Thursday, October 26, 2023

ஒரு நேர்மையான அரசன்

_*ஒரு நேர்மையான அரசன்*_
ஒரு உயர்ந்த மலை. அந்த உயரத்தில் இருந்து ஆர்ப்பாட்டமா கொட்டுகிற ஒரு நீர்வீழ்ச்சி. ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு வந்ததுக்கு அப்புறம் அந்த அருவி இரண்டு ஆறுகளா பிரியும். ஒன்னு மலைக்கு இந்த பக்கமாவும் இன்னொன்னு மலைக்கு அந்த பக்கமாவும் பாயும். மலையின் இரு புறமும் இரண்டு வெவ்வேறு நாடுகள் இருந்தன. ஒன்றின் பெயர் வல நாடு மற்றொன்றின் பெயர் இட நாடு என்று வைத்துக்கொள்வோம். 

இரண்டு நாடுகளுக்கும் எப்போதும் சண்டை நடந்து கொண்டே இருக்கும். அந்த மலையின் வளங்கள் யாருக்கு சொந்தம் என்பது குறித்து தொடர்ந்து பிரச்சினையாகவே இருந்து வந்தது.

பலமுறை முயற்சித்தும் வலநாட்டு மன்னனால் ஒருமுறை கூட இட நாட்டு மன்னனை போரில் தோற்கடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் ஒற்றர்கள் மூலம் ஒரு வாலிபன் மன்னரை தனியாக சந்திக்க விரும்புவதாக ஒரு செய்தி வந்தது.அரசனும் அவனைத் தனிமையில் சந்தித்தார்.

அப்போது அந்த வாலிபன் நான் பக்கத்தில் உள்ள இடநாட்டு மன்னனின் மெய்க் காப்பாளர்களில் ஒருவன். எங்கள் நாட்டின் போர்ப்படைத் தளபதி ஒருவர் சமீபத்தில் இறந்த பிறகு, தகுதி அடிப்படையில் எனக்குத் தான் அந்தத் தளபதி பதவி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எங்கள் மன்னர் தன்னுடைய மருமகனுக்கு அந்தப் பதவியைக் கொடுத்து விட்டார்.

இதனால் அவரை சும்மா விடக்கூடாது என்ற ஆத்திரத்தில் இருக்கிறேன். நீங்கள் இதுவரை அவரை வெல்ல எவ்வளவோ முறை முயற்சித்தும் முடியாமல் போயிற்று. 

 நாளை எங்கள் மன்னர் மாறுவேடத்தில் உங்கள் நாட்டின் பக்கமுள்ள காட்டின் நடுவே இருக்கும் ஆலயத்திற்கு பூஜை செய்ய வருகிறார். 

நீங்களும் மாறுவேடமிட்டு சில வீரர்களோடு வந்தால் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவரைக் கொல்லவோ கைது செய்யவோ முடியும். 
என்று கூறினான்.

மன்னரும் சரி என்று கூறி அவனை அனுப்பி விட்டார். அவன் சொன்னது போலவே இடநாட்டு மன்னன் வருவதற்கு முன்பே அவனுக்காகப் பக்கத்தில் இருந்த ஒரு குகையில் சில வீரர்களோடு காத்திருந்தார்.

பூஜையின் போது இடநாட்டு மன்னனோடு, துரோகியாக மாறி செய்தி சொன்ன மெய்க் காப்பாளனும் உடனிருந்தான். தன்னுடைய திட்டம் பலிக்கப் போகிறது என்ற கற்பனையுடன் குள்ளநரியைப் போலக் காந்திருந்தான். 

இடநாட்டு மன்னன் பூஜையை முடிக்கும் வரை காத்திருந்து அவர் முன்னே போய் நின்றான் வலநாட்டு மன்னர். ஆனால் அந்த மெய்க்காப்பாளன் கூறியது போல மாறுவேடம் எதுவும் போடாமல் போய் நின்றார். 

திடீரென்று அவரை அங்கே பார்த்தவுடன் இட நாட்டு மன்னனுக்கு பலத்த அதிர்ச்சி.
குறைந்த வீரர்கள் மட்டுமே இருக்கிறார்களே? முன்னெச்சரிக்கை இல்லாமல் வந்து விட்டோமோ என்று யோசிக்கும் போது,

வல நாட்டு மன்னன் பயப்பட வேண்டாம். நாங்கள் உங்களை எதுவும் செய்ய மாட்டோம்.

இன்று நீங்கள் எங்கள் பகுதிக்கு வந்திருக்கிறீர்கள். எங்களுடைய விருந்தாளி. நீங்கள் இங்கே வரப்போவதாக உங்களுடைய நாட்டைச் சேர்ந்த துரோகி ஒருவனால் முன்கூட்டியே தகவல் கிடைத்தது.

உங்களுடன் நேருக்கு நேர் நின்று போரிட்டு வெல்வது தான் எனக்கு பெருமையேத் தவிர சூழ்ச்சி செய்து சிறைப் பிடிப்பது மன்னனுக்கு அழகல்ல. 

மேலும் நீங்கள் என்னைப் போன்ற எதிரிகளிடம் கவனமாக இருப்பதை விட உங்கள் கூடவே இருக்கும் துரோகிகளிடம் தான் அதிகக் கவனமாக இருக்க வேண்டும், என்று கூறினார்.

இதைக் கேட்டதும் அந்த மெய்க் காப்பாளனுக்கு நடுக்கம் எடுத்து விட்டது. போச்சு இன்று நாம் செத்தோம் என்று மனதுக்குள் நினைத்தான்.

விஷயத்தை கேட்டதும் யார் அந்த துரோகி என்று தன் வாளை எடுத்தார் இட நாட்டு மன்னர். 
ஒருவரைக் காட்டிக் கொடுப்பதைப் போன்ற படுபாதகம் எதுவும் இல்லை. அந்தத் தவறை நான் செய்ய மாட்டேன் என்று மறுத்துவிட்டார் வல நாட்டு மன்னர்.

வல நாட்டு மன்னரின் பெருந்தன்மையான செயலைக் கண்டு நெகிழ்ந்து போனார் இட நாட்டு மன்னர். முந்தைய போர்களில் தான் செய்த தவறுகளுக்காகவும் மன்னிப்பு கேட்டார். அதன் பிறகு இரண்டு நாடுகளும் நட்பு நாடுகளாகவே தொடர்ந்தன. மலையின் வளங்களை சரிசமமாக பங்கிட்டுக் கொள்வதோடு மலையையும் இரு நாடுகளும் சேர்ந்து பாதுகாப்பதாக உறுதி எடுத்துக் கொண்டன.

 _*Magi Channel*_

Sunday, October 01, 2023

நாங்க வளர்க்கிற நாய் போல தாங்க இந்த தெரு நாய்களும்

*நாங்க வளர்க்கிற நாய் போல தாங்க இந்த தெரு நாய்களும்*
நாம் தினமும் ஒரு குறிப்பிட்ட பாதையில் தான் அன்றாட அலுவல்களை கவனிக்க வாகனங்களில் விரைந்து கொண்டிருக்கிறோம் . நம்முடைய ஆயிரம் பிரச்சனைகளுக்கும் மன அழுத்தங்களுக்கும் மத்தியில் நம்மைச் சுற்றி நடக்கும் எந்த விஷயங்களும் நம் கண்ணில் படுவதில்லை. அப்படியே கண்ணில் பட்டாலும் மனதில் பதிவதில்லை. 

இன்று மதியம் நல்ல வெயில் நேரத்தில் கோவை ஆர் எஸ் புரம் பொன்னுரங்கம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது நான் கண்ட ஒரு காட்சியில் ஒரு கணம் என்னுடைய பிரச்சினைகளையே நான் மறந்துவிட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு வீட்டின் காம்பவுண்ட் முன்புறம் உள்ள கேட்டை நோக்கி மணி அடித்து செல்லும் பள்ளி பிள்ளைகள் போல வரிசையாக பத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் சென்று கொண்டிருந்தன. அங்கே வரிசையாக தட்டில் சாப்பாடு வைக்கப்பட்டிருந்தது. உணவு இடைவேளைக்கு செல்லும் மாணவர்களைப் போல பவ்யமாக ஒவ்வொன்றும் தட்டில் தனக்கு வைக்கப்பட்ட அசைவை உணவை அழகாக சாப்பிட ஆரம்பித்தன. 

சக மனிதர்கள் பசியால் துடிக்கும் போது கூட கண்டுகொள்ளாமல் செல்லும் மனிதர்களுக்கு மத்தியில் தெரு நாய்களின் பசியைப் போக்கும் அந்த வீட்டின் உரிமையாளர் நல்லமுத்து என்பவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

அவர் தனது வீட்டில் வளர்த்து வரும் நாய்க்கு உணவு வைக்கும் போதெல்லாம் தெருநாய்கள் ஏக்கத்தோடு பார்க்கும் , அதை பார்த்துவிட்டு எங்கள் மனசு கேட்காமல் தெருவில் உள்ள மற்ற நாய்களுக்கும் சேர்த்து சாப்பாடு வைக்க ஆரம்பித்ததாக கூறுகிறார்.

தன்னுடைய வீட்டில் வளர்க்கும் நாய்க்கு வைக்கும் அதே உணவைத்தான் தெருவில் உள்ள நாய்களுக்கும் கொடுக்கிறார். தெரு நாய்கள் தானே என்று எந்த அலட்சியமும் காட்டாமல் நாய்களுக்கு என்று பிரத்தியேகமாக சமைக்கப்பட்ட உணவை ஒவ்வொரு நாய்க்கும் தனித்தனியாக தட்டில் வைத்து கொடுக்கிறார்.  

15 வருடங்களுக்கும் மேலாக தெரு நாய்களுக்கும் உணவு பரிமாறி வருகிறார். இதனால் இங்கு உணவு கிடைப்பதை அறிந்து வேறு ஏரியா நாய்களும் ஏராளம் வர ஆரம்பித்து விட்டனவாம். 
இந்த நாய்கள் யாரையும் கடிக்காது. அவைகளால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை... இன்னும் சொல்லப்போனால் இந்தப் பகுதிக்கு பாதுகாப்பாகத்தான் இருக்கின்றன என்று கூறினார். 

பெருநகரங்களில் அதிவேக வாழ்க்கை சூழலில் தெருநாய்களை கவனிக்க யாருக்கும் நேரமில்லை. மீதம் ஆகும் உணவுகளை கூட யாரும் அவைகளுக்கு போடுவதில்லை. நெகிழிப்பைகளில் அடைத்து வீசி விடுகிறோம். இந்த நாய்கள் உணவுக்கு என்ன செய்யும் என்று 
நினைத்தே அவைகளுக்கு தினமும் உணவு அளிப்பதாக கூறுகிறார். பேசுவதற்கு எளிதாக இருந்தாலும் ஒரு நாளைப் போல தினமும் தவறாமல் சமைத்து உணவு அளிப்பதும் சமைத்த பாத்திரங்கள் தட்டுகள் இவற்றை சுத்தம் செய்வதும் மிகவும் சிரமமான விஷயம். மேலும் அவற்றிற்கு ஏதேனும் உடல்நிலை சரியில்லை என்றாலும் கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளிப்பதாகவும் கூறி நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். எனினும் நல்லமுத்து இதைப் பெரிய சாதனையாகவோ சேவையாகவோ சொல்லி விளம்பரம் தேடாமல் ஏதோ என்னால முடிஞ்சது அதுங்களுக்கு பசியாற்றுகிறேன் என்று எதார்த்தமாக சொல்கிறார்.

தண்ணீரைக் கூட வியாபாரம் செய்யும் மனிதர்களுக்கு மத்தியில் இவரைப் போன்ற மனிதர்களால் தான் வாயில்லா ஜீவன்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
இனியாவது நாமும்
தேவைக்கு அதிகமாய் மீந்து இருக்கும் உணவுகளையாவது கெட்டுப் போவதற்கு முன்பே நம் தெருக்களில் இருக்கும் நாய் பூனை போன்ற விலங்குகளுக்கு கொடுக்கலாமே. _இந்தப் பூமி மனிதர் வாழ்வதற்கு மட்டுமானதல்ல.. வாழ்தலும் எவ்வுயிர்க்கும் பொதுவன்றோ?

~ ஈரநெஞ்சம்