Wednesday, April 24, 2013

ஈரநெஞ்சம் "இரண்டாம் ஆண்டு துவக்கம்"

"இரண்டாம் ஆண்டு துவக்கம்"

https://www.facebook.com/eeranenjam?ref=hl

கடந்த ஓராண்டாக சமூக சேவையில் ஈடுபட்டு குறுகிய காலத்தில் எண்ணற்ற பல சேவைகளை நமது ஈர நெஞ்சம் அறக்கட்டளை செய்துள்ளது. சுயநலமில்லாமல் பொது நலத்தில் அக்கறை கொண்டு இந்த சமூகத்துக்காக நம்மால் இயன்ற வரை ஆதரவற்றோருக்கும் பிறருக்கும் உதவி செய்வதே நமது அறக்கட்டளையின் நோக்கமாகும். இதுவரையில் அது போல பல்வேறு காரியங்களை ஈரநெஞ்சம் அறக்கட்டளை செய்துள்ளது ஆதரவற்றோர் என்று யாரும் இல்லை என்று உணர்த்தும் விதமாக நமது அறக்கட்டளையும் அதன் உறுப்பினர்களும் அவர்களுக்கு உறவாக உள்ளனர்.

சாலையோரங்களில் ஆதரவின்றி இருக்கும் முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பகங்
களில் சேர்த்து பராமரித்தல், குடும்பத்தை விட்டு தவறுதலாக பிரிந்து விட்டவர்களை அவர்களது குடும்பத்தினருடன் சேர்த்து வைத்தல், ஆதரவற்றோர் காப்பகங்களில் இருந்து பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்குதல், இரத்த தான முகாம் மற்றும் மரம் நடுதல் நிகழ்வுகள், இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடத்துதல், உடல் தான விழிப்புணர்வு முகாம்கள், காப்பங்களுக்கு உணவு வழங்குதல், மளிகை பொருட்கள் வழங்குதல், தையல் இயந்திரங்கள் வழங்கி தொழில் வசதி செய்துகொடுத்தல், போன்ற பல்வேறு சேவைகளை இந்த ஓராண்டில் செய்துள்ளனர்

அதுமட்டுமில்லாமல் அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளைய்ம் தங்களால் இயன்றவரை கல்வி உதவி, சீருடைகள் வழங்குதல், காலணிகள் வழங்குதல், பள்ளிப்பைகள் வழங்குதல், மருத்துவ உதவிகள், போன்ற சேவைகளையும் செய்து வருகின்றனர். மற்றவர்களை போல் காப்பகங்களில் உள்ள சிறுவர் சிறுமியரை பொழுதுபோக்குகளில் மகிழ்விக்க சுற்றுலா, சர்க்கஸ், நல்ல திரைப்படங்களுக்கு அழைத்து செல்லுதல், தீபாவளி பண்டிகை காலங்களில் புத்தாடை வழங்குதல் போன்ற காரியங்களை செய்து குழந்தைகளின் மகிழ்ச்சியில் நமது அறக்கட்டளையும் பங்கு கொண்டுள்ளது.

தாய் தந்தையை இழந்து தவித்த ரஞ்சித், பவித்ரா ஆகிய பிள்ளைகளில் கல்வி செலவை நமது அறகட்டளை முழுவதுமாக ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும் மதன்குமார், விகாசினி போன்ற எளியகுடும்பத்தினரை சேர்ந்த பிள்ளைகளின் கல்விக்கான உதவிகளையும் அறக்கட்டளை செய்துள்ளது. மேலும் பவித்ராவுக்கு குடல் வால் அறுவை சிகிச்சை ஈரநெஞ்சம் அமைப்பின் மூலம் செய்யப்பட்டு தற்போது சிறுமி நலமாக உள்ளாள்.

ஆதரவற்றோர் இல்லங்களில் இருந்து கல்வி பயிலும் பிள்ளைகளின் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவர்களில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த பிள்ளைகளுக்கு ஊக்கத்தொகை வழங்குதல், ஆதரவற்றோர் இல்லங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு இலவச கண் சிகிச்சை முகாம், மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் இரத்த தான முகாம் போன்ற பல்வேறு நிகழ்வுகளையும் நமது ஈரநெஞ்சம் அறகட்டளை செய்துள்ளது.

முதியோர் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த பார்வதி அம்மாள் என்பவரின் அறுவை சிகிச்சைக்கு இரத்த தானம், மற்றும் பல்வேறு ஊர்களில் இரத்தம் தேவைப்படுகிற நோயாளிகளுக்கு இரத்த தானம் வழங்க ஏற்பாடு செய்தல், சூரியா என்ற ஏழைப்பெண்ணுக்கு இலவச கண் அறுவை சிகிச்சை, காளியம்மாள் என்பவருக்கு கண்பார்வை சிகிச்சை போன்ற மருத்துவ உதவிகளை நமது ஈரநெஞ்சம் அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

தங்கள் குடும்பத்தினரை இழந்து ஆதரவின்றி இருந்த நாகம்மாள் பாட்டி, கண்ணம்மாள் பாட்டி, வேணுகோபால், ஜேகப், கண்ணன், சாமிநாதன், மனநிலை பாதிக்கப்பட்ட முத்துகுமார், சேதுலட்சுமி போன்ற பலரை தங்கள் குடும்பத்தினருடன் இணைய நமது ஈரநெஞ்சம் அறக்கட்டளை உதவியுள்ளது.

மேலும் ஆதரவற்ற நிலையில் பல்வேறு இடங்களில் இருந்த கண்ணம்மாள் , ஜானகியம்மாள், தங்கவேலு, பாப்பம்மாள், மணிக்குமார் தாத்தா, வடுவாம்பாள், திரு ஹுசைன், குழந்தைகளுடன் கணவனால் கைவிடப்பட்ட ரேகா, ருக்மணி அம்மாள் , மோதி பாய் , கந்தசாமி, லட்சுமி அம்மாள் மற்றும் பலர் பாதுகாப்பாக காப்பகங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் மனநிலை பாதிக்கப்பட்டு காப்பகத்தை விட்டு காணாமல் ஜோதி மீண்டும் ஈரநெஞ்சம் அமைப்பினரால் கண்டு பிடிக்கப்பட்டு காப்பகத்தில் சேர்த்து பராமரிக்கபட்டுள்ளார்.

சாலைகளில் மருத்துவ வசதி இன்றி நோய்வாய்ப்பட்டிருந்த குமார், முகமது அலி , தீரத்சிங், நடராஜ், தாமஸ் போன்ற பலரை முறையாக அனுமதி பெற்று மருத்துவ மனைகளில் சேர்த்து சிகிச்சை அளிப்பதோடு அவர்கள் இறந்து போய்விட்டால் நமது ஈரநெஞ்சம் அறக்கட்டளையே அவரது இறுதி சடங்குக்கான அனைத்து காரியங்களையும் செய்தது.

இது போல பல்வேறு சேவைகளை செய்து வரும் ஈரநெஞ்சம் அமைப்பு பொது சேவைகளை செய்து வருவதோடு மண்ணில் மனித நேயம் பெருக வேண்டும், ஆதரவற்றோர் என்று யாரும் இருக்க கூடாது என்ற விழிப்புணர்வை சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியிலும் ஏற்படுத்தி வருகிறது.

மேலும் அமைப்பின் செயல்களுக்கும் , சமூதாய விழிப்புணர்வுக்கும் உறுதுணையாக இருக்கும் மாணவர்கள், பொதுமக்கள், காப்பகங்கள். காவல்துறை, மருத்துவத்துறை , தொலைதொடர்புத்துறை, மற்றும் அணைத்து துறை மக்களுக்கும் ஈரநெஞ்சம் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது...

~ஈரநெஞ்சம்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களின் சேவைகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... நன்றிகள் பல....

திண்டுக்கல் தனபாலன் said...

தமிழ்மணம் (+1) இணைத்தாகி விட்டது... நன்றி...

Tamil Kalanchiyam said...

தங்களின் இந்த பதிப்பு மிகவும் அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர எங்களின் http://www.tamilkalanchiyam.com வலைபதிவில் பகிரும் மாறு வேண்டுகிறோம்.
இப்படிக்கு
தமிழ் களஞ்சியம்

புலவர் இராமாநுசம் said...

தங்கள் சேவைப்பணி நன்று! நாளும் தொடர வாழ்த்துக்கள்!

Post a Comment