Friday, January 23, 2015

குறள் காக்கும் காவலர் மு.தங்கவேலனார்

" குறள் காக்கும் காவலர் "
`````````````````````````````````

"டீக்கடை மு.தங்கவேலனார்"

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர் ,பொங்கல் திருநாளுக்கு மறுநாள் 16  ஆம் தேதி அன்று பொங்கல் விடுமுறை வாரம். ஊருக்குள் ஒரு டீக் கடைக் கூட இல்லை எல்லாம் விடுமுறைக் கொண்டாட்டம் காரணமாக பூட்டப்பட்டு இருந்தது.
பேராவூரணி நீலகண்ட விநாயகர் கோவில் அருகே ஒரு டீக்கடை மட்டும் திறந்திருக்க அந்த கடையில் அதிகாலை முதலே கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது.

அந்த ஒருக் கடை மட்டும் திறந்திருக்கிறது அப்படியானால் எல்லோரைப் போலவும் வியாபார நுணுக்கம் என்று சொல்லிக்கொண்டு மற்றக் கடையைக் காட்டிலும் விலை கூடுதலாக இருக்கும் என்ற எண்ணத்திலேயே கடைக்குள் நுழைந்தால் அங்கே 68 வயது மதிக்கத்தக்க ஒருவர் மிக உற்சாகத்துடன் தமிழ் பாடல்கள் பாடிக்கொண்டும் டீ போட்டு  வருபவர்கள் அனைவருக்கும் அதைக் கொடுத்துக் கொண்டு இருந்தார் . அதிக லாபம் மனிதனுக்கு அதிக உற்சாகம் என்று நினைத்துக்கொண்டு இருந்தால் டீக்கு விலை வெறும் ஒரு ரூபாய் மட்டும் போதுங்க என்று சொல்லி காசை வாங்கிக் கல்லா பெட்டிக்குள் போட்டு அடுத்து எத்தனை டீ ... என்கிறார்...!



டீ போட்டு கொடுத்துக் கொண்டிருக்கும் அவரிடம்
: வணக்கம் ஐயா

அவர் : " வணக்கம் . எத்தனை டீ வேணும் ? "

: " டீ வேணாம் உங்கள் பெயர் சொல்லுங்களேன் ?!"

அவர் : " என் பெயர் மு.தங்கவேலனார் வயது 68 என்ன விஷயம் ? "

: " இல்லைங்க ஊர்ல ஒரு டீக் கடை கூட இல்லை நீங்க மட்டும் தான் திறந்து வியாபாரம் செய்யுறீங்க அதுமட்டும் இல்லாமல் டீக்கு விலை அதிகம் இருக்கும் என நினைத்தால் டீயின் விலை இன்று மட்டும் ஒரு ரூபாய் ன்னு சொல்லுறிங்களே ஏன் அப்படி ? "

அவர் : " இன்று என்ன தினம் என்றார் ? "

: " நேற்று பொங்கல் அப்படி என்றால் இன்று மாட்டுப் பொங்கல் அதற்கும் இதற்கும் என்ன சம்மந்தம் ?"

அவர் : (கோபத்துடன் ஒரு பார்வைப் பார்த்துவிட்டு) " இன்று திருவள்ளுவர் பிறந்த தினம் என்றார் ."

: " அட ஆமாம் ஆமாம் சொல்லுங்க ஐயா ."

அவர் : " திருக்குறள் சிந்தனையாளர்கள் எல்லாம் ஒன்றிணைந்து திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி போராடி வருகிறோம். திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடும் வகையிலும், மொழி, மத வேறுபாடுகளை கடந்து அனைவரும் ஒன்றிணைந்து திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க போராட வேண்டும்,



எத்தனையோ பேர்களுக்கு பிறந்த நாட்களை சிறப்பாக கொண்டாடுகிறோம். ஆனால் திருவள்ளுவரின் பிறந்த தினம் இன்று என்பதுக் கூட பலருக்கு தெரியாமல் இருக்கிறது."

இந்த வரியைக் கேட்டதும் வெட்கத்தில் என் தலை குனிந்தது.

அவர் : "திருக்குறளைப் பற்றிய விழிப்புணர்வும் பலருக்கு இல்லை.  திருவள்ளுவரின் பிறந்த தினத்தை யாரும் கொண்டாடுவதும் இல்லை. திருவள்ளுவர் தினம் என்பது அவரது பிறந்த நாள். அதை அனைவரும் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக இன்று ஒரு ரூபாய்க்கு டீ விற்பனை செய்து கொண்டுள்ளேன் இன்று மட்டும் சுமார் 5000 பேர் டீ குடிக்க வருவார்கள் அதில் அரு சிலர் மட்டும் தான் ஒரு ரூபாய்க்கான காரணம் கேட்பார்கள் அவர்களிடம் விளக்கி சொல்வேன் ."



என்று கூற நாமும் திருக்குறளுக்காக போராடவேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது.

சரி மு.தங்கவேலனார் ஐயா திருக்குறளைப் பற்றி இவ்வளவு கூறுகிறார் . இவரை பற்றி மேலும் தெரிந்துக் கொண்ட விசயங்களை படியுங்கள் . இவரது குடும்பத்தில் மூன்று தலை முறையாக பள்ளிக்கூடம் சென்றவர்கள் என்று யாரும் இல்லையாம் ஆனாலும் அனைவருமே தமிழ் புலமை வாய்ந்தவர்களாக திகழ்ந்துள்ளனர்.



குலக் கல்வி முறை பயின்றதால் இவர் பள்ளி சென்று படித்தது இல்லை. அனுபவ அறிவின் மூலம் பலநூல்களை கற்றறிந்து சிறந்த பாவலராக விளங்குகிறார். குறிப்பாக திருக்குறளை பரப்புவதிலும் திருக்குறள் நெறிப்படி வாழ வேண்டும் என வலியுறுத்தி அதன்படி வாழ்ந்தும் வருகிறார். இதனாலேயே இவர் திருக்குறள் பரப்புரை செம்மல் என்றும், திருக்குறள் பாவலர் என்றும் அழைக்கப்படுகிறார்.




சாதாரண டீக் கடை தானே வைத்திருக்கிறார் என்று என்ன வேண்டாம். அந்த டீக்கடைக்குள் ஒரு நூலகமே வைத்திருக்கிறார் . அதில் இலட்சம் ரூபாய் மதிப்பிற்கும் அதிகமான தமிழ் புத்தகங்கள் வைத்திருக்கிறார். தினசரி காலை ஒருமணிநேரம் இலவசமாக திருக்குறள் வகுப்பு நடத்துகிறார். அவரிடம் பேராசிரியர்களிலிருந்து பள்ளி மாணவர்கள் வரை திருக்குறளின் விளக்கங்களை கற்றுக் வருகிறார்களாம்.
ஆயிரமாயிரம் நூற்றாண்டு கடந்த பழமைவாய்ந்த நம் தமிழை வளர்க்க எப்படியெல்லாம் அவதாரம் எடுக்கின்றார்கள். ஆனால் இன்று பலர் தமிழை கொச்சைப் படுத்துவதில் அலாதி பிரியம் காட்டிவருவதை நினைக்கும் பொழுது மனம் கனக்கிறது.
இவரைப் போன்றவர்கள் இருக்கும் வரை தமிழ் சாகாது...!
வாழ்க நிரந்தரம் ! வாழ்க தமிழ் மொழி !

~மகேந்திரன் 

Thursday, January 15, 2015

முக்கனி சங்கமம் சுகுணா புரம் மத ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டு

தமிழ்நாட்டில் பாசத்திற்கும் ஒற்றுமைக்கும் கோயமுத்தூரை ஒரு முன்னுதாரணமாக சொல்லலாம். அந்த சிறப்பும் குனியமுத்தூர் பகுதியில் இருக்கும் சுகுணா புரம் பகுதி மக்களாலேயே வந்தது என்பதை சொன்னால் அது மிகையாகாது. கோவைக்கு இப்படி ஒரு தனி சிறப்பை தேடிக் கொடுத்த அந்த சுகுணா புரம் மக்களிடையே அப்படி என்ன ஒரு தனித்துவம்.




இதோ சுகுணா புரத்தின் வரலாறு...


நாற்பது வருடத்திற்கு முன்பாக இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என மும்மதத்தவர்களும் சேர்ந்து சுமார் 1000 குடும்பங்கள் வசிக்கும் சுகுணா புரத்தில் குடிநீர் வசதி, கால்வாய் வசதி, மின்சாரவசதி போன்ற மிக அத்தியாவசியமான தேவைகள் முற்றிலும் இல்லாத ஒரு கிராமமாகவே இருந்தது. குடிக்கும் தண்ணீர் வேண்டுமானால் 10 கிலோமீட்டர் வரை கரடு முரடான சாலையில் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் அவலநிலை இருந்து வந்தது. கோவில்கள், பள்ளி என எதுவும் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் சுகுணா புரம் மக்கள் தம்முடைய அத்தியாவசிய தேவைக்காக அரசாங்கத்திடம் பல மனுக்கள் கொடுத்தனர் ஆனால் எந்த பயனும் கிடைக்கவில்லை .


இந்த சூழலில்தான் மும்மதத்தவர்களும் ஒன்று கூடி முக்கனி வாலிபர் முன்னேற்ற சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி பல போராட்டங்களுக்கு இடையில் சட்டப்பூர்வமாக அத்தனை வசதிகளையும் பெற்றுக் கொண்டார்கள். இந்தச் சூழலில் தான் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என இவர்களுக்கிடையில் சகோதரத்துவம் அமைந்தது. மதங்களாலும், இனத்தாலும் அப்பகுதி மக்கள் வேறுபட்டிருந்தாலும், குணத்தாலும் அன்பின் ஒற்றுமையாலும் ஒன்றுபட்டு வாழ்ந்து வருகின்றனர்.








சுகுணா புரத்தில் மூன்று மதத்தினரும் ஒன்று கூடியே கோவில், மசூதி, திருச்சபைகள் கட்டியுள்ளனர். மூன்று சமயத்தினரின் கல்லறைகளும் ஒன்று சேர்ந்து இங்கு இருப்பது எந்த ஊர் மக்களிடையேயும் இல்லாத மிக உயர்ந்த ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது.


அது மட்டுமா ? எந்த ஒரு பண்டிகையானாலும் ஜாதி மத பேதம் இல்லாமல் மும்மதத்தவரும் ஒன்று கூடியே தான் கொண்டாடுவார்கள். அதுமட்டும் இல்லை, ஒரு மதத்தவரின் வீட்டு குடும்ப நிகழ்ச்சி என்றாலும் அதில் மற்ற மதத்தவரின் பங்கு கண்டிப்பாக இருந்து வருகிறது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் இஸ்லாமியர் யாரேனும் காலமானால் சடலத்தை நல்லடக்கம் செய்வதில் இந்து சமயத்தினரின் பங்கும் இருக்கும். இந்து சமயத்தினரின் வீட்டு திருமணம் என்றால் மற்ற மதத்தினரின் பங்கும் கலந்திருக்கும் .


ரமலான் நோன்பு இருக்கும் 30 தினங்களும் மற்ற மதத்தினர் அதிகாலை 3 மணிக்கு எழுந்து வீதி வீதியாக பாட்டுப்பாடி நோன்பிருக்கும் இஸ்லாமியர்களை எழுப்பிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். கோவை சுகுணா புரத்து மக்களின் மனித நேயத்தையும் மனித ஒற்றுமையையும் அதிக அளவில் நாம் அறிந்திராதது நமது அறியாமையையே வெளிப்படுத்துகிறது .






1998 இல் கோவையில் நடந்த மிகப்பெரிய மதக்கலவரத்தில் இப்பகுதி மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க வந்த கலவரக்காரர்களை இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் என மூன்று மதத்தினரும் ஒன்று கூடி விரட்டி அடித்த மக்கள் இவர்கள். அப்படியிருக்க இன்றும் மதம் ஜாதி என உயிரை விடும் மக்களை நாம் மூடர்கள் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது...?


சுகுணா புரத்தில் இன்று பொங்கல் திருநாளில் மூன்று மதத்தினரும் ஒன்று கூடி பொங்கல் வைத்து கொண்டாடியது மதநல்லிணக்கத்தை உலகிற்கு பறைசாற்றும் வகையில் இருந்தது.




மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் இந்த பொங்கல் திருநாளைக் கொண்டாடும் அப்பகுதி மக்கள் கூறும் பொழுது "கடந்த நாற்பது வருடத்திற்கு முன்பு எங்கள் பகுதியில் இருந்த இளைஞர்கள் கூடி உருவாக்கிய முக்கனி முன்னேற்ற சங்கமே இன்றுவரை மதங்களை கடந்து ஒற்றுமையுடன் வாழ வழிக்காட்டி உள்ளது. சமூகத்தின் மீது உள்ள அக்கறையினாலும், கறைகளை துடைப்பதற்காகவும் நாங்கள் எடுத்துக்கொண்ட தற்காலிக தீர்வு அல்ல. இது முழுக்க முழுக்க மனமாற்றம் ஒன்றே. மதத்தாலும் ஜாதிகளாலும் பிரிந்து இருக்கும் சமூகத்தை மாற்ற வேண்டும் ; ஜாதி மதம் என்பது தனிமனித ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டி உருவாக்கப்பட்டதே தவிர மனிதர்களிடையே பிரிவினையை உண்டாக்குவதற்காக அல்ல என்பதை நாங்கள் நன்கு உணர்ந்து இங்கு வாழ்கிறோம்", என்று அப்பகுதி மக்கள் கூறும் பொழுது நமது உடலில் புது ரத்தம் ஊறிய உணர்வு ஏற்பட்டது .


~மகேந்திரன்.

Thursday, January 01, 2015

ஆதரவற்றவர்களுக்கு சுகிசிவம் உதவி ஈரநெஞ்சம்





கோவைக்கு மற்றுமொரு சிறப்பு RS புரம் பகுதியில் அமைந்திருக்கும் மாநகராட்சி ஆதரவற்றோர் காப்பகம். சுமார் 100 பேர் இருக்கும் இந்த காப்பகத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும் தங்கள் குடும்பத்தாரால் ஒதுக்கப்பட்ட நிலையில் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதை இந்த காப்பகத்தில் காணலாம். அதுமட்டும் இல்லாமல் சாலையோரம் பிச்சை எடுக்கக்கூட முடியாத நிலையில் இருப்பவர்களுக்கும் வயதான நிலையில் ஞாபக மறதியால் தன்னிலை அறியாது இருப்பவர்களுக்கு உறவுகள் கிடைக்கும் வரை உணவு, உடை, பாதுகாப்பு அனைத்தும் கொடுக்கும் இடம் இந்த மாநகராட்சி பாதுகாப்பு மையமே.


 



இந்த காப்பகம் மாநகராட்சி உதவியால் மட்டும் இல்லாமல் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடனும் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் கடந்த 14/12/2014 அன்று ஈரநெஞ்சம் அறக்கட்டளையின் சேவைகளை பார்வையிட நேரில் வந்த ஆன்மீக சொற்பொழிவாளர் கலைமாமணி திரு.சுகிசிவம்அவர்கள் காப்பகத்தில் இருப்பவர்களுக்காக தாமும் ஏதாவது பயனுள்ள உதவி செய்வதாக உறுதி அளித்து அதன்படி திருப்பூரில் இருக்கும் அவரது நண்பர்கள் திரு. கிரிபிரபு, திரு. நந்தகோபால் அவர்களுடன் இணைந்து காப்பகத்தில் வாழும் ஆதரவற்றவர்களுக்காக தண்ணீரை கொதிக்கவைத்து சுத்தம் செய்யும் அதி நவீன குடிநீர் சுத்திகரிப்பு உபகரணம் [ Water Purifier ] தானமாக வழங்கி உள்ளார்கள்.

இந்த உபகரணத்தினால் காப்பகத்தில் வாழும் ஆதரவற்றவர்களுக்கு இதுநாள் வரையில் தூய்மையான குடிநீர் கிடைக்காமல் இருந்த நிலை மாற்றப்பட்டு கொதிக்கவைத்த சுத்தமான குடிநீர் கிடைக்கிறது .

 


கொடை வழங்க இன்று (26.12.2014) நேரில் வந்த திரு. சுகிசிவம்அவர்களது நண்பர்களான திரு. கிரிபிரபு அவர்களும் திரு. நந்தகோபால் அவர்களும் " ஆதரவற்றவர்களுக்கு உதவுவது என்பது, அந்த ஆண்டவனுக்குத் தொண்டு செய்வதைக் காட்டிலும் உயர்வானதொரு தொழுகை. அது அவ்வளவு எளிதில் யாருக்கும் வாய்த்திடாது அந்த வாய்ப்பினை எங்களுக்கு அளித்த கோவை ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்கும், மாநகராட்சி ஆதரவற்ற காப்பகத்திற்கும் முதற்கண் அங்கு வாழும் ஆதரவற்றவர்களுக்கும் மனதார நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் " என்றார்கள்.

என்ன தான் அவர்கள் நன்றி தெரிவித்தாலும், இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் சில முக்கியமான உதவிகள் கனவாக இருப்பதை நனவாக்குவது என்பதும் கனவாகவே இருக்கிறது.. இந்நிலையில் அதிக பொருள் செலவில் நவீன உபகரணம் வழங்கிய ஆன்மீக சொற்பொழிவாளர் கலைமாமணி திரு.சுகிசிவம் மற்றும் அவரது நண்பர்கள் திரு. கிரிபிரபு, திரு.நந்தகோபால் இவர்களுக்கும் நன்றிகளையும் வணக்கங்களையும் உங்கள் சார்பாக தெரிவிப்பது இறையாண்மை என்று ஈரநெஞ்சம் அமைப்பு மனதார நன்றியை தெரிவிக்கிறது.


  


~ ஈரநெஞ்சம்