Tuesday, February 20, 2024

நமக்கும் முதுமை உண்டு

*நமக்கும் முதுமை உண்டு*


ஐக்கிய நாடுகள் சபையின் ‘மக்கள் தொகை நிதியம்’ என்ற அமைப்பு, ‘இந்தியா ஏஜிங் ரிப்போர்ட்’ என்ற பெயரில் கணக்கெடுப்பு நடத்தியது. அதில், இந்தியாவில் தற்போது 60 வயதுக்கும் மேற்பட்ட முதியோர்களின் எண்ணிக்கை, 14.9 கோடியாக உள்ளது. இது, மொத்த இந்திய மக்கள் தொகையில், 10.5 சதவீதமாக உள்ளது என, தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


இந்தியாவைப் போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள வளரும் நாடுகளில், முதியோர் நலன் என்பது மக்களால் மட்டுமல்ல; அரசாங்கங்களாலும் கூட இரண்டாம் பட்சமாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. குறிப்பிட்ட வயதுக்கு மேல், அவர்களுக்கு மருத்துவக் காப்பீடு, வங்கிக் கடனுதவி உள்ளிட்ட குடிமகன்களுக்கான  அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுகின்றன.

முதியோர் நலன் சார்ந்த சட்டங்களோ, திட்டங்களோ அவர்களுக்கு உதவும் வகையில் இல்லை. அவர்களுக்கான சலுகைகளும் கூட பெயரளவிலேயே உள்ளன. சில திட்டங்கள் இருந்தாலும், அவை போதுமானவையாக இல்லை.


தமிழகத்தில் மட்டும் ஏறக்குறைய, 1,500 முதியோர் காப்பகங்கள் இருக்கலாம். இதில் பெரும்பாலானவை பணம் செலுத்தி, பராமரிக்கப் படுபவை ஆக  இருக்கின்றன. முதியோர் காப்பகங்களில், லட்சக்கணக்கானோர் தங்களது கடைசிக் காலத்தை வலியுடன் கழிக்கின்றனர்.


காப்பகங்களில் வசிக்கும் முதியவர்கள் அனைவருமே பிள்ளைகளால் வீட்டை விட்டு துரத்தப்பட்டவர்கள் என்று சொல்லி விட முடியாது. வீட்டில் தனக்கான மரியாதை கிடைக்கவில்லை என்பதற்காக கோபித்துக் கொண்டு வெளியேறியவர்கள்; பிள்ளைகளுக்குப் பாரமாக இருக்க வேண்டாம் என்று தாமாகவே வெளியேறியவர்கள்; சில நேரங்களில் சில தவறுகளை செய்து விட்டு, மற்றவர்களை எதிர்கொள்ள தைரியம் இல்லாமல், வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள்; ‘என்னடா வாழ்க்கை’ என வெறுத்து, ஒரு நொடியில் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு வந்தவர்கள் என, பல வகையினர் உள்ளனர்.


அவர்களில் பலரும், ஒரு காலத்தில் நல்ல நிலைமையில் இருந்தவர்கள்; நன்கு படித்தவர்கள்; நல்ல உத்தியோகத்தில் செல்வாக்கோடு வாழ்ந்தவர்கள்.


நரை, திரை, பிணி, மூப்பு, சாக்காடு யாவருக்கும் பொதுவானது என்பதை உணராமல், முதுமையும் தள்ளாமையும் வந்து விட்டது என்பதற்காக, அவர்களை மரியாதைக் குறைவாக நடத்துகிறது இச்சமூகம்.


ஒரு மணி நேரம் சாலையில் நின்று கவனித்தால், ஆதரவற்ற முதியோர் பலரும் நம் கண்ணில் தென்படுவர். வறுமை காரணமாக, தங்கள் வயதையும் மீறி உழைக்கும் முதியவர்கள் சிலரையும் கவனித்திருப்போம்.


சாலையோரம் சிறு கடைகள் நடத்தும் முதியவர்கள் தென்பட்டால், அவர்களிடம் ரெண்டு வார்த்தை பேசிப்பாருங்கள். அதற்காகவே காத்திருந்தது போல தங்கள் மொத்த வாழ்க்கையையும் கொட்டித் தீர்ப்பார்கள்.


ஒவ்வொருவருக்குப் பின்னாலும், ஓராயிரம் சோகக் கதைகள் இருக்கும்.


இளம் வயதில் எல்லாமே அவர்களது கட்டுப்பாட்டில் இருந்திருக்கும். வீட்டையே அவர்கள் தான் கட்டி ஆண்டிருப்பார்கள். அவர்கள் சொல்வதே முடிவு; அவர்கள் வைத்ததே சட்டம் என்று இருந்திருக்கும். அந்த வீட்டுக்காகவும் குடும்பத்துக்காகவும் நிறைய உழைத்திருப்பார்கள். தன்னுடைய சுக துக்கங்களை தியாகம் செய்திருப்பார்கள்.


நாட்கள் செல்லச் செல்ல, வயது முதிர்வு காரணமாக சம்பாதிக்க முடியாமல் போகும்போது, அவர்களால் எந்த வேலையும் செய்ய முடியாமல் போகிறபோது, சாதாரண வேலைகளுக்கு கூட, அடுத்தவர்களை எதிர்பார்க்கும் நிலை வரும்போது, வீட்டில் அவர்களுக்கான முக்கியத்துவம் ரொம்பவே குறைந்து விடுகிறது. அவர்களை பாரமாக, தேவையற்ற சுமையாக பலரும் கருத ஆரம்பித்து விடுகிறார்கள்.

அவர்கள் இயலாதவர்களாகி விட்டார்கள் என்ற ஒரே காரணத்துக்காக, நமக்கு செய்த அனைத்து நன்மைகளையும், நமக்காகப் பட்ட கஷ்டங்களையும் ஒரு நொடியில் துாக்கி எறிந்து விட்டு, முதியோர் இல்லத்தில் சிலர் விட்டு விடுகின்றனர்.


வசதி இல்லாதவர்கள் இலவச காப்பகங்களில்  விடுகிறார்கள். சிலர் அவர்களைக் கைவிட்டுத் துரத்தி விடுகிறார்கள். அவர்கள் தெருவில் ஆதரவற்ற நிலையில் அலையும்போது மீட்கப்பட்டு, தொண்டு நிறுவனங்கள்  நடத்தும் காப்பகங்களில் சேர்க்கப்படுகிறார்கள்.


வசதி படைத்தோர் தங்களது பெற்றோரை ‘பெய்டு ஹோம்’ என்ற அடிப்படையில், பணம் செலுத்தி தங்க வைக்கக்கூடிய காப்பகங்களில் சேர்த்து விடுகிறார்கள். அதன் மூலம் தங்களுடைய கடமையைச் சிறப்பாக செய்து விட்டதாகவும், அவர்கள் ஏதோ பெரிய மனது பண்ணி செலவு செய்து பார்த்துக் கொள்வதாகவும், பெருமிதம் கொள்கிறார்கள். இதுவுமேப் பெற்றோரைக் கைவிடுதல் தான்.


வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகள் மருத்துவமனைகளில் உயிருக்கு போராடும் பெற்றோரைப் பார்க்கக் கூட வருவதில்லை. அவர்கள் இறந்து விட்டால், உடலை அடக்கம் செய்யாமல், தாங்கள் வரும்வரை பாதுகாக்கச் சொல்கின்றனர்.
இன்னும் சிலரோ என்னால் வர முடியாது; பணம் அனுப்பி விடுகிறேன். நீங்களே அடக்கம் செய்து விடுங்கள் என்று கூறுகின்றனர். தங்கள் பெற்றோருக்கு தாங்கள் செய்ய வேண்டிய இறுதிச் சடங்கு மற்றும் இறுதி மரியாதையைக் கூட செய்ய வராமல் பணத்தைத் தேடி ஓடிக்கொண்டு இருக்கின்றனர்.


காப்பகங்களில் வசிக்கும் முதியோர்களை விட, வீடுகளில்
தனியாக வசிக்கும் முதியோர்களின் நிலை இன்னும் பரிதாபம். தனிமைக் கொடுமையால் தற்கொலை செய்து கொள்வோரும் உண்டு.

சிலர் வீட்டிலேயே இறந்து, யாருக்கும் தெரியாமல், உடலில் இருந்து துர்நாற்றம் வீசிய பிறகே, அக்கம் பக்கத்தினர் மூலம் பிள்ளைகளுக்கும்  உறவினர்களுக்கும் தெரியவரும் பரிதாபமான சூழல் காணப்படுகிறது.

காப்பகங்களில் இருக்கும் முதியோர்களைப் பார்த்தால், அவர்கள் நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருப்பதாகத் தோன்றும். இன்னும் சொல்லப்போனால் வீட்டில் சில நேரங்களில் சுடு சொற்கள், அவமானங்கள், புறக்கணிப்பைத் தாங்கிக் கொள்வதை விட, இதுவே மேல் என்று அவர்களே கூட நினைக்கக்கூடும்.


இங்கே அவர்களுக்கு பாதுகாப்பான உறைவிடம், உடைகள், நேரத்துக்கு உணவு, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைக்கிறது. தங்கள் வயதை ஒத்த நண்பர்களும் இருக்கிறார்கள். நடப்பது, சாமி கும்பிடுவது, செய்தித்தாள் மற்றும் புத்தகங்கள் படிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது என மகிழ்ச்சியாகவே  இருப்பார்கள்.

வெளிப்பார்வைக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், உள்மனதுக்குள் அவர்களுக்கு தங்கள் குடும்பத்தை பிரிந்த கஷ்டம், பிள்ளைகள் பேரப்பிள்ளைகள், தங்கள் உறவினர்களைப் பார்க்க இயலாத ஏக்கம் அதிகமாகவே இருக்கிறது.

முதியோர் இல்லங்களில் எத்தனை வசதிகளை செய்து கொடுத்தாலும், ரத்த உறவுகளுக்கு ஈடாகாது. காப்பக வசதிகளால் மகிழ்ச்சி அடைந்தாலும், அவர்களைக் கைவிட்டவர்களுக்கு சாபமே மிஞ்சும். வயது முதிர்வு மற்றும் தள்ளாமை காரணமாக, அவர்கள் நமக்குத் தேவையில்லை என நினைக்கிறோம். இப்போது தான், அவர்களுக்கு, நாம் தேவை என்பதை நம் வசதிக்காக மறந்து விடுகிறோம்.


முதியோர்கள் நம்மிடம் பணத்தை எதிர்பார்ப்பதில்லை. குறிப்பிட்ட வயதுக்கு மேல் பணம், அவர்களுக்குப் பயன்படாமல் போய் விடும். நம்மிடம் எதிர்பார்ப்பது ஆறுதலான சில வார்த்தைகள். அதைக்கூட கொடுக்க நம்மில் பலருக்கு நேரமோ மனமோ இருப்பதில்லை.

பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் மீது நடத்தும் வன்கொடுமைகள் பற்றி எந்தப் பெற்றோரும் பெரும்பாலும் யாரிடமும் புகார் அளிப்பதில்லை. முதியோர் பாதுகாப்பு சட்டங்கள் இருப்பது தொடர்பான விழிப்புணர்வு இருந்தாலும் கூட தங்கள் பிள்ளைகள் என்ற பாசத்தாலும், அவர்கள் எந்த பிரச்சனையும் வந்து விடக்கூடாது  என்ற எண்ணத்தினாலும் சகித்துக் கொண்டு வாழ்கின்றனர்.
அவ்வாறு உள்ள முதியோர்களைக் கண்டறிந்து அவர்களின் நலன் காக்க அரசாங்கம் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இளம் தலைமுறையினர் தங்கள் பெற்றோரை நல்ல முறையில் கவனித்துக்கொள்ள இது போன்ற நடவடிக்கைகள் ஒரு எச்சரிக்கையாக அமையும்.

வயதாகும்போது உடல் நல பாதிப்போடு மனநல பாதிப்பும் ஏற்படுகிறது. அதை புரிந்துகொண்டு, அவர்களை நடத்த வேண்டும். உணவு, உடை, உறைவிடம் மட்டும் வழங்கினால் போதாது. போதிய மருத்துவ வசதிகள் கிடைப்பதற்கு குடும்பத்தினரும், அரசாங்கமும் முயற்சியெடுக்க வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் நமது அரசாங்கம் கருவுற்றிருக்கும் பெண்கள், சிறு குழந்தைகள், வளர் இளம் பெண்கள் நலன் மற்றும் ஆரோக்கியத்தை கண்காணித்து பேணுவதுபோல், மூத்தக் குடிமக்களையும் கண்காணித்து  அவர்களின் நலம் பேண முயற்சி மேற்கொண்டால், பலரும் பலனடைவர்.


முதியோர் நலனுக்கென்று தனியாக ஊழியர்கள் நியமித்து, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் முதியோரை வீட்டிலேயே சந்தித்து, அவர்களது அடிப்படை  தேவைகளை நிறைவேற்ற, அரசே ஏற்பாடு செய்ய வேண்டும். வீடு தேடி மருத்துவம் திட்டத்தின் சேவையை முதியோரை சென்றடைகிறதா என்பதை பொது சுகாதாரத்துறை உறுதிப்படுத்த வேண்டும்.

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இக்காலகட்டத்தில், மருத்துவமனை செல்ல இயலாத முதியோருக்கு, ‘வீடியோ கால்’ போன்ற வசதிகள் மூலமாக கூட மருத்துவர்களின் ஆலோசனை கிடைக்க வழிவகை செய்யலாம்.

பிள்ளைகள் குறைந்தபட்சம் ஒரு நாளில் குறிப்பிட்ட மணி நேரமாவது பெற்றோர்களுடன் நேரம் செலவிட வேண்டும். வெளியூர்களில் வசித்தால் கூட அலைபேசியில் தினம் ஒரு முறையாவது பேசி அவர்களை மகிழ்விக்கலாம்.


நம்மைத் துாக்கிச் சுமந்தவர்களை, சுமையாக நினைத்துத் துாக்கிப் போட்டு விடாமல், கொஞ்சமாவது மன நிறைவுடன் அவர்கள் தங்கள் கடைசிக் காலத்தைக் கழிப்பதற்கு, நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை சிந்தித்து செயல்படுவோம்!

இணையத்தில் வந்த ஒரு கதையில்
ஒரு முதியவர் மட்டும் தன்னந்தனியாக வசிக்கிறார். அக்கம் பக்கத்தினர் கூட அவரது வீட்டிற்கு வருவதில்லை. அவருக்கோ, வெளியே சென்று வரும் அளவுக்கு உடல்நலம் இல்லை. அவரது வீட்டுக்கு தினமும் வந்து செல்லும் ஒரே ஒருவர்  பேப்பர் போடும் பையன் மட்டும்தான்.

வழக்கமாக, பேப்பர் போடுவதற்காக கதவோரம் வைத்திருக்கும் பெட்டி இல்லாததால், வீட்டுக்குள் எட்டிப் பார்க்கிறான் அந்தப் பையன். அவனை அழைத்து,
‘இனி, பேப்பரை என் கையிலேயே கொடு. கூடுதலாக பணம் வேண்டுமானாலும் தந்து விடுகிறேன்’ என்கிறார்.

‘பேப்பர் வாங்க வராமல், தனக்கு ஏதாவது நடந்து விட்டால் அக்கம் பக்கத்தில் சொல்லி விடு; என் பிள்ளையை தொடர்பு கொண்டு தெரிவித்து விடு’ எனக்கூறி, தனது வாரிசுகளின் கைப்பேசி எண்ணை, அந்த பையனிடம் தருவதாக அந்த கதை இருக்கும்.

அந்த அளவுக்கு, இரண்டு வார்த்தை பேசக்கூட ஆள் இல்லாமல், பல முதியவர்கள் இன்றைய இயந்திரத்தனமான உலகத்தில் வாழ்கிறார்கள். அவர்களது வலியை உணர, நமக்கும் முதுமை வரவேண்டும்.

ஒரு உண்மை சம்பவத்தை இங்கே பதிவு செய்கிறேன். நகரின் மையத்தில் நட்சத்திர வசதிகளோடு கூடிய ஒரு அப்பார்ட்மெண்ட். லட்சக்கணக்கில் பென்ஷன் வாங்கிக் கொண்டிருந்தாலும், தனியாக வசிக்கும் சூழலில் நிறைய முதியவர்கள் வசிக்கின்றனர்.

தேவையான உதவிகளை செய்து தரும், தனியார் நிறுவன ஊழியர், அவர்களை ஒருங்கிணைத்து ஒரு ‘வாட்ஸ் அப்’ குழு அமைத்திருந்தார். தினமும் ‘குட் மார்னிங்’, ‘குட் நைட்’ என குறுஞ்செய்தி போடும் வழக்கத்தை ஏற்படுத்தி வைத்திருந்தார்.

தினமும் மெசேஜ் போடக்கூடிய ஒரு முதியவர், ஒரு நாள் முழுவதும் எந்த பதிவும் போடவில்லை. சந்தேகப்பட்டு சென்றுபார்த்தபோது, திடீரென கை, கால்கள் இழுத்துக் கொண்டதால், துாக்கி விடக்கூட ஆளின்றி, தரையில் விழுந்து கிடந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ‘வாட்ஸ் அப்’ குழு இல்லாமல் இருந்திருந்தால், என்ன நடந்திருக்கும் என நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.


இறுதியாகப் பிள்ளைகளுக்கு ஒரு வேண்டுகோள். கடைசி காலத்தில் உங்கள் பெற்றோரை நேசியுங்கள்; தனியாக தவிக்க விடாதீர்கள். அவர்கள் கால பொக்கிஷம். உரையாடுங்கள்; கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். பெற்றோருடன் உங்களது வாரிசுகளை விளையாட வையுங்கள். அவர்களிடம் கதை கேட்கச் சொல்லுங்கள்; அவர்களுக்கும் வரலாறு தெரியட்டும். நாளை நமக்கும் முதுமை உண்டு என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள்.

~ ஈரநெஞ்சம் மகேந்திரன்

Sunday, February 18, 2024

உடல் தானம்


உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடியாக திகழ்வதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும், உடல் உறுப்பு தானம், உடல் தானம் பெறுவதில் தமிழக சுகாதாரத் துறையின் அக்கறை இன்னமும் போதாது என்கிறார்கள்.

தமிழகத்தில் 2010-க்குப் பிறகுதான் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் பரவியது. இதை ஏற்படுத்தியது கூட தனியார் மருத்துவமனைகள் தான். அப்படியிருந்தும் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகளுக்குத் தேவையான உறுப்புகள் கிடைக்காமல் இறப்பவர்களின் எண்ணிக்கையை இன்னமும் கட்டுப்படுத்த முடியவில்லை. இதேபோல்தான், மருத்துவ மாணவர்களின் உடற் கூறு ஆய்வுக்குத் தேவையான மனித உடல்கள் கிடைப்பதிலும் சிக்கல்கள் நீடிக்கின்றன. இதற்குக் காரணம் உடல் தானம் குறித்த விஷயங்களில் அரசு அக்கறை எடுக்காமல் இருப்பதே.

மேலை நாடுகளில், மூளைச் சாவு அடைந்த நிலையில் உடல் உறுப்புகளை தானம் செய்யவும், இறந்த பிறகு உடல் தானம் செய்யவும் அநேகம் பேர் முன் வருகின்றனர். ஆனால், தமிழகம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் இன்னமும் அந்த அளவுக்கு விழிப்புணர்வு ஏற்படவில்லை.


மூளைச் சாவு அடைந்தவரின் உடலில் இருந்து உடல் உறுப்புகளை தானம் கொடுப்பதற்கு அவர்களது உறவினர்கள் சம்மதிக்க வேண்டும். ஆனால், இறந்த பின் தனது உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக கொடுக்க விரும்புவோர், தாங்கள் உயிருடன் இருக்கும் போதே அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்துவைக்க வேண்டும். இதற்கான வழிமுறைகள் மிகவும் எளிமையானது.

இதற்கென அரசு மருத்துவக் கல்லூரி உடற் கூறு கழகத்தில் விண்ணப்பம் கொடுத்தால் போதும். நேரில் வரமுடியாமல் சிகிச்சையில் இருப்பவர்களிடம் மருத்துவமனையில் இருந்தபடியே ஒப்புதல் கையெழுத்துப் பெற்றும் விண்ணப்பத்தை வழங்க முடியும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, உடல் தானம் செய்பவர்களின் எண்ணிக்கை முன்பைவிட உயர்ந்திருந்தாலும், ஒப்புதல் அளித்தபடி உடல்களை ஒப்படைப்பதில் சிக்கல்கள் நீடிக்கின்றன. நூற்றுக்கு ஐந்து சதவீதம் பேரது உடல்கள் மட்டுமே ஒப்புதல் அளித்தபடி மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைக்கப்படுகின்றன. எஞ்சியவர்களின் உடல்களை அவர்களது உறவினர்கள், சம்பிரதாய சடங்குகளைச் சொல்லியும், சென்டிமென்டான விஷயங்களைப் பேசியும் எரிக்கவோ புதைக்கவோ செய்துவிடுகிறார்கள்.

இதுபோன்ற சமயங்களில், இறந்தவர் முன்பே ஒப்புதல் அளித்திருந்த விண்ணப்பத்தின்படி அவரது உடலை கேட்டு பெறுவதற்கான முயற்சிகளை மருத்துவக்கல்லூரி உடற் கூறு கழகம் எடுப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரை, தந்தால் ஏற்றுக் கொள்வோம்; தராவிட்டால் அலட்டிக் கொள்ளமாட்டோம் என்ற மன நிலையிலேயே இருக்கிறார் கள். இதற்குக் காரணம் உடல் தான திட்டத்தில் உள்ள குறைபாடுகளே.

இறந்தவரின் உடலை வாரிசுகள் ஒப்படைக்க வந்தாலும் அதை எடுத்துக் கொண்டு வருவதற்கு மருத்துவக் கல்லூரிகளில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை. சம்பந்தப்பட்டவர்களே ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொண்டுவந்தால் தான் உண்டு. உடல் தானம் பெறுவதற்கான விண்ணப்பங்களை மருத்துவக் கல்லூரிகளுக்கு பகுமானமாக வழங்கும் அரசு, அந்தத் திட்டத்தை செம்மையாக செயல்படுத்துவதற்கான நிதியை ஒதுக்குவதில்லை.

உடல் தானம் கொடுக்க விருப்பமாக இருந்தாலும் அதற்கான வழி முறைகள் தெரியாததால் மக்கள் சோர்ந்து விடுகிறார்கள். 15 ஆண்டு காலகட்டத்தில் சுமார் 600 பேர் மட்டுமே மருத்துக்கல்லூரிகளுக்கு உடல் தானம் வழங்கியிருக்கின்றனர். வடக்கில், மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு, உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது உடல்களை தானமாக தந்திருக்கிறார்கள்.

ஆனால், தமிழகத்தில் இப்படியான பிரபலங்கள் உடல் தானம் அளிப்பது மிகவும் அரிது. உடல் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் அதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதிலும் சுகாதாரத்துறையும் போதிய கவனம் செலுத்தவில்லை. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் உடல் தானம் கொடுப்பவர்கள் எண்ணிக்கை மிக குறைவே. உடல் உறுப்பு தானம் பெறுவதில் காட்டும் அக்கறையில் 10 சதவீதம்கூட உடல் தானம் பெறுவதில் காட்டப்படுவதில்லை.

மருத்துவக் கல்லூரிக்கு தானமாக பெறப்படும் உடல்கள் உரிய முறையில் பதப்படுத்தப்படும். இவை 15 ஆண்டுகள் வரை கெடாது. இந்த உடல்களைக் கொண்டு, மருத்துவம் படிக்கும் முதலாமாண்டு மாணவர்களுக்கு உடலின் பாகங்கள் குறித்து வகுப்பு நடத்தப்படும். பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்யும் முறைகள் குறித்துக் கற்றுக் கொடுக்கப்படும்.

அரசு மருத்துவக்கல்லூரிக்கு ஆண்டுக்கு சராசரியாக 12 உடல்கள் தேவைப்படும். அதைவிட  கூடுதலாக பெறப்படும் உடல்களை மற்ற மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுப்புகின்றனர். சென்னை, சேலம், கோவை, மதுரையில் உள்ள மருத்துவக் கல்லூரிகளைத் தவிர மற்ற கல்லூரிகளுக்கு உடல்கள் கிடைப்பது பற்றாக்குறையாகவே உள்ளது.

உடல் தானம் செய்ய விண்ணப்பிப்பது எப்படி?

உடல் தானம் செய்வதற்கான விண்ணப்பங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளின் உடற் கூறு கழகத்தில் இலவசமாக கிடைக்கும். உடல் தானம் செய்ய விரும்புவோர், தனது இறப்புக்குப் பிறகு தனது உடலை தானம் தர முழு சம்மதம் என படிவத்தைப் பூர்த்தி செய்துகொடுக்க வேண்டும். இதில் இரண்டு சாட்சிகளும் கையெழுத்திட வேண்டும். கூடவே, தனது அங்க அடையாளங்களைத் தருவதுடன் தனக்கு ஹெச்.ஐ.வி. உள்ளிட்ட எவ்வித தொற்றும் இல்லை எனவும் மனுதாரர் உறுதியளிக்க வேண்டும். மாற்றும்  தங்கள் அருகாமையில் உள்ள நோட்டரி  பப்ளிக்கில் (Notary Public) உறுதிமொழி பத்திரம் மூலம் பதிவு செய்ய வேண்டும்.


கொலை, தற்கொலை, விபத்து உள்ளிட்ட போலீஸ் வழக்குகள் இருக்கும் உடல்களை தானமாக தரமுடியாது. பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை நேரிலோ தபாலிலோ மருத்துவக்கல்லூரி உடற் கூறு கழக தலைவருக்கு அனுப்பலாம். இறந்தவரின் உறவினர்களே அவரது உடலைக் கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும். அப்போது, மருத்துவர் அளித்திருக்கும் இறப்புச் சான்றிதழ் அவசியம் இருக்க வேண்டும். தானம் தர முன்பே ஒப்புதல் வழங்காமல் இறந்துவிட்ட ஒருவரது உடலை வேறு யாரும் தானமாக தரமுடியாது.


~ மகேந்திரன்

Thursday, February 15, 2024

வாட்ஸ் அப் குழுவின்மூலம் மலர்ந்த மனிதம்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இருப்பினும் உடல் உறுப்பு செயலிழப்பினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இன்னும் அதிகமாக உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய நிலையே உள்ளது.

விபத்து காரணமாகவோ உடல்நலக்குறைவு காரணமாகவோ மூளைச்சாவு அடையும் நிலை ஏற்பட்டால் மண்ணுக்கோ நெருப்புக்கோ  இரையாகும் உடல் உறுப்புகள் யாருக்கேனும் பயன்படட்டும் என்ற எண்ணம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது.

ஆனால் உடல் உறுப்பு தானம் என்றால் என்ன? அதை செய்வது எப்படி? அதற்கு பதிவு செய்வதற்கான வழிமுறைகள் என்ன என்பது பற்றி தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாமல் இருந்தது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்ற நிலையும் பதிவு செய்யும் முறைகள்  சிக்கலாகவும் இருந்தது.

இந்நிலையில் தமிழக அரசின் உடல் உறுப்பு தானம் தொடர்பான *transtan. tngov. in* இணையதளத்தில் எளிதாகப் பதிவு செய்ய முடியும் என்ற வழிமுறை தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தீயணைப்புத் துறையில் பணியாற்றும் இளம் செல்வன் என்பவர் உடல் உறுப்பு தானத்திற்கு இணையவழியில் பதிவு செய்திருந்ததை அறிந்து ஈரநெஞ்சம் அறக்கட்டளை நிறுவனர் திரு.மகேந்திரன் அவர்கள் ஏற்கனவே உடல் தானத்திற்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் பதிவு செய்திருந்த போதிலும் தற்போது உடல் உறுப்பு தானத்திற்கு இணைய வழியில் பதிவு செய்து  அதற்குரிய அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து மற்றவர்களை ஊக்குவிப்பதற்காகவும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் *ஈரம் செய்திகள்* வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டார். அதைத் தொடர்ந்து   கடந்த இரு தினங்களில் மட்டுமே பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏறக்குறைய *30க்கும்* மேற்பட்ட நபர்கள் தாமாக முன்வந்து உடல் உறுப்பு தானத்திற்கு தமிழக அரசின் அதிகாரபூர்வ  இணையதளத்தில்  பதிவு செய்து அதற்குரிய அடையாள அட்டை பெற்றுள்ளனர்.

இது மிகவும் போற்றுதலுக்குரிய விஷயம். ஒரு விளக்கின் சுடரில் இருந்து ஆயிரம் விளக்குகள் சுடர் பெற்று ஒளிர்வது போல விளம்பர நோக்கத்தோடு அல்லாமல் நமது செய்திகள் குழுவில் வெளியிடப்பட்ட உடல் உறுப்பு தானம் பற்றிய ஒரு விழிப்புணர்வு பதிவு பல பேரை சென்றடைந்து உள்ளது.

தன்னுடைய மரணத்திற்கு பிறகும் கூட மற்ற உயிர்களை வாழ வைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்த தன்னார்வலர்கள் அனைவருமே வாழும் கடவுள்கள் தான். அவர்களது செயல் 
போற்றுதலுக்கும் வணக்கத்துக்கும் உரியது.

இத்துடன் உடல் உறுப்பு தானம் செய்வதற்குப் பதிவு செய்தவர்களின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.

இளம் செல்வன், திருப்பூர்.
மகேந்திரன்,கோவை 
பாரதி, கோவை
ஈடித் ரேனா, புதுகை 
நித்யா, விருதுநகர்
ராஜேந்திரன், விருதுநகர்
நடராஜன், சிவகாசி
சம்விதா, கோவை
தேவராஜ், கோவை
செந்தில், கோவை
அமுதா, ராசிபுரம் 
பிரேம், விருதுநகர்
அன்புச்செல்வன்,உதகை 
முருகேசன்,உதகை
அனிதா, சென்னை
மணிவேல், சென்னை
ஆரோகியசாமி,புதுகை 
இன்ப தமிழ், புதுகை
உதயாராஜ், ராசிபுரம்
நீலகண்டன், சேலம்
கண்ணன், கோவை
புஷ்பா, பொள்ளாச்சி 
முனியப்பன், பழனி
கிஷோர், ஈரோடு 
முத்துசாமி, அவிநாசி 
வனிதா, கோவை 
ஜெயராஜ், கோவை
அன்னக்கொடி, திருச்சி
முருகானந்தம், திருச்சி 
நல்லதம்பி, திருச்சி
ஈஸ்வரன்,குன்னூர்
சந்திரன், விருதுநகர்

~ஈரநெஞ்சம் அறக்கட்டளை

சாப்டியா

சாப்டியா..
இந்த சொல் உதிரும்போதே
மனதோரம்
மலர்ந்து விடுகிறது நேசம்

இந்தச் சொல்
ஆறுதலை தருவதற்கு முன்பே
அன்பைப் பெற்றுவிடுகிறது

இந்தச் சொல்
கருணையை வழங்கியதற்காக
கண்கள் கண்ணீரை
பரிசளித்துவிடுகிறது

பசியை
சீண்டிப்பார்க்கும் சொல்தான்
என்றாலும்
அக்கறையை அள்ளித்தரும்
அழகில்
மண்ணில் இன்னும் ஈரம் இருக்கிறது என்ற நம்பிக்கை

இயலாமைக்கு தன்மானத்தை
பசி பந்தி வைக்கும்போதும்
இந்தச் சொல்
மனதை நிறைத்து விடுகிறது

ஒற்றைச் சொல்தான்
ஓராயிரம் செல்களை
தட்டி எழுப்பி கட்டிக்கொள்ளும்
மந்திரம் கொண்டது
மனிதம் நிறைந்தது.

இது கேள்விதான்
என்றாலும்
நான் இருக்கிறேன் என்ற பதிலை
சொல்லாமல் சொல்கிறது

பசி அறிந்த தாயின் சாயலை
இந்தச் சொல்
இழுத்து வரும்போது
மறந்து போன
அம்மாவும் அப்பாவும் 
இணைந்தல்லவா வருவார்கள்.

இது சொல் அல்ல
உயிரை தாலாட்டும் உணர்வு
உறவை வளர்க்கும்
உரிமையின் கீதம்
ஆமாம்
மனிதம் கேட்கும்
கடவுளின் கருணை. 🙏

 *சாப்டியா*