Sunday, October 18, 2015

மரணவாசல்


வாழ்வெனும் புத்தகத்தில் 
கடைசி பக்கத்தில் கொட்டை எழுத்தில் 
மிகப்பெரியதாக முற்றுப்புள்ளி  
வைத்து அதற்கு  
" மரணம் " 
என்று அர்த்தம் கொடுத்திருக்கிறது.

ஏனோ அத்தருணம் வரும் வரை 
பலருக்கு அது தெரிவதில்லை 

சிலர் படிக்கும் பொழுதே  
அர்த்தங்கள் புரியாமல் 
கடைசிப் பக்கம் புரட்டி  
முற்றுப்புள்ளியை 
தொட்டு விடுகிறார்கள்.

சிலருக்கு புத்தகம் 
80 பக்கம் கொண்ட சிறு புத்தகம் போல 
இருக்கிறது .

சிலருக்கு 
வெற்றுத்தாளில் முற்றுப்புள்ளி மட்டும் 
இருக்கிறது.

சிலருக்கு பள்ளி குழந்தைகள் சுமக்கும் 
பொதி மூட்டை போல 
புத்தகம் இருக்கிறது.

சிலருக்கு யாரோ படிக்கும் புத்தகம் 
கை மாறி யாரோ படித்துக் கொண்டு 
இருக்கிறார்கள் .

சரி அதென்ன முற்றுப்புள்ளி?

முற்றுப் புள்ளி என்பதுதான் 
மரணம் என்று சொன்னேனே.

அது கண்ணில் 
படும் பொழுது உணர்த்தப்படுகிறோம் 
புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த வரிகளை  
எழுத்துப் பிழையாய் படித்த 
தவறுகளை.

வாழ்க்கை பக்கங்களை 
பிழை இல்லாமல் படித்தவர் 
என்றும் முற்றுப்புள்ளி 
அடித்து திருத்தப்பட்டது என்றும் 
யாருக்கும் இல்லை 

வாழ்க்கை பக்கங்களை 
கிழித்து விட்டான் என்று 
எவனுக்கும் 
உடனடியாக முற்றுப்புள்ளியை 
கொடுத்ததும்  இல்லை .

புரியவில்லையா..?

வாழ்க்கையை வென்றவன் என்று சொன்னவரையும்  மரணம் விட்டு வைத்தது இல்லை 

பிறர் வாழ்கையை கொன்றவரையும்  மரணம் விட்டு வைத்தது இல்லை .

நல்லவன் கெட்டவன் 
என எவனையும் 
மன்னித்து விட்டு வைப்பது  இல்லை 
மரணம்.

என்ன ..?
நல்லது செய்தும் பயன் இல்லை 
என்றால் 
மரணம் என்பது என்னவாக இருக்கும்?

ஞானிகளும் மேதைகளும் 
மரணத்தை பற்றி விளக்கினாலும் 
" மரணத்திற்கு  பின்? " 
என்ற கேள்வி கேட்டுக் கொண்டே  
தான் இருக்கிறது மனம் .

மரணம் எவனையும் விட்டு வைக்காது என்றால் 
வாழ்க்கை படித்ததற்கு என்னதான் அர்த்தம் இருக்கும்?

படித்தவனும் தேறவில்லை 
படிக்காதவனும் தேறவில்லை 
தேர்வு மட்டும் உறுதி அதில் தோல்வி மட்டும் முடிவாக..
என்ன இது தேர்ச்சி இல்லாத 
பரீட்சை எழுதியே ஆகவேண்டுமா ?

இல்லை... 
இந்த தேர்வில் 
தேரியவரையும் மரணம் அழைத்து செல்கிறது 
தேராதவரையும் மரணம் அழைத்து செல்கிறது 

அப்படி எங்கே அழைத்து செல்கிறது 
சென்றவனை பார்த்தால் கேட்டுவிடலாம்..
எங்கிருந்து வந்தோம் என்ற கேள்விக்கே இன்னும் பதில் 
தெரியவில்லையே ...

ஒன்று மட்டும் புரிகிறது 
மரணம் என்பது 
ஒரு இடத்திற்கு செல்லும் வாசலாகத்தான் இருக்கும். 
அதற்காகத்தான் இந்த தேர்வு போல...

அந்த வாசலை அனைவரும் கடந்துதான் 
போகவேண்டும் என்பது கட்டளையாக இருக்கிறது... 

இன்னொன்று விளங்குகிறது  

வாழும் நாளில் அர்த்தங்களோடு 
வாழ்ந்தவனுக்கு 
மரணவாசல் தலை வணங்கி வரவேற்று அழைத்து செல்கிறது  .

அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்ந்தவருக்கு 
மரணம் ஒரு தலை குனிவாக இருக்கிறது.

~மகி