Thursday, November 20, 2025

ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகளும் சவால்களும்

*ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகளும் சவால்களும்* 
பெண்களின் பிரச்சனைகள் பேசப்படுவதைப் போல ஆண்களின் பிரச்சனைகள் பேசப்படுவதில்லை.

ஆண்களுக்கும் தனிப்பட்ட பிரச்சனைகள், அவர்களுக்கு நிகழ்த்தப்படும் அநீதிகள், மன அழுத்தங்கள், சமூக அழுத்தங்கள் இருக்கின்றன. அவை பெரும்பாலும் வெளிச்சத்துக்கு வருவதில்லை. காரணம் ‘ஆண் என்றால் அழக் கூடாது’, ‘பலவீனம் காட்டக்கூடாது’, ‘எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ள வேண்டும்’ என்ற தவறான சமூக எதிர்பார்ப்புகள்.

1. மனநலப் பிரச்சனைகள் – பேச முடியாத பாரம்

உலக சுகாதார அமைப்பின் ஆய்வுப்படி, ஆண்களில் மன அழுத்தம், மனச்சோர்வு, தனிமை ஆகியவை அதிகமாக உள்ளது. தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த ஆண்கள் பயப்படுகிறார்கள். ‘நான் பலவீனமா?’ என்ற பயம் அவர்களை அமைதியில் அடக்குகிறது. இதன் விளைவாக தற்கொலை விகிதம் உலகளவில் ஆண்களிடம் அதிகம்.

2. பொருளாதார பொறுப்பு – அடக்கமான போராட்டம்

பல குடும்பங்களில் இன்றும் கூட “வீட்டைக் காப்பது ஆணின் பொறுப்பு” என்ற கருத்து நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து பொறுப்புகளும் ஆணின் தலையில் கட்டப்படுகிறது.
வேலை அழுத்தம், சம்பளம் குறைவு, கடன் சுமைகள் — இவை அனைத்தையும் ஆண்கள் தனியாகவே சுமக்கிறார்கள். குடும்பத்திற்காக பல கனவுகளை விட்டுக்கொடுத்து ஓடுகிறார்கள். முதிர்கன்னிகளுக்கு ஓய்வு தொகை கொடுக்கும் அரசாங்கம் கூட குடும்பத்துக்காக திருமணமே செய்யாமல் வாழும் ஆண்களை கண்டு கொள்வதில்லை.

3. சமூக எதிர்பார்ப்புகள் – ‘ஆண்’ என்ற பெயரில் கட்டுப்பாடுகள்

ஆண்கள் அழக்கூடாது

பயப்படக்கூடாது

உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடாது

தோல்வியடைந்தால் மதிப்பு குறையும்

இவை அனைத்தும் சிறுவயதிலிருந்து ஆண்களை ஒரு “உணர்ச்சி இல்லா ரோபோ” போல மாற்றி விடுகிறது. அவர்களின் உணர்வுகள், அச்சங்கள், தேவைகள், ஏக்கங்கள் கவனிக்கப்படுவதில்லை.

4. குடும்ப மற்றும் சமூக பிரச்சனைகளில் ஆண்கள்

விவாகரத்து, குழந்தை பாதுகாப்பு போன்ற வழக்குகளில் ஆண்கள் பல நேரங்களில் சட்டரீதியாக பலவீனமான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
பொய்யான புகார்கள், வரதட்சணை சட்டத்தின் தவறான பயன்பாடு, குடும்ப வன்முறை சட்டங்களின் ஒருதலைப்பட்சமான விளைவுகள் போன்றவை  ஆண்களுக்கு சிக்கல்களை உருவாக்குகின்றன. பெண்கள் பாதுகாப்புச் சட்டங்களை தவறாக பயன்படுத்தி ஆண்கள் பழிவாங்கப்படுகிறார்கள்.

5. ஆண் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் –  பேசப்படாத உண்மை

ஆண்களுக்கு எதிரான உடல் மற்றும் மன வன்முறைகள் அதிகமானாலும், பெரும்பாலானவர்கள் புகார் சொல்ல முடியாமல் மௌனமாக தாங்குகிறார்கள்.
“ஆணை யார் அடிக்கப் போகிறார்கள்?”
“அதைச் சொன்னால் யார் நம்பப்போறாங்க?”
இது அவர்களுக்கு தீவிரமான மன உளைச்சலை தருகிறது. ஆண்களும் குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். பெரும்பாலான தேர்வுகளில் குடும்ப கௌரவத்தை கருத்தில் கொண்டு அதை யாரும் வெளியில் சொல்வதில்லை.

6. வேலைக்குச் செல்லும் ஆண்களின் உடல் நல சிக்கல்கள்

கட்டிடத் தொழில்கள், போக்குவரத்து, சுரங்கத் தொழில்கள் போன்ற அபாயகரமான பணிகளில் பெரும்பாலும் ஆண்களே ஈடுபடுகிறார்கள்.
உயிரிழப்பு, காயங்கள், உடல் சோர்வு — இவை உலகளவில் ஆண்களை அதிகம் தாக்குகின்றன. அதேபோல ராணுவத்தில் கட்டாய சேவையாற்றவும் ஆண்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

  7. ஆண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் – பேசப்படாத விஷயம்

பாலியல் வன்முறை என்பது பெண்கள் மட்டுமே சந்திக்கும் ஒன்று என்று பலர் எண்ணுவது தவறு.
ஆண்களும் – சிறுவர்களும் கூட – பாலியல் துஷ்பிரயோகம்,  பாலியல் தொந்தரவு, கட்டாயம், பலாத்காரம், தன்பால் ஈர்ப்பு கொண்டவர்களால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுவது, போன்றவற்றிற்கு பலியாகுகிறார்கள். பெண்களைப் போலவே ஆண்களும் பல்வேறு காரணங்களுக்காக கடத்தப்படுகிறார்கள்.  உடல் உறுப்பு திருட்டு, பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுதல், அடிமைகளாக வேலை செய்ய வைத்தல் போன்ற பல்வேறு அநீதிகளுக்கு இரையாகிறார்கள். 

 ஆனால் ஆண்களுக்கு எதிரான குற்றங்கள் வழக்குகளாக கூட பதிவு செய்யப்படுவதில்லை.

“ஆண் எப்படி பாலியல் வன்முறை பாதிப்புக்கு ஆளாக முடியும்?” என்ற சமூக கேலி

வெட்கம்
நம்ப மாட்டார்கள் என்ற பயம்

சட்டங்களில் தெளிவு குறைவு

ஆண்களுக்கான சட்டங்கள் இல்லாமை.

இதனால் பல ஆண்கள் உட்புறமாகவே நொறுங்குகிறார்கள்.


பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரத்தில் ஆண்களை புறக்கணிக்கப்பட்ட பாலினமாக கருதுவதும் ஆண்களுக்கு எதிரான பிரச்சினைகள் பேசப்படாமல் இருப்பதும் சரியல்ல.

ஆண்களும் மனிதர்களே.
அவர்களுக்கும் உணர்ச்சிகள், அச்சங்கள், கனவுகள், துயரங்கள்  எல்லாம் உண்டு . எனவே நம்முடைய இலக்கு பாலின சமத்துவத்தை நோக்கி நகர வேண்டும்.

சமூகம் செய்ய வேண்டியது:

ஆண்கள் தாங்கள் சந்திக்கும் சவால்கள் மனநல பிரச்சனைகள் குறித்து  பேச ஊக்குவிக்க வேண்டும்

தங்களது உணர்ச்சியை வெளிக்காட்டுவது  பலவீனம் அல்ல என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும்

குடும்பச்சட்டங்களில் சமநிலை ஏற்படுத்த வேண்டும்

ஆண்களின் பாதுகாப்பு, வேலை நிமிட நெருக்கடிகள் போன்றவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்

இயற்கையின் இரு வேறு கூறுகள் ஆன ஆண், பெண் இருவரையுமே சரிநிகர் சமானமாக  பாதுகாத்தால் தான் சமூகம் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆண்கள் அழுவதற்கும் உரிமை உண்டு.
ஆண்கள் பலவீனப்படுவதும் இயல்பு.
ஆண்கள் உதவி கேட்பதும் தவறில்லை.

தவறிழைக்கும் ஆண்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. ஆனால் எல்லா ஆண்களையுமே தவறானவர்கள் என்று கருதுவது தவறு.

எப்போதுமே ஆண்களை ஆண்களாக மட்டும் பார்க்காதீர்கள்.

எல்லா ஆண்களும் யாரோ

ஒருவரின் 
மகன்கள்…

ஒருவரின் 
  சகோதரர்கள்...

ஒருவரின் 
 கணவர்கள்…

ஒருவரின்
  அப்பாக்கள்...

ஒருவரின் 
  தாத்தாக்கள்...

அவர்களும் மனிதர்கள் தான்.

தன்னையும் தன் குடும்பத்தையும் தன் சமூகத்தையும் கட்டியெழுப்ப வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கும் அனைத்து ஆண்களுக்கும்  *சர்வதேச ஆண்கள் தினம் 2025 நல்வாழ்த்துக்கள்*

~*ஈரநெஞ்சம் மகேந்திரன்*
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment