Tuesday, April 29, 2014

" விஷம் குடித்து உயிருக்கு போராடிய தாயை காப்பாற்றிய குழந்தை தெய்வங்கள் "


  தாயை காத்த தனயன்கள் 
***********************

" விஷம் குடித்து உயிருக்கு போராடிய தாயை காப்பாற்றிய குழந்தை தெய்வங்கள் "





கோவை 29/04/2014 :
உஷா, வயது 31 கடந்த 2000ஆம் ஆண்டில் நடராஜ் என்பவரை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். கோவை கருமத்தப்பட்டி பகுதியில் வசித்து வருகிறார்கள். எத்தனையோ பிரச்சினைகளைக் கடந்து சமாளித்துக் காதலில் வெற்றி பெற்று இணைந்த இருவரும் வாழ்க்கையைத் தொடங்கிய பின் காதலை தொலைத்து விட்டார்கள். இவர்களுக்கு வாழ்க்கையில் கிடைத்த இரண்டே செல்வங்கள் சதீஷும் பிரகாஷும் தான். சதீஷ் ஏழாம் வகுப்பும் பிரகாஷ் ஆறாம் வகுப்பும் படிக்கிறார்கள்.

நல்ல நண்பர்கள் நம் வாழ்வில் கிடைப்பது என்பது நமக்குக் கிடைக்கும் பெரும் வரமாகும். நம் வாழ்வில் வெற்றியும் தோல்வியும் நம் உடன் இருக்கும் நண்பர்களாலும் விளையும். உஷாவின் கணவர் நடராஜுக்கு கிடைத்த நண்பர்களோ அவரை வெற்றியின் பாதைக்குச் செல்ல உதவவில்லை. மாறாகக் குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆக்கிவிட்டார்கள். மனிதர்களை மிருகம் ஆக்கும் கருவிகளில் இந்தக் குடிப்பழக்கம் முக்கிய இடம் வகிக்கும். அந்தக் குடிப்பழக்கம் நடராஜுக்கு காதல் மனைவியின் மீதி வெறுப்பை வர வைத்தது. தினமும் பிரச்சினை, அடி உதை என்று அன்றாடம் வாழ்வு நரகமானது.

எல்லோரையும் எதிர்த்து எல்லோரையும் இழந்து வாழ்வில் இணைந்த அவர்கள், குடி என்ற எதிரியால் வாழ்க்கையைத் தொலைத்தார்கள். வாழ்வையும் நாசம் ஆக்கி பொருளையும் தொலைத்து வேதனையைத் தந்த அந்தக் குடி பழக்கத்தை மட்டும் எந்தச் சூழ்நிலையிலும் நடராஜால் விட முடியவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் நன்றாகக் குடித்து விட்டு வந்து மனைவி உஷாவிடம் தகராறு செய்தார் நடராஜ். பிள்ளைகள் எவ்வளவோ தடுத்தும் கெஞ்சியும் உஷாவை அடித்து உதைத்துக் கொடுமை படுத்தினார். மேலும் ஆத்திரம் தீராமல் வீட்டில் உள்ள பொருட்களையும் தனது போனையும் போட்டு உடைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

உஷா தனது குழந்தைகளுடன் நடராஜை இரண்டு நாட்களாக எங்குத் தேடியும் பலனளிக்கவில்லை. நடராஜ் எங்கே சென்றார் என்று தெரியவில்லை. இந்நிலையில் வேதனை தாங்காமல் உஷா தன பிள்ளைகளைக் கூட மறந்து வருந்த தக்க ஒரு முடிவை எடுத்துவிட்டார். வாழ்வை தொலைத்து விட்டோமே என்று வருந்தி இன்று அதிகாலை சாணிப்பவுடரை (விஷம்) குடித்து விட்டார்.

காலையில் கண்விழித்த பிள்ளைகள் சதிஷும் பிரகாஷும் அம்மாவை எழுப்பினர். அவர் கண் விழிக்கவில்லை. பதறி துடித்த பிள்ளைகள் அக்கம் பக்கம் உள்ளோரை நாடினர். அம்மாவை காப்பாற்றுங்கள் என்று கதறி அழுதுள்ளனர் கொஞ்சமும் மனிதாபிமானமில்லாத மனிதர்களோ பிரச்சினை ஆகிவிடும் போலிஸ் கேஸ் ஆகிவிடும் என்றெல்லாம் கூறி உதவிக்கு முன் வர மறுத்து விட்டனர். துடித்துத் தவித்த பிள்ளைகள் யாரிடமோ போன் வாங்கி 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்தனர். உடனடியாகத் தங்கள் தாயை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்தனர். அங்குச் சிகிச்சை தொடர்ந்து தற்போது உஷா கண் விழித்து உள்ளார்.

வாழ்வை தொலைத்து உஷா வருந்தினாலும் அவரது பிள்ளை செல்வங்கள் அவருக்கு விழுதுகளாக இருந்து காத்து விட்டனர். இனியேனும் இது போன்ற தவறான முடிவை எடுக்கமாட்டேன் என்று குழந்தைகளை கட்டி அணைத்து அழுதது இதயமே கரைய வைத்தது .

இந்த சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு இருக்கும் அறிவு அந்த குடிகார தகப்பனுக்கு இல்லாமல் போய்விட்டதே.

இதுபோன்று எத்தனைகுடும்பங்களைக் காவுகொண்டுள்ளது இந்தக் குடிபழக்கம். எத்தனை பத்திரிக்கை செய்திகள் எத்தனை நேர்முக அனுபவம் என அன்றாடம் குடி பழக்கத்தினால் ஏற்படும் கொடுமைகளைக் கண்டாலும் இந்த அரசாங்கமோ அல்லது மனிதர்களோ அந்தக் குடியை ஒழித்துக் கட்ட முன்வருவதாக இல்லையே.

" மனிதகுலத்தின் அவமான சின்னமாக இருக்கும் இந்தக் குடி பழக்கத்திற்கு என்று முற்றுப்புள்ளி கிடைக்குமோ அன்றுதான் மனித உருவில் பிறந்த ஜந்துக்கள் மனிதனாக மாறுவான் "

~மகேந்திரன்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment