Sunday, March 12, 2023

அட்சய பாத்திரம் இல்லா அன்னபூரணிகள்



பசி என்பது எவ்வுயிர்க்கும் பொதுவான ஒரு உணர்வு தான். ஆனால் பணமில்லாத போது ஏற்படும் பசி அவமானமாகி விடுகிறது.  

எத்தனை கோடி பணமிருந்தாலும் அதைப் பசிக்கு  உண்ண முடியாது என்பதை அவ்வப்போது பேரிடர் காலங்களில் பெரும் பணக்காரர்களையும் பசிக்கு கையேந்த வைத்து அவர்கள் ஆணவத்தை தலையில் கொட்டி சுட்டிக்காட்ட தவறுவதில்லை இயற்கை.

உண்டியலில் காணிக்கை செலுத்துவதை விட பசியோடு இருப்பவருக்கு உணவு அளிப்பதே
கடவுளுக்கு மகிழ்ச்சியானது என்று கூறிய வள்ளலாரின் வழி நின்று ஆன்மீகப் பணியோடு பசிப்பிணி போக்கும் அறப்பணியையும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வரும் புதுக்கோட்டையில் வசிக்கும் பேரிளம் பெண்கள் இருவர் தற்கால மணிமேகலைகளாக
வாழ்ந்து வருகின்றனர்.

புதுக்கோட்டையில் எல்லைப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி பணியாளராக பணிபுரிந்து வரும் கம்மங்காட்டைச் சேர்ந்த பெரியநாயகி (வயது 56) தனது பதினெட்டாவது வயதில் வள்ளலாரே தன் கனவில் தோன்றி தன்னை ஆட்கொண்டதாக கூறுகிறார். திருமணமே செய்து கொள்ளாமல்  சிறு வயதில் இருந்தே புதுக்கோட்டை பல்லவன் குளக்கரையில் அமைந்துள்ள வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்திலேயே தங்கி ஆன்மீகச் சேவை செய்து வருகிறார். கடவுள் பக்தியில் சிறந்து விளங்கும் இவர் மேடைகளில் பரவசமூட்டும் பக்தி பாடல்களையும் பாடி வருகிறார். இவர் தனது கம்பீரக் குரலில் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை என்று பாடும் போது கல் மனமும் கரைந்து விடும்.


இவரைப் போலவே திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள கணக்கம்பட்டியைச் சேர்ந்த முத்துலட்சுமி(வயது 62) என்பவரும் இறைத் தேடல் காரணமாக திருமண பந்தத்தை மறுத்து துறவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இறைவனுக்கும் இரப்போருக்கும் தொண்டு செய்வதையே குறிக்கோளாக வைத்திருந்த குடும்பத்தில் அவரது தாயார் மற்றும் சகோதரனின் மறைவுக்குப் பிறகு புதுக்கோட்டைக்கு வந்து வள்ளலார் மடத்திலேயே தங்கி விட்ட முத்துலட்சுமி அம்மாள் முழு நேர பணியாக உணவு தயாரித்து வழங்கும் சேவையை செய்து வருகிறார். 

வள்ளலார் மடத்தில் அவ்வப்போது விசேஷ தினங்களில் மட்டும் செய்யப்பட்டு வந்த அன்னதான சேவை, இவர்கள் இருவரின் ஆத்மார்த்த அர்ப்பணிப்பை பார்த்து அரிசி, பருப்பு மற்றும் பணமாகவும் நன்கொடை சற்றே அதிகரிக்கவும் அன்னதானத்தை விரிவுபடுத்தி ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கும் மேலாக தினந்தோறும் உணவு சமைத்து வழங்கி  வருகின்றனர்.


எட்டுக்கு பத்து என்ற அளவில் இருக்கும் ஒற்றை அறையில் வசிக்கும் இருவரின் நாளும் அதிகாலை 3 மணிக்கே தொடங்கி விடுகிறது. உதவிக்கு என்று ஆட்கள் யாரும் இல்லாமலேயே இருவரும் இணைந்து நொய்யரிசி, பாசிப்பருப்பு, சீரகம் வெந்தயம் சேர்த்து கஞ்சி காய்ச்சி காலை   6 மணி முதல் 8 மணி வரை வழங்குவதோடு அன்னலட்சுமிகளாக அறுசுவை உணவையும் காலை 9 மணிக்குள் தயார் செய்து விடுகின்றனர். உணவு சமைப்பதற்கு தேவையான பொருட்கள் காய்கறிகள் வாங்குவது முதல் சமைப்பது சுத்தம் செய்வது என்று அனைத்து பணிகளையும் அவர்கள் இருவருமே செய்கின்றனர்.  முன்பெல்லாம் 12 மணி வாக்கில் தயார் செய்யப்பட்ட மதிய உணவு கோவிட் பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு 9 மணிக்குள்ளாகவே செய்யப் படுகிறது. எத்தனையோ ஏழை எளியோர் நோயாளிகள் முதியோர்கள் இங்கே வந்து சாப்பிடுவதும் உண்டு பாத்திரத்தில் வாங்கி செல்பவர்களும் உண்டு.
 கோவிட் பெருந்தொற்று காலத்திலும் கூட உணவு தயாரித்து வழங்கும் சேவையை ஒரு நாள் கூட விடாமல் செய்து வந்துள்ளனர். இன்னும் சொல்லப்போனால் ஊரடங்கு அதைத் தொடர்ந்த வேலையின்மை, கடையடைப்பு போன்ற காரணங்களினால் இங்கு உணவு தேடி வருவோரின் எண்ணிக்கை வழக்கத்தை விட பெருந் தொற்று காலத்தில் அதிகமாகவே இருந்துள்ளது. உலகமே கோவிட் தொற்றுக்கு பயந்து வீடுகளுக்குள் சிறைப் பட்டு கிடந்தபோதும் இவர்கள் இருவரும் துணிச்சலுடன் உணவு தயாரித்து வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. 
உணவு தயாரித்து வழங்கும் பணிக்கு என்று எந்த  ஊதியமோ பிரதிபலனோ எதிர்பார்க்காமல் இதை ஒரு சேவையாக நினைத்தே இருவரும் செய்து வருகின்றனர்.
உதவும் மனப்பான்மை கொண்ட தன்னார்வலர்கள் தானமாக வழங்கும் பணம், மளிகை பொருட்கள், காய்கறிகள் இவற்றை வைத்தே தினம் தோறும் அன்னதானம் வழங்கப்படுகிறது.. ஒவ்வொரு நாளும் 200க்கும் மேற்பட்ட ஏழை எளியவர்கள் ஆதரவற்றவர்கள் இங்கு வந்து பசியாறி செல்கின்றனர்.

ஏதோ பிறந்தோம் ஏனோ தானோ என்று வாழ்ந்தோம் என்றில்லாமல் இந்தப் பிறவி எடுத்ததற்கு பலனாக இச்சேவையை செய்து வருவதாக இருவரும் ஒருமித்த குரலில் கூறுகின்றனர். தங்களின் கடைசி மூச்சு வரை வறியோரின் பசியை வயிறாரப் போக்கும் புனிதப் பணியை செய்ய வேண்டும் என்பதே தங்களின் லட்சியம் என்றும் கூறுகின்றனர். 


பசியோடு இருக்கும் ஒருவருக்கு உணவு கொடுப்பது உயிர் கொடுப்பதற்கு சமம். அன்னதானம் செய்வதற்கு ஆயிரம் பேர் ஆயிரமாயிரம் பொன் பொருள் கொடுத்தாலும் அதை சாப்பிடும் அன்னமாக மாற்றும்  கைகளின் உழைப்பு பெரும்பாலும் பகட்டான மனிதர்களின் விளம்பர வெளிச்சத்தில் காணாமல் போய்விடுகிறது.

உணர்வுகளைக் நெறிப்படுத்த இயலாமல் மிருகங்களாய் வாழும் எத்தனையோ மனிதர்க்கு நடுவே பருவ வயதிலேயே தவ வாழ்வு வாழ்ந்து உணவு தயாரிக்கும் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு உணவு சமைத்து பரிமாறுகின்ற வாழும் பெண் சித்தர்களாகிய இவர்களின் போற்றுதலுக்குரிய பணியை மகளிர் தினத்தில் பாராட்டுவதில் பெரு மகிழ்வு கொள்கிறோம்...

~ ஈரநெஞ்சம் மகேந்திரன்