.jpg)
நேர்மையான காவல் அதிகாரியை பற்றி நிறைய படித்திருக்கிறோம் அறிந்திருக்கிறோம் , ஆனால் ஈரநெஞ்சம் கொண்ட காவல் அதிகாரியை பற்றி அறிந்திருப்போமா ? அப்படிப்பட்ட ஈரநெஞ்சம் கொண்ட காவல் அதிகாரிதான். திரு,சபரிராஜ், இவர் கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் ரயில்வே காவலர், SSI யாக பணியாற்றுகிறார். 48 வயதான இவர் தனது 28 வருட காவல் பணியில் நேர்மையான அதிகாரியாக மட்டும் இல்லாமல் மனிதநேயம் கொண்ட மனிதராகவும் பணியாற்றிவருகிறார். குற்றங்கள் தடுப்பதும் , குற்றம் புரிந்த குற்றவாளிகளை திறன் பட கண்டுபிடிப்பதும், நன்னடத்தைக்காக நன்னடத்தை விருதும் பல காவலர்களுக்கு மதிப்பை கூட்டும் . அப்படிப்பட்ட காவலர்களில் திரு. சபரிராஜ் அவரும் ஒருவர். இவருக்கு மனிதநேயம் கொண்ட மாமனிதர் என்ற இயற்கையால் அளிக்கபப்ட்ட நற்சான்றும் ஒன்று இருக்கிறது .
ஒரு சந்திப்பில் அவரை பற்றி அவர் கூறும்போது .
"ஆமாங்க.. ரயில்வே காவலராக இருப்பதனால் இரயில் விபத்து, மற்றும் தற்கொலை என பல அடையாளம் தெரியாத சடலங்கள் அடக்கம் பண்ணவேண்டி இருக்கும், அப்போது அந்த சடலங்களை அரசு மயானத்தில் புதைக்க வேண்டும், புதைத்த இடம் அடையாளம் தெரிந்து கொள்வதற்காக மட்டும் மயானத்திற்கு போனால் போதும். ஆனால் நான், இறந்தவர்கள் நல்ல நிலையில் குடும்பத்துடன் வாழ்ந்திருப்பார்கள், அவர்கள் அனாதையாக போக கூடாது என்ற எண்ணத்தில் என்னுடைய சொந்த உறவினராக எண்ணி இறந்தவர்களின் சடலங்களை மருத்துவ பரிசோதனைக்கு பிறகு என்னுடைய சொந்த செலவில் சடங்குகள் செய்து அடக்கம் செய்து வருகிறேன். இதுவரை சுமார் 300 க்கும் மேற்ப்பட்ட சடலங்களை என்னுடைய சொந்தங்களாக எண்ணி அடக்கம் செய்து இருக்கிறேன். மேலும் வயதானவர்கள் ஊர் செல்ல டிக்கெட் எடுக்க முடியவில்லை என்றால் அவர்களது அவசியம் அறிந்து டிக்கெட் எடுத்து ஊருக்கு அனுப்பி வைப்பேன். வீட்டில் கோவித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி ரயிலில் வருபவர்களையும் , இரயிலில் தற்கொலை செய்துக்கொள்ள வந்த பத்திற்கும் மேற்ப்பட்டவர்களையும் காப்பாற்றி அவர்களுக்கு நல்ல புத்திமதிகளை சொல்லி பாதுகாப்புடன் விட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறேன்" என்றார்.
மேலும் இவர் சொல்லும் போது கடந்த சிலநாட்களுக்கு முன் 75 வயதான ஒரு மூதாட்டி இரவு 11 மணியளவில் தண்டவாளம் கடக்க முடியாமல் எதிர்புறம் இரயில் வருவதும் கூட தெரியாமல் தண்டவாளத்திலேயே நடந்து கொண்டிருப்பதை அறிந்து . சபரிராஜ் அவர்கள் விரைந்து காப்பாற்றி அவரை அவரது அறைக்கு அழைத்து சென்று விபரம் கேட்க அந்த மூதாட்டி தனது பெயர் அருக்காணி என்றும் தனது முகவரி நினைவு இல்லை என்றும் ஊர் திருப்பூரில் வஞ்சிப்பாளையம் , வளைய பாளையம், பாலையங்காடு எனவும் உளறிக்கொண்டு இருந்தாராம், இதை வைத்துக்கொண்டு பாட்டியின் புகைப்படத்தையும் எடுத்துக்கொண்டு இரவு முழுவதும் பாட்டி சொன்ன ஊர்களில் எல்லாம் பாட்டியை பற்றி விசாரித்து இருக்கிறார். பலரிடம் புகைப்படத்தை காட்டி பாட்டியை தெரியுமா என்று கேட்க்க யாருக்கும் அடையாளம் தெரியவில்லை என்று சொல்லவும் , விடாமுயற்சி கொண்டு அடுத்தநாள் பகலிலும் தேட ஆரம்பித்து இருக்கிறார். உணவு கூட உண்ணாமல் பாட்டியின் உறவினர்களை தொடர்ந்து தேடியிருக்கிறார். சுமார் 100 கிலோ மீட்டர் அலைந்தும் பயனளிக்கவில்லை, இறுதிக்கட்ட முடிவாக பாட்டியை ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பாட்டி சொன்ன ஊருக்கெல்லாம் மீண்டும் அழைத்து சென்று இருக்கிறார் இறுதியில் அன்று மாலை குருசாமி என்பவரை சந்தித்து ஆட்டோவில் இருக்கும் பாட்டியை காட்டி இவரை தெரியுமா என கேட்க அந்த முதியவர் உற்று கவனித்து கொஞ்சம் யோசித்துவிட்டு "அட இது நம்ம அருக்காணி போல இருக்கே" என்றாராம். சபரிராஜ் அவர்கள் இந்த வார்த்தையால் பெரும் இன்ப மகிழ்ச்சியடைந்து அந்த குருசாமி தாத்தாவை கட்டி பிடித்து ஐயா இந்த பாட்டியை உங்களுக்கு தெரியுமா இவர் யார் எங்கு இருக்கிறார் என கேட்டு நடந்த நிகழ்வையும் கூறி இருக்கிறார் . அந்த குருசாமி தாத்தா இந்த அருக்காணியை நான் பார்த்து 40 வருடங்கள் ஆகிறது , இவளுக்கு சரஸ்வதி என்னும் பெண் இருக்கிறாள். நீண்ட வருடமானதால் அடையாளம் நியாபகம் குறைந்துவிட்டது , அருக்காணி பாலயன்காட்டில் அவளது மகள் சரஸ்வதியுடன் இருந்தார் என்பது மட்டும் அறிந்திருக்கிறேன் என்று கூறி, இருங்கள் சரஸ்வதி அவளுக்கு தகவல் கொடுத்து வரவழைக்கலாம் என சொல்லி சரஸ்வதி அவர்களை வரவழைத்து அருக்காணி பாட்டியோடு அனுப்பிவைத்தாராம். இந்த நிகழ்வு குறித்து சபரிராஜ் அவர்கள் கூறும்போது"எத்தனையோ தவறுகளை செய்தவர்களை, திருடர்களை நாங்கள் தேடி தேடி பிடித்திருக்கிறோம். ஆனால் அதை எல்லாம் விட இப்போது இந்த பாட்டியின் உறவினர்களை தேடி அவர்களை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த போது கிடைத்த மன திருப்தி போல் வாழ்வில் வெற்றி தந்தது எதுவும் இல்லை" என்று மன நிறைவோடு கூறினார்.
கடமைக்கோ, கடனுக்கோ பல அதிகாரிகள் பணியாற்றிவருகிறார்கள், ஆனால் இப்படிப்பட்ட அறிய மனிதர்கள் பணிக்கு அப்பார்ப்பட்டு சேவையாக எண்ணி தங்களை சமூகத்திற்காக அர்ப்பணித்து பணியாற்றுபவர்கள் மிக குறைவு. அப்படிப்பட்ட அறியவர்களில் ஒருவர் திரு,சபரிராஜ் என்பது இந்த சமுதாயம் பெருமைபட வைக்கிறது.
~மகேந்திரன்
Tweet | ||||

1 comment:
ஐயா சபரிராஜ் அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் ...!
Post a Comment