நம் எண்ணங்களில் தோன்றும் பல கற்பனைகளை எழுத்து வடிவமாகவோ , அல்லது சித்திர வடிவமாகவோ படைக்கும் பொழுது அதை பார்ப்பவர்கள் மனதை கவர்ந்து அவர்களின் மனதில் எளிதாக பதியும் . அது மட்டுமில்லாமல் காலங்காலமாக அது அழியாமல் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை . இதன் காரணமாகவே கல் தோன்றிய காலமுதலாக சிலைகள், சுவர் ஓவியங்கள் , குகை ஓவியங்கள் , கல் வெட்டுகள் , ஓலை சுவடி ஓவியங்கள் மற்றும் பல படைப்புகள் படைக்கப்பட்டு இன்றளவும் நம் மனதை கவர்ந்துக் கொண்டிருக்கிறது . ஆனால் இக்காலக்கட்டத்தில் அப்படி பல கலைகளை உருவாக்கும் கலைஞர்கள் பலரும் , கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களுக்காக மக்கள் முன் படைக்க முன்வருவது இல்லை . அவர்கள் படிக்கும் கலைகளை , வியாபார நோக்கத்துடன் விற்று பல அரிய கலைஞர்கள் வியாபாரிகளாகவே மாறி விட்டனர் என்றே சொல்லலாம் .
இப்படிப் பட்டவர்களின் மத்தியில் கோவையைச் சேர்ந்த ஜெகநாதன் என்கின்ற அண்ணாமலை என்பவர் தனது கலைத்திறன் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் , கோவையை சுற்றி பல அரிய சிற்பங்களையும் , சுவர் ஓவியங்களையும் மக்கள் மத்தியில் படைத்து வருகிறார் .
கோவையை அழகு படுத்தும் வகையிலும் மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும் வகையிலும் , இவர் கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் வடிவமைத்துள்ள உலக அதிசயமாக உள்ள ஹவா மஹால். பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் , செங்கோட்டை போன்றவை மிகவும் தத்ரூபமாக காட்சி அளிக்கின்றது . இந்த படைப்புகளுக்கு மக்கள் மத்தியிலும் பலமான வரவேற்பு கிடைத்துள்ளது.
முன்னாள் பிரதமர் திறந்துவைத்த கோவை கொடிசியாவில் உள்ள ஸ்க்கான் கோவிலின் முகப்பு அலங்காரம் இவரை ஒரு சிறந்த சிற்ப கலைஞராக காட்டி உள்ளது . இது மட்டும் இல்லாமல் திருப்பூர் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பொழுது முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் திறக்கப்பட்ட திருப்பூர் நினைவுத்தூண் , கிணத்துக் கடவு பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அண்ணா சிலை காந்திப்பூங்காவில் அமைந்துள்ள காந்தி சிலை என கோவையை சுற்றி பல கலை வேலைப்பாடுகள் அண்ணாமலையால் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கட்டிட சிறப்புக் கலைஞராக வலம் வந்தவர் அண்ணாமலை . கோவையில் பல கட்டிடங்களுக்கு முகப்பு அலங்காரம் வடிக்கும் கலைஞராக இவரையே தேர்வு செய்து வருகின்றனர் . அது மட்டும் இல்லாமல். தான் கற்ற கலையை பள்ளி மாணவர்களுக்கும் பயன் பெரும் வகையில் சிறு சிறு கற்களை கொண்டு சிற்பம் செய்யும் கலைகளையும் கற்றுக் கொடுத்து வருகிறார்.
இந்த பணியெல்லாம் தனது குடும்பம் நடத்துவதற்கு என எடுத்துக் கொண்டாலும் , இவர் தற்போது துவங்கி செய்துவரும் கலை வேலைப்பாடு தனது வருமானத்திற்கும் மிஞ்சிய பொருட்செலவில் மக்களுக்கு விழிப்புணர்வை கொடுக்கும் வகையில் கோவையைச் சுற்றி உள்ள சுவர்களில் சிற்பம் வடித்து வருகிறேன் என்று கூறுகிறார் . மேலும் அதை பற்றி அவரிடம் கேட்ட பொழுது.
" நான் இந்த கலைப்பணியை கடந்த 20 வருடத்திற்கு மேலாக செய்து வருகிறேன் . பல சவால்களுக்கு இடையே தான் , நான் ஒரு நல்ல கலைஞன் என்று பெயர் வாங்கினேன் . குறிப்பாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் அமைக்கும் பொழுது கோவை மாநகராட்சி சார்பாக 150 பொறியாளர்களுக்கு மேல் தேர்வு செய்யப்பட்டு , யாரும் சரிவர அந்த கோபுரத்தை சாய்த்து அமைக்க முடியாமல் நிராகரித்த பிறகு வெறும் 6 ஆம் வகுப்புவரை மட்டுமே படித்த நான் மிக நேர்த்தியாக 16 அடியில் பைசா கோபுரம் 1.5 அடி சாய்வாக அமைத்து கட்டியது எனக்கு மிகவும் சவாலாக அமைந்து இருந்தது . காந்தி பூங்காவில் வைத்திருக்கும் காந்தி சிலையின் கண்கள் உயிருள்ள மனிதக் கண்களைப் போன்றே அமைக்கப்பட்டதாகும் . ஸ்கான் கோயிலின் முகப்பு வடிவம் அமைக்க எனக்கு அழைப்பு வந்த பொழுது நானும் எனது குடும்பத்தாரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை " என்றும் கூறினார் .
மேலும் அவர் கூறும் பொழுது பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாத விஷயங்களான போக்குவரத்து நெறிமுறைகள் , மழைநீர் சேகரிப்பு , எரிபொருள் சிக்கனம் , மின்சார சிக்கனம் , தூய்மை , பிறருக்கு உதவும் மனம் , போதை பழக்க வழக்கங்களின் தீமைகள் போன்ற பல்வேறு விஷயங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளக்கமாக தத்ரூபமாக சாலைகளின் ஓரமாக இருக்கும் சுவர்களில் சுவர் சிற்பங்கள் உருவாக்கி வருவதாக கூறினார் ,
இந்த சுவர் சிற்பங்களுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாகவும் கூறினார் . ஒரு சுவற்றில் சுவர் சிற்பம் உருவாக்க குறைந்தது 5 நாட்கள் வரை ஆகும் . அதற்கான செலவு 15 ஆயிரம் ரூபாய் வரையிலும் ஆகிறது என்றும் , இதுவரைக்கும் 5 இடங்களில் உருவாக்கி விட்டதாகவும் பொது மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற நல்ல எண்ணத்தின் காரணமாக தனது மனைவி இந்திராணி அவர்களின் விருப்பப்படி அவரது நகைகளை அடமானம் வைத்து அதில் வந்த பணத்தை கொண்டு இந்த சுவர் சிற்பம் உருவாக்கி வருவதாகவும் கூறிய பொழுது , எங்கள் மனம் சற்று கனத்தது.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது மட்டுமல்லாமல் , லிம்கா உலக சாதனை மற்றும் கின்னஸ் சாதனையே தனது வாழ்வின் லட்சியமாக கொண்டு கலைத்துறையில் தன்னை அர்பணித்து வரும் அண்ணாமலை மக்களிடம் இருந்து எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்று தான் . சாலையோரமாக யாராவது நீண்ட சுவர் தந்து உதவினால் , அவர்கள் அவரது சாதனை கலைப் பயணத்திற்கு ஏணிப்படியாக இருப்பார்களே !!!
அண்ணாமலை அவர்களை தொடர்புகொள்ள ~92452 80844 / 90035 38492 / 0422 2499191
~மகேந்திரன்
Tweet | ||||
1 comment:
வாழ்த்துக்கள் அண்ணா மலை சார்,பகிர்வுக்கு நன்றி ஈரம் மகி !
Post a Comment