Saturday, July 20, 2013

உண்மை கதாநாயகர்கள்...



காசு கொடுத்து ஒட்டு வாங்கிய அரசியல் வாதிகளையும் , திரையில் நடிக்கும் நடிகர்களையும் மட்டுமே நாம் கதாநாயகர்களாக நினைத்து பழகி விட்டோம் .

சலுகைகளை கொடுப்பவர்களைதான் நாம் உயர்த்தி பழகி விட்டோம் , அதன் பின்னணி அறியாத பாமரர்களாகவே வாழ்ந்து வருகிறோம்.

உண்மையில் நமக்கு கதாநாயகர்கள் யார்?

தனது சொந்தங்களையும் , சந்தோசங்களையும், சொத்துக்களையும் , முகமறியாதவர்களுக்காக தியாகம் செய்பவர்களே தான் என எப்போது அறியப்போகிறோம்?

கடந்த மாதம் உத்ரகண்ட் மாநிலத்தில் ஏற்ப்பட்ட வெள்ளம் யாராலும் மறக்க முடியாத ஒரு பேரழிவு. இமயமலையே ஒரு பகுதி கரைந்து உருகியது, வானம் உடைந்து கடல் கொட்டியது, நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு திரும்பிப்பார்க்கும் இடமெல்லாம் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மலையில் ஒரு சுனாமி , மழையா அல்லது கொட்டும் கடலா..? தண்ணீர்... தண்ணீர் வீட்டை அடித்து செல்ல வில்லை , ஊரையே அடித்துக் கொண்டு போகிறது, ஆயிரத்திற்கும் மேலானோர் அதில் ஜலசமாதியானார்கள், அதில் தப்பித்தவர்கள் மலை முகடுகளிலும் மணல் திட்டுக்களிலும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு நின்றார்கள் , எத்தனை நாட்கள் அப்படி நிற்க முடியும்? பசியால் உயிர் போனவர்கள் ஏராளம் , இப்போதோ, எப்போதோ என உயிரை கையில் பிடித்தபடி தவித்த லட்சத்துக்கும் மேற்ப்பட்ட மக்களை பார்த்து இந்திய தேசமே பரிதவித்தது.

ஊரே உருக்குலைந்து கிடக்கிறது. ஊரெல்லாம் அழிந்து அடர்ந்த காடுபோல கிடக்கிறது. பார்த்தாலே குலை நடுங்கும் பகுதி ஆங்காங்கே பிணங்கள் குவியல் குவியலாக, போனவர்கள் மீண்டும் வரப்போகிறார்களா என்ன..? இருப்பவர்களையாவது காப்பாற்றுங்கள் என இந்திய தேச இதயங்கள் எல்லாம் குரல் கொடுக்க எந்த அரசியல்வாதிகளும் வந்ததாக தெரியவில்லை , திரைப்பட நடிகர்கள் வந்ததாக தெரியவில்லை. மீதமுள்ள மக்களை மீட்க ராணுவம் விரைந்தது. வைரம் பாய்ந்த உடலும்… தினவெடுத்த தோளும்… எதிரிகளை பந்தாடும் வீரமும் கொண்ட பாரததாயின் உண்மை கதாநாயகர்கள் அப்பகுதி மக்களை காப்பாற்றும் பணியில் துணிச்சலுடன் இறங்கினார்கள்.பத்து அல்ல இருபது என்ற எண்ணிக்கையில் காலத்திற்கு வந்த ஹெலிகாப்டர்களின் எண்ணிக்கை பேரழிவின் விபரீதத்தை உணர்ந்து 60-க்கும் மேல் ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டது..

ஹெலிக்காப்டரின் மூலமாக மழையில் பசியால் நடுங்கி கொண்டிருந்த மக்களுக்கு உணவு பொட்டலங்கள் கொடுக்கப்பட்டது , அடுத்ததாக, தவித்த மக்களை மீட்க ஹெலிகாப்டர்கள் மூலம் ராணுவ வீரர்கள் உயிரையும் அடமானம் வைத்து காட்டுப்பகுதியில் இறங்கி கயிறு வழியாக பலர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். இந்த வகையில் அனைவரையும் மீட்பது கடினமாக இருப்பதால் தற்காலிக பாதைகள், தற்காலிக பாலங்கள் அமைப்பு பணியில் மின்னல் வேகத்தில் அமைத்து மக்களை மீட்டார்கள், ஒரு சிலரா லட்சோப லட்சம் மக்கள்.. நம்மை காப்பாற்ற மாட்டார்களா என மரணகுரலில் கதறல் ,பயந்து நடுங்கியவர்கள், பெண்கள், வயதானவர்கள் குழந்தைகள் என இந்த கதாநாயகர்கள் தோளில் சுமந்தும், முதுகில் தாங்கியும் உயர்ந்த பாறைகளின் மீது தவித்தவர்களை கயிறுகள் மூலமும் மீட்டு வந்தனர். யாருக்காக இதெல்லாம் ?

ஒரு பகுதியில் ஹெலிக்காப்டராலும் செல்ல முடியாத நிலை, உடைந்து போன பாலம் ,அந்த பகுதியில் முன்னூறுக்கும் மேற்ப்பட்டவர்கள் பாலத்தை கடக்க வேண்டும், தற்காலிகமாக போட்ட பாலமும் உடைந்து போனது , இந்த கதாநாயகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா ?

இருபுறங்களிலும் கயிறுகளை கொண்டு கட்டி விட்டனர். பின்னர் அந்த கயிற்றின் மேல் ராணுவ வீரர்களும் பாலம் போல படுத்து கொண்டு தங்கள் மேல் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் முதியவர்கள் என அனைத்து மக்களையும் ஏறி மறுபுறம் வர செய்துள்ளார்கள் ,அனைவரின் உயிரையும் தங்கள் மேல் சுமந்து காப்பாற்றினர்.
 நமக்கெல்லாம் கதாநாயகர்களாக இருக்கும் , இந்த ராணுவ கடவுள்கள் காப்பாற்றிய மக்களுக்கு தாய்மார்களாக திகழ்ந்தார்கள் , ஆம் ஒரு தாய் தன் வயிற்றில் ஒரு உயிரைத்தான் சுமந்து வரமுடியும் , நமது ராணுவ வீரர்கள் தங்கள் மேல் பலநூறு உயிரை சுமந்து காப்பாற்றினார்கள், இந்த செயல் யாரால் முடியும்.?

ஒவ்வொருவருக்கும் நமக்கு எதற்கு? நான் நல்லா இருந்தால் போதும்... என நினைப்பவர்கள் ஏராளம் இதிலும் ஒரு வேதனை "சுயநல எமன்கள்" அடித்தது யோகம்! கிடைத்தது லாபம்! என எண்ணத்தில் ஒரு சப்பாத்தி ரூ.250-க்கு விற்று பணம் சம்பாதித்தவர்களும் அந்த பகுதியில் இருக்கிறார்கள். மரண போராட்டம் நடத்துபவர்களிடம் கத்தி முனையில் பணம், நகை பறிக்கும் இரக்கமற்ற கூட்டமும் அங்கு இருக்கிறார்கள்.

இவர்களுக்கு மத்தியில்தான் நம் உயிர் போனாலும் பரவாயில்லை என் நாட்டு மக்களை பத்திரமாக மீட்க வேண்டும் என்று ஒவ்வொரு ராணுவ வீரரும் பலரது உயிரை காப்பாற்றினார்கள் , அதில் பல ராணுவ வீரர்களும் உயிரை தியாகம் செய்தனர்.

நமகெல்லாம் ஊர் எல்லையில் சிலையாக இருக்கும் அய்யனாரும், மதுரை வீரனும் மட்டுமே கடவுளாக எண்ணுகிறோம் , வழிபடுகிறோம்.

தனது சொந்தங்கள், ஆசைகள், கடமைகள் எல்லாவற்றையும் விட்டு விட்டு நமக்காக நாட்டு எல்லையில் இருக்கும் இந்த இந்திய கடவுளை நாம் மனதார ஒருநாளாவது நினைத்து பார்த்திருப்போமா?

என்னை பொறுத்தவரை...

என் நாட்டை காப்பவர்கள் , என் மக்களை காப்பவர்கள் எவர்களோ அவர்களே

உண்மையான மனிதர்கள்...

கதாநாயகர்கள்...

காக்கும் தெய்வங்கள்...

ஆம் இவர்களே மனித தெய்வங்கள்.

"ஜெய் ஹிந்த்"

~மகேந்திரன்

 


மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

தலை வணங்கி வாழ்த்துகிறேன்...

Post a Comment