Monday, September 07, 2015

மின்சாரம், எரிவாயு , குடிநீர் என தனக்குதானே திட்டமிட்டு 'தன்னிறைவு பெற்ற மனிதர்' ஸ்ரீதர்

ஒரே முறை முதலீடு ..! ஆண்டு முழுதும் பெருகும் லாபம் ..!

மின்சாரம், எரிவாயு , குடிநீர் என தனக்குதானே திட்டமிட்டு
'தன்னிறைவு பெற்ற மனிதர்' ஸ்ரீதர் .
``````````````````````````````````````````````````````````````````````````````````````

 

தற்போது இருக்கும் சூழ்நிலையில் ஒரு சராசரியான குடும்பத்தில் தண்ணீர், மின்சாரம், எரிபொருள் போன்றவற்றின் சிக்கனம் மற்றும் சேமிப்பு என்பது தவிர்க்க முடியாத நிலையில் இருந்து வருகிறது. எரிபொருள் மின்சாரம் போன்றவற்றை சிக்கனமாக பயன்படுத்துமாறு எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அது முழுமையாக மக்களிடையே சென்றடைவது இல்லை. அது மட்டும் இல்லாமல் அத்தியாவசிய தேவையாக இருப்பதால் இவற்றின் பயன்பாட்டைக் குறைப்பதற்கான வாய்ப்புகளே இல்லாமலும் இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் அவ்வப்போது அவற்றின் விலை ஏற்றத்தின் காரணமாகவும் நாம் தவித்து வருகிறோம் .

இத்தகைய சூழ்நிலையில் அனைவருக்கு வரம் போல ஒரு திட்டத்தை செயல்படுத்தி அதில் வெற்றியும் கண்டு வருகிறார் கோவையை சேர்ந்த திரு.ஸ்ரீதர்.

வீட்டு உணவு பொருட்களின் கழிவுகளை மட்டுமே கொண்டு எரிபொருட்களை தயாரித்து பயன்படுத்தி வருகிறார். சூரிய சத்தியை பயன்படுத்தி வீட்டிற்கு தேவையான மின்சாரத்தை பெற்றுக் கொள்கிறார். மழை நீரை முறையாக சேமித்து பல மாதங்களுக்கு குடிநீராகவும் பயன் படுத்திக் கொள்கிறார் . மாதம் முழுவதுமாக இதற்காக ஆகும் செலவு வெறும் 200 ரூபாய் மட்டுமே என்கிறார் இந்த இந்திய குடிமகன்.

பொருளாதார சிக்கனம் மற்றும் நாட்டின் மேம்பாட்டில் அக்கறையோடு எரிபொருள் , மின்சாரம் போன்றவற்றை இவர் வீட்டில் இருந்தபடியே வீட்டிலேயே உற்பத்தி செய்து அதன் மூலம் பெரும் பயன் பெற்று வரும் ஸ்ரீதர் . அது மட்டும் அல்லாமல் அவற்றை பற்றிய விழிப்புணர்வை கல்லூரி மாணவர்கள் உட்பட அனைவருக்கும்  கொடுத்துவருகிறார். இதை அறிந்து நேரடியாக நாமும் அவர் வீட்டிற்கு சென்று அவரிடம் விளக்கம் கேட்டபோது அவர் எம்மிடம் கூறியது அப்படியே உங்கள் பார்வைக்கு ...



1. வணக்கம் சார் சூரிய சக்தியால் மின்சாரம் உற்பத்தி செய்து பயன் படுத்த வேண்டும் என்று எப்படி உங்களுக்கு தோன்றியது , அதை பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க சார் ?

கடந்த ஆறேழு வருடத்திற்கு முன்பு தமிழ் நாட்டில் மின்சார பற்றாக்குறை ஏற்பட்டு அனைவரும் அவதிப்பட்டு வந்தது யாராலும் மறக்க முடியாது.  UPS பொருத்திப் பார்த்தோம் ஆனாலும் அதில் சேமிப்பதற்கும் கூட போதிய மின்சாரம் கிடைக்காமல் தட்டுப்பாடாக இருந்தது. அது மட்டும் இல்லாமல் அவ்வப்பொழுது மின்சார கட்டணம் உயர்ந்து வருவதும் பெரும் மன உளைச்சலாக இருந்து வந்தது. இந்த நிலையில் தான் நண்பர்களின் ஆலோசனை படி சோலார் சிஸ்டம் மூலம் வீட்டிலேயே மின்சாரம் தயாரித்துக் கொள்ளலாம் என்பது பற்றி தெரியவந்தது . முதலீடு அதிகமாக இருந்தாலும் இப்பொழுது அதன் பயன் உணர முடிகிறது. இப்பொழுது அதன் முதலீடு மிகவும் குறைந்து விட்டது . எந்த நேரமும் மின்சாரம் வீட்டில் உபயோகிக்க முடிகிறது , அது மட்டும் இல்லாமல் இப்பொழுது வீட்டின் தேவைக்கு போக மீதமுள்ள மின்சாரத்தை மின்வாரியத்திற்கு கொடுத்து அதன் மூலம் ஒரு தொகையும் பெற்றுக் கொள்கிறோம்.



2. சூப்பர் சார் , மழை நீரை எப்படி சேகரிக்கிறீங்க ? பின் அதை எப்படி பயன் பயன்படுத்தறீங்க அதை பற்றி சொல்லுங்களேன் ?

'நீரின்றி அமையாது உலகு' என்ற கூற்று முற்றிலும் உண்மையானது. மழையின் அளவு மிகவும் குறைந்து கொண்டு வருவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தானேங்க , குடி நீர் தட்டுப்பாடு என்பது நான் சொல்லியா தெரிய வேண்டும் . எங்க வீட்டு தரை மட்டத்தில் 15000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டியும், வீட்டின் மாடியில் அதே அளவு கொள்ளளவு கொண்ட மேல் நிலை தொட்டியும் வைத்து இருக்கின்றோம்,

மழை வரும் பொழுது ஒரு துளியும் வெளியேறி விடாமல், அப்படியே ஒரு இடத்திற்கு குழாய் மூலம் கொண்டுவந்து கூழாங்கற்கள், செங்கற்கள், கருங்கற்கள் (ஜல்லிக்கற்கள்), மரக் கரித்துண்டுகள், பாக்குஜல்லி, ஆற்று மணல், கல் உப்பு போன்றவற்றை கொண்டிருக்கும்  ஒரு தொட்டியில் அந்த நீரை செலுத்தி மெல்லிய துணி கொண்டு வடிகட்டி  கீழ் தொட்டியிலும் , மேல் தொட்டியிலும்  சேமித்து வைத்துகொள்கிறேன். பின்பு அதை குளிப்பதற்கும் , துணி துவைப்பதர்க்கும்  பயன்படுத்திக் கொள்கிறேன் . அது மட்டும் அல்ல   அதையே குடிப்பதற்கும் கூட பயன் படுத்திக் கொள்கிறேன்.

என்ன சார் யோசிக்கிறிங்க குழப்பமா இருக்கா . கண்தெரியாத தொலைவில் காட்டுக்குள் இருக்கும் நீர் அணையில் எவ்வளவோ மிருகங்கள் இறந்து விழுந்து அழுகிப்போய் கிடக்கிறது , துருப்பிடித்த குழாயில் தான் அந்த நீரும் வருகிறது. அதை கழுவவே முடியாத ராட்சச தொட்டியில் நிரப்பி அதைதான் நம் வீட்டிற்கு குடி நீர் பயன்பாட்டுக்காக வருகிறது . இப்போ சொல்லுங்க நாம் மழை நீரை சேமிப்பது எந்தவிதத்தில் குறை சொல்ல முடியும். நாங்கள் இப்பொழுது குடிக்கும் நீர் கூட கடந்த மூன்று மாதத்திற்கு முன் வந்த மழை நீர்தான். ஒரு விஷயம் சொல்லறேங்க நம் வீட்டிற்கு வரும் குடிநீர் நாம் பயன்படுத்தாமல் இருந்தாலும் ஒரு நாளைக்கு 3.50 ரூபாய் கட்டிக் கொண்டுதான் இருக்கின்றோம் , அதுபோக நாம் குடிப்பதற்கு உண்டான கட்டணம் தனி , இது எத்தனை பேருக்கு தெரியும் . ஆனால் நான் என் எல்லா தேவைக்கும் மழை  நீரை பயன் படுத்திக் கொண்டு  , அந்த மினிமம் கட்டணம் மட்டும் தான் கட்டிக் கொண்டு இருக்கின்றேன்.

நீங்க ஒன்னு கூட நினைக்கலாம் இந்த நீரை குடிப்பதற்காக பயன் படுத்துவதால் உடல்நல கேடு இருக்குமோ என்று. எங்கள் வீட்டில் நாங்கள் மூன்று பேர் சளி தொந்தரவு என்பது கூட இது நாள் வரை வந்தது இல்லை.



3. அருமை சார் நீங்க பயன்படுத்தும் எரிவாயு பற்றி சொல்லுங்க ?

வீட்டில் வீணாகும் உணவு கழிவுப் பொருட்களை பயன்படுத்தி மிகக் குறைந்த செலவில் எரிவாயு தயாரித்து பயன்படுத்த முடியும்ங்க நூடுல்ஸ், உருளை கிழங்கு , வெங்காயத் தோள் பழைய சாதம் மற்றும் கெட்டுப்போன பேக்கரி உணவு பொருட்கள் இது போதும் நம் வீட்டிற்கு தேவையான எரிவாயு எளிதில் தயாரித்துக் கொள்ளலாம் , இந்த மூலபொருட்கள் எல்லாம் விலையில்லா பொருட்கள்தானே எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும் என் வீட்டில் இப்போதைக்கு எட்டு வருடத்திற்கு தேவையான எரிவாயுவிற்கு தேவையான  மூலப்பொருட்கள் சேமித்து வைத்து இருக்கிறேன். இதனால் சுற்றுப்புற சூழல் எந்தவிதத்திலும் பாதிப்பதும் இல்லை ; எரிவாயு தட்டுப்பாடு என்பதே இல்லை. அதுபோக கல்லூரி மாணவர்கள் வேதியியல் துறைக்கு தேவையான எரிவாயும் இலவசமாக என்னிடம் இருந்து பெற்றுக் கொள்கிறார்கள்.

4. வாழ்த்துக்கள் சார் , உங்களது இந்த அரிய முயற்சியின் மூலமும் இதன் வெற்றியின் மூலமும் நீங்கள் பொதுமக்களுக்கும் அரசாங்கத்திற்கும் என்ன விழிப்புணர்வு அளிக்க விரும்புகிறீர்கள்?

இப்போது நான் செய்து வருவதை முழுமையாக அரசாங்கமும் செய்து வருமானால் தொடர்ந்து நீர்வளம், எரிபொருள் மற்றும் மின்சாரம் போன்றவற்றில் நம் நாடு தன்னிறைவு அடைவதோடு பிற நாடுகளுக்கும் கொடுக்க முடியும் . . எரிபொருட்கள் மற்றும் மின்சாரத்தை சிக்கனம் செய்ய எவ்வளவுதான் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் மிக அதிகமான தேவைகளின் காரணமாக சிக்கனம் என்பது சாத்தியமில்லாத ஒரு சூழ்நிலையில் குறைந்த செலவில் இவற்றை உற்பத்தி செய்வது தான் புத்திசாலித்தனமும் கூட , எரிபொருட்களுக்கு அரசாங்கம் மானியம் வழங்கி வருகிறது. இது போன்ற இயற்கை முறைகளை கையாளும்போது மானியத் தொகை செலவிலேயே நமது மொத்த தேவைகளையும் அதற்கு மேலும் அடைந்து விட முடியும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார் தன்னிறைவு மனிதர் திரு.ஸ்ரீதர்.

~மகேந்திரன்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

priya rajkumar said...

can I have his address please......

Post a Comment