Wednesday, August 20, 2025

“சடங்குகள் ஒற்றுமைக்கு வழிவகுக்கட்டுமே”

பாரம்பரியமும் ஒற்றுமையும்: குடும்பச் சடங்குகளில் ஒருமித்த நிலைப்பாடு அவசியம்.


"பாரம்பரியம்" என்பது வெறும் பழைய வழக்கமல்ல; அது குடும்பங்களின் ஒற்றுமைக்கும் சமூகத்தின் ஒழுங்குக்கும் அடித்தளமாக இருந்து வந்திருக்கிறது. ஆனால், காலம் மாறும்போது, பாரம்பரியம் பிளவுகளின் காரணமாக மாறிவிடும் நிலை அதிகரித்து வருகிறது. சடங்குகள் என்பது வெறும் சம்பிரதாயம் மட்டுமல்ல; அது ஒரு ஒற்றுமையின் வெளிப்பாடு. இந்த உணர்வு சிதைந்துபோகும்போது, குடும்ப உறவுகளும் பலவீனமடைகின்றன.

 *திருமணச் சடங்குகளில் குழப்பங்கள்* 
​திருமண நிகழ்வுகளில், "தாய்மாமனுக்கா? சம்பந்திகளுக்கா?" என்ற கேள்விகளில் கூட கருத்து வேறுபாடுகள் உருவாகின்றன. யாருக்கு முன்னுரிமை? யார் என்ன சடங்கு செய்ய வேண்டும்? என்ற போட்டி மனப்பான்மை, மகிழ்ச்சி நிறைந்த நிகழ்வையே சில நேரங்களில் மனக்கசப்பாக மாற்றுகிறது. ஒரு புதிய குடும்பம் உருவாகும் இந்த புனிதமான தருணத்தில், அன்பையும், மரியாதையையும் பரிமாறிக்கொள்ள வேண்டியவர்கள், அதிகாரப் போட்டியால் மோதிக்கொள்கிறார்கள்.

 *இறப்பு சடங்குகளில் பிரிவினைகள்* 
​அன்புக்குரியோர் மறைந்தபின் நடைபெறும் ஈமச் சடங்குகளில் கூட, "யார் சடங்குகளைச் செய்ய வேண்டும்?", "யாருக்குத் தலைமை உரிமை?" என்ற விவாதங்களில் உறவினர்கள் மோதிக் கொள்கிறார்கள். துக்கத்தில் ஒன்றிணைய வேண்டிய குடும்பம், இவ்வாறான சீரமைப்பில்லாத நிலைகளால் பிளவுபட்டு விடுகிறது. இது, அன்புக்குரியோரை இழந்த துயரத்தை விட அதிக மன வேதனையை அளிக்கிறது.

 *பாரம்பரிய மாற்றமும் புதிய வழிகாட்டுதலும்* 
​முன்னோர் தலைமுறையில் பின்பற்றப்பட்ட சில சம்பிரதாயங்கள் காலப்போக்கில் மறந்து போயிருக்கலாம். ஆனால், ஒவ்வொரு சமூகமும் தங்கள் தேவைக்கு ஏற்ப வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து, அதை அனைவரும் பின்பற்ற வேண்டும். இப்படி ஒருமித்த நிலைப்பாடு உருவானால் தான், பாரம்பரியத்தின் உண்மையான அர்த்தம் நிலைத்திருக்கும். சடங்குகளின் உண்மையான நோக்கமான அன்பு, மரியாதை, மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். இது, எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு தெளிவான பாதையை அமைத்துக் கொடுக்கும்.

​சடங்குகள் என்றால் அது ஒரு "சடங்கு" மட்டுமல்ல; அது ஒரு ஒற்றுமையின் வெளிப்பாடு. நதி பாயும் பாதையில் சிதறல்கள் இருந்தாலும், அதன் ஓட்டம் ஒருமித்ததாக இருக்கும். அதுபோல, குடும்ப உறவுகளும் வேறுபாடுகளுடன் இருந்தாலும், ஒற்றுமை தான் அவர்களை முன்னோக்கி நகர்த்தும் சக்தியாக இருக்க வேண்டும்.

 *ஒற்றுமையே உண்மையான சடங்கு; அன்பே உயர்ந்த மரபு.*

~ மகேந்திரன்

Saturday, August 16, 2025

தாயும் தந்தையும் ஆனவர்கள்

*_தாயும் தந்தையும்_* *_ஆனவர்கள்_* 
“தாய்க்குப் பின் தாரம், தந்தைக்குப் பின் தந்தையின் இடத்தை இட்டு நிரப்ப யாருமில்லை” என்று சொன்னாலும், சில பிள்ளைகள் தாயுமானவர்களாகவும், தந்தைமானவர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

சிறு வயதில் பெற்றோரை இழந்தோ அல்லது பொறுப்பற்ற பெற்றோரால் கைவிடப்பட்டோ வளர்ந்த பிள்ளைகள் அல்லது மிகவும் வறுமையான குடும்ப சூழ்நிலையில் இருப்பவர்கள் அவர்களுடைய உடன் பிறந்தவர்களை காப்பாற்ற தாய் தந்தை பாசத்துடன் நிற்பதுண்டு. குறிப்பாக, பெண் குழந்தைகளுக்கு அக்கா தாயாகவும், ஆண் குழந்தைகளுக்கு அண்ணன் தந்தையாகவும் ஆகிவிடுகிறார்கள்.

இளம் வயதிலேயே அக்காவிற்கு திருமணம் செய்து வைக்கத் தம்பிகள் தங்கள் கனவுகளைத் தியாகம் செய்கின்றனர். பலர் தங்கள் சொந்த திருமணத்தை கூட தள்ளிப் போட்டு, குடும்ப பாரத்தை சுமக்கின்றனர். அதேபோல் தனது சகோதரனுக்கோ சகோதரிக்கோ பிறந்த பிள்ளைகளை தன் பிள்ளைகளாகவே வளர்க்கும் அக்காக்கள் பல குடும்பங்களில் உண்டு. 


நோய்வாய்ப்பட்ட பெற்றோரை கவனித்துக் கொள்வதற்காக தங்களுடைய வாழ்வின் சுக துக்கங்களை கூட பாராமல் தங்கள் வாழ்வின் சிறந்த ஆண்டுகளை தியாகம் செய்து, கண்ணும் கருத்துமாக பெற்றோரைப் பார்த்துக் கொள்ளும் பல பிள்ளைகள் உள்ளனர். பல இடங்களில் பெற்றோர் வாங்கிய கடனை அடைப்பதும் பிள்ளைகளின் தலையில் விழுகிறது. உடன் பிறந்தவர்களின் படிப்பு திருமணம் வேலை அவர்களுடைய நல்வாழ்வு இதற்காக கடன்பட்டு அந்தக் கடனை தன் வாழ்நாள் முழுக்க அடைத்துக் கொண்டிருப்பவர்கள் எத்தனையோ பேர்.

வெளிநாடு சென்று வாழ்வில் உயர வேண்டும் படிப்பு வேலை காதல் திருமணம் என்ற பல கனவுகளையும் கைவிட்டு, குடும்பத்தின் சுமையை சுமந்து நிற்கும் பிள்ளைகள் ஏராளம். சிலர் தங்கள் விருப்பங்களை முழுவதும் ஒதுக்கி வைத்து, தம்பி தங்கை வாழ்க்கை செழிக்க வேண்டும் என்பதற்காக அயராது உழைக்கின்றனர். இன்னும் ஒரு படி மேலே போய் குடும்பத்திற்காக உடன் பிறந்தவர்களுக்காக திருமணமே செய்து கொள்ளாமல் தன்னுடைய அத்தனை உழைப்பையும் குடும்பத்துக்கே அர்ப்பணித்தவர்கள் பலரை நம் வாழ்க்கையில் சந்தித்திருப்போம்.

ஆனால் இந்த தியாகத்தின் மறுபக்கம், அவர்கள் உள்ளத்தில் மழையாய் கொட்டும் ஆதங்கத்தை யாரும் காண முடியாது. அதை அவர்கள் வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் தங்கள் மனதின் ஆசைகளை அடக்கிக் கொள்ளும் வேதனை, சமூகத்தில் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. ஒருநாள் அவர்கள் வாழ்வு சிதைந்த பின்னரே, அவர்களது உளவியல் துன்பம் வெளிப்படும்.

இவ்வாறு, தாயும் தந்தையும் ஆன பிள்ளைகள், நம் சமூகத்தில் மறைந்திருக்கும் அன்றாட வீரர்கள். வெளிச்சத்துக்கு வராத கதாநாயகர்கள்.


இன்றைய காலகட்டத்திலும் பெற்றோர் இடத்தை பிள்ளைகள் நிரப்பும் சூழல் குறையவில்லை. அவர்களின் உழைப்பும், அர்ப்பணிப்பும் தான் பல குடும்பங்களை கரை சேர்த்திருக்கிறது.
இவர்களின் தியாகத்தை புரிந்து கொண்டு, நாமும் அவர்களை ஆதரிக்க வேண்டும். அப்படி யாராவது உங்கள் குடும்பத்திலோ அக்கம்பக்கத்திலோ இருந்தால் அவர்களைப் போற்றாவிட்டாலும் கூட அவர்களை காயப்படுத்தாமல் அன்போடும் அரவணைப்போடும் கவனித்துக் கொள்வோம்.

~ மகேந்திரன் 

Saturday, August 02, 2025

*வாரிசுச் சான்று* காலங்களைக் கடந்து வந்த உறவுப் பாலம்

*வாரிசுச் சான்று* காலங்களைக் கடந்து வந்த உறவுப் பாலம்



“வாரிசுச் சான்றிதழ்... சிலருக்கு அது வெறும் அரசாங்க ஆவணம் தான். ஆனால் அறிவழகனுக்கு அது – தந்தையிடமிருந்து கிடைத்த இறுதி ஆசீர்வாதம்!”

கந்தசாமி தன் வாழ்நாள் முழுவதும் ஒரு உழவனாய், வியர்வைத் துளிகளை நிலத்தில் சிந்தி, கடினமாக உழைத்து ஒரு பைசாவைக் கூட வீணாக்காமல் பாடுபட்டு சேர்த்த சொத்துகளைப் பிள்ளைகளுக்கு நியாயமாக பிரித்துக் கொடுத்திருந்தார்.

அவருக்கு ஐந்து பிள்ளைகள் – மூன்று மகள்கள், இரண்டு மகன்கள். தன் உழைப்பால் வந்த செல்வத்தைப் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து பிரச்சனை இல்லாமல் பிரித்துக்கொள்ள வேண்டும்; தனது காலத்துக்கு பின் சண்டை சச்சரவுகள் வரக்கூடாது என்பதில் உறுதியுடன் இருந்தார். ஆனால், விதி வலியது. அவரது இரண்டாவது மகள் எதிர்பாராத விதமாக முன்னரே இவ்வுலகைவிட்டு மறைந்தார்.

கந்தசாமியின் மறைவுக்குப் பின், எஞ்சியிருந்த இரண்டு மகள்களும், மூத்த மகனும்,
"அப்பா நமக்கு தரவேண்டிய சொத்துக்களை ஏற்கனவே பிரித்துக் கொடுத்து விட்டார். இனி அப்பா பெயரில் இருந்து நமக்கு எதுவும் வர வேண்டியது இல்லை. வாரிசுச் சான்றிதழ் என்பது வெறும் காகிதம்; அதற்கான தேவையும் இல்லை; அலைந்து திரிந்து வாங்க வேண்டிய அவசியமும் இல்லை என்று கூறி ஒதுங்கிக்கொண்டனர்.

அவர்களின் பார்வையில், பாகப்பிரிவினை முடிந்த பிறகு, ஒரு புதிய ஆவணம் பெறுவது அவசியமற்ற ஒன்றாக தோன்றியது. ஒருவேளை, தங்கள் தந்தையின் பெயரில் வங்கியில் நிறைய பணமோ வேறு எதுவும் சொத்துகளோ இருந்திருந்தால், இந்தச் சான்று வாங்க ஆர்வம் காட்டி இருப்பார்களோ என்னவோ? சொத்துக்கள் அவரவர் பெயரில் வந்துவிட்டாலும் கூட என்றேனும் ஒரு நாள் இந்த சான்று தேவைப்படலாம் என்பதும் அவர்களுக்கு புரியவில்லை.

ஆனால், இளைய மகன் அறிவழகனின் மனசு அத்தனை சீக்கிரம் ஒப்பவில்லை. அவனுக்கு அந்தச் சான்றிதழ் வெறும் காகிதம் அல்ல, ஒரு குடும்பத்தின் வரலாறு ஒரு தலைமுறையின் அடையாளம் 

 கந்தசாமி என்ற மனிதனின் வேர்களும் விழுதுகளும் இவர்கள்தான் என்று உலகுக்கு காட்டக்கூடிய அதிகாரப்பூர்வமான ஆவணம் என்பதை உணர்ந்து எப்படியாவது தன் தந்தைக்கு வாரிசு சான்றை வாங்கி விட வேண்டும் என்று அறிவழகன் உள்ளம் உருகினான்.

 தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரது பெயரும் இடம்பெறும் அந்தச் சான்று தான் தன் அப்பா கொடுத்ததிலேயே மிகப்பெரிய சொத்து என்று நம்பினான். 

வாரிசுச் சான்றிதழ் பெறுவது அறிவழகனுக்கு ஒரு தவம் போலவே இருந்தது. அறிவழகனின் எந்த முயற்சிக்கும் மற்ற மூன்று பிள்ளைகளும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை 
 உடன்பிறந்தவர்கள் தங்கள் அடையாள அட்டைகளை வழங்க மறுத்தனர். அவர்களுக்கு அதன் உண்மைத் தேவை புரியவில்லை.
"ஒற்றுமை இல்லை – ஆதாரங்கள் இல்லை – ஆதரவும் இல்லை" என்று அவர்கள் கைகழுவினாலும், அறிவழகனின் முயற்சி ஓயவில்லை.

தந்தையின் மீதான அன்பு, இந்தச் சான்றிதழைப் பெற்றே தீர வேண்டும் என்ற வைராக்கியமாக அவன் நெஞ்சில் வேரூன்றியது.

அண்ணன், அக்காக்களுக்குத் தெரியாமல், கண்ணீரும் வியர்வையுமாய் பல இடங்களுக்கு அலைந்தான். ஒரு துப்பறிவாளனைப் போல, வீட்டின் மூலை முடுக்குகளில் எப்போதோ எதற்காகவோ விட்டுச்சென்ற அவர்களின் அடையாள அட்டைகளின் நகல்களைத் தேடிப் பிடித்தான்.

இந்தத் தேடலின் போது 
தந்தையுடனும், குடும்பத்தினருடனும் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படங்கள், பள்ளிக் காலச் சான்றிதழ்கள், தந்தையின் கையெழுத்துகள் பதிந்த பழைய கடிதங்கள் என ஒவ்வொரு துகளையும் தேடித் திரட்டினான்.

ஜெராக்ஸ் நகல்கள் கூட அவனுக்குத் தந்தையின் நினைவுகளாய், உறவுகளின் சுவாசமாய் தோன்றின. ஒவ்வொரு தாளிலும் தன் குடும்பத்தின் உயிர் துடிப்பதை உணர்ந்தான்.

கிடைத்த ஆவணங்களை முறையாகத் தயார் செய்து, நம்பிக்கையுடன் வருவாய்த்துறை அலுவலர்களை பார்க்கச் சென்றான் அங்கே இருந்த அதிகாரி அறிவழகன் சமர்ப்பித்த ஆவணங்களைத் தீவிரமாக ஆராய்ந்தார்.

இவை எல்லாமே நகல்களாக இருக்கிறதே? அசல் ஆவணங்கள் இல்லையா? அரசு விதிகளின் படி அசல் ஆவணங்கள் அவசியம் என்று விண்ணப்பிக்கும் இடத்தில் ஆரம்பித்து உயர் அதிகாரி வரை திருப்பி அனுப்பினர். 

ஏன் உங்களுடன் பிறந்தவர்கள் அசல் ஆவணங்களை தர மறுக்கிறார்கள், உங்களுக்குள் ஏதாவது சொத்து பிரச்சனையா, நீங்கள் சொல்லும் வாரிசு விவரங்கள் உண்மைதானா என்று அறிவழகனை சந்தேக கண்ணோட்டத்தோடு பார்த்தார்கள்.

அறிவழகன் கண்களில் நீர் அரும்பியது.

> “ஐயா… இந்த வாரிசு சான்றிதழில்,
எங்கள் அப்பாவின் முகம், மனம், விருப்பங்கள் — எல்லாம் நான்கே வரிகளில் தெரிகிறது.
 தன்னுடைய பிள்ளைகள் நால்வரும் ஒற்றுமையோடு இருக்கணும் என்பதே அவருடைய ஒரே ஆசையாக இருந்தது.
ஆனால்... காலம் அவருடைய ஆசையை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து விட்டது.


 இந்த சான்றிதழில் 
அவருடைய எல்லா பிள்ளைகளின் பெயர்களும் ஒரு வரிசையில், ஒரே ஆவணத்தில் இருக்கும் போது, தன்னுடைய பிள்ளைகள் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற அவருடைய ஆசை இங்கேயாவது நிறைவேறட்டும் என்று அரசு அலுவலர்களிடம் மன்றாடினான். என் தந்தையின் வாரிசு பற்றி நான் அளித்த விவரங்கள் அனைத்தும் உண்மை, எங்கு வேண்டுமானாலும் விசாரித்துக் கொள்ளலாம் என்று உறுதிப்பட தெரிவித்தான்.

இந்த விண்ணப்பத்தில் நான் குறிப்பிட்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் உண்மையே இதில் ஏதேனும் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் அதற்கு முழு பொறுப்பையும் நான் ஏற்கிறேன், மேலும் இந்த அரசு ஆவணத்தை தவறான முறையில் பயன்படுத்த மாட்டேன் என்று உறுதிமொழி எழுதிக் கொடுத்த பிறகே அவனது மனுவை ஏற்றுக் கொண்டார்கள்.

 பொதுவாக சொத்துக்கள் பணம் இவற்றை பெறுவதற்காகத்தான் வாரிசு சான்று வாங்க பலரும் வருவார்கள். என் அப்பாவின் நினைவாக இந்த வாரிசு சான்றை ஒப்புதல் அளியுங்கள் என்று அறிவழகன் பரிதாபமாக கேட்டபோது அறிவழகனின் மனநிலையை அந்த விசாரணை அதிகாரி புரிந்து கொண்டார்.

அந்த உணர்வை மனதில் ஏற்றி, தயக்கமின்றி வாரிசுச் சான்றிதழ் வழங்க ஒப்பமிட்டார்கள்.

 வருவாய்த் துறையின் அனைத்து படிநிலைகளையும் கடந்து ஒரு வழியாக வாரிசு சான்று அறிவழகன் கைக்கு வந்து சேர்ந்தது. 

அதில், இறந்த அக்காவின் பெயரும், தன் தந்தை சிறுபிள்ளையாக இருக்கும் போது 70 வருடங்களுக்கு முன் மறைந்துபோன தாத்தா-பாட்டியின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.

அவர்களின் பெயரைக் கூட இன்று நினைத்துப் பார்க்க யாரும் இல்லாத சூழலில், அந்தச் சான்றிதழில் அவர்களின் பெயர்கள் மிளிர்வது அறிவழகனை மெய்சிலிர்க்க வைத்தது.

 மேலும் அந்தச் சான்று அறிவழகன் குடும்ப வரலாற்றின் சின்னமாக, உறவுகளின் பாலமாக மாறியது.

தனியே நின்று போராடி, தனது குடும்பத்தின் அடையாளத்தை கையில் கொண்டுவந்த அறிவழகன், அந்தச் சான்றிதழை வாழ்நாள் முழுக்க தந்தையின் ஆசீர்வாத சுடராக ஏந்திக்கொண்டான்

 அது வெறும் சான்றிதழ் அல்ல — காலங்களைக் கடந்து வந்த உறவுப் பாலம்!

~ மகேந்திரன்