“தாய்க்குப் பின் தாரம், தந்தைக்குப் பின் தந்தையின் இடத்தை இட்டு நிரப்ப யாருமில்லை” என்று சொன்னாலும், சில பிள்ளைகள் தாயுமானவர்களாகவும், தந்தைமானவர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சிறு வயதில் பெற்றோரை இழந்தோ அல்லது பொறுப்பற்ற பெற்றோரால் கைவிடப்பட்டோ வளர்ந்த பிள்ளைகள் அல்லது மிகவும் வறுமையான குடும்ப சூழ்நிலையில் இருப்பவர்கள் அவர்களுடைய உடன் பிறந்தவர்களை காப்பாற்ற தாய் தந்தை பாசத்துடன் நிற்பதுண்டு. குறிப்பாக, பெண் குழந்தைகளுக்கு அக்கா தாயாகவும், ஆண் குழந்தைகளுக்கு அண்ணன் தந்தையாகவும் ஆகிவிடுகிறார்கள்.
இளம் வயதிலேயே அக்காவிற்கு திருமணம் செய்து வைக்கத் தம்பிகள் தங்கள் கனவுகளைத் தியாகம் செய்கின்றனர். பலர் தங்கள் சொந்த திருமணத்தை கூட தள்ளிப் போட்டு, குடும்ப பாரத்தை சுமக்கின்றனர். அதேபோல் தனது சகோதரனுக்கோ சகோதரிக்கோ பிறந்த பிள்ளைகளை தன் பிள்ளைகளாகவே வளர்க்கும் அக்காக்கள் பல குடும்பங்களில் உண்டு.
நோய்வாய்ப்பட்ட பெற்றோரை கவனித்துக் கொள்வதற்காக தங்களுடைய வாழ்வின் சுக துக்கங்களை கூட பாராமல் தங்கள் வாழ்வின் சிறந்த ஆண்டுகளை தியாகம் செய்து, கண்ணும் கருத்துமாக பெற்றோரைப் பார்த்துக் கொள்ளும் பல பிள்ளைகள் உள்ளனர். பல இடங்களில் பெற்றோர் வாங்கிய கடனை அடைப்பதும் பிள்ளைகளின் தலையில் விழுகிறது. உடன் பிறந்தவர்களின் படிப்பு திருமணம் வேலை அவர்களுடைய நல்வாழ்வு இதற்காக கடன்பட்டு அந்தக் கடனை தன் வாழ்நாள் முழுக்க அடைத்துக் கொண்டிருப்பவர்கள் எத்தனையோ பேர்.
வெளிநாடு சென்று வாழ்வில் உயர வேண்டும் படிப்பு வேலை காதல் திருமணம் என்ற பல கனவுகளையும் கைவிட்டு, குடும்பத்தின் சுமையை சுமந்து நிற்கும் பிள்ளைகள் ஏராளம். சிலர் தங்கள் விருப்பங்களை முழுவதும் ஒதுக்கி வைத்து, தம்பி தங்கை வாழ்க்கை செழிக்க வேண்டும் என்பதற்காக அயராது உழைக்கின்றனர். இன்னும் ஒரு படி மேலே போய் குடும்பத்திற்காக உடன் பிறந்தவர்களுக்காக திருமணமே செய்து கொள்ளாமல் தன்னுடைய அத்தனை உழைப்பையும் குடும்பத்துக்கே அர்ப்பணித்தவர்கள் பலரை நம் வாழ்க்கையில் சந்தித்திருப்போம்.
ஆனால் இந்த தியாகத்தின் மறுபக்கம், அவர்கள் உள்ளத்தில் மழையாய் கொட்டும் ஆதங்கத்தை யாரும் காண முடியாது. அதை அவர்கள் வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் தங்கள் மனதின் ஆசைகளை அடக்கிக் கொள்ளும் வேதனை, சமூகத்தில் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. ஒருநாள் அவர்கள் வாழ்வு சிதைந்த பின்னரே, அவர்களது உளவியல் துன்பம் வெளிப்படும்.
இவ்வாறு, தாயும் தந்தையும் ஆன பிள்ளைகள், நம் சமூகத்தில் மறைந்திருக்கும் அன்றாட வீரர்கள். வெளிச்சத்துக்கு வராத கதாநாயகர்கள்.
இன்றைய காலகட்டத்திலும் பெற்றோர் இடத்தை பிள்ளைகள் நிரப்பும் சூழல் குறையவில்லை. அவர்களின் உழைப்பும், அர்ப்பணிப்பும் தான் பல குடும்பங்களை கரை சேர்த்திருக்கிறது.
இவர்களின் தியாகத்தை புரிந்து கொண்டு, நாமும் அவர்களை ஆதரிக்க வேண்டும். அப்படி யாராவது உங்கள் குடும்பத்திலோ அக்கம்பக்கத்திலோ இருந்தால் அவர்களைப் போற்றாவிட்டாலும் கூட அவர்களை காயப்படுத்தாமல் அன்போடும் அரவணைப்போடும் கவனித்துக் கொள்வோம்.
~ மகேந்திரன்
Tweet | ||||

No comments:
Post a Comment