Showing posts with label கையேந்திபவன். Show all posts
Showing posts with label கையேந்திபவன். Show all posts

Tuesday, December 10, 2013

கையேந்திபவன் இருக்க கவலை இல்லையே

பேருந்துநிலையம் , ரயில்நிலையம், திரையரங்கு, தொழில் நிறுவனங்கள். போன்ற இடங்களில் எல்லாம் சாலையோர இட்லிக்கடை தற்போது அதிகம் காணமுடிகிறது. முதலில் எல்லாம் காளான் கடைகள் மட்டுமே எங்கு பார்த்தாலும் அதிகமாக காணப்படும். அப்படியே இட்லி கடைகள் இருந்தாலும் சாலையோர கடைகளில் சாப்பிடுவது வயிற்றுக்கோளாறுகளையும் நோய்களையும் உண்டாக்கும் என்ற நினைப்பு இருக்கும் . ஆனால் இன்று எல்லாமே தலைகீழாக... எங்குபார்த்தாலும் கூட்டம் கூட்டமாக சாலையோர கடைகளில் மதிய உணவு மற்றும் மாலைநேர சிறுண்டி என மக்கள் சாப்பிடுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

இப்பொழுதெல்லாம் வட இந்தியாவிலிருந்தும் தென் தமிழகத்திலிருந்தும் சாதாரண வேலைகள் பார்க்க மக்கள் தினந்தோறும் கணிசமாக வந்துகொண்டேயிருக்கிறார்கள்.அவர்கள் உட்பட மூட்டை தூக்குபவர்கள், இரவு நேர பணிக்கு செல்பவர்கள் பெரும் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் , வெளியூரில் இருந்து வந்து வேலைப்பார்ப்பவர்கள், அலுவகங்களில் இருந்து தாமதமாக வருபவர்கள், திருமணமாகாத, குடும்பத்தை விட்டு வேலைக்காக வந்து தனியே வசிக்கும் ஆண்களுக்கு என் வருவாய் குறைந்த மக்களே இந்த சாலையோர கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் , இவர்களால் பெரிய நட்சத்திர உணவு விடுதியில் அதிகப்பணம் கொடுத்து தொடர்ந்து சாப்பிட முடியாது. ஆகையினால் இந்த சாலையோர தட்டுக்கடைகளே இவர்களுக்கு வரப்ரசாதம்.

மேலும் சாலையோர கடைகள் எல்லாமே வீட்டுசமையல் என்கிற பெயரிலும் மகளிர் சுய உதவிக்குழு பெயர்களிலும் இயங்கி வருகின்றன. சாம்பார் சாதம், தயிர்சாதம் என வெரைட்டி ரைஸ், இட்லி ,தோசை , பொங்கல், பணியாரம் என அன்றாடம் வீட்டில் செய்யும் உணவுகளையே செய்து மக்களின் பசியை போக்கி தங்களுடைய வருமானத்தை பெருக்குகின்றனர். குறைந்த விலையில் உணவு கிடைப்பதனாலும் ,வீட்டு சமையல் போன்ற தரத்துடனும் சுவையான இருப்பதனாலும் பசிகேற்ற உணவு என்று இதையே அதிகம் விரும்புகின்றனர். பிரபல ஹோட்டல்களில் எல்லாம் உணவை ஆர்டர் கொடுத்துவிட்டு காத்துக் கொண்டு இருக்க வேண்டும். பணமும் அதிகமாக செலவாகும். மேலும் தினமும் தொடர்ந்து இது போன்ற ஹோட்டல்களில் உணவு எடுத்துக்கொள்வது என்பது பொருளாதார ரீதியாக உசிதமாக இருக்காது. சாலையோர கடைகளில் குறைந்த விலையில் சுவையான உணவு சுட சுட தருகிறார்கள். எத்தனை பேர் வந்தாலும் மின்னல் வேகத்தில் பரிமாறுகிறார்கள். மின்னல் வேகத்தில் சமைக்கிறார்கள். நிறைய பேர் தொடர்ந்து இவர்களது வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள்.அது மட்டும் இல்லாமல் வாடிக்கையாளர்கள் இவர்களது குடும்ப உறுப்பினர்கள் போல பழகுகிறார்கள் , அதனால் இவர்கள் சமைப்பதற்கு நல்ல தரமான பொருட்களையே வாங்கி பயன்படுத்துவதாக சொல்கிறார்கள். நம்பிக்கையுடன் சம்பளம் வரும் வரை கடனும் கொடுக்கிறார்கள் .

தேவையான பொருட்களை காலை முதலே வாங்கி தேங்காய் சட்னி, சாம்பார், குருமா, புளிசட்னி போன்ற வித விதமான பதார்த்தங்களை வீட்டிலேயே செய்து எடுத்து வருகின்றனர். இங்கே வந்து இட்லி, பணியாரம், தோசை போன்றவை மட்டும் சூடாக செய்து தருகின்றனர். மாலை 7 மணி முதல் இரவு 11 மணிவரையிலும் இவர்கள் கடை திறந்து வைத்திருப்பார்கள். இவர்கள் சமைக்கும் பதார்த்தங்கள் மிச்சமாகவோ வீனாகவோ ஆவதில்லை. தினமும் சமைப்பது சரியாக போய்விடும் என்கிறார்கள். . ஆனால் தாமதமாக வருபவர்களுக்கு இருக்காது. சில சமயங்களில் மீதமாக இருந்தாலும் அதை அவர்கள் வெளியே கொட்டி விடுவதனால் அதை அடுத்தநாள் பயன்படுத்துவது இல்லை .

5 முதல் 15 வருடங்களாக கடை நடத்துபவர்களும் இருக்கிறார்கள். வருமானம் மிக அதிகமாக வருவதில்லை என்றாலும் சம்பளம் வருவது போல் அளவு வருகிறது என்கிறார்கள். சுவைக்காக ஏதும் தனியாக சேர்ப்பது இல்லை . எல்லாமே வழக்கமாக செய்வது போலத்தான் செய்வதாகவும் சொல்கிறார்கள். கடை வாடகை, அலங்கார செலவுகள் போன்றவை இல்லை, சுவைக்காகவோ அல்லது பார்வை வசீகரிக்கவோ இவர்கள் சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் பொருட்களையோ, வண்ணங்களையோ எதுவும் இவர்கள் சேர்ப்பதில்லை. எனவே இவர்களால் மலிவான நல்ல தரமான உணவை தர முடிகிறது என்கிறார்கள்.

இப்படி எல்லா வகையிலும் சாதாரண மக்களுக்கு பயன்படும் இது போன்ற கடைகளில் இன்னும் கூட சில விசயங்களை மேம்படுத்தினால் இன்னமும் வாடிக்கையாளர்கள் நிறைவார்கள் என்கின்றன இவர்களிடம் உணவு வாங்கும் பொது மக்கள். பொதுவாக இது போன்ற கடைகளில் பணியாட்கள் என்று யாரும் இருப்பதில்லை. குடும்ப உறுப்பினர்களே வேலைகளை பார்த்துக் கொள்கின்றனர். பெண்கள் காலை முதல் வீட்டிலும் வேலை பார்த்து விட்டு அதே நிலையில் கடைக்கும் வருவதை விட மீண்டும் மாலை சுத்தமாக குளித்து நல்ல முறையில் தூய்மையாக வருவதை விரும்புகிறார்கள். மேலும் கைகளுக்கு கையுறை, முகக்கவசம், தலைமுடிகள் விழுகாமல் இருக்க தலையில் உறை போன்றவை அணிந்து சமைத்தார்கள் என்றால் இன்னும் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் பெருக வாய்ப்பாக இருக்கும்.

மேலும் பிளாஸ்டிக் கவர்களில் சட்னி, குழம்பு போன்றவைகளை ஊற்றும்போது இவர்கள் அந்த காகித பையை வாயால் ஊதி திறப்பதை தவிர்க்க வேண்டும். தினமும் என்ன உணவு வகைகள் அன்றைக்கு செய்திருக்கிறார்கள் என்பதை ஒரு மெனு போல எழுதி வைத்தல் இன்னும் சிறப்பாக இருக்கும். மேலும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் தட்டுகள் போன்றவற்றை தவிர்த்து வாழை இல்லை மற்றும் பாக்கு மட்டைகளை உபயோகப்படுத்தினால் சிறப்பாக இருக்கும். சில கடைகளில் மட்டும் வாழை இலைகளை உபயோகப் படுத்துகிறார்கள். சுவை மற்றும் தரத்தின் உடன் சுகாதாரத்திலும் இவர்கள் கவனம் செலுத்தினால் இது போன்ற கடைகள் இன்னும் நல்ல முறையில் செயல்படும். அடுத்தவர்களின் பசியை போக்கி ,அவர்கள் மனமார்ந்த வாழ்த்துப் பெற்று , உண்ணும் உணவிற்கு உகந்த ஊதியம் பெறும்போது அதில் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை இல்லைங்களா..!

~மகேந்திரன்.