Showing posts with label காத்திரு. Show all posts
Showing posts with label காத்திரு. Show all posts

Wednesday, April 02, 2014

அந்த நாளுக்காக எந்நாளும் தயாராக இரு



ஒரு நாள் வரும் 
அது உனக்காக வரும் 

அந்தநாளில் 
உன்னை எதிர் நோக்கியே அனைவரும் 
வருவார்கள்... 

உன் கூக்குரல் செவி கேளாதவர்களுக்கு
உன் மௌனம் செவியடைக்கும்

உன் மௌனத்தைப் பார்த்து
கதறினாலும்
உன்
செவிக்கு எட்டாது...

யார் அழுதாலும்
கண்ணீர் துடைக்கும் உன் கரங்கள்
உனக்காக அழும் போது
உன் கரம் நீளாது...

அன்று

குளிக்க மாட்டாய்
உன்னைக் குளிப்பாட்டுவார்கள்
உடை மாற்றம் செய்ய மாட்டாய்
உனக்கு உடை மாற்றுவார்கள்...

நீ
யாருக்காகவும் வேண்டமாட்டாய்
உன்னை வைத்தே எல்லோரும் வணங்குவார்கள்...

ஒவ்வொருவரின்
முற்றுப் புள்ளிகளுக்கும்
முகவரி தேடியவன்
உன்னுடைய புள்ளிக்கு
பேரம் நடக்கும்...

நீ
அழைத்துச் சென்றது போதும் என
உன்னை அழைத்துச் செல்ல
ஊரே வரும்...

ஊரே
வரும் அப்போதும் உன்னை
தனிமை படுத்திப் போகும்...

கோடிசொத்து
கோடிசொந்தம்...

தெரு கோடி
தெருவோடு...

இதில் எது உனதாக இருந்தாலும்
அந்த நாளில்
கோடி துணியும்
ஆறடியும்
நீண்ட உறக்கம் மட்டுமே
உனதென
உறுதிப்படுத்தும்...

அந்த நாளுக்காக எந்நாளும் தயாராக இரு...

#மகேந்திரன்