Wednesday, December 03, 2025

கல்யாணச் சாவு என்ற பெயரில் நடக்கும் கலாச்சாரக் கேடு

*முகம் சுளிக்கும் மரண கொண்டாட்டங்கள்: மரியாதையை மறந்ததா நம் பண்பாடு?* 

 *கல்யாணச் சாவு என்ற பெயரில் நடக்கும் கலாச்சாரக் கேடு* 


சமீபத்தில் ஒரு துக்க நிகழ்வுக்குச் சென்றபோது ஏற்பட்ட அனுபவம், என் மனதை ஆழமாகப் பாதித்ததுடன், நம்முடைய சமூகம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்ற கேள்வியையும் எழுப்பியது.

85 வயதில் நிறைவான வாழ்வு வாழ்ந்த ஒரு முதியவரின் இறப்பு அது.
கிராமப் பகுதியில், 'மங்கள மரணம்' அல்லது 'கல்யாணச் சாவு' என்ற பெயரில் அவரது இறுதிச் சடங்குகள் நடந்தன.
ஒரு முதியவர் நிறைந்த வாழ்வு வாழ்ந்து விடைபெறும்போது, அதை அமைதியான துக்கத்துடன் கூடிய நிறைவான பிரியாவிடையாக நடத்துவதுதான் மரபு.

பொதுவாக முதியோரின் இறுதி நிகழ்வுகளில், நீண்டகால பந்தத்தைப் பிரிந்த சோகத்தை வெளிப்படுத்தும் வகையில் நெஞ்சை உருக்கும் ஒப்பாரிப் பாடல்களும், துக்கம் ததும்பும் இசையும் ஒலிப்பதைப் பார்த்திருக்கிறோம்.
நிறைவான வாழ்வைக் கொண்டாடும் விதமாக, பெரியவர்கள் ஆசீர்வாதத்துடன் சிலர் பட்டாசுகள் வெடிப்பதும் உண்டு. 

மரண ஊர்வலத்தில் அலங்கார பல்லக்குகளில் தூக்கிச் செல்வதையும் தாரை தப்பட்டைகளுடன் இறுதி ஊர்வலத்தில் நடனமாடிக் கொண்டு செல்வதையும் சில இடங்களில் பார்த்திருப்போம். அது ஒரு சில பகுதிகளில் மண் சார்ந்த பழக்கவழக்கமாக இருக்கலாம். ஒரு சில இடங்களில் ஒப்பாரி பாடல்கள் பாடுவதும்  ஒலிபெருக்கிகளில் பாடல்களை ஒலிபரப்புவதும் நாட்டுப்புற கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதும் உண்டு.

ஆனால், அன்று இரவில் நடந்த நிகழ்வு, ஒட்டுமொத்த மரணச் சடங்கின் புனிதத்தன்மையையும், முதியவரின் மரியாதையையும் சிதைக்கும் விதமாக இருந்தது.

நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் இறந்தவரின் பேரன் பேத்திகள் தான் என்பதுதான் மிகவும் வேதனைக்குரியது.
இவர்கள் தெருக்கூத்து என்ற பெயரில் ஓர் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். 

அங்கு நடந்தது முற்றிலும் வேறாக இருந்தது.
ஆபாசமான உடைகளில் வந்த கலைஞர்கள், இரட்டை அர்த்த வசனங்கள், முகம் சுளிக்கும் அங்க அசைவுகள்—
இவை அனைத்தும் ஒரு மலிவான பொழுதுபோக்கிற்காக நடத்தப்பட்ட ஆபாசக் களியாட்டமாக இருந்தது.

இதை விடக் கொடுமை என்னவென்றால், அந்த ஆபாச நடனம் ஆடும் கலைஞர்களுடன் சேர்ந்து, அந்த வீட்டுப் பெரியவர்களும், இன்னும் பள்ளிப் பருவம் தாண்டாத குழந்தைகளும்கூட இணைந்து நடனமாடிக் கொண்டிருந்தனர்.
துக்கம் நடந்த வீட்டின் முன்பே, குழந்தைகள் உட்படப் பல குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் இந்த அநாகரீகம் அரங்கேறியது.


ஒரு துக்க வீட்டில், அதிலும் ஒரு முதிர்ந்த பெரியவரின் நிறைவுப் பயணத்தில், இதுபோன்ற அநாகரீகமான கேளிக்கை அவசியமா?
இது துக்கத்தை மறக்கச் செய்யும் பொழுதுபோக்கா அல்லது சடங்குகளின் புனிதத்தை இழிவுபடுத்தும் செயலா?

ஒருவர் வாழ்ந்த வாழ்க்கையின் பெருமையையும் அந்தஸ்தையும் தங்களது குடும்பத்தின் செல்வாக்கையும் காட்ட விரும்பினால் அதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. 

85 ஆண்டு கால அனுபவம், அந்தக் குடும்பத்திற்காக அவர் ஆற்றிய உழைப்பு, அவரது நீண்ட வரலாறு—
இவற்றுக்கு நாம் அளிக்கும் இறுதி மரியாதை இதுதானா?
ஒரு முதியவரை அமைதியாகவும் கண்ணியமாகவும் வழியனுப்புவதற்குப் பதிலாக, இந்த அநாகரீகச் செயல் மூலம் அவரது நினைவுகளை அவமானப்படுத்துவதாக இல்லையா?

இந்தச் செயல், நம்முடைய கலாச்சாரச் சீரழிவை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
அதுவும், எதிர்காலத் தூண்களாக இருக்க வேண்டிய பேரக்குழந்தைகளே இதுபோன்ற நிகழ்வுக்குத் தலைமையேற்றதும், குழந்தைகள் இதில் பங்கெடுத்ததும், பண்பாட்டு விழுமியங்கள் சிதைந்துவிட்டன என்பதையே காட்டுகிறது.

நாட்டின் முக்கிய தலைவர்கள் இறப்பின் போது அவர்கள் எத்தனை வயதில் இறந்திருந்தாலும் அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்து நாடி அவர்களுக்காக துக்கம் அனுஷ்டிக்கிறது. மௌனமாக அவருக்கு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்படுகிறது. 

‘கல்யாணச் சாவு’ என்பது ஒரு நிறைவான வாழ்வின் அடையாளமே தவிர, கொண்டாட்டத்தின் பெயரால் கட்டுப்பாடின்றி அநாகரீகமாகச் செயல்படுவதற்கான உரிமம் அல்ல.

மங்கள மரணத்தின் நோக்கம்:
— நிறைவான வாழ்வு வாழ்ந்ததற்காக நன்றி செலுத்துவது
— அவரது ஆத்மா சாந்தி அடைய அமைதியான பிரியாவிடை கொடுப்பது
— அவரது வாழ்க்கை நமக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்று போற்றுவது

ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதைத் தவறு என்று சொல்லவில்லை. அதிலும் ஆபாச நடனம் இரட்டை அர்த்த வசனங்கள் என்று சாவு வீட்டில் வந்தவர்களை முகம் சுளிக்கும் விதமாக இருப்பது கண்டனத்துக்குரியது.
ஒரு மரணத்தின் சூழல், அந்தச் சடங்கு நடைபெறும் இடம், மற்றும் குழந்தைகள் உட்படப் பல வயதினரின் முன்னிலை ஆகியவற்றை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

மலிவான பொழுதுபோக்கிற்காக, மரணம் போன்ற புனிதமான தருணங்களின் மரியாதையைக் குறைப்பது என்பது, நாம் நம்முடைய வேர்களை இழந்துவிட்டோம் என்பதையே காட்டுகிறது.

உறவுகளே, முதியோர்கள் நமக்குச் சொத்து.
நிறைவான வாழ்வு வாழ்ந்து அவர்கள் விடைபெறும் தருணத்தில், ஆபாசத்தைக் கொண்டாடுவதை நிறுத்திவிட்டு, அமைதியான, கண்ணியமான, மற்றும் மரியாதை நிறைந்த இறுதிப் பிரியாவிடை கொடுப்பதே நாம் அவர்களுக்குச் செய்யும் உண்மையான நன்றியாக இருக்கும்.

 குடும்பத்தின் ஆணி வேராக இருந்த மூத்தவர்கள் வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தும் போது பாரம்பரியமான இறுதிச் சடங்குகளை முறைப்படி செய்து நம்முடைய துக்கத்தை மௌனமாக வெளிப்படுத்தி கண்ணியமான முறையில் அவர்களை நல்லடக்கம் செய்வதே இறந்தவர்க்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெருமை.
மங்கள மரணம் என்பது மலிவான கேளிக்கைக்கான நேரம் அல்ல. 
அது முதியோரின் வாழ்வுக்கு நாம் செலுத்தும் உன்னதமான மரியாதை.