Monday, March 24, 2014

இனி ஒரு விதி செய்வோம்..!

இனி ஒரு விதி செய்வோம் !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிபடைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கண்ட தோளினாய் வா வா வா
. - மகாகவி பாரதியார்...

சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும். எந்தச் சக்தியும் எந்தத் தடையும் அந்தச் சாதனைக்கு முட்டுக்கட்டை போட முடியாது. திறமைகளுக்கு உடல் ஊனமும் கூட ஒரு பொருட்டில்லை.

இறைவனின் படைப்புகளில் மனிதன் ஓர் ஆச்சரியம்!!!

இறைவன் படைப்பில் எத்தனையோ அற்புதங்களை எத்தனையோ அதிசயங்களை நேர்த்தியான படைப்புகளைக் கண்டு வியந்திருக்கிறோம். இறைவனே ஆனாலும் தவறுகளுக்கு விதிவிலக்கு இல்லை, என்று சொல்ல தோன்றும் "செய்வன திருந்த செய் " என்பது மனிதனுக்கு மட்டுமல்ல சில நேரங்களில் கடவுளுக்கும் கூட பொருந்துகிறதோ என்றும் என்ன தோன்றும் . உடலில் ஊனத்தைக் கொடுத்து விட்டு மனதில் ஏக்கத்தையும் அளவுக்கு அதிகமாகவே சுமந்து வாழ்கிறார்கள். இது கர்மவினை என்றோ பூர்வ ஜென்ம பலன் என்றோ மனதை தேற்றிக்கொள்ளக் முடிவதில்லை. உடல் ஊனம் என்ற நிலையில் அம்மனிதர்கள் படுகின்ற வேதனைகளை பார்த்தால் கடவுள் மீதும் கோபம் கொள்ள தோன்றும் ...ஏன் இப்படி, எதற்கு இப்படிப் படைத்தான் என்ற விடைதெரியாத கேள்விக்கு எல்லாம் விளக்கம் தன்னம்பிக்கையே இறைவன் வடிவம் அவன் கரம் பிடித்தோர் தோற்றதாக எந்த சரித்திரமும் இல்லை .

தன்னம்பிக்கை இழந்த வர்கள் பலர் பிறரை போலத் தான் இல்லையே என்று தன் குறைபாட்டை எண்ணி , ஏங்கி மண்ணோடு மண்ணாக மட்கிப்போய் விடுகின்றனர். ஆனால் ஒரு சிலரோ தன் ஊனத்தைப் பொருட்படுத்தாமல், அதை ஒரு குறையாக எண்ணாமல் தன் மனதில் வைராக்கியத்தை வளர்த்துக், தன்னம்பிக்கை என்னும் மகா சக்தி தந்துனை கொண்டு தன்னைத்தானே செதுக்கி கொள்ளும் சிற்பியாகி தனது பல்வேறு திறன்களால் தன்னைச் செதுக்கிக் கொண்டு சாதித்து உலகில் தங்கள் சுவடு பதித்து நிலைத்து நிற்கின்றனர். அவர்களைப் படைத்த இறைவனே அவர்களைக் கண்டு வியக்கும் வண்ணம் ஜொலிக்கின்றனர்.

இதுபோலத் தன் திறமைகளால் தன்னையே செதுக்கி கொண்ட ஒரு சாதனை சிற்பி தான் 17- வயதாகும் கலைவாணி என்ற சிறுமி ...

கலைவாணி பிறந்த சில நாட்களிலேயே தந்தை சக்திவேல் காலமானார். தாயார் கண்ணம்மாள் தந்தைக்குப் பிறகு கீரை வியாபாரம் செய்து கலைவாணியை வளர்த்து வந்தார். கலைவாணி கைக்குழந்தையாய் இருந்த பொழுது கூப்பிட்டால் திரும்பி பார்ப்பதில்லை, கத்தி அழுவதோ எந்தச் சப்தமும் தருவதோ இல்லை.. என்ற போதுதான் கலைவாணிக்கு ஏதோ பிரச்சினை இருப்பதை உணர்ந்தார் தாய் கண்ணம்மாள். மேலும் கலைவாணி மற்றக் குழந்தைகள் போல் இல்லாமல் தனித்து இருந்ததையும், மற்றக் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடாமல் எந்தச் சராசரி நடவடிக்கைகளும் இல்லாமல் இருப்பதைக் கண்ட தாயார் மிகவும் வருந்தி உறவினர்களின் உதவியை நாடினார். அவர்களுக்கும் போதிய படிப்பறிவும், விழிப்புணர்வும் இல்லாத காரணத்தால் மந்திரித்துப் பார்க்கும்படி கூறினர். அது எந்தப் பலனும் அளிக்காததால் கண்ணம்மாள் என்ன செய்வதென்று தெரியாமல் மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு மகள் கலைவாணியை அழைத்துச் சென்றார். அப்போதுதான் தன் மகள் கலைவாணிக்கு காது கேட்கவோ , வாய் பேசவோ முடியாது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அவரிடம் மருத்துவர்கள் இவர்களைப் போன்ற குழந்தைகளுக்கு என்று தனியாகப் பள்ளிக்கூடங்கள், காப்பகங்கள், தனிக் கல்விமுறைகள், விளையாட்டு முறைகள் போன்றவை இருப்பதைத் தெரியப்படுத்தினர். அங்குக் கலைவாணியைச் சேர்ப்பதன் மூலம் அவளது தனிமையைப் போக்க முடியும் என்பதைத் தாய் கண்ணம்மாவிற்கு உணர்த்தினர். அதன் பிறகு மூன்று வருடங்களாக அதற்கான முயற்சியை மேற்கொண்ட அந்த தாய் பல இடங்களில் தேடி இறுதியாக திருப்பூர் காது கேளாதோர் பள்ளியில் கலைவாணியைச் சேர்த்தார்.

இங்குத் தனிப்பட்ட சிறப்புப் பாட முறைகள், ஆதரவு, அன்பு, அனுசரணை போன்றவற்றால் கலைவாணி மிக விரைவிலேயே இங்கு உள்ள குழந்தைகளுடனும் ஐக்கியமாகி விட்டார். தனக்குள் இருக்கும் தனித் திறமைகளைச் சரியான முறையில் புரிந்து கொண்டு அவற்றை வளர்த்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தாள்.

தற்போது 11ஆம் வகுப்பு படித்து வரும் கலைவாணியின் ஆற்றலையும், தனித் திறமைகளையும், சாதனைகளையும் பற்றிச் சொல்வதென்றால் நாளெல்லாம் சொல்லிக் கொண்டே போகலாம். காது கேட்க, வாய் பேச இயலாத நிலையிலும் கலைவாணி 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 82 % மதிப்பெண்கள் பெற்றுப் பள்ளியில் முதலிடம் பெற்றாள். கடந்த வருடம் 2003-2004க்கான தமிழக அரசு மாநில அளவில் நடத்திய மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் ஓட்டப் பந்தயப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றாள்.
அது மட்டுமல்லாமல் ஓவியக் கலையிலும் சிறப்பாகப் பயிற்சி பெற்று கோவை பாரதியார் பல்கலை கழகத்தில் நடந்த ஓவியப் போட்டியிலும் கலந்து கொண்டு சிறப்பாக ஓவியம் வரைந்து முதல் பரிசை தட்டிச் சென்றாள் . மேலும் கணினித் துறையிலும் திறமை வாய்ந்தவராகத் திகழ்கிறார். இதுவரையிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட பதக்கங்களும், 100க்கும் மேற்பட்ட சான்றிதழ்களும் வென்றுள்ளார்.

இது போன்ற வெற்றிகளை எல்லாம் யார் வேண்டுமானாலும் சற்று முயற்சி செய்தால் சாதித்துக் காட்டலாம் . ஆனால் இவை எல்லாம் தாண்டி கலைவாணியிடம் இருக்கும் திறமையோ இறைவனையே இவரைப் படைத்தற்காகப் பெருமிதம் கொள்ளச் செய்யும். இனி இந்தத் தவறை செய்யாமல் இருக்கவேண்டும் என்று நினைக்க வைக்கும்.

வாய் பேச முடியாத காது கேளாத கலைவாணி ஒரு சிறந்த நடனக் கலைஞரும் கூட ...

இசைக்கு ஏற்ப நடனம் ஆடும் திறமை வாய்ந்த அதிசய படைப்பான இவள் கலைவாணி என்ற பெயருக்கேற்ப கலைகளின் தேவதை தான் ...

கலைவாணியின் இந்த நடன திறனை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்ட சன் டிவியில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சாதனையாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. அதில் நடந்த 13 வார நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் பரிசாக 5 லட்சம் வென்றார். காது கேட்க முடியாத இவரால் இசையை உணந்து அதற்கு ஏற்ப ஆட முடியும் என்பதை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டிய சன் டிவிக்கு நன்றி. கலைவாணியைப் படைத்த இறைவனையும் இவரைக் கண்டு பிரமிக்க வைக்கும் இந்தத் திறமை ஒவ்வொரு மாற்றுத் திறனாளிக்கும் ஊக்கத்தைக் கொடுக்கிறது. தன்னாலும் சாதிக்க முடியும் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

இவருக்குக் கற்றுத் தரும் ஆசிரியர்களான சித்ரா மற்றும் ஸ்ரீனிவாசனிடம் கேட்ட போது, "பொதுவாகக் கலைவாணி மிகவும் துடிப்பு நிறைந்த சுறுசுறுப்பான பெண் , அவள் குழந்தை பருவத்தில் இருந்தே எல்லாப் பாடங்களிலும் எல்லாத் துறையிலும் முன்னிலை பெற்று வருவாள். சாதாரண மாணவர்களைக் காட்டிலும் கலைவாணி மிகவும் திறமைசாலியாகவே காணப்படுவாள். சொல்வதை எளிதில் புரிந்து கொள்வாள். இதைவிட மேலும் இவள் சாதிப்பாள் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிறையவே இருக்கிறது " என்று பெருமிதம் கொண்டார்கள்.

இவராலேயே இவ்வளவு சாதிக்க முடியும் என்றால், எந்த முயற்சியும் இல்லாமல் வாழ்ந்து மண்ணோடு மண்ணாகும் குறைகள் இல்லாத மனிதர்கள் உண்மையாக முயற்சித்தால் சுலபமாக வெல்லலாம். இன்னும் எவ்வளவோ சாதிக்கலாம். இதுபோன்ற மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் உலகை வெல்லத் துடிக்கும் இன்னும் எத்தனையோ கலை தேவதைகள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தங்கள் சாதனைகளில் வென்று மகிழ்வுற வாழ்த்துவோம் !!! கலைவாணிக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள் !!!

‪#‎மகேந்திரன்‬
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment