இறைவனது படைப்பில் சிறு துரும்பும் கூட அர்த்தமற்றதாக இருப்பது இல்லை , ஆனால் அதை உணர்ந்து கொள்ளத்தான் பலருக்கு ஞானம் இல்லை.
~~~~~~~~~~~~~~~~~~~
அமுதா வயது 52 . இரண்டு சகோதரர் சகோதரிகள் இருவர் இவருக்கு. குடும்பத்தில் இரண்டாமவர் இவர். ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கூட இவர் பிறந்த நாள் முதல் இறந்த நாள் வரையில் வாழ்வில் அனுபவிக்காத துன்பமே இல்லை.
பிறந்து சிறிது காலத்திலேயே ஒரு விபத்தில் தலை நரம்பில் அடிபட்டதால் வாழ் நாள் முழுவதும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர். அந்த காலத்தில் போதிய மருத்துவ வசதி இல்லாததால் இந்த வியாதிக்கு முழு மருத்துவம் கிடைக்கவில்லை. இந்த வலிப்பு நோயின் காரணமாக பள்ளி படிப்பும் துவக்கத்திலேயே நிறுத்த வேண்டியதாயிற்று.
பள்ளி படிப்பு இல்லை என்றாலும் வீட்டில் இருந்து தனது உடன் பிறந்தவர்களுக்கு தேவையான அனைத்து பணிவிடைகளும் செய்து கொடுப்பார். சொந்த தாய்மாமனுக்கு மணம் முடித்து அவர்கள் வாழ்விற்காக பெரும் பொருளுதவியும் அமுதாவின் பெற்றோர்கள் செய்து கொடுத்தனர்..
ஆனால் மூன்று வருடத்திலேயே அவர் திருமண வாழ்வு முடிவுக்கு வந்தது. அதற்குள் ஒரு அழகான பெண் குழந்தையும் பெற்றெடுத்து , அதை எமனுக்கு தாரைவார்த்துக் கொடுத்துவிட்டார். தன் கணவர் வேறு ஒரு பெண்ணை மணமுடித்துக் கொண்டதால் மன அழுத்தம் காரணமாக மனநோய் ஏற்பட்டு தன்னை யார் என்றே தெரியாத நிலைக்கு ஆளானார். .
அதன் பின் அமுதாவின் பெற்றோர்கள் தொடர்ந்து செல்லாத மருத்துவமனை இல்லை , வேண்டாத தெய்வங்கள் இல்லை. அமுதாவின் நலனில் எந்த முன்னேற்றமும் இல்லை.
வாழ்ந்த நாளில் எந்த ஒரு நல்லது கெட்டதிற்கும் சென்றது இல்லை. அக்கம் பக்கம் கூட சென்றது இல்லை. சென்றது எல்லாம் மருத்துவமனை மருத்துவமனை மட்டுமே. 2015 இல் மனநலம் பெரிதும் பாதிக்கப்பட்டது அதுவரை இவரது நிலையை ஓரளவிற்கு கட்டுப்பாட்டில் வைத்திருந்த மருத்துவர்களும் முற்றிலும் கைவிட்டு விட்டனர்.
எத்தனையோ விஞ்ஞானம் வளர்ந்த இந்த உலகில் இவருக்கு வைத்தியம் பார்க்க தமிழ் நாட்டில் எந்த மருத்துவமும் கிடைக்க வில்லை. வீதியில் விட வேண்டிய கட்டத்திற்கு தள்ளப்பட்டார். அதன் பிறகு தனது குடும்பத்தை பிரிந்து பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவமனையிலும் காப்பகத்திலும் மூன்று வருடம் இருந்தார்.
அமுதாவை சந்திப்பவர்கள் எல்லோரும் பாவப்பட்ட பிறவி , வாழ்வில் எந்த ஒரு சுகத்தையும் அனுபவிப்பதற்கு இல்லை. எப்போது இறைவன் அழைத்து செல்ல போகிறான் , யார் யாருக்கோ முடிவு வருகிறது ஒரு புரயோஜனமும் இல்லாத இந்த அமுதாவிற்கு எப்போது முடிவு வரும் என்றே புலம்பிக் கொண்டு இருந்தனர்.
இவர்களது பார்வைக்கு அமுதா ஒரு வேண்டாத பொருளாகத்தான் இருந்தார்.
ஆனால் அமுதாவின் மற்றொரு பக்கம் அவர்களுக்கு தெரியாது .
அமுதாவின் நிலையைத் தான் மேம்படுத்த முடியவில்லை ஆனால் அமுதாவை பின்னணியாக கொண்டு அவரை போல மற்றொருவர் இந்த உலகில் பாதிக்க கூடாது என்று அமுதாவின் உடன் பிறந்தவர்களும் அவர்களது நண்பர்களும் சேர்ந்து ஈரநெஞ்சம் என்ற அறக்கட்டளை உருவாக்கினர்.
அமுதாவின் வாழ்வு சுகமாக இல்லை என்றாலும் . அவரது பின்னணியில் உருவான இந்த ஈரநெஞ்சம் அறக்கட்டளை மூலமாக அமுதாவை போன்றவர்கள் ஆயிரக்கணக்கில் மறுவாழ்வு பெற்று வாழ்கின்றனர்.
மனநிலை பாதிக்கப்பட்ட எத்தனையோ பேர் , தன்னிலை மறந்து குடும்பத்தை இழந்தவர்கள் குணமாகி குடும்பத்துடன் இணைந்து உள்ளார்கள். சாலையில் ஆதரவற்று உயிர் நீத்தவர்களை அவர்களுக்கு உறவாக நின்று நல்லடக்கம் செய்வதும். ஆதரவற்ற குழந்தைகள் பாதுகாப்பு, கால்கள் இழந்தவர்களுக்கு செயற்கை கால் வழங்குவது , மற்றும் ஈரநெஞ்சம் காப்பகத்தில் ஆதரவற்றவர்கள் 150 பேருக்கும் மேல் ஆதரிக்கப்பட்டு வருகிறார்கள் . இந்த செயல்கள் அனைத்திற்கும் பின்னணி இந்த அமுதா என்ற தேவதை தான்.
இவ்வளவு பெருமைக்கும் உரிய இந்த தேவதை, கடந்த 3/1/18 அன்று தான் மண்ணுக்கு வந்த இறை பணியை முடித்துக் கொண்டு மீண்டும் இறைவடிவம் பெற்றுக் கொண்டது.
கடவுள் சில நேரம் தேவதைகளை மண்ணிற்கு ஏதோ சில காரணத்திற்காக அனுப்பி வைப்பார் . அவர்கள் மண்ணுலகில் பொழுது போக்கிற்காக வந்து மனிதகுல நன்மைக்காக வாழ்ந்து போவார்கள். அவர்கள் இருக்கும் காலத்தில் பெரும் கூட்டத்திற்கு தலைவராகவோ, அல்லது தான் சொல்லும் அனைத்தையும் மக்கள் வேதவாக்காக எடுத்துக் கொள்ளும் போலி சாமியார்களாகவோ இருக்க மாட்டார்கள் . நாம் அடிக்கடி கேட்டு இருக்கின்றோம் சித்தர்கள் வாழ்வு பற்றி . பெரும் துன்பம் அனுபவிப்பார்கள் ஆனால் அது எல்லாம் அவர்களது பொழுது போக்காகவே இருக்கும் என்று .
இறைவன் படைப்பில் சிறு துரும்பும் கூட பயனற்றதாக இருப்பது இல்லை..!!!
~மகேந்திரன்
Tweet | ||||

No comments:
Post a Comment