Showing posts with label தாலி இழவு. Show all posts
Showing posts with label தாலி இழவு. Show all posts

Wednesday, July 16, 2014

“தாலி இழவு” என்ற பெயரில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்


" மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் "
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கோவையில் கொடூரம் ... 
நாடு ரோட்டில் நடந்த “தாலி இழவு”
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~



இந்த சமுதாயம் எத்தனை முற்போக்காய் மாறிவிட்டாலும் இன்னும் மனதை பாதிக்கும் சில அவலங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. பெண் முன்னேற்றம், பெண் சுதந்திரம் என்பதெல்லாம் இப்போது மிக பழம்பெரும் கதையாகி விட்டது. மிக குறைந்த சதவீதம் தவிர பெரும்பாலான அளவில் வேண்டிய அளவுக்கு பெண்கள் சுதந்திரமாகவும், முன்னேற்றத்துடனும் செயல்பட துவங்கி வெகு நாட்கள் ஆகிவிட்டது. இந்த துறை அந்த துறை என்றெந்த பாகுபாடும் இன்றி எல்லா துறைகளிலும் பெண்கள் வெகுவாக சிறப்புற செயல்பட துவங்கி சாதித்தும் வருகின்றனர். ஆனாலும் கூட இது முழுமையான முற்போக்காக எண்ண முடியவில்லை. சில சம்பவங்கள் பார்க்கும்போது பெண்கள் முன்னேற்றத்தின் அத்தனை மகிழ்வும் சற்று பின்னாலே போய் விடுகிறது. இது போன்ற அவலங்களில் இருந்து பெண்களை விடுவித்தால் மட்டுமே அந்த சாதனைகளும் முற்போக்கு என்ற முன்னேற்றமும் அடுத்த அடிக்கான மகிழ்வை முழுமையாக தரும். ஆம்... அப்படி ஒரு நிகழ்வுதான் “தாலி இழவு” என்று சொல்லப்படுகிற ஒரு அவலம்.

கோவையில் :





13.07.2014 அன்று ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த இந்த சம்பவம் மிகவும் கொடுமையானது. இது காலம் காலமாக நடந்து வருவதுதான் என்றாலும் யாரும் அறியாமல் மறைவாக நிகழும். ஆனால் இன்றோ ஈஸ்வரி என்ற பெண்ணுக்கு கோவை, சொக்கம்புதூர் மைதானத்தில் கணவனை (ஆறுமுகம்) புதைக்க வந்த இடத்திலேயே பலர் அறிய நடு சாலையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. காண்பவர் மனதை பதைபதைக்க வைத்தது கண்ணீர் பெருக வைத்தது. அந்த பெண் கடந்த பத்து வருடங்களாக கணவர் பிரிந்து சென்றதால் தனியே கூலிவேலை செய்து கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தார். பத்து வருடங்களுக்கு பிறகு அவர் இறந்துவிட்டார் என்ற உடன் உறவினர்கள் வந்து அந்த பெண்ணை அழைத்து வந்து, அதுவும் மயானத்திலேயே பலரும் பார்க்க அரங்கேறிய இந்த கொடுமை நாம் சொல்லிக்கொள்கிற முற்போக்கு சமுதாயம் என்ற வார்த்தைக்கு வைக்கப்பட்ட கரும்புள்ளியாகும்.

ஒரு பெண் பிறந்தது முதல் அவளின் அன்னை அவளுக்கு பூசி அழகு பார்த்த மஞ்சளையும் , நெற்றியில் வைத்து அழகு பார்த்த பொட்டையும் கணவன் இறந்த பின் அழிப்பது என்ன நியாயம் ? அவளின் தந்தை ஆசை ஆசையாய் அவளுக்கு வாங்கி அணிவித்து அழகு பார்த்த வளையல்களை கணவன் இறந்த காரணத்துக்காக உடைத்தெறிதல் என்பது அநியாயம் அன்றோ ? கணவன் வந்த பிறகு அவள் கழுத்தில் மாங்கல்யம் ஒன்று தானே புதிதாக அணிந்தாள். பிறகு எதற்கு பொட்டையும் ,மஞ்சளையும் அழித்து வளையல்களை உடைத்தெறிய வேண்டும் .

பெண்களின் மனதை காயப்படுத்தும் இது போன்ற நிகழ்வுகள் இன்றும் நடைபெற்று வருகிறது. அதில் செய்யப்படுகிற காரியங்கள் புண்பட்ட அந்த பெண்ணின் மனதை மேலும் காயப்படுத்துவதாகவே இருக்கிறது. பாதுகாப்பு உள்ளிட்ட பல காரணங்களை சாக்காக சொல்லி அன்றைய காலங்களில் நிகழ்த்திய இது போன்ற அவலம் இனியும் தேவையா ?. அந்த காரணங்கள் கூட சரியானவை இல்லை என்றாலும் இனிமேலும் இது தொடரவேண்டியது அவசியமா ?.

மனிதர்கள் ஏற்படுத்திய எல்லா சடங்குகளும் சம்பிரதாயங்களும் நமது சௌகரியங்களுக்காக ஏற்படுத்தியவையே. அந்த காரியங்களுக்கு ஏதாவது அர்த்தம் இருக்க வேண்டும். தன் துணையை இழந்து விட்டோம் என்ற நிலையை விட கொடுமையானது இதில் நிகழ்த்தப்படும் அவலங்கள். முழுமையாக அந்த பெண்ணை அலங்கரித்து பூ , பொட்டு, வளையல் போன்ற எல்லாமும் அணிவித்து பின்னர் அதை எல்லாம் அழித்து , உடைத்து , தாலியை அறுத்து, வேதனையில் இருக்கும் அந்த பெண்ணின் மனதை மேலும் குத்தி காயப்படுத்தாதா ? இது போன்ற நிகழ்வுகளை சக மனுசிக்கு நிகழ்த்துவது என்ன நியாயம்? கணவர் இறந்து விட்டால் உடன்கட்டை ஏறுதல், மொட்டை அடித்தல் போன்ற நிகழ்வுகளை வழக்கொழித்தது போல் இந்த அவலத்தை ஒழித்தால் தான் பெண்ணின் முன்னேற்றம் என்பதும் பெண் சுதந்திரம் என்பது முழுமையடையும்.

நன்றி ~