆயிரத்து அறுநூறு (1600 ) கிலோமீட்டர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தால் "சேட்டில் சோர்" என்ற விருதுக்கு, இதுவரை 1624 கிலோமீட்டர் என்பது தான் அதிகபட்ச தூர சாதனையாக இருந்தது ... மேலும் இது போன்ற சாதனையை புரிய முயற்சி செய்த 24 பேர் இறந்துவிட்டனர்.

இதற்குமுன் இந்த விருதுக்காகவே பயிற்சி பெற்று களத்தில் இறங்கி உயிரிழந்த 24 பேரும் தங்கள் சொந்த பணத்தில்தான் இந்த முயற்சியை மேற்கொண்டனர். துளசிமணியின் நோக்கம் விருதல்ல மக்களிடயே ஒரு நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றே இருந்தது கூடவே வறுமையும் இருந்தது மனம் தளராது துளசிமணி பொதுமக்களிடம் பண உதவி பெற்று இந்த முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க நிறுவனமான "அயர்ட் அசோசியேசனின் " " சேட்டில் சோர் " என்ற விருதுக்கும் சொந்தமாகி உள்ளார். இந்த சாதனை நிகழ்த்திய துளசிமணி 24 மணிநேரத்தில் 1804 கிலோமீட்டர் சென்று அதுவும் பத்து நிமிடத்துக்கு முன்னர் குறிப்பிட்ட தூரத்தையும் தாண்டி ( 204 கிமீ அதிகமாக ) அடைந்து சாதனை படைத்து இந்த விருதை பெற்றுள்ளார். இதில் அவர் பயணம் செய்த நேரம் 21 மணிநேரம் 30 நிமிடங்கள் மட்டுமே.

"இதுவரை இவரது இந்த சாதனை கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைக்கவில்லை அப்படி பரிந்துரைத்தால் கண்டிப்பாக இவரது இந்த சாதனை கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பெற்றிருக்கும் "

இதோடு நின்று விடவில்லை. துளசிமணியின் அடுத்த முயற்சியாக வரும் ஜூலை மாதம் 72 மணிநேரத்தில் 6800 கிலோமீட்டர் தொலைவு இதேபோல இருசக்கர வாகனத்தில் பயணம் செய்ய முடிவு செய்துள்ளார். அதற்காக அவர் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை செல்ல திட்டமிட்டுள்ளார். அது மட்டுமின்றி தனது விழிப்புணர்வு பிரசுரத்தையும் குறைந்தது 15000 பேருக்காவது பகிர்ந்து கொண்டு அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார். அதில் அவர் வெற்றி பெறவேண்டும் , இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று நாமும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.

முந்தையை பயணத்தில் மணிக்கு 90 km வேகத்தில் பயணம் செய்த இவர் இவரது பயணத்தின் போது நிறைய விபத்துக்களை பார்க்க நேர்ந்தது. மேலும் பல விபத்துக்களில் இருந்து தப்பிக்கவும் செய்திருக்கிறார். எனவே தான் மக்களிடையே மீண்டும் விழிப்புணர்வை ஏற்படுத்த அடுத்த முயற்சிக்கு அடி எடுத்து வைத்திருக்கும் அவர் வெற்றி பெற வாழ்த்துவோம். துளசிமணியை சந்திராயன் விஞ்ஞானி திரு. மயில்சாமி அண்ணாதுரை அவர்களும், கார் பந்தய வீரரான திரு. நரேன் கார்த்திகேயன் அவர்களும் பாராட்டியுள்ளனர். அவர் மேலும் பல சாதனைகள் புரியவும், அவற்றில் வெற்றி பெற்று அவரது லட்சிய விழிப்புணர்வுகளை மக்களிடையே நல்ல முறையில் கொண்டு சேர்க்க அந்த இறைவன் அவருக்கு மனோதிடத்தை வழங்கட்டும் . அவரது முயற்சியை நாமும் மனமார பாராட்டுவோம்.

~மகேந்திரன்

Sunday, January 05, 2014

எனக்கென்ன வந்தது என்று இல்லை விழிகாவலன் முருகேசன் ~ஈரநெஞ்சம்

காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. என்ற வள்ளுவரின் வாக்கை இன்று நிரூபித்தவர் திரு. முருகேசன் அவர்கள்.

ஈரநெஞ்சம் அமைப்பின் உறுப்பினரும் கோவை ஆம்புலன்ஸ் நிறுவனத்தின்  ஓட்டுனரான முருகேசனின் வயது 28.
கடந்த 31/12/2013  அன்று கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த R.ஆனந்த் என்பவர் தனது தாயார்   சாந்தகுமாரி வயது  70  உடல்நிலை சரியில்லை, மருத்துவமனைக்கு அழைத்து  வேண்டும் என திரு. முருகேசன் அவர்களை அழைத்தார் .
உடனடியாக முருகேசன் ஆம்புலஸ் எடுத்துவந்து நெஞ்சுவலியால் துடித்துக்கொண்டு இருந்த 
சாந்தகுமாரி   அம்மாவை  சிகிச்சைக்காக அவரது உறவினர்களுடன்  KG மருத்துவமனை  அழைத்து செல்ல   சாந்த குமாரி  அம்மா துரதிர்ஷ்டவசமாக வழியிலேயே இறந்து விட்டார்.மருத்துவமனையில்  மருத்துவர்கள் மாரடைப்பால்  சாந்தகுமாரி  இறந்ததை உறுதி செய்ததை தொடர்ந்து  உறவினர்கள் மீண்டும் அம்மாவின்  உடலை எடுத்துக் கொண்டு கோவை ஆம்புலன்ஸ்  முருகேசன் வாகனத்திலேயே  வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அந்தசமையம்
சாந்தகுமாரி அம்மாவின்  உறவினர்களிடையே   திரு. முருகேசன், கண்தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். இறந்தவரின்  கண்களை தானம் செய்வதால்  இருவருக்கு பார்வை கிடைக்கும் எனவும், சாந்தகுமாரி அம்மாள் எதோ ஒரு ரூபத்தில் மீண்டும் உயிருடன் வாழ்வார் என்றும் எடுத்துரைத்துள்ளார். இதனால் கண் தானம் பற்றிய உண்மைகளை புரிந்து கொண்டு  இறந்த சாந்தகுமாரி அம்மாவின் கணவர் திரு. ரங்கநாதன் , மகன் ஆனந்த் மருமகள்  லக்ஸ்மி ப்ரியா அவர்கள் அம்மாவின்   கண்களை தானம் செய்ய   மனப்பூர்வமாக  சம்மதித்து அதற்க்கான வழிமுறைகளை செய்து தருமாறு திரு. முருகேசனிடம் வேண்டிக்கொண்டனர் . உடனடியாக முருகேசன்  அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தகவல்  கொடுத்து இறந்த   சாந்தகுமாரி அம்மாவின் கண்களை தானம் செய்ய ஏற்பாடு செய்தார் . உடனடியாக அங்கு வந்த அரவிந்த் கண்மருத்துவமனை மருத்துவர்கள்   சாந்தகுமாரி அம்மாவின் கண்களை பத்திரமாக எடுத்து சென்றனர் . கண்தானம் போன்ற நல்ல விசயத்துக்கு தங்களை வழி நடத்தியதோடு சாந்தகுமாரி அம்மாவின் கண்களுக்கு உயிர் தந்த முருகேசன் அவர்களுக்கு சாந்தகுமாரி அம்மாவின் உறவினர்கள்  நன்றி தெரிவித்துக் கொண்டனர்.


 
சாந்தகுமாரி அம்மாவின்  மகன் ஆனந்த் அம்மாவின் கண்கள் தானம் செய்ததை பற்றி கூறும் போது "அம்மா  இறந்த துயரம் ஒரு புறம்  இருந்தாலும் அம்மா கண்களால் இன்னொரு உயிருக்கு வாழ்க்கை கொடுத்து பார்வையால் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார் என்பதை நினைக்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது . கண்தானம் செய்வதன் மூலம் பலருக்கு பார்வை கிடைக்கும் எல்லோரும் கண்தானம் செய்யவேண்டும் என்றும் நாங்களும் எங்களது கண்களை தானம் செய்வோம் என்றும் கூறினார்".

 
  உறவினர்கள் இறந்த துக்கம் ஒருபுறம் இருந்தாலும் இருவருக்கு நல்ல வாழ்கையை ஏற்ப்படுதிதரும் சந்தர்ப்பத்தை தவறவிடாமல்  சாந்தகுமாரி அம்மாவின் கணவர் ரங்கநாதன் , மகன் ஆனந்த் மருமகள்  லக்ஸ்மி ப்ரியா அவர்கள் இறந்தவரின் கண்களை தானம் செய்துக்  கொடுத்ததற்கு  அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் அது மிகையாகாது. . 

சாந்தகுமாரி அம்மாவின் கண்களை மூடி மரணம் இருளை தந்தாலும் சாந்தகுமாரி அம்மா இரண்டு பேருக்கு வாழ்வில் வெளிச்சம் ஏற்படுத்தி தந்துள்ளார். அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம். இறந்தும் உயிர் வாழ கண்தானம் செய்வோம். இந்த இளம் வயதிலேயே கண்தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்த நற்செயலை செய்த முருகேசன் அவர்களை நாம் மனதார பாராட்டியே ஆக வேண்டும். தனது கடமையை மட்டும் செய்வோம் என்று எண்ணாமல் கண்தானம் குறித்து சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு , இரண்டு பேருக்கு வாழ்வில் வெளிச்சம் தந்த முருகேசன் நலம் பல பெற்று நீடூழி வாழ வேண்டுவோம்.

~ஈரநெஞ்சம்

Saturday, August 03, 2013

மாணவர்களுக்கு ஊடகத்துறை பற்றிய விழிப்புணர்வு ~ ஈரநெஞ்சம்


"ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(191/02.08.2013)
கோவையில், விளாங்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள அரசு உயர் நிலை பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு, ஈர நெஞ்சம் அமைப்பு சார்பாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தன்னம்பிக்கை மற்றும் சுய ஊக்குவிப்பு வகுப்புகள் மாணவர்களுக்கு எடுக்கப்பட்டு வருகின்றன. அதை தொடர்ந்து இன்றைய வகுப்பில் பள்ளி மாணவர்களுக்கு பத்திரிகை துறையை சேர்ந்த deccan chronicle பத்திரிக்கையாளர் V.பழனியப்பன் மற்றும் ஊடகத்துறை ஆய்வாளருமான R.ஜயசீலன் இருவரும் ஈரநெஞ்சம் அமைப்பின் அழைப்பை ஏற்று இன்று 02/08/2013 விழிப்புணர்வு கல்வி வழங்கினார்கள் .
மாணவர்களுக்குபத்திரிக்கைத்துறை என்றால் என்ன, அதன் பணிகள் என்ன சமூகத்தில் பத்திரிக்கைத்துறை செயல்பாடுகள் , பத்திரிக்கையாளர் ஆவது எப்படி என்பதனை பற்றியும் பத்திரிக்கைக்கு செய்திகள் அனுப்புவது எப்படி என்பது பற்றியும் விளக்கி கூறினார்கள் . மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்த இன்றைய விழிப்புணர்வு கல்விக்கு பத்திரிக்கையாளர் V.பழனியப்பன் மற்றும் ஊடகத்துறை ஆய்வாளருமான R.ஜயசீலன் இருவருக்கும் ஈரநெஞ்சம் மற்றும் மாணவர்கள் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.
நன்றி
~ஈரநெஞ்சம்


https://www.facebook.com/eeranenjam

Each Fridays, on behalf of Eera Nenjam there has been motivation sessions conducted for Coimbatore, Velangurichi area high school students. This project is to motivate to enhance their self confidence and self promotion.

In today's session (02.08.2013), Journalist of Deccan Chronicle Mr. V. Palaniyappan and media specialist Mr. R. Jayaseelan accepted the invitation of Eera Nenjam and came to provide the motivational education session to the students. They have lectured to the students about media, how it works, how to send a news message to the press, and how to become a journalist. Today's awareness education was very effective to the students.

On behalf of the students Eera Nenjam is thanking both Mr. V. Palaniyappan and Mr. R. Jayaseelan for giving an effective awareness education.

Thank you 




Eera Nenjam

Saturday, July 13, 2013

மனநல மருத்துவர் திரு. சீனிவாசன் விழிப்புணர்வு கல்வி வழங்கினார்~ஈரநெஞ்சம்

'ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(180/12.07.2013)



கோவையில், விளாங்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள அரசு உயர் நிலை பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு, ஈர நெஞ்சம் அமைப்பு சார்பாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தன்னம்பிக்கை மற்றும் சுய ஊக்குவிப்பு வகுப்புகள் மாணவர்களுக்கு எடுக்கப்பட்டு வருகின்றன. அதை தொடர்ந்து இன்றைய வகுப்பில் பள்ளி மாணவர்களுக்கு கோவை மெடிகல் மருத்துவமனையை சேர்ந்த மனநல மருத்துவர் திரு. சீனிவாசன் அவர்கள் இன்று விழிப்புணர்வு கல்வி வழங்கினார். மாணவர்கள் தங்களன் நினைவு திறனை வளர்த்து கொள்ளவும், தேர்வுகளில் முழுமையாக கவனத்தை செலுத்தி வெற்றி பெறவும் பயிற்சிகள் வழங்கினார். மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்த இன்றைய விழிப்புணர்வு கல்விக்கு மருத்துவர் திரு. சீனிவாசன் அவர்களுக்கு ஈரநெஞ்சம் மற்றும் மாணவர்கள் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம். மன நல மருத்துவர் திரு. சீனிவாசனை நமக்கு அறிமுகம் செய்து வைத்த ஹலோ FM ஐ சேர்ந்த திரு. கண்ணன் அவர்களுக்கும் ஈரநெஞ்சம் அமைப்பு நன்றியை தெரிவித்து கொள்கிறது.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Each Fridays, on behalf of Eera Nenjam there has been motivation sessions conducted for Coimbatore, Velangurichi area high school students. This project is to motivate to enhance their self confidence and self promotion.
In today's session, psychiatrist. Dr. Srinivasan gave awareness education to the students. The Doctor trained the students how to develop the ability to remember, how to pay full attention and be successful in examinations. Today's session was very useful to the students. On behalf of the students Eera Nenjam is thanking Psychiatrist Dr. Srinivasan. Eera Nenjam is also thanking Mr. Kannan from Hello FM for introducing Dr. Srinivasan to the trust.

~Thanks
Eeraneanjam