Wednesday, March 12, 2014

கல்வி என்பது கண் போன்றது. ஆனால் கல்வியை கற்றுக் கொடுக்க கண் அவசியமில்லை

"அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது
மானிடராய் பிறந்த காலையின்
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பிறந்த காலையின்
கல்வியும் செல்வமும் தான் பெறுதல் அரிது
கல்வியும் செல்வமும் பெற்ற காலையின்
வாழ வழி நாடி வழி பிறந்திடுமே" :-

"எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்" :-
இவை ஒளவையின் மொழியாகும் ...


கல்வி என்பது கண் போன்றது. ஆனால் கல்வியை கற்றுக் கொடுக்க கண் அவசியமில்லை என்பதை நிரூபிக்கிறார் திரு. ஹக்கீம் அவர்கள் .
09-03-2014 அன்று பின்தங்கிய வகுப்பை சார்ந்தவர்களின் சிறந்த கல்வியாளர் மற்றும் சிறந்த சாதனையாளருக்கான "பெட்டகம்" 2014 ஆண்டுக்கான விருது பார்வையற்ற ஆசிரியர் திரு. ஹக்கீம் வயது 32 அவருக்கு வழங்கப்பட்டது ." பிறவி முதலே பார்வை அற்ற அவர் கோவை குனியமுத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணி புரிகிறார் . பல்லாயிரம் மாணவர்களுக்கு கல்விக் கண் கொடுத்து வரும் திரு. ஹக்கீம் அவரை சந்திக்க அவர் பணிபுரியும் பள்ளிக்கு சென்று நேரில் சந்தித்தபோது.
மாணவர்கள் தங்களது ஆசிரியரான திரு. ஹக்கீம் பாடம் நடத்தும் பொழுது எந்த ஒரு இடையூறும் இல்லாமல் உற்று கவனிப்பதும், அவருக்கு ஒத்துழைப்பாக நடந்து கொள்வதும் பார்ப்பதற்கு வியப்பாக இருக்கிறது. ஆசிரியர்கள் என்றாலே கண்டிப்பு , தண்டனை தான் அதிகம் இருக்கும். ஆனால் இவரிடம் நிதானமும் ஊக்கமும் அதிகமாக இருப்பதை இவரிடம் பயிலும் மாணவர்களை பார்க்கும்போதே தெரியவருகிறது.

அவர் பாடம் கற்றுக்கொடுக்கும் அழகை நாமும் ஆர்வத்துடன் கவனித்து பாடம் முடிந்ததும் அவரிடம் எப்படி சார் உங்களால் இவ்வளவு நேர்த்தியாக பாடம் எடுக்க முடிகிறது? எப்படி உங்களுக்கு இது சாத்தியமாகிறது என்று கேட்டபோது ,

பிறவியிலேயே பார்வை இல்லை என்பதால் இது தனக்கு ஒரு குறையாகவே தெரியவில்லை அதுமட்டும் இல்லாமல் பார்வை இல்லையென்றாலும் ஏதாவது ஒரு வகையில் வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற இலட்சியம் சிறு வயதில் இருந்தே நிறைய இருந்தது, மேலும் பார்வை இல்லை என்பதனால் ஞாபக திறன் வளர்த்துக்கொண்டேன் , அந்த நியாபகத் திறனால் மாணவர்களுக்கு சுலபமாக கற்றுக் கொடுக்க முடிகிறது என்றார் .


அவரிடம் ஆசிரியர் பணியை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள் உங்களது குடும்பத்தின் ஒத்துழைப்பு எப்படி என்று கேட்டபோது .

பெற்றோர் அப்பா முகம்மது மற்றும் அம்மா சாலிஹா, தனக்கு மூன்று சகோதரிகள் மற்றும் இரண்டு அண்ணன் நான் கடைசியாக பிறந்ததினால் அதிக செல்லம் . அப்பா கூலிவேலை செய்துவந்ததால் வறுமை இருந்தபோதும் குடும்பத்தின் அன்பு பெரும் செல்வமாக இருந்தது . பிறவியிலேயே பார்வை இல்லை என்பதால் குடும்பத்தினர் எனக்கு அந்த குறை தெரியாமல் நல்ல படியாக வளர்த்து நல்லபடியாக படிக்க வைத்தனர் தற்போது சபியா என்ற அன்பான மனைவியுடன் இன்னும் கூடுதல் பலமும் ஆறுதலும் கிடைத்துள்ளது. தற்போது கிடைத்த " பெட்டகம் விருது " மிகுந்த உற்சாகத்தை தருகிறது.
ஆறாம் வகுப்பு வரை விடுதியில் தங்கி பார்வையற்றோருக்கான பிரெயில் முறையில் கல்வி அதற்கு பிறகு ஒருங்கிணைந்த பாடத் திட்டத்தின் கீழ் கல்வியை தொடர்ந்தேன் . முதலில் B.A., முடித்து பின் M.A., B.Ed., பயின்றேன் . பார்வை குறை என்பதால் சிற்சில சங்கடங்களையும் சந்திக்க நேர்ந்த போதும் அதை பெரிது படுத்திக்கொள்ளாமல் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் தொடர்ந்து பயின்று வந்தேன். 2008 ஆம் ஆண்டு இலட்சியத்திற்கான வாசல் திறக்கப்பட்டது . நான் எதிர்பார்த்தது போலவே ஆசிரியர் பணி கிடைத்தது கடந்த ஆறு வருடங்களாக, ஆசிரியராக சிறந்த முறையில் பணியாற்றி வருகிறேன் . மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கவேண்டும் என்ற கனவு மெய்பட்டதால் போத்தனூரில் இருக்கும் எனது வீட்டில் இருந்து குனியமுத்தூர் பள்ளிக்கு 6 கிலோ மீட்டர் தூரம் சிரமம் ஒன்றும் தெரியவில்லை. நாள்தோறும் வீட்டில் இருந்து தானாகவே பேருந்தில் பள்ளிக்கு சென்று வருகிறேன் .

மேலும் பள்ளி மாணவர்கள் என்றாலே பெரும் குறும்புடன் இருப்பார்களே உங்களிடம் எப்படி அணுகுகிறார்கள் என்று கேட்டபோது.

குழந்தைகள் எல்லாம் பொதுவாக விளையாட்டுத் தனத்துடன் தான் இருப்பார்கள், என்றாலும் தனது வகுப்புகளின் போது அவர்கள் நல்ல முறையில் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வார்கள் நான் பள்ளிக்கு வரும் நேரம் நான் வரும் பேருந்து எல்லாவற்றையும் அறிந்து என்னை அழைத்து செல்ல பேருந்து நிலையத்தில் எனக்கு முன்பாக வந்து காத்திருந்து நான் வந்ததும் என்னை பள்ளிக்கு அழைத்து செல்வார்கள். வகுப்பு பாடங்களை நேர்த்தியாக முடிப்பார்கள் , சில மாணவர்களிடம் குறும்புத்தனம் இருந்தாலும் மற்ற மாணவர்கள் எனக்கு துணையாக அவர்களை வழி நடத்திக் கொள்கிறார்கள் . அதுமட்டும் இல்லாமல் நான் அதிகம் கண்டிக்க மாட்டேன் , நிதானத்துடன் அன்புடன் பழகுவதனாலேயே மாணவர்கள் என்னிடம் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறார்கள் .இந்த அணுகு முறையாலே இதுவரையிலும் கிட்டத்தட்ட 1000 மாணவர்களை பெற்று உள்ளேன் என்றார்.
மாணவர்களுக்கு அவர் என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பதற்கு.

மாணவப் பருவம் என்பது விளையாட்டுத்தனம் நிறைந்த வயது தான் என்றாலும் முன்னேற வேண்டும் என்ற நெருப்பு மனதிற்குள் எப்போதும் இருக்க வேண்டும் , அதுதான் வெற்றிக்கு ஒளியைத்தரும் என்று அறிவுறுத்தினார்.

பார்வை திறன் இல்லாமல் இருந்தாலும் தன்னம்பிக்கை குறையாமல் இருக்கிறார் .பலருக்கு நம்பிக்கை ஊட்டுகிறார் ,
எதிலும் வெல்லலாம் : எதனாலும் வெல்லலாம் ; ஆனால் வாழ்க்கையை வெல்ல தன்னம்பிக்கை உடையவர்களால் மட்டுமே இந்த உலகையும் வெல்ல முடியும் என்பதை நிருபித்துள்ளார் திரு. ஹக்கீம் அவர்கள்

பாராட்டும் அங்கீகாரமுமே பிறரை மேலும் மேலும் முன்னோக்கி தள்ளும் . பார்வை திறன் இல்லாத இவரால் இவ்வளவு செய்ய முடிகிறது என்றால் உங்களாலும் முடியாதா என்ன ???

#மகேந்திரன்




நன்றி
The New Indian Express 
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

2 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

சாதனை மனிதருக்குப் பாராட்டுக்கள்.
நல்லதொரு தன்னம்பிக்கைதரும் பதிவு.

மாயவரத்தான். எம்.ஜி.ஆர்... said...

உணர்வுப்பூர்வமான இடுகை! மாற்றுத்திறனாளிகள் எல்லாம் மாபெரும் திறனாளிகள் என்பதற்கு இந்த இடுகை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு! புகைப்படங்கள் மற்றும் செய்தித்தாள் குறிப்புடன் வெளியிட்டது சிறப்பு! தொடர வாழ்த்துக்கள் நண்பரே! நன்றி... ரவிஜி..

Post a Comment