பெரும் முயற்சிக்கு பின் லட்சுமியின் உறவினர்கள் கோவைக்கு அழைத்து வரப்பட்டது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கடந்த 30/05/2015 அன்று கோவை ரயில் நிலையத்தில் பார்வை இல்லாத 15 வயது மதிக்கத்தக்க லட்சுமி என்ற பெண் அழுதுக் கொண்டு ரயில் நிலையத்தில் தடுமாறிக்கொண்டு இருப்பதைகண்டு கோவை ரயில் நிலைய காவலர்கள் மீட்டு அவளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் படி கோவை மாநகராட்சி காப்பகத்தில் அனுமதித்தனர்.
இதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அறக்கட்டளை லட்சுமியிடம் விசாரித்து அவளுடைய உறவினர் கர்னாடக மாநிலத்தில் யாத்கிர் என்ற ஊரில் இருப்பதை அறிந்து அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியை மேற்கொண்டது.
அதன் பயனாக லட்சுமியின் தந்தை மஞ்சுநாத் மற்றும் உறவினர்கள் தொடர்பு கிடைத்தது . அவர்களிடம் லட்சுமியை பற்றி விபரம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு படிப்பறிவும் போதிய வருமானமும் இல்லாததால் அவர்களால் கோவை வரை வருவதற்கு முடியாமல் இருந்து வந்தது. அதுமட்டும் இல்லாமல் தொடர்ந்து இவர்களிடம் தொடர்புகொள்ள மொழி பிரச்சினை இருந்துக் கொண்டே இருந்தது. இதனால் லட்சுமி அவளது உறவினர்களுடன் இணைவதில் தாமதமாகிக் கொண்டிருந்தது.
இதனால் லட்சுமிக்கு தாய் தந்தையுடன் இணையவேண்டும் என்று ஏக்கம் அதிகமாகி காப்பகத்தில் சரிவர உறங்காமல் உணவும் உண்ணாமல் அழுதுக் கொண்டே இருப்பது மனதையும் கலங்க வைத்துக் கொண்டிருந்தது.
இந்த இக்கட்டான நிலையில் பட்டுக் கோட்டையில் மிகவும் பிரபலமான ராஜா க்ரூப்ஸ் நிறுவனரும் முகநூல் நண்பருமான சிதம்பரம்
அவர்கள் ஈரநெஞ்சம் அறக்கட்டளையுடன் தொடர்புகொண்டு லட்சுமியின் நிலையை பற்றி விபரம் கேட்டு அவளுக்காக நாங்களும் உங்களோடு சேர்த்து அவளது உறவினரை அழைத்துவர முயற்சி எடுக்கின்றோம் என்று கேட்டுக் கொண்டு அதன்டடி . ஈரநெஞ்சம் அறக்கட்டளை மற்றும் பட்டுக் கோட்டை ராஜா க்ரூஸ் இணைத்து கர்னாடக மாநிலம் யாதிர் ஊரில் உள்ள லட்சுமியின் உறவினர்களை அழைத்துவரும் முயற்சியை மேற்கொண்டது.
இதில் ராஜா க்ரூப்ஸ் பணியாளர் விக்னேஷ் அவர்கள் 05/06/2015 அன்று நேரடியாக யாத்கிர் சென்று லட்சுமியின் தந்தை மஞ்சுநாத் மற்றும் அவளது மாமா நாகப்பாவை அழைத்துக் கொண்டு நேற்று 08/06/2015 கோவைக்கு அழைத்து வந்தார்.
காப்பகத்தில் இருக்கும் லட்சுமி அவர்களைக் கண்டதும் கட்டித்தழுவியா அந்த பாசம் நிறைந்த காட்சி காண கண்கோடி வேண்டும்.
இந்த அத்தனை வெற்றியும் லட்சுமிக்காக பெரும் சிரமமும் முயற்சியும் எடுத்துக் கொண்ட பட்டுக் கோட்டை சேர்ந்த ராஜாக்ரூப்ஸ் பணியாளர் விக்னேஷ்
அவருக்கே சேரும்.
லட்சுமியின் மாமா நாகப்பா கூறும்பொழுது :
நாங்கள் மிகவும் வருமையானவர்கள் ஊசி பாசி விற்று பிழைப்பவர்கள் , லட்சுமி என்றால் எங்களுக்கு மிகவும் பிடிக்கும் செல்லப்பிள்ளை. எப்படி இங்கு வந்தால் என்று தெரியவில்லை எங்களால் முடிந்தவரை எங்கெல்லாமோ தேடினோம் கிடைக்கவில்லை இனியும் கிடைப்பாள என்ற நம்பிக்கை குறைந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன் ஈரநெஞ்சம் அரக்கட்டளையிடம் இருந்து லட்சுமியை பற்றியும் அவள் கோவையில் இருப்பதை பற்றியும் தகவல் வந்தது. எங்களுக்கு கோவை எங்கு இருக்கிறது என்றே தெரியாது எப்படி அவளை மீட்பது என்றும் தெரியாது இருந்தது. இந்த நிலையில் விக்னேஷ் என்பவர் கடவுளைப்போல இங்கு வந்து எங்களை அழைத்துக்கொண்டு லட்சுமியிடம் சேர்த்தார். அவருக்கும் இங்குள்ள அனைவருக்கும் நாங்கள் எந்த வழியில் நன்றியை தெரிவிப்பது என்று தெரியவில்லை என்று கூறினார்.
மேலும் .வழி தடுமாறி கோவையில் தஞ்சமான பார்வை இல்லாத லட்சுமிக்கு கண் பார்வை சிகிச்சை மேற்கொள்வதற்கு பட்டுக் கோட்டை ராஜா க்ரூப்ஸ் உதவுவதாகவும் கூறியது தமிழ் நாட்டில் தடுமாறி வந்தவர்களுக்கு தமிழ் மக்கள் எவ்வளவு தூரம் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
அதோடு காப்பகத்தில் இருப்பவர்கள் மற்றும் ஈரநெஞ்சம் அறக்கட்டளை லட்சுமிக்கு தேவையான உடைகளும் மற்ற பொருட்களும் வழங்கி அவளது சொந்த ஊருக்கு சந்தோசமாக வழியனுப்ப உள்ளார்கள் இன்று கோவை PSG மருத்துவமனையில் லட்சுமியின் கண்களுக்கு முதல்கட்ட பரிசோதனை முடித்துக் கொண்டு இன்று 09/06/2015 இரவு ரயிலில் சொந்த ஊரான யாத்கிர் செல்கிறார்கள்.
ஈரநெஞ்சம் அறக்கட்டளை லட்சுமியின் சார்பாக பட்டுக் கோட்டை ராஜா க்ரூப்ஸ் நிறுவனத்திற்கும் . அதன் பணியாளர் விக்னேஷ் அவர்களுக்கும் . கோவை மாநகராட்சி காப்பகதிர்க்கும் மற்றும் லட்சுமியின் உறவு கிடைப்பதற்காக முயற்சி எடுத்துக் கொண்ட நண்பர்களுக்கும் நன்றியோடு வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் வெளியாகும் " தென்றல் " மாத இதழில் என்னுடைய சமூக சேவையை பற்றி நேர்காணல் பேட்டி பிரசுரம் ஆனது . அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு என்னுடைய பதிகள் எழுத்து வடிவிலும் ஒலி வடிவிலும் இங்கு பதிவிட்டு இருக்கிறேன் . மேலும்
A Monthly Magazine for Tamils living in North America
( ஒளி ஒலியில் காண )
1) சமூக சேவையின் மீது ஆர்வம் வந்தது எப்போது, எப்படி?
எனக்கு சமூக சேவையின் மீது ஆர்வம் வருவதற்கு என்னுடைய குடும்ப சூழல்தான் முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது. நான் சிறுவனாக இருந்த போது, ஒரு சமயம் என் அம்மா எனது அக்காவை (சற்று மனநலம் பாதித்தவர்) அழைத்துக்கொண்டு கோவிலுக்குச் சென்று திரும்பும் வேளையில், அக்கா தவறி சாக்கடையில் விழுந்துவிட்டார். அம்மாவிற்கு பெரும் பதட்டம், பதட்டத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்த பகுதியில் இருந்தவர்கள் எல்லாம் சுற்றி நின்று வேடிக்கைதான் பார்த்தார்களே தவிர உதவிக்கு யாரும் வருவதாக தெரியவில்லை. உதவிக்கு ஆள் இல்லாமல் அம்மா தவித்த தவிப்பிற்கு அளவே இல்லை. அந்தவேளையில் அந்த வழியே வந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் அக்காவைத் தூக்கி விட்டு, அருகில் சென்று தண்ணீர் வாங்கி வந்து அக்கா மேல் இருக்கும் சகதிகளை கழுவி சுத்தம் செய்து , அவருடைய ஆட்டோவிலேயே அம்மாவையும் அக்காவையும் அழைத்துக் கொண்டு வீடுவரை வந்து விட்டுவிட்டு சென்றார். அப்போது அம்மா இருந்த பதட்டத்தில் அந்த ஓட்டுனர் யார் ? பெயர் என்ன ? என்று எதுவும் விசாரிக்க தோன்றாமல் இருந்துவிட்டார். அந்நாள் வரைக்கும் மனிதர்களில் இப்படியும் இருப்பார்களா என்றெல்லாம் எங்களுக்கு தெரியாது. அந்த நிகழ்வைப்பற்றி எங்கள் வீட்டில் பல வருடங்கள் வரை பேசிக்கொண்டும், அந்த ஓட்டுனருக்கு நன்றி சொல்லிக்கொண்டும் இருந்தார்கள் .
அது என்னுடைய மனதில் ஆழமாக பதிந்தது, முன்பின் அறியாதவர்கள் நமக்கு செய்யும் ஒரு சிறு உதவி கூட எவ்வளவு முக்கியமானது என்று விவரம் புரியும் வயதில் நன்கு விளங்கியது. அதுவே சாலையோரம் இருக்கும் ஆதரவற்றவர்களின் நிலையை மாற்றி அவர்களுக்கு எப்படியும் பாதுகாப்பு தேடிக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு உத்வேகத்தைக் கொடுக்க ஆரம்பித்தது.
2) இதுவரை எத்தனை பேரை மீட்டு காப்பகத்தில் சேர்த்திருப்பீர்கள்? எத்தனை பேரை அவர்கள் குடும்பத்துடன் சேர்த்திருப்பீர்கள்?
சாலையோரம் பிச்சை எடுக்கக் கூட முடியாதநிலையில் இருப்பவர்கள் மனநிலை பாதித்தவர்கள் என இந்த பத்துவருடத்தில் சுமார் 700 பேருக்கும் மேலாக காப்பகத்தில் இடம் கேட்டு சேர்த்திருக்கிறேன் . அதில் கடந்த 3 வருடங்களில் மட்டும் சுமார் 200 பேர் வரை அவரவர் குடும்பத்துடன் இணைத்து வைத்திருக்கிறேன்.
பெரும்பாலானோர் ஞாபக மறதியால் தான் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் . வடமாநிலங்களில் இருந்து தமிழ் நாட்டிற்கு வேலைத் தேடி வருபவர்கள் ரயிலில் இரண்டு மூன்று நாட்கள் பயணம் செய்து வரவேண்டியது இருக்கும் . பொதுவாக யாராக இருந்தாலும் இரண்டு இரவுகள் கண்விழித்து உறங்காமல் இருந்தாலே மனக்குழப்பம் அடைத்து ஞாபகமறதி ஏற்பட்டு மனநிலை பாதிப்புக்குள்ளாவார்கள் . இப்படி இருக்க அவர்கள் வரும் ரயிலில் ரிசர்வேசன் செய்து வரமாட்டார்கள் கூட்ட நெரிசலில் இரண்டு மூன்று நாட்கள் உறங்காமல் வெயில் , மழை என தட்பவெட்பம் மாறுதல் மற்றும் சரிவர உணவு இல்லாமல் குடும்ப சூழ்நிலை என அவர்கள் மனதை நிலைகுலைய வைத்து இங்கு வந்து இறங்கும் போது மனநிலை பாதித்த நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் .
இப்படிப்பட்டவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. பார்ப்பதற்கு நல்ல நிலையில் தெரிவார்கள் . இதனால் இவர்கள் செய்யும் செயலால் அவர்களுக்கு பொது மக்களால் பெரும் ஆபத்தும் நிகழ்கிறது . குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டு காவல், கைது, அடி என மேலும் அவர்கள் துன்பம் அனுபவித்தபிறகே அவர்கள் மனநலம் பாதித்தவர்கள் என்பது தெரியவரும். அப்படிப்பட்டவர்களை உடனடியாக மருத்துவ சிகிச்சை அல்லது நன்கு தூங்கினாலே சற்று தெளிவடைவார்கள் . அதன் பிறகு அவர்களை நாம் கையாள்வது கொஞ்சம் எளியது இதைதான் நான் செய்கிறேன் . இப்படிப்பட்டவர்களை சுமார் 100 பேர் வரை உறவினர்களை கண்டுபிடித்து அவர்களோடு சேர்த்து வைத்து இருக்கிறேன்.
3) இவர்களை மீட்கச் செல்லும்போது நீங்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் என்ன, அவற்றை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?
பெரியதாக சிக்கல் என்று எதுவும் இருந்தது இல்லை. மனநிலை பாதிக்கப்பட்டவர்களை அணுகும் போது அவர்கள் ஓட ஆரம்பிப்பார்கள் அவர்களை துரத்தக் கூடாது அதேநேரம் ஓட ஆரம்பிக்கிறார்கள் என தெரியும் பொழுது நம்முடைய அணுகுமுறையை மாற்றவேண்டும்.
ஆதரவே இல்லாதவர்களுக்குத்தான் நான் அடக்கலம் தேடிவருகிறேன் . ஆனால் என்னிடமே பலர் தன்னுடைய அம்மாவை , அழைத்துச் செல்லுங்கள் அப்பாவை அழைத்துச் செல்லுங்கள் உங்களுக்கு தேவையான பணம் தருகிறேன் என்பார்கள் அதை எல்லாம் என்னால் சிறிதும் ஜீரணிக்க முடியாது அதனால் தவிர்த்துவிடுகிறேன் .
சாலையில் இருப்பவர்கள் உடலில் காயங்களோடு பராமரிக்க தெரியாமல் பலநாள் விட்டு விடுவார்கள். இதனால் அந்த காயங்கள் அழுகி புழுக்கள் வைத்து பெரும் துர்நாற்றம் வீசும். அப்படிப் பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் அழைத்தால் அவர்கள் கூட சிலசமயம் உதவிக்கு வர மாட்டார்கள் . பெரும் போராட்டத்திற்கு பிறகு அவர்களை அழைத்துக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றால் அங்கு உள்ள மருத்துவர்களும் சரிவர சிகிச்சை அளிக்க வரமாட்டார்கள். புழுக்களை சுத்தம் செய்து அழைத்து வாருங்கள் என்பார்கள் . அதன் பிறகு காயத்தில் இருக்கும் புழுக்களை சுத்தம் செய்து பிறகே அழைத்துபோக வேண்டி இருக்கும் .
சில சமயம் பணம் பற்றாக்குறை ஏற்படும் நெருங்கிய நண்பர்கள் யாரும் உதவுவார்கள் . பொதுவான சிக்கல் என்று பார்த்தால் காப்பகங்களில் பயனாளர்கள் அதிகம் இருந்தால் புதியவர்களுக்கு உடனடியாக இடம் கிடைக்காது. கோவையில் மாநகராட்சி ஆதரவற்றோர் தங்கும் விடுதி நான்கு இருக்கிறது . ஆனால் அதில் ஒன்று தான் இயங்கி வருகிறது . மீதம் மூன்று விடுதிகள் பூட்டிய நிலையில் இருக்கிறது . அது இயங்கும் பட்சத்தில் இப்படி தவிப்போருக்கு இடம் பற்றாக்குறை இல்லாமல் அடைக்கலம் கொடுக்க சவுகரியமாக இருக்கும்.
4) இந்தச் சேவையில் மறக்க முடியாத நபர் அல்லது சம்பவம் என்று எதைச் சொல்வீர்கள்?
நிறைய பேர் இருக்காங்க . அதில் ஷேக் சலீம் 15 என்ற சிறுவன் ஒருவன் , இவனைப் பற்றி கண்டிப்பாக சொல்லியாக வேண்டும் . ஈரோடு பயணிகள் ரெயிலில் இவனை மீட்டு 10 நாள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு ஒரிசாவில் இருக்கும் இவனது பெற்றோரை கண்டுபிடித்து அவர்களை வரவைத்து அவர்களிடம் ஒப்படைத்தது என்னால் மறக்க முடியாத சம்பவம்.
ஒரு ரயில்வே காவலர் என்னிடம் " ரயிலில் ஒரு வட மாநில சிறுவன் உடல் முழுவதும் காயங்கள், தலையில் பலத்த காயம் அதில் புழுக்களுடன் துர்நாற்றம் வீசுகிறது . பயணிகளுக்கு பெரும் இடையூறாகவும் இருக்கிறான் , அவனுக்கு உதவுங்கள் . நான் வரும் வழியில் பலரிடம் பல ஊர்களிலும் உதவி கேட்டுவிட்டேன் யாரும் முன் வரவில்லை. சிலர் இவனை பார்த்துவிட்டு பயந்து சென்று விட்டார்கள் . இப்போது உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம் " என்றார் .
அந்தச் சிறுவனை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்து அறுவை சிகிச்சை முதற்கொண்டு செய்து கவனித்து வந்தேன் . இப்படி பட்ட என்னுடைய பணிக்கு சில திருநங்கைகளும் அவ்வப்போது உதவிக்கு வருவார்கள் . எனக்கு வடமொழி தெரியாததால் அவர்கள் மூலமாக இவனிடம் விசாரித்ததில் அவனது பெயர் ஷேக் சலீம். ஒரிஸ்ஸாவில் உள்ள கட்டாக் என்ற பகுதியை சேர்ந்தவன், அவன் தந்தை சதுஜின் பெயிண்டராக இருக்கிறார், தாய் கெத்தாம் பீபீ . இவன் அவர்களுக்கு இரண்டாவது பையன், அங்குள்ள ஒரு பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கிறான் போன்ற தகவல்களை மட்டும் சொன்னான். ஐந்து மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறான். அவன் ஒரிஸ்ஸா மாநிலம் என்றும் வீட்டில் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டான். பிறகு எங்கே செல்வது என்று தெரியாமல் ஏதோ ஒரு ரயிலில் ஏறி பயணித்துள்ளான். எங்கெங்கோ சென்ற அவனுக்கு எத்தனையோ பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கிறது. அவன் ஓடும் ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்து பலத்த காயம் ஏற்பட்டதாம் .
ஒரு புறம் இவனுக்கு சிகிச்சை நடந்துவரும்வேளையில் மருத்துவமனையில் இவனது சேட்டை தாங்காமல் இவனை அழைத்து செல்லுங்கள் இவன் மருத்துவ சிகிச்சைக்கு சரிவர உதவ மறுக்கிறான் . எப்போதும் அவன் அவனது பெற்றோர் நினைப்பிலேயே இருப்பதால் அவர்களை தேடி ஓடிவிடுவான் போல இருக்கிறது முடிந்தால் அவனது உறவினரை அழைத்துவாருங்கள் என்று அறிவுறுத்தினர் .
இதனை தொடர்ந்து இவன் கொடுத்த தகவலை மட்டும் வைத்துக் கொண்டு இவனது உறவினரை தேடும் முயற்சியாக இவனது புகைப்படத்தை முகநூல் மற்றும் இணையதளங்களில் வெளியிட்டு தேடிவந்தோம் . ஒரிஸா, கட்டாக் பகுதி காவல் நிலையத்தின் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கண்டறியப்பட்டு அவனது புகைப்படங்கள் அங்கே அனுப்பட்டது . மேலும் அவனது குடும்பத்தினரை தேடும் முயற்சி மேற்கொண்டேன் . அப்போதுதான் அந்த காவல் நிலைய காவல் துறை அதிகாரி திரு. அஸ்வின் அவர்கள் மூலம் அவனது பெற்றோர் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் தங்கள் மகன் காணாமல் போனதாக புகார் அளித்துள்ளது தெரிய வந்தது. அவனது புகைப்படத்தை கண்டு அவர்கள் அது தங்கள் மகன் தான் என்பதையும் உறுதி செய்துள்ளனர். தங்கள் மகன் பலத்த காயங்களுடன் இருந்ததை பார்த்து கதறி அழுதுள்ளனர். பின்னர் அவர்கள் உடனடியாக ரயில் மூலம் கோவை வர அங்குள்ள காவல்துறையினர் ஏற்பாடு செய்தனர். ஏற்கனவே ஷேக் சலீம் மருத்துவமனைக்கு வந்து 5 நாட்கள் ஆகிவிட்டது இன்னும் அவனது பெற்றோர்கள் இங்குவந்து சேர 4 நாட்கள் ஆகும் . அதுவரை அவனுடனே நானும் , என்னுடன் சேர்ந்து சில நண்பர்களும் திருநங்கைகளும் பொழுதை களித்தோம் . அவனது பெற்றோர் கோவை வந்ததும் ரயில் நிலையத்தில் இருந்து சிறுவன் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு தங்கள் மகனை கண்ட அவர்கள் அவனது காயம்பட்ட நிலை கண்டு வருந்தி கண்ணீர் சிந்திய போதும் , தங்கள் மகனை திரும்ப பெற்று விட்ட நிம்மதியில் ஆனந்த கண்ணீரும் வடித்தனர். மருத்துவமனையில் இருந்த அனைவரும் கூடி அவர்களை தேற்றினார்கள்.
அது மட்டும் இல்லை மரண படுக்கையில் இருந்த ஆதரவற்ற சிறுவனை மீட்டு அவனுக்கு மருத்துவ சிகிச்சை அளித்ததோடு மட்டும் இல்லாமல் உடனிருந்து பார்த்துக் கொண்டதற்கும் , அவனது பெற்றோரை கண்டு பிடித்து அவர்களுடன் சேர்த்து வைத்ததற்கும் அந்த மருத்துவமனையில் எனக்கு ஏராளமான பாராட்டுக்களோடு , கேக் வெட்டி எனக்கும் அவனுக்கும் ஊட்டி விட்டனர். http://eerammagi.blogspot.in/2013/09/blog-post_23.html
அடுத்தநாளில் ஷேக் சலீம் அழைத்துக் கொண்டு அவனது பெற்றோர்கள் ஊர் சென்றனர் . அவனுடன் கழித்த அந்த பத்து நாள் எவ்வளவு நாளானாலும் மறக்க முடியாது.
5) இறந்தவர்களை நீங்கள் நல்லடக்கமும் செய்து விடுகிறீர்கள் அல்லவா?
ஆமாம் சாலையில் ஆதரவற்றவர்களாக இருப்பவர்களை அழைத்துச் செல்லும் போதே அவர்கள் எனது உறவினர்களாக பாவித்துதான் அழைத்து செல்வேன். அதே போல் மருத்துவமனையில் சேர்க்கும் போதும் அப்படித்தான் சிகிச்சை பலனின்றி அவர்கள் இறக்கும் பட்சத்தில் அனாதையாக விட்டுவிட்டு வர மனம் ஒப்புக்கொள்வது இல்லை . அதனாலேயே இறந்தவர்களையும் நானே நல்லடக்கம் செய்து வருகிறேன் . ஆரம்ப காலகட்டத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் பொறுப்பை வேறு ஒரு அமைப்பினரிடம் கொடுத்து வந்தேன். அறக்கட்டளை துவக்கிய பிறகு என்னோடு பலர் கைகோர்த்து வருகின்றனர். அதில் ஒருவர் வைரமணி இவர் மயான தொழிலாளி ஆதரவற்று இறப்பவர்களை அடக்கம் செய்ய இவர் பெரிதும் உதவியாக இருந்து வருகிறார் .
6) மறக்க முடியாத பாராட்டு என்று எதைச் சொல்வீர்கள்....?
என்னை பொறுத்தவரை என்னுடைய மகிழ்ச்சியைக் காட்டிலும் மற்றவர்களின் மகிழ்ச்சியில் தான் நாம் மகிழ்ச்சிக் கொள்கிறேன் . சாகர் என்பவர் நேபாளத்தில் இருந்து தமிழகத்தில் வேலை பார்க்க வந்தவர் . இவருக்கு திருமணம் ஆகி குழந்தையும் உள்ளது . இந்நிலையில் தமிழகத்தில் கோவையில் மனநிலை பாதித்த நிலையில் இரண்டு வருடமாக இருந்தார் . ஒரு நிலையில் அவர் பூரண குணம் அடைந்து , தனக்கு மனைவி, மக்கள், தாய், தந்தை, சகோதரர் என உறவுகள் இருந்தும் , சாகர் இந்தியர் இல்லாத காரணத்தினாலும், நேபாளி என்ற தக்க ஆவணம் இல்லாததாலும், மனநோய் பாதிக்கப்பட்டு இருந்தமையாலும் இவரை விடுவிக்க முடியாத நிலை காப்பக நிர்வாகத்திற்கு இருந்தது.
இவர் சொன்ன முகவரியும் அடையாளமும் கண்டுபிடிப்பதற்கு பெரும் சவாலாக இருந்தது . பெரும் முயற்சிக்கு பிறகு அவரது சகோதரரின் தொடர்பு கிடைத்தது உடனடியாக அவரை கோவைக்கு வரவழைத்து அவருடன் சாகரை அவரது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்தேன். இதில் ஒரு சிக்கலான விஷயம் என்ன என்றால் சாகர் காணவில்லை என்பதால் அவர் இறந்திருக்க கூடும் என்று சாகரின் மனைவிக்கு வேறு திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் தான் எங்கள் முயற்சி வெற்றி பெற்று சாகர் அவரது சொந்தங்களுடன் இணைந்தார் .
சாகர் கிடைத்த மகிழ்ச்சியில் நேபாளத்தில் இருந்து சாகரின் மனைவி , தாய் தந்தை என உற்றார் உறவினர் எனக்கு தொடர்புகொண்டு கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்துக் கொள்ளும்பொழுது அது புரியாத பாஷையாக இருந்தபோதும் அதில் இருந்த அவர்களின் மகிழ்ச்சியை என்னால் நன்கு உணர முடிந்தது. http://eerammagi.blogspot.in/2013_06_01_archive.html
இந்த மகிழ்ச்சி எனக்கு எந்த ஒரு விருதுக்கும் இணையாகாதே.
7) உங்கள் குடும்பம் பற்றி, அவர்கள் உங்களது பணிகளுக்கு உறுதுணையாக உள்ளார்களா?
ஆரம்பத்தில் என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் விருப்பம் இல்லாமல் தான் இருந்தது . காலப்போக்கில் இந்த பணியின் உன்னதத்தையும் மற்றவர்கள் அடையும் பலனையும் உணர்ந்து கொண்டனர். அம்மா அப்பா மட்டும் தான் கொஞ்சம் வருத்தப்படுவார்கள் . எப்போதும் சமூகப்பணியே முழு மூச்சாக இருந்து விட்டால் உன் குடும்பத்தை யார் காப்பாற்றுவார்கள் . தொழிலை கவனிக்க வேண்டிய காலத்தில் இப்படி சமூகம் என்று பார்த்துக் கொண்டு இருக்கிறாயே என்பார்கள் . என்ன இருந்தாலும் பெற்றவர்கள் என்றால் கொஞ்சம் அக்கறை அதிகமாகத்தானே இருக்கும். அதே நேரத்தில் ஆதரவற்றவர்களின் நலன் மேம்படுவதை பார்க்கும் பொழுதும் , மற்றவர்கள் என்னுடைய செயல்களை பெருமையோடு சொல்லும் பொழுதும் அம்மா அப்பா அடையும் மகிழ்ச்சிக்கு அளவு இல்லை.
8) உங்கள் இத்தகைய பணிகளுக்கு சக மனிதர்கள் மற்றும் சமூகத்தின் வரவேற்பு எப்படி உள்ளது?
உடல் முழுதும் அழுக்கு, தலை முடி ஜடை விழுந்து இருக்கும் அதிக துர்நாற்றம் வீசிய படி இருப்பார்கள். அவர்களை நான் பொறுமையாக நெருங்கி அவர்களுக்கு முடிதிருத்தம் செய்து , குளிக்க வைத்து , மாற்று உடை உடுத்தி அதன் பிறகு அழைத்துவர வேண்டும். இப்படி நான் செய்யும் பொழுது கவனிக்கும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் . என்னைப்பார்த்து பொதுமக்கள் பலர் தங்களது வீட்டில் உள்ள பெரியோர்களையும் நல்லபடியாக பார்த்துக் கொள்கின்றார்கள் என என்னிடமே சிலர் சொல்லி இருக்கிறார்கள் . இப்போது சில ஊர்களில் என்னை சிலர் பின்பற்ற துவங்கி இருக்கிறார்கள் . அது மட்டும் இல்லாமல் ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்காக ஆடிட்டர், கணக்காளர், மயான தொழிலாளி என பலரும் தங்களை முடிந்தவரை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.
9) ஈர நெஞ்சம் அறக்கட்டளை பற்றிச் சொல்லுங்கள்...
அறக்கட்டளை ஆரம்பிப்பதில் எல்லாம் எனக்கு அதிக விருப்பம் இல்லை. என்னுடைய பணிகளை அவ்வப்போது முகநூலில் பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக பதிவிட்டு வந்தேன். அதைப் பார்த்து முக நூல் நண்பர்கள் பலர் என்னை தொடர்புகொண்டு கண்டிப்பாக உங்கள் பணி அறக்கட்டளையின் கீழ் நடத்தியாக வேண்டும் உங்களது பணி அவ்வளவு சாதாரணமானது இல்லை என்று பலவாறாக அறிவுரைகள் கூற அவர்களின் அன்புக்கட்டளை மீறமுடியாமல் , 23/04/2012 அன்று அறக்கட்டளையாக அரசு பதிவு செய்து, அன்று முதல் முறையான கணக்குகள் சமர்ப்பித்து வருகிறோம் . வருமானவரி விலக்கான 80/G சான்றும் பெறப்பட்டு உள்ளது. இந்த அறக்கட்டளையில் சென்னையை சேர்ந்த சுரேஷ் , கடலூரை சேர்ந்த பரிமளா , கோவையில் தபசு , மற்றும் நான் நிர்வாகியாக இருக்கிறோம். ஆதரவற்றவர்களே இருக்கக் கூடாது என்பதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் இந்த அறக்கட்டளை .
தாய் தந்தை இழந்த குழந்தைகள் 10 குழந்தைகளை தத்தெடுத்து காப்பகத்தில் சேர்த்து கல்வி முதல் கொண்டு அனைத்தும் ஈரநெஞ்சம் பராமரித்துவருகிறது.
ஆதரவற்ற பெண்கள் இரண்டு பேருக்கு திருமணம் செய்து வைதுருக்கிறது ஈரநெஞ்சம் .
கோவை RS.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி இரவு தாங்கும் மையத்தில் மனநலம் பாதித்தவர்கள் பலரை பாதுகாத்து வந்தனர். அந்த மையத்தில் மனநலம் பாதித்தவர்கள் பாதுகாக்க அனுமதி இல்லை என்ற காரணத்தினால் அவர்களுக்கு மாற்று இடம் எங்கும் கிடைக்க வில்லை. அவர்களை ஈரநெஞ்சம் அறக்கட்டளை பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமத்தித்து சிகிச்சைக்கு வழி செய்தது. இதனால் பலரும் குணமாகி அவர்களுடைய உறவினருடன் இணைந்தனர்.
இதனை தொடர்ந்து கோவையில் RS.புரத்தில், 15/A மேற்கு ஆரோக்கியசாமி சாலையில் மாநகராட்சி முதியோர் காப்பகம் ஒன்று ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரித்து வருகிறது இதில் ஆதரவற்ற முதியவர்கள் 50 பேரை பாதுகாத்து பராமரித்து வருகிறது.
10) இதற்கான நிதி ஆதாரங்களை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?
வருமானவரி விலக்கான 80/G சான்றும் பெற்று உள்ளோம். ஆனாலும் இதுவரை நிதி கொடுங்கள் என்று யாரிடமும் கேட்டது இல்லை. நெருங்கிய நண்பர்களிடம் மற்றும் இந்த பணியின் உன்னதத்தை உணர்ந்தவர்கள் தாமாக முன் வந்து நிதி அளிப்பவர்களிடம் மட்டும் வாங்கிக் கொள்கிறோம் . வருவது குறைவுதான் ஆனால் செலவு அதிகம். இதனால் கையில் இருப்பதை போட்டு பணி செய்து வருகிறேன்.
11) நீங்கள் பெற்ற விருதுகள், அங்கீகாரங்கள்...
பல வருடம் தான் யார் என்றே தெரியாமல் வீதியில் கிடப்போரை மீட்டு அவர்கள் குணமடைந்து பிறகு அவர்களுடைய உறவினர்களை தேடி கண்டுபிடித்து அழைத்து வரும் சொந்தங்களோடு இணையும் போது அவர்கள் அடையும் நிம்மதியும் மகிழ்ச்சியுமே மிகப்பெரிய விருதாக நினைக்கிறேன். இருந்தும் பல அமைப்புகள் என்னை மேடையில் கவுரவப்படுத்தி இருக்கிறார்கள். அங்கிகாரம் என்பது அரசாங்க அளவில் இருந்து எதுவும் இல்லை என்றாலும் பலரும் மனதார வாய் நிறைய வாழ்த்துவதில் நான் பிறந்த பலனை அடைந்த திருப்தி அடைகிறேன்.
12) உங்களைப் பற்றிய பொதுவான விவரங்கள்.. (படிப்பு, கல்வி, குடும்பம், தொழில், பிற ஆர்வங்கள், பொழுதுபோக்குகள் பற்றி...)
கோவையில் மோட்டார் உதிரிபாகம் தயாரிக்கும் சிறுதொழில் தான் எனக்கு . போதிய வருமானம் என்பது அவ்வப்போது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு மட்டும் இருக்கும். படிப்பில் அதிக ஆர்வம இருந்திருந்தால் ஒருவேளை பட்டப்படிப்பெல்லாம் முடித்து பெரிய நிறுவனம் அமைத்திருப்பேன். நல்லவேளை பள்ளிப்படிப்பை மட்டும் முடித்ததால் சமூக சேவை செய்ய நேரம் அமைந்துவிட்டது. அப்பா பழனிசாமி பயம் கலந்த மரியாதை , அம்மா காளியம்மாள் என்ன ஒரு பிரச்சனை என்றாலும் அம்மாவிடம்தான் கொட்டி தீர்ப்பேன். மூன்று அக்கா , ஒரு அண்ணன் , எல்லோருக்கும் திருமணம் முடிந்து இரண்டாவது அக்காவை தவிர எல்லோரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள் . மனைவி கலைச்செல்வி, மகள் சம்விதா. இவர்களின் அனுமதி இல்லாமல் என்னால் என்ன செய்து விட முடியும் சொல்லுங்க பார்கலாம் . ஞாயிற்று கிழமைகளில் இவர்களுகேன்று பொழுதை கழிக்கவில்லை என்றால் எனக்கு மனம் நிலையாக இருக்காது . குடும்பத்தையும் கவனிக்கவேண்டும் அப்போதுதான் வாழ்க்கை இனியதாக இருக்கும்.
எழுத்துப்பணியில் எனக்கு ஆர்வம் அதிகம். பல பத்திரிக்கைகளில் என்னைப் பற்றி சிலர் எழுதி உலகமே என்னைப் பற்றி அறிந்ததுபோல , நான் கண்ட சில சிறந்த மனிதர்களைப் பற்றி அவ்வப்போது கட்டுரை எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்புவேன், அதுவும் பிரசுரம் ஆகும். அப்படி வெளியுலகிற்கு அறிமுகம் ஆனவர்களுக்கு விருதுகளும் கிடைத்துள்ளது. அதுவும் கூட என்னை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
பிற விவரங்கள் ஏதேனும் குறிப்பிட வேண்டுமென்றால் அது பற்றி....
என்னுடைய முகவரி:
P.மகேந்திரன்
10/G2 தாரணி நகர் , 8 வது வீதி
கணபதிபுதூர்
கோயம்புத்தூர் 641006
ஆதரவற்றவர்களே இல்லாத உலகம் வேண்டும் .
நல்லதோர் இயற்கை சூழலில் மருத்துவமனையோடு கூடிய ஆதரவற்றவர்களுக்கான ஒரு தனி இடம் அமைக்க வேண்டும் . இப்படி காப்பகங்கள் உருவாக்குவது தவறு என்றாலும் சூழ்நிலையின் காரணமாக தனிமையில் தத்தளிப்பவர்களுக்கு சொந்தங்கள் கிடைக்க வழி வகை செய்யுமே என்ற எண்ணம் தான் ..!