Sunday, June 08, 2014

அந்தியூரின் அதிவேக விழிப்புணர்வு நாயகன்

எத்தனையோ சாதனைகளை பற்றி கேள்விப்பட்டிருப்போம் . தங்கள் லட்சியங்களுக்காக எத்தனையோ கஷ்டப்பட்டவர்களை பார்த்திருப்போம். " இளம் கன்று பயமறியாது " என்பதற்கு ஏற்ப தன் உயிரை பணயம் வைத்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த துணிந்திருக்கும் இந்த இளைஞரை நாம் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.

"இந்தியாவின் சாதனை நாயகன் பதினெட்டு வயது துளசிமணி", அந்தியூர் தவுட்டுபாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை சுப்பிரமணி, ஆட்டோ டிரைவராக இருக்கிறார். தாய் அன்னபூரணி மற்றும் இவரது தங்கை எட்டாவது படிக்கிறார். இந்தியாவின் சாதனை நாயகன் துளசிமணி கோவை கற்பகம் கல்லூரியில் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படித்துக் கொண்டு இருக்கிறார். சிறுவயது முதலே இவருடன் நெருங்கிய நட்புடன் இருந்த அவரது நண்பர் நந்தகுமார், இருவரும் நன்றாக பைக் ஓட்டுபவர்கள். ஒரு முறை பைக் பயணத்தின் போது ஏற்பட்ட சாலை விபத்தில் நந்தகுமார் வண்டி ஓட்டி போகும்போது தலைக்கவசம் (ஹெல்மட்) அணியாமல் சென்றதால் உயிரிழந்தார். தன் கண் முன்னர் நடந்த இந்த விபத்தில் உயிர் நண்பன் பலியானதை கண்டு மனம் உடைந்த துளசிமணி இனி யாருக்கும் இந்த நிலை நேராமல் இருக்க மக்களுக்கு விழிப்புணர்வு கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்தார்.

இருசக்கர பயணத்தின் போது கண்டிப்பாக ஹெல்மட் அணியவேண்டும்,
சாலை விதிகளை மதிக்க வேண்டும்,
மரம் நட வேண்டும்,
பாலிதீன் பொருட்களை ஒழிக்க வேண்டும்,
இளைஞர்களிடம் சமூக சேவை விழிப்புணர்வு கொண்டுவரவேண்டும்.

போன்ற கருத்துக்களை மக்கள் மனதில் பதிய வைக்க விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார் . கடந்த வருடம் 2013 டிசம்பர் 21தேதி சனிக்கிழமை அன்று காலை 5:20க்கு பொள்ளாச்சியில் கிளம்பி தாராபுரம், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமாரி அங்கிருந்து கிளம்பி திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர் மீண்டும் திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக வந்து காலை 5:10க்கு கன்னியாகுமரி வந்தடைந்தார். அதுமட்டுமின்றி இந்த பயணத்தின் போது அவர் தனது லட்சியங்களான ஹெல்மட் அணியவேண்டும், சாலை விதிகளை மதிக்க வேண்டும், மரம் நட வேண்டும், பாலிதீன் பொருட்களை ஒழிக்க வேண்டும், இளம் மாணவர்களிடையே சமூக சேவை மனப்பான்மையை உருவாக்க வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை சுமார் 3800 பொது மக்களுக்கு வழங்கி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டார்.

அமெரிக்க நிறுவனமான "அயர்ட் அசோசியேசன்" அறிவித்திருக்கும் 24 மணிநேரத்தில் ஆயிரத்து அறுநூறு (1600 ) கிலோமீட்டர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தால் "சேட்டில் சோர்" என்ற விருதுக்கு, இதுவரை 1624 கிலோமீட்டர் என்பது தான் அதிகபட்ச தூர சாதனையாக இருந்தது ... மேலும் இது போன்ற சாதனையை புரிய முயற்சி செய்த 24 பேர் இறந்துவிட்டனர்.

இதற்குமுன் இந்த விருதுக்காகவே பயிற்சி பெற்று களத்தில் இறங்கி உயிரிழந்த 24 பேரும் தங்கள் சொந்த பணத்தில்தான் இந்த முயற்சியை மேற்கொண்டனர். துளசிமணியின் நோக்கம் விருதல்ல மக்களிடயே ஒரு நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றே இருந்தது கூடவே வறுமையும் இருந்தது மனம் தளராது துளசிமணி பொதுமக்களிடம் பண உதவி பெற்று இந்த முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க நிறுவனமான "அயர்ட் அசோசியேசனின் " " சேட்டில் சோர் " என்ற விருதுக்கும் சொந்தமாகி உள்ளார். இந்த சாதனை நிகழ்த்திய துளசிமணி 24 மணிநேரத்தில் 1804 கிலோமீட்டர் சென்று அதுவும் பத்து நிமிடத்துக்கு முன்னர் குறிப்பிட்ட தூரத்தையும் தாண்டி ( 204 கிமீ அதிகமாக ) அடைந்து சாதனை படைத்து இந்த விருதை பெற்றுள்ளார். இதில் அவர் பயணம் செய்த நேரம் 21 மணிநேரம் 30 நிமிடங்கள் மட்டுமே.

"இதுவரை இவரது இந்த சாதனை கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைக்கவில்லை அப்படி பரிந்துரைத்தால் கண்டிப்பாக இவரது இந்த சாதனை கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பெற்றிருக்கும் "

இதோடு நின்று விடவில்லை. துளசிமணியின் அடுத்த முயற்சியாக வரும் ஜூலை மாதம் 72 மணிநேரத்தில் 6800 கிலோமீட்டர் தொலைவு இதேபோல இருசக்கர வாகனத்தில் பயணம் செய்ய முடிவு செய்துள்ளார். அதற்காக அவர் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை செல்ல திட்டமிட்டுள்ளார். அது மட்டுமின்றி தனது விழிப்புணர்வு பிரசுரத்தையும் குறைந்தது 15000 பேருக்காவது பகிர்ந்து கொண்டு அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார். அதில் அவர் வெற்றி பெறவேண்டும் , இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று நாமும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.

முந்தையை பயணத்தில் மணிக்கு 90 km வேகத்தில் பயணம் செய்த இவர் இவரது பயணத்தின் போது நிறைய விபத்துக்களை பார்க்க நேர்ந்தது. மேலும் பல விபத்துக்களில் இருந்து தப்பிக்கவும் செய்திருக்கிறார். எனவே தான் மக்களிடையே மீண்டும் விழிப்புணர்வை ஏற்படுத்த அடுத்த முயற்சிக்கு அடி எடுத்து வைத்திருக்கும் அவர் வெற்றி பெற வாழ்த்துவோம். துளசிமணியை சந்திராயன் விஞ்ஞானி திரு. மயில்சாமி அண்ணாதுரை அவர்களும், கார் பந்தய வீரரான திரு. நரேன் கார்த்திகேயன் அவர்களும் பாராட்டியுள்ளனர். அவர் மேலும் பல சாதனைகள் புரியவும், அவற்றில் வெற்றி பெற்று அவரது லட்சிய விழிப்புணர்வுகளை மக்களிடையே நல்ல முறையில் கொண்டு சேர்க்க அந்த இறைவன் அவருக்கு மனோதிடத்தை வழங்கட்டும் . அவரது முயற்சியை நாமும் மனமார பாராட்டுவோம்.

~மகேந்திரன்

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment