Showing posts with label மழை. Show all posts
Showing posts with label மழை. Show all posts

Thursday, March 18, 2021

மழைகளில் எத்தனை வகைகள் உள்ளன என தெரியுமா? தெரிந்து கொள்வோம்.

*தெரிந்து கொள்வோம்...*

*மழைகளில் எத்தனை வகைகள் உள்ளன என தெரியுமா..??* 

தமிழில் 14 வகையான மழை உண்டு...

1. மழை

2. மாரி

3. தூறல்

4. சாரல்

5. ஆவி

6. சோனை

7. பெயல்

8.. புயல்

9. அடை(மழை)

10. கன(மழை)

11. ஆலங்கட்டி

12. ஆழிமழை

13. துளி மழை

14. வருள் மழை

*இயற்கை நுனித்த மழை:*

வெறுமனே மழைக்குப் பல பெயர்கள் அல்ல. இவை ஒவ்வொன்றுக்கும் வேறுபாடு உண்டு.

*மழை என்னும் சொல்:*

‘மழ’ என்பது உரிச்சொல் ஆகும். ‘மழ களிறு’ என்பதற்கு ‘இளமையான களிறு’ என்று பொருள். ‘மழவர்’ என்பதற்கு ‘இளைஞர்கள்’ என்று பொருள். அந்த உரிச்சொல் புறத்து பிறப்பதே
‘மழை’ என்னும் சொல் ஆகும். இளமையின் அலட்டல் போல், காற்றில் அலைந்து அலைந்து பெய்வதால், புதுநீர் உகுப்பதால் ‘மழை’ எனக் காரணப்பெயர் பெற்றது.

*அடை மழை:*

அடை என்பதை ஆங்கிலத்தில் ‘Thick’ எனக் கூறுவர். இடைவெளியின்றி பார்வையை மறைக்கும் படி பெய்யும் மழை அடை மழை ஆகும். அடைமழை என்பது வினைத்தொகை. அடைத்த மழை, அடைக்கின்ற மழை, அடைக்கும் மழை என்று கூறுகிறோம். விடாமல் பெய்வதால் ஊரையே ‘அடை’த்து விடும் மழை. அடைத்துக் கொண்டு பெய்வதாலும் அடை மழை எனப் பெயர் பெற்றது. கன மழை வேறு. அடை மழை வேறு. அடை மழையில் நீர் பெரும் ஓடைகளையும், குளம், ஏரிகளையும் நிரப்பும் வகையில் இருக்கும்.

*மாரி:*

இள மென்மையாக அலைந்து காற்றாடி போலப் பெய்வது ‘மழை’ ஆகும். தாய்ப்பால் போலச் சீராகப் பெய்வது ‘மாரி’ ஆகும். அதனால் தான் மாரியம்மன் எனத் தெய்வத்தைத் தமிழ் மக்கள்
அழைக்கவும் செய்தார்கள். தமிழ் மொழி பிறமொழி போல் அல்லாது வாழ்வியல் மிக்கது. காற்றின் பாதிப்பு இல்லாமல் வெள்ளச் சேதங்கள் இன்றி மக்கள் இன்னலடையாமல் பெய்யும் நிலப்பரப்பு அனைத்தும் ஒரே அளவு நீரைப் பெறுமாறு சீராகப் பெய்வது ‘மாரி’ ஆகும். அதனால் தான் இலக்கியங்களில் ‘மாதம் மும்மாரி பெய்கிறதா’ எனக் கேட்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

*பிற மழைகளுக்கான விளக்கம்:*

*ஆவி:* ஆங்காங்கே விழும் ஒற்றை மழைத்துளி ‘ஆவி’ எனப்படுகிறது. இந்த வகை மழையில் உடலோ, உடையோ உடனே நனையாது.

*தூறல்:* காற்று இல்லாமல் தூவலாகப் பெய்யும் மழை ‘தூறல்’ ஆகும். புல், பூண்டின் இலைகளும், நம் உடைகளும் சற்றே ஈரமாகும். ஆனால் விரைவில் காய்ந்து விடும்.

*சாரல்:* பலமாக வீசும் காற்றால் சாய்வாக அடித்து வரப்படும் மழை ‘சாரல்’ எனப்படும். மழை பெய்யுமிடம் ஓரிடமாகவும், காற்று அந்த மழைத்துளிகளைக் கொண்டு சென்று வேறிடத்திலும் வீசி பரவலாக்குவதை ‘சாரல்’ என்பர். சாரல் என்பது மழையில் பட்டுத் தெறித்து விழும் மழை எனச் சிலர் கூறுவது முற்றிலும் தவறு. (சாரலடிக்குது ஜன்னல் காத்து என்பதைக் கவனிக்கவும்) சாரல்--சாரம் என்பன சாய்வைக் குறிக்கும் சொற்கள். மலைச்சாரல் என்பது மலையின் சரிவான பக்கத்தைக் குறிக்கும். அதை மலையில் பட்டுத் தெறிக்கும் நீர் எனத் தவறாகப் பொருள் கொண்டு விட்டனர். சாரல் மழை என்பது சாய்வாய் காற்றின் போக்குக்கும் வேகத்துக்கும் ஏற்ப பெய்யும் மழை என்பதே பொருள். சாரல் மழையில் மழை நீர் சிறு ஓடையாக ஓடும். மண்ணில் நீர் தேங்கி ஊறி இறங்கும்.

*கன மழை:* இந்த வகை மழையில் துளிகள் பெரிதாக எடை அதிகம் கொண்டதாக இருக்கும்.

*ஆலங்கட்டி மழை:* திடீரென வெப்பச்சலனத்தால் காற்று குளிர்ந்து மேகத்தில் உள்ள நீர் பனிக்கட்டிகளாக உறைந்து, மழையுடனோ அல்லது தனியாகவோ விழுவதே ‘ஆலங்கட்டி மழை’ ஆகும். இவ்வாறு பனி மழை பெய்ய சூடோமோனஸ் சிரஞ்சி என்ற பனித்துகள்களை உண்டாக்கும் பாக்டீரியாவும் ஒரு காரணமாகும். புவி வெப்ப மயமாதலினால் இந்த பாக்டீரியா முற்றிலும் அழிந்து விடக்கூடும் என அறிவியலாளர்கள் அஞ்சுகின்றனர்.

*பனி மழை:* பனித் துகள்களே மழை போலப் பொழிவது ‘பனி மழை’ ஆகும். இது பொதுவாக இமயமலை ஆல்ப்ஸ் போன்ற மலைப்பகுதிகளில் பொழியும்.

*ஆழி மழை:* ஆழி என்றால் கடல். இது கடலில் பொழியும் மழையைக் குறிக்கும். இதனால் மண்ணுக்குப் பயனில்லை. ஆனால் இயற்கை சமன்பாட்டின் ஒரு பகுதி இம்மழை ஆகும்.

Sunday, September 14, 2014

மழையால் ஒதுங்கிய கவிதை... மகி




வீட்டைச் சுற்றிலும் தண்ணீர்
இவர்கள் தொண்டைக் குழி மட்டிலும்
பாலைவனம்...

வாண்டுகள் வலை போட்டுத்தேடுகின்றனர்
மீன் தொட்டியையும், தொட்டிக்குள் இருந்த
மீனையும்...

குட்டிகளுக்கு விளையாட வீட்டுக்குள்ளேயே ஆறு
இறங்கி விளையாட கரை எங்கே...

மீனவர்கள் வீட்டை தேடியே
ஆறும் மீனும்...

படித்தது போதும் கொஞ்சநாள்
மழை பாடம் படிக்க,
வேடிக்கை பார்க்க, படிப்பு வாசம் படாத
தாத்தா பாட்டியெல்லாம் குடும்பத்துடன்
பேரன் படிக்கும் பள்ளி மாடியில்...

அண்ணாந்து நட்சத்திரம் ரசிக்கும்
கவிஞன் இன்று
ஹெலிகாப்டர் உணவுக்காக
அண்ணாந்து பார்க்கிறான்...

இந்துமா சமுத்திர கடலைவிட
காஷ்மீர்க்கு மழை கொடுத்த
வெள்ளம் பெரியது,

தென்னகத்தில் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் போல
இங்கே மழை நீரை குடிநீராக மாற்ற முடியுமா...

கழிவு நீர் கலந்த மழை நீர் வீட்டுக்குள்ளேயே
முட்டிக்கு மேல் நிற்க
எங்கு சிறுநீர் கழித்தால் என்ன டா குரல்...

கட்டி இருக்கும் உடை முதல் கொண்டு மழை
துவைத்துக் கொடுத்துவிட்டது
காயப்போட மின்னல் கொடி மட்டும் தான் மிச்சம்...

ஆங்காங்கே வைக்கோல் கன்றை மட்டும் விட்டு வைத்துவிட்டு
பசுவெல்லாம் மழை கொன்றது...

நீரில் சமாதியான கர்ப்பிணி வயிற்றில் மட்டும் தண்ணீர் இல்லை,
அவளை சுற்றிலும் தண்ணீர்...

சுடுகாடு தேடி மிதந்துவரும் பிணங்கள்
மனிதனுக்காக குழி வெட்டும் இடமெல்லாம்
மழை நீர் ஆக்கிரமிப்பு
மழை கொன்ற மனித உடலை புதைக்க
வெட்டியானும் இல்லை வெட்ட இடமும் இல்லை...

மழை போதாது என்று
தண்ணீரில் தெரியும் மேகத்தை பார்த்து
கண்களிலும் கண்ணீரின் மழை...

மூழ்கிக்கிடக்கும் தண்ணீர் லாரிகள்...
நீரில் மிதக்கும் பிளாஸ்டிக் குடங்கள்

மார்வாடி மழையால் மரித்துப் போனது அறியாது மார்வாடிக்
கடைக்கு மிதந்துவரும் பித்தளைக் குடங்கள்...

தபால் பெட்டிக்குள் தண்ணீர்
பட்டுவாடா நடப்பது எப்போது...
யாரோ எழுதிய கடிதம்
யாருக்கோ கொண்டு சேர்க்கும் மழை...

ஏற்கனவே கடனில் மூழ்கிப்போன வீடுகள்
இன்று மீண்டும் வெள்ளத்தில் மூழ்குகிறது...

கூடு கட்டின மரம் இருந்த இடம்
தெரியாமல் பறவைகள்
அல்லல்...

இதுதான் விதி என்பதா
தாமரை பூவிற்கு தண்ணீரிலேயே மரணம்..

பூந்தோட்டம் இருந்த இடம் காணோம்
பட்டாம் பூச்சிகள் கண்ணிலும் மழை...

நெல்வயலுக்குள் புகுந்ததால்
ஜோசியக் கிளி கூட
அவர்களோடு பட்டினிதான்...

மனிதன் பொதுக் கூட்டத்திற்கு தேதிக் குறிப்பிட்ட
அதே தேதியில் மழை வெள்ளம் நடத்தும்
இரங்கல் கூட்டம்...

கொஞ்சம் அதிகம் வேண்டிவிட்டார்கள் போல
கொட்டுகிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது
கோவிலுக்குள் இருக்கும் கடவுளுக்கும்
ஒதுங்க இடம் கிடைக்காமல் தவிக்கிறது...

மழைக் காட்சியை படம் பிடிக்க வைத்திருந்த கேமராக்களையும்
நீர் ஒப்பனை செய்ய , மின்னல் வந்து படம் பிடிக்கிறது...

தேர்தல் சமயத்தில் குடைசின்னம் கொண்ட கட்சிகளுக்கு
எதிர்க் கட்சிக்காரனே செய்யும் ஓசி பிரச்சாரம்...

ஒரு உண்மை உறுதியானது
" தண்ணீர் பந்தலுக்குள்ளும் தண்ணீர்...

மழைநீர் சேகரிப்புத் திட்டம்
உடைத்தெறிந்தது இந்த மழை வெள்ளம்...

என்ன தேவையோ தெரியவில்லை
சாலை மறியல் செய்யும் மழை...

மழை என்னும் ஒரே ஒரு திருடன் ஒரே நேரத்தில்
அனைத்து வீடுகளுக்குள்ளும் புகுந்து
உயிர் முதல் அனைத்தையும் களவாடி விட்டான்
தண்டிக்க ராணுவத்தால் கூட முடியாது...

மழை மிச்சம் வைத்த உயிர்களை
நிவாரண நெரிசல் சவ வேட்டையாடுகிறது...


~ மகி

Saturday, November 12, 2011

மழை நிவாரண நிதி

மழை நிவாரண நிதி
வழங்கப்பட்டது..!

நெரிசலில் பலர் சாவு..!

நிவாரணநிதிக்கு
குடுத்த துணி
கோடி துணி ஆனது..!

அரிசி
வாய்க்கரிசி ஆனது..!

Thursday, October 27, 2011

கரைந்தாலும் கரையும்...

கொட்டும் மழை
சர்க்கரை கரையலாம்...
சர்க்கரை நினைவுகள்
கரையுமா..?
கரைந்தாலும் கரையும்
அதான்
நனைய மறுத்துவிட்டேன்..!

Tuesday, October 25, 2011

மழை...

குடையை மடக்கு
உன்னை
பார்க்கமுடியாமல்
வானம்
அழுகிறது..♥

Friday, September 23, 2011

அன்பில் ஈரம் அதிகம்...

பெய்யும் மழையை விட...
பொழியும்
உன்
அன்பில்
ஈரம் அதிகம்..!

Tuesday, August 30, 2011

சுவடுகள்...

ஐயோ...
நேற்று
பெய்த மழையில்
உன்
பாத சுவடுகள் கரைந்து போயிற்றே...
வெள்ள நிவாரணம்
கேட்டு
மனு எழுதி போடவேண்டும்...♥