Saturday, March 13, 2021

கொடும்பாளூர் மூவர் கோயில் கட்டுரை eerammagi

 கொடும்பாளூர் இப்படி ஒரு ஊரைப் பற்றி  கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஊரின் சிறப்புகளைப் பற்றி தான் இங்கே சொல்கிறேன் ...





கல்கி எழுதிய பொன்னியின் செல்வனில் நாயகியாக வரும் ராஜராஜனின் மனைவி வானதி கொடும்பாளூரைச் சேர்ந்தவள் என்பதும் ,

சிலப்பதிகாரத்தில், கோவலனும் கண்ணகியும் பூம்புகாரிலிருந்து மதுரை நகருக்கு  இக்கொடும்பாளூர் வழியே சென்றதாகவும் குறிப்புகள் உள்ளது, சிலப்பதிகாரத்தில் இவ்வூர் கொடும்பை என குறிப்பிடப் படுகிறது.

முந்தையசோழநாட்டின் தலைநகரான உறையூரிலிருந்து பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரைக்குச்செல்லும் வழியில் இவ்வூர் அமைந்துள்ளது.

தமிழ் இலக்கியம் , வரலாறு படித்தவர்களுக்கு இவ்வூர் பற்றித்  தெரியும், 

திருச்சியிலிருந்து மதுரை செல்லும் வழியில் விராலிமலையை அடுத்து10 கிமீ தொலைவில் புதுக்கோட்டை மாவட்டத்தில்  இவ்வூர் அமைந்துள்ளது. 


இந்த ஊரில் மற்றொரு சிறப்பு மூவர் கோவில் ...



ஆமாம் இந்த மூவர் கோவிலை பற்றித்தான் இந்த கட்டுரை .


இந்த கொடும்பாளூர்  ஊருக்கு சென்றால்  இரண்டு கற்றளியை காணலாம் . 

இந்த  கற்றளி என்கிற வார்த்தை உங்களுக்குப் புரிந்திருக்க வாய்ப்பு குறைவு. கற்றளி என்றால்  கோயில் கட்டிடக் கலை குறித்து தெரிந்தவர்களுக்கும், தமிழகத்தில் கோயில்களின் பரிணாம வளர்ச்சி குறித்து தெரிந்தவர்களுக்கும் இந்த கற்றளிப் பற்றி நன்கு தெரிந்திருக்கும் . 


கற்றளி என்பது கற்களால் கட்டப்பெற்ற கோயில்களைக் குறிப்பதாகும். இவை கற்கோயில்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இம்முறையில் கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி கட்டப்பெற்றன. இம்முறையில் சுண்ணம் கலவைக் கூட பயன்படுத்தப் பெறவில்லை.


இக்கற்றளிகள் அமைப்பது கி.பி ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து தொடங்கப் பெற்றது. செங்கற்கள் கொண்டு அமைக்கப் பெற்ற கோயில்களும், மரக் கோயில்களும் பிற்காலத்தில் அரசர்களால் கற்றளிகளாக மாற்றப்பட்டன. தஞ்சை பெரிய கோவில் ,  மாமல்லபுரம் கோவில்கள்  கற்றளிக் கோவில்கள் ஆகும்.




அப்படி கற்களை கொண்டு  அடுக்கி கட்டப்பட்ட கோவில் தான் (கற்றளி) இந்த மூவர் கோவில். இந்த கோவில் பார்ப்பதற்கு மாமல்லபுரம் கோவிலைப் போன்ற தோற்றத்தைக் கொண்டே இருக்கும் . கி.பி 10 ஆம் நூற்றாண்டில் , கொடும்பாளூரை ஆண்ட வேளிர் குல அரசரான  பூதிவிக்கிரமகேசரி என்பவரால் இந்த  மூவர் கோயில் கட்டப்பட்டது.


பிரம்மாண்ட படைப்பாக எழும்பியிருக்கும் இக்கற்றளியை ,  பூதி விக்ரம கேசரி  தனது பெயராலும், தனது மனைவியர் வரகுணவாட்டி, கற்றளை பிராட்டியார் ஆகியோரது பெயராலும் மூன்று கற்றளிகளை எழுப்பி வைத்தார்  என்று கூறப்படுகிறது.  எனவேதான்   இக்கோவிலுக்கு "மூவர் கோவில்' எனும் பெயர் வந்தது,  இது அங்குள்ள சுவற்றில்  அம்மன்னனின் கல்வெட்டு மூலமாக அறியமுடிகிறது. அது மட்டுமல்ல இம் மன்னனுக்கு பராந்தக வர்மன், ஆதித்த வர்மன் என இரு மகன்கள்  இருந்ததை அங்கு இருக்கும்  வடமொழிக் கல்வெட்டின் வாயிலாக நாம் அறிய முடிகிறது.





இந்த கோவிலை  மூவர் கோவில்  என்று குறிப்பிட்டாலும் ஐவர் கோவில் என்றும் கூறப்பட்டு வருகிறது, இதற்கு காரணம்  இக்கோயிலுக்கு சற்று கிழக்கே ஐந்தலை என்று ஐந்து கோயில்கள் இருந்துள்ளன. இவை அழிந்து தற்போது அடித்தளம் மட்டுமே காணப்படுகிறது.



மூன்று கோயில்களிலும் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.  (தற்பொழுது இருக்கும் இரண்டு கோவிலில் ஒரு கோவிலில் மட்டும் சிவ லிங்கம் உள்ளது , மற்றொரு கோவில் கருவறையில் எந்த சிற்பமும் இல்லை )  இம் மூன்று கோயில்களும் காலபோக்கில் ஒரு பக்கம்  இடிந்து உள்ளது .  தற்போது அதன் அடித்தளம் மட்டுமே உள்ளது. 




இக் கோயிலானது தாமரை மலர் போன்ற பீடத்தின்மீது அமைக்கப்பட்டுள்ளது.  மகா மண்டபத்தை அடுத்து நந்தி மண்டபம், பலிபீடம் அமைந்து இருந்ததற்கான சுவடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன.  பிரகாரச் சுற்றில் பரிவார தேவதைகளுக்காகக் கட்டப்பட்டிருந்த  சந்நிதிகளும் அஸ்திவாரங்கள் மட்டுமே இன்று தென்படுகிறது. கோவிலுக்கு அருகில்  வட்ட வடிவில் நேர்த்தியாக அமைந்த படிக்கிணறு இன்று வரை எந்த சேதாரமும் இல்லாமல்  அமைந்துள்ளது.   இக்கோயிலைச் சுற்றி பெரிய திருமதில் இருந்தற்கான தடயம் மட்டுமே எஞ்சியுள்ளது.











மூலவர் விமானத்தின் கற்கள் ஒன்றின் மீது ஒன்றாக அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. ஒரு கல்லின்மீது மற்றொரு கல்லை அடுக்கி அந்த பாரத்தைக் கொண்டு விமான உட்பகுதி கூம்பு போல காணப்படுகிறது.  



கோவில் பிரகாரத்தைச் சுற்றி  புராணக் கதைகளுக்கு ஏற்றவாறு சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளன. அவற்றுள் அர்த்தநாரீசுவரர், வீணாதர தட்சிணாமூர்த்தி, காலந்தக மூர்த்தி, பிக்ஷாடன மூர்த்தி, கஜசம்ஹார மூர்த்தி, திரிபுராந்தகர், ஆலிங்கனமூர்த்தி, கங்காதர மூர்த்தி உள்ளிட்ட சிற்பங்கள் உள்ளன.







அர்த்தநாரீசுவரர் சுவாமி சிலை பெரும்பாலான கோவில்களில் காண முடியாது , ஆனால் இங்கு மிக தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருப்பதைக் காண முடியும்.



மற்றொரு இடத்தில் யாளியின் வாய்க்குள் மனித உருவம் , யாளியின் வாய்க்குள்ளேயும்  மனிதன் சண்டை போடுகிறான். இது போன்ற சிற்பங்கள் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்துகின்றன . 





கோவிலை நான் படம் பிடித்து உங்கள் பார்வைக்கு வைத்திருக்கிறேன், படத்தை மட்டும் பார்க்காமல் நேரிலும் ஒரு முறை சென்று வாருங்கள், உங்கள் குழந்தைங்களை அவசியம் அழைத்துக்கொண்டு செல்லவேண்டிய இடமாக உள்ளதால் அவர்களையும் அழைத்துச் செல்லுங்கள். நம் முன்னோர்களின் கலைநயம் மற்றும் வரலாறு பற்றி அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது நமது கடமையும் கூட .

நான் சொன்ன செய்திகளை விட இன்னும் நிறைய செய்திகள் அங்கே நேரில் கண்டு தெரிந்து கொள்ளலாம்.


ஒரு முக்கியமான தகவலையும் சொல்லி விட்டு இந்த கட்டுரையை முடிக்கிறேன் .


அந்த ஊரில்   விரிந்து பரந்த நிலப்பரப்பில் சுற்றிலும் பசுமை போர்த்திய வயல்கள் அமைந்திருக்க, "மூவர் கோவில்'  கம்பீரமாகக் காட்சியளித்து நிற்கின்றன. இக்கோவில் தஞ்சை பெரிய கோவில் எழுப்பப்படுவதற்கு முன்னோடியாக விளங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




~ஈரநெஞ்சம் மகேந்திரன்

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment