Wednesday, September 04, 2013

"சா. முத்துக்குமார் . - கிராமியக் கலைகளின் காவ(த)லன்" ~மகேந்திரன்


"மாறிவரும் நாகரிக வளர்ச்சியில், கிராமிய கலைகளை அழிந்துவிடாமல் காத்துவரும் கலைமாமணி"

எந்த ஒரு செயலும் சாமான்ய மக்களிடம் எளிதில் சென்றடைய உதவியாக இருந்தது இந்தக் கிராமியக்கலை. சுதந்திர போராட்ட காலத்தில் விடுதலை உணர்வை ஊட்டியதில் கிராமியக் கலைக்கும் அதிக பங்குண்டு. கிராமிய கலைகள் மூலமே தேசிய ஒருமைப்பாடு, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்த முடிந்தது அக்காலத்தில். ஆனால் தற்போது மேற்கத்திய கலாசாரத்தில் உள்ள மோகத்தினால் கிராமிய கலைகளில் ஆர்வம் குறைகிறது .அடியோடு புதைந்துவிடுமோ என அஞ்சவேண்டியுள்ளது. எங்கும் எதிலும் சினிமா மோகங்கள் சினிமா துறையில் உள்ள ஒரு மதிப்பும் மரியாதையும் கிராமியக்களைகளுக்கு இல்லையே..? அழிந்து வரும் கிராமிய கலையை ஓரளவாவது மீட்டு எடுக்க வேண்டும் . அதற்கு கிராமிய கலைகளை மேம்படுத்தியாக வேண்டும் என்ற நோக்கத்தில் இன்னும் பண்பாடு மாறாமல் கிராமிய கலைகளை மிக தத்ரூபமான வேடம் அணிந்து மக்களையும் அரசாங்கத்தையும் மட்டும் இல்லைங்க மேல் நாட்டவரையும் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார் இந்த அரிய கிராமத்தான் கலைமாமணி சா.முத்துக்குமார்.
47 வயதாகும் இவர் சாமி ஐயா, தரணி அம்மாள் தம்பதியருக்கு மகன். மிகவும் பின்தங்கிய வகுப்பை சேர்ந்தவர், 25 வருடங்களாக இந்த கிராமியக்கலையில் ஈடுபட்டுள்ளார். திருவாரூரில் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த அவர் அப்பகுதியில் கோவில் திருவிழாக்களில் நடக்கும் கிராமிய கலைகளில் மிகுந்த மோகம் கொண்டவர்.அந்த மோகத்தினாலேயே அக்கலையை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் தனது படிப்பை பத்தாம் வகுப்புவரை முடித்துக்கொண்டு தஞ்சையில் பொன்னையா நாட்டியக் கல்லூரியில் பரதம் கற்றுக்கொண்டார் அதன் பிறகு பிழைப்பிற்க்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணியாற்றிக்கொண்டே தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு நாட்டிய குழு உருவாக்கினார் .
நேரு யுவகேந்திரா மூலமாக "தேசிய இளைஞர் கலைவிழா" துவக்கப்பட்ட காலத்தில் , கிராமிய கலை நடத்த தமிழகத்தின் சார்பாக இவரது குழுவிற்கு போபாலில் கலைநிகழ்ச்சி நடத்த அழைப்புவந்தது. அதை ஏற்றுக்கொண்டு அங்கு கிராமிய கலையான காளியாட்டம் அரங்கேற்றினர், அதை பற்றி இவர் கூறும்போது சிறுவயதில் திருவாரூரில் கோவில்களில் இந்த காளியாட்டம் நடத்துவார்கள் அதை நான் காணவேண்டும் என்பதற்காகவே பல சமயம் பள்ளிக்கு செல்லாமல் காளியாட்டதை காண போய் இருக்கிறேன் . போபாலில் கிராமிய கலை மட்டுமே நடத்தவேண்டும் என்பதற்காக திருவாரூர் காளியாட்ட குழுவிடம் அலங்கார உடைகளை வாங்கிக்கொண்டு சென்றேன். நல்லவரவேற்ப்பு கிடைத்தது அப்போது இருந்தே பரதநாட்டியத்தை விட்டுவிட்டு இது போன்ற கிராமியகலையை மேம்படுத்த முயற்சி மேற்கொண்டேன் என்றார்.
அதனை தொடர்ந்து இவரது கிராமிய கலை நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்ப்பு கிடைக்க ஒருகட்டத்தில் தான் பணியாற்றிய அரசு வேலையான தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக் பணியையும் விட்டுவிட்டு நண்பர்களோடு சிவசக்தி கிராமிய கலை குழு என்று முழுநேரமும் கிராமிய கலையில் ஈடுபட துவங்கினார் சா. முத்துக்குமார். கிராமிய கலையில் பல புதுமைகளை புகுத்த வேண்டும் என்பதற்காக சிவன் பார்வதி, விநாயகர், காளி போன்ற வேடங்களுக்கு கைகளும், முகங்களும் இயற்கையாக இருக்கவேண்டும் என்பதற்காக பல இடங்களில் தேடி கேரளாவிற்கு சென்று இயற்கையாக காட்சிதரும் கை, முகம் உருவங்களுக்கு ஆர்டர் செய்து வாங்கி தற்போது பெரும் மாற்றம் செய்துள்ளார் , மூன்றுமணிநேரம் ஒரே இடத்தில அமர்ந்து காளி போன்ற வேடம் அணிந்த பிறகு இவரை பார்க்கும் போது காளி உருவம் மிகதத்ரூபமாக இருப்பதை காணமுடிகிறது.
நமது கிராமிய கலைகளுக்கு நாம் மதிப்பு கொடுக்காவிட்டாலும் சுவிட்சர்லாந்தில் கிராமியகலைகளுக்கு அதுவும் இந்திய கலைகளுக்கு சா.முத்துக்குமார் அவர்களின் முயற்சியால் நல்ல வரவேற்ப்பும் மரியாதையும் ஏற்படுத்தி இருக்கிறார். சுவிட்சர்லாந்தில் வருடா வருடம் "ஆசிய உணவு மற்றும் கலைவிழா" நிகழ்ச்சி 40 நாட்கள் தொடர்ந்து நடத்தப்படுகிறார்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இந்தியாவில் இருந்து சா. முத்துக்குமார் மட்டுமே தொடர்ந்து 4 முறை பங்கேற்று இருப்பது மிக குறிப்பிடத்தக்கது. அதுபோல ஜெர்மன், ஓமன் , சிங்கப்பூர், போன்ற நாடுகளில் நமது இந்தியாவின் பாரம்பரிய கிராமிய கலைகளின் பெருமைகளை அந்த நாடுகளில் நிலைநாட்டி உள்ளார் .
மேலை நாடுகளில் நமது கிராமிய கலைகளின் பெருமையை பறைசாற்றியதர்க்காகவே சா. முத்துக்குமார் அவர்களுக்கு சல்யூட் அடிக்கனும்.
சா.முத்துக்குமார் அவர்களின் அயராத அர்ப்பணிப்பை கவுரவ படுத்தும் விதமாக தமிழக அரசு இவரை கவுரவப்படுத்தியது, இவரது கலை பணிக்காக கடந்த 2007 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் திரு. மு. கருணாநிதி அவர்கள் கையால் கலைமாமணி விருது பெற்று கௌரவிக்கப்பட்டார். ஒரு கலைஞனுக்கு என்னங்க வேண்டும் நல்ல பாராட்டுக்களும் , நல்ல ஊக்கங்களுமே போதுமானது அந்த ஊக்கங்களும் பாராட்டுக்களும் அவனது வெற்றிக்கு மட்டும் இல்லை நாட்டின் பெருமைக்கும் ஒரு ஊன்றுகோலாகும் என்பது உண்மைங்க. கலைமாமணி சா.முத்துக்குமார் , கலைமாமணி விருது பற்றி கூறும்போது இந்த விருது கிராமிய கலையான காளியாட்டதிற்க்காக எனக்கு வழங்கப்பட்டுள்ளது. கலைமாமணி விருது மிக சிறந்த கலைஞர்களுக்காக வழங்கப்படுவது கடந்த 40 ஆண்டுகளில் காளியாட்டதிற்க்காக எனக்கு மட்டுமே கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது என்பதில் பெருமைபடுகிறேன். அவர் மட்டுமா நாமும் தான் பெருமைபடுகிறோம் இல்லைங்களா.
இறுதியாக இவரிடம் நான்கேட்டேன் நீங்க கிராமகலை கலை பற்றி இவ்வளவு விஷயம் அறிந்திருக்கின்றிர்கள் . மேல் நாடுகளில் புகழ் பெற்ற நமது கிராமிய கலைகள் தமிழகத்தில் உள்ள நகரங்களில் அவ்வளவு வளர்ச்சி இல்லையே என்ன காரணம் கேட்டபோது கடந்த சிலவருடங்களுக்கு முன் சென்னையில் "சங்கமம்" என்று கலைவிழா, கிராமிய கலைஞர்களை அறிமுகப்படுத்தவும் அவர்களின் கலைகளை வெளிக்கொண்டுவரவும் அமைந்திருந்தது. அதில்தான் நானும் முதல்முறையாக தமிழகத்தில் இவ்வளவு கிராமிய கலைஞர்களா என என்னை ஆச்சர்யப்பட வைத்தது. அதுபோன்ற நிகழ்சிகளை எல்லா நகரங்களிலும் அறிமுகப்படுத்தலாம். அது மட்டும் இல்லைங்க எல்லா நாட்டிலும் தமிழ் சங்கம் உள்ளது அதில் எல்லாம் சினிமாவுக்கே மிக முக்கியத்துவம் தருகிறார்கள் கிராமியகலைகளை கண்டுகொள்வது இல்லை. அங்கெல்லாம் கிராமிய கலைகளை அறிமுகப்படுத்தினால் கிராமங்களின் வளர்ச்சிக்கும் பயனுடையதாக இருக்கும் என்றார்.
உண்மைதானுங்க நான் கூட கேட்டிருக்கிறேன் கிராமிய கலைகளுக்காக கல்லூரிகளில் தனி பாடம் கூட இருகின்றதாம், அங்கெல்லாம் 40 பேர் படிக்கும் பள்ளி அறையில் 4 பேர் கூட படிப்பது இல்லையாம் . கலைமாமணி அந்தஸ்து பெற்றிருக்கும் இந்த கலைகளை மேம்படுத்த மேற்க்கத்திய நடனங்களை கற்றுகொள்ளும் இன்றைய இளைஞர்கள் இதுபோன்ற கிராமிய நடனங்களையும் கற்றுக்கொண்டால் என்ன ?

~மகேந்திரன்

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment